மொழி அரசியல்


உலகத் தமிழாய்வுக் கழகத்தின் தலைவர் நொபாரு கராஷிமா கடைசியில், அதன் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

"எனக்கு இருக்கக்கூடிய மனநிறைவு என்னவெனில் கடந்த ஜுன் 2010-ல் கோவையில் நடைபெற்ற, அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட, அரசியல் நோக்கம் கொண்ட மாநாட்டிலிருந்து தன்னை விலக்கி வைத்துக் கொண்டதன் மூலம், உலகத் தமிழாய்வுக் கழகம் தனது ஆய்வியல் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொண்டது என்பதேயாகும்" என செம்மாந்து பதிவு செய்கிறார். ஒரு ஆராய்ச்சி மாநாட்டுக்குரிய கால அளவை மனதில் கொண்டு, தமிழக முதல்வரின் அவசரத்துக்குப் பணிந்து விடாமல், தான் தலைமையேற்றுள்ள அமைப்பின் தற்சார்பு நிலையையும், தனது சுதந்திரமான நிலைப்பாட்டையும் தொடக்க முதல் பேணி வந்திருக்கிறார்.

கடந்த காலத்தில் தமிழகத்தில் நடத்தப் பெற்ற உலகத் தமிழ்மாநாடுகள், அரசியல் மயமாக்கப்பட்டு விட்டதாக நொபாரு கராஷிமா கருதினார். "உலகத் தமிழாய்வுக் கழகத்தின் தொடக்க ஆண்டுகளில் திராவிட இயக்கத்தின் முற்போக்கான இலட்சியங்களோடு, அது சம்பந்தப்படிருப்பதில் சற்றே நியாயம் இருந்தது. இப்போது மாநில அரசியல் நிகழ்வுகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்வதற்கான நேரம் வந்து விட்டது" என அதை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கங்கள் தொடக்க காலத்தில் செயல்பட்ட, செயல்படுத்திய இலட்சியங்களிலிருந்து விலகி , இன்று தேர்தல் அரசியலுக்கான மாநில அரசியலுக்குள் சுருங்கி விட்டன. அதனோடு தொடர்புடையதாக உலகத் தமிழ்மாநாடுகளையும் கையாளுகின்றன என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.

உலகத் தமிழ் மாநாடு அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டது என்பது அவர் ஒருவருடைய உள்ளக் கிடக்கையாக மட்டுமல்லாமல், பேரா.நா.வானமாமலை போன்ற தமிழறிஞர்கள் உள்ளத்திலும் உறைந்திருந்தது. நா.வா போன்ற சிலர் வெளிப்படையாக அறிவித்தனர். அதிகாரஞ் சார்ந்தே வழக்கமாய் இயங்கும் பல தமிழறிஞர்கள் வாய்மூடிக் கிடந்தனர்.

தேசிய அரசுகளின் தோற்றம் ஐரோப்பாவில் இயல்பாகவே உருவானது. அது மன்னராட்சிக்கும், பிரபுத்துவ சமூக அமைப்புக்கும் எதிராக மக்களை அரசியலில் பங்காளராக்கும் ஜனநாயகத்துக்கான ஓர் அரசியல் வடிவமாகத் தோற்றம் பெற்றது. வணிக வளர்ச்சி, நகரங்களின் எழுச்சி முறையே வணிக சங்கங்கள் எனும் அமைப்புக்களையும், நகரத்தார் எனும் ஒரு வர்க்கத்தையும் தோற்றுவித்தது. இந்த அமைப்புக்களே ஜனநாயகத்துக்கான முதல்நிலை நிறுவனங்களாக அமைந்தன. வணிக சங்கங்களின் அமைப்புக்கள் ஜனநாயக ரீதியான தேர்வின் மூலம் தலைவர், செயலாளர், உறுப்பினர்களைத், தேர்வு செய்தன. இது பிறப்பாலான பிரபுத்துவத் தலைமைத்துவத்துக்கு பதிலாக தேர்விலாலான ஜனநாயக. தலைமைத்துவம் தோன்ற அடிப்படையானது. மேலும் நிலத்தோடு பின்னிப் பிணைந்த பிரபுக்களை விடவும் நாடு விட்டு நாடு நகரும் வணிகர்கள், பல்நாட்டு அறிவுகளைப் பெற்று முற்போக்கான சமூக சிந்தனையுள்ளவர்களாகக் காணப்பட்டனர். இதனால் பிரபுத்துவத்தை விடவும் வணிகர்கள் முற்போக்கான ஜனநாயகத்தின் முன்னோடிகளாயினர். தேசத்தின் தோற்றம் இத்தகைய சனநாயகத்திற்கான விழைவினால் பிறப்பெடுத்ததாகும்.

ஐரோப்பாவில் தேசங்கள் தோற்றம் பெற்றதும், மறுமலர்ச்சி இயக்கம் இலத்தீன், கிரேக்க மொழிகளுக்குப் பதிலாக மக்களின் உள்ளூர் மொழிகளை ஊக்குவித்தது. மொழி ஒரு ஜனநாயக வடிவமாகவும் தேசிய வடிவமாகவும் உருத்திரண்டது. ஆங்கிலம், பிரஞ்ச், டச்சு எனப் பல உள்ளூர் மொழிகளும் தேசியக் குறியீடாய் எழுந்தன. இங்கு மொழியே நடைமுறை சார்ந்து கண்ணுக்கு தெரியக்கூடிய வடிவத்தில் காணப்பட்டதால் அதனடிப்படையில் தேசியங்கள் தம்மை வலிமைப்படுத்தின. ஆதலால் மொழி தேசியத்தின் பிரதான கூறாகியது.

தமிழக வரலாற்றில் முதலாளித்தவ சமூக உருவாக்கத்துக்கான கூறுகள் 18 ம் நூற்றாண்டு வரையிலும் இல்லாமல் போனது. கி.பி இரண்டாம் நூற்றாண்டு முதல் நில உடமை அரசுகளின் நீட்டிப்பும், சோழர் காலத்தில் நிலப்பிரபுவுத்துவ சமூக அமைப்பின் உச்சமும், 18ம் நூற்றாண்டுத் தொடக்கம் நீடித்த பிரபுத்துவ சமூக அமைப்பும் தேச உருவாக்கத்துக்குத் தடையாயின. சிலப்பதிகார காலத்தில் மேலெழுந்த வணிக வர்க்கத்தின் திமிறல் முடியாட்சியால் அடக்கப்பட்டது. தமிழ்ச் சமூகத்தில் திரட்சிபெற்று வந்த வேளாண், வணிக சமுதாயங்களின் ஒழுக்கங்களை வரையறுத்துப் பேசிய சமண, பௌத்த சமயங்கள் முடியரசர் துணையோடு வைதீக மதங்களால் ஒடுக்கப்பட்டன. வேளாண் சமூகத்திலிருந்து கிளைக்கும் கைவினைத் தொழில் நுட்பமும், கைவினைஞர்களின் உற்பத்திகளினால் உருவாகும் வணிகமும் இல்லாமல் போய், தேச உருவாக்கம் என்பதும் கண்ணில் காணாமல் போயிற்று
வட வேங்கடம் தென்குமரி.
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்
என மொழியப்பட்டாலும் அது மொழிகூறும் எல்லைகளாகவே நின்றன. முதலாளிய சமூகத் தோற்றமாக தேசம் உருவாகவில்லை.
இனம், மொழி,பண்பாடு, நிலப்பரப்பு போன்ற கூறுகளால் ஒருதேசம் கட்டமைக்கப்படுகிறது. பிரதான காரணிகளாய் இவை இருந்தாலும், பல்வேறு காலங்களில் பல்வேறு காரணிகள் தேச உருவாக்கத்தை வடிவமைத்துள்ளன. எனவே தேசமாக ஆவதற்கு அல்லது இருப்பதற்கு அந்தந்த மக்களின் விருப்பமே முதல் அடிப்படை. மக்களின் விருப்பத்தில் உருவாகுமென்றால் அது தேசம். எனவே தேசம் அமைய, நீடிக்க அந்தந்த சூழல் காரணமாகிறது.

கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுத்தது போல், ஒடுக்கு முறையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற தேசியமே, ஒடுக்கு முறைத் தேசியமாக மாறியதைக் கண்டு கொண்டிருக்கிறோம், போராடிப் பெற்ற தேசியம், தொடர்ந்து சனநாயகத்தைப் பேணிவருமானால், அந்தத் தேசிய இனம் செழிப்பானதாக வளருகிறது. அல்லாத வேளையில், சனநாயக அழிப்பு புறத்திலிருந்து உள்ளே இறங்கினாலும், உள்ளிருந்தே புறப்பட்டாலும், தேசிய இனம் பின்னடைவைச் சந்திக்கிறது.

தேசிய இனக்கூறுகளில் எதன் அடிப்படையில் மக்கள் ஒடுக்கப் படுகிறார்களோ, அது அந்த இனத்தின் எதிர்ப்புக்கு பிரதான காரணமாய் அமைகிறது. தமிழர் வரலாற்றில் மொழி மீதான ஆக்கிரமிப்பு தொடர் நிகழ்வாய் நடந்து வந்தது, சேர, சோழ, பாண்டிய அரசுகள் உருவாக்கத்தின் போது தொடங்கிய வடமொழி ஆதிக்கம் இன்றுவரை தொடர்கிறது. சமஸ்கிருதமயமாக்கலோடு இணைந்த பிராமணியம், இம் முடியரசர் காலத்தில் மேலாண்மையாகி தமிழரின் கருத்தியல் தளம் அனைத்தையும் கைப்பற்றியுள்ளது.

ஒரு மொழியின் ஆதிக்கம் தனக்குரிய சமுதாயத் தத்துவம், அரசியல் கோட்பாடு, வாழ்வு முறை, பண்பாடு அனைத்தையும் இன்னொரு இன மக்களின் மீது இறக்குகிறது. வடமொழி தமிழுக்குச் செய்த பாதகங்கள் அத்தகையவை; மனோண்மணியம் நாடகத்தைப் படைத்தளித்த சுந்தரனார் இதன் காரணமாக ``ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து வாழ்த்துதுமே`` என்று வடமொழி எதிர்ப்பைப் பதிவு செய்தார். மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், நாவலர் பாரதியார், பாவாணர் போன்றோர் மொழியாதிக்க எதிர்ப்பாக தனித்தமிழ்ப் பயன்பாட்டில் சங்கத் தமிழுக்குப் பயணித்தார்கள். மொழிக் கலப்பற்றது சங்கத் தமிழ்.

இன்று தமிழர்களின் வாழ்வில் கொடுஞ் சவ்வாரி செய்யும் ஆங்கிலத்தின் ஆட்டம், ஆங்கிலேயர் ஆட்சியதிகாரத்தில் உட்கார்ந்த போது தொடங்கியது.

"இங்கிலிஷ் அரசாட்சியில் வக்கீல்களைப் போலவே, மற்ற உத்தியோகஸ்தர்களும், வித்தியார்த்திகளும் சுதேஷ பாஷைகளை நிகிர்ஷ்டம் செய்கிறார்கள். ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப் பிடாரியைத் துரத்தினது போல, இங்கிலிஷ், பிரெஞ்சு முதலிய அன்னிய பாஷைகள் மேலிட்டு தேச பாஷைகளை சீர்குலைத்து விட்டன..... நம்மைப் பெற்றதும் தமிழ். வளர்த்ததும் தமிழ். நம்மைத் தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ். மாதா வயிறெரிய மாதேசுர பூசை செய்தாற் போல், சொந்த பாஷைகளை சுத்தமாக விட்டு, ராஜபாஷைகளை மட்டும் படிப்பது அநுசித்தமல்லவா"
1879லேயே தமிழின் முதல் புதினம் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை தன் வலியை வெளிக்காட்டியிருக்கிறார் என்பது மட்டுமல்ல; அக்காலத்திலேயே தன் மக்கள் பட்ட பாட்டின், வாழ்வின் வலிகளைக் கொட்டித் தீர்க்கிறார்.

ஆதிக்க மொழி எதிர்ப்புக்கு, தமிழின் முன்னைப் பெருமிதங்கள் தூக்கிக் காட்டப்பட்டன. தேசக் கட்டமைப்புக்கு மொழிச் சனநாயகம் முதன்மை நிபந்தனையாகிறது. எனவே மொழிச் சனநாயகத்தின் மீட்புக்கு முன்னைப் பெருமிதங்களைக் கொண்டு வருவது தவிர்க்க முடியாமல் கடந்த நூற்றாண்டில் தொடங்கியது.
"இருந்தமிழே உன்னால் இருந்தேன்,
தேவர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்"
என்பன போன்ற வரிகள் சமகாலச் சொல்லாடலுக்கு,சொற்பொழிவுக்கு தமிழ்விடு தூதாகவே உருமாறின.
ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்றது, ஏனையது
தன்னேரிலாத் தமிழ்`
என மொழி போற்றும் பிற்காலப் பாடல்கள், மீள்பயன்பாட்டுக்கு வந்தன.

அவைதீக மரபுகளின் வெளிப்பாடுகளான சமண பௌத்த இலக்கியங்களைப் புறந்தள்ளி வைதீக மரபுகளின் காவியங்களாக கம்பராமாயணமும், திருவிளையாடற் புராணமும் வெளிப்பட்டன.. இந்த வேறுபாடுகளைக் கூட மனங்கருதாது
செவ்விய மதுரம் சேர்ந்த
சீரிய கூரிய தமிழ்
என்ற கம்பனின் வரிகளையும்,
கண்ணுதற் பெருங்கடவுளும்
கழமோடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்தஇப்
பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண
வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக் கிடந்ததாய்
எண்ணவும் படுமோ
என்ற திருவிளையாடற் புராண வரிகளையும் மேற்கோள்களாய்ச் சிலாகித்து தமிழ்ப் புலவர்கள், பேராசிரியர்கள் பேசித் திரிந்தனர்.
இவை போன்ற மொழிப் பெருமிதங்கள் தமிழறிஞர்களுக்கு வாளும் கேடயமுமாகின. மொழியை அதன் நிலையிலிருந்து விரிக்கவோ, உயர்த்தவோ மனசு ஒப்பாமல், தமிழ்ப் பெருமை ஒன்றையே தமிழறிந்தவர் செய்து கொண்டிருந்த போது, தமிழ்த்தேசிய இயக்கங்கள் இவை போன்ற சொல்லாடல்களை அரசியல் மயப்படுத்தினர். ஒரு தேசிய இனத்தின் கூறுகளான உணவு, உடை, பழக்க வழக்கம், பண்பாடு போன்ற எல்லைகளைக் காட்டிலும், இவைகளை ஒருங்கிணைத்து வாழ்வை நடத்திச்செல்லும் மொழியை எழுச்சியூட்டப் பயன்படுத்தல் தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கு அவசியமானது.

மக்களின் வாழ்வியல் பயன்பாடுகளுக்குத் தமிழ் என ஆக்குவது - அறிவுப் பூர்வ முறை;
மொழியை பூசையறைப் படமாக வழிபடு நிலைக்கு எடுத்துச் செல்வது – உணர்ச்சிப் பூர்வ முறை:
இரண்டாம் வழிதான் நம்மில் பெரும்பாலோனோருக்கும் பிரியமானது. அடுத்தடுத்து ஆட்சியேறிய கழக அரசுகள் இவ்வாறு உணர்ச்சிமய அணுகுமுறையால் உண்டு பண்ணிய வாழ்வியல் மொழிக்கும் வழிபாட்டுத் தன்மைக்குமான இடைவெளியை ஆங்கில வணிகர்கள் கைப்பற்றிக் கொண்டனர். கல்விக் கொள்ளையர், அதிகார வர்க்கத்தினர் (bureaucracy) அரசியல்வாதிகள் என இவர்கள் விரிந்து பரந்திருந்தனர். தாய்த் தமிழை கால்ப் பெருவிரலால் தெண்ணியெறிந்து, ஆங்கிலத்தை அள்ளி அணைத்த கைகளும், தமிழை ஆராதனை நிலைக்கு உயர்த்திய நாக்குகளும் இரண்டும் ஒரு புள்ளியில் சங்கமித்தன. கோடிக்கணக்கிலான சாதாரணர்கள் அதனால் கீழ் நிலையிலும் கீழாகத் தள்ளப்பட்டனர்.

ஒரு தேசிய இனம், முழுமையாய் உருக்கொள்ள காலகாலமாய் தன் மீது ஏவப்பட்ட மொழி ஆதிக்கத்தை உதறித் தள்ளியே வரவேண்டியுள்ளது. ஏனெனில் அம் மக்களின் வாழ்வு, பழக்க வழக்கம், உறவு, பண்பாடு அவரவர் மொழியிலேயே நடைபெறுகிறது. மொழி ஆக்கிரமிப்பு அல்லது அழிப்பு அம்மக்களின் வாழ்வு பண்பாடு அனைத்தின் மீதான ஒடுக்குமுறையேயாகும் என்பதால் தமது சனநாயகத்தை உறுதி செய்யும் போராட்டத்திற்கு மக்கள் தள்ளப் படுகிறார்கள்.

ஒரு மொழியை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது கைவிடுதல் என்பதை அந்த மக்களே முடிவு செய்ய வேண்டும். மக்கள் நலனிலிருந்து மக்களிடம் கருத்துக் கேட்பு செய்து முடிவு செய்திருக்க வேண்டும். அவர்களுக்கு அப்பாலிருக்கிற ஒரு அதிகார அமைப்பு முடிவு செய்ய முடியாது. இந்தி பேசாத மக்களின் விருப்பத்தை அறியாமல் மத்தியிலிருக்கும் அதிகார அமைப்பு செய்த போது, தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள்.

1938-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் பல தமிழறிஞர்கள் கருதிக் கொண்டிருப்பது போல், தமிழ்க்காப்பு மட்டுமேயல்ல, தொடர்ச்சியாய் அரசியல், பொருளியல், வாழ்வியல், பண்பாட்டியல் ஆதிக்க எதிர்ப்பை உள்ளடக்கி இருந்ததால் பெரியார் தலைமையேற்றார். ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமாக அது பல பரிமாணங்களுடன் விளங்கியது.

1965-ல் மாணவர்கள் முன்னெடுத்து நடத்திய இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் அரசியல் அம்சமும் அதுதான். சுயநிர்ணய உரிமைப் போராக தொடர்ந்து எடுத்துச் செல்லாமல், தேர்தல் அரசியலுக்காய் பயன்படுத்தி வரலாற்று மோசடியாய் அது முடிந்து போனது. எடுத்துச் சென்றிருந்தால், தமிழனத்தின் உரிமை மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள பிறதேசிய இனங்களும் பின்பற்றும் முன்மாதிரியாய் ஆகியிருக்கும். இந்தியா தேசிய இனங்களின் சிறைக் கூடமாகத் திகழ்கிற அவலம் தொடர்ந்திருக்காது.
யாருடைய வழிகாட்டலில் திரண்டார்களோ, அந்த வழிகாட்டிகளே
இந்தி ஒரு போதும் இல்லை;
ஆங்கிலம் எப்போதும்
என்ற முழக்கத்தை வைத்திருந்தார்கள். ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின் இந்தி ஒரு போதும் இல்லை என்பது தளர்ந்தது. ஆங்கிலம் எங்கும் எப்போதும் என்று உறுதிப்பட்டது. இதில் மக்களுடைய விருப்புக்கு எதிராக, வாழ்வுக்கு எதிராக ஆங்கிலம் சுமத்தப்பட்டது. கோடிக்கணக்கான சாதாரணங்கள் வாழ்வு பறிக்கப்பட்டு நிர்க்கதியானார்கள்.

மக்களின் வாழ்வியல் பயன்பாட்டுக்காக மொழியை ஆக்குதல் என்ற அறிவுப் பூர்வ முறையின் வினையாற்றல்களாக கடந்த கால இரு நிகழ்வுகளைச் சுட்ட முடியும். ஒன்று – தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம், கலைக்களஞ்சியம் தொகுப்புப் பணியை முன்னெடுத்தது; தமிழறிஞர் பெ.தூரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கலைக்களஞ்சியத் தொகுப்பை செய்து முடித்தார்.

இரண்டாவது - சி.சுப்பிரமணியம் கல்வி அமைச்சராக இருந்த வேளையில் 1956ல் கொண்டு வந்த தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்; சட்டப் பேரவையில் அதை நிறைவேற்றியபோது, சி.சுப்பிரமணியம் “நான் தமிழனாகப் பிறந்த பயனை அடைந்து விட்டேன்” என்று கூறினார். அதிகார வர்க்கத்தினரின் (Bureaucracy) சுயநலனால், மாறி மாறி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளின் அசமந்தத்தால் தமிழே ஆட்சி மொழி என்ற சட்டம் முழுமையடையாமல் ஒவ்வொரு தமிழனும் பிறந்த பயனை அடையமுடியாமல் போயிற்று.

சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் ஊசலாட்டம். கல்வி வியாபாரிகள் பணபலம் படைத்தவர்கள் ஒன்றிணைந்து எதிர்க் கட்சியைக் கொண்டு வந்து விடுவார்களோ என்ற அச்சம் உள்தண்டுவடம் வரை ஓடுகிறது. தமிழுக்குக் கடமையாற்றுவதால் ஆட்சி கைமாறிப் போனாலும் அது தோல்வியல்ல; வெற்றியே என்ற மாவீர அரசியல் இங்கு எவருக்கும் இல்லை. அதே பொழுதில்,
உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு
என மூச்சுக்கு முன்னூறு முறை முழங்குகிற போது, இதைவிட தமிழை மோசமாய் கேலி செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

தமிழ்வழியில் கல்வி பயின்றோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற இன்றைய அரசின் அறிவிப்பு நெஞ்சார வரவேற்புக்குரியது. அது அரசு ஆணையாக மட்டுமல்லாமல், சட்டப் பேரவையின் அங்கீகாரத்துடன் சட்டமாக்கப்படல் அவசியம். இந்த அறிவிப்பை 350 கோடி ரூபாய் செலவில் ஒரு மாநாடு நடத்தி அறிவிக்க வேண்டுமா என்ற கேள்வி எழாமல் இல்லை. அறிவுப் பூர்வ வழிமுறையில் இயல்பாக சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்க முடியும்.

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு 2010, சனவரியில் நடைபெறுமென, 2009 செப்டம்பரில் தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்த போது, "கால அவகாசம் போதாது. 2011 சனவரியில் வைத்துக் கொள்ளளாம்" என உலகத் தமிழாய்வுக் கழகத்தின் தலைவர் நொபார கராஷிமா ஆலோசனை தெரிவித்தார். "2011 ஏப்ரல், மே மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் அவருடைய கருத்தை ஏற்றுச் செயல்படுவதில் பிரச்னைகள் உள்ளன. எனவே முதலாவது உலகச் செம்மொழித் தமிழ்மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளதாக" அக்டோபர் 16ல் முதல்வர் அறிவித்தார். ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டிலிருந்து முதலாவது உலகச் செம்மொழித் மாநாட்டிற்கு மாறியதற்கு தேர்தல் அரசியலே காரணமானது என்பதை முதல்வரின் கூற்று உறுதிப்படுத்திற்று.

எனவே மொழி அரசியலிலிருந்து தன்னையும் உலகத் தமிழாய்வுக் கழகத்தையும் அப்பால் நிறுத்தி சுயமரியாதையை இதுகாறும் காத்து வந்த நொபாரு கராஷிமா இந்த மொழி அரசியல் சுழலுக்குள் அகப்படாமல் இப்போது பதவி விலகியுள்ளார்.

"உலகத் தமிழாய்வுக் கழகத்தின் தொடக்க ஆண்டுகளில் திராவிட இயக்கத்தின் முற்போக்கான இலட்சியங்களோடு அது சம்பந்தப்பட்டிருப்பதில் சற்றே நியாயம் இருந்தது. இப்போது மாநில அரசியல் நிகழ்வுகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது. இக்காரணங்களினால் நடுவண் மன்றத்திடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டேன்"

என தமிழ் எவ்வாறு சுயநல அரசியலுக்குப் பயன்படு கருவியாகிறது என்ற உள்ளுறை பொருளை வெளிப்படுத்தியுள்ளார்.

உலகத் தமிழாய்வுக் கழக நிர்வாக மன்றம் ஒன்பது உறுப்பினர்கள் கொண்டது. கால அவகாசம் போதாது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த என ஆலோசனை தெரிவித்தபோது நொபாரு கராஷிமா ஏன் நிர்வாக மன்றத்தையோ, நடுவர் மன்றத்தையோ கலந்தாலோசிக்கவில்லை? அல்லது கூட்டவில்லை? மற்ற உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டுப் பெறும் சனநாயகத்தை அவர் ஏன் செயற்படுத்தவில்லை என்ற கேள்விகள் நியாயமானவை. அதிகார அரசியலுக்கு ஆட்படாமல் தன்னை தற்காத்து வந்தவர்,சனநாயக நடைமுறையை ஏன் காக்கத் தவறினார்? இதுவும் ஒரு மொழி அரசியல் தானோ என்று கேட்கத் தோன்றுகிறது.

மொழி அரசியலுக்கு சரியான எடுத்துக்காட்டு எதிர்வரும் சனவரி 6 முதல் 9 தேதி வரை கொழும்பில் நடைபெறப்போகும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு. மாநாட்டு ஏற்பாட்டளர்கள் தங்களைத் தமிழ் உணர்வாளர்களாய்க் காட்டிக்கொள்ளும் முயற்சி - சிங்கள இனவாத அரசுக்குத் தற்போது தன்னை நியாயப்படுத்திக் கொள்ளத் தேவையான காரியமாக ஆகப் போகிறது. உலக அளவில் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை தீவிரப்பட்டு வருகிற வேளையில் அதைத் தடுத்து நிறுத்த, தமிழர்-சிங்களர் இனப் பகைமை அற்று, ஒன்று கூடினர் என உலகுக்கு அறிவிக்கப் பயன்படுத்திக் கொள்ளும் ராஜதந்திரம் இம்மாநாட்டின் பின்புலத்தில் வேகமாய் ஆடுகிறது. தமிழர்-சிங்களர் அனைவரும் இலங்கையர்; இனப்பகையை உண்டாக்கியவர்கள் பயங்கரவாதிகள், பயங்கரவாதிகள் அழிக்கப்பட்ட பின் இது பகை மறக்கும் காலம் என இராசபக்ஷேக்கள் அறிவிப்பார்கள். "இதை அரசியலாக்கி கொச்சைப் படுத்திவிட வேண்டாம்" என்று ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டாலும், இதற்குள் ஓடுகிற அரசியல் அதுதான். இன ஒடுக்கு முறை பாசிஸ்டுகள் விரிக்கும் இந்தப் பகைமறப்பு மாநாட்டுக்கு இங்குள்ள தோழமைகள் சிலரும் பயணப்படலாம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்