தப்பி ஓடத் திசையில்லை எல்லாத் திசைகளும் கொலைகள்


அந்த மரணங்கள் இயல்பாய் வரவில்லை; விளைவிக்கப்பட்டது. விளைவிக்கப்படுகிற உயிர்நீக்கம் கொலையாகிறது.

2002-ம் ஆண்டு – குஜராத் உயிர் - பறிப்பவர்களால் நிரம்பியிருந்தது. ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரீஷத், பஜ்ரங்தன், சங்பரிவார், பா.ஜ.கஎன கொலையாளிகளுக்குப் பல பெயர்களிருந்தன. வேறுவேறு பெயர்களில் அவர்கள் இந்தியாவெங்கணும் நிறைந்திருந்தார்கள். டிசம்பர் 6–ல் பாபர் மசூதி தகர்த்து, தங்கள் முகத்தை உலகுக்கு முதன் முதலாய் வெளிக்காட்டினார்கள்.

இலங்கையில்; தமிழர்கள் என்ற இனம் வாழ்ந்தது என்ற அடையாளமே இல்லாமல் செய்கிற முயற்சிகள் போல், இந்தியாவில் இஸ்லாமியர் என்ற ஒரு சமூகம் வாழ்கிறது என்ற அடையாளம் இல்லாமல் செய்கிறஎத்தனிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா எனில் இந்து சமூகம் மட்டுமே. இதற்கான முன்னோட்டம் நடந்த இடம் காந்தி பிறந்த பூமியாக இருந்தது. தமிழ் மக்களை அடித்தும் கொன்றும், விரட்டியும் இல்லாமல் செய்த வசிப்பிடங்கள் சிங்கள் ராணுவத்தால், சிங்கள மக்களின் குடியேற்றமாக ஆக்கப்பட்டது போல், இஸ்லாமியர் விரட்டப்பட்ட பகுதிகளில் இந்துக்கள், குடியமர்த்தப் படுகின்றனர்.

“முஸ்லீம்கள் துண்டாடப்பட்டார்கள்: எரிக்கப்பட்டார்கள். நாங்கள் இவர்களைக் கொளுத்தத்தான் விரும்புகிறோம். ஏனெனில் இந்த தேவடியா மகன்கள், இறந்த பின்னர் எரிக்கப்படுவதை விரும்புவதில்லை. எனக்கு ஒரே ஒரு ஆசைதான் - கடைசி ஆசை. நான் தூக்கிலிடப்படுவது பற்றிக் கவலையில்லை. என்னை தூக்கிலிடுவதற்கு முன் இரண்டு நாள் - இரண்டே நாள் அவகாசம் கொடுங்கள். நான் ஜுஹா பூரா வரை சென்று வருகிறேன். அங்கு ஏழெட்டு லட்சம் முஸ்லீம்கள் வசிக்கிறார்கள். அவர்களை முடித்துவிடுவேன். இன்னும் பலர் கட்டாயம் சாக வேண்டும். 25-50 ஆயிரம் பேராவது சாக வேண்டும்”.

பாபு பஜ்ரங்கி நரோடாவின் பிரபலமான உயர்ந்த மனிதர். அவருடைய ஆட்சி நரோடாவிலிருந்து சாரா நகர் வரை நீண்டு கிடக்கிறது. விஸ்வ இந்து பரீஷத்தில், பஜ்ரங்தளத்தில் 25 ஆண்டுகளாக இயக்குபவர். மாவட்டத்தின் பா.ஜ.க பொறுப்பாளர்.

அன்றைய தினத்தில் கவுசர் பானு ஒன்பது மாத கர்ப்பிணி. அவருடைய அடிவயிற்றை வெட்டி கர்ப்பப் பையிலிருந்து சிசுவை வெளியே உருவி, வாளால் குழந்தையை குத்தி உயரேதூக்கி நடந்தார்கள். பின்பு அப்படியே தரையில் ஓங்கி அடித்தார்கள். அப்படியே சிசுவை தீயில் எறிந்தார்கள்.

“அந்த கர்ப்பிணியை நான் எப்படி வகுந்து துண்டாடினேன்” – என்று காட்சியை வர்ணிக்கிற பாபு பஜ்ரங்கி, அவர்களை முடித்துவிடுவேன் என்று சொன்னது போல செய்தார்.

1983–ல் கொழும்பு நகரில் 5000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். வீதிகளில் சில வித்தியாசமான அறிவிப்புகள் சிங்கள எழுத்துக்களில் தொங்கின.

“இங்கே மனிதக்கறி விற்கப்படும்” கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் கூறு போடப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

தமிழர்களைக் கொன்று கூறு போடும் இனப்படுகொலைக்கு, ஈடுகட்டி குஜராத்தில் நடந்தேறியது.

இலங்கையில் புத்தரின் அன்பு மதம்.
குஜராத்தில் காந்தியின் அஹிம்சை மதம்.
புத்தர் வழிபடப்படும் பூமியில் தமிழர்கள்.
காந்தி வழிபடப்படும் நாட்டில் இசுலாமியர்.

“நாங்கள் எவரையும் விட்டு வைக்கவில்லை. அவர்களை இனவிருத்தி செய்ய அனுமதிக்கக் கூடாது. யாராக இருந்தாலும் குழந்தைகள், பெண்கள், அப்படியே துண்டு துண்டாக வெட்டுங்கள். அடியுங்கள்: தேவடியா மகன்களைத் தீயிடுங்கள்”.

பாபு பஜ்ரங்கி போன்ற பெரிய மனிதர்கள் இதைச் செய்தார்கள்; அவர்களது முக்கியப் பொழுது போக்கு முஸ்லீம்களையும் கிறித்துவர்களையும் தாக்குவது: அவர்களை இல்லாமல், இன விருத்தி செய்யவிடாமல் முடக்குவது. அவர்களுக்கு ஒரே ஒரு அரசியல் தான் உண்டு. அவர் சொல்வது போல, முஸ்லீம்களைக் கொல்வது, அடிப்பது, எறிப்பது.

“முஸ்லீம் பையன்களைத் திருமணம் செய்து, கொண்ட, காதலிக்கிற இந்துப் பெண்களின் பெற்றோர் தினமும் என்னைக் காண வருவார்கள். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால், போலீஸார் அவர்களை என்னிடம் அனுப்புவார்கள். 975 - இது நான் காப்பாற்றிய இந்துப் பெண்களின் எண்ணிக்கை. ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்து கொண்ட பெண், சராசரி அய்ந்து பிள்ளைகளைப் பெறுகிறாள். எனவே நான் 5000 முஸ்லீம்களை பிறப்பதற்கு முன்பே கொன்றிருக்கிறேன்”.

பெருமிதம் பொங்குகிறது பஜ்ரங்கியின் முக தலம். அவருடைய உயிர்த்தலம் கூட, முஸ்லீம் பெண்களைப் பற்றி எண்ணிய நேரத்தில் பொங்கியிருக்க வேண்டும்.

இஸ்லாமியப் பெண்களைத் தின்றார்கள். பெண்களைத் திண்பதில், மத, இனவித்தியாசம் இல்லை. ஆண்களாக இருத்தலே போதுமானது. எல்லா ஆண்களும் பாலியல் வன்முறை நிகழ்த்தினார்கள். இங்கே மதம் என்ற “வயாக்ரா” கூட்டுச் சேருகிறது. ஆனால் சாமியார்கள், அவர்களைப் போன்ற உயர்சாதி ஆண்கள் முஸ்லீம் பெண்களைத் தின்றால் தீட்டாகிப் போகும் என்று கருதுகிறவர்கள் கூட, ஆண் என்ற திமிருடன் மதக்கொளுப்பும் மேலேற தின்றார்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவரான சாராஸ் மக்களை, தடையின்றிச் செய்ய ஆசீர்வதித்தார்கள்.

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த ரிச்சர்ட், தெகல்கா – வுக்கு அளித்த வாக்கு மூலத்தில் கூறுகிறார். (இவர்கள் எல்லோரும் படுகொலைகள் நடத்தி ஆறு ஆண்டுகள் கடந்து போனதில் உற்சாகமாய் தம்மை வெளிப்படுத்தி தெகல்காவிடம் வதையாய் மாட்டிக் கொண்டவர்கள்) ரிச்சர்ட்;

“இங்க பாருங்க. ஒரு விஷயம் உண்மை. ஆயிரக் கணக்கான ஆண்கள் பாசியாய் இருக்கும் போது, பழம் தின்பதில்லையா? எப்படியும் அந்தப் பழங்களைப் பிழிந்து எறியத்தான் போகிறோம். இங்க பாருங்க நான் பொய் சொல்லவில்லை. அம்மன் என் முன்னே இருக்கிறாள். (சாமிபடத்தை நோக்கி கை நீட்டிய படி) எப்படியும் பல முஸ்லீம் பெண்கள் கொன்று எரிக்கப்பட்டார்கள். சிலர் பழங்களை நோக்கிச் சென்றிருக்கலாம். நிறையவே நடந்தது: அங்கே நம் சகோதரர்கள் இருந்தார்கள் இந்து சகோதரர்கள். ஆர். எஸ். எஸ், வி. எச். பி. சகோதரர்கள் பழங்கள் கைவசம் இருந்தால் யாருக்குத்தான் ஆசை வராது. அவர்களை எவ்வளவு தடுத்தாலும் அது போகாது. இங்க பாருங்க, என் பொண்டாட்டி உக்காந்திருக்கா. அவ முன்னாலயே சொல்றேன். பழங்கள் இருந்ததால் எடுத்துச் சுவைத்தேன் நான் ஒரு பழத்தைச் சாப்பிட்டேன். பழைய பொருட்கள் வியாபாரியின் மகள் நசீமா.... நசீமா எத்தனை மிருதுவானவள், கனிந்தவள். அவளைத் தின்றேன்”.

பாலியல் வன்முறை செய்யப்பட்ட எந்தப் பெண்ணையும் அவர்கள் உயிரோடு வைக்கவில்லை. பிழைத்தவர்கள் பேசுவார்கள்: வசைமாரி பொழிவார்கள். அதனால், “அவளை பாடம் செய்து ஊறுகாயாக மாற்றினேன்” சொல்வது ரிச்சர்ட்.

II 

தமிழ்நாட்டில் பார்ப்பணர் எவரும் நேரடி வன்முறையில், அடி, தடி, கொலை செய்வதில்லை. அதை தங்களின் பெருமிதமாக காட்டிக் கொள்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள், வேற்று மதத்தவர்கள் மீதான தாக்குதலை பிற சாதி மக்களைக் கொண்டு செய்து முடிப்பார்கள். சிந்திடச் செய்த ரத்தத்தில் அவர்களின் கைகளும் இல்லை: அவர்களின் ரத்தமும் இல்லை என்ற தோற்றம் கிடைத்து விடுகிறது.

குஜராத்தில் போர்க்குணமிக்க சமூகங்கள் இருந்தன. சாரால், சர்வா, பக்ரி போன்றவர்கள்@ இந்த வெறியாடல்களில் பிரதான பங்காற்றுபவர்களாய் பயன்படுத்தப்பட்டார்கள். வடோத்ராவின் மூத்த பா.ஜ.க தலைவர் தீ பக்ஷா, வி.எச்.பி உறுப்பினர்கள், சங்பரிவார் உறுப்பினர்கள், எம்.எஸ் பல்கலைக் கழக தலைமைக் கணக்கர் தீமந்த்பட், போன்றவர்கள் பரோடாவில் நர்மதா இல்லத்தில் கூடி தந்திரங்களை வகுத்தார்கள். அதற்கு முன் அகமதாபாத்திலும் நடந்தது. வி.எச்.பி.யின் தலைவர் பிரவீன் தொகாடியா நேரிலிருந்து திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை கண்காணித்தார். சாராஸ், சர்வா, பக்ரி போன்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்கள் இறைச்சிப் பிரியர்கள். அவர்களிடம் ஆயுதங்களிருந்தன. அவர்கள் முன்னணியில் செல்வார்கள். இந்த முறை நிறைய ரப்பாரிகள் வந்தார்கள். அதிகப்படியான சேதங்களை விளைவித்த அவர்களை உற்சாகப்படுத்தினோம் என்கிறார் தீபக்ஷா – பா.ஜ.க மூத்த தலைவர்.

அகமதாபாத் நராட்சிக்குட்பட்ட, நரோடா பகுதி, மற்றும் நரோடா கிராமம் ஆகியவை துல்லியமான நகர்ப்புறச் சேரிகள்: முழுவதும் முஸ்லீம்கள். எதிரே சாலையைக் கடந்தால் சாரல நகர். பழங்குடியினரான சாராக்கள் வசிக்கும் மிகப்பெரும் வாழ்விடம். சூதாடுவது, கள்ளச் சாராயம் காய்ச்சுவது, விற்பது இவர்களின் பிரதான தொழில். இவர்களை ஏவி விட்ட படி, அந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினர் மாயா பேன், அன்று முழுதும் தனது திறந்த ஜீப்பில் சுற்றிக் கொண்டிருந்தார். அவர்காவிபட்டையை நெற்றியில் அணிந்து ஜெய் சிறீராம், ஜெய் சிறீராம் என முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். சாரா இனத்தவர்களைப் பார்த்து “நான் இங்கே இருக்கிறேன். உங்களைக் காக்க” என்றார். நரோடா பாட்டியாவில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட அதே மாலை – பிப்ரவரி 28 நரேந்திர மோடியும் வந்தார். கருப்புப் பூனைகள் பாதுகாப்புடன் வந்தார். சாரா நகர் தெருக்கள் வழியாகப் போனார். நரோடாவில் எல்லாம் எப்படி நடக்கிறது என்று பார்வையிட்டார். “எல்லாம் நல்லபடி நடத்துகிறீர்கள். பழங்குடி இன மக்களை ஆசிர்வதிக்கிறேன். உங்களைப் பெற்ற தாய் மார்களும் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் தான்” என்றார்.

“என் தங்கை அவருக்கு மாலை அணிவித்தாள்” என்கிற சாரா இன ரிச்சர்ட், தாங்கள் செய்த தீச் செயல்களை ஒப்புவிக்கிறார்.
“பேட்டரிகள் எரிந்தன. எரிவாயு சிலிண்டர்களை அந்த வீடுகள் மேல் வீசி வெடித்தோம். ஒரு லாரிக்கு அடியில் பன்றிகள் உறங்கிக் கொண்டிருந்தன. நாலைந்து சாராக்கள் கூடி ஒரு பன்றியைக் கொன்றோம். பிறகு அந்தப் பன்றியைத் தூக்கி மசூதியின் உச்சியில் கட்டித் தொங்கவிட்டோம். அப்படியே ஒரு காவிக் கொடியையும் கட்டினோம். எட்டுப் பத்துப் பேர் மேலே ஏறினோம். எவ்வளவு முயன்றும் மசூதியைத் தரைமட்டமாக்க முடியவில்லை ஒருவர் தாக்கர் நகர் குறுக்குச் சாலையிலிருந்து டேங்கர் லாரியைக் கொண்டு வந்தார். அந்தப் பகுதி முஸ்லீம்களைக் கொன்று விட்டுத்தான் டேங்கர் லாரியை எடுத்து வந்தார்: அதைப் பின் நோக்கி செலுத்தி மசூதியை உடைத்தோம்: லாரி வெடித்தது. தீயணைப்பு வாகனத்திலிருந்து தண்ணீர் பீறிடுவது போல், பெட்ரோல் வழிந்தோடியது: மசூதி கொளுத்தப்பட்டது”.

அப்படியே திரும்பி, சாக்கடையில் ஒளிந்திருந்த முஸ்லீம்கள் 28 பேரை, சாக்கடை மூடியை எடுத்து அடைத்தார்கள். மூடியின் மேல் பெரிய கற்களை அடுக்கினர்கள். உள்ளிருந்த வாயு அவர்களைக் காவு கொண்டது.

‘உயர்சாதி இந்துக்கள் ஆயுதம் ஏந்துவதில்லை. மற்றவர்களை ஏந்திட வைப்பார்கள்’ என்ற பாரம்பரிய கருத்தும் குஜராத்தில் முற்றுப் பெற்றது. அது கற்பனையாகவே முடிந்தது@ கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை, எந்த உயர் சாதி இந்தும் களமிறங்கியதில்லை. பார்ப்பணர், பனியா, பட்டேல் எவரும் வெளியே வரமாட்டார்கள். அரசு, உச்சத்தில் அமர்ந்திருக்கும் முதல்வர், உள்துறையமைச்சர், போலீஸ், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமின்றி, வாதாட மீட்டு வர வழக்கறிஞர் குழு, என பல்வேறு ஏற்பாடுகள் சங்கிலித் தொடர்ச்சியாய் செய்யப்பட்டிருப்பது தெரிந்தபிறகு திட்டமிட்டு விநியோகிக்கப்பட்ட ஆயுதங்களுடன் புத்துணர்வு பெற்றார்கள். பெண்கள் கூட ஆயுதங்களுடன் கிளம்பி விட்டார்கள். வீடுகளில் இந்த உயர்சாதியினர் ஆயுதங்கள் வைத்துக் கொண்டார்கள். இந்துவாய் இருப்பது வாழ்வது பெருமைக்குரியது. இந்து அல்லாத யாரும் திரிசூலத்தில் குத்தி தூக்கப் பட வேண்டியவர்கள் என்று உணர்கிற உலா போனார்கள்.

அனில்படேல் ஒரு உயர் சாதி இந்து சபர்கந்தா மாவட்ட விஷ்வ இந்து பரீசத்தின் பகுதிப் பொறுப்பாளர். சபர்கந்தாவில் 1545 வீடுகள், 1237 வியாபார நிறுவனங்கள், 549 – கடைகள், சூறையாடப்பட்டதற்கு அவர்தான் பொறுப்பாளர். அத்தோடு நூறு கொலைகளுக்கும்.

III

கங்கை புனிதமானது: காவிரியும் தான்: தமிழக உழவர்கள், வேளாண்மையின் உயிராதாரம் என பயன்படு இயற்கையாய் நதிகளைக் கண்டார்கள். ஆனால் கங்கையைப் புனிதப்படுத்துகிறோம் என்றொரு வேள்வி, கங்கைக் கரையில் பார்ப்பண புரோகிதர்களை வைத்து ராஜிவ் காந்தியால் நடத்தப்பட்டது. அப்போது அவர் இந்தியப் பிரதமர்: அவர்கள் காங்கிரஸ்காரர்கள்.

குஜராத் கொலைவெறியில், காங்கிரஸார் இணைந்தார்கள். பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமானவர்களும் அவர்கள். அத்வானியின் ரதயாத்திரையை இந்தியாவின் மொத்த நீளத்துக்கும் நடக்க விட்டு, அயோத்திக்கு அனுமதித்தது மத்தியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி. எதெதற்கோ சட்டம், ஒழுங்கு கெட்டு, நாடு குட்டிச் சுவராய் ஆகிக் கொண்டிருப்பதாக துடிக்கிற காங்கிரஸ், மதவெறியாட்டத்தை தடுத்து நிறுத்த சட்டம், ஒழுங்கை கைவசப்படுத்தாமல் போனது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. காங்கிரஸாருக்கு இது உறுத்தாமலிருக்கலாம். மொத்த இந்து சமூகத்துக்குள் தான் அவர்களும் அரசியல் பண்ணுகிறார்கள் ராமர் பாலம் என்பது அறிவியல் உண்மையல்ல: கற்பனை என்று, தொல்லியல் துறையின் ஆய்வு அறிக்கையை உச்சநீதி மன்றத்தில், அளித்துவிட்டு, மதவெறிகர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி, அதைத் திரும்பப் பெற்றதன் மூலம், போட்டிபோட்டுக் கொண்டு இந்துக்கள் என நிரூபிக்கிறார்கள்.

“இந்தக் குற்றங்களின் பாதுகாவலர்களான பா.ஜ.க தலைவர்கள் கமுக்கமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் காங்கிரஸ் ஏன் அமைதி காக்கிறது? குஜராத் கொலைகாரர்களில் பலர் தற்பொழுதும் காங்கிரஸ் கட்சியின் பெரும் பொறுப்புகளில் இருப்பதாலா? காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் கோத்ரா இனப்படுகொலையிலேயே பங்கு கொண்டதாலா?” – என்ற கூர்மையான கத்திகளை, அவர்களின் மனச்சாட்சி(!) நோக்கி எறிகிறார், தெஹல்கா அம்பலப்படுத்தியதை, தமிழில் ஆக்கம் செய்த அ.முத்துகிருஷ்ணன்.

மதுரையில் கடந்த ஆண்டில், தினகரன் நாளிதழ் அலுவலகம், எரியூட்டப்பட்டு, மூன்று பேர் வங்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று தெரிந்த பின்னும், அவர்கள் தி.மு.க.வினராக இருந்த போதும் கட்சியிலிருந்து நீக்கி, கட்சியளவில் நடவடிக்கை எடுக்கக் கூட முன் வராத தி.மு.க.வின் மனசாட்சி இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.

இசுலாமியர்களுக்கு தப்பி ஓடத்திசையில்லை. எல்லாத்திசைகளும் அடைபட்டிருந்தன. நீதியின் திசையும்! மதவெறியும், ஆட்சியதிகாரமும் சேர்ந்து கூத்தடித்த குஜராத்தில் நீதிமன்றங்களும் சாய்வும் கண்டு கொள்ளாமையும், நம்மை பயங்கொள்ளச் செய்கிறது.

மாநில நீதி மன்றங்களில் வழக்குகளை நடத்த முடியவில்லை. அவை குற்றவாளிகளின் சார்பாகவே இயங்கின. வேறு மாநிலத்துக்கு மாற்றங்கள் என மனித உரிமை ஆர்வலர்கள், குடிமைச் சமூக அமைப்புக்கள் முறையிட்ட பின்னும் உச்ச நீதி மன்றம் அசையவில்லை.

“பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். டெல்லி போன்ற தொலை தூரத்துக்கு அவர்களை அலைக் கழிக்க முடியாது. நாங்கள் வருகிறோம் அங்கே” - இப்படியெல்லாம் உச்ச நீதிமன்றம் போய், தானே முன்னின்று நடத்தியிருக்க வேண்டுமெனும் நம் எதிர்பார்ப்பு ஒரு தொலைதூரக் கற்பனையாகவே முடியும்.

“மதவெறியின் ஆபத்தை உணராத பெரியாரின் வழித் தோன்றல்களாகக் கருதிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள், கூச்ச நாச்சமின்றி மாறி மாறி பா.ஜ.க.வை தோளில் சுமந்து தமிழகத்தில் வளர்ப்பது சரிதானா?

தெகல்காவின் அம்பலப்படுத்தலை, மொழியாக்கம் செய்து, தமிழகம் அறியச் செய்த, அ.முத்துகிருஷ்ணன் கேள்வி எழுப்புகிறது: இது அவர் ஒருவரின் ஆதங்கம் மட்டுமல்ல. அறிவுள்ள, சிந்திக்கிற அநேகம் பேரின் ஆதங்கமும் ஆவேசமூமாகும்.

“நாங்கள் அறிவார்ந்த மக்களுக்காக அரசியல் நடத்தவில்லை. அங்கே பாருங்கள், இன்னொரு திசையில்” என்று ஒரே பதிலால் பூட்டுப் போட்டுவிடலாம். பெரிய பெரிய பதவி ஆதாயங்களுக்காக, பெரியாரை தங்கள் காலுக்குக் கீழும், பின்னாலிருக்கும் குடும்பத்தை இந்துத்வாவின் கோரப் பிடிகளுக்கும் விட்டுச் செல்கிறார்கள் எனும் முரண்செயல்தான் என்பதில் ஐயமில்லை.

இந்த மொழியாக்கப் பணி ருசியக் கவிஞர் மாயாகோவஸ்கி சொன்னது போல் பொதுமக்களின் ஈர்ப்பு எனும் கன்னத்தில் அறைகிறது. சொரணையற்றுப் போன கன்னங்களில் மனித உரிமை, சுற்றுச் சூழல், மெகா திட்டங்கள் அமெரிக்க நாட்டாண்மை, ஒற்றைப் பொருளாதார மயமெனும் உலகமயம் போன்ற விசயங்களை சொரணையுள்ள சொற்களால் அடிகள் கொடுக்கிறார். அ.முத்துகிருஷ்ணன் அவருடைய முந்தைய அனைத்துப் படைப்புக்களினும் மேலான, உச்சமான ஒரு காரியத்தை, இந்த மொழிபெயர்ப்பால் நிகழ்த்தியுள்ளார்.

குற்றவாளிகள் வாயிலிருந்து அது ஆறு ஆண்டுகள் ஆகிவிட்ட போதும், அசந்து மறந்து வரவில்லை. மிகுந்த குதூகலத்துடனேயே தாம் நிகழ்த்திய அத்து மீறல்களை விவரிகிறார்கள்.

“நாங்கள் ஒருமுழு டேங்கர் லாரியை அந்த கட்டடத்துக்குள் செலுத்தினோம்” – என்று பஜ்ரங்கி சொல்கிற போது,
“அது பெட்டோல் டேங்கர் இல்லையா?”
என்று அறியாதது போல் கேட்டு
“இல்லை அது டீசல் டேங்கர். அதை மசூதியின் உட்புகுத்தி தீயிட்டோம்”
என்று இயல்பாய் பதிலைப் பெறுகிற பலயுக்திகள், தெகல்கா புலனாய்வில் வெளிப்பட்டுள்ளன.

“குஜராத்துக்கு நரேந்திர அண்ணன் செய்ததைப் போல வேறயாராலும் செய்ய முடியாது; அவரது ஆதரவு இல்லையென்றால் நாங்கள் கோத்ராவை நிகழ்த்தியிருக்க இயலாது. இதுதான் நரேந்திர அண்ணனின் அரசியல்” என்று ஒவ்வொரு கொலையாளியும் குதூகலிக்கிற குஜராத்தின் மூவாயிரம் படுகொலைகளை அகில இந்தியா என்றில்லை. உலகமெங்குமுள்ள ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் அம்பலப்படுத்தியும், மனித உரிமை அமைப்பினர், குடிமைச் சமூக அமைப்பினர் கடுமையாகப் போரடியும், இவைகளின் பின்னரும், மூன்றாம் முறையாய் வெற்றிபெற்று முதலமைச்சராய் மோடி உட்காருகிறார் என்பதை மறக்க முடியுமா?

ஒரு தவறை, இன்னொரு தவறால் சரிசெய்ய இயலுமா? அவ்வாறானால், வாக்குகளைப் பிரித்து, 82 தொகுதிகளில் மோடி அண்ணன் வெற்றி பெற உதவிய, வரலாற்றுப் பிழை செய்த மாயாவதியை மறக்க முடியுமா?

நமக்கு முன்னால் ஒரு நிலைக்கண்ணாடி இருக்கிறது. அந்தக் கண்ணாடி நம் உள்முகங்களை, அத்வானி, நரேந்திர மோடி, பிரவீன் தொகாடியா, ராஜேந்திர வியாஸ், பஜ்ரங்கிகளின் முகங்களாய் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றுகிற போது - ஈரல்குலை துடிக்கும் பயம் எழும்புவதை மறக்க முடியுமா?

பயங்கரங்களின் நிழலை வாசியுங்கள்: பயங்கொள்ளுங்கள்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்