கணவாய் வழி வீசி, சமவெளியை செழிக்கச் செய்த காற்று

எழுத்தாளா் என்றதும் பலா் வழக்கமாய்க் கேட்பது “நீங்கள் எந்தப் பத்திரிகையில் எழுதுகிறீர்கள்? விகடனா, குமுதமா, கல்கியா? உங்கள் பெயரைக் கண்டதில்லையே?”

படைப்பாளிகள் பலருக்கு இது போன்ற அனுபவம் புதிதல்ல; பெரும் வணிக இதழ்களில் எழுதுபவா்கள் எழுத்தாளா்கள் என்று அங்கீகரிப்படுவார்கள். சமுதாய முன்னகர்வினைப் பேசும் இதழ்கள் இந்த வாசகர் கூட்டத்துக்கு அறிமுகம் கூட ஆகியிருப்பதில்லை. சிறுசிறு நுண் அலகுகளில் மக்களின் பாடுகள், கருமாந்தரங்களை அலசித் திரிகொளுத்தும் இந்த இதழ்கள் பெரும்பான்மையும் சிற்றிதழாக இயங்குகின்றன. ஆனால் எந்தப் பிரச்சினையானாலும் வேரை அறியும் வேகமுடையன சிற்றிதழ்கள்; அவற்றுக்கான வட்டம் விரிவடைய சமுதாய விழிப்பும் விரிவடையும். என்பது இந்த வணிகஇதழ் வாசகர் கூட்டம் அறியாதது. அறியப்படாத இலக்கிய இதழ்களிலிருந்துதான், அறியப்படுகிற எழுத்தாளா்கள் பலா் உருவானார்கள்.

அச்சுத் தொழில் நுட்பம் தந்த சனநாயகத்தைப் பயன்படுத்தி, சிறு வட்டமேயாயினும் அந்த வட்டத்துக்கு கருத்துக்களை எடுத்துச் சென்றனர் இச்சிற்றிதழ் வட்டத்தினர். வணிகப் பத்திரிகை வாகனங்கள் எந்தக் கருத்தியல் பாதையில் உருண்டு, வாசக மக்களைப் பின்னிழுத்துச் சென்றனவோ, அதன் எதிர்க்கருத்தியலில் இச்சிற்றிதழ்கள் வாசகமக்களை முன்னகர்த்தின. சக்தி, கிராம ஊழியன், தேனீ போன்ற இதழ்களும், இடதுசாரிக் கோட்பாடுகள் அடிப்படையில் சாந்தி, சரஸ்வதி, தாமரை, விடியல், சிகரம், மனிதன், மனஓசை, செந்தாரகை போன்றவையும், கணையாழி, ஞானரதம், கண்ணதாசன், சுபமங்களா போல் ஆயிரக்கணக்கில் விற்பனையான நடுவாந்திர இதழ்களாயினும் (medium magazines) லட்சங்களில் விற்கும் வணிக இதழ்களோடு ஒப்பிடுகையில் சிற்றிதழ்களே. விற்பனை எண்ணிக்கையினால் மட்டுமல்ல; கொள்கையளவிலும் அவை பொதுச்சமூகத்தின் போக்குக்கும் கருத்துக்கும் எதிரானவை.


பெரும் பத்திரிகைகள் நிலைநிறுத்திய அறிவின் அதிகாரத்தை எதிர்த்த சிற்றிதழ்களில் தொடங்குகிறது கி.ராஜாராயணனின் எழுத்துப் பாதை. சக்தி, சரஸ்வதி, தாமரை இதழ்களுக்குப் பிறகு நீலக்குயில் (வேலை, வேலை, வேலையே வாழ்க்கை), அஃ (ஜீவன்), தீபம் (கோமதி), கதிர் (ஒரு காதல் கதை), கசடதபற (வந்தது), கண்ணதாசன் (நாற்காலி), ஞானரதம் (ஓா் இவள்), கணையாழி (சந்தோசம்), சோதனை (புறப்பாடு), வேள்வி (விளைவு), பாலம் (பாரதமாதா), மனஓசை (சொலவடை), சதங்கை (காலம் கடந்து) போன்ற பல இதழ்களில் வோ் பதித்துப் பூக்க ஆரம்பித்தன. பருத்திக்காட்டின் மஞ்சள் நிறப் பூக்கள், மேகாற்று ஈரப்பதத் தடவலில் அமோகமாய் பலன் பிடிக்கும் என்பார்கள். கி.ரா என்ற பருத்திக்காட்டில், சிற்றிதழ்கள் என்ற மேகாற்றுப் படர வெள்ளாமை நல்ல சீருக்கு விளைந்தது.

கதவு, கரண்ட், மாயமான் போல அதிகார இயந்திரத்தை எதிர்க்கும் கதைகள் இயல்புவாதப் படைப்புக்களாகின. இயல்புவாதம் என்பதின் அா்த்தம் பொருளாதார நலிவு, போதாமை, வறுமையின் அடிப்படையில் எழும் சிக்கல்களை விவரிப்பது மட்டுமல்ல, சமுதாயத்தோடு பொருந்திப் போகாத ஒவ்வாமையின் குரல்களைப் பதிவு செய்தலுமாகும். அரவாணிகளுக்கு இன்றைக்கு சமூக மதிப்பு அரைகுறையாகவாவது உருவாகியுள்ளது. அவா்களில் சிலா் கலைஞா்களாக, படைப்பாளிகளாக உருப்பெற்றிருக்கிறார்கள். சமூக மதிப்பு ஒருதுளியும் கிட்டாத அக்காலத்தில் அவா்களின் அவலத்தை எடுத்துரைத்த இந்தக் ’கோமதி’கதை உருக்கொள்கிறது. ஒரு ஊமையனின் நிறைவேறாப் பாலியல் அவாவை வெளிப்படுத்திய ’ஜீவன்’ போன்ற கதைகளின் கலகக் குரலுக்கான சுதந்திர வெளியை சிற்றிதழ்கள் ஏற்படுத்திக் கொடுத்தன. கி.ரா எழுதிய ’கிடை’ - குறுநாவல், ’நெருப்பு’ போன்ற கதைகள் ’தலித்’ பிரச்சினைச் சூட்டின் வெப்பத்தை அளவிட்ட வெப்பமாணிகள்; வாசித்தவா்கள் எவரும் அவரை தலித்துகளின் எதிரி என முத்திரை குத்தும் அறுவறுப்பான புள்ளியில் வந்து நிற்கமாட்டார்கள்.

வட்டார மொழியில் அவா் எழுதினார். இலக்கியம் என்றால் அப்படித்தான். அவரவா் மொழியில் எழுதப்படவேண்டும். வேறுபட்ட பிரச்சினைகள் கொண்ட மாந்தா்களை எடுத்துக்கொண்டு வெளிப்பட்டதால், அவருடையவை கரிசல் எனும் எல்லை தாண்டி, தமிழ்ச் சமூகத்தின் பரிமாணம் பெற்று விட்டது. ஈழப் பிரச்சனை சா்வதேச பரிமாணம் கொண்டுவிட்டது போன்ற நிகழ்வு இது. தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் உள்ள திசைகளுக்கெல்லாம் ஈழ விடுதலைப் போர் முன்னுதாரணமாகியுள்ளது. கரிசல் வட்டாரத்தை, அவா்களின் வாழ்வியலை எழுதியதால் எல்லைகள் கடந்து கி.ரா.வின் எழுத்து உலக இலக்கியத் தளத்தில் பயணிக்கக் காரணமாகியுள்ளது.

வட்டாரம் என்பது மொழி பேசும் பிரதேசத்தின் ஒரு பகுதி மட்டுமே என, அப்படி ஒத்தையாய் பிரித்து நிறுத்தி விடமுடியாது. வட்டாரம் என்பது உலகின் ஒரு பகுதி; வட்டார இலக்கியம் உலக இலக்கியத்தின் ஒரு பிரிவு. வாழ்வியலை எழுதிக்காட்டுவது இலக்கியமென்றால், குறிப்பிட்ட வட்டார மக்களின் வாழ்வினை நிணத்தோடும் ஊணோடும் உயிரோடும் வெளிக்கொணர்தல் நிமித்தம் அது உண்மையிலும் உண்மைகொண்ட படைப்பாகிறது.

புதுச்சேரியில் நடைபெற்ற ‘மாற்று இதழ்களின்’ 22வது மாநாடு, கி.ரா.வுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கிக் கௌரவித்தது. அவருடைய படைப்பிலக்கியச் சாதனைக்கு மட்டுமல்ல, அதற்குச் சமமாக வாழ்நாளில் பிற எழுத்துச் சாதனைகளையும் படைத்துள்ளார் என்பதற்கான ஒட்டுமொத்தக் கணக்காக இந்த விருதைக் கருத வேண்டும்.

கி.ரா வருகைக்குப்பின் வட்டார இலக்கியம் கிராமிய வாழ்க்கையின் உள் ஆழம்வரை துளையிட்டு உள்ளிருந்தவையை மேலே தள்ளிக் கொண்டு வந்தன. கி.ரா.வின் எழுத்துக்கள் வந்த பிறகு கிராமங்கள் இன்னும் அழகாகி விட்டன.

“ரயில் சத்தம்தான்; அது குரல் கொடுத்துக் கொண்டே வருகிறது. நாக்கு ஆடாத ஊமைக்குலவை இட்டுக்கொண்டே ஓடிவந்தது. அந்தக் கூவல் மனசை என்னவோ செய்தது. சில நெஞ்சங்களுக்குக் களிப்பூட்டுகிறது. சில மனசுகளுக்கு விவரிக்க இயலா பிரிவுச் சோகத்தைத் தருகிறது. அந்த அநாமத்து ஒலியில் நிறையச் செய்திகள் அடங்கியிருக்கிறது” (பிஞ்சுகள் – நாவல், பக் - 45)

தெற்கு வடக்காகச் செல்லும் ரயிலின் விசில், வேடிக்கை பார்த்த பிஞ்சுகளில் ஒரு பிஞ்சுவுக்கு இன்னொரு பிஞ்சுவின் பிரிவை நினைக்கவைக்கிறது. கனத்த துயரங்களின் ரூபத்தை தருகிறது. வாழ்வின் இக்கட்டில் சிக்கி அலைப்புறும் ஒவ்வொரு மனசுக்கும் ஒவ்வொரு வகையில் கேட்கும் உளவியல் பிடிமானம் அதில் கேட்கிறது.

“இந்தச் சிறு பையனின் வேண்டுதலைத் தட்டாமல் அவரும் நாயனம் வாசித்தார். வெங்கடேசு அங்கே போய் உட்கார்ந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம், அவரே எழுந்து சுவரில் தொங்கும் நாயணத்தை எடுத்து தலைகீழாகக் கவிழ்த்து குளிர்ந்த தண்ணீரை அதில் ஊற்றி அலம்பித் துடைப்பார். சீவாளிகள் தொங்கும் கயிறுகளில் பின்னிக் கொண்ட சிக்கல்களை முதலில் சரி பண்ணுவார். அந்தக் கயிறுகளில் நிறைய சீவாளிகளும் யானைத் தந்தத்தினால் செய்த குச்சிகளும் தொங்கும். ஒரு சீவாளியை எடுத்து வாயில் வைத்து அதில் நிறைய்ய எச்சிலைக் கொடுத்து ஊற வைத்துச் சுவைப்பார். பிறகு அதில் முன்பக்கமாக ஒரு குச்சியை எடுத்துச் சொருகி வைப்பார். முதலில் பதமாக்கிய சீவாளியிலிருந்து குச்சியை எடுத்து விட்டு திரும்பவும் எச்சிலால் ஈரமாக்கி சீட்டி அடிப்பார். அது ஏதோ ஒரு பறவை கூப்பிடுவது போல் இருக்கும். சீவாளியை நாயனத்தில் செருகி, நிறுத்தி வைத்துவிட்டு ரெண்டு மூன்று வினாடிகள் கண்ணை மூடி அமைதியாக இருப்பார். பிறகு அவா் முகத்தில் விவரிக்க முடியாத ஒரு பரவசம் தோன்றும்; நிமிர்ந்து உட்கார்ந்து நாயனத்தை வாரி எடுத்து வாசிக்க ஆரம்பிப்பார்”. (பிஞ்சுகள் – பக். 14).

எந்த ஒரு சாதாரணரும் பயணிக்க முடியாத அசாதாரண புள்ளிகளுக்கு கூட்டிடச் செல்வது கலை .”நா சொல்லி முடிச்சிட்டேன். பாத்தியா” என்று கி.ரா.வின் முகம் சொல்வதுபோல் இருக்கும்.

ஒவ்வொரு பாத்திரமும் அவா் குரலை நேரடியாகப் பேசும். பாத்திரங்களின் வாய்மொழியாக இருந்தாலும் கி.ரா பேசுகிறார் என்ற எண்ணத்தை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. காரணம் அவா் கையாளும் அவருக்கேயான வட்டார மொழி.

பாத்திரங்கள் பேசும், அல்லது அவா்களது வாழ்க்கை முறையால் பேசவைக்கப் படுவர். செருப்பைத் தூக்கச் சொல்லும் புதுமாப்பிள்ளை பரசு நாயக்கரை, ‘நீரு ஆம்பிளையானா என்னைக் கூப்பிடக் கூடாது’ என்று தூக்கி எறிந்துவிட்டுப் போகும் பெண் அவள்; அவள் ஒருத்தி என்றில்லை. சுயம் பாதிப்புக்கு ஆளான, பெண்களின் எதிர்ப்புக் குரலை கேட்கச் செய்தார். தன் சுயத்தை மதிக்கிற ஆணோடு இணைந்து கொள்கிறவளாக, இல்லையெனில் ஒதுக்கித் தள்ளுகிறவளாக காட்டுகிறார். வைராக்கியம், வீறாப்பு என்னும் வார்த்தைகள் இதைக் குறிக்கின்றன. வைராக்கியமும் வீறாப்பும் பெண்களுக்கு அவசியமற்றது எனக் கருதுவோர் உள்ளனர். அவை யாவும் ஆண் சென்மத்துக்கு உரித்தானது என்பதுதாக இவர்கள் ’பட்டா’ போட்டுக் கொடுத்துள்ளதாக கருதுகின்றனர்; சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இவர்கள் போட்டுக்கொடுத்த பட்டா செல்லாக்காலம் இது.

பாத்திர வார்ப்பு என்பது, இயல்பாய் மனுசன் மனுஷி என்னவாக இருக்கிறார்களோ, அந்தப் பதிவு மட்டுமன்று, அவர்களை என்னவாக வார்க்க எழுத்தாளன் கருதுகிறானோ, அந்தப் பார்வையும் இணைந்தது. சில பாத்திரவார்ப்புகளை படைப்பாளி அப்படி தெரிவு செய்து கொள்வான். அது அவனது நோக்கு. பெண்ணின் அடக்கமான குரலைப் பதிவு செய்த அந்நாட்களில் எதிர்ப்புக் குரலையும் கி.ரா பதிவு செய்துள்ளார்.

அவருடைய கதைகள் மக்களினுடையது; கரிசல் வட்டாரத்தில் வசிக்கும் என் மக்களினுடையதாகவும் இருந்ததை அறிய முடிந்தது. அவருடைய ’கதவு’ கதை என்னுடைய பால்ய காலத்தைத் தட்டிக் கூப்பிட்டது. அக்கால கிராம வீடுகளில பல ‘கதவு’ இல்லா படல் வைத்து மூடியிருக்கும்; இரவில் தூங்கும்போது நாய் நுழைந்து விடாமலிருக்க, உலக்கை அல்லது மர விட்டத்தை படல் குறுக்காக சாத்தி வைத்துத் தூங்குவோம். எப்படியும் இடுக்கில் நாய் புகுந்து, கம்மஞ்சோற்றுப்பானை முழுதையும் நக்கித் தீா்த்துவிட்டுப் போகும். பானைக்குள் தலையை நுழைத்து எடுக்க முடியாமல், அடி வாங்கி காள் காள் என்று கத்திக்கொண்டு ஓடிய நாய்கள் உண்டு. ஆனால் புதுப்புது நாய் வரும். ஆனால் கி.ரா-வின் இந்தக் கதவு வித்தியாசமானது. பஞ்சாலைகள், நூற்பாலைகள் என தென்மாவட்டங்களில் உண்டானபோது, மொதுமொது வென அந்த்தொழிற்கூடங்களுக்குள் போனது சனம் - இது ஒரு காலகட்டம். கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், சிவகாசி போன்ற நகரங்களில் தீப்பெட்டி ஆலைகள் நெருநெரு வென வளர்ந்தது அதற்கு அடுத்தகட்டம்.நகரங்களில் மட்டுமல்ல, 50 கி.மீ சுற்றளவில் ஓரஞ்சாரம் வாழ்ந்த கிராமத்து சனத்தையும் தனக்குள் முடக்கியது அத்தொழில். சிறுபிள்ளைகளுக்கு தீப்பெட்டியில் ஒட்டும் படங்கள் விளையாட்டுப் பொருளாயிற்று. வீட்டுக் கதவுகளில் ஒட்டிவைத்து சிலாகிப்பார்கள். அதற்கு மட்டுமல்ல, கதவுகள் ’பஸ்‘ விளையாட்டுக்கும் பயன்பட்டன. கொண்டி வைத்த அந்தக் கால கதவு பலமானது. அதில் ஏறி ஏறி ஆட்டி ஆட்டி "போகலாம் ரைட், நிறுத்து ,இறக்கம் வந்தாச்சு" என்று பஸ் விளையாட்டு ஆடுவார்கள். ஒருநாள் கிஸ்தி கட்டவில்லையென்று வருவாய்த்துறை அதிகாரிகள் கதவை ’ஜப்தி’ செய்து எடுத்துப் போய்விடுகிறார்கள். இரவில் வாடைக்காற்று வீசுகிறது; தாட்டு (சாக்கு) விரித்து மறைத்த தடுப்பையும் தாண்டி வாடை உள்நுழைகிறது. பிள்ளைகள் கவுட்டுக்குள் கைகொடுத்து சுருண்டுசுருண்டு படுக்கிறார்கள். பகலில் பஸ் விளையாட்டு ஆட தீப்பெட்டிப் படங்கள் ஒட்டிய கதவைத் தேடுகிறார்கள். ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் ஊர்ப்பொதுமடத்தில் குவித்து வைக்கப் பட்டிருப்பதை சிறுபிள்ளைகள் ஏக்கமாய்ப் பார்ப்பதாக முடியம் கதை.

என்னுடைய பள்ளி வயதும், கல்லூரிப் பருவமும் மொழி பெயா்ப்புக் கதை, நெடுங்கதைகளால் முற்றுகை கொண்டிருந்தன. நூலகத்திலிருந்து மொழியாக்கங்களாக வாசிக்க எடுத்துப் போவேன். தமிழில் சில கதை நூல்களே வாசித்திருக்கிறேன். இருட்டிலுள்ள எல்லாப் பொருட்களையும் ஒரு மின்னல் வெளிச்சப்படுத்தியது போல், கி.ரா என் வாழ்வுப் பிரதேசத்தில் நுழைந்தார்.

அவரிடமிருந்து எடுத்துக்கொள்ள என்னைப்போல ஒவ்வொருவருக்கும் இருந்தது. ஒவ்வொருவராய் அருகணைந்தார்கள். அவரைப் போலவே அவருடைய துணைநலம் கணவதி இருந்தார். இலக்கிய வாசிப்பு என்று சொல்லிக் கொண்டு வந்த எவரும், அவருடைய இடைசெவல் ராஜபவனத்தில் கை நனைக்காமல் போனதில்லை. சோ.தர்மன் ஒரு தலித், கழனியூரன் ஒரு இஸ்லாமியர் - சாதி, மத பேதம் கிடையாது. வாழ்க்கைச் சிக்கல்கள் பற்றி அவா் முன் வைக்கிறபோது இப்படிச் செய்யுங்க இது வேண்டாம் என்று ஆலோசனைகள் வரும். இடைசெவல் கிராமத்தைக் கடந்து குடிபெயர்ந்த புதுச்சேரியிலும் இதே அணுகுமுறைதான்.

படைப்புச் சாதனைகளுக்கு சமமாகவே வந்தோரை வரவேற்கும் கணவதியின் சாதனை பெரிது. புதுசாய் எழுத வருகிறவா்களை வரவேற்று ஊக்கப்படுத்தல் கி.ரா.வுக்கு முதன்மையான பணியாக இருந்தது என்றால், வந்தோர் இன்னார் இவரார் எனப் பாகுபாடு காணாமல் உபசரிக்கும் காரியார்த்தத்தில் கணவதி கை கூடியவராக தென்பட்டார். துணைவியார் கணவதி பற்றி பேராசிரியா் பஞ்சாங்கம் சொல்வார்
“கி.ரா ஒரு நான்கு கால் மனிதா் தனக்குச் சொந்தமான இரு கால்களையும் கொண்டு அவரால் நடக்க இயலாது; கணவதியின் கால்களையும் சோ்த்துத்தான் அவரால் நடக்க முடியும்” - (மறுவாசிப்பில் கி.ராஜநாராயணன், பக். 43)


சாதனையாளராக எண்ணத்தக்க சிலா் இருந்திருக்கிறார்கள். அவா்கள் எல்லாக் காலத்திலும் சாதனையாளராக இருந்ததில்லை. குறிப்பிட்ட காலத்தில் வியக்கத்தக்க காரியங்களைச் செய்திருக்கிறார்கள் என்பது நினைக்கப்பட வேண்டும். ஆனால் இன்னும் சாதனையாளராகத் தொடர்கிறார் கி.ரா என்பதுதான் நினைக்கப்படவேண்டியது.

தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம், புதுச்சேரியில் நடத்திய 22-வது மாநாட்டில், வாழ்நாள் சாதனையாளா் விருது பெற்றுக் கொண்ட கி.ரா பேசுகிறார்;
”அர்ச்சுணனோட சாதனை ரொம்ப பிரபலம். குறிவைத்தால் இணுக்குப் பிசகாது அடிக்கிற வில்லாளி. கடைசிக் காலத்தில் ரொம்பத் தவங்கிப் போய்ட்டான். வில்லெடுத்து கம்பீரமா நடக்கிற அர்ச்சுணன், வில் ஊன்றி நடக்கிறவனாக ஆகிவிட்டான். கிருஷ்ணன் ஏற்பாட்டில் நதிக்கரையில் வன உற்சவம், வன போஜனம் நல்ல சாப்பாடு, ஆடிப்பாடி நேரம் போய்ட்டே இருக்கு. அப்ப கிருஷ்ணன் சொல்வான், "பெண்கள் நிறைய நகை போட்டிட்டு வந்திருக்காங்க, வனத்தில் கள்ளர் பயம் உண்டு. கொள்ளையா்கள் வந்து அடிச்சி பறிச்சிட்டுப் போயிருவாங்க. அப்புறம் அவங்களோட சண்டைபோட வேண்டியிருக்கும். பொழுது நல்லா இருக்கிறப்பவே பெண்கள் பத்திரமா இருப்பிடத்தில் சேத்திட்டு வந்திரு. அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் நாம பேசலாம்".

அதன்படியே, விட்டுட்டுவரேன்னு அர்ச்சுணன் பாதுகாவலா பெண்களை முன்னால் நடக்கவிட்டு பின்னாடியே போறான். கொஞ்ச தொலைவுதான் போயிருப்பாங்க. கொள்ளைக்காரங்க சுத்தி வளச்சிட்டாங்க. மளமளன்னு பெண்கள் கிட்ட இருக்கிற நகையைப் பறிக்கிறாங்க. இதை அவித்திருங்க, அதை அவித்திருங்கன்னு கள்ளன்கள் சொல்றாங்க, ‘கள்ளன் செய்த சகாயம் காதை அறுக்காம கடுக்கனை எடுத்தது’ என்கிற மாதிரி கழற்றிக் கொடுக்க கொடுக்க பொட்டணம் முடிந்து கொள்கிறார்கள். அர்ச்சுணன் தடுக்கிறான். அர்ச்சுணன் என்ன நினைக்கிறான். நாம ஒரு அரட்டுப் போட்டா பயந்து போயிவாங்கன்னு நெனைச்சி, நா யார் தெரியுமா? என்கிறான், கூட்டத்திருந்து ஒரு கள்ளன் முன்னாலே வந்து ’என்னடா ஒனக்கு ஒரு வில்லு? நீ என்ன பெரிய்ய அர்ச்சுணன்னு நெனைப்பான்னு?’ செவிட்டில ஒரு அறை வச்சான். கையிருந்த வில்லைப் பறிச்சிக்கிட்டான்.

அப்போது அர்ச்சுணன் கண்களில் கண்ணீா் தாரை தாரையா வழியுது. எப்படி இருந்தவன் நான்? வானத்தில இடி இடிச்சா அர்ச்சுணன் போ் பத்துன்னு எம்பேரைச் சொல்வாங்க; அப்படி இருந்த என்நிலைமை இப்படி ஆயிருச்சேன்னு கிருஷ்ணன்கிட்டே வந்து சொல்லி கண் கலங்கினான். அப்ப கிருஷ்ணன் சொன்னான் “நா பெரிய வில்லாளின்னு ஒனக்கு ஒரு கா்வம் இருந்தது. அந்த கர்வத்துக்கு இனி இடமில்லே. நம்ம சாதனை முடிஞ்சு போச்சு”.

சாதனையாளா்கள்னா கடைசி வரைக்கும் அது மாதிரி இல்லேன்னா சில சிறுமைகள் வந்து சேரும். சிறுமை இல்லாம வாழ்நாள் பூரா சாதனை செய்தவர்னா, செய்ய முடியாத சாதனை செஞ்சவா்னு நெனைச்சுப் பார்த்தா எனக்குத் தெரிய பெரியார் ஒருத்தா்தான். அவா் செஞ்சு சாதனைகள் யாருமே செய்ய முடியாது. சில விசயங்களை தலைகீழா மாற்றியில்லே போட்டாரு. எவ்வளவு பெரிய விசயம்! பிராமணங்க எவ்வளவு தந்திரசாலிங்க, அவங்க எப்போ்ப் பட்டவங்க. எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிப் போய்ட்டாங்களே. எல்லாப் பிராமணங்களையும் பாத்து இதுக்கு என்ன பதில்னு கேட்டார். அவங்களால பதில் சொல்ல முடியலே. இப்ப இங்க சில பேர் நோட்டீஸ் கொடுத்தாங்களே. அது மாதிரி அச்சடிச்சி பதில் சொல்லியிருக்கலாமில்லையா? அவங்க ’குட்டு நெட்டெல்லாம்’ ஒடச்சிப் போட்டாரு. மூச்சு காட்டாம இடத்தைக் காலி பண்ணிட்டாங்களே! இப்படி யாரும் செஞ்சதில்லே. பெரியார் ஒரு பயங்கரவாதியில்லே. தனக்கான அவருடைய ஆயுதங்கள் மைக் (மேடைப்பேச்சு) ஒரு பேனா மட்டுமே.

அவருடைய மிக நெருங்கிய நண்பா்கள் பலர் பிராமணீயத்தின் உச்சத்திலிருந்த அவருடைய பிராயத்தவா்கள். அப்படி ஒரு பண்பாடு கொண்டவா் பெரியார்.

அதனாலதான் சொல்றேன் சாதனையாளா்னா அவா் தான். அவருக்குக் கொடுத்திருக்கணும் இந்த சாதனையாளா் விருது. சாமான்யனான என்னைக் கூப்பிட்டு எம்போ்ல அபிமானம் உள்ளவங்க பிரியம் கருதி என்னைப் பாராட்டுறதும் விருது கொடுக்குறதும் இதை நா ஒங்க மனசை நோகடிக்காம வாங்கிக்கிறதும் ஒரு சம்பிரதாயம்தான்.”

நான் முன்வரிசையில் அமர்ந்திருந்தேன். பின்னால் திரும்பிப் பார்த்தேன். காணாததைக் கண்டது போல் சிந்தனையில் தோய்ந்திருந்தன முகங்கள். சிந்திக்க வைக்கிறவர் எல்லோரும் பெரியார்தான் என்று அந்தப் பொழுதில் எனக்குப் பட்டது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?