நெருக்கடிநிலை - இலக்கிய சாட்சியம்

“பக்கத்து வீட்டுத் துன்பத்தைப் பற்றி அறியாத நகரம் தூங்கிக் கொண்டிருந்தது. நள்ளிரவில் அரசுக் குடியிருப்பில் ஒரு லாரி கணவனையும், மனைவியையும், சிறு குழந்தையையும், இருபது வருட அரசு உத்தியோகம் பார்த்ததில் கிடைத்த சாமான்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. வாழ்க்கையை இழந்து அவர்கள் கோவையிலிருந்து கிளம்பியபோது லாரியில் புறப்பட்டார்கள்.

மேலதிகாரிகள் மிகவும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டார்கள். வேலை நீக்கம் பற்றி முன்பே அறிய நேர்ந்தால் விடுமுறை போடுவதற்கும், நீதிமன்றில் முறையிடவும் வழி உண்டாகிவிடும்; அவ்வளவு நீண்ட கயிறு கிடைத்தால் மேலேறி வந்துவிடுவார்கள். வந்துசேரக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக இருளைத் துளைத்து வேலை நீக்க அம்பு எய்தார்கள். ‘நெருக்கடி நிலை தொடர்புடைய எந்த நடவடிக்கையையும் கேள்வி கேட்க முடியாது’ என்ற அரசு நடைமுறை இருந்தும், ஏன் மேலதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மூலம் இரவில் வீட்டுக்கு ஆளனுப்பி உத்தரவை வழங்கினார்கள்? ஆணையை வாங்கிய கரங்களில் வெதுவெதுப்பான கண்ணீர்த்துளி தெறித்து விழுந்ததை மேலிருக்கும் எவரும் கண்டிருக்க வாய்ப்பில்லை.

குழந்தை இதெல்லாம் அறியான்.

கார், வேன் இவைகளிலிருந்து மாறுபட்டு முதன்முதலாய் லாரியில் வந்தது குழந்தைக்கு குதூகலத்தைக் கொடுத்திருக்க வேண்டும். டிரைவர் இருக்கைக்குப் பக்கத்தில் அப்பா அம்மாவுக்கு நடுவில் அவன். மூன்று வயதானவன், இரண்டு பேரின் கழுத்திலும் கைகள் போட்டு ஊஞ்சலாடியபடி வந்தான். நிறைய்ய முத்தங்கள் கொடுத்தான். அவர்கள் இழந்துவிட்டு வந்த சந்தோஷத்தை அவன் ஒருவனே கட்டிப்பிடித்துக் கொண்டு தூக்கி வருவது போல் தோன்றியது.”

1977-ல் மனிதன் என்ற புரட்சிகர மாத இதழில் “அனல் காற்று” என்ற எனது இந்தச் சிறுகதை வெளியானது. நெருக்கடி நிலையினால் விளைந்த பணி நீக்க வேதனைகளை விவரித்திருந்தது. நெருக்கடி நிலையின் போது ’மனிதன்’ புரட்சிகர மாத இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. கோவை ஈஸ்வரன் ஆசிரியர். அவரைக் கைது செய்து இதழைத் தடை செய்வது காவல் துறையின் திட்டம். அதுமட்டுமில்லை, தெலுங்குப் புரட்சிக்கவி ஸ்ரீ ஸ்ரீ அப்போது சென்னையில் வாழ்ந்தார். அவரையும் கைது செய்து உள்ளே தள்ள தருணம் பார்த்திருந்தார்கள்; திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்ததால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு, நெருக்கடி நிலையை எதிர்ப்பவர்களை அணைவாய் வைத்துக் கொள்ளல் - அப்போதைய தி.மு.க ஆட்சியின் நடைமுறையாயிருந்தது.

1975 ஜுன் 24 இரவில் பிரகடணம் செய்யப்பட்ட நெருக்கடிநிலை இந்தியாவை அல்லோகல்லோலப்படுத்தியபோதும், அதன் ஆட்டம் தமிழ்நாட்டில் பெரிதாக உணரப்படவில்லை. அவசர நிலையால் பாதிப்புற்ற பிற மாநில அரசியல் தலைவர்கள் பலர் தமிழ்நாட்டில் தலைமறைவாக இருந்தனர். நெருக்கடி நிலைக்கு எதிரான பலருக்கு தமிழகம் அடைக்கலபூமியாக ஆகியது. மக்கள்நலத் தொண்டர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தெலுங்கு மொழியின் புரட்சிக் கவியான மகாகவி ஸ்ரீ ஸ்ரீ போன்றோரைக் கைது செய்து முடக்கிட மத்திய அரசு விரும்பியது. தி.மு.க ஆட்சி நடைமுறைப்படுத்தவில்லை. காத்திருந்த நடுவணரசு ஆறு மாதங்கள் கழித்து 1976 ஜனவரி 31 அன்று தி.மு.க ஆட்சியைக் கலைத்தது.

ஆட்சி கலைக்கப்பட்டதும் ஒன்பது இதழ்கள் வெளிவந்திருந்த ’மனிதன்’ அலுவலகத்தை “சீல்” வைத்து மூடியது காவல் துறை. அந்நாட்களில் ’மனிதன்’ இதழின் இலக்கியப் பக்கங்கள் அனைத்தையும் கரிசனத்துடன் கவனித்துப் பங்களித்துக் கொண்டிருந்தவர் கவிஞர் இன்குலாப்.

1975 காட்சியியல் ஆதிக்கம் இல்லாத காலம். அரசின் அதிகாரப்பூர்வ காட்சியியல் (Doordarshan) ஒன்று மட்டும் செயல்பட்டது. தனியார் தொலைக்காட்சிகள் பேருக்குக் கூட ஓரிலை ஈரிலை விட்டிருக்கவில்லை. காட்சி ஊடகக் கடல்களால் சூழ்ப்பட்ட தற்காலத்தில் ஏதொரு நிகழ்வும் யாதொரு சேதியும் உடனே மக்களைச் சென்றடையும் சாகஸம் நிகழ்ந்து கொண்டுள்ளது. 1975-ல் தனியார் நாளிதழ்கள், பருவ இதழ்கள் என இதழியல் ஆதிக்கம் நிலவியது. மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒருதுளியும் நினைக்காத மப்பில் அவை இயங்கின.

சென்னை சாஸ்திரி பவனிலிருந்த தணிக்கை அலுவலர்களுக்கு நாளிதழ்களைத் தணிக்கை செய்ய நேரம் போதவில்லை. செய்தித் தணிக்கை முடிந்த பின் பக்கங்களை வெறுமையாய் விடக்கூடாது. அச்சில்லாமல் வெள்ளையாக இருந்தால் மக்கள் அதிருப்தி கொண்டுவிட நேரும் என்பதில் அலுவலர்கள் கவனமாக இருந்தார்கள். அப்போது தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் பத்திரிக்கைத் தணிக்கையையும் மீறி, அல்லது அது விட்டுவைத்த இண்டுஇடுக்குகளுக்கு ஊடே புகுந்து கருணாநிதி ’முரசொலி’ நாளிதழை நடத்தியவிதம் இன்றும் பலரால் பாராட்டப்பெறுகிறது.
ஆட்சியை, நிர்வாகத்தை விமர்சித்து எழுதிடல் கூடாது என்பதால் ’விளக்கெண்ணை சாப்பிடுவது உடம்புக்கு நல்லது’ என்று பக்கம் முழுதும் நிரப்பியிருக்கும். நெருக்கடி நிலையின்போது ‘மிசா’வில் சிறைகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க தொண்டர்களின் பெயர்களை நாளிதழில் வெளியிட அரசின் தணிக்கைத் துறை அனுமதி மறுத்தது. அண்ணா நினைவுநாளைப் பயன்படுத்தி முரசொலி நாளிதழில் “அண்ணா துயிலுமிடத்திற்கு வர இயலாதோர்” எனத் தலைப்பிட்டுச் சிறை வைக்கப்பட்ட தி.மு.க தொண்டர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்ட கருணாநிதியின் சாமர்த்தியத்தின் முன் தணிக்கைத் துறை ஏமாந்தது.

சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மேயர் சிட்டி பாபுவைச் சிறைக் காவலர்கள் சூழ்ந்து நின்று தடிகளால் அடித்துக் கொன்றனர். இந்தச் செய்தியை அப்படியே வெளியிட அனுமதி கிடைக்காது. கருணாநிதி “பத்துப் பேர் சூழ்ந்து நின்று கொண்டு தடியால் தாக்கினாலும் வீழாத தேக்கு மரத் தேகம் கொண்டவனே!” என்று எழுதியதைப் படித்ததுமே தொண்டர்கள் செய்தியைத் தெளிவாக உள்வாங்கிக் கொண்டனர்!

’ஈர்க்கு’ இடைவெளியற்ற இந்த நெருக்குதலுக்கிடையில் கலை, இலக்கிய இதழ்களில் சாஸ்திரிபவனுக்கு கவனம் செலுத்த முடியாமல் போயிற்று. உள்ளூர்க் காவல்துறையின் வேலை என ஒதுக்கிவிட்டார்கள்.

2

நெருக்கடிநிலை அறிவிப்பின் போது நான் கோவை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியில் இருந்தேன். ஆட்சிக் கலைப்பின் பின்னால் சரியாக ஒரு மாதம் கழித்து 31-7-1976ல் செய்தி மக்கள் தொடர்புத் துறை கலைக்கப்பட்டு, அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டோம். மறுநாள் விடியலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சித்துறை (DDO) அலுவலர், அரைக்கால் டவுசருடன் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார். அவர் வழக்கமாய் காலை நடைபோகிறவர். கதராடை அணிகிற காங்கிரஸ்காரர். பெயர் நீலகண்டன். வீட்டுத்தொலைபேசியில் வெளித்தொடர்பு எதுவும் கொள்ளவேண்டாம் என்று எச்சரித்துவிட்டுப் போக வந்திருந்தார். ஒரு தேநீர் சாப்பிட்டவாறு பேசிக்கொண்டிருந்தோம். அன்றைய காலைநடை என் வீட்டுடன் அவருக்கு முடிந்து போயிற்று.

அநீதிக்குச் சார்பான எந்த ஒரு செயலையும் ஏற்காத அவர் மெய்யான தேசியவாதி என எனக்குப் புலப்பட்டது. தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய அனைவரையும் சேர்த்து ஏறக்குறைய நூறு குடும்பங்கள் வீதியில் நின்றன. அத்தனைபேரும் ஆட்சியிலிருந்த கட்சிக்குச் சார்பானவர்கள் என்ற கருத்து நிலவியதுதான் வேலைநீக்க வன்மத்தின் பின்னணி.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் எனது துணைவியாரின் அண்ணன் பி.வி.பக்தவத்சலம் வழக்குரைஞராக இருந்தார். அங்கிருந்து ஐந்து கி.மீ தொலைவில் ’கட்டேரி’ என்ற கிராமத்தில் அவருக்கு சிறிய ஒரு வீடு இருந்தது. கட்டேரி கிராம வீட்டில் இருக்கிறபோது மைத்துனரின் உதவியால் மூன்று கறவை மாடுகள் வாங்கி பால் கரந்து கூட்டுறவு பால் சங்கத்தில் விட்டு அன்றாடம் அதற்குரிய பணம் பெற்றுக்கொண்டோம். நான், துணைவி, மூன்று வயதான மகன் மூவரும் வாழ்ந்த ’கட்டேரி’ வாழ்க்கையை ”அனல் காற்று, இருளுக்கு அழைப்பவர்கள், சூரியன் உதிக்கும் கிராமம்” என மூன்று சிறுகதைகள் சூரியதீபன் என்ற பெயரில் எழுதினேன். ஒரு எழுத்தாளர் கறவைமாடுகள் வைத்து பால் கறந்து ’கூட்டுறவுப் பால் டிப்போவில்’ விட்டு வாழுகிறாரே என எவரும் வருந்தவில்லை; அதிகாரியாய் இருந்தவர் இப்படியொரு வாழ்வுக்கு கீழிறங்கிவிட்டாரே என்ற இரக்கப்பார்வை வெளிப்பட்டது (நான் எழுதுகிறவன் என்பது அப்போது என் நெருங்கிய உறவுகளுக்கு தெரியாது).

விடியல் என்னும் சமூக, கலை இலக்கிய மாத இதழை நடத்தி வந்த ’விடியல்’ வேணுகோபாலுக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. அவசரநிலைக் காலத்தின் கொடுங்கரங்களுக்குள் சிக்கியவாறு, அவர் ‘விடியல்’ இதழைக் கொண்டுவந்தார். அதே கால அளவில் இலங்கையிலிருந்து செ.கணேசலிங்கணை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘குமரன்’ இதழிலிருந்து இந்திய அரசியலுக்குப் பொருந்தும் வகையிலான யோ.பெனடிக்ட் பாலனின் உருவகக் கதைகள் போன்ற படைப்புகளை மீள்பிரசுரம் செய்தார். நேரடியாக அரசியல் பேச முடியாது; வாயப்பூட்டு போடப்பட்ட அந்நிலையிலும் அத்தகு படைப்புகளுக்கு வாசக வரவேற்பு பெருமளவாக கிடைத்தது. கணிசமாக இலங்கை எழுத்தாளர்கள், இதழ்கள் தொடர்பும் அவருக்குக் கிட்டியது. ’விடியல்’ இதழ் 1974 முதல் 1976 செப்டம்பர் முடிய வெளியாகிற்று. காவல்துறையின் சட்டமீறல், அடக்குமுறை, மிரட்டல், குடும்பத்தினரை அச்சுறுத்தல் போன்ற கொடுஞ்செயல்கள் காரணமாய் பயணத்தைத் தொடரமுடியாது நின்றுபோயிற்று.

அவசரநிலைப் பிரகடனத்துக்கு ஆதரவாக ”சக்கரங்கள் நிற்பதில்லை” என்ற புதினத்தை ஜெயகாந்தன் எழுதினார். தினமணிக் கதிரில் அது தொடராக வெளியானது. மார்க்ஸீய - லெனினிய இயக்கங்களின் செயல்களுக்கு எதிராக, ”ஊருக்கு நூறு பேர்” என்ற சிறுபுதினம் ஜெயகாந்தனால் எழுதப்பட்டு வெளியாயிற்று.

அவரது அரசியல்சார்பு, குறிப்பாய் காங்கிரஸ் கட்சி ஆதரவு அனைவரும் அறிந்தது. நெருக்கடிநிலைக்குச் சார்பாய் மூளையில், நாக்கில், எழுத்தில் அவரிடம் உதித்த கருத்துக்கள் மக்களின் உணர்வுநிலைக்கு எதிரானதாய் வெளிப்பட்டன. அவரது மறைவுக்குப் பின்னான நினைவஞ்சலிப் பதிவில் எழுத்தாளர் அசோகமித்திரனின் பதிந்திருந்த ஒரு குறிப்பு இங்கு கருதத்தக்கது.

”காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்ட1976-ல் கூட அவர் கலக்கம் அடையவில்லை. ஆனால் 1977-ல் எதிரணி பெற்ற பெரும் வெற்றி (ஜனதா கட்சி வெற்றியடைந்தது) அவரை மிகுந்த கவலைக்குட்படுத்தியது. அவர் பயன்படுத்திய சொற்றொடர் ’கல்ச்சுரல் மெனேஸ்’ (cultural menopause). அவருக்குக் காங்கிரஸ் மீது இருந்த பற்று தீவிரமானது. சில தருணங்களில் வலுவே இல்லாத காரணங்களுக்குக்கூட அரசியல் கூட்டங்களில் காங்கிரஸ் சார்பில் உரையாற்றினார் (திடீர்ப் பிள்ளையார்).“

அறிஞர், விமர்சகர் எஸ்.வி.ராசதுரையின் நண்பர் பெயர் நாராயணன். நண்பருடைய வீட்டில் நெருக்கடிநிலையின் நெருக்குதலுக்கு அகப்படாமல் மார்க்சீய - லெனினிய நூல்கள், ஆவணங்கள், இலக்கியப் புத்தகங்கள் என எஸ்.வி.ஆர் ஒளித்து வைத்திருந்தார். சொந்தப் பெயரில் எதையும் எழுத இயலாத அன்றைய சூழலில் நண்பரின் நாராயணன் என்ற பெயர் எஸ்.வி.ஆருக்குப் பயன்பட்டது. எஸ்.வி.ஆர் கலை இலக்கிய விமர்சகராக, மார்க்ஸீய ஆய்வாளராக அறியப்பட்டவர். அவரை ஒரு படைப்பாளியாகவும் நெருக்கடிநிலை மாற்றியிருந்தது. நேரடி மொழிதல் என்னும் திறல்படப் உரைத்தலுக்குப் பதிலாய், நயம்பட மொழிதல் என்னும் உத்தியைக் கைக்கொள்ள முயன்றார் எனத் தோன்றுகிறது. நாராயணன் என்ற பெயரில் ’பிரக்ஞை’ மாத இதழில் ’சாலைகள், கடற்கரை’ – என்ற இரு சிறுகதைகள் எழுதினார். இவ்விரு கதைகளையும் தினமனிச் சுடர், 1993 ஆகஸ்டிலும், தினமணிக் கதிர் 2001 ஜூனிலும் மீள்வெளியீடு செய்திருந்தது. சாலைகள் கதையை வெளியிட்ட தினமணிச் சுடர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது.

”நாராயணன் எழுதிய இச்சிறுகதை மே 1976 ’பிரக்ஞை’ இதழில் வெளிவந்தது. இவர் தொடர்ந்து அதிகம் கதைகள் எழுதியதாகத் தெரியவில்லை; நமது மக்களின் மந்தைத் தனத்தை, அறியாமையை, அதைச் சாதகமாக்கிக் கொள்ளும் ஆளும்வர்க்கத்தின் போக்கினைச் சூசகமாகச் சித்தரித்துக் காட்டும் கதை இது”

”நான் இருண்ட கண்டத்துக்கு இப்போதுதான் முதன்முதலாக வந்தேன்” என சாலைகள் கதை தொடங்கும். இந்தியாவை இருண்ட கண்டமென்றும் நெருக்கடிநிலையை இருண்டகாலமென்றும் உருவகப்படுத்தியிருப்பார் எஸ்.வி.ஆர்.

“அந்த மக்களில் யாருக்கும் முகமே இல்லை! கழுத்துவரைக்கும் எல்லோரும் நம்மைப் போலவே இருந்தார்கள். அதற்கு மேல் வட்டமாக ஒன்று உட்கார்ந்திருந்தது. ஒரு துவாரத்தைத் தவிர அதில் வேறெதுவும் இல்லை. முதல் நாளிரவு அரசாங்க விருந்தின்போது அளவுக்கு மிஞ்சிய தீனியையும் மதுவையும் நான் விழுங்கியிருந்ததால், இரவு முழுதும் தூக்கமின்றி விழித்திருந்தேன். இது ஒருவேளை என் பார்வையைப் பாதித்திருக்கக் கூடும் என்று ஒரு ஐயம். ஆனால் மறுநாள்காலை, இரவின் தீவிர உறக்கத்துக்குப் பிறகு பார்க்கும்போதும் முதல்நாள் கண்ட காட்சியே ஊர்ஜிதமாயிற்று. மக்களில் யாருக்கும் முகமே இல்லை! எல்லோரும் நம்மைப் போலவே இருந்தார்கள். கழுத்துக்கு மேலே வட்டமாக இருந்த ஒரே ஒரு துவாரத்தைத் தவிர, அந்த வட்டத்தில் ஏதுமில்லை…..”

சிந்திப்பு அற்றும், யதார்த்த நிலமைகளைக் கண்ணுற்று கண்களில் சிவப்பும் அற்றும் நடமாடிய மக்களின் மந்தைத் தனத்தை வாசக இதயத்துக்கு நகர்த்தியிருந்தது சிறுகதை. கடற்கரை என்னும் மற்றொரு கதையையும் இதே உருவக உத்தியில் படைத்திருந்தார்.

1976 ஏப்ரலில் தொடங்கப்பட்ட. “பிரக்ஞை” கலை, இலக்கிய இதழ், தொடக்கத்தில் கலை, இலக்கியம் பற்றிப் பெரிதும் பேசியது. 1977-ல் பலவாறான சிந்தனைத் துறைகளை அணுகுவது என்ற முடிவைத் தொடர்ந்து செப்டம்பர் - அக்டோபர் இதழ்கள் ”சீனச் சிறப்பிதழாக” வெளிவந்தது. அதில் ஜார்ஜ் தாம்சனின் மார்க்சீய அறிமுகம் கட்டுரையினை எஸ்.வி.ஆர் தமிழாக்கம் செய்திருந்தார். மாசேதுங் என்ற நீண்ட கட்டுரையினையும் அவர் எழுதினார்.

அவசரநிலை அறிவிக்கப்பட்டதற்கு ஒரு மாதம் தள்ளி ஜூலை 25-ல் ’சிகரம்’ மாத இதழ் தொடங்கப்பட்டது. ஆசிரியர் ச.செந்தில்நாதன். நெருக்கடிநிலைக் கெடுபிடிக்குள் மாட்டுப்பட்டு மொத்த சமுதாயமும் ஏதொன்றும் செய்ய இயலாமல் அரண்டு போயிருந்தது. கலை, இலக்கியவாதிகளும் அச்சமுற்று செயலிழந்து கிடந்தனர். தமிழ்க் கலை, இலக்கியச் செயற்பாட்டாளர்களிடம் தன்பயம் உருவாகியிருந்தது. எழுத்துக்களின் கலைத்தரம் குறித்து அதுவரை காலம் கர்ஜித்துக் கொண்டிருந்த சிங்கங்களும், பாய்ந்துகொண்டிருந்த புலிகளும் இடம்தெரியாமல் மறைந்தன; ஆனால் சிகரம் இதழ் - குறிப்பாய் கவிதைகள், விமரிசனங்கள் வழி நெருக்கடிநிலையை எதிர்த்து வெளியாயிற்று.

“மனிதாபிமானக் கோட்பாடுகளிலும் சனநாயக நெறிகளிலும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் போதும். உங்கள் எழுத்து மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் போதும், சிகரம் இடம் கொடுக்கும்” எனப் பிரகடணம் வெளியிட்டது. “உள்ளே வாருங்கள். ஒரு வாசல் திறந்திருக்கிறது” என வெளிப்படையாய் அழைத்தது. 1976 ஜூனில் ”டல்ஹௌசி சதுக்கம்” என்ற வங்காளக் கதை வெளியானது. இறந்த தாயின் சடலத்தின் மார்பகங்களைச் சுவைத்தபடி அழும் குழந்தைப்பாப்பாவின் அழுகையை அமர்த்தமுடியாமல் தாயின் சடலத்தின் அருகே அமர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான் சிறுவன். எதிர்க்கடையில் ஒரு விளம்பரப் பலகை ”துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் விற்பனை செய்யப்படும்”.

இத்துடன் கதை முடிகிறது. கதை முடிகிற இடத்தில் ஆரம்பமாகிறது வாசகருக்கு மற்றொரு கதை. நிலைமைகளின் வெப்பத்திலிருந்து ஒவ்வொரு வாசகரும் தமக்கான கதையை உருவாக்கிக்கொள்வதாக இந்த முடிவுப் புள்ளி இருந்தது.

அதுபோல் 1976 ஏப்ரலில் ”திருடனும் சந்நியாசியும்” என்ற மற்றொரு வங்காளச் சிறுகதை வெளியாகியிருந்தது.
“பறிப்பவன் திருடன் என்பார்
பருந்தையோ கருடன் என்பார்
பறிப்பதில் இருவருக்கும்
பாகுபாடில்லை;அதனால்
இருவருக்கும் உறவு ஒன்று!
இழந்திட்ட உரிமைப் போரில்
உறவுகள் நமக்குள் ஒன்று !
உயிர்களை மீட்கும் போரில்
சிறகுகள் பறிபோனாலும்
சீறுவாய் வா கோழி, வாழி!”
ஆகஸ்டு இதழில் வெளிவந்த தணிகைச்செல்வனின் கவிதை வாசகரிடம் தனிமதிப்புப் பெற்றது.

‘இந்திரா நகர்’ என்ற எனது சிறு நாடகம் சிகரத்தில் வெளியாயிற்று. நகரத்தின் விளிம்பில் புறம்போக்கு நிலத்தில் குடிசைகள் அமைத்திருந்த ஏழைகள் ‘திடீர் நகர்’ என்ற தங்கள் குடியிருப்பின் பெயரை ”இந்திரா நகர்” என மாற்றுகிறார்கள். ஒரு அறிவிப்புப் பலகையும் நடுகிறார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அவர்கள் கருதினார்கள். டெல்லியில் இந்திரா காந்தியின் இரண்டாவது மகனான சஞ்சய்காந்தியால் ’துருக்மேன் கேட்’ பகுதிக் குடிசைகள் இடித்து துவம்சம் செய்யப்பட்டது போலவே இவர்களும் விரட்டப்பட்டார்கள் என்பது இச்சிறு நாடகம் தந்த செய்தி.


வேறுசில பத்திரிகைகளுக்கு அனுப்பி தணிக்கையால் மறுக்கப்பட்ட படைப்புகள் சிகரத்தில் முகம் காட்டின. இந்தநிலை சிகரத்தின் வளச்சிக்கு உதவியாக இருந்தது. நெருக்கடிநிலையின் நெருக்குதலுக்கூடாகவே சிகரம் தனது உயரத்தை நிறுவிக் கொண்டது.

இவ்வாறான சிலவற்றைத் தாண்டி பொதுவாக கலை, இலக்கியவாதிகளிடம் செயலற்ற தன்மௌனம் உருவாகியிருந்தது. ’எந்தக் கூட்டுக்குள்ளும் அடைபடா பறவைகள்’ என்று முழங்கிய கோவை வானம்பாடிகளில் சிலர் அவசரநிலையின், அதன் 20 அம்சத் திட்டத்தின் வாழ்த்துப் பாடகராக ஆகினர்.

நெருக்கடிநிலையின் 40-ஆம் ஆண்டு (2016) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஊடகங்கள்,அரசியல்வாதிகள் தமது ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்ள வாய்க்காலாக இந்த சந்தர்ப்பத்தை மாற்றியுள்ளனர். இந்தவகை வெதும்பலிலும் புலம்பலிலும் வரவிருக்கும் நெருக்கடிநிலையை முன்னுணர்ந்து தடுக்கும் அல்லது இனி எப்போதும் வந்துவிடக் கூடாத முட்டுச்சந்துக்கு அனுப்பும் பரப்புரையோ, செயல்பாடோ தென்படக் காணோம். இனியொரு காலத்தில் வராது என்று நினைத்துக் கொண்டிருந்த கொடியகாலம் இப்போது நம்முன் நின்று அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக தாழ்த்தப்பட்ட மாணவர் ரோஹித் விமூலாவின் மரணம், டெல்லி ஜவகர்லால் பல்கலைகழக மாணவர்கள் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் அடக்குமுறை, பாட்டியாலா நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட மாணவர் தலைவர் கன்னையா குமார் மீது, செய்தியாளர்கள் மீது ’சங்பரிவார் சக்திகளின்’ தாக்குதல் (16 - 02 - 2016) என நெருக்கடிநிலைக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளது.

அடிப்படை மதவாத சக்திகளின் அச்சுறுத்தலுக்கு எதிராய் எழுத்துலகில் குமுறல் மையம் கொண்டுள்ளது. கன்னட எழுத்தாளர், பகுத்தறிவாளர் கல்புர்கியின் கொலையைக் கண்டித்து கர்நாடக மாநிலத்தில் ஆறு எழுத்தாளர்கள் முதன்முதல் சாகித்ய அகாதமி விருதுகளைத் திருப்பி அளித்தார்கள். எழுத்தாளர் நயனதாரா சேகல், சாகித்ய அகாதமி விருது பெற்றவரும் லலிதகலா அகாதமியின் முன்னாள் தலைவருமான அசோக் வாஜ்பாய் என இதுவரை 60 பேர், எதிர்வினை ஆற்றாத சாகித்ய அகாதமி நிறுவனத்தினைக் கண்டித்தும், மதவாத சக்திகளின் காவலனாக நிற்கும் அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தும் விருதைத் திருப்பி அளித்துள்ளனர்.

”இப்போது விருதைத் திருப்பி அளிப்பவர்கள் நெருக்கடி நிலையின் போது என்ன செய்தார்கள்? மௌனம் காத்தார்களே” என்று தோசையைத் திருப்பிப் போடுகிற வேலையை மதவாத சக்திகள் மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளர்களில் சிலரும் செய்கிறார்கள். இந்த எதிர்வாதத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. 1975 அவசரநிலைக் காலத்தில் சமூகத்தின் மனச்சாட்சியாக எழுத்தாளர்கள், அறிவாளிகள் இயங்கவில்லை என்பது உண்மை. அதனால் எல்லாக்காலத்திலும் மௌனிகளாக, அராஜகத்திற்கு துணைபோகிறவனாக எழுத்துக்காரன் இருக்கவேண்டுமென்று நினைப்பது எவ்வகையில் நியாயம்? இது எவ்வாறான எதிர்ப்பும் காட்டாத தமிழ் இலக்கியவாதிகளின் கையறுநிலையன்றி வேறென்ன?

“கையறுநிலை என்பதை விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒரு சமுதாயத்தில், கைகளில் பிடித்திருக்கும் கண்ணாடிகளில் பிம்பங்களை மட்டுமே பார்த்துக்கொண்டு நடமாடுகிறார்கள் படைப்பாளிகள். சூழல் குறித்து விசனப்பட்டு எதுவும் ஆகப்போவதில்லை; இருப்பைக் காட்ட கொஞ்சம் இடம் கிடைத்தால் போதும் என அடக்கம் பழகி அமரத்துவம் எய்துகிறது அறிவு ஜீவிதம்”

மணற்கேணி இதழில் மிகச் சரியாய் கணித்திருப்பவர் அதன் ஆசிரியர், எழுத்தாளர் ரவிக்குமார். கிட்டத்தட்ட தமிழ்ப்படைப்பாளிகளின் பொதுக்குணாம்சம் என இதனை வழிமொழியலாம். இக்குணவாகிலிருந்து எந்த மாற்றமும் இன்றி தமிழ்ப்படைப்பாளிகள் இன்றும் இயங்கி வருகின்றனர். எதிர்வினையாற்ற வேண்டிய தமிழ்ப் படைப்பாளிகளிடம் 1975-ன் அவசரநிலைக் காலத்தில் தொடங்கிய கையறுநிலை 2016-லும் தொடருகிறது. சாகித்ய அகாதமி விருதுகளைத் திருப்பி அளிக்காத 16 தமிழ் எழுத்தாளர்கள் கூட்டறிக்கை இதன் சரியான சாட்சியம்.

70-களில் தீவிரமான சிந்தனை, செயல்பாடுகளுள்ள ஒரு எழுத்தாளர் தொகுதி - சிறிய பகுதியாயினும் அதுவே வலிமையுடன் செயலாற்றிற்று.அந்தச் சிறிய குழுதான் இன்றைய நெருக்கடிநிலையின் போதும் எதிர்வினையாற்றுகிறது. புரட்சிகர, இடதுசாரிச் சிந்தனையாளர்களாக இவர்கள் அடையாளம் கொண்டிருக்கிறார்கள்.

“தொலைவில் இருந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதல்ல நாம் செய்ய வேண்டியது; போராடுகிறவர்களோடு இணைந்து போராடுவது தான் இன்றைய தேவை” என்ற மிஷேல் பூக்கோ வழியில், சிறு எண்ணிக்கையாயினும் இவர்கள்தான் நடந்தார்கள்.

சமூக யதார்த்தத் தளத்திலிருந்து விலகி, கலைஇலக்கியம் பற்றி மட்டும் கருத்தாயிருந்த ஒரு குழு, நெருக்கடிநிலை என்னும் அரசியல் விசவாயுக் கூடாரத்துக்கு அஞ்சி அன்று மௌனம் கடைப்பிடித்தது. குரலெழுப்பாத மவுனம் ஒப்புதல் தான். பிரச்சினைகளின் சூடு தென்படாத எழுத்துக்களை இன்றும் பலர் வடித்து இறக்கிக் கொண்டிருக்க, ஊடகங்களும் அவைகளைச் சுமக்கும் பல்லக்குகள் ஆகியுள்ளன. பல்லக்குத் தூக்கிகள் இருக்கையில் சுகப்பயணம் போகிறவர்களும் இருப்பார்கள் தானே!

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?