என்னை இலக்கியத்திற்குள் தள்ளியது இந்த வாழ்க்கைதான்


(ஜுலை 2003 - தீராநதி மாத இலக்கிய இதழில் வெளியான பா.செயப்பிரகாசம் நேர்காணல்; நேர்காணல் செய்தவர் – மணா.)

“என்னை இலக்கியத்திற்குள் தள்ளியது இந்த வாழ்க்கை தான்” என்று சொல்லும் பா.செயப்பிரகாசம், கரிசல் எழுத்தாளர். ‘சூரியதீபன்’ இவரது இன்னொரு முகம். ‘ஒரு ஜெருசலேம்’ தொகுதியில் ஆரம்பித்து, இதுவரை எட்டு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன (இன்றைய நாளில் 13 தொகுதிகள்). தற்போது இந்திப் போராட்டத்தை முன்வைத்தும், கிராமப் பின்புலத்தை வைத்தும் இரு நாவல்கள் எழுதுகிற முயற்சியில் இருக்கிறார். ‘எதிர்க்காற்று’ என்கிற கவிதைத் தொகுப்பும், 'கிராமங்களின் கதை', ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ என்ற கதைக்கட்டுரை வடிவத் தொகுப்புகளும் வெளிக்காட்டுவது இவருக்குப் பரிச்சயமான கிராமத்து வாழ்க்கையைத்தான்.

தமிழ் விரிவுரையாளராகத் துவங்கி, மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றி, இணை இயக்குநராகி ஓய்வு பெற்றிருக்கிறார். ‘மனஓசை’ இதழில் பத்தாண்டுகளாகப் பொறுப்பாசிரியராக இருந்தவர். “எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்காலகட்டத்தில், சமுகத்தின் மனச்சாட்சியாக ஒரு கலைஞன் செயல்பட வேண்டியவனாக இருக்கிறான்” என்று சொல்கிற இவர், மாணவராக இருந்தபோது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, பாளையங்கோட்டைச் சிறையில் இருந்திருக்கிறார். முடிந்தவரை தமிழைக் கலப்பில்லாமல் பேசும் செயப்பிரகாசத்துக்கு, ஒரு மகன், ஒரு மகள்.

சென்னை அரும்பாக்கத்திலுள்ள வீட்டில், செயப்பிரசாகத்தைச் சந்தித்தோம். கிராமத்துக்கே உரித்தான மொழி இடையிடையே புழங்க, நீண்டது இந்த நேர்காணல்.

உங்களுடைய கிராமத்து வாழ்க்கைதான் உங்கள் எழுத்துக்கு ஒரு அடித்தளத்தை உருவாக்கித் தந்ததா?
முன்பு திருநெல்வேலி மாவட்டத்திலும், இப்போது தூத்துக்குடி மாவட்டத்திலும் இருக்கிற விளாத்திகுளம் அருகில் உள்ள ராமச்சந்திராபுரம் என்னுடைய சொந்தக் கிராமம். அப்போது அங்கு பேருந்து வசதியும் கிடையாது. சாலை வசதியும் கிடையாது. அங்கிருந்து விளாத்திகுளம் பதினொரு கி.மீ நடந்துதான் போக வேண்டும். பேருந்து அங்கு  வந்ததெல்லாம் பதினைந்து ஆண்டுக்குள்தான்.

அங்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடையாது. கண்மாய்த் தண்ணீர் தான். அது நல்ல சுவையாக இருக்கும். கண்மாய்த் தண்ணீர் காற்றில் அலையடித்து கரையிலுள்ள களிமண்ணில் மோதி, நீரில் ஒருவித ‘அளிறு’ உண்டாகும். அதுதான் நீரின் சுவைக்குக் காரணம். அப்போது எல்லாக் கிராமங்களிலும் சின்னக் கண்மாய், பெரிய கண்மாய் என்று இரண்டு கண்மாய்கள் இருக்கும். பல ஊர்க் கண்மாய்களில் நீர் வற்றிப் போகும்போது, எங்கள் ஊருக்கு நீரெடுக்க வண்டி கட்டி வருவார்கள்.

மானாவாரிப் பயிர்கள் தான் விளையும். கம்பு, சோளம், கேழ்வரகு தான் முக்கியமான உணவு. காராமணி, தட்டாம் பயறு, உளுந்து எல்லாம் தேவைக்கேற்பப் போடுவார்கள். பருத்தியும், மல்லியும்தான் அப்போது வணிகப் பயிர்கள். மழையிருந்தால் தான் விவசாயம் நடக்கும்.

எங்க அப்பா விவசாயி. அவருடன் பிறந்தவர்கள் நான்கு பேரில் ஒருவர் மதுரை ஆர்.வி மில்லில் வேலை பார்த்தார். மற்றவர்கள் மூவரும் விவசாயிகள். மூத்தவரை முன்னிட்டு தம்பிகள் இருவரும் மதுரை மீனாட்சி ஆலையில் பின்னர் சேர்ந்தனர். என் தந்தை மட்டும் விவசாயியாகத் தொடர்ந்தார். எங்கள் வீட்டில் அண்ணன், அடுத்து நான், எனக்குப் பிறகு இரு தங்கைகள்.

பல வருசங்கள் பருவ மழையில்லாமல் கஷ்டப்பட்டோம். எங்களுக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது. அப்போது நூறு ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கிறவனின் வருமானம், நகரத்தில் அரசுப் பணியாளர்களின் வருமானத்தைவிடக் குறைவாக இருக்கும். வறட்சி எங்களுடைய வாழ்வையும் பாதித்தது.

உணவுத் தட்டுப்பாடு வந்தபோது வேறு வழியில்லாமல் அங்கங்கே மரங்களில் முளைத்திருக்கும்‌ ’கண்ணாடிக் காயைப்’ பிடுங்கி சாப்பிட்டிருக்கிறோம். அதைச் சாப்பிட்டால் பேதியாகும் எனத் தெரிந்தும், சாப்பிட்டிருக்கிறோம். கோரைக் கிழங்கைத் தோண்டிச் சாப்பிட்டிருக்கிறோம். பஞ்சம் வந்து எங்கள் கிராமத்தில் கஞ்சித் தொட்டி திறந்தார்கள். நானும் கஞ்சித் தொட்டி வரிசையில் நின்று வாங்கியிருக்கிறேன். கூடவே, பேரீச்சம்பழம் ஒரு உருண்டை கொடுப்பார்கள். கம்பு, கேழ்வரகைக் கரைத்துக் கொடுப்பதற்குப் பெயர்தான் கஞ்சி. நெல்லுக் கஞ்சியல்ல.

நானே அப்போது காட்டுக் கூலி வேலைக்குப் போயிருக்கிறேன். களையெடுக்கிற காலத்தில் கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் படிக்க யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோருமே களையெடுக்கப் போய், கம்மம்புல் கூலியாக வாங்கிக்கொண்டு வருவோம். எப்போதாவது தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் மட்டுமே வீட்டில் அரிசிச் சோற்றைப் பார்க்க முடியும். இட்லி, தோசையை அப்போது மட்டுமே கண்ணால் காண முடியும்.

கிராமத்தில் ஒவ்வொரு தெரு முக்கிலும் ஆட்டுரல் போட்டிருப்பார்கள். அது பொது ஆட்டுரல்; நின்றுகொண்டே ஆட்ட வேண்டும். ஊர்ப்பொங்கல், தீபாவளி, தைப்பொங்கல், சாமி கும்பிடும் சமயங்களில் உரல் ஆட்டக் கூட்டமே இருக்கும். பண்டிகை தினங்களில் தோசை சுடுகிறபோது, தோசையை எடுத்து டவசர் பாக்கெட்டுகளில் போட்டுக் கொண்டு தெருவில் நின்று தின்போம். அதிலும் கருப்பட்டி சேர்த்துச் சுட்ட தோசைக்கு மதிப்பு கூடுதல். இந்த வாழ்வு நிலைதான் நான் பின்னாட்களில் பேனா எடுத்தபோது, எனக்குள்ளிருந்து ஆரம்பித்தது.


எங்கு படித்தீர்கள்?
ஐந்தாவது வரைக்கும் எங்க ஊர் ராமச்சந்திராபுரத்திலேயே படித்தேன். அதன்பிறகு, மாவட்ட எல்லையில்‌ இருக்கிற சென்னமரெட்டி பட்டிக்குப் போய்ப் படித்தேன். அது எங்க அம்மா ஊர். அப்போது நிகழ்ந்த அனுபவங்கள் ஒவ்வொன்றுமே எனக்குள் பதிவாகியிருந்தன. பின்னாடி அதை நினைத்துப் பார்க்கிறபோதுதான் அனுபவங்களாக அவற்றை உணர முடியும். அவைதான் அவற்றிற்கான ரணத்தோடும், தொப்புள் கொடியோடும் எழுத்துக்கு வருகின்றன.

கல்லூரியில் படிக்க மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு வந்தேன். ஊரிலேயே வாசிப்புப் பழக்கம் கூடுன ஆள் நான். சிறுவனாயிருக்கிறபோதே எனக்குள் வாசிப்புப் பழக்கம் படிந்திருந்தது. ‘பொன்னியின் செல்வன்’ போன்றவற்றைப் படித்தேன். என்னுடைய சித்தப்பா மதுரையில் பணிபுரிந்ததால், என்னை மதுரைக்குப் படிக்க அனுப்பினார்கள். மதுரை ரயில் நிலையம் முன்புறம் வலது பக்கமிருந்த ’மதுரைக் கல்லூரி உயர்நிலை பள்ளியில்' படிப்பை முடித்தேன். அது பிராமணப் பள்ளி. தமிழுணர்வு இருந்ததால், தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து, தினமும் 5 கி.மீ தூரம் நடந்தே போய் வருவேன். பள்ளிக்கு நடந்து போகிற வேளையிலும், கல்லூரியில் புகுமுக வகுப்பு படிக்கிற போதும் காலில் செருப்புப் போட்டுக் கொள்ளாமல் போவேன். அந்தளவுக்குத் தான் ஒரு ஆலைத் தொழிலாளியின் வசதி இருந்தது. எம்.ஏ படிக்கிறவரை மோசமான பொருளாதார வசதியில் படித்தேன்.

காளிமுத்து, நா.காமராசன், கவிஞர் மீரா, அப்துல் ரகுமான் எல்லோரும் அப்போது இந்தக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நிறைய வாசிக்க முடிந்தது. இலக்கியக் கூட்டங்களில் பேசுவேன். அதன்பிறகு கல்லூரிப் படிப்பை முடித்து, மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தேன். அப்போதுதான் ‘குற்றம்’ என்கிற என்னுடைய முதல் கதை ‘தாமரை’யில் வெளிவந்தது. தி.க.சி உட்பட பலர் பாராட்டினார்கள். தி.க.சி தாமரையின் ஆசிரியர். அதன்பிறகு எங்கள் மண்ணில் நான் பட்ட அவலங்கள், மீறல்களை நான் வெளிப்படுத்த ஆரம்பித்தபோது, அவை மண் வாசனை சார்ந்ததாக அமைந்தன.


கரிசல் எழுத்தை எழுதுகிறோம் என்கிற வட்டாரம் சார்ந்த உணர்வு அப்போதிருந்ததா?
முதலில் அதைப் பற்றிய உணர்வு எனக்கில்லை. வாழ்க்கையை எழுதுகிறோம் என்ற உணர்வு இருந்தது. இயல்பாக என் வாழ்க்கையில் நடந்ததை எழுதினேன். பிறகு கி.ராஜநாராயணன், பூமணி போன்றவர்களின் எழுத்துக்களைப் படித்தேன். அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. வேறு எந்தத் தாக்கம் காரணமாகவும் எழுதவில்லை. இலக்கியம் என்பது குறிப்பிட்ட காலத்தின் சமுதாய வாழ்க்கையை மட்டும் சொல்லவில்லை. அதை எழுதுகிறவன் வாழ்க்கையையும் சொல்வதாக இருக்கிறது.


உங்களது சிறுகதைகளான ‘பொய் மலரும்', 'ஒரு ஜெருலேம்’ போன்ற கதைகளில், கிராமத்துச் சிறுவர்களின் வாழ்க்கையை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்களது கிராமம் சார்ந்த பால்ய காலத்து நினைவுகள் படைப்புகளில் மறு உருவாக்கம் பெறுகிறதா?
அது உண்மைதான். அதில் வெளிப்படுவது எனது வாழ்வுதான். வட்டாரம் சார்ந்த வாழ்வை வெளிப்படுத்துவதென்பது அப்போதுதான் துவங்கியிருந்தது. பூமணி சொன்ன மாதிரி, கி.ராஜநாராயணன் அதற்கு முன்னத்தி ஏர் பிடித்திருந்தார். என்னுடைய முதல் தொகுதிக்கு கி.ரா தான் முன்னரை எழுதியிருந்தார். அதில், “இப்படிப்பட்ட வாழ்வு இவருக்கு நேர்ந்திருப்பது துக்கமாக இருக்கிறது. அதையே அவர் கவித்துவமாகச் சொல்கிறபோது, நமக்கு அப்படி எழுத வர மாட்டேங்கிறதே என்கிற ஏக்கமும் வருகிறது”, என்று எழுதியிருந்தார். கவித்துவ அனுபவம் எனக்குக் கிடைக்கக் காரணம், நான் வாசித்த கவிதைகள். அதிலும் பிறமொழிக் கவிதைகள், மொழிபெயர்ப்புப் படைப்புகள். அதில் கவித்துவம் தெறிக்கிற வரிகள் என்னை ஆற்றுப்படுத்தும். அதுகூட என்னுடைய மொழிநடை உருவாக ஒரு காரணமாக இருக்கலாம்.


அரசு வேலையில்‌ எப்படி இணைந்தீர்கள்‌?
அப்போது கல்லூரிப் படிப்பு முடித்து முரசொலி நாளிதழில் பிழை திருத்துபவனாக ஒரு வருடம் பணி செய்தேன் (1968). பிழைப்புக்கு வழிவேண்டுமே! பின்னர் மதுரையில் வக்பு கல்லூரியில் வேலை பார்த்தாலும், சம்பளம் ஒழுங்காகக் கிடைக்கவில்லை. சென்னைக்கு ஒரு சமயம் வந்திருந்தேன். அப்போது கலைஞரின் ஆட்சி. தி.மு.க.வில் இந்தி எதிர்ப்பில் தீவிரமாக இருந்த மாணவர்கள் தலைவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் புதுப் பொறுப்புகளை உருவாக்கினார்கள். நானும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தலைவர் என்பதால், எனக்கும் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகும் வாய்ப்புக் கிடைத்தது.

படிக்கும்போது, தமிழ், தமிழின உணர்வு இயல்பாக இருந்தது. எனக்குக் கிடைத்த கூட்டாளிகள் பலரும் திராவிட இயக்க உணர்வோடு இருந்தார்கள். பள்ளிப் படிப்பு முடித்தபோது, இந்தியில் ‘மத்தியமா’ என்கிற பிரிவைப் படித்திருந்த நான், இந்தி எதிர்ப்பு உணர்வில், இந்தி படித்த சர்டிபிகேட்டை இந்தி ஆசிரியர் முன்னிலையிலே கிழித்துப் போட்டேன். அவர் ஒரு பிராமண ஆசிரியர். அந்த உணர்வின் நீட்சியாகவே இந்தியை எதிர்த்து இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது திராவிட இயக்கம் சார்ந்த எல்லாக் கொள்கைகளும் எனக்கு உடன்பாடாக இருந்தன. பிறகு ஆட்சிக்கு வந்ததும், அதனுடைய அரசியல் பார்வை மாறினாலும், என்னுடைய பார்வை மாறவில்லை.


பொதுவடைமைக் கொள்கையில் எப்போது ஈடுபாடு உண்டானது?
பொதுவுடைமை இயக்கங்களின்பால் ஏற்பட்ட ஈடுபாடு என்று அதைச் சொல்ல முடியாது. அது அதன் கொள்கையின் மேல் ஏற்பட்ட ஈடுபாடு. நானும், இன்குலாப்பும் அப்போது ஒரே உணர்வில் இருந்தோம். சி.ஐ.டி.யூ நடத்திய மே தினப் பேரணியில் கூட அப்போது கலந்துகொண்டிருக்கிறோம். அதற்குப் பிற்பாடு, புரட்சிகர மார்க்சிஸ்டு லெனினிஸ்டு இயக்கத்துடன் நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அதே சமயத்தில்தான், கோவையிலிருந்து வெளிவந்த ‘வானம்பாடி’ கவிதை இயக்கத்துடன் தொடர்பு உருவானது. அதில் சில கவிதைகளை எழுதினேன். ‘செயப்பிரகாசம்’ என்கிற பெயரில் எழுதியிருந்தேன்.


‘சூரியதீபன்’ என்கிற புனைபெயரை எப்போது வைத்துக் கொண்டீர்கள்?
இளவேனில் நடத்திக்கொண்டிருந்த ‘கார்க்கி’ இதழுக்காக அந்தப் புனைபெயரை வைத்துக் கொண்டேன். அப்போது தான் அரசுப் பணியில் இருந்தேன். பிறகு மா.லெ புரட்சிகர இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டபோது, அந்தப் பெயர் தொடர்ந்தது. குறிப்பாக என்பது, தொண்ணூறுகளில் அரசு அலுவலனாக இருந்துகொண்டே, சமூக அக்கறை கொண்ட எழுத்துப் பணியைத் தொடர அது பொருந்தி வந்தது.


அரசுப் பணியில் இருந்தது உங்களுடைய கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறாக இல்லையா?
அரசுப் பணி என்பது, நம்முடைய கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத தடுப்புச் சுவராகவே இருக்கிறது. எந்த விதத்திலும் நாம் எதிர்வினையாற்ற முடியாது. அரசுப் பணியில் இருந்துகொண்டே, நான் வேறு புனைபெயரில் எழுதியதற்கு, செயல்பட்டதற்கு மறைமுகமான, நேரடியாக எதிர்ப்புகள் இருந்தன. விசாரணைகூட நடந்தது. நேரடியாக என்னிடம் விசாரிக்கவில்லை. ஒரு வழியாக மூடப்பட்டுவிட்டது அந்த விசாரணைக் கோப்பு. ‘மனஓசை’ மூலம் என்னை வெளிப்படுத்திய காலத்தைத் தவிர, வேறு வகையில் என்னை வெளிப்படுத்த முடியவில்லை. சிறுகதை வடிவத்திலிருந்து, நாவல் வடிவத்திற்குப் பலரும் போய்க்கொண்டிருந்த நேரத்தில் நான் போக முடியாததற்குக் காரணம், என் அரசுப் பணிதான்.


தடையாக உணர்ந்ததும் அதிலிருந்து விடுபட வேண்டும் என்கிற உணர்வு வரவில்லையா?
வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அதிலிருந்து விடுபட வேண்டும் என்று கூடத் தீர்மானித்தேன். அந்த உணர்வைக் கட்டுப்படுத்தக் காரணம் என்னுடைய குடும்பம்தான். அதனால், அதற்குள்ளிருந்து கொண்டே என்னால் வெளியில் எவ்வளவு செய்ய முடியுமோ அதைச் செய்தேன்.

கேவலங்களும், பரிதாபங்களும் ஆனது ஒரு அரசு அலுவலனின் இருக்கை; எனவேதான் அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது, “இன்றுதான் நான் பிறந்தேன்” என்ற கவிதையுடன் அதைக் கொண்டாடினேன். அரசுப் பணியில் மட்டுமல்லாமல், மனதிற்கு ஒவ்வாத பல வேலைகளும் படைப்பாற்றலுக்கு நேர் எதிரான உணர்வையே உண்டு பண்ணுகின்றன.


‘வேரில்லா உயிர்கள்’ என்கிற உங்கள் படைப்பில், ரிக்கார்டு டான்ஸ் ஆடக்கூடிய பெண்களின் இருண்ட வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்களே?
அது இளமைக் காலத்தில் கிடைத்த அனுபவம். அரசு நடத்தக்கூடிய பொருட்காட்சிகளிலேயே இந்த விதமான டான்ஸ் நடக்கும். பார்த்திருக்கிறேன். ஆடும் அந்தப் பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் வெறுமை என்னைப் பாதித்தது. என்னுடன் படித்த ஒரு மாணவன், ரிக்கார்டு டான்ஸ் ஆடக்கூடிய பெண்ணின் பின்னாலேயே அலைந்து, தன் படிப்பையே விட்டுவிட்டான். அந்தப் பெண்கள் தங்களின் உடல் மூலம் வெளிப்படுத்திக் கொள்கிற அவலம் உறுத்தலாக இருந்தது. கிராமப்புறங்களில் நடக்கும் திருவிழாக்களில் பல நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள் நிகழ்த்துகிற கலையைவிட, அவர்களுடைய வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதில் தான் எனக்கு ஈடுபாடு. அந்தக் கலைஞர்களுடன் நானே வாழ்ந்திருக்கிறேன்.


உங்களுடைய ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ நூலில் கம்பும் கேழ்வரகும் உணவுப் பழக்கத்திலிருந்து நழுவும் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறீர்கள். கோவணம் அணிந்த ரிட்டையர்டு போலீஸ்காரரை, வில்லிசைக் கலைஞரை, மிருதங்கம் வாசிக்கும் தலித் வித்வானை அறிமுகப்படுத்துகிறீர்கள். நிறையக் கிராமத்து ஏக்கங்கள் அதில் பதிவாகியிருந்தாலும், நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தோடு இணைந்த அவற்றைப் படைப்புகளில் புதுப்பிக்க வேண்டுமா என்கிற விமர்சனமும் இருக்கிறதே?
நிலப்பிரபுத்துவம் சார்ந்த சமுதாய அமைப்பில் இருந்த விழுமியக் குணங்கள் இருக்கிறதே – அதை நாம் புறக்கணிக்கப் போகிறோமா? எடுத்துக்காட்டாக, அன்பு, இரக்கம், பொய் பேசாமை இந்த மாதிரியான பண்புகள் நிலப்பிரபுத்துவக் காலத்திய பண்புகளாக இருந்திருக்கின்றன. பழைமையில் இருக்கிற கலாச்சார விழுமியங்களை ஏற்றுக்கொண்டு தான் புதிய கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும். நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தை இங்கு நான் தூக்கிப் பிடிக்கவில்லை. அதிலிருந்து சிறப்பான சில பண்புகளைக் கூட இழந்து கொண்டிருக்கிறோமே என்கிற ஏக்கத்தின் வெளிப்பாடாக இவற்றைச் சொல்லலாம்.


நாட்டுப்புறக் கலை வடிவங்களும்கூட கோயில் சார்ந்த கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகத்தானே இங்கு நீடிக்கின்றன?
அப்படித்தான் நீடிக்கின்றன. வள்ளி திருமணம், அரிச்சந்திரா நாடகங்களும், வில்லிசை, கரகாட்டம் போன்றவை கோயில் சார்ந்தே இயங்கினாலும், அதிலும் புரட்சியை, நவீனக் கருத்துக்களைப் புகுத்த முடியும். எடுத்துக்காட்டாக – கோவில்பட்டி அருகில் இருக்கிற வில்லிசைக் கலைஞர் பிச்சைக்குட்டி. அவர் வில்லிசையிலேயே சமுதாயக் கருத்துக்களை அழகாகக் கொண்டுவருகிறார். அதைப் போல ’ஓம் முத்துமாரி’ என்கிற  குறவன்‌ குறத்தி ஆட்டக்‌  கலைஞர். இன்றைக்கிருக்கிற உலகமயமாதல் பற்றிக்கூட அவர் தனது நிகழ்ச்சியில் சொல்கிறார். நிறையக் கேள்விகளை எழுப்புகிறார். நாட்டுப்புறக் கலை வடிவங்களிலும் புதிய உள்ளடக்கத்தை இம்மாதிரி உருவாக்க முடியும்.


உங்களுடைய அனுபவங்களை அழகியல் பாணியில் இல்லாமல் நேரடியாக எளிமையாக விவரிக்கிற எழுத்துப் பாணி குறித்து - அவற்றில் கலாபூர்வமான தன்மையில்லை என்கிற விமர்சனம் வைக்கப்பட்டிருப்பது குறித்து என்ன சொல்கிறீர்கள்?
அதில் ஒரு பகுதி உண்மை இருக்கிறது. என்னுடைய தொடக்ககாலப் படைப்புகள், வாழ்வும் கிராமமும் சார்ந்த வெளிப்பாடுகள். அவற்றில் இருப்பது யதார்த்தம். இந்த யதார்த்தத்தையே அரசியல் ரீதியாகப் பார்க்க ஆரம்பித்த பார்வை என்னுடைய பிந்தைய படைப்புகளில் வருகிறது. பிரச்சினைகளையே முழுக்க அரசியல் சார்ந்ததாகப் பார்க்கிற பார்வைதான், மூன்றாவது முகம், இரவுகள் உடையும் போன்ற படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. எனக்குச் சில இயக்கங்களின் தொடர்பும், அதன் வீச்சும் ஏற்பட்ட பிறகு என்னுடைய படைப்புப் பார்வையிலும் மாற்றம் ஏற்பட்டது. ஒரு சமுதாய விஞ்ஞானப் பார்வை, இன்றுள்ள கலைஞனுக்குத் தவிர்க்க முடியாத ஒன்று. அதைப் புரிந்துகொள்வதும், வெளிப்படுத்துவதும் எந்த வகையில் என்பதுதான் கேள்வி. புரிந்துகொண்டு வெளிப்படுத்துவது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனக்கொரு கருத்து அப்போது இருந்தது. அரசியல் பார்வை அதில் உட்பொதிந்திருந்தது. அம்மாதிரி சமயங்களில் எனக்குள்ளிருக்கும் கலைஞனை விட, எனக்குள்ளிருந்த அரசியல்வாதி மேலே வந்தான்; அவனே வெளியில் தெரிந்தான். துவக்ககால எழுத்துக்களைப் பற்றியோ, இப்போது சமீபத்தில் நான் எழுதுகிற படைப்புகளைப் பற்றியோ இந்த விமர்சனம் இருக்காது.


இலக்கியத்திற்கு என்றொரு கொள்கை நிர்ணயிப்பு அவசியமா?
வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு நோக்கு, ஒரு திட்டம் இருக்கிறது. அதுவே முன்னோக்கிய நகர்வாக இருக்கும். மனித சமுதாயம் காலத்துக்குக் காலம் முன்னோக்கிச் செல்கிறபோது, இலக்கியம் மட்டுமே திட்டாந்தரமாக எதுவும் இல்லாமல் போக முடியுமா?

இலக்கியம் அந்தந்தக் காலகட்டத்தின் சமுதாய மொழியைப் பேசுகிறது. காலம் தாண்டிய இலக்கியக் கொள்கை என்று இருக்க முடியாது. வளர்ச்சியடைகிற இலக்கியக் கொள்ளை என்றுதான் இருக்க முடியும். காலத்திற்குள் அடைபட்டதுதான் இலக்கியம். சமகாலத்தைச் சரியாக, தீவிரமாகச் சித்தரிக்கிற ஒரு படைப்பு, அந்தக் காலகட்டத்தைக் கடந்தும் வாழ்கிறது. அந்தந்தக் காலத்தின் சமுதாய வரலாறாகவும் இருக்கிறது. அதே சமுதாயத்திற்குள் இலக்கியவாதி வாழ்ந்த வாழ்க்கையாகவும் இருக்கிறது.


மேஜிகல் ரியலிசம், பின்நவீனத்துவம் என்ற சமகாலத்திய எந்த இலக்கிய இஸங்களுக்குள்ளும் உங்களுடைய எழுத்தைக் கொண்டுவர நீங்களே முயற்சிக்கவில்லையா?
இம்மாதிரி இஸங்களைக் கையாள வேண்டுமென்றே எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படி வழக்கமாக எழுதாதவர்கள்கூட ஒன்றிரண்டு கதைகளையாவது மேஜிகல் ரியலிச சாயலில் எழுதியிருக்கிறார்கள். நான் எந்த இஸத்தையும் நினைத்துக்கொண்டு எழுதுவதில்லை. அதற்குள் ஏதாவது இஸம் தென்பட்டால், ஒருவேளை கண்டுகொள்ளலாம். மேஜிகல் ரியலிசம் ஒரு உத்தி. அது இஸமல்ல. லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடுமையான அடக்குமுறை நிலவிய போது, ஒரு வெளிப்பாட்டு மொழியாக உருவானது மேஜிகல் ரியலிசம். பழைய புராண, இதிகாச மரபு வழியாகத் தங்கள் உணர்வுகளை மறைமுகமாக வெளிப்படுத்தினார்கள். அது குறிப்பிட்ட நாட்டின் காலச் சூழலுக்குப் பொருந்திய வடிவம். அப்படிப்பட்ட காலச் சூழல் இங்கு நிலவினால் இங்கும் அது எடுபடும். நெருக்கடி நிலை நிலவியபோது அடக்குமுறையை வெளிப்படுத்திய மேஜிகல் ரியலிச பாணிக் கதையை எழுதியிருந்தார் எஸ்.வி.ராஜதுரை. அந்தச் சூழலுக்கு அது பொருத்தமாக இருந்தது. இந்தந்த உத்திகளின் அடிப்படையில்தான் எழுத வேண்டும் என்கிற வடிவ ரீதியான உட்கோப்பு எனக்கில்லை.

யுதார்த்தமான உள்ளடக்கத்தோடு வாசகன் புரிந்துகொள்கிற விதத்தில் சொல்வதுதான் தேவையான ஒன்று. புரியாத ஒரு மொழியில், வினோதமான வடிவத்தில் ஒரு படைப்பைக் கொடுப்பதின் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? சமீபத்தில் வெளிவரும் கவிஞர்களின் கவிதை மொழியை மூன்று தடவைகளுக்கு மேல் படித்தும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதிலுள்ள வரிகள் மனதில் போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படிமங்கள், குறியீடுகளுக்குள் சிக்கக்கொள்வதுதான் இன்றைக்கு வரும் பல கவிதைகளின் குணமாக இருக்கிறது.

‘புத்தர் யாராக இருந்தார்?’ என்று ஒரு பஞ்சாபிக் கவிதை. மனைவி, குழந்தையை விட்டுவிட்டு ஞானோதயத்திற்காகப் போய்விட்டு வந்தபிறகு ‘ஞானோதயம் பெற்றது யார் சித்தார்த்தனா? யசோதராவா?’ என்று முடிந்திருக்கும் அந்தக் கவிதை. அப்படியான வரிகளை இப்போது தமிழ்க் கவிதைகளுக்குள் காண முடியவில்லை. ஒரு விசயத்தை எளிதானபடி சொல்லி வாசகனுக்கு விளங்க வைப்பதுதான் அழகியல். புரியக்கூடிய விசயத்தைக்கூட புரியாத மொழியில் சொல்லி மொழிச்சிக்கலுக்குள் மாட்டிக்கொள்வதல்ல அழகியல்.


ஒரு படைப்பாளிக்கான முன்மாதிரியாகச் சில எழுத்தாளர்களின் வாழ்க்கை, உதாரணமாக ஜி.நாகராஜனின் மரபுகளைக் கட்டுடைத்த வாழ்க்கை முன்னுதாரணமாகச் சிலரால் வைக்கப்படுகிறதா?
ஜி.நாகராஜன் மதுரையில் ’தனிப் பயிற்சிப் பள்ளியில்’ எனக்கும் ஆசிரியராக இருந்தவர். அவர் குடும்பம் என்கிற கட்டுப்பாட்டிற்கு மட்டுமல்ல, எந்தச் சமூகக் கட்டுப்பாட்டிற்குள்ளும் சிக்காமல் உதிரியாக இருந்தவர். வாழ்வில் ஏதோ ஒரு நேரத்தில் அம்மாதிரியான அனுபவங்கள் ஒரு படைப்பாளிக்கு ஏற்பட்டிருந்தால் அதை வெளிப்படுத்தலாம். அது தேவையான ஒன்று. ஆனால் அம்மாதிரியான அனுபவத்திற்காகத் நானே அவரை மாதிரி மாறிவிடுவது சரியா என்பது கேள்வி. ஒரு நவீன இலக்கியவாதிக்கான ஆளுமைப் பண்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முன்னிலைப்படுத்திப் பொதுமைப்படுத்துவதும் சரியானதாக இருக்காது. அனுபவம் என்பது அவரவர் வாழ்க்கை சார்ந்தது. அது அவரவருடைய வாழ்வில் இயல்பாக வந்தடைந்தாக இருக்க வேண்டும். தன்னுடைய சொந்த அனுபவங்களைக் கடந்தும் ஒரு படைப்பாளி புதிய அனுபவங்களைத் தேடலாம். அதுமாதிரி லா.ச.ரா, மௌனி போன்றவர்கள் தங்களது குடும்ப எல்லையைத் தாண்டி அனுபவங்களைத் தொடவில்லை. அவர்களிடம் அனுபவக் கடத்தல் இல்லை. தகழி ‘செம்மீன்’, ‘தோட்டியின் மகன்’ எழுதியதெல்லாம் ஓர் அனுபவக் கடத்தல்.


மெளனி, லா.ச.ரா போன்றவர்கள் சமகால சமூக, அரசியல் நிகழ்வுகளிலிருந்து ஒதுங்கி, கலை வடிவத்தில் செயல்பட்ட மாதிரி கால ஓட்டத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு இன்றைக்குள்ள கலைஞன் இயங்க முடியுமா?
இன்றைக்கு அப்படி இயங்குவதற்கான சாத்தியங்களே இல்லை. சமூகம் சார்ந்த அக்கறைகள் எல்லோருக்குள்ளும் இருந்தாக வேண்டும் இல்லையா? அப்படியில்லை என்று ஒதுங்கிவிட முடியாது. இன்றைக்கு உலகமயமாக்கலும், இந்துத்துவா போக்கும் எல்லோருடைய வாழ்வையுமே மிதித்துக் கொண்டிருக்கிறது. இதைச் சமூக அக்கறையுள்ள கலைஞன் கவனிக்காமலிருக்க முடியாது. அவன் அதைப் படைப்பின் மூலமோ பேச்சின் மூலமோ சகல வழிகளிலும் வெளிப்படுத்த வேண்டும்.


சில இயக்கங்களில் உள்ளவர்களைத் தவிர்த்து உங்களுடைய எழுத்துக்குப் பொதுவான வாசகர்களிடம் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா?
அப்படியொரு அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. கடந்த காலப் படைப்புகளுக்குக் கிடைத்த ஓரளவு அங்கீகாரம்கூடச் சமகாலப் படைப்புகளுக்குக் கிடைக்கவில்லை. இடதுசாரிப் போக்குடையவர்கள் மட்டுமே இந்த எழுத்தை அங்கீகரிக்கிறார்கள். பரவலாக எழுத்து அங்கீகாரம் பெறாததில், அல்லது பெறும் விதத்தில் ஊடகங்களின் வழியாகக் கொண்டுபோக முடியாததில் ஒரு புறக்கணிப்பின் அரசியல் இருக்கிறது.

சமூக அக்கறையுள்ள கருத்துக்களை முன்வைக்கிறவர்களுக்கு ஏற்ற ஊடகங்கள் இல்லை. அவர்களில் பலர் நிராகரிக்கப்படுகிறார்கள். கவனிப்புக்கு ஆளாகாமலேயே ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். பா.விசாலம் குறிப்பிடத்தக்க இரு நாவல்களை எழுதியிருக்கிறார். இருந்தும் கவனிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.ஜேக்கப் ‘வாத்தியார்’ என்றொரு அருமையான நாவலை எழுதியிருக்கிறார். கவனிக்கப்படவில்லை. கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ நாவல், சோலை சுந்தரப் பெருமாளின் ‘தப்பாட்டம்’ நாவல் கவனிக்கத்தக்க விதத்தில் இருந்தும் உரிய கவனம் பெறவில்லை. விழி.பா.இதயவேந்தன் போன்று பலரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பல அருமையான கவிஞர்களின் எழுதுகிறார்கள். ஊடகங்கள் இந்த விதமான சமூக அக்கறையையும், பார்வையையும் புறக்கணித்துவிடுகின்றன. இது ஒரு திட்டமிட்ட போக்காகவும் இருக்கிறது. அதே சமயம் இதே ஊடகங்கள் போஷித்து வளர்க்கிற படைப்பாளிகளும் இருக்கிறார்கள். புத்தகங்களின் மூலமாகத் தங்கள் படைப்பைக் கொண்டுபோகிற பல படைப்பாளிகளுக்கு இப்போது நேர்வதெல்லாம் பெரும்பாலும் புறக்கணிப்புத்தான். இலக்கியத்திலும் புறக்கணிப்பு அரசியல் செயல்படுகிறது.


தமிழ் மொழி, இன உணர்வு, சாதிய ஆதிக்க எதிர்ப்பு நிலை என்கிற நிலைப்பாட்டிற்குச் சில பொதுவுடமை இயக்கங்கள் இப்போது வந்து சேர்ந்திருக்கின்றன. காலப்போக்கின் அவசியத்தால் உருவான மாற்றங்கள் இவை என்று நினைக்கிறீர்களா?
இது தவிர்க்க முடியாத நிலைதான். பொதுவுடைமை இயக்கங்களே கூட இனி இம்மாதிரியான பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இயங்குவது சிக்கலாகிவிடும் என்பதால் இதைக் கையில் எடுத்திருக்கிறார்கள். இன உணர்வு அடையாளங்களையும், மொழியுணர்வையும் புறக்கணித்து இயங்கிவிட முடியாது. ஈழத்தில் ஏற்பட்ட போராட்டத்திற்குப் பிறகே இன உணர்வு சார்ந்த அடையாளங்கள் இங்கு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இது காலத்தின் கட்டாயம்.


எழுத்தாளர் விரும்புகிற உணர்வு நிலையிலான சமூகம் உருவாவதற்கான கொஞ்சமாவது நம்பிக்கை தரக்கூடிய சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறதா?
அப்படியான நம்பிக்கையான சூழல் தமிழ்நாட்டில் தற்போது இல்லை. பொதுவுடைமை இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் தமிழகத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்று எத்தனையோ திட்டங்களை முன்வைத்தன. ஆனால் இன்றைக்கு அம்மாதிரி எந்தத் திசையுமே இல்லாத, நம்பிக்கையில்லாத சூழலே இருக்கிறது. மதம் என்பது முன்பு மனிதனுக்கு ஏதோ நம்பிக்கை தருவது மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருந்தது. இப்போது மதம் என்பது மதவெறியாகிவிட்டது. சாதிவெறி, சங்கங்கள் மூலமாக வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தலித்துகள் சங்கம் வைத்திருப்பது, தங்களுடைய விடுதலைக்காக; மற்ற சாதிகள் சங்கங்களை உருவாக்கியிருப்பது அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக. இவற்றையெல்லாம் களைவதற்கான ஒரு அறிவு நிலையிலான பணிகளைச் செய்வது இலக்கியவாதியின் கடமையாக இருக்கிறது. இந்தச் சமூகச் சீர்கேட்டை மாற்ற வேண்டும் என நினைப்பவர்கள், குறைந்தபட்சம் ஓர் அமைப்பாகச் சேர்ந்து இயங்கியாக வேண்டும்.


இலக்கியவாதிகள் பலருக்கும் இயக்கங்கள் மீதும், அவற்றின் செயல்பாடுகள் மீதும் அதிருப்தி கூடியிருப்பது எதனால்?
நானும் ‘மனஓசை’ நடத்திய காலகட்டத்தில் இயக்கத்தோடு இணைந்து இயங்கியவன்தான். அதோடு, பல அரசியல் இயக்கங்களும் தேர்தலுக்காக உருமாறிப் போய்விட்டன.

ஆரம்ப காலத்தில் என்னை ஈர்த்தது தி.மு.க. அதன் தமிழுணர்வு, சமுதாய சீர்திருத்தக் கொள்கை, இனத்துவ, சமுதாய அடையாளங்கள் எல்லாமே தேர்தல் அரசியலுக்குள் நுழைந்ததும் மாறிப்போனது, தேர்தல் பாதை. திருடர் பாதையானது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும், மேல்தட்டு வர்க்கத்தினரின், ஆதிக்கச் சாதியினரின் கைக்குள் சுருண்டது. கீழ்நிலையில் உள்ளவர்களைக் கைகழுவியது. இது தி.மு.க.வுக்கு மட்டுமல்ல. எல்லா இயக்கங்களுக்கும் நேர்வது தான். ”ஏற்கனவே தயாராக இருக்கிற அரசு அமைப்பை வைத்துக்கொண்டு உழைக்கும் வர்க்கம், தனக்காக எதையும் சாதிக்க முடியாது” என்று லெனின் சொல்வார். நாம் இன்றும் இந்த அரசு இயந்திரத்தை நம்பிக்கொண்டு தேர்தல் அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.

எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்து இயங்குவது இன்றைய நிலையில் சாத்தியமில்லை. எந்த மக்களுக்கு அவர்கள் உண்மையாக இருப்பதாகச் சொல்கிறார்களோ, அந்த மக்களுக்கு அவர்கள் உண்மையாக இருப்பதில்லை. நுண்ணறிவு கொண்ட இலக்கியவாதிகள், இந்த அமைப்புகளுக்குள் அடைந்து கிடக்க முடியாது. தேர்தல் கூட்டணிக்காக நடக்கும் அசிங்கங்களை அவர்களால் சகித்துக் கொள்ளமுடியாது. புரட்சிகர இயக்கங்களோ, தங்களுக்குள் வாய் பிளக்கும் விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. இலக்கியவாதிகள் நம்பிக்கை கொள்ளும்படி எந்த இயக்கங்களும் இன்றைக்கு இல்லை. ஆனால் ஏதாவது ஒரு வகையில் தன்னை ஓர் அமைப்பாக்கிக் கொண்டு செயல்படுவது, ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவசியக் கடமையாகிறது.

அதனால்தான் பல எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து, ‘தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி’ என்கிற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். தொடர்ந்து சமூக, அரசியல் அமைப்பை விமர்ச்சிக்கிற அமைப்பாகவும் இது செயல்படும். சமூக உணர்வுள்ள எந்தப் படைப்பாளிக்கும் இந்தக் குறைந்தபட்ச செயல் தேவையாக இருக்கிறது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌