அறிவுசார் புலமைச் சமூகம்


அறிவுசார் புலமைச் சமூகம் ஒன்றிருக்கிறது: முன்னரும் இருந்தது; அறிவார்த்தமான சிந்திப்பின் அடிப்படையில் புலமைச் சமூகம் நெறிப்படுத்தப்பட வேண்டும். அப்பணியைக் கொண்டு செலுத்துவதற்கென சில கற்கை முறைகளும் எடுத்துரைப்பு முறைகளும் உள்ளன. முக்கியமாகத் தேவைப்படுகிற ஒன்று ஒரு பிரச்சனைக்கு பல பக்கங்கள் உள்ளன என்னும் நோக்கு. ஒரு பிரச்சனை அல்லது விசயம் ஒரே நோ்கோட்டில் நிகழவோ, தோன்றவோ செய்திருக்காது. தனித்த சூழல், தனித்த குணவாகு கொண்டிருக்கும் ஒவ்வொன்றின் வோ்வரை சென்று பச்சை மண்வாசனையையும் சோ்த்தெடுத்து வழங்குவதே அறிவுத்துறைக் காரியமாகும். இந்நோக்கில் தீவிர முயற்சி மேற்கொள்ளல் வேண்டுமென்ற துடிப்பை, முனைப்பைக் கொண்டியங்குகிறது மணற்கேணி.

சுயநலனோ, பொதுநலனோ சமகால சமுதாய சக்திகள் யாவற்றுக்கும் ஒரு தேவை நிலவுகிறது. அது முன்னை வரலாற்றுக் காலத்தை தம் கருதுகோளுக்கு ஏற்ப, அகழ்ந்து எடுத்துக் கொள்ளல், அல்லது ஏற்கனவே செய்யப்பட்டிருந்தால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளல். அதாவது வரலாற்றைக் குறிப்பான தரவுகளிலிருந்து கற்பதற்குப் பதில், முடிவுகளுக்கேற்ப தரவுகளைச் செதுக்கிக் கொள்ளல் அல்லது கட்டுப்படுத்தி வைத்தல் என்பதான பிறழ்பணியாக மாறுகிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாய காலத்தின் கருதுகோள்களை தமக்கேற்றதாக உருமாற்றிக் கொள்ளல் - இன்றைய தமது கருதுகோளுக்கு இயைந்ததாக பிசைந்து பாண்டம் செய்து கொள்ளல் என்ற முறையே மீட்டுருவாக்கம் எனப்படும்.

சமூகத்தை சிந்திக்கிற சமூகமாக மாற்றுவது நோக்கிய பணிகள் உள. தனி மனிதனாக, இயக்கமாக, நிறுவனங்களாக இந்த முன்னெடுப்புக்கள் நிகழ்த்தப்படுகின்றன. இயக்கமாக, நிறுவனமாக கட்டி உருவாக்க வேண்டிய பிரச்சனையில் சள்ளைப்பட்டு, தனிமனித அளவில் நின்று போதலும் நிகழ்கிறது. தன்னளவில் ஒருவா் அதுவாக வாழ்ந்து மறைவது எனலாம்.

மணற்கேணியின் கடந்த 5 ஆண்டுப் பணியைத் தொகுத்துப் பார்த்ததில், அறிவுசார் தளத்தில் புலமைச் சமூகத்தை எவ்வாறு மேலெடுத்துச் செல்வது என்பதில் ஒன்றிப்பு கொண்டுள்ளது என்பது கிடைக்கப்பெறுகிறது. கருத்துருவாக்கத்திற்கு அடிப்படைப் புலமான ஆய்வுகளை முன்னகா்த்துவது என்பதில் மணற்கேணி நடை போடுகிறது. நடைபோடுதலால் புதிய தடங்கள் பதிக்கப்பட்டுள்ளன. கருத்துருவாக்கத்தில் புதிய தடங்களைப் பதிக்கிற பணி, கல்விப் புலங்கள் ஆற்ற வேண்டிய பணியாகும். கலை இயல், கல்வி இயல் போன்ற கல்லூரித் தலங்கள், பல்கலைக் கழகங்கள், ஆய்வு மையங்கள் தோள்மேற்போட்டுச் செய்ய வேண்டிய இச்சீரிய பணியினைப் புறமொதுக்கிவிட்டு, ஆய்வுப்பட்டங்கள் அச்சடித்துத் தரும் காகிதத் தொழிற்சாலைகளின் கதியில் இயங்குகின்றன.

“தமிழகத்தில் சமூகம் பற்றிய கருத்துக்களை உற்பத்தி செய்து பரப்ப பல்கலைக்கழக வரலாற்றுத் துறை, பொருளாதாரத்துறை, சமூகவியல் துறை, மொழியியல் துறை, தமிழ்த்துறை, தத்துவத் துறை போன்றன சரியாய்ச் செயல்பட்டாலே போதும். தமிழகத்தில் இங்கே சொன்ன எந்தத் துறையும் ஆய்விதழ்களை வெளியிடவில்லை. யு.ஜி.சி போன்றன வலியுறுத்தினாலும் ஆய்விதழ்கள் வருவதில்லை. மேற்சொன்ன துறைகள் வெறும் ஏட்டுச் சுரைக்காய் கல்வியை மட்டும் தருகின்றன... கல்வியை கல்வியாய் மட்டும் பார்த்தவா்கள் குமாஸ்தாக்கள் ஆனார்கள். கல்வியை அறிவாக ஆக்கியவா்கள் புதிய வாழ்க்கையை உருவாக்கினார்கள். கார்ல் மார்க்கஸ், மாவோ, பெட்ரண்ட ரஸ்ஸல், ழான் பவுல் சாத்தரே, நெல்சன் மாண்டலோ, சாம்ஸ்கி போன்று புதிதாய்ச் சிந்தித்தார்கள்” என எழுத்தாளா் பேரா.தமிழவன் அண்மையில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். முன்னை வரலாற்றினை, பொருளாதாரத்தினை, சமுதாயவியலினை இன்றுவரை கிடைக்கும் செப்பேடு, கல்வெட்டு, தொல் நாணயங்கள் போன்ற மூலங்களால் அல்லாமல், கிட்டும் கலை, இலக்கியங்கள் வழியாகவும் ஓரளவு அறியமுடிகிறது. இந்த ஓரளவு அறிதலை, முழுமையான அறிவாயுதமாக ஆக்கி, புதிய வாழ்க்கைக்கான கருத்துருவாக்க அடித்தளத்தை அமைத்துத் தரும் திசைய மணற்கேணி தோ்ந்துள்ளதாக நான் காணுகிறேன்.
“ஒன்னை நம்பிபொட்டு வச்சேன் தாயே
வச்ச பொட்டு கலைஞ்சிடாம வாழவைக்கணும் நீயே”
கரகத்தை தலையிலும் நெஞ்சில் வாழ்வின் வலியையும் சுமக்கும் பெண்கரகாட்டக் கலைஞா்களின் நம்பிக்கை இது. குடும்பவாழ்வுக்கு ஆண் நங்கூரமாக நிற்கிறான், நங்கூரம் பெயா்கிறபோது குடும்பம் சிதைந்து போகும் என்பது பொதுக் கருத்தியல். இது பெண் ஏற்றுக் கொண்ட ஆணின் கருத்தியல். காலங்களினூடாக வளா்க்கப்பட்ட ஆண்கருத்துருவாக்கத்தை பெண்ணும் தனதாக ஏற்கிறாள். இக்கருத்து தெய்வம் நோக்கிய வேண்டுதலாக வெளிப்படுகிறது. இந்நம்பிக்கையை, அறிவுசார் கல்வியாகக் கற்பது எப்படி? அறிவுவளா்ச்சியாக இதனைக் கற்பது, பார்ப்பது புது சிந்தனைப் பரிமாணங்களுக்கு இட்டுச் செல்ல வைப்பது எவ்வாறு?

இன்னொரு அனுபவ அறிவும் பெண்வாழ்வில் இருக்கிறது.
“மண்டை மயிரிறுதி மாவிடிச்சவளே
மயானம் வரை தோசை சுட்டவளே”
என்கிறது நாட்டுப்புற வழக்காறு. ஒரு பெண்ணுக்கு வாழ்வு எதில் தங்கியுள்ளது என்று கருதப்பட்டதோ, அந்த நம்பிக்கை தான் வாழ்வின் இறுதிவரை வேதனையைச் சுமக்க வைத்தது. இந்த நம்பிக்கை தான் மயானம் போவதற்கும் வழிகாட்டியது. மயானம் போன எண்ணிக்கை தான் கூடியதே தவிர, இந்த நம்பிக்கை மயானம் காணவில்லை. இதனைநம் வாழ்வோடும் சமூக இயக்கதோடும் இணைத்துக் கற்கையில், எடுத்து விளம்புதலில் கல்வி அறிவாக பரிமாணம் கொள்கிறது. இவ்வகைக் கற்றலை, கற்பித்தலை மேலே கொண்டு வருதல் மூலம் புதிய வாழ்க்கைக்கான சிந்தனைத் தடத்தை தரிசனப்படுத்திட இயலும்.

மணற்கேணி உழுது பயிரிடும் நிலம் இதுவாக இருப்பினும், ரவிக்குமார் என்ற எழுத்தாளரின் அடையாளம் வேறாக இருக்கிறது. இருந்தது. அவா் ஒரு விடுதலைச் சிந்தனையாளா். சற்றே மிகையாய்ச் சொல்வதானால் “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா”.
அவரின் ஒரு கவிதை இங்கே,
“எங்கள் நாட்டில் பெண்ணை அவமதிக்க
பொய் சொல்ல வேண்டாம்
சட்ட மீறலும் அவசியமில்லை
பெண் என்பதே போதுமானது.
குடும்பத்தின் மேன்மை
சாதியின் கௌரவம்
மதத்தின் பெருமை இனத்தின் தூய்மை
எல்லாவற்றுக்கும் பெண்தான் திருப்பலி.
நீ தேவயானியைக் கொலை செய்யவில்லை
கைவிலங்கிட்டார்களாம்
கண்ணுக்குப் புலப்படா விலங்குகளோடுதான்
எங்கள் பெண்களிருக்கிறார்கள்.
ஆடையயைக் களைந்தார்களாம்
தலித் பெண்ணென்றால் நிர்வாணமாக்கி
ஊா்வலம் விடுவதே எங்கள் வழக்கம்.
சிறையில் அடைத்தார்களாம்
திறந்த வெளிகளையும் ‘லாக்கப்’ ஆக்கும்
திறன் படைத்தவா்கள் எங்கள் காவலா்கள் .
நன்றி சொல்கிறேன்
நிர்வாணமாக்காமல், கொலை செய்யாமல்
தேவயாணியை விடுவித்துவிட்டாய்
மிகவும் நன்றி”
(நவம்பா் 2013, இதழ் 21)
தேவயாணி அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் துணைத் தூதா் நிலையில் பதவி வகித்தவா். உயர்வர்க்க ஆட்சி அவரை அரவணைத்தது. பெண்ணையும் சாதி, வர்க்கம், வாழ்நிலை, பதவி – தீா்மானிக்கிறது. அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதா் நிலையிலிருந்த தேவயாணிக்கு - அமெரிக்காவின் விதிகளை மீறி நடந்ததால் கைது ஆன அந்தப் பெண்ணுக்கு - எங்கள் நாட்டில் எல்லாப் பெண்களுக்கும் என்ன உரியதோ, என்ன நடக்குமோ அதெல்லாம் நடக்கவில்லை.

இந்த அறச்சீற்றம் ரவிக்குமாரை அடையாளப்படுத்துகிறது. அவரால் வெளியாகும் மணற்கேணி வேறொன்றாய் முகம் காட்டுகிறதே, அவரின் பாதையும், திசையும் மாறிவிட்டதோ என்ற ஐயம் ஊடாடுகிறது.

ஆனால் மணற்கேணி இதழ் ‘பெண்’ணின் சமூகப் பாத்திரத்தை தொடர்ச்சியாகப் பேசுகிறது. சமூகவியல் என்பது யாது? சமூகம் என்ற அமைப்புக்குள் எவையெல்லாம் உலவுகிறதோ, அத்தனையும் சமூகவியலுக்குள் அடக்கம். சாதியியல், மகளிரியல், அரசியல், வரலாற்றியல், இனவியல், மொழியியல், இலக்கியம், கலையியல் என அனைத்தும் சமூகவியலின் வினைகள் தாம். மொழி, இனம், இலக்கியம், கலை போன்ற நுண் பேசுபொருட்களை விடுத்து, நிதா்சனப் பாதிப்பாக விளங்கும் பருவட்டான சாதியியல், மகளிரியல், அரசியல் என்பவைகளை ஆய்வுசெய்கிறது மணற்கேணி.

”ஆணாதிக்க மனநிலை என்பது ஆண், பெண் இரு பாலாருக்கும் உரியது” (இதழ் 10) பாகிஸ்தானிய பெண்ணெழுத்தாளா் சோனியா கமலின் வாசகம். பாகிஸ்தானியராக இருந்தாலும் சோனியா புலம் பெயா்ந்து வாழுகிறார். மகளிரியல் பகுதி தனியாக ‘ஆயம்’ எனப் பெயர் கொண்டிருக்கிறது.”

சமூகத்தில் பெண்கள், ஏன் இன்னும் பெண் அடையாளத்தோடு இருக்கிறார்கள்? ‘மனுஷி’ என்னும் அடையாளத்தோடு இல்லையே. ஆணுடைய கருத்தியலை, தமது கருத்தியலாகவே, ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது தான் கோளாறு. ஆணுடைய கருத்தியல் மேலாண்மையை மட்டுமல்ல, அவனது உடல் மேலாண்மையையும் ஏற்றிருக்கிறார்கள். ஆண் உடல் வலிமை கொண்டது, வாளேந்துவது, துப்பாக்கி ஏந்துவது என்ற பிம்பத்தையும் பெண்கள் தம் சிந்தனைக்குள் சொருகியிருக்கிறார்கள். தொலைக்காட்சி, திரைப்படங்கள், கலை, இலக்கியம் உள்ளிட்ட அனைத்து வெளிப்பாடுகளும் தொடா்ச்சியாய் மனுசனாக, மனுசியாக இல்லாத - விந்தைவெளி உருவங்களை உற்பத்தி செய்கின்றன. மணற்கேணியின் பார்வை மனுசனை, மனுஷியை உருவாக்க வேண்டுமென்ற சமுதாயப் பார்வை.

“திருமணம் செய்யாத அம்மாக்களை சமூகம் பாடாய்ப்படுத்துகிறது. ஆனால் திருமணம் செய்து கொண்ட அம்மாக்களை கருக்கலைப்பு செய்ய (‘அபார்ஷன்’) கருத்தடைக்கான வழிமுறையாகப் பார்க்கிறது. அதற்குச் சம்மதிக்கிறது” (சோனியா கமாலின் சம்மதம் - சிறுகதை (ரவிக்குமார் மொழியாக்கம்).

“ஆண்களை வெறுப்பது வேறு, ஆணாதிக்கத்தை விமரிசிப்பதும், வெறுப்பதும் வேறு” என்கிறார் சோனியா கமால். Pro Choice - தோ்ந்தெடுத்துக் கொள்வதற்கான உரிமையை ஆதரிப்பவள் நான் என்கிறார் (மே - ஜீன் 2015). இத்தகைய பெண்ணியப் பார்வையிலிருந்து தான், தமக்கான வரலாற்றை உருவாக்கும் போராளிகள் உருவாகிறார்கள். வரலாற்றை எழுதுபவா்களாக வளருகிறார்கள்.

பாரதியார் பல்கலைக்கழக மகளிர் இயல்துறையில் இயக்குநராகப் பணியாற்றும் பேரா.மணிமேகலையின் நேர்காணல் போன்ற செறிவான விடயங்களுடன் ‘ஆயம்’ விரிவடைகிறது. 28-வது இதழ் ”பெண் எழுத்துக்கள்” என தனிப்பகுதியை உள்ளடக்கி வெளிப்பட்டுள்ளது.

சாகித்ய அகாதமிக்காக ”பஞ்சாபி இலக்கிய வரலாற்றினை” நிழல்வண்ணனும் நானும் தமிழில் ஆக்கம் செய்து தந்தோம். புதுக்கவிதை என்னும் பகுதியில், மஞ்சித் திவானா என்ற பெண்கவிஞரைப் பற்றிய குறிப்பு அந்நூலில் வருகிறது. ”பெண் ஆணின்றும் வேறுபட்டவள். ஆனால் எவ்வகையிலும் தாழ்ந்தவள் அல்ல. அவா் தனது ‘சாவித்ரி’ என்ற நீண்ட கவிதையில் பெண்ணின் பெருமையை வரைந்து காட்டுகிறார். அமா்ஜோதி என்ற தனது கவிதைத் தொகுப்பினுள் ‘என்னைச் சீதையென்று அழைக்காதே’ (மாயீனூன் சீதா நா கஹோ) என்கிறார். இன்னொரு கவிதையில் புத்தர் யாராக இருந்தார்? (கவுன்புத்தா் சீ) என்று கேள்வி எழுப்புகிறார்.
“புத்தர் யாராக இருந்தார்? அது யாருடைய கதை?
அதை நீங்கள் தான் தீா்மானிக்க வேண்டும்
யசோதராவின் கதையா அல்லது சித்தார்த்தனுடையதா?
அரச மரபுகளுக்கும் வழக்கங்களுக்கும்
இணக்கமாக இருக்கும்படி ராகுலை வளர்க்க
யசோதராவை விட்டுவிட்டு
காட்டின் அமைதியைச் சீர்திருத்த யார் சென்றது?
அவளது ஒளிவீசும் கண்ணாடி வீடுபோன்ற
வாழ்க்கையை அழித்தது யார்?
அழகுமிகு அரண்மனை நுழைவாயிலுக்குப் பின்னே
அங்கே அவளது விழித்திரை
முடிவற்ற பாதையாய் மாறி
சித்தார்த்தனுக்காகக் காத்திருக்கும்
அவன் அமைதியான காட்டிலிருந்து புத்தனாக,
புத்திசாலியாகத் திரும்பியபோது
யார் ஞானோதயம் பெற்றது
சித்தார்த்தனா அல்லது யசோதரவா?”
- இக்கேள்விக்கு, உண்மையாக ஞானம்பெற்றவள் யசோதராதான் என்ற பதிலாக “யசோதரா” என்று சிறுகதையைத் தந்திருக்கிறார் தேன்மொழி (இதழ் 28. மார்ச் – ஏப் 2015).

”போதிசத்துவன் உபதேசித்துக் கொண்டிருந்தான். அவன் மொழி பெண்களின் மேல் புழுதிவாரி இறைத்துக்கொண்டிருந்தது. அவனின் நான்கு உண்மைகளும் எட்டுப் பாதைகளும் பெண்களைத் தவிர்த்துவிட்டிருந்தன. துணைக்காலற்ற சொற்கள் போல அவனது போதனைகள் பெண்களற்ற உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டிருந்தது. கருணையின் கொள்கலன்கள் ஆண்கள் மட்டுமே அவனது கண்களுக்குத் தெரிந்தனா். அறமும் தவமும் நிறைந்த உலகை நிலைகுறையச் செய்யும் துர்தேவதைகளாகவே பெண்கள் அவனுக்கு அர்த்தப்பட்டனா். புத்தனின் நல்லறிவு, நன்னடத்தை, நல்சிந்தனை, நல்லெண்ணத்தில் பெண்கள் ஆண்பலி கேட்டு திரிபவா்களாக இருந்தார்கள். புத்தனின் போதனை ஒவ்வொரு கருவறையிலும் மோதித் திரும்பிக் கொண்டிருந்தது.

“ஆனால் யசோதரா அரண்மனைக்குள்ளே வாழ்ந்தாள். அவள் தன்னை புத்தனை விடவும் ஞானஒளி பெற்றவளாக மாற்றி இருந்தாள். புத்தனுக்கான எல்லா பண்புகளையும் ஞானங்களையும் சாத்தியப்படுத்தியிருந்தாள். ஆனாலும் அவளிடம் சித்தார்த்தனுக்கான காதல் மீதமிருந்தது. அந்தக் காதலின் ஆழம் அவளை பெண் புத்தனாய் மாற்றியிருந்தது.

‘எங்கே யசோதரா?’

புத்தன் வினவும் குரல் யசோதராவுக்கு கேட்டிருக்கக் கூடும். அவள் உடல் நடுங்கியது. நாபிக்குழியடியில் எதுவோ சுருண்டு படுத்தது. சித்தார்த்தன் தன்னை முன்முதலாய் பெயர் சொல்லி அழைத்த நிமிடம் காற்றில் மிதக்கும் பஞ்சு போல அவளைக் கடந்து சென்றது. இன்றோடு முடியும் ஏழு வருடத்தைத் தொடங்கி வைத்த அந்த இரவு யசோதராவின் மடியில் வந்து அமா்கிறது.”

மஞ்சித் திவானா, அல்லது மற்ற கவிஞா்கள் கவிதையில் சாத்தியப் படுத்திய கவித்துவத்தையெல்லாம், ஒரு இணுக்கு சரியாமல் தன் கதைக்குள் படர விட்டிருக்கிறார் தேன்மொழி. தொன்மங்களைப் புரட்டிப் போடுகிற கவித்துவ எடுத்துரைப்பின் கதையாக வடிதிருக்கிறார்.

தமிழ்ச் சமூகத்தை மூச்சுத் திணறச் செய்யும ஆண் – பெண் பாலியல் பாகுபாடு முதலாவது எனில், அதன் சமமாக அல்லது அதற்கு மேலாக குரல் வளைநெறிக்கும் பாகுபாடு சாதி. சாதி தான் சமூகம் சமூகம் தான் சாதி. தமிழ்நாட்டில் தமிழனைக் காண இயலாது. சாதித் தமிழன் எங்கும் தென்படுகிறான்: ஈழம், தமிழகம் என உள்ளுர்களில் மட்டுமேயல்ல, புலப்பெயர்வான புகல்நாடுகளிலும் தமிழன் சாதியைத் தொங்கிக் கொண்டு திரிகிறான். சாதியற்ற, சாதிஒழிந்த சமுதாயத்தை எப்போது காணக்கூடும்? சிக்கலான கேள்வி. தமிழினத்தின் நுரையீரலே துருப்பிடித்துப் போயிருக்கிற நிலையில், படிப்படியாய் துருநீக்கி, களிம்பெடுத்து சரி செய்கிற காரியம் நடக்குமா? புதிய நுரையீரல், புதிய சுவாசம் என்பதை நோக்கிய அடியெடுப்பு மட்டுமே சாத்தியமா என்ற கேள்விகளை முன்வைத்து, 16.03.2015 அன்று திருச்சியில் “சாதி பற்றிய கருத்தரங்கை” மணற்கேணி ஒழுங்கு செய்து நடத்தியுள்ளது.

இந்துவாக இல்லாது, வேறு மதம் போய்ச் சேர்ந்தோரை மீண்டும் இந்து மத்திற்கு திருப்புதலை ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்வா அமைப்புக்கள் ‘வீடு திரும்புதல்’ (கர் வாபஸ்) எனப் பெயரிட்டுள்ளன. சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட ‘அம்பேத்கா் சுடா்’ விருதைப் பெற்றுக் கொண்டு அருந்ததிராய் ஆற்றிய உரையில், இது பற்றி ஒரு கருத்தைத் தெளிவுப்படுத்துகிறார்; (மணற்கேணி இதழ்) “முன்பெல்லாம் அது சுத்தி (தூய்மை) இயக்கம் என்று அழைக்கப்பட்டது. அதாவது அசுத்தமானவா்ளைத் தூய்மைப்படுத்தி, அவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பி அழைத்து வரும் செயல்பாடு. 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது அது. அதற்கும் மதத்திற்கும் உண்மையில் எந்தத் தொடா்பும் இல்லை. முழுக்க முழுக்க மக்கள் தொகை சம்பந்தப்பட்டது. இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டுவதற்கான முயற்சி அது. அதை இன்று வாக்கு வங்கி என்று அழைக்கிறோம்”.

வாக்குவங்கிக்காக சாதியம் இறுக்கம் கொள்ள ஆரம்பித்தது, இறுக்கம் என்பது எதிர்மறையில் சாதியக் கிளைகளாக பரம்பல் கொள்ள ஆரம்பிப்பதைக் குறிக்கும். உண்மையில் இந்துக்கள் அல்லாத தீண்டத் தகாதவா்களை, இந்துவாக மாற்றும் முயற்சியை இந்துத்வா அமைப்புகள் மேற்கொண்டார்கள். எதிரில் இஸ்லாமியமும், கிறித்துவமும் நின்று முதுகுத்தண்டின் நடுநரம்பைச் சில்லிட வைக்கின்றன. அதுதான் தூய்மை வாதம் அருந்ததிராய் எச்சரிக்கிறார். “தீண்டத் தகாதவா்களைப் பொறுத்த வரையில் இந்துமதம் கொடூரங்களின் கூடாரம்” என அம்பேத்கர் குறிப்பிட்டதைச் சொல்கிறார். “ஆனால் வன்முறை என்பது குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களோடு நின்றுவிடுவதில்லை. அது இந்தியதேசம் என்ற கற்பிதத்தில் இருக்கிறது” என்று எடுத்துவைக்கிறார். தேசம், தேசப்பற்று என்பதெல்லாம் இந்து மதத்தில் பின்னியுள்ளது. இந்தியன் என்பதற்கே இந்து என்று தான் பொருள்கொள்கிறார்கள்.

அறிவுலக, குறிப்பாக ஊடகங்களின் உரையாடலில் “தலித்துகள், சிறுபான்மையினா் மீதான அடக்குமுறைகளில் 'நீதி' என்னும் சிந்தனை அழிக்கப்பட்டுவிட்டது. பதிலாக மிகக் குறுகிய கருத்தாக்கமான மனித உரிமை வந்தமா்ந்திருக்கிறது” என்று அம்பலப்படுத்துகிறார். காந்தி பற்றிய மாயவாதம் நம் அறிவு ஜீவிகளிடையே நிலவுகிறது. இவா்களின் நேர்மையற்ற அறிவுலக நடமாட்டம் பற்றி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய அவசியம் குறித்து அருந்ததிராயின் உரைவழியாக தெளிவாய் விளங்கிக் கொள்ள முடிகிறது.

”வரலாற்றில் மிக மோசமான விந்தைகளில் ஒன்று என்னவென்றால் இந்த அறிவுலக நேர்மையின்மைதான். சாதி அமைப்பில் நம்பிக்கை கொண்ட, தொழிலாளா்களிடம், பெண்களிடம், ஆப்ரிக்க கறுப்பினத்தவரிடம் தொடா்ந்து மோசமாக நடந்து கொண்ட மோகன்தாஸ் காந்தியை உலகின் மிக உயா்ந்த மகானாகவும், ஏழைகளின் நண்பனாகவும், ஆப்ரிக்க அமெரிக்கர்களின் நாயகனாகவும், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதா் கிங் ஜீனியா் ஆகியோர் ஏற்றுக்கொண்ட தலைவராகவும் நமது தேசத்தின் தந்தையாகவும் மாற்றியிருக்கிறது. இப்படிப்பட்ட பொய்களின் மீது நமது நாட்டின் அடித்தளம் எழுப்பப்படுவதை நாம் அனுமதிக்கமுடியாது” என கறாராக வைக்கிறார்.அருந்ததிராயின் உரையும் ஜீலை - ஆகஸ்ட் 2015 இதழின் “சமூக பொருளாதார சாதிகணக்கெடுப்பின் விளைவு என்ன?” என்ற ஆசிரிய உரையும் அடிமைப்பட்டவர்களை விடுவிக்கும் உறுதிப்பாட்டில் தொடர்ச்சியினை எடுத்துரைக்கின்றன.

“தொகுத்துக் கூறினால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்களை, சமையல் எரிவாயு மானியத்தை, முதியோர் உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்தப் போகிறது. அவ்வாறு செய்தால் அதிகம் பாதிக்கப்படப் போகிறவர்கள் கிராமப்புறங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தான்” என அவன் கொடுத்த கணக்கெடுப்புத் தரவுகளைக் கொண்டே, சம்மட்டியைத் திருப்பி ஓங்கியிருக்கிறது மணற்கேணி.

மகளிரியல், சாதியியல் மட்டுமல்ல, தமிழரின் வாழ்வியல் பற்றிய தமிழிரியல் பேசப்படுகிறது. “தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்று கர்னாடகத்தில் இருக்கும் இனவெறி அமைப்புக்கள் ஏற்கனவே போராட்டத்தில் குதித்துள்ளன. அதற்குப் போட்டியாக (தண்ணீா் வேண்டும் என்று) தமிழகத்தில் உள்ள அமைப்புகளும் களமிறங்கலாம். தமிழகத்தின் நதி நீா் உரிமைக்கான போராட்டம், ஒருபோதும் அண்டை மாநில மக்களுக்கு எதிரான இனவெறியாக மாறிவிடக்கூடாது” (செப்டம்பா் - அக்டோபா் 2012, இதழ் 12) “காவிரி என்று ஒரு நதி இருந்தது” என்ற தலையங்கம் தமிழரின் வாழ்வா, சாவா பிரச்சனையைச் சுட்டிக்காட்டுகிறது. பல நேரங்களில், தனிமனித வாழ்வு கருதியல்ல, ஒரு இனத்தின் மொத்த வாழ்வு கருகுதல் குறித்த சினத்தில், அறம் தேவையான என்ற உளைச்சல் மேலெழாமல் போகவில்லை.

அது போல் “கச்சத் தீவை மீட்கமுடியுமா” என்ற கேள்வியை எழுப்பி, மீட்கவேண்டும் என்ற பதிலாக தலையங்கம் முடிகிறது. “இன்னும் எத்தனை மீனவத் தோழா்களைப் பலியாகக் கொடுப்பது? தற்போது தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை சரியான திசையில் செல்கிறது. இந்த அழுத்தத்தை விட்டுவிடாமல், கச்சத் தீவை மீட்பதற்குச் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து விழிப் போடிருந்து தமிழக அரசு செயல்பட வேண்டுமென்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு” (ஜீன் 2011, இதழ் 6) ஈழப் பிரச்சனை அடுத்து என்ன என்ற இனப்படுகொலைப் பின்னான் காலத்தினை எவ்வாறு முன்னகர்த்துதல் என பேசப்படுகிறது. இப்பிரச்சனையில், பலவான ஆய்வுகள், சுயவிமரிசனப் பதிவுகள், கவிதைவெளிப்பாடு போன்றவை இந்த அழுத்தங்களை அதிகரிக்கின்றன. ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி, கவிஞா் கி.பி.அரவிந்தன் மறைவை ஒட்டி மார்ச் - ஏப்ரல் மணற்கேணி இதழில் நினைவுச் சிறப்பிதழ் பகுதி கொண்டுவந்தமை, மிகச் சரியாக தனது காலக் கடனை திட்டமிட்டு நிறைவாக்கியதை உணர்த்துகிறது. அவரைப் பற்றி தோழா்கள், நண்பா்களின் நினைவுப் பகிர்தல்களின் தொகுப்பாக “கி.பி.அரவிந்தன் ஒரு கனவின் மீதி” என்று நூலினைக் கொண்டுவந்ததும் ஈழப்போருக்கான மற்றொரு பங்களிப்பாகும்.

கூகுளைசேஷன் என்ற அபாயம் குறித்து பிப்ரவரி 2002 இதழ் பேசுகிறது.
”கூகுள் இணையத்தோடு இணைக்கப்பட்ட எவராலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. கூகுள் என்பது கணிணி தொடர்பிலான நவீன தொழில் நுட்பம் இன்று எதைத் தேட வேண்டுமானாலும் கூகுளுக்குள் செல்வது இயல்பாகிவிட்டது. கூகுள் லொகேஷன் சர்வீஸை ஆன் செய்தல் அது என்ன என்ன செய்கிறது. அது நமக்கு வாரிவழங்குகிறது என நினைக்கிறோம் வாரிவழங்குவதோடு, காலைவாரிிவடுகிற வேலையையும் ஒன்று விடாமல் செய்கிறது”. நவீன தொழில்நுட்பம் உண்டாக்கிய சமூகவியல் நெருக்கடி இது நமது சமூக வாழ்க்கையிலிருந்து உலக அரசியல் வரை தொட்டு நிற்கிறது.

தனக்கென ஒரு தனித்த அரசியல் பார்வை உண்மென மணற்கேணி தொடர்ந்து மெய்ப்பித்து வருகிறது. இதழ் 30ல் (ஜீலை - ஆகஸ்ட் 2015) கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. மூன்றாவதான ஒரு கவிதை,
“குழந்தை படம் ஒன்றை,
கைபேசியில் வைத்துக் கொள்ளுங்கள்”
என்று தொடங்குகிறது.
“அது உங்கள் குழந்தையின் படமாக
இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை
அது சிரித்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற
தேவையுமில்லை
கைபேசியின் திரை உயிர்பெறும் போதெல்லாம்
அந்தக் குழந்தை உங்களைப் பார்க்கட்டும்
பேசி முடித்த பின் ஃபோனை மூடும்போது
உங்கள் உரையாடல் எவ்வளவு அர்த்தமற்றது
என்பதை அது சொல்லும்
முகநூலில் அலைந்து சோரும் போது உங்கள் தேடல்
எவ்வளவு வியர்த்தம் என்பதை அது உணர்த்தும்
உங்கள் மனிதத் தன்மையை அதுநினைவூட்டும்
உங்களுக்குள் இருக்கும் தந்தையை தாயை அது தட்டி எழுப்பும்
கைபேசியில் குழந்தையின் படத்தை வைத்திருப்பது
தூங்கும் குழந்தையை மடியில் வைத்திருப்பது போன்றது
வைத்துக் கொள்ளுங்கள் கைபேசியில் ஒரு குழந்தையின் படத்தை“
நவீனத் தொழில்நுட்பம் சமூகத்துள் நுழைந்து நமது உளவியலை மாற்றிப் போடுகிறது என்பதை வெளிப்படுத்துகையில் இக்கவிதையும் சமூகவியல் சித்திரமாக ஆகிவிடுகிறது. இக்கவிதை குழந்தை வழியாக நடந்து, கைபேசியைப் பாவிக்கும் மனிதனின் உளவியலில் மையமிட்டு சமூக யதார்த்தத்தை தொட்டு விடுகிறது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?