இல்லாத இந்தியமா, இயங்கும் தமிழியமா?

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் “திருக்குறள்மாநாடு”
- சூரியதீபன்



முதலில் திருக்குறள் மாநாடு (ஆகஸ்டு 12, 2019) நடைபெற்ற சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கிலிருந்து தொடங்கலாம். அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அரங்கங்கள் தவிர்த்து தனியார் மண்டபங்கள், அரங்குகளில் கருத்தரங்கம், மாநாடு நடத்த காவல்துறையின் அனுமதிபெற வேண்டியதில்லை. உலகத்தில் மிக நீண்ட மூக்குடைய தமிழகக் காவல்துறை மோப்பம் பிடித்து விடுவதில் வல்லமையுடையது. எந்த நிகழ்வுக்கும் தடைவிதித்திடும் போக்குக் கொண்டது. காமராசர் அரங்கத்தில் இதுவரை நடந்த நிகழ்வு எதற்கும் அரங்க உரிமையாளர்களாயினும், ஏற்பாட்டாளர்களாயினும் அனுமதி பெறும் வழக்கம் இருந்ததில்லை. திருக்குறள் மாநாடு நடத்தவிருந்தோரை காவல்நிலையம் வரழைத்து, பங்கேற்போர், உரையாற்றுவோர் என ஒவ்வொரு பெயரையும் கேட்டறிந்தது மாநாட்டின் நோக்கம் விசாரிக்கப்பட்டது. தேசத்துரோகமான உரைகள் நிகழ்த்தப்படாது, தேசத்தில் கலகச் சூழல் உண்டாக்க ஏதுவாகாமல் அமைதியாக நடக்கும் என உறுதிமொழி பெற்றபின்னர் அனுமதித்தனர்.

’மீத்தேன்’ முதல் தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் தொடர்பான ஒன்றுகூடல் அனைத்துக்கும் இது வழக்கமான நடைமுறை! அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவதும் வழக்கமான நடைமுறைதான். திருக்குறள் மாநாடு நடத்திட இயலாமல் தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்திய ’அழுத்த யுக்தி’ (Pressure Tactics) வெற்றியடைவில்லையெனில் இருகாரணங்கள்:

ஒன்று – திருக்குறள்மாநாடு என்ற பெயர்.
இரண்டு – காமராசர் அரங்கின் அரசியல் பின்புலம்.

பேச்சுரிமை, கருத்துரிமை, போராட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன. விவாத வெளிச்சம் மண்ணைத் தீண்டாத வகையில், டெல்லியிலிருந்து பனிமூட்டம் படரவிடப்படுகிறது. ஒற்றைத்தேசம் – ஒற்றை மதம் - ஒற்றைப்பண்பாடு – ஒற்றை மொழி – என்ற மேலாண்மை நோக்கி இந்தியா பீடுநடை போடுகிறது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் தனிப் பெரும்பான்மை பா.ச.க கட்சியினர்; பெரும்பான்மை சனநாயகம் என்பது பிறநாடுகளில் அர்த்தம் வேறு. இந்தியாவில் அது சர்வாதிகாரம். பெரும்பான்மை சனநாயகத்தின் போதையேறிய இந்துத்வ அரசு, திகிடுமுகிடான சட்டங்களை நிறைவேற்றுகிறது.

இத்தருணத்தில் இப்படியொரு மாநாடு நடத்துதல் ஒரு போர்த்தந்திர உத்தியாகக் கருதப்படுகிறது.


பொதுவெளியில் கருத்துக்கள் வைக்கும் குரல்கள் வெட்டப்படுகையில், உரிமை இழந்த நிலவெக்கை மேலெழுவதை, மகிழுந்து, பேருந்து, வேன், இருசக்கர வாகனங்கள் என எவ்வளவுபேர் தமிழகமெங்கிருந்தும் வர இயலுமோ, அவ்வளவு பேர் மாநாட்டில் திரண்டு நிரூபணம் செய்தனர். பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு என்னும் பெயரில் ஏறக்குறைய 125-க்கு மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டன. தமிழ்ச் சமூகத்தின் பல பகுதிகள், பல பிரச்சினைகள், பிரச்சினையின் வெப்ப உணர்வு மட்டுமல்ல, செயற்பாட்டுகளுடன் இயங்குபவை இச்சிறு இயக்கங்கள்.

“ஆரியத்தை வீழ்த்த, தமிழியத்தைக் காக்க” – திருக்குறள் மாநாடு என்ற முழக்கம் அழைப்பிதழில் முன்னின்றது. முழக்கத்துக்கு மூச்சு எது? திருக்குறள்!

“ஆரியப் பித்தலாட்டங்களுக்குச் சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான்” - பெரியார் வாசகம் அழைப்பிதழில் முன்பக்கம் பளிச்சிட்டது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற “பிராமணர்கள் உலகமாநாட்டில்” உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் பங்கெடுத்து, “பிறப்பில் உயர்ந்தவன் பிராமணன்; அவன் எல்லோருக்கும் மேலாகத் தலைமை தாங்க வேண்டியவன். என்றைக்கும் தலைமைப் பொறுப்பைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்” என்று உரையாற்றி, சாதியரசர்களாகத் காட்டிக்கொண்டனர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என மானுடகுலத்துக்கு வள்ளுவர் நிகழ்த்திய அறிவுரையை நீதிபதிகள் கொன்று வீசினர்.

நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கு எதிரான ‘அரசு’ என்ற அமைப்புக்கும், “நீதிபதிகள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், தாசில்தார்கள், காவல்துறையினர் இவர்களுக்கு எல்லாம் திருக்குறள் ஒன்றுபோதும்” எனப் பெரியார் பரிந்துரை செய்தது ஏனென இப்போது தெளிவாகிறது.

இன்று இந்தியாவில் 24 ஆயிரம்பேருக்கு மட்டுமே சமஸ்கிருதம் பேச்சு மொழி; அந்த மொழி மரணித்துப் போனதற்கு மக்களின் நாவில் புழங்காதது முதன்மைக் காரணம். அதைப் பேச்சு மொழியாக மீட்டும் உயிர்த்தெழச் செய்ய குஜராத் மாநிலத்தில் ஐந்து கிராமங்களைத் தத்தெடுத்துள்ளது அம்மாநில அரசு.

சமஸ்கிருதப் புகழ்பாடுகிற, பெருமிதம் கொள்கிற புதிய தேசிய கல்விக்கொள்கை – 2019, அர்த்தசாத்திரம், பஞ்ச தந்திரக்கதைகள், பகவத்கீதை – கல்விப் புரட்சியைக் கொண்டுவருவன எனப் பேசுகிறது. பதஞ்சலி, பாணினி, மாதவா, பாஸ்கராச்சாரியார், ஆரியப்பட்டர், சாணக்கியர் போன்றோரது மேற்கோள்கள் முன்மொழியப்பட்டு, அறிவின் திறவுகோல்களை இவர்கள் கையில் வைத்திருக்கிறார்கள் என்கிறது. தொல்காப்பியர், திருவள்ளுவர் பெயர்கள் சுட்டப்படவில்லை. இப்படியே இவர்கள் ஒவ்வொன்றாய் தன் மூப்பெடுத்துச் செய்து, தென்கோடித் தமிழையும் , தமிழகத்தையும் கடலுக்குள் தள்ளி ’இந்தியம்’ ஒன்றே என ஆக்கிவிடுவார்கள் என்ற சினம், மாநாட்டில் நிகழ்த்திய உரைகளில் வெளிப்பட்டதைக் காண, கேட்க முடிந்தது. ஒவ்வொருவரும் திருக்குறளை, பெரியாரியத்தை மையமிட்டே உரை நிகழ்த்தினர். மார்க்சியம், அம்பேத்கரியம், தேசியம், பகுத்தறிவு அனைத்துக்குமான கூறுகள் குறளியமாய், பெரியாரியமாய்த் திரட்சிக் கொண்டுள்ளதனை வெளிப்படுத்தினர்.

“திருக்குறள் எழுதப்பட்டு 2050 ஆண்டுகள் ஆகிவிட்டன; இருப்பினும் தமிழ்நாட்டின் தேசிய அடையாளமாகத் திருக்குறளும் திருவள்ளுவரும் முன்னிறுத்தப்படவில்லை” என்னும் ஆதங்கம் அரங்கில் நிலவிற்று.

“உலகின் வேறு எந்த மொழியிலும் இப்படியான ஓர் அறநூல் திருக்குறளுக்கு முன்பு தோன்றிடவில்லை. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதங்கள், மனு போன்றவையெல்லாம் ஏற்றத்தாழ்வுகளை வலியுறுத்தும் வருணக் கருத்துக்களைப் பரப்பியவை. திருக்குறள் ஒன்றுதான் அந்தக் காலத்தில் ‘சமன்மை’ என்கிற அறக்கருத்தை வலியுறுத்தியது. இந்த அறநூலை, இனக்காப்பு நூலை, தமிழ்த்தேசிய நூலைக் காப்பது தமிழரின்கடமை, தமிழ்நாட்டினரின் கடமை” என நோக்கவுரையாய், வாழ்த்துரையாய், கருத்துரையாய், அரசியல் அரங்கச் சிறப்புரையாய் வெளிப்பட, முத்தாய்ப்பாய் ‘சூளுரை’யோடு நிறைவுபெற்றது.


தமிழின் பலதுறைகளில் சாதனை நிகழ்த்திய பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், பதிப்பாளர்கள் என 60-கும் மேற்பட்ட தமிழ் ஊழியக்காரர்கள் சிறப்புச் செய்யப்பட்ட நிகழ்வு நெஞ்சை நெகிழவைத்தது.
  • திருக்குறளை இயக்கப்படுத்திச் செயல்படுத்திடுவோம்,
  • திருக்குறளை தமிழ்நாட்டின் தேசிய நூலாக தமிழ்நாட்டு அரசு அறிவிக்க வேண்டும்,
  • திருவளுவரைஉள்ளடக்கித் தமிழ்நாட்டு இலச்சினையை மாற்றியமைக்க வேண்டும்.
  • குறள்விழா ஒன்றைப் பண்பாட்டு விழாவாக தமிழர்கள் முன்னெடுத்துக் கொண்டாட வேண்டும்.
  • தமிழர்களின் குடும்ப நடைமுறைகளை திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு அமைத்துக் கொள்ளவேண்டும்
- போன்ற தீர்மானங்கள் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டு உரையை இங்கு காணலாம்.

- காக்ககைச் சிறகுனிலே  (செப்டெம்பர் 2019)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌