வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

மனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது?

“என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும்.

மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான்.

“எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா?”

குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை.

நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது? சைகை.
சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது.

தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளும் தொடர்பாடலில் மொழி பிறந்தது. சைகையின் இடத்தைக்காலி செய்து, ஓசையின் வருகை அவ்விடத்தில் அமர்ந்தது மொழித்தோற்றத்தின் முதல் பரிமாணம்.

மொழி – ஒலியாகத்தான் பிறந்திருக்க வேண்டும்.

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்” என்ற எழுத்து மொழி எப்போது வந்தது?

நினைவாற்றல் என்னும் பாத்திரம் போதுமானதாயில்லை. அறிதல் பெற்றோம்; தெளிவு கொண்டோம். மேலும் மேலும் விளக்கம் கிடைக்கக் கொண்டோம். இவ்வாறு பெற்றவைகளை விசயங்களை நிரப்பிக் கொள்ள இந்தப் பாத்திரத்தின் போதாமை, எழுத்து பாத்திரத்தின் அவசியமாகியது. வாழ்தலும் வாழ்தலுக்கான அறிதலும் விரிவடைய விரிவடைய, இந்தப் பெருக்கத்தை நினைவுகளில், அனுபவங்களில் சேகரித்து வைத்தல் இயலாது போகிறது. தெளிவு பெற்ற விசயங்களை முதலில் உருவ அல்லது வடிவக் குறியீடுகளாக குறித்துவைத்துக் கொள்ளல் தேயைானது. இந்தப்புள்ளியில் ஓவியமும், பின்னர் எழுத்தாகவும் பரிணமித்தது.

விரும்புதல், நேசித்தல், காதலித்தல் என்ற நவீன பளபளப்பு சொற்களுக்கு ஈடாக, அதனினும் மேலான ஒன்று நாட்டுப்புற பேச்சில் அடிபடுகிறது. “நினைத்துக் கொள்வது” என்ற வார்த்தை. ஒருத்தரை ஒருத்தர் நினைத்துக் கொள்ளுதல் என்றால் கரிசல் வட்டார மக்கள் வழக்கில் காதல் என்று அர்த்தம்.

“ஒருத்தரை ஒருத்தர் நெனைச்சிக்கிறாங்க, கல்யாணத்தை முடிச்சி வச்சிற வேண்டியதுதான்”

உறவுக்காரப் பெண் ஒருத்தி கடலுக்குள்ளிருந்து ஒரு முத்தை அனாயசமாய் எடுத்து வீசியிருந்ததைக் காண முடிந்தது.

நினைத்துக் கொள்வதை திருமணமாய் ஆக்கி இணையவைக்கிற போதில் – குடும்பம் என்ற அமைப்பு உருவாகிறது. இருதரப்பினருக்கும் இடையே பரஸ்பர நலன்களின் அடிப்படையில் உண்டான குடும்பம் அதிகாரக் கட்டமைப்பாக மாறியது போல, பேச்சுமொழியின் நினைவாற்றல் போதாமை, அடுத்த தலைமுறையினருக்கு கைமாற்றித் தருதலில் தொடரஇயலாத் துன்பம் –போன்றவை காரணமாய் எழுந்த எழுத்துமொழி கொஞ்சம் கொஞ்சமாய் அதிகாரமையமாக உருப்பெற்றது. பரஸ்பர நலன் அடிப்படையின் உருவான எழுத்துமொழி ஆதிக்க நலன் கொண்டதாய் கொழுத்துக் கொண்டது.

“இருக்க இருக்கத் தெரியும் புதுக்கணக்கன் சேதி”

“இருக்க இடம் கொடுத்தா, படுக்க இடம் கேட்ட மாதிரி”

இந்த இரு கண்ணாடிகளும் மொழி வளர்ச்சியில் நடந்த ஆக்கிரமிப்பின் கதையை காட்டுகின்றன. ஒன்றுக் கொண்று உதவிக்கொள்ள உருவான எழுத்து மொழி – பிறகு பேச்சு மொழியை ஒதுங்க வைத்த கதை நடந்தது.

“ஆதியில் மொழி கருத்துப் பரிமாற்றத்துக்குத்தான் உண்டானது. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதன் பிறகு இந்தச் சமுதாயம் வளருகிறது. மாறுகிறது. மொழிக்கும் இது நேர்கிறது. பேசுவதற்காக உருவான மொழியில் கதைகள், கவிதைகள், காவியங்கள் இதெல்லாம் பிறக்கின்றன. சமுதாயம் உயர்ந்ததால் மொழியும் உயர்ந்தது”.
(கி.ராஜநாராயணன் - மக்கள் தமிழ் வாழ்க)

ஆனால் சமுதாயம் வளர வளர இன்னொரு கேடும் வளர்கிறது. மக்களை அடக்கி வைக்க அரசு என்ற அதிகாரக் கட்டுமாணம் மேலும் மேலும் இறுக்கமாய் உண்டாகிறது. பேச்சு மொழி எழுத்து மொழியாக ஆகிற வளர்ச்சியிலும் இந்த தீங்கு நேருகிறது.

’வர்க்கப் போராட்டம்’ என்ற வாசகத்துக்கு முழுமையான உதாரணம் வேண்டுமெனில் அது மொழி வரலாறு தான். மக்கள் வழக்கே எழுத்துக்குத் தேவையில்லை என சட்டம் வகுத்து (இலக்கணம் செய்து) புறமொதுக்கிய ’ஆன்றவிந்த சான்றோர் மொழி’ நாட்டுப் புற மக்கள் கீழானவர்கள் (இழிசனர்) என்று சொன்னது.

மக்கள் வழக்குக்கு இலக்கணம் இல்லை. பேச்சுக்குப் பேச்சு, ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம் அது புதுமை கொள்ளும். விதவிதமாய், வகைவகையாய் நூறுநூறு பூக்களைப் பேச்சில் கொண்டுவந்து காட்டும். சுய சிந்திப்புதான் பேச்சு. மொழி என்னும் விருட்சத்தை வளரத் தருகிற ஈரஞ்செமித்த மண்.
அடி அடின்னு அடிக்கிறான் – கற்றவா் மொழி.
அடிசவட்டி எடுத்திட்டான், நல்ல சீருக்கு அடி சாம்பீட்டான், நொங்கை எடுத்திட்டான் - வட்டார மொழி.
பதைபதைக்கிறாள் - படித்தவா்
கருங்குடலைக் கையில் ஏந்தி ஓடினாள் - பாமரர்
வேகமாய் ஓடுகிறான் – பொது மொழி.
நாலுகால் பாய்ச்சல்ல ஓடுறான்,
குதிரையாப் பறக்கான் – வட்டார வழக்கு.
சாதாரணர், பாமரர் என சுயசிந்திப்போடு சொற்களைக் கலந்து விதைப்பார்கள். அது விதைப்புத்தான். கேட்கிறவர்கள் களியாட்டம் கொள்ளவும், கேட்டவரும் சுயமாய் சிந்தித்து நாலு வார்த்தைகளை எடுத்து வீசவுமான வெதப்பாடு அது. மக்கள் வழக்கில் விதை போட்டு முளைக்காத நிலமுமில்லை; மறுமாசூல் எடுக்காத வெள்ளாமையும் இல்லை.

மானாவரி விவசாயம் என்கிற மழை பெய்தால் மட்டும் விளைகிற பூமி கரிசக்காடு. புஞ்சை நிலத்தில் ஒரு மாசூல் கண்டுவிட்ட பருத்தி போன்றவை – கோடைமழை அடித்து, மறுமாசூல் காணும். இன்னொரு வெள்ளாமை நடக்கும். நாட்டுப்புற மக்களின் நாவில் பேச்சுமொழி மறுமாசூல் கண்டது.

கல்லாதவர், கல்வியறிவற்றோர் என்று ஒதுக்கித்தள்ளவும் மேப்பொறந்தானாய் ஒரு பகுதியினர் தம்மை ஆக்கிக் கொள்ளவும் எழுத்து மொழியை பயன்படுத்திக் கொண்டனர். இந்திய சமுதாயத்தைப் பற்றிப் பிடித்த சாதி நோய் படிப்படியாக தமிழ்ச் சமூகத்துக்குள்ளும் நுழைந்ததில், கற்றவர் கல்லாதவர் என்ற வர்ணவடிவம் பேச்சுமொழி - எழுத்துமொழி என விகற்பமானது.

பழம் இலக்கிய வகையில் இணைக்கப்படும் சங்ககாலப் படைப்புக்கள் பல இவ்வாறு வெளிப்பட்டதாகத் தோன்றவில்லை. பேச்சு வழக்கினை, மக்கள் பேசும் வழக்காற்றினைக் கொண்டதாக பல கவிதைகள் காணப் படுகின்றன. நற்றினை, கலித்தொகை, ஐங்குறுநூறு போன்ற தொகை நூல்களில் காணப்படும் பல பாடல்கள் அன்றையகால பேச்சு வழக்கினை அடிக்களனாகக் கொண்டவை. இன்றைக்கு செங்கல்லால், சிமிண்டுக் கலவையால் வீடு கட்டியதும் ’பெயிண்ட்’ அடிக்கிறார்கள். அதுபோல் மண்வீடு கட்டிய அக்காலத்தில், மண்சுவர் வைத்துக் கட்டிய பின் தீத்துப் பலகை போட்டு தீத்தி வைப்பார்கள். அதுபோலவே அன்றைய சமுதாயத்தில் நிலவிய வழக்கு மொழியைக் கையாண்டு கட்டி முடித்து ’தீத்து’ வேலையும் கொண்டவைதாம் இப்பாடல்கள்.

2

பிராமணரும், ஆதிக்க உயா் சாதியினரும் கல்வி கற்கும் (எழுத்துமொழி) வாய்ப்பைப் பெற்றனர். 1950-களின்முன்பு இடைநிலை சாதியினர், அடிநிலை சாதியினர் பெரும்பாலும் கற்கும் வாய்ப்பை இழந்திருந்தார்கள். பிராமண மற்றும் உயர்சாதிகளின் கற்றறிந்தோர், தமிழ்நாட்டிலுள்ள கற்றுணர்ந்தோருக்கான புரிதல் மொழியாக பொது மொழியை உருவாக்கினர். பேச்சில் மட்டுமல்ல, எழுத்திலும் பொதுமொழி நடையைக் கொண்டுவந்தனர். சமுதாயத்தில் கல்வி, அறிவுப் பாராம்பரியத்தைக் கையில் வைத்திருந்த பிராமணரின் சொல்லாடல்களும், பிராமணரின் இடத்தை தலைவைத்துப் படுத்தாவது தொட்டுவிடலாம் என்று முண்டியடித்த மேல்சாதியினரின் வினையாடல்களும் பொது மொழியாக உருவெடுத்தது.

புதுமைப்பித்தனின் உரைநடைக் கையாளுகையில் முதன்முதலில் பார்ப்பனரின், கற்றறிந்த உயர்சாதியினரின் பொதுமொழி உடைபடுகிறது. அவர் படித்தவர்களின் மொழியிலும் படைத்தார். சாப விமோசனம், அகலிகை போன்ற கதைகளில் தன்கைவசப்பட்ட பொருட்செறிவுடன், கவித்துவ தெறிப்புடன் மொழி இணைந்தது. அவரின் எண்ணிக்கை அதிகமான படைப்புகள் மக்களின் பேச்சு வழக்கில் வெளிப்பட்டன. எந்த மொழியை வேளாளர்கள் என்று அறியப்பட்ட திருநெல்வேலிப் பிள்ளைமார் புறமொதுக்கினார்களோ, அந்தச் சாட்டையை எடுத்து அவர்களின் மனப்போக்கு, செயல்பாடு, பண்பாட்டின் மேல் வீசியடித்தார். “திருநெல்வேலிப் பிள்ளைமார்களின் பழமைச் சிந்தனைகளை புதுமைப்பித்தன் அளவுக்குக் கிண்டல் செய்தவர் வேறுயாருமில்லை” என்று மறைந்த தி.க.சி குறிப்பிட்டது உண்மைதான். புதுமைப் பித்தன் படைப்புக்களில் வேளாளத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் கூறுகள் கருக்களாக உள்ளன என்பதான ‘சார்பு’ விமர்சனம் பின்னாளில் எழுந்தது. தான் பிறந்த குலத்தின் சார்பாக இல்லாது, சுயவாத விமர்சனமாக அதனைக் காண வேண்டியிருக்கிறது. பாரதி எவ்வாறு தான் பிறந்த குலத்தின் மீதான விமர்சனமாய் எழுந்து வந்தாரோ அவா் போலவே, உருவானவர் புதுமைப்பித்தன். பேச்சுமொழி என்னும் வட்டாரத் தமிழ் அவர் நிலத்தில் நிறைந்திருந்தது.



வட்டார மொழிப் பயன்பாட்டின் முதல் ஊற்றுப் பீய்ச்சியடிப்பு கரிசல் இலக்கியக் கிணறு தோண்டலில் முழுசாய் அடித்தது. முதலில் கரிசலில் கிணறு தோண்ட ஆர்ம்பித்தவர் கு.அழகிரிசாமி. வாழ்வை அதன் மொழியிலேயே சொல்ல வந்த கர்த்தா அவர். கரிசல் வெள்ளாமை காண முன்னத்தி ஏர் பிடித்து ஆழ உழுது, அகலச் சால்பிடித்தார் கி.ராஜநாராயணன். கி.ரா.வின் கதைகளில் வெளிப்படும் மக்களும் மொழியும் தூரம் தூரமாக இருந்ததில்லை. ஒன்று கலந்ததாக, உயிரும் உடலும் இணைந்ததாக தந்தார். எழுதப்படுவது மட்டுமே இலக்கியம் என்றிருந்த இடத்தில், படைப்பாக்கத்தில் வட்டார மொழிப் பரப்பினை விரிவாக்கினார். போராடிப் போராடிச் சேர்த்தார். மக்கள் தமிழ் போன்ற நூல்களும், தொடர் வாதாட்டமாமய் அவர் வெளிப்படுத்திய கட்டுரைகளும், ஒரு சாமானியன் இலக்கியத் திசையை மாற்றிவைத்ததை உணர்த்துவன. அவர் தொகுத்துள்ள “கரிசல் வட்டார வழக்குச் சொல் அகராதி” – மற்றுமொரு பாய்ச்சல். நாட்டுப்புற வழக்காறுகளின் ‘தெக்கத்தி மழை’ என்று அறியப்படும் எஸ்.எஸ்.போத்தையாவுடன் இணைந்து, துணையாகக் கொண்டு வட்டாரச் சொல் அகராதியை உருவாக்கினார்.



நாட்டுப்புற வழக்காறுகளின் சேகரிப்பாளர் எஸ்.எஸ்.போத்தையா; பேராசிரியர் நா.வானமாமலையின் தூண்டுதலில் பாடல்கள், சொலவடைகள் சேகரிப்பில் தொடங்கினார். கிராமப் பள்ளியில் ஆற்றிய ஆசிரியப் பணி தோதாய் அமைந்தது. கிணறு, குளம், குட்டை, கண்மாய், ஓடை, ஆறு என ஆகாய மழை பலப்பல ரூபங்களாவது போல், பாடல்கள், கேலிப்பாடல், சிறுவர் பாடல், கதைப்பாடல், சொலவடை, நம்பிக்கைகள், சொற்றொடர்கள் என பல தினுசுகளாய் வழக்காறுகளை சேர்த்துக் கொண்டிருந்தார்.

மக்கள் வழக்கில் விதை போட்டு முளைக்காத நிலமுமில்லை; மறுமாசூல் எடுக்காத வெள்ளாமையும் இல்லை. கரிசல் மண்ணில் மழை அடித்ததோ இல்லையோ, நாட்டார் வழக்காறுகளின் மழை சக்கைப் போடு போட்டது. அதற்கு முன்னும் பின்னும் வட்டார வாழ்வை பலர் வரைந்தார்கள். வட்டார வாழ்வை எழுதினரேயாயினும் அந்த மொழியில் தரவில்லை. எழுத்தாளன், வட்டார மக்களிடமிருந்தெல்லாம் வித்தியாசப்பட்ட மேநிலையாளன் என்பதை அவர்கள் நிரூபித்துக்கொண்டிருந்த காலமாக இருந்தது.

எழுத்தாளர் பொன்னீலன் குமரி மாவட்டக்காரா். விளாத்திகுளம் வட்டாரத்தில் கல்வித்துறை அலுவலர் பணியில் சேர்ந்ததை முன்னிட்டு ‘கரிசல்’ என்றொரு நெடுங்கதை எழுதினார். 1976-ல் வெளிவந்தது அந்தப் படைப்பு. கி.ரா.வை முன்னத்தி ஏராகக் கொண்டு, பூமணி, பா.செயப்பிரகாசம், வீர.வேலுச்சாமி, அ.முத்தானந்தம், ச.தமிழ்ச்செல்வன், தனுஷ்கோடி ராமசாமி, மேலண்மை பொன்னுச்சாமி, சோ.தர்மன், உதயசங்கா், கோணங்கி, சுயம்புலிங்கம் என அழுத்தமாக ‘சால்’ அடித்தார்கள். இந்த ‘ஒரு கொத்து’ எழுத்தாளர்கள் எடுத்த மகசூல் அபரிதமானது.

பூமணியின் பிறகு, வெக்கை - நெடுங்கதைகளுக்குப் பிறகு அண்மையில் வெளியான ‘அஞ்ஞாடி’ புதினம் கரிசல் காட்டின் வாழ்க்கை அகராதியாகும். ஒரு தலைமுறையின் கதை அல்ல: தலைமுறைகளின் தொடரும் கதை. குறிப்பிட்ட காலத்தின் தமிழ்ச் சமூக வரலாற்றை நேர்படப் பேசுகிறது. விளையாட்டு, பழக்கவழக்கம், உணவு வகை, விவசாய முறை, வேளாண் பொருட்கள், வசவு, வழக்காறு என ஒருசேர ஆவணப் படுத்த பெருவாய்ப்பாக இந்நெடுங்கதையைக் கையாண்டுள்ளார். மண்ணுக்குள், நீருக்குள், துவைப்புத் துறைக்குள் அழுத்தப் பட்ட சலவைத் தொழிலாளர்களையும் தாழ்த்தபட்டவரையும் மையமாக்கி, ஒடுக்கப் பட்ட இனத்தின் குரலொலிப்பைத் தந்ததில் அவருக்குரிய கரிசல் மொழி வழிய வழியச் சிந்தியுள்ளது.

ஆர்.சண்முகசுந்தரத்தின் நாகம்மாள், சட்டி சுட்டதடா புதினங்கள் கொங்கு வட்டார மொழி பேசின. கொங்கு மக்களின் வாழ்வுச்சித்தரிப்பில், வட்டார வழக்குச் சொல்லில் முதல் அடி எடுத்து வைத்தன. நாகம்மாள், அறுவடை, பூவும் பிஞ்சும், பனித்துளி, மாயத் தாகம் முதலியன வட்டார வண்ணங்களோடு பிறந்தவை. வாழ்வும் வட்டார மொழி இணைவும் சரிசமமாய்ப் பொருந்திய படைப்புக்களை தருவதில் பெருமாள் முருகன் எழுச்சியுடன் வருகிறார். நிழல் முற்றம், மாதொரு பாகன் என்பன அவரது படைப்புக்களின் உச்சம். பிசிறில்லாமல் வழக்கு மொழியில் கொங்கு வட்டார வாழ்வியலைத் தருகிறவர்களில் சி.ஆா்.ரவீந்திரன், சூரிய காந்தன் போன்றோர் குறிக்கப்பட வேண்டியவர்கள்.

வட்டாரம் வட்டாரமாய் வாழ்வியல் பிளந்து கிடக்கிறது .வட்டாரப் புவியியல் (நிலவியல்) சார்ந்து ஓசை, உச்சரிப்பு முறை, நீட்டல், குறைத்தல், வெட்டல், என ஒவ்வொரு வகைப்பாடாய் பேச்சு வருகிறது. வித்தியாச வாழ்வுமுறை கொண்ட, வித்தியாசமான மொழிவெளிப்பாட்டில் உள்ள பூமி குமரி வட்டாரம். சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’ அந்த மக்களின் குணப் போக்கு, மொழி வீச்சு கொண்ட வட்டாரப் புதினம். அந்நெடுங்கதை உருவான போது யதார்த்த இலக்கியப் பரப்பு தமிழில் மெல்ல மெல்ல பயிரிடப் பட்டுக் கொண்டிருந்தது. சுந்தர ராமசமியின் ‘புளிய மரத்தின் கதை’ அன்றைய யதர்த்த இலக்கியத்தில் பெரும் வரவேற்பளிக்கப் பட்டு, புதிய திசையை அளந்து கொடுத்தது. பொன்னீலன், நாஞ்சில் நாடனின் தொடக்க எழுத்துக்கள் எழுபதுகளில் தொடங்கின. பொது மொழிப் போர்வையை அவ்வப்போது போர்த்திக் கொண்ட போதும், இவர்களின் பெரும் பாலான படைப்புக்கள் வட்டாரத் தன்மையுடன் பிறந்தவை. நாஞ்சில் நாடனின் ‘என்பிலதனை வெயில்காயும்’, ‘தலைகீழ் விகிதங்கள்’ என்ற நெடுங்கதைகள், ’பேய்க் கொட்டு’ - சிறுகதைகள் வட்டாரவாழ்வின் மொழிப் பிரயோகத்தில் பூத்தவை. பொன்னீலனின் ஊற்றில் மலர்ந்தவை முதலான கதைத் தொகுதிகள் குமரிவட்டார வாழ்வை மண்ணின் மொழியில் தந்தன.

பேச்சுவழக்கு வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடுகிறது. மனிதனின் மன, அசைவு, மனுசத் தன்மை போன்றனவற்றை வெளிப்படுத்திக்காட்ட வேண்டுமென எண்ணுகிற தேர்ந்த படைப்பாளி வட்டார வாழ்வின் அம்சங்களைத் திறம்பட வெளிப்படுத்துவான். பனைமரங்களை நம்பி, அதில் உற்பத்தி செய்யபடும் பொருட்களையே விற்பனையாக்கி வாழ்வு நடத்தும் பனையேறித் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஹெப்சிபா ஜேசுதாசனின் ” புத்தம் வீடு” ஒரு பனங்காட்டுப் படைப்பு. கடல்புரத்தில் வாழும் மீனவ கிறித்துவர்கள் பற்றிய வண்ணநிலவனின் ”கடல்புரத்தில்” புதினம் வட்டார வழக்கில் ஒரு மைல்கல் எனலாம்.

இடஞ்சார்ந்து மட்டுமல்ல, இனம் (சமுதாயம்) சார்ந்தும் கவனப்படுத்தப்பட வேண்டும். மீனவ மக்கள், ஒன்பது கம்பளத்தார் சமுதாயம், இருளர், இஸ்லாமியர் என சமுதாயக்கலாச்சார நுண்மை, அவரவருக்கே உரித்தான தன்மைகள். இஸ்லாமியரின் தனிக் கலாச்சாரத்தில் அதற்கென தனிச் சொற்கள், வெளிப்பாட்டு முறை உள்ளன, முழு வீச்சில் அவர்களின் மொழியில் தந்தவர்கள் தோப்பில் முகமது மீரான், ஜாகீா் ராஜா ஆகிய இருவா். இஸ்லாமியர் பண்பாட்டு விவரிப்பில் இவர்களுடையது ஒரு கடைசல் மொழி. கடைசல் இயந்திரம் நாலாபக்கமும் நகாசு வேலை செய்து கொண்டே, தொடுபுள்ளியில் துளையிட்டு நிற்கும். தாம் சார்ந்த இஸ்லாமிய சமுதாயத்தின் பழக்க, வழக்கம், மனப்போக்கு போன்றவைகளை கலைப்படுத்திச் சொல்லிப் போகும் கடைசல் இயந்திரம், இவர்களின் மொழி.

குறிப்பிட்ட இனச் சமூகக் குழுக்களின் வாழ்வு அந்த வட்டார வழக்கில் படைப்பாவதும், இல்லாததும் உண்டு. எடுத்துக் காட்டாக பிராமண சமூகத்தின் வாழ்வை, மன அசைவுகளை எடுத்து வைத்தவர் தி.ஜானகிராமன். தஞ்சை வட்டார மொழி என்று தனியாக இல்லை. அது ஆதிக்க மேலாண் சாதிகளுக்கென ஒரு மொழியாகவும், நிலமற்ற வறிய விவசாயக் கூலிகளான தலித் மக்களுக்கு ஒரு மொழியாகவும் இப்படித்தான் பிரிவுபிரிவாய் இருந்தது. மேலாண் சாதியான பிராமண சமூகத்தின் மொழி தி.ஜானகிராமன் படைப்புக்களில் துல்லியமாய் வெளிப்பட்டது.

எழுபதுகளில் வெளிப்பட்ட புதினங்களில் குறிப்பிட வேண்டிய ஒன்று சா.கந்தசாமியின் ’சாயாவனம்’. கீழத் தஞ்சை என சொல்லப்படும் (சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை) வட்டாரத்தில் ஒரு வனம் அழிக்கப்படுவதின் சித்தரிப்பு. கிழக்குத் தஞ்சைப் பகுதி மக்களின் வாழ்வுச் சிதைப்பை தீட்டியதாயினும், அப்பகுதி மக்களது மொழியில் பிரிந்து நிற்கிறது. எழுத்தாளனின் பொதுமொழியில் வெளிப்பட்டுள்ளது. வட்டார வாழ்க்கை உண்டு; மொழி இல்லை.

தஞ்சை மக்களின் மொழி அம்மக்களின் பண்பாட்டுக் கூறுகளுடன் வெளிப்பட்ட படைப்பு பாவை சந்திரனின் ’நல்ல நிலம்’. ஏனோ அந்த வெற்றிக்குப் பின் அவருடைய படைப்பாக்கங்களின் பங்களிப்பு இல்லாமல் போயிற்று. சிலர் கைவசம் நல்ல மூலதனம் இருந்தும் அதனை மறு மூலதனமாக ஆக்க முயலுவதில்லை.

எம்.வி.வெங்கட்ராம், குடந்தையைப் பூர்வீகமாகக் கொண்ட படைப்பாளி; பட்டுநூல்காரர் என்று அழைக்கப்படுகிற செளராட்டிர இன கைத்தறி நெசவாளர்கள் கும்பகோணம், மதுரை, பரமக்குடி போன்ற நகரங்களில் பரந்துள்ளார்கள். பட்டு நூல்கார இனச் சமூகத்தின் வாழ்வுப் பிரச்சினையைச் சித்தரித்த நெடுங்கதை ‘வேள்வித் தீ’. எம்.வி.வெங்கட்ராமின் பிற படைப்புக்களும் அந்த சமூகத்தின் மொழியில் குறிப்பாய் தொழில் சார்பான சொல்லாடல்களுடன் அடையாளம் கொண்டன.

தஞ்சை மக்களின், குறிப்பாக கூலித் தொழிலாளிகளின் பிரச்சினைகளை, பண்பாட்டை, பழக்க, வழக்கத்தை அவர்கள் மொழியில் தருகிறது ச.முத்துவின் ‘கறிச்சோறு’ புதினம்.

விவசாயத் தொழிலாளிகள், தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட முன்னெடுப்புகளைப் பேசுகிற நெடுங்கதைகள் தனித்துவமானவை. விழுப்புரம் கடலூா், பண்ருட்டி போன்ற நடுநாட்டு வட்டார கதைப் படைப்புக்கள், இமயம், தங்கர் பச்சான், கண்மணி குணசேகரன் ஆகியோரின் வருகைக்குப் பின் ‘செம்புல இலக்கியம்’ என தனியாகப் பெயர் கொண்டது, இமயத்தின் ‘கோவேறு கழுதைகள்’, தங்கர் பச்சானின் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ – போன்ற புதினங்கள், செம்புல மொழியின் உருவாக்கம்.

வட்டார வழக்குமொழியில் உரத்த சிந்தனையாய் வெளிப்பட்டவை பாமாவின் சிறுகதைகளும், ‘கருக்கு’ புதினமும். தலித் மக்களின் பேச்சு மொழியில் வெளிப்பட்டுள்ள புதினம் ஸ்ரீதரகணேசன் எழுதிய ‘சடையன்குளம்’ .அபிமானி குறிப்பிடத்தகுந்த தலித் எழுத்தாளார். காலகாலமாக ஒடுக்கிவைக்கப்பட்ட இனத்துனுள்ளிருந்து, அவர்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி எழுதுவதால் தலித் எழுத்தாளர் ஆனார் என்பதல்ல; அம்மக்களுக்கே உண்டான மொழியின் வட்டாரத் தன்மையைப் பயன்படுத்துவதால், உயிர்ப்புள்ள எழுத்தாக மாறுகிறது. அவர்களின் மொழி அவர்கள் மேல் பாறையாய் அமர்ந்துள்ளவர்களின் மொழியல்ல. அவர் ஒரு தலித்; எடுத்துக்கொள்வது தலித் பிரச்சனைகள்; வெளிப்பாடு உண்மையாக அவர்கள் மொழியில் - இம் முக்கூட்டின் இணைவில் வெடித்துக் கிளம்பிய புதினம் அபிமானியின் “நீர்கொத்தி மனிதர்கள்”. மூன்று கடல்களின் சங்கமத்தைக்காட்டி உலகைத் தன்பக்கம் வரச் செய்கிற குமரிமுனை போல், இந்த ’முக்கூட்டு‘ புதினத்தை தூக்கி உயர்த்தி நிறுத்துகிறது.

தமிழகத் தலைநகராக சென்னை உருவான வரலாறு விசித்திரமானது. கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிபுகுந்த கதை அது. சென்னப்ப நாயக்கன் என்ற நில உடமையாளனிடமிருந்து ஒரு பகுதியை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள் ‘கிழக்கிந்தியக் கம்பெனியினர்’. விற்றவன் பெயரில் சென்னைப் பட்டணம் என்று பெயர் சூட்டப்பட்ட போதிலும், அது கடலோரக் கிராமம். முதலாளிய நாடுகளிலிருந்து பலதிசைகளுக்கும் பறந்துவந்த கடலோடிகள், முதலில் காலடிவைத்தத இடம் கடற்கரைக் கிராமங்கள். இன்றுபோலல்லாது வேற்று நிலத்தில் காலூன்ற அன்று நீர்வழிப்பாதை ஒன்றே கையாளப்பட்டது.

கிழக்கிந்தியக் கம்பெனிக்காரன் இறங்கிய இடம் சென்னை. வாஸ்கோடகாமா வந்திறங்கிய இடம் கேரளத்தின் கள்ளிக் கோட்டை. பிரெஞ்சுக்காரன் பிடித்த இடம் புதுச்சேரி. வெள்ளைப் பிரதேசத்திலிருந்து கடல் மார்க்கமாக வந்தவர்கள் வணிகவேட்டையாட ’கவுல்மார்க்கம்’ (தந்திரம்) செய்தவேளையில், கடலோரக் கிராமங்களே பின்புலமாகின.

தமிழ்நாட்டிலிருந்த போதும், சென்னைப் பட்டிணத்தில் விதேசிகள், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என்று பல்லினத்தாரும் குடியேறினர். சென்னை குடியேறிகளின் நகரம் ஆனது. பல்லினக் கலப்பில், உறவாடலில் இங்கு பலமொழி பிசைந்த தமிழ் ஒன்று உருவானது. சென்னைத் தமிழ் என்னும் புதிய ரூப மொழி உண்டானது.

சென்னைத் தமிழ் 1950,60 களில் கேலிக்குரியதாகப் பார்க்கப்பட்டது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ‘கிந்தனார்’ கதாகாலடே்சபத்தில் சென்னைத் தமிழில் பேசி, நடித்து அகடம், விகடம் பண்ணினார். நல்லதம்பி என்ற திரைப்படத்தில் இக்காட்சி வெளியாயிற்று. சென்னைத் தமிழும் வட்டாரத் தமிழே என்ற அங்கீகாரம் பெற 1990-களாயிற்று.

எங்கெங்கோ இருந்து, பெயர்த்தெறியப்பட்ட, குடிபெயர்ந்த எல்லா எழுத்தாளர்களின் குடியிருப்பாகவும் சென்னை ஆகிய வேளை, அவர்கள்மொழி அதுவாக ரூபம் கொள்ளவில்லை என்பது முரண்நகை. பி.எஸ்.ராமையா ‘தலைக்கு ஊத்திக்கின பொம்பிளே’ என்றொரு கதை எழுதினார். ‘ஊத்திக்கின’ என்பது சென்னை மொழி. அதற்கு மேலும் வலுசேர்க்கிறது ‘பொம்பிளெ’ என்ற வார்த்தை. பட்டணத்து ரிக்ஷாக்காரன் மொழியில் கர்ணன் மனைவியின் சுபாவம் பற்றி விவரிக்கிறது கதை.

நெல்லைத் தமிழ், கரிசல் தமிழ், கொங்குத் தமிழ் வரிசையில் ‘பட்டணத்து பாஷை’ என்ற அங்கீகாரம் பெற்ற சென்னைத் தமிழில் எழுதப்பட்ட புதினம் ஜெயகாந்தனின் “சினிமாவுக்குப் போன சித்தாளு”. இதுவும் ரிக்ஷாக்காரனின் கதை. ரிக்‌ஷாஓட்டியான புருஷனில் பிரியம் கொள்வதை விட, அவன் அணிந்திருக்கும் முண்டாபனியனில் அச்சடித்த, அவன் பச்சை குத்திக் கொண்டிருக்கிற எம்.ஜி.ஆரை காதலிக்கிறாள் குப்பத்து மனைவி அஞ்சலை. அவனிடம் மயங்குகிற காலத்திலும், எம்.ஜி.ஆரிடம் கிறங்குவது போலவே நினைத்துக் கொள்கிறாள். முழுக்க திராவிட இயக்கக் கலாச்சாரத்தை, அவர்களின் திரைப்பட மாயை சாதாரண மக்களைச் சுண்டி இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டதை அம்பலப்படுத்த எழுதப்பட்டது இப்புதினம்.

வழக்கு நடையில் கதை நடத்துவது என்ற போக்கு, சிலகாலம் மேலே வந்தது. அது சோதனை முயற்சியாக, அல்லது பலவித நடையைக் கையாளும் வித்தை என்வசம் உண்டு என்று காட்டும் வழிமுறையாகமட்டுமே அமைந்தது. அத்தோடு அது நின்று போனது. பட்டணத்துக் கொச்சை மொழியிலும் எழுதுவார் லா.ச.ராமாமிரும்: பண்பட்ட உயர்குடியினரின் பேச்சு மொழியிலும் எழுதுவார். அவருக்கு அது பலவித நடையைக் கையாளும் உத்தி.
பேச்சு வழக்கிலேயே, பேசிப் பேசியே பாத்திரங்கள் கதை நடத்துவதில் வல்லவரான பூமணியின் நிறைய கதைகள் உரையாடல் போக்கில் வந்துள்ளன. பூமணிக்கு மட்டுமே சாத்தியமான வித்தை இது.

“குறிப்பிட்ட ஒரு வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் என்று காட்டிக் கொள்வதற்காக ஒரு சிலர். அந்த வட்டாரத்தின் பேச்சு வழக்குகளையும், அங்கு மட்டுமே வழக்கத்திலுள்ள தனிப்பிரயோகங்களையும் சொல்சிதைவுகளையும் அளவுக்கு அதிகமாகத் தங்கள் எழுத்திலே திணித்து, எழுத்து நடையின் இயல்பான ஓட்டத்தைக் கெடுத்து ஒரு செயற்கைத் தனத்தைச் சுமத்திவைப்பதில் உற்சாகம் காட்டலானார்கள். இந்த மனோபாவம் எழுத்துக்கு வளம் சேர்ப்பதில்லை. எழுத்தாளரின் வளர்ச்சிக்கும் வகை செய்வதில்லை”

பலவித நடைகள் என்னும் கட்டுரையில் வல்லிக் கண்ணன் குறிப்பிடுகிறார். இந்தக் கிறுக்கு பிடித்து ஆடுகிறவர்கள் சிலர் உண்டு. ஆனால் எது எது எந்தெந்தக் காலத்துக்கு எடுபடும் என்ற தொழில் வித்தையும் தெரிந்திருக்க வேண்டும். தன் எழுத்தை நிலைப்படுத்திக்கொள்ள காலக்கணக்கு முக்கியம்.

வழக்கு மொழியை இடமும் அளவும் அறிந்து உபயோகப்படுத்துவது முக்கியம்.

“என்னுடைய எண்ணம் நூத்துச் சதமானம் அப்படியே பேசுகிற மாதிரி எழுத வேண்டுமென்பதல்ல. பேச்சு நடைக்கும் எழுத்து நடைக்குமுள்ள தூரத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்பது நல்லது.” என்பார் கி.ரா.

இங்கு கவனப் படுத்த வேண்டியது இலக்கிய உரைநடைப் போக்கில் இது என்ன காலம் என்பது தான். வாசிப்புணர்வும், படைப்புணர்வும் காலத்துக்கு காலம் எட்டி நடை போடுகிறது. இப்படி கட்டம் கட்டமாய் நகர்ந்து அது ஒரு எல்லையில் நிற்கிறது. அதுதான் கி.ரா குறிப்பிடுகிற இக்காலத்தின் எல்லை. கால எல்லையை நன்றாய்க் கணித்து, அதற்குத் தக எழுதுவதே வெளிப்பாட்டு முறை.

இன்றைய காலத்துக்கு உகந்த பொருத்தமான மொழிநடை வருங்காலத்துக்கு எடுபடாது போகலாம். நேற்றைய முறையும் இன்று அந்நியப் பட்டுப் போகலாம். ‘ஆடிப்பட்டம் தேடிவிதை’ என்பது போல் எந்தக் காலத்துக்கு எது போட்டால் முளைக்கும் என்ற காலக் கணிப்போடு, எழுத்துக்காரன் கைக்கொண்டால் இனியான நூற்றாண்டுகளில் நடக்கலாம். இன்ன இலக்கியம், இன்ன எழுத்துநடை, இவ்வளவு காலம் என்றெல்லாம் திட்டாந்தரமாகச் சொல்லிவைக்க முடியாது.

இன்று உலகக் கொள்ளை நடத்திட இனம், மொழி, பண்பாடு போன்றவை தடையாக நிற்பதால், ‘கெடாவெட்டு’ வரிந்து கட்டி நடக்கிறது. உலகமயத்தின் வெட்டு விழும் முதல் கழுத்து வட்டாரப் பண்பாடு, வட்டார வழக்கு.

மாடும், ஏரும், உழவும் கொண்ட விவசாயத்தின் கழுத்தில் ஒரே வெட்டு; வேளாண்மையச் சுற்றி எழும்பிய கிராமியமும், கிராமத்து வாழ்வும் வெட்டுப்பட்டு தலை துண்டாகாத ’தொங்கு கெடா’ மாதிரி துடித்துக் கொண்டிருக்கின்றன. தொடர்பான மொழி வழக்காறுகளும் சிதையில் கிடத்தப்பட்டுள்ளன. மொத்தமாய் வட்டார மக்களின் வாழ்வியலை எரித்துச் சாம்பல் காணுகிறபோதில், அதன் குணாம்சமான வழக்கு மொழியும் உடன்கட்டையேற்றப் படுகிறது.

வட்டார வாழ்வின் தடயங்களை, பண்பாட்டு முளைவெடிப்புகளை அழிமானம் ஆக்கிய பின் அந்த வகை இலக்கியம் எங்கிருந்து தலை காட்டும்? வட்டார வாழ்வினுள்ளிருந்து வழிய வழிய அள்ளிக்கொடுத்த கதை சொல்லி, எழுத்துக்காரன் இனி எங்கிருப்பான்? வட்டாரத் தலைமுறைகளின் கதைசொல்லுகிற பயணம் முட்டுச் சந்துக்கு வந்து நிற்கிறது. ஆணிவேரை அறுத்து வீசும் உலகமயச் சுனாமியின் முன் – ஆணிவேரில்லாமல் சல்லிவேரால் ஓரிரண்டு பசுமையைத் துளிர்க்க வைக்கிறார்கள் வட்டாரத் தலைமுறையின் இப்போதுள்ள மிச்சசொச்சம்.

துடிப்படங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நாடி பிடித்துப் பார்க்கும் நாம் என்ன செய்ய வேண்டும்?

நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் விசயம் தெளிவாகப் பிடிபடுகிறது. ஒரு காரியம் செய்துகொள்ள வேண்டும் - வட்டார வழக்காறுகளை ஆவணங்களாக்கி, வழக்குச் சொல்லகராதிகளாக்கி மட்டுமல்ல, படைப்புக்களாய் ஆக்கியும் பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த வழக்காற்றின் வரலாற்றையும் – அதன் காலம், பிறந்த காரணம், எங்கிருந்து பிறப்பு, வளர்சிதை மாற்றம் என பூர்விகத்துடன் பதியப் படுத்த வேண்டும். செய்தால் கூடுகளைக் காப்பாற்றிய மாதிரியும் ஆகும். கூடுவிட்டுக் கூடு பாயும் பறவைகளைத் தேடிக் களைப்பதும் இருக்காது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌