எழுத்து வாசல்


சமகால வாழ்வியலில் நாம் நிறைய நிறைய உளவியல் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளோம். உளவியல் நெருக்கடிகளை உண்டாக்குவது நம்மைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் தாம். பிரச்சினைகள் தரும் அழுத்தங்கள் தாம். சமகால வாழ்வியலின் பிரச்சனைகள் மலையாக நம்மை அழுத்தி அக உளைச்சலைத் தளும்பச் செய்கின்றன. நமக்குள் இருக்கும் மனஓட்டமும் சிந்திப்பும் இயங்க மூலமானவை புறத்தில் இயக்கத்திலிருக்கும் அசைவுகள் தாம். ஆனால் இந்த அசைவுகளுக்குள் கடலலையில் துரும்பு போல நமது மனம் தூக்கி விளாசப் படுகிறதே, அதற்கு மூலமாய் இருக்கிறதும் நமக்குள் உருவாக்கப்பட்டு செயலில் உள்ள மனாமைப்புத்தான். அதுவும் மன ஓட்டம் தானாக உருவாகி, தானாக இயங்குவதில்லை. ஏதோ எரிச்சல் ஏற்படுகிறது. எரிச்சல் தானாக உருவாவதில்லை. எரிச்சல் ஊட்டப்படுகிறது. ஏதோ ஒன்று, அல்லது அந்த ஏதோ ஒன்றைச் செய்யும் ஏதோ எரிச்சலுக்கு மூலம் ஆகிறார். அந்த எரிச்சலின் கூடுதல் குறைவு விகிதாச்சாரம் உள்ளிருக்கும் மனக் கட்டமைப்பு எதிர்கொள்வதினைப் பொறுத்து அமைகிறது.

இங்கு ஒரு ‘கார்ப்பரேட் யோகி’ சொல்கிறார்;
“நிம்மதி நமக்குள் தான் உள்ளது. அது வெளியுலகில் கிடைக்காது. மகிழ்ச்சி, கவலை இரண்டும் நமக்குள் இருந்து தான் ஏற்படுகிறது. அதை வெளிக் கொணர வேண்டும் என்ற முயற்சியில்லாமல் இருந்துள்ளோம் என்பது தற்போது தான் புரிகிறது”

அப்படியானால் ‘நெடுவாசல்’ மக்களது துன்பமும் துயரமும் உள்ளுக்குளிருந்தே உறுவாகிற்றா? அவர்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியுமில்லையே ஏன்? ஒரு நெடுவாசல் அல்ல, தமிழ்நாடெங்கும் நெடுவாசல்கள். அந்த மக்கள் தாமாய் வருத்திக் கொண்டதல்ல. அவர்களின் வாழ்வு ஆதாரத்தை வேரோடு பெயர்த்து வீசும் திணிக்கப்பட்ட திட்டங்களால் உண்டாக்கப் பட்டது. அவ்வாறானால் இந்தத் திட்டங்கள் போட்டவர்கள் யார், எந்த சக்திகள்? இவ்வகைத் துளையிடும் கேள்விகளுக்குள் நமது ’யோகி’ போகமாட்டார். போராடாமல் இருக்க பொள்ளாச்சி மலையடிவாரத்தில் ‘ஈஷா யோகா மையம்’ அமைத்து உட்கார்ந்துவிட வாருங்கள் என்பது அவரது வழி நடத்தல்.

காவிரிப் பாசன மக்களின் கண்ணீருக்கும் துக்கத்துக்கும் காரணமென்ன? பாலாறு மறிக்கப்பட்ட விவசாயிகள் தமக்குள்ளிருந்தே துக்கத்தையும் மகிழ்ச்சியையும் வந்தடைந்தனரா? மீத்தேன் திட்டத்தில் டெல்டா விவசாயிகள் வில்லடிக்கு ஆளான பஞ்சுத்துகள்கள் போல் பறக்கிறார்களே, ஏன்? இது திணிக்கப்பட்ட துக்கம்! தானே உருவானதில்லை. இந்தக் கால வாழ்வியலில் தான் இன்குலாப் இருந்தார். நீங்களும் நானும் இருந்தோம். வஞ்சிக்கப்பட்ட வாழ்வு கோபாக்கினியைத் தூண்டுமா? இல்லையா? வஞ்சிக்கப்பட்ட வாழ்வைப் பற்றி வஞ்சித்தவர்களைப் பற்றி - வஞ்சித்தோருக்கு ஒத்துப் போகும் தத்துவ விருத்தியுரைகள் வழங்கும் ஈஷா யோகி பற்றி எழுதாமல் வேறு எதைப் பற்றி நான் எழுத?

நான் கதை சொல்லத் தொடங்கிய பூர்விகம் புராதனமானது. 1971 மே மாதம் எனது முதல் கதை ‘குற்றம்’ - தாமரை இலக்கிய மாத இதழில் வந்தது. சின்னஞ்சிறு எழுத்துக் குஞ்சுப் பறவையின் இளவேனில் அங்கிருந்து தொடங்கிற்று. ஏப்ரல், மே மாதங்கள் வெள்ளை வெயில் கனரும் காலங்கள். ஒரு கதையினால் என்னுள், மனத்துள், என்னைச் சுற்றியும் இளவேனில் பூத்திருப்பதாய் ஆனது. எனது பூர்விகத்திலிருந்து நான் உழ ஆரம்பித்த வேளையில் சமகால உழவுக்காரர்களும் ஏர் பிடித்துக் கொண்டிருந்தார்கள்: எனக்கும் சக எழுத்துப் பயணியருக்கும் முன்னால் “நல்லா வாய்ச்ச ஆள் ஒருத்தர்” இரட்டைக் கலப்பைப் போட்டுக் கொண்டிருந்தார், கேள்விப்பட்டிருந்தேன்.

அந்நாட்களில் மதுரையில் ஒரு கல்லூரியில் 3 வருடங்கள் பயிற்றுநராக இருந்தேன். மூன்றாம் ஆண்டில் ‘குற்றம்’ கதை தாமரையில் வந்தது. எழுத்து வாழ்வை மீள்வாசிப்பு செய்யத் தொடங்குகையில், இலக்கிய வெளியில் கால் வைத்தது பெரிய குற்றம் என்பது போல் இப்போது தோணுகிறது. அதனால் அடைந்த லாபமென்ன என்று நோக்குகையில் லௌகீகமாக ஒன்றுமில்லை. ஆனால் அறிவார்த்தமான ஒரு மதிப்பு வந்துள்ளது. அதைத் தானே காலத்துக்கும் தார்ப்பாய்ச்சி கட்டித் தூக்கிக் கொண்டு போக்க காத்திருக்கிறோம்.

இங்கு இருவேறு நடைமுறை உலகுகள். ஓன்று அறிவார்த்தமான எழுத்து, பேச்சு என அலைச்சலான சிந்திப்பு; மனச் சாட்சியை நிறுத்துக் கூட அல்ல, நிறுக்காமல் எடைக்குப் போட்டுவிட்டு, சொர்க்கம் போன்றதான வாழ்வைக் கைப்பற்றும் சாதாரண உலகு.

கோடிக்கணக்கானோர் இந்த வட்டத்துக்குள் குந்தி இருக்கையில் சின்னச் சின்னக் கட்டங்களுள் ‘குந்துவான்’ (ஆட்டம்) ஆடுவது என்ன வாழ்க்கை என்று தான் இப்போதும் சலிப்பு பிறக்கின்றது. மலையாளம், வங்காளம் போன்று எழுத்தினால் ஜீவிக்க முடியும் என்பதான எளிதானநிலை எதிரில் இருந்திருந்தால், நான் வருமானத்துக்கு வேலைக்குப் போயிருக்க மாட்டேன். வாழ்க்கையின் ஆதார வேரான, பொருளாதாரத்திற்கு ஒரு பருவட்டான வாழ்வைத் தேடி தீர்மானித்துக் கொள்ள வேண்டியிருந்தது. எழுத்தே என் நடமாட்டமாக, எல்லாமாக இருக்கவில்லை. என்னை உருக்கி இளக்கிக் கொண்டே எழுத்தை வார்த்தேன் என்று சொல்ல இயலாது. ஆனால், எழுத முனைகிற போதெல்லாம் எழுத்தே கதியாகக் கிடந்தேன். ஆதை முழுமையாக்காமல் என் கண்ணடையாது என்பதை உரைக்கத் தயாராக இருக்கிறேன்.
“வாழ்நாள் படைப்பாளியாக நானில்லை.
வாழ்நாளுக்குள் நான் படைப்பாளியாக இருந்தேன்.”
வாழ்நாள் மீறியவன் அல்ல; வாழ்காலத்துக்குள் அடங்கியவன். ஆனால், ஒன்று உருப் பெறுகிற காலத்தில் அதுவே நோக்கமாக முங்குநீச்சல் போட்டவன். வாசிப்பாளனாக, எழுதுபவனாக இரு பாத்திரங்கள் வகித்த போதும், உச்சந்தலையில் தாங்கிப் டிக்கும் படைப்புக்களை சிலாகித்தவன். சிலாகிப்பு அந்தக் கணத்தில் அவர்களுடைய மாணாக்கனாக ஆக்கிவிடும். இரு எடுத்துக்காட்டு – முன்னர் மராட்டியத்தின் வி.ஸ.காண்டேகர்: பின்னர் வங்கத்தின் சரத் சந்திர்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌