நனவின் கரை சேரும் ’கனவின் மீதி’
நம்மைச் சுற்றியும் அப்பாலும் நண்பர்கள், உறவுகள் வாழுகிறார்கள். வாழும் காலத்தில் இவர்களைப் பற்றிய நம் கணிப்பு முழுமைப்படுவதில்லை. அல்லது போதுமானதாக இருப்பதில்லை. இது அவரவருக்குள் அவரவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஒருவரைப் பற்றிய முழுமையான கணிப்பு அவர் மறைவுக்குப் பின்னால் வந்து சேருகிறது.
அவருடைய இயற்பெயர் கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: தாய் தந்தை சூட்டிய பெயர் அது. வளர்ந்து ஆளாகி புரட்சிகர இயக்கத்தில், விடுதலை இயக்கத்தில் இயங்குகையில் வந்த இயக்கப் பெயர் சுந்தர். தன் எழுத்துத் திறனைப் பதிவு செய்து கொள்ள, தனக்கு இட்டுக்கொண்ட புனைபெயர் கி.பி.அரவிந்தன்: கிறிஸ்டோபர் பிரான்சிஸ் என்பதின் சுருக்கம் கி.பி.
ஈழத்தில் இருக்கையில் கிறிஸ்டோபர் பிரான்சிஸ்; தமிழகத்தில் இயங்கும் காலத்தில் சுந்தர். புலம்பெயர்ந்து வாழ்க்கையில் கி.பி.அரவிந்தன் என காலப் படிநிலையிலும் இப்பெயர்களைக் காணமுடியும். நூல் பிடித்தது போல் துல்லியமாக இல்லாவிடினும், ஏறத்தாழ கால அடவுக்குள் அடங்ககுபவை.
அவருக்கு அன்னை இட்ட பெயர் மனோகரன். 1953-ஆம் ஆண்டில் வெளிவந்த மனோகரா திரைப்படத்தின் தாக்கம் அம்மாவுக்கு இருந்திருக்கிறது. ஏழு பிள்ளைகளைப் பெற்ற தாய் மூத்த மகனுக்கு மனோகரன் எனப் பெயரிட்டது அவருக்குள் இருந்த இலட்சியக் கனவால். மனோகரா போல் தாயின் அடிமைச் சங்கிலியறுத்து, அதன் இன்னொரு குறியீடுதான் தாய்நாட்டின் அடிமைத்தளையறுத்து விடுதலை செய்தல்: தாயின் கனவுக்குரிய மகனாக இருந்தாரா? பின்னர் ஒரு நாள் தாயையும் தாயகத்தையும் கைவிட்ட புலம் பெயர்மகன் ஆகிவிடவில்லையா? இக்கேள்விகளின் செறிவானதொரு பதில்தான் கி.பி.அரவிந்தன் எனக் கருதுகிறேன்.
கிறிஸ்டோபர் பிரான்ஸிஸ் என்ற மாணவரை மட்டுமல்ல: ஆயிரக்கணக்கில் மாணவர்களையும் இளைஞர்களையும் போராளியாக்கி வளர்த்தது இலங்கை அரசு: தாயை, தந்தையை குடும்பத்தைப் பிரிந்து தனியனாய் வேற்று நாட்டுக்கு விரட்டியது அந்த இனவாத அரசுதான்.
1956-ல் பிரதமராக இருந்த (டபிள்யூ.பி.பண்டாரநாயகா) சிங்களம் மட்டும் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வந்தார். அப்போது வெகுண்டெழுந்த கொல்வின் ஆர்.டி.சில்வா என்ற இடதுசாரிக்கட்சித் தலைவர் “ஒரு மொழி என்றால் இரு நாடு; இரு மொழி என்றால் ஒரு நாடு” என நாடாளுமன்றில் முழங்கினார். அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதே ஆர்.டி.சில்வா தான் 1972 மே 22ல் இலங்கையின் “புதிய அரசியல் யாப்பை“ வரைந்து தந்தார். 1948-லிருந்து அதுவரை பிரித்தானிய சட்டவரைவாளரான சோல்பரியின் அரசியல் யாப்புத்தான் நடைமுறையில் இருந்தது. ஆர்.டி.சில்வா வரைந்த யாப்பினை -
“பெரும்பான்மை இனத்தவரின் சர்வாதிகாரம் உறுதி செய்யப்பட்ட எழுத்து இந்தப் புதிய யாப்பு“ என்றார் அரவிந்தன்.
இலங்கையின் புகழ்மிக்க இடதுசாரித் தலைவர்கள் இனவாத அலையால் அள்ளுண்டு போனது ஒரு மக்கள் துரோகக் கதை. அந்த துரோகமே தமிழரின் சோகக் கதையாக முள்ளிவாய்க்காலில் முடிந்தது. இங்குள்ள இடது சாரிகளும், குறிப்பாக தமிழ் நாட்டின் இடது சாரித் தலைமைகளும் இலங்கையின் இனவாத அலையில் தம்மை கரைத்துக்கொண்டு ஒத்து ஊதுகிற கேலிக் கூத்து இன்னமும் தொடர்கிறது.
ஒரு இடதுசாரி வரைந்து அரங்கேற்றிய அரசியல் யாப்பை எதிர்த்து மாணவப் பருவத்தில் துண்டுப் பிரசுரம் விநியோகித்து, கைதாகி, போராட்ட களத்தில் முதல் அரசியல்பதிவைத் தொடங்கினார் பிரான்சிஸ். எந்த அரசியல் கட்சியையும் சாராது, எல்லா தேர்தல் கட்சிகளையும் ஒதுக்கி தமிழ் மாணவர் பேரவை போராட்டத்தைத் தொடர்ந்தது. கிறிஸ்டோபர் உட்பட ‘தமிழ் மாணவர் பேரவையின்’ முன்னணித் தலைவர்கள் பலரும் கைது செய்யப்படுகின்றனர்.
1972-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள் கைது செய்யப்பட்ட போது, “கோட்டைச் சிறைக்கு” தன் மகனைக் காண அம்மா, இரண்டு வயது கடைசித் தங்கையைத் தூக்கிக் கொண்டு வந்திருந்தார். “நானொரு அரசியல் கைதியாக இருக்கிறேன். பெருமைப் படாமல் ஏனிந்த அம்மா இப்படி உடைந்து போயிருக்கிறார்” - என்றே பிரான்சிஸ் யோசித்திருக்கிறார். ஆனால் ஆறு மாதங்களின் பின் வெளியே வந்து வீடு சென்ற போது, போலீஸ் தேடுதல், சிறை, விசாரிப்பு என்பவை பற்றியதான சமூகக் கண்ணோட்டத்தின் யதார்த்தம் புரிந்தது.
ஆனால் அம்மா தன் மனோகரன் மீதான அன்பைக் குறைக்கவேயில்லை.
“1975-ஆம் ஆண்டு நான் இரண்டாம் முறையாகக் கைது செய்யப்பட்டபோது, மிகக் கொடிய வன்முறைவாதியாக சித்தரிக்கப்பட்டிருந்தேன். கைது செய்யப்பட்ட மறுநாள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தேன். மோசமான தாக்குதலுக்கு உள்ளாகி நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் கதிரையில் (நாற்காலி) உட்கார வைக்கப்பட்டு கேள்விக் கணைகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அம்மா ஓடியாடி வெயிலில் களைத்தபடி தெருவழியாக போலீஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஆம், நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மாவை அழைத்து வருவார்கள் என்பதை நான் அறிவேன். என்னை மறைவான இடத்துக்கு அனுப்ப மாட்டார்களா எனத் தவித்தேன். இந்தக் கோலத்தில் அம்மா என்னைப் பார்த்தால் ஏங்கிப் போவார் என்பது எனக்குத் தெரியும். அம்மாவின் பார்வையில் நான் தெரியவேண்டும் என்பதே போலீசாரின் நோக்கம். அம்மா வாசலில் வந்து நிற்கிறார். நான் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறேன். அவரின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?”
பெற்றோரின் முன் பிள்ளையை கொடுமைப்படுத்துதல், பிள்ளையின் முன் பெற்றோரைக் கொடுமைப்படுத்துதல் தான் அரச பயங்கரம்.
நிர்வாணமாக்கி, அம்மாவின் பார்வையில் நிற்கச் செய்த அன்று மாலை, அம்மா கொடுத்து விட்டுப் போன சாப்பாட்டு பார்சலை போலீசார் தந்தனர். அம்மா சாப்பாடு கட்டி வந்த பேப்பர் அவரது கைது பற்றிய செய்தியைத் தாங்கியிருந்த அன்றைய செய்தித்தாள். இப்படி எத்தனையோ தடவைகள் தானாகவே யோசித்து காரியங்கள் ஆற்றியுள்ளார் அம்மா. அம்மாவும் அரவிந்தனது போராளிக்காரியங்களும் இணைந்தே பயணித்துள்ளன. போராளி இல்லாத ஒரு தமிழ்க் குடும்பம் இல்லை. போராளியுடன் இணைவாக நகர்ந்திராத ஒரு குடும்பமும் இல்லை என்ற நிலை இருந்தது அன்றைய நாளில்.
தமிழ் மாணவர் பேரவையின் தலைமையின் போக்கில் வேறுபட்டு வெளியேறியோர் ’தமிழ் இளைஞர் பேரவையை’ உருவாக்குகிறார்கள். முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகக் குழுவில் ஒருவர் பிரான்சிஸ். “தமிழ் இளைஞர் பேரவை எந்தக் கட்சிக்கும் கட்டுப்படாத அமைப்பாக இருக்க வேண்டும்; தனியாக சுதந்திரமாக இயங்க வேண்டும்’ என்ற முடிவினை வந்தடைய வித்தூன்றியவர்களில் பிரான்சிஸ் முக்கியமானவர். மௌன ஊர்வலம், கறுப்புக்கொடிப் போராட்டம் என எல்லை விரிவடைந்துகொண்டே போனது. தமிழர்கள் நடாத்துவது சம உரிமைப் போராட்டமோ சலுகைப் போராட்டமோ அல்ல; சுதந்திரத் தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டம் என்ற கருத்தை மக்கள் முன் வைத்து போராட்டத்தை முனைப்படுத்தியவர்கள் தமிழ் இளைஞர் பேரவையினர்தாம்.
ஆயுதம் தாங்கிப் போராடும் அமைப்பு தோன்றாத காலம். இளைஞர்கள் சிலர் ஆங்காங்கு இரண்டு மூன்று பேர் என குழுக்குழுவாக இயங்கினர். பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் நின்று, தயிரிலிருந்து வெண்ணெய் கடைவது போல, அம்மக்களிடமிருந்து நிதி திரட்டுதல் என்னும் மேலான நடைமுறை புறமொதுக்கப்பட்ட தொடக்க நிலை அது. உருத்திரட்சி பெறாத உணர்வை உருத்திரட்சி பெறச் செய்ய நிதியும், அதன் வழிஆயுதமும் தேவைப்பட்டது. தவிர்க்க முடியாது ஏற்பட்ட பணத்தேவையை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் சிவகுமாரன் தலைமையில், பிரான்சிஸ், ஜீவராஜா , உரும்பிராய் மகேந்திரன் ஆகியோர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். பிடிபட்ட சிவகுமாரன் சயனைட் குடித்து விடுதலை வரலாற்றில் முதல் தற்கொலைப் போராளியாகிறார். தோல்வியில் முடிந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட பிரான்சிஸ் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராகிறார்.
1975-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கம் 1977 மார்ச் வரை சகல அரசியல் வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் 56 பேர் வெலிக்கடை சிறையில் அடைபட்டிருந்தனர். அவர்களில் கிறிஸ்டோபஸ் ஒருவர்; இந்த வழக்கு உட்பட , அவர் மீது தொடுக்கப்பட்ட ஏனைய வழக்குகளுக்கான பிடியாணைகள் 1977-ல் வீட்டிற்கு வந்த வண்ணமிருந்தன. முதல் வழக்கிற்கு சமாளிக்கப்பட்டது. அடுத்த பிணைக்கு காணி அல்லது ரொக்கப் பணம் பிணையாக வைக்கப்பட வேண்டும். காணி எதுவும் இருந்திருக்க வில்லை. நீதிமன்ற ஆணையிட்ட தொகையைச் செலுத்த முடியவில்லை. பழையபடி சிறைச்சாலை: புரட்டிய பணம் போதாத நிலையில் அம்மா தனது தாலிக்கொடி உட்பட வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று பிணை செலுத்த பத்து நாட்களாகிறது. இன்னும் இரண்டு வழக்குகள் மீதி இருக்கின்றன. அம்மா உண்மையில் களைத்துப் போயுள்ளார்.
“தம்பி, வழக்காடும் அந்தச் சக்தி நமக்கு இல்லை. என்ன செய்கிறதென்று நண்பர்களுடன் யோசி. முன்னைப் போல் தலைமறைவாக இருந்துகொண்டு ஊர்க் காரியங்களைப் பார்”
அதன் பின் எந்த வழக்குக்கும் அரவிந்தன் முகம் கொடுத்ததில்லை. அந்த வார்த்தைதான் அவரை வழி நடத்திற்று. வெளி வருவதைத் தவிர்த்தார். மறைந்து வாழ்ந்தார். புதிது புதிதாய் பெயர்கள் புனைந்தார். அந்த உறுதிதான், அவரைத் தமிழகத்துக்கு வழிநடத்தியது.
2
1978 -ல் தமிழக மண்ணில் வந்திறங்கியபோது அவர் சுந்தர்.சுந்தரைத் தமிழக மக்களுக்குத் தெரியும். ஈரோஸ் அமைப்பின் முன்னணி தளகர்த்தராக சுந்தர். தென்மாவட்டக்காரர்கள் அந்தப் பெயரால் ஈர்க்கப்பட்டார்கள். மதுரையில் தோழர் திரவியம் வீட்டில் தங்கியிருந்தார். ஈழவிடுதலைக்குப் பின்தளமாய் தமிழகத்தைக் ஆக்கிட - சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் என்று பாடுபட்டார்கள்.
“கிராமப்புறத்து விவசாயிகள், இளைஞர்கள்,கரையோர மீன்பிடித் தொளிலாளிகளும் எம்மீது மீது அனபு கொண்டனர். இவர்களுடன் கழிந்த எம் பொழுதுகள் இனிமையானவை. சென்னை நகரில் கூவம் நதிக்கரை ஓரமும், பக்கிங்காம் காலவாய்க் கரை ஓரமும் நாம் வாழ்ந்த பகுதிகளாய் இருந்தன. குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளே எமது வதிவிடங்களாய் ஆகின.இந்த மக்களிடம் தான் நாம் தமிழகத்தின் ஆத்மாவை, மனிதத்துவத்தை தரிசித்தோம். நாங்கள் அழுகையில் அவர்களும் அழுதார்கள். நாங்கள் சிரிக்கையில் அவர்களும் சிரித்தார்கள்.எம்முடன் அவர்கள் பட்டினி கிடந்தார்கள். எமது பெரும்பாலான சாப்பாட்டுப் பொழுதுகள் இவர்களுடன் இவர்களது இல்லங்களிலேயே நிகழ்ந்தன. ஒருவர் முதுகின் மேல் ஒருவர் ஏறி சுவரொட்டி ஒட்டினோம்.எங்களுக்கு அவசியமான நேரங்களில் இவர்கள் கடன் பட்டனர்.”
அனுபவங்களை தோழர் சுந்தர் நெடுகச் சொல்லிக் கொண்டு போவார்.
சென்னை தொடக்கம் திருச்செந்தூர் நிலப்பரப்பு வரை - ஈரோஸின் கருத்துப்பரப்பு நிலமாக அமைய சுந்தர் மையமாயிருந்தார்.
எந்தப் புள்ளியில், அவரும் நானும் அறிமுகமாகிக் கொண்டோம் என இன்னும் நினைவு கூற இயலவில்லை. 1978-ல் வெளியான எனது காடு சிறுகதைத் தொகுதியை வாசித்து விட்டு லயித்துப் போய், “காவியம்” என்று அரவிந்தன் சொன்னாதாகத் தெரிகிறது. 1981 நவம்பரில் மனஓசை என்னும் மக்கள் கலை இலக்கிய மாத இதழை நாங்கள் தொடங்கினோம். 1983 ஜீலை இனப்படுகொலை நிகழ்ந்த போது மனஓசை ஆகஸ்டு, செப்டம்பர் - ஆகிய இதழ்களை விடுதலைப் பிழம்பாக கொண்டு வந்தோம்: பாராட்டி அவர் விதந்தோதியது நினைவில் பதிந்துள்ளது.
1978 முதல் 1987 வரை அவர் தமிழ் மண்ணில் தங்கியிருந்தார். இந்திய அமைதிப்படை இங்கிருந்து ஈழமண்ணுக்குத் தனது விமானத்திலும் கப்பல்களிலும் கொண்டு போய்ப் போராளிகளை இறக்கிய போது, இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான போது - அதை எதிர்த்தார். இணையாமல் தனியாக ஈழம் போய் இறங்கினார். இராமேஸ்வரம் சென்று தன்னை அகதியாகப் பதிவு செய்து, கப்பலேறி காங்கேசன்துறை போய் இறங்குகிறார். 11 ஆண்டுகள் கழித்து தன் வீடு திரும்புதல். காதல் கொண்ட தோழியைத் திருமணம், தமிழகம் வந்தடைந்து மனைவி சுமதிக்கு தான் வாழ்ந்த, பணியாற்றிய இடங்கள், பழகிய நண்பர்கள் அறிமுகம் என்று அறிமுகப்படுத்தல். பின்னர் தாயகம் திரும்பி 1991-ல் மனைவியை விட்டுவிட்டுப் புலம்பெயர்தல்.
இன்னொரு நாடு சென்றடைந்தபின் இன்னொரு வாழ்வு, வேறொரு இதயம் என்று சிலர் உருமாறிக்கொள்கிற போதும், தாயகத்துக்காக கனலும் இதயத்துடன் அவரது பணிகள் தொடர்கின்றன. காம்பில் இருக்கிறபோது மட்டுமல்ல, காம்பிலிருந்து கழன்று உதிர்கிற போதும் சில பூக்கள் மணம் பரப்பியவாறு உதிரும். மூல மண்ணிலிருந்து இன்னொரு மண்ணுக்குப் பெயர்ந்து விட்டபோதும், மணம் வீசிய படியே இந்தக் கனல் மணக்கும் பூ வாழ்ந்தது.
2008-ல் ஈழத்தில் யுத்தம் உச்சத்தில் நின்றது. தமிழகத்தின் முதலமைச்சர் கருணாநிதி சென்னையில் மனிதச் சங்கிலிப் போராட்டம். அறிவித்தார்: சென்னை அண்ணா சாலையில் அனைத்துக் கட்சியினரும், ஆளுக்கொரு இடமாகத் தேர்வு செய்து நின்றனர். மழையில் நனைந்தபடி நாங்களும் கைகோர்த்தோம். காரில் அமர்ந்தபடி கருணாநிதி மழையில் நனைந்த மக்களைப் பார்த்து கையசைத்துச் சென்றார். ஈழத்து அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய “இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள ராச தந்திரம்“ என்னும் சிறு பிரசுரத்தை இணைய வழி எங்களுக்கு அனுப்பி வைத்தார் பாரிஸிலிருந்த அரவிந்தன். மனிதச் சங்கிலி கைகோர்ப்பில் எட்டுப் பக்கங்கள் கொண்ட அவ்வெளியீட்டை பத்தாயிரம் படிகள் அச்சிட்டு இலவச விநியோகம் செய்தோம்; தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி என்ற அமைப்பை, அப்போது நாங்கள் உருவாக்கியிருந்தோம். சென்னை மட்டுமல்லாது தமிழகமெங்கும் இலவசமாய் விநியோகித்தோம்.
இந்திய விரிவாக்க நிலைப்பாட்டையும், இந்நிலையில் போராளிக் குழுக்கள் கைக்கொள்ள வேண்டிய செயல்வகைகளையும் அலசி மு.திருநாவுக்கரசு எழுதிய “தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும்” என்னும் நூல் 1985-ல் யாழ்ப்பாணத்தில் வெளியானது அப்புத்தகம் “தென்னாசியாவின் புவி சார் அரசியல், இன அமைவுச் சூழலில் இலங்கையின் இனப்பிரச்சனையும் இந்தியாவின் நிலைமையும்’ என உள்ளடக்கத்தினை அடிக்குறிப்பிட்டுத் தொட்டுக் காட்டியது அந்நூல். யாழ்பல்கலைக் கழக மாணவர்கள் முயற்சியில் சுகந்தம் வெளியீடாய் 1985-ல் வெளியாயிற்று. 32 பக்கங்கள் உள்ள நூலினை இணைய வழியில் அனுப்பி வைத்தார் கி.பி. அரவிந்தன். அட்டையுடன் 36 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை ரூ10/= விலையில் அன்று தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் வெளியீடாக பலருக்கும் சென்றடையச் செய்தோம்.
“இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள ராச தந்திரம்” என்னும் சிறு வெளியீடும், “தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும்” என்னும் நூலும் இணைய வழி எங்களுக்குக்கு அனுப்பியது மட்டுமல்ல, அச்சிட்டு நூல் வடிவில் கொண்டுவருவதற்கான தொகையையும் அரவிந்தன் பாரீஸிலிருந்து சேகரித்து வழங்கினார்.
2009 முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் முள்வேலிமுகாமிலிருந்து தப்பி தமிழகம் வந்தடைந்திருந்தார் மு.திருநாவுக்கரசு. அவர் அகதியாய் வந்திறங்கியிருக்கிறார் என்ற சேதியை முதலில் எனக்குத் தந்தவர் கி.பி.அரவிந்தன். தாக்கல் வந்தடைந்ததும் மண்டபம் முகாமில் அவரை முதலில் சந்தித்தேன்; அகதியாய் வந்தடைந்தவரிடம் அவருடைய நூல் மறுபதிப்பு வெளியீட்டைக் காட்டியபோது, அவருக்கு அது ஒரு வியப்பு. இழப்பின் வலிக்கு சிறு ஒத்தடம்.
3
2008 சனவரி ஈழத்தில் யுத்தம் உச்சத்தில் ஆடிய போது, உலகத் தமிழர் பதட்டம் அடைந்திருந்த வேளை, சொற்பொழிவாற்ற என்னை அரவிந்தன் பிரான்சு அழைத்திருந்தார். 01.05.2008 முதல் 31.05.2008 வரை எனது பயணம் உறுதி செய்யப்பட்டிருந்தது. பிரான்சு, ஜெர்மனி, நார்வே ஆகிய நாடுகளில் உரையாற்றும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தார். புறப்படுவதற்கு முதல் நாள் காலை சென்னை நகரப் பேருந்தில் பயணம் செல்கையில் விபத்தாகி, இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. முதல் நாள் எலும்பு முறிவு, மறுநாள் எவ்வாறு பயணம் சாத்தியப்படும்? அந்த வேளையில் எனது பயணம் நிகழ்த்தப்பட்டிருக்குமானால் அரவிந்தனும், பிற நாடுகளில் கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்த நண்பர்களும் நிறைவு கண்டிருப்பார்கள், அவர்களின் அனைத்து ஏற்பாடுகளும் வீணாகிப் போயிற்று என எண்ணி குமைந்து உக்கிப் போனேன்.அகதிநிலை அகற்றப்படாத குடியுரிமை பெறாத ஒருவர், என்னை அழைக்கும் வரவழைப்புக் கடிதத்தை (sponsor letter) அளிக்க முடியாது. அங்குள்ள சுரேந்திரன் என்ற நண்பர் வரவழைப்புக் கடிதத்தை அனுப்பியிருந்தார்.
4
அவருடைய வாழ்வில் இரு குறுக்கீடுகள் நிகழ்வுற்றன;2009 மே 17 – அவர் விடுதலைப் போராட்ட வாழ்வில் அரிவாள் போட்ட முதல் குறுக்கீடு.
புற்றுநோய் - அவர் உடலியல் வாழ்வினை சன்னம் சன்னமாய் அறுத்த அடுத்த நிகழ்வு.
2012 முதல் அவரின் உடலை மவுனிக்கச் செய்தது நோய். அதுகூட அவரின் தொடர்பாடலைச் சுருக்கிடவில்லை. ஆனால் 2009-ம், அதன் பின்னான காலமும் அவரையும் உலகத்தமிழர் அனைவரையும் உறைந்து போக வைத்தது.
“நண்பர்களே! அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளேன். உங்கள் நிலையும் அதுவாகத்தான் இருக்கும். யாராலும் எதிர்வு கூறப்படாத வெளிக்குள் ஈழப்போராட்டம் தள்ளப்பட்டுள்ளது.
அசாத்தியங்கள் பலவற்றைச் சாத்தியமாக்கிக் காட்டிய நம்மவர்கள் எங்கே சறுக்கினார்கள்? நண்பர்களே, அதற்கான காரணங்கள் எனக்கு இன்னமும் துல்லியமாகப் பிடிபட மறுக்கின்றன... தேசியப் போராட்டத்தின் பலவீனமான அம்சங்கள் பற்றி தொடக்க காலத்திலேயே நம்மால் முன்வைக்கப்பட்டவைதான்... இப்பலவீனங்கள் கால நீட்சியில் சரி செய்யப்படும் என்றே நீங்களும் நானும் நம்பியிருந்தோம்.
பல வேளைகளில் தவறுகளிலிருந்து பாடம் கற்று முன்னகர்ந்து செல்கிற தோற்றத்தையே 90-ஆம் ஆண்டுக்குப் பின்னான போராட்டம் போக்குக் காட்டி நின்றது.”
போர்க்களத் தலைமை கொண்டோரின் அனைத்து நடைமுறைகளையும் ஏற்று நின்றார். ”பெருந்திரளான மக்களை அமைப்பு வயமாக்கி கட்சியை, போர்ப் படையை அதனுள்ளிருந்து உருவாக்கி எதிரியைத் தனிமைப்படுத்தும் ஐக்கிய முன்னணித் தந்திரத்தாலேயே வெற்றிகள் சாதிக்கப்பட்டிருக்கின்றன“ என்ற கருத்தினை உணர்ந்திருந்த போதும் அவரால் வெளிப்படுத்த இயலவில்லை. வெளிப்படுத்தும் தருணம் அதுவல்ல, அது வேறொரு திசைக்கு இட்டுச் செல்லும் என்பதில் உறுதி கொண்டிருந்தார். “தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டத்திற்குத் தலைமை அளித்துப் போராட்டத்தை நெறிப்படுத்தி வருகிறார்கள். ஈழப் போராட்டத்தின் வெற்றியிலேயே உலகத் தமிழினத்தின் வாழ்வும் வரலாறும் தங்கியுள்ளது. ஏனெனில் வரலாறு என்பதே வெற்றி பெற்றவர்களுக்குத்தான்” என அக்டோபர் 2008-லும் எழுதி நின்றார்.
வெளிப்படையாய், எதிர் நிலையாய் ஒரு வார்த்தை என்னிடம் மட்டுமல்ல, எவரிடமும் அவர் உரைத்ததில்லை.
2009-ன் பின் நவம்பர் 7-ல் ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்:
“தோழர் என்னாவாயிற்று? ஏதொரு தொடர்பும் இல்லையே, ஏன்? 8-ந் தேதி காலை சென்னை திரும்புவேன். எனவே கைபேசியில் தொடர்பு கொள்க”
“வணக்கம். உங்களுடன் தொடர்புகொண்டு வெகுநாளாயிற்று.
நான் இங்கு வேறு பிரச்சினைகளில் கவனத்தை அதிகரித்து உள்ளேன்.
குறிப்பாக ’புதினம் தளம்’ பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ என குருட்டுத் தனமாக நம்பும் கும்பலால் அடாவடித்தனமாக நிறுத்தப் பட்டிருக்கிறது.
ஈழத் தமிழரிடையேயான பிளவுகள், குழப்பங்கள் நீங்கள் அறிந்தது தானே.
அதற்கான மாற்றுத் தளம் வெளிக்கொணரும் வேலைகளில் எனது கவனத்தைக் குவித்துள்ளேன்.
நான் ஆறுதலாகத் தொடர்பு கொள்கிறேன்.”
8 நவம்பர் 2009, 1:41 மணிக்கு பதில் உடன் கிடைத்தது.
அவர் நடத்திய ’புதினம்’ என்ற இணைய தளம் இடைநின்ற காரணம் விளங்கிற்று. தமிழ்நாட்டிலுள்ள தமிழ்தேசியத் தலைவர்களில் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு “அரவிந்தனுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்” எனத் தொலைபேசியில் தெரிவித்தார். இரண்டையும் இணைத்துப் பொருள் புரிந்து கொள்ள என்னால் முடிந்தது.
எந்த ஒரு முடிவும் அவரை மவுனிக்கச் செய்திடவில்லை. ‘புதினம்’ நிறுத்தப் பட்டு, அவ்விடத்தில் ”புதினப் பலகை” என்ற இணையதளம் தொடங்கிய கி.பி.அரவிந்தன் தனது கருத்தாடலைத் தொடர்ந்தார்.
மீதமிருக்கும் கனவு பற்றி முன்னிலும் ஆழமாய் விதை பதித்தல், ஓங்கிக் குரலெழுப்புதல் காலம் நமக்களித்த கட்டளை எனக் கருதினார்.
“ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை விடுதலைப் புலிகளுடன் தோன்றியதொன்றல்ல – அவர்களுடனேயே அழிந்து போவதற்கு. அஞ்சலோட்டத் தொடரொன்றில் அவர்களும் அந்த நெருப்பேந்தி ஓடினார்கள். இனியும் அந்த அஞ்சலோட்டம் தொடரும். நம் பணி அதுவாகத்தான் இருக்க வேண்டும்.”
“நாம் அவர்கள் அருகிலேயே இருந்தபோதும், எமது கருத்துக்களை அவர்கள் பொருட்படுத்தியதில்லை, உள்வாங்கியதில்லை என்பது இப்போது நிரூபணமாகி உள்ளது.” (இருப்பும் விருப்பும்: பக்-28)
“சனநாயகம், வெளிப்படை என்பவையே நமது அடிப்படைகளாக மாற வேண்டும்.
சனநாயகம் என நான் இங்கு குறிப்பிடுவது வெறும் தேர்தல் சனநாயகத்தை அல்ல; நமது உளப் பண்பாட்டையே சனநாயகமாக்குதல்” என்கிறார்.
ஈழ விடுதலை என்னும் “கனவின் மீதி” தொடருகிறது: அசாத்தியங்களைச் சாத்தியமாக்கிக் காட்டுவதுதான் போராட்டம் என்பது அவர் முடிவு.
”ஆயுதபலம் மிக்கவர்களே தோற்றுவிட்டார்களே என்பதற்காக நாமும் வாளாவிருக்க முடியுமா? அரசியல் போராட்டத்திற்கு ஆயுதம் அல்லாத வழிமுறைகளும் உண்டல்லவா?
மூன்றாம் கட்டத்துள் நுழைந்திருக்கும் ஈழப்போராட்டம் நிச்சயம் ஆயுதத்தை முன்னிறுத்திச் செல்லாது என்றே நம்புகிறேன்.”
மக்களின் உணர்வுகளை, எண்ணங்களை வெளிப்படுத்தும் கலைஞன் ஒருபோதும் உண்மைகளுக்கு முரணாய்ப் போவதில்லை. உண்மையிலிருந்தே சொற்களைக் கோர்க்கிறான். முந்தைய நடைமுறைகளிலிருந்த புனைவுச் சொற்களை உடைக்கிறான் புனைவு, அதீதம், உணர்ச்சிவய சொற்களை உடைத்தல் என்ற இந்தச் செயல் மனசிலிருந்து தொடங்க வேண்டும்.
’சொற்களை உடைத்து
நாமெழா வரைக்கும்
நமக்கு விடிவில்லை’ என்கிறார் அரவிந்தன்.
- தாய்வீடு (ஏப்ரல் 2015)
கருத்துகள்
கருத்துரையிடுக