எத்தனை காலம்

காலை இளம் காற்றில்
காது மடலடியில் கனியும் குயில்கீதம்,
ஒவ்வொரு நாள் பிறப்பிலும்
உன் வீட்டு முற்றத்தில் பூக்கும் புதுமுல்லை,
தரணி வழி நடந்தாலும்
தலைக்கு மேலே நிலா,
நுங்குத் தண்ணீராய்
உதடும் உள்நாக்கும் உணர்வும் இனிக்க
ஊற்றுப் பெருக்கெடுக்கும்
உன் சுனைநீர்-
இத்தனை காலமும்
காணாமல் தொலைந்தன.

வயிற்றினால் நிச்சயிக்கப்படும்
நரகங்களுக்காய்
மனசால் உருவாகும்
சொர்க்கங்கள் தொலைத்தாய்.

எச் சபை நம்முடையது?
யார் பாடலை நாமிசைப்பது?

காலத்தின் சிறுபுயலில்
கரிப்பொடியாய் இற்றுவிழும்
கோட்டையை
மரணமிலா அறிவுகொண்டா
தாங்கினாய்?

யார் தலைக்கோ,
முகம் கழுவி, தலைவாரிப் பொட்டிடவோ
கண்ணாடி ஏந்தினாய்?
இருப்பதிலெல்லாம் பெரிய சோகம்,
இருக்கும் ஆற்றலை
விரும்பியே
அழிப்பது.

அழித்தாய்; தொலைந்தாய்;
தொலைத்து இவை மட்டுமோ?
பாட்டுத் திறந்தாலே வையத்தைப்
பாலித்திடப் பிறந்த பாரதியை.
பாரதி வாழ்ந்த தெருவில்
மனித நிணமும் ரத்தமும் தேடி
மதவெறிக் கைகள் உடைத்த
கதவுகளுக்குள் வெடித்த கதறலை,
வெண்மணி நினைவை,
விழுப்புரம் கறுப்பு நாளை,
விரியன் பாம்புகள் கொத்திய
விஜயா, பத்மினியின் விம்மலை,
வாச்சாத்தி மகள்களின் வேதனையை,
எங்கிருந்து சிறுகுரல் கேட்டாலும்
இடிஇடிக்கும் இதய அதிர்வுகளை
இழந்தாய்.
இழப்பதற்கோ வாழ்க்கை?
இழிவுபடவோ இருப்பு?
சீ,சீ
முக்காடே கேவலம் எனில்
உடல், உள்ளம், ஆவியனைத்தும்
கேவல முக்காடிட்டு
ஊர்கோலம் போவதா வாழ்க்கை!

- சூரியதீபன்

(கொலைக்களக் காதை எனில் யாது? அரசுப்பணி - என்பதுதான் அது. மேலிருப்போருக்கு அடிபணிந்து - அது அதிகாரிகளாகட்டும், ஆட்சியிலிருப்போராகட்டும் எந்த சொறிநாயானாலும் கனிவாய்க் குளிப்பாட்டி - எல்லா சம்ரட்சணைகளும் பூரணமாய் செய்யப்படும் இடம். சுய சிந்திப்பு, சுயமரியாதை, சுய படைப்பாற்றல் அத்தனையையும் மெளனிக்கச் செய்து படைப்பாளி தொலைத்த பத்து ஆண்டுகள் இடைவெளிக்கு இக்கவிதை உரத்த சாட்சி)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌