பாடம் சொல்லித்தரும் பள்ளிக்கூடம் - அ.முத்தானந்தம்


அட்டைப்படத்தில் ஒரு ஏழைச்சிறுமி; பள்ளிக்கூடம் என்ற சிறைக்குள் போக இயலவில்லையே ஏக்கம் முகத்தில்; அது ஒரு சிறை தான் - ஏனெனில் அரசு அனுமதித்த 58 வயது வரை நானும் ஆசிரியனாகப் பணி செஞ்சி ஓஞ்சி உதவாமப் போனவன்.

தனஞ்செயன், யசோதை, கூத்துக் கலைஞர் கடற்கரை, பள்ளிப் பிள்ளைகள் பயந்து நடுங்கும் நமச்சிவாயம், தலைமை ஆசிரியர் அப்துல்கனி, கணக்கும் ஆங்கிலமும் போதிக்கும் ஜான், தமிழாசிரியர் முத்துராக்கு, அன்னக்கிளி, யசோதையின் அய்யா பொன்னையா போன்றோர் நாவலில் முக்கியப் பாத்திரங்கள்.
“கலையே உன் விழி கூடக் கவிபாடுதே –
தங்கச்சிலையே உன் நிழல் கூட ஒளிவீசுதே”
என்ற பழைய திரைப்படப் பாடலை தனஞ்செயன் மாணவர் சங்கக் கூடத்தில் ஒலிக்கிறான். அந்தப்பாடல் தான், சாதி அவமானம், இரு இளம் உள்ளங்களில் உருவாகும் பிரியம், அன்னக்கிளியின் வருகை, பள்ளி வளாகத்திலேயே தமிழய்யாவின் சாதி மறுப்புத் திருமணம் எனப் பின்தொடரும் அனைத்துச் சித்தரிப்புகளுக்கும் ஒரு குறியீடு.

வழக்கமாய் தனஞ்செயனின் இனிய குரலால் பள்ளியின் ஒவ்வொரு நாளும் திறந்து கொள்ளும். ரகுராம் வாத்தியாரின் சாதிகுறித்த இழிவான வசவால் தனஞ்செயன் கடவுள் வாழ்த்துப் பாட மறுத்து விடுகிறான்.ரங்கா, வடிவு, தனம், யசோதை மதியச் சாப்பாட்டுக்கு வேம்படிக்குப் போகிறார்கள். எதிரே தனஞ்செயன் வந்து கொண்டிருக்கிறான். ரங்கா போன்றவர்கள் சிறுசிரிப்புடன் அவனைக் கடந்து போகிறார்கள். யசோதை தாமதிப்பது மாதிரிப்பட்டது. எதிர்ப்பட்டவனைக் கண்டு சற்றுப் பின் தங்குவதைப் பார்த்து சிநேகிதிகள் சின்ன நடையில் முன் நடந்தார்கள்.

யசோதை லேசாய் ஒருக்கணித்தாள்.

“ஏன் நீங்க கடவுள் வாழ்த்துப் பாடல?”

“பிடிக்கல”

“ஏம் பிடிக்கல”

ஒங்கிட்ட அதெல்லாம் சொல்லணுமா? ஒனக்கே தெரிஞ்சது தான் என்பதுபோல, ’பிடிக்கலைன்னா பிடிக்கலைதான்” என்கிறான்.
“எனக்குப் பிடிக்குதே” என்றாள் லேசாய்ப் புன்னகை கசிய. அந்தப் புள்ளியில் பிடிக்குதே என்ற வார்த்தையால் பிரியத்தின் வித்தினை அந்தச் சிறுபெண் நட்டுவிட்டாள்.

வீட்டைப் பூட்டிச் சாவியைப் பக்கத்து வீட்டுப் பெரியம்மாவிடம் கொடுத்து விட்டுப் பருத்திக் காட்டுக்குப் புறப்பட்டாள் யசோதை. ”அவள் காட்டுக்குள் நுழைந்தவேளையில் நெருக்கமான தோழிகள் போல் தோளுரசிக் கூடப்பிட்டன பருத்திச் செடிகள்” என்கிறார் பா.செ என்கிற, வாஞ்சையாய் தன் வட்டாரப் புஞ்சைக்காட்டினை நேசிப்பவர். வளர்ந்த பருத்தி காட்டுக்குள் தனஞ்செயன் முன் உட்கார்ந்தாள்; கொழுத்த செடிகள் அவர்களைத் தெரியவிடாமல் காத்தன. சேலை மடிப்பில் சுருட்டி வைத்துக் கொண்டு வந்திருந்த சேவு அவனுடைய கைக் குவியலில் கொட்டியது.

“அதான் பயம்; வீட்டுக்குத் தெரிஞ்சுதுன்னா அய்யா படிப்பை நிறுத்திடுவாரு” என்ற உள்பயம் ஓடுகிறது.

“நீங்க போயிருங்க” என்றாள்.

“ஏன்”

“ஆங்…கிறதுக்கு உள்ள ஊ…ங்குது ஊரு” சொல்லில் பதட்டம். எதிரெதிர் பாலியல் இளம்பருவத்தினர் கொள்ளுகிற பிரியமெனில் ஊர் எப்படியெல்லாம் மண்ணள்ளி வீசும் என்பது இந்த ஒரு சொல்லாடலில் உண்டு.

“அங்ஙன பள்ளிக் கூடத்தில் இந்தப் படபடப்புக் காணலை.”

“அது பழகுன இடம், அங்க எல்லாருக்கும் அது உண்டுதான”

இந்த ரம்மியமான காட்சிப்படுத்துதலை உணர்வு பூர்வமாகவும், மிருதுவாகவும், சுகமாகவும், ரசிப்பானதாகவும் அமையும்படி செய்துள்ளார் பா.செ.

பொன்னையா தனஞ்செயனை நோக்கி வெறி கொண்டு பாய்ந்தார். ”உறுமிக்காரப் பயலுக்கு என்னடா இந்தக் காரியம்” தெலுங்கிலே வசவு நோங்கினார்.

“வேண்டாம் ஸார்; வேண்டாம் ஸார், அடிக்காதீங்க” அவனுடைய தீனமான குரல் கேட்டது. அவன் கத்தியபடி ஓடுகிறான்.

“ஸார் போடுதாடா ஒனக்கு” அதற்கும் விளாசினார்.

’ஸார்’ என்று கீழானவர்கள் சொல்வதை மேல் சாதிக்காரர்கள் சகித்துக் கொள்ள முடிவதில்லை. ‘சாமி, முதலாளி, சமஸ்தானம் என்று கையேந்தி வேண்டுதலையே அவர்கள் விருப்புகிறார்கள்’.

தென் மாவட்டங்களில் ‘குறவன் குறத்தி’ ஆட்டக் கூத்துக்கலைஞன் கடற்கரை ஆட்டக் குழுவுக்கு நல்ல கிராக்கி. கோயில் விழாக்களின் போது ‘ஊர் ஊருக்கு அவர்மேல்ப் போய் விழுந்தார்கள். முந்திய கைக்குப் பணியாரம்’ என்று அவரும் தேதி கொடுத்துக் கொண்டிருந்தார்.

கடற்கரை ஆட்டக்குழுவினர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். கதையில் வரும் தமிழாசிரியர் முத்துராக்கு கூறவது போல “கடற்கரை எவ்வளவு பெரிய மேதை” இருந்தும் என்னபயன்? கிராமங்களில் அவர்கள் மதிக்கப்படுவதில்லை!மதிக்கப்படாவிட்டாலும் பரவாயில்லை. சகமனிதர் என்று கூட அங்கீகரிக்கப்படவில்லை! அசிங்கத்தைப் பார்ப்பது போலல்லவா அவர்களை நோக்குகிறார்கள்! இவைகளை எல்லாம் மனதில் வைத்துத்தான் கதாசிரியர் பெருத்த ஆதங்கத்தோடு கடற்கரைக் கலைஞரை கதைக்குள் இழுத்துப் போட்டுள்ளார் என எண்ணுகிறேன்.

இந்தச் சாதி ஒதுக்கம் மேற்தட்டு மக்களிடத்தும் வெகுவாய்ப் புரையோடிக் கிடக்கிறது.இதனை ஆசிரியர், வ.உ.சி கல்லூரி முதல்வர் பேராசிரியர் அ.சீனிவாசராகவன் அவர்களுக்கும், முற்போக்கு எழுத்துக்களின் இலக்கியவாதி தொ.மு.சி.ரகுநாதன் அவர்களுக்கும் சாப்பாடு விசயத்தில் நடந்த வரலாற்றுக் குறிப்பை இந்த இடத்தில் கோர்த்துச் சொல்லியிருக்கிறார் பா.செ.

“நேற்று நீங்க எனக்குச் செய்தது இன்று உங்களுக்கு வந்தது” என்கிறார் தொ.மு.சி.

இவர்களுக்கே இப்படி என்றால் கடற்கரை எம்மாத்திரம்.

பள்ளிக்கு வரும் ஏழைக் குழந்தைகள் பெற்றோர்களின் பொருளாதார மந்தநிலைக்கு உதவியாக இருப்பதைக் கிராமங்களில் காணமுடியும்.அக்கா காட்டில் நிரைபிடித்து பருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள். செண்பகவல்லியும் எடுத்த பருத்தியை அக்காவிடம் கொடுத்துவிட்டு வரக் கூட நேரமில்லாமல், தனது பைக்கூட்டில் திணித்தபடி நேரே பள்ளிக்கு வந்து விடுகிறாள். அவளது முகம் கொராவிப் போய் இருந்ததை தலைமை ஆசிரியர் கனி கவனித்துவிட்டு, “சாப்பிட்டாயா?” என்று கேட்கிறார்.

“அந்தப்பிள்ள குளிக்கவோ சாப்பிடவோ, செஞ்சிருக்க மாட்டா.” அப்படிக் கனிவாய் தலைமை பேசியது நமசு ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை. நமசுக்கு, பிள்ளைகளுக்கு இளக்காரமாய்ப் போகும் என்பது அவர் எண்ணம்.

அன்னக்கிளி - சாதி வேறுபாடுகள் இல்லாத, சுயமாகச் சிந்திக்கிற பெண்களின் பிரதிநிதி.

“சாப்பாடு தயார். வாத்திமார்களுக்குத் தனியாகவும் ஆட்டக்காரர்களுக்குத் தனியாகவும் இலை போட வேண்டும். வாத்திமார்களுக்கு உள்ளே; தாழ்த்தப்பட்ட ஆட்டக்காரர்களுக்கு வெளித் தாழ்வாரத்தில் - இது தான் அண்ணன் சீதாராமின் திட்டம்” - அன்னக்கிளிக்கு அதில் உடன்பாடு இல்லை.

அன்னக்கிளிக்கும் ஆசிரியர் முத்துராக்குக்கும் நடந்த ஒரு உரையாடல்:

“ஏன் ஒங்களுக்குக் கல்யாணம் ஆகலை”– முத்து கேட்டார்.

“ஆகலை” சாவதானமான பதில்

“இதுநாள் வரை ஏன் ஆகலையின்னு..?”

“ஆகலையின்னா ஆகலைதான், புதுசா கேக்குறீங்க” அன்னக்கிளி களங்கமில்லாது சிரித்தாள்.

“நான் வர்ற வரைக்கும் நீங்க அந்த இடத்தில் நின்னுக்கிட்டு இருந்தீகளே, அதான்.”

“அதுக்காகத் தான்”

“எதுக்கு ,நா வர்றதுக்காகவா?”

“அப்படின்னும் வச்சுக்கோங்க. கேட்டு வந்தாங்க. கடை ஒன்னு நடக்குதில்ல, எழுதிக் கொடுக்க முடியுமோன்னு கேக்குறான். கடையைச் சேத்து நாலஞ்சு குறுக்கம் புஞ்சை, அதையும் கேட்டானுக”

இந்த உள்ளத்தைத் தொடும் உரையாடல் தான் முத்துராக்கு, அன்னக்கிளி இணைப்புக்குக் காரணமாகிறது
தமிழ்நாட்டில் ஆங்கிலவழிக் கல்விச்சாலைகள் உதயமாகி ‘ஆல்போல்’ பல்கிப் பெருகியுள்ளதை பா.செ ஆதங்கத்தோடும் ஆத்திரத்தோடும் குமுறியபடி இப்படி எழுதுகிறார். “கல்வி அதிகாரிகள் வந்தால் ஐந்து நட்சத்திர விடுதிகள்லே தங்குறாங்க. குடும்பத்தோட அவங்க ஊர் சுற்றிப் பாக்கிறதுக்கும், கோயில் கோயிலாப் போகிறதுக்கும் கார் எங்கே இருந்து வருது. அவங்களுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இருக்கிற கள்ள உறவு காரணம். கல்வி வியாபாரிகள் தான் அரசாங்க அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் வஞ்சம் கொடுத்து இங்கிலீஸ் பள்ளிகளை வாங்கிக்கிறாங்க!”

நோய் சாடிய செடிகள் போல், கல்விப் புலத்தைச் சாப்பிட்டுக் கொளுக்கிற ஆங்கில மோகம் என்னும் அரிபூச்சி நோய் குறித்து இந்தப் புதினம் பேசுகிறது. இந்த ஆங்கில மோக நோய் வசப்படாமலிருக்கத்தான்
”செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது;
தீதெனக்குப் பல்லாயிரஞ் சேர்ந்தன;
நலமோ ரெள்துணையுங் கண்டிலேன் இதை
நாலயிரங் கோயிலிற் சொல்லுவேன்”
என சுயசரிதையில் பாடுகிறார் பாரதி. ’பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள்’ என்கிறார். ’ஊணர் கலைத்திறன் நேருமாறு’ பணித்த தன் தந்தை மேல் சினமுறுகிறார்; ஆங்கில அடிமைத்தனம் பற்றிய ஓர்மை கொஞ்சமும் அற்றவர்களாய் அரசும், அரசியல்வாதிகளும் தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கும் ஊட்டம் கோபம் கொள்ளச் செய்கிறது. தனது கருத்துப் பரப்புரைகளுக்கு - ஊன்றுகம்பாக புதினத்தைக் கையாளுகிறார் பா.செ.

மகாகவி பாரதிக்கு கருத்து வீச்சில் கவிதையும், கை வீச்சில் தடியும் இருந்தன. ஆங்கில மாயையில் தட்டழிஞ்சி போய்க் கொண்டிருக்கும் சமுதாயத்தின் தலையில் ஓங்கிச் சாத்திடத் தான் இந்தக் கவிதையும் பாரதியின் கைத்தடியும் இரண்டும் என எண்ண வைக்கிறது நாவல்!

சூரங்குடி அ.முத்தானந்தம், எழுத்தாளர்,
சூரங்குடி (அஞ்சல்), விளாத்திகுளம் (வட்) - 628901
தூத்துக்குடி (மாவட்டம்). பேசி: 96558 96777

பள்ளிக்கூடம் - நாவல்: பா.செயப்பிரகாசம்
வெளியீடு: வம்சி பதிப்பகம், திருவண்ணாமலை - 606601
விலை ரூ.250
தொடர்புக்கு: 94458 70955

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ