கவி வாக்கு


கவி வாக்குப் பலிக்குமா?

பலிக்கும் என்று தோன்றுகிறது.

கோடாங்கி, குறிகாரன், சிவகாரன் (சிவனுக்கு அடிமைப்பட்டவன்) சொல்வதெல்லாம் பலிக்கும் என்ற நம்பிக்கை சனத்துக்கு இருக்கிறது. பொதுசன வாழ்க்கை நம்பிக்கை மீது கட்டப்பட்டிருக்கிறது. அரச மரத்தைச் சுற்றி வந்து அடிவயித்தைத் தடவிப்பார்க்கிற ‘பிள்ளைப் பைத்தியங்களை’ இந்த நம்பிக்கைதான் தாங்கிக் கொண்டுள்ளது; தோட்டப்பந்தலில் தொங்கும் நாட்டுப்புடலங்காய் பெரிதாவதற்கு நுனியில் சிறுகல் கட்டி தொங்கவிடுவார்கள். காய் பெரிதாகி வளா்வது போல, நம்பிக்கையும் பெரிய காய்ப்புக் காய்த்துப் பலன் தரும் என எண்ணுகிறார்கள்.

கோடாங்கி, குறிசொல்பவன் வாக்கு அல்ல, கவி அல்லது எழுத்தாளன் வாக்கு. மக்களின் நம்பிக்கைகள் மீது ‘பதக்கால் உழவு அடித்து’ பாடு பார்த்துக் கொள்கிறவர்கள் அவா்கள். கவி அல்லது எழுத்தாளன் சமூகத்தின் நடப்புகளை அலசி, ஆழ உழவடித்து சமூகத்தின் மனச் சாட்சியாக இயங்குகிற ஆள்.

“ஒரு எழுத்தாளன் பழங்கால ஞானி போல் சமூகத்தின் மனச்சாட்சியாக விளங்க வல்லவன்” என்பார் கென்ய எழுத்தாளா் கூகி வா தியாங்கோ.

நான் ஒரு சிறுகதை எழுத்தாளன்; கட்டுரை, கவிதை, உருவகக் கதை, சிறுசிறு நாடகங்கள் என்று அவ்வப்போது மடைமாறி உட்கார்ந்து கொள்வதுண்டு. ஓட்டப்பந்தயத்தில் கடைசிவரை ஒரே வட்டத்திலேயே (Track) ஓடி முடிக்கவேண்டும்; ’டிராக்’ மாறி ஓடினால் வெற்றிக்கோட்டைத் தொட்டாலும் செல்லுபடியாகாது என்பது விதி. நான் ஓடிப் பழக்கப்பட்ட இலக்கியத் தடத்தில் ஓடாது, வேறு தடத்தில் ஓடிப் பழகியது வெற்றியா, தோல்வியா என நான் சொல்ல இயலாது. ஒரு கவிதை மட்டும் சரியாக வந்திருந்தது.
பிறந்தநாள்
பெருந்தகைக்குப் பிறந்தநாள்,
மாலை, மலர்க்கொத்து
சால்வை, சரிகைப் பட்டு
சதிர்நிறை புகழாரம்

சாதனைப் பயிர் கொழுக்க
இட்ட உரம், அடிமண்
முகவரி எது?

புலப்பம் கொள்ளாமல்
சிறு பொய் முணு முணுப்பும்
கொட்டாமல்,
இருள்தின்று,
எரிந்த மெழுகுவர்த்தியின்
ஒளிவட்டத்தில் யார்?

பேரறிஞர், பெருங்கலைஞன்
நாக்குச் சுழட்டலில்,
நானிலத்தை சுருட்டும் நாவலன்,
தலைகீழாய்ப் பாய்ந்து
மூச்சடக்கி முத்தெடுத்து நிமிரும்
பேனாவின் பிரும்மா
ஓவியன், கோபுரச் சிற்பி
இத்தனை பெயர்களும் தந்தாய்

உனக்கெனக் கொண்டது
ஒரு பெயர் மட்டுமே
‘பெண்’

ஒரு முகமும் அற்று
ஆண் முகத்துள் அடங்கும்
உன் முகம்.

நுழையவில்லை
உன் சமையறைச் சன்னலில்
உலகெலாம் தலைகீழாய்ப் புரட்டும்
பெருங்காற்று.

பெய்யவில்லை
இன்றைக்கும் உன் பூமியில்
தரிசுக் காடெல்லாம்
தண்ணி புரள அடிக்கும் மழை

இல்லை எவர்க்கும் நினைவில்லை
நீ பிறந்த நாள்!
இப்படியாக கவிதை எழுதி (1998) இருபது வருடங்கள் தொடுகிறது. வருடங்கள் மாறிய வேகத்துக்கு, பெண் வாழ்வியலில் முன்னேற்றம் வந்திருக்கிறதா என்று பார்த்தால், எழுத்தில், பேச்சில், ஊடக வெளியில், மேடையில் விளைந்திருக்கும் மாற்றம் அளவுக்கு நடப்புகளில், செயல்பாடுகளில் ருசுவாக இல்லை. எடுத்துக்காட்டு பெண்ணின் பிறந்த நாள். ஆணுக்கு பிறந்த நாட் பேருக்களாக வெள்ளிவிழா, மணிவிழா, பவளவிழா; ஒரு பெண்ணுக்கு மறந்தும் கூட இவ்விழாக்கள் நிகழ்த்தப்பட்டதில்லை.

இப்போது என் பிரியதோழர் பத்மாவதி விவேகானந்தானுக்கு ‘மணிவிழா’! ஆத்தாடி, ஆச்சரியமாயும் இருக்கிறது. ‘மலா்’ கொண்டு வருகிறார்கள்.

‘பிறந்த பொழுது’ கவிதைக்கு கொஞ்சம் உயிர் இருப்பதாக நினைத்தேன். “இல்லை, கவிதை என்னால் உயிர் கொண்டுவிட்டது” என்று பத்மாவதி சிரிக்கிறார். அவரும் சிரிப்பும் எப்போதும் ஒன்னாய் வலம் வருமே அதுபோலவே!

புரிந்து கொள்ளாது இருப்பதில் மயக்கம் உண்டாகும். புரிந்துகொள்வது போல் பாவனை செய்வதிலும் சிலருக்கு மயக்கம் உண்டாகும். தன்னுள், தன் குடும்பத்துள் வாழ்கிற பெண்ணுக்கு முக்கியத்துவமிருக்கிறது; தன்னைப் போலவே அவளுக்கும் தன்வாழ்நாள் உழைப்பினை அடையாளப்படுத்த வேண்டுமென்கிற விழைவு இருக்கிறது. தெரிந்தாலும் தெரியாதது போல் முகத்தைத் திருப்பிவைத்துக் கொள்கிற மனிதக்கூட்டத்தைக் காணுகிறோம். ஒரு பெண்ணை உயிரியாக அங்கீகரிக்கக் கூடாது என்ற திமிர் அவனுக்குரியதாக இருக்கிறது. இத்தகைய ஆண் மேகக் கருங்கூட்டத்துனுள்ளிருந்து சமகால ஒளிக்கதிர்கள் வீச்சில் வானவில் சிதறலாய் கா்வத்துடன் பளிச்சிடுகிறார் பத்மாவதி.
அவரைக் கருதிப் பார்க்க செழுப்பமாய் இரு சந்தர்ப்பங்கள் வாய்த்தன.

முதலாவது கவிஞா் மீரா, பெர்கின்சன் என்றும் முடக்குவாத நோயால் அவதியுற்ற வேளை, அவரைப் புத்தெழுச்சி கொள்ளச் செய்ய சென்னை ஆனந்த் அரங்கில் முதல்வா் கலைஞா் தலைமையில் ஒரு வாழ்த்துக் கூட்டம். அதற்கு எனது முன்னோடியான தி.க.சி. நெல்லையிலிருந்து வந்திருந்தார் என ஞாபகம்; அப்போது பத்மாவதி அவா்களை தி.க.சி.க்கு அறிமுகப்படுத்தினேன். நெகிழ்ந்து நின்ற தி.க.சி “உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்’மா, இப்பத்தான் நேரில் சந்திக்கிறேன்” என்று பேசினார். பின்னா் தனியாய் உட்கார்ந்திருக்கிறபோது என்னிடம் “எவ்வளவு பெரியவங்களையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கீங்க; நீங்க வரலைன்னா அவங்கா யாருன்னு எனக்குத் தெரிந்திருக்காதில்லே” பரவசப்பட்டுப் பேசினார்.

இரண்டாவது சந்தா்ப்பம் - விழுப்புரத்தில் நடைபெற்ற விழி.பா.இதயவேந்தன் - 50 பாராட்டு விழா. விழுப்புரத்தில் தோழா் ரவி கார்த்திகேயன் மற்றும் நண்பா்கள் முன்னெடுப்பில் இந்த தலித்திய எழுத்தாளரை புத்தெழுச்சி கொள்ளச் செய்யும் நிகழ்வு.

1981 செப்டெம்பரில் நாங்கள் ‘மனஓசை’ என்னும் கலை இலக்கியத் திங்களிதழைத் தொடங்கியபோது, நான் அதன் போ் சொல்லப்படாத ஆசிரியராக, ஏனெனில் அன்று அரசுப்பணியாற்றினேன், சூரியதீபன் என்ற புனைபெயரில் முழுவீச்சில் இயங்க ஆரம்பித்த அடிநாட்கள் அவை. அப்போது சென்னைத்தலைமைச் செயலகத்தில் அலுவலராயிருந்த நான் அலுவலகப் பணியாய்ப் பயணம் செய்யும்போது, பேருந்து அல்லது தொடா்வண்டி நிலையதில் அவருடனான சந்திப்பு நிகழும்; இரவு எத்தனை மணியெனினும் தவறவிடுவதில்லை அவா். அப்போது விழுப்புரத்தில் இன்றைக்கிருக்கும் புதிய பேருந்து நிலையம் இல்லை. பழய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளின் ஓட்டுநா், நடத்துநா் இரவுச் சாப்பாட்டுக்கு அங்குள்ள உணவு விடுதிகளுக்குள் நுழைகையில், தேநீா் சுவைத்தபடி எங்கள் உரையாடல் தொடரும். ஒன்று மனஓசை இதழ்க் கட்டுகளை அவரிடம் அல்லது முந்திய இதழ்களுக்கான விற்பனைத் தொகையை என்னிடம் அளிப்பது என கைமாறும்.

எனது எழுத்துக்கள், சமுதாயச் செயற்பாடுகள் அவரை ஈா்த்தன போல; மகன் பிறந்தபோது சூரியதீபன் எனப் பெயரிட்டிருந்தார். நீரழிவுநோய்க்கு மருத்துவம் மேற்கொண்டு வந்தவரை உற்சாக மூட்ட என்று அன்று நடந்த இதயவேந்தன் -50 விழாவில் நான் வந்ததும் “சூரியதீபன்” என தன்மகனை அறிமுகப்படுத்தினார். இருவரும் மேடை முன்வரிசையில அமா்ந்து பேசிக்கொண்டிருக்க அவ்வேளை பத்மாவதி வந்தார். வரவேற்று அழைத்து வந்த விழி.பா.இதயவேந்தன். “இரண்டு சூரியதீபன்களும் ஒன்றாய் உட்கார்ந்திருப்பதைக் கண்டீா்களா” என்றார். பத்மாவதி என்னைப் பார்த்தார். பின்னர் மகனைப் பார்த்தார். முகமெல்லாம் பொங்கிவழிய “போதும் என் வாழ்க்கை நிறைந்து போனது” என்று தெரிவித்தார். பிறகு ஜீனியா் சூரியதீபனுடன் உரையாடிக் கொண்டிருந்தார் விழா தொடக்கம் வரை.

நினைவுகளின் தடம் வழியாக பயணிக்கையில் இவையும் இவை போன்றனவும் சிறப்பினக் காட்சிகளாக வந்து செல்கின்றன. இருப்பினும் இவையெல்லாம் பக்கத்துக் காட்சிகளே. நம் முன் எதிர்நின்று தோன்றும் பிரதானக் காட்சி – ஆணை மனிதனாக்குவோம் என்ற அவரின் பெண்ணுருக் காட்சி! ஆண்களுக்கு நிகராக தன்னை மனுசியாக செதுக்கிக் கொண்டே செல்கிறார். நீ மனுஷன் என்றால் நான் மனுசி (இப்போது புதிய சொல்லாடல் வந்திருக்கிறது – மனுசி என்பதற்குப் பதில் மனிதி).

“பொருளாரத் தேவைகளுக்காக கணவரை நம்பியிருக்கும் பெற்றோரைப் பிரிந்துவரும்படி மனைவி நிர்ப்பந்தித்தால் அவரை விவாகரத்துச் செய்யலாம்” – அண்மையில் உச்சநீதிமன்றம் அதிர்ச்சித் தீர்ப்பு தந்திருக்கிறது. பெண்ணுக்கு மட்டும் இந்த விதியா? அதே போன்ற பொருளாதாரத் தேவைகள், வயது முதிர்ந்த நிலை, மனித ஊன்று கோல் தேவைப்படும் பெண்ணின் பெற்றோரைக் காக்க வேஎண்டும் கணவன் என நீதிமன்றம் ஏன் உரைக்கவில்லை? ’உன் பெற்றோரைப் பிரிந்து வா’ என ஒரு பெண்ணை திருமணப்பந்தம் என்ற பெயரில் நிர்ப்பந்தப்படுத்தி பிரித்த வந்த எத்தனை கணவன்மார்களை விவாகரத்து செய்வது? மனைவியின் பெற்றோரைத் தன் பெற்றோராகப் பார்த்துக் கொள்ளாத கணவனுக்கு என்ன தண்டனை?

நீதிமன்றங்கள் பெண்மன்றம் இல்லை. பெண்களுக்கான மன்றம் இல்லை; அதுவும் ஆண்மன்றம் - இப்படி தப்புத் தப்பாகத் தான் பேசும் என்று இருபது ஆண்டுகள் முன் ஒரு வட மாநில நீதிபதி அளித்த தீா்ப்பைச் சுட்டிக்காட்டி ஒரு அரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்தார் பத்மாவதி. அவா் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌