எதிரேறு எல்லாளன்


இனவாத சிங்க இலங்கையின் கையில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு “லட்டு” கொடுத்தது போல ஆகிப் போனது. ’லட்டை‘ வாயில் அதக்கிக் கொண்டு, ஆதாளி போட்டு இலங்கை பண்ணும் சூழ்ச்சிகள் செரிமானத்துக்கு – அய்.நா மன்றம் சுக்குக் கஷாயம் போட்டுக்கொடுத்து உற்ற துணை செய்து வருகிறது.

“இலங்கையில் நடைபெறும் புணரமைப்பு, மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து தாக்கல் செய்ய இரண்டு ஆண்டுகள் காலநீட்டிப்பு கேட்டு, இலங்கை அரசு கொண்டு வந்த தீர்மானம், 2017 மார்ச் 23–ல் ஐ.நா மனித உரிமை அமைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.”

உலகவல்லரசான அமெரிக்காவும், தென்கிழக்கு ஆசியாவின் ’தாதாவாய்‘ உருவாகிவிட்ட இந்தியாவும் இத்தீர்மானம் நிறைவேற உதவியுள்ளன.

அய்க்கிய நாடுகள் சபை என்பது என்ன? பேரறிஞர் பெர்னார்ட்ஷா ஒருமுறை சொன்னார் “இது அய்க்கிய நாடுகள் சபையல்ல; அயோக்கிய நாடுகள் சபை”.

பெர்னார்ட்ஷாவின் பொய்யாமொழிக்கு துணை விளக்கத்தைச் சேர்த்தால், பொருத்தமாக அமையும் என எண்ணுகிறேன். “இது அய்க்கிய நாடுகள் சபையல்ல; அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை” என்று சொன்னால் பிழையில்லை. அமெரிக்க எல்லைக்குள் வருகிற மாநிலங்களை உள்ளடக்கி மட்டும் அல்ல, இந்தியா போன்ற அனைத்து நாடுகளையும் உள்ளடக்கி ‘அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை’ என இனி அமெரிக்காவை அழைக்கலாம்.

தமிழ் இனம், தமிழ் மொழி, பண்பாடு – என தமிழ் என்ற உச்சரிப்பு இம்மியும் இல்லாமல் மனித உரிமை அமைப்பில் தீர்மானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்து பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் ஒரு இடத்திலும் ‘தமிழ்’ என்ற வார்த்தை இல்லை. இனம், மொழி, பண்பாடு - இருப்பதாக ஒப்புக் கொண்டால், நாடு என ஒன்று இருப்பதாக ஆகிப்போகும். வேண்டாத “விருதாவெட்டிச் சனியனை” வீட்டுக்குள் கூட்டிவந்ததுபோல் ஆகிவிடும். எமக்கு என்று ஒருநாடு இருக்கிறது என்னும் கனவு இருப்பின் அதைக் கைகழுவுங்கள்; அந்தத் திசைக்குத் தலைவைத்துப் படுக்காதீர்கள் என்றிருக்கிறது இந்தஅறிக்கை மூலம் ஐ.நா மன்றம். உலகின் நிலையான அமைதிக்காக இயங்கும் மன்றம் அது.

“இந்த உலகத்தில் நிலையான அமைதியைக் கொண்டுவர, இப்பூமியின் முகத்திலிருந்து, இன்னும் எத்தனை நாடுகளை நீங்கள் அழிக்கப் போகிறீர்கள்?”

சதத் ஹசன் மாண்டோ என்ற இந்தியாவில் வாழ்ந்த உருது எழுத்தாளர் கேட்டார். ஐ.நா போன்ற அராஜக அமைப்புகளை, வல்லரசுகளை நோக்கித்தான் அவர் இக்கேள்வி எழுப்பினார்.

ஒருமுறை ஒரு குழந்தை அவரிடம் உலக வரைபடத்தை வரைந்துதருமாறு கேட்டது: “முதலில் இந்த உலகில் நிலைத்திருக்கக் கூடிய நாடுகளைக் கண்டுபிடி” என்றாராம் மாண்டோ. நிலைத்திருக்கக் கூடிய நாடுகளையும் உயிரற்றதாய் அழிக்கமுண்டும் ஆதிக்க வெறியர்க்கு அடைக்கல பூமி முதலாவது இந்த அமெரிக்க ஐக்கிய நாடு. இரண்டாவது அதன் வாலாக ஆடும் ஐ.நா இலங்கையின் வஞ்சக எண்ணத்துக்கு துணைசெய்வதில், அமெரிக்காவும் இந்தியாவும் முதன்மை வகித்து வருகின்றன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியதாய்த் தொடர்ந்த இலங்கையின் வஞ்சகத்தை மக்கள் படைதிரட்டி வீழ்த்திய வீரன் எல்லாளன். 22 ஆண்டுகள் ஆண்டபின் சிங்கள வஞ்சகத்தினால் வீழ்கிறான். ”எதிரேறு எல்லாளன்” என்ற நாடகப் பனுவலிலிருந்து, நாம் “கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகளில் முதலாவது - இலங்கையிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தமிழர்கள் இலங்கையுடன் மல்லுக்கட்டுவது மட்டுமல்ல, இனி ஐ.நா மன்றத்துடனும் மல்லுக்கட்டி ஆக வேண்டும். எதிரேறு எல்லாளன் விட்டுச் சென்ற - முற்றுப் பெறா போர்த்தடம் இது!

2

“யார் எழுதுகிறார்கள் என்பதல்ல; என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து நம் முன்னால் வைக்கும் மிகப் பெரிய சவால்” – என்ற அர்த்தச் செறிவுள்ள வாசகத்தை இங்கு பொருத்திக் கொள்வோம். என்ன எழுதப்படுகிறது என்பதை முன்னிறுத்தி, யார் எழுதுகிறவர் என்பதை அடையாளப்படுத்தும் ஒரு தர்க்க ரீதியான எளிய சூத்திரம் இது.

பெருக்கெடுத்து இயற்கையாய் ஓடிவரும் நீரோடையை – எப்போதும் தங்களுக்கானதாய் மடைமாற்ற ஆதிக்கமேலாண் சக்திகள் தொடர்ந்து முயலுகின்றன. இக்காலங்களில் எல்லாம் வரலாற்றின் ஓரத்தில் மக்கள் பார்வையாளராய் ஒதுக்கப்படுதல் நிகழும். இவ்விடத்தில் எழுத்து என்னவாக எழுதப்படுகிறது என்பதும், எழுதுபவர் என்ன எழுதுகிறார் என்பதும் குறிக்கப்படும்.

அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் இயல்பானவர்; தன்மையானவர்; எவரொருவர் மனிதராய் இருக்கிறாரோ, அவர் இயல்பாகவே மக்களுக்காகத் துடிப்பார். மானுடகுலம் எங்கெங்கு அடிவாங்குகிறதோ அங்கெல்லாம் காயப்பட்டு நிற்பார்; அகதியாக இருக்கிறபோதும் நெஞ்சுதளும்பிடும் மனிதவிடுதலை நேசிப்புடன் இயங்குவதும், நெஞ்சுநிறைந்த மானுட நேயத்தைச் சுமந்துள்ள போதே அகதி வாழ்வு என்னும் வலியைச் சுமந்து திரிவதும் ஈழத்தமிழருக்கு விதிக்கப்பட்ட வாழ்வியல் முரண். இவர்களில் ஒருவர் என் இனிய கலை நண்பர் ச.மிக்கேல்தாஸ். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் சிலர் தவிர்த்து, பலர் தாயகஅரசியல் மீதுநேசிப்பும் தீர்வைநோக்கிய முன்னெடுப்பும் கொண்டியங்குகிறார்கள் என்பதின் வலுவான கலை நிரூபணம் மிக்கேல்தாஸும் - அவரது “எதிரேறு எல்லாளன்” தென்மோடிக் கூத்தும்.

மாவீரன் ’பண்டாரவன்னியன் – கண்ணகி’ தென்மோடிக் கூத்து நூல் வெளியீடு பிப்ரவரி, 2015ல் தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து 30-08-2015ல் நோர்வே நாட்டின் பர்ன் நகரில் கண்ணகி தென்மோடிக் கூத்து அரங்கேற்றம். பர்ன் நகரில் அண்ணாவியார் ச.ஜெயராஜாவின் இல்லம் பறப்பதற்காக நிற்கும் ஒரு ஆகாய விமானம் போல், சிறிய மலைப் பிஞ்சின் மேல் நின்றிருந்தது. எழிலான வடிவமைப்பு கொண்ட கட்டிடக் கலை மட்டுமல்ல; எத்தனை பேரானாலும் வந்து செல்ல அத்தனை வசதியாய் கட்டியமைக்கப்பட்டிருந்த நேர்த்தியினைக் கண்டேன். என்னை வியப்பில் ஆழ்த்தியது அது மட்டுமன்று: இல்லத்தின் அன்பர்கள் நண்பர் ஜெயராஜா, அவருடைய துணைவியார் ஜோதி, மகன் அநீக்சன் போன்றோரின் விருந்தோம்பும் பண்பைக் கண்டு வியந்தோம். அவர்களுடன் தோளோடு தோள் நின்று உதவி செய்தனர் பிரான்சிலிருந்து வந்து நாடகத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனாகத் தொன்றிய ரோபின்சன், கண்ணகியாக வேடமேற்று நடித்த அவருடைய துணைவியார் ஆகியோர்.

கண்ணகி – நாடக அரங்கேற்ற நிகழ்வுக்கு சில நாளிருந்தபோதே - அடுத்த கூத்துப் பனுவல் ‘எதிரேறு எல்லாளனுக்குப்’ பதியம் போட ஆரம்பித்திருந்தார் அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ். ஜெயராஜா - ஜோதி இல்லத்தில் தங்கியிருந்தபோது சில வசனக் குறிப்புகளை வாசிக்க என் வசம் தந்தார். சில பாடல்களை மெட்டமைத்துப் பாடிக் காட்டினார்.

அவர் அன்று ஏந்திய விதை, முளைக்கும் மண் தேடிப் பதிந்து இப்போது நூலாய் ஆகியுள்ளது. நூலாக்க முயற்சிக்கு – தொலைபேசி வழி ஆலோசனைகளும், மின்னஞ்சல்வழி செய்தி இடுகைகளும், கட்டுரைகளும் வழங்கிக் கொண்டிருந்தார் நண்பர் மிக்கேல்தாஸ். ‘எதிரேறு எல்லாளன்’ – நூல் வெளியீடு நிகழ்வுற்றதும், பின்னர் தமிழகத்தில் சில இடங்களில், இக்கூத்து அரங்கேறுதல் நிகழும் என என்னால் உறுதிபடச் சொல்ல இயலும்.

நூலினை – ஒரு பதிப்பாளர் என்ற முறையில் மட்டுமன்று, ஈழவிடுதலைப் போரின் விசுவாசி என்ற உயர் தகுதியில் தன்னை நிறுத்தி செம்மையாக அச்சிட்டு முடித்த தோழமைப் பதிப்பகம் பூபதி என்றென்றும் நன்றிக்குரியவர். என்றென்றும் என்ற வார்த்தையை நான் ஆழ்ந்த கவனிப்புடனே பயன்படுத்துகிறேன். தமிழீழ விடுதலைப் போரினுக்காக – அது தொடர்பில் அவர் வெளிக் கொணர்ந்த நூற்களின் எண்ணிக்கை நீளமானது.

சென்ற ஆண்டு ”மாவீரன் பண்டார வன்னியன் - கண்ணகி” தென்மோடிக் கூத்து நூல் வெளியீட்டில் மக்கள் பாவலர் இன்குலாப் பங்கேற்று உரை நிகழ்த்தினார். நீரழிவு நோயால் அவரது வலதுகால் நீக்கம் செய்யப்படுதற்கு சில நாட்கள் முன் அவர் கலந்து கொண்ட நிகழ்வு அது. இன்று அந்த மக்கள் கவி நம்முடன் இல்லை. இன்குலாப் ஒரு சாகாத வானம். அவர் எழுதிய கவிதைகளால் நினைக்கப்படுவார்: எழுதிய எழுத்துக்களால் நினைக்கப் படுவார். எல்லாவற்றினும் மேலாய் அவர் வாழ்ந்த வாழ்க்கையால் நினைக்கப்படுவார்.

வாழும் காலத்திலேயே கலைஞர்கள் கனம் பண்ணுதலுக்கும் கவுரவித்தலுக்கும் உரியவர்கள் என்பதை முன்னுணர்ந்து புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சார்பில் அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸின் கலை ஊழியத்தைப் பாராட்டி ”கூத்துக் கலைச் செம்மல்” என்னும் விருதினை வழங்கிடக் காரணமானவர் மண்ணின் கலைஞர், முனைவர் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன். அவரும் இன்றில்லை எம்முடன்.

நேற்றிருந்து இன்று எம்முடன் இல்லாமல் மறைந்த இவ்விரு ஆளுமைகளையும் இந்நூல் வெளிப்படும் வேளை நினைவு கூறுதல் எமக்கிடப்பட்ட பணி எனக் கருதுகிறேன்.

இனி ‘எதிரேறு எல்லாளன்’ உங்கள் கைகள் வழியாய் கருத்தை வசப்படுத்தி எல்லோரோடும் உரையாடுவார்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌