வழங்கப்பட்ட வெளியில் செய்த சாதனை - வண்ணதாசன் படைப்புக்கள்


(7.1.2012 அன்று சாரல் இலக்கிய விருது வழங்கி ஆற்றிய உரையின் விரிவாக்கம்)

1972ல் நெல்லை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணிபுரிந்தேன். அப்போது ஊழியர் என்று சொல் இருந்தது. ஊழியம் செய்தல் அடிமைச் சேவகத்தைக் குறிக்கும் அர்த்தமுடையது என்பதின் காரணமாய் அரசுப் பணியாளர் என பெயர் மாற்றமானது. பெயர் மாற்றமே தவிர குணமாற்றம் கொள்ளவில்லை. அடிமை என்பதற்கு சுகந்தை என்றொரு சொல்லும் உண்டு. அரசுப் பணி ஒரு கேவலம். மக்கள் தொடர்பு அலுவலராக இருப்பதென்பது மிகப் பெரிய கேவலம் என என்னை சிந்திக்கவைத்தன. அரசியல் சூழ்ச்சியும் அடிமைச் சிறுமதியும் ஒன்றுகொன்று இணையாய்ப் பயணம் செய்யும் சாலைதான் அரசின் மக்கள் தொடர்புத்துறை எனப்படுவது.

முதல் மூன்று தொகுதிகள் `பா.செயப்பிரகாசம் கதைகள்` என்று ஒரு தொகுப்பாய் வந்த என்னுரையில் "கேவலங்களும் பரிதாபங்களும் நிறைந்த ஒரு அதிகாரியின் இருக்கை" என்று அதனைக் குறிப்பிட்டேன்.

மேலிருக்கும் அதிகாரிகளிடம் கீழிருக்கும் அரசுப் பணியாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வரையறுக்கிறது அரசு நன்னடத்தை விதிகள் - கீழே இயங்கும் பணியாளர்களிடம் மேலிருப்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றோ, எப்படி நடத்த வேண்டும் என்றோ அந்த அடிமைச் சாசனம் ஒரு போதும் கூறியதில்லை.
அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை
என்ற அடிமைச் சிறுமதியை உருவாக்கும் உளவியலை நிர்வாக அமைப்பு கட்டமைக்கிறது.

அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறவர்கள் முகம் சுளிப்பது போல் நடந்தால், அல்லது அவர்களின் மனசுக்கு உகந்த காரியங்களைச் செய்யவில்லையெனில், உடனே ’புள்ளி வைத்து‘ விடுவார்கள். பணியிட மாறுதல். மாவட்டம் மாவட்டமாய் மாறுதல் என அனைத்தும் நடக்கும். அவ்வாறான வெம்பரப்பான (பொட்டல் காடு போன்ற) மாறுதல்கள் பெட்டி, படுக்கை, தட்டுமுட்டுச் சாமான்களை மட்டுமல்ல, மனைவி, பிள்ளைகளையும் மடித்துப் பார்சல் செய்வது போல இருந்தால் நல்லது என்று சொல்லியிருக்கிறேன். துயரம் ஆற்றிக் கொள்வேன்.

சேலத்திலிருந்து நெல்லைக்கு இப்படித்தான் எனக்குப் பணியிட மாறுதல் வந்தது. பலி பீடம் என்று நான் கருதிய நெல்லையில் கோபால் என்ற கலாப்ரியா இருந்தார். கல்யாணி என்ற வண்ணதாசன் இருந்தார். உ.நா.ராமச்சந்திரன் என்றழைக்கப்பட்ட வண்ணநிலவன் இருந்தார். சில ஆண்டுகளின் பின் சென்னையிலிருந்து நெல்லை வந்து சேர்ந்த தி.க.சி நானிருந்தபோது அங்கு இல்லை.

நெல்லையில் வேறு யாரோ கட்டிய புது வீட்டுக்கு புதிதாய் திருமணமாகி துணைவியுடன் சென்றபோது, தன் துணைவியாருடன் வந்து "பால் குக்கர்" கொடுத்து, "பால் போல் உங்கள் வாழ்க்கை பொங்கட்டும்" என வாழ்த்திய கல்யாணி-
ஒரு கால்க் காசு கடுதாசி எழுதிப் போட்டுவிட்டு ஞாயிற்றுக்கிழமையில் கலாப்ரியா, கல்யாணி, உ.நா.ரா, நான் என இடைசெவலில் கி.ரா அண்ணாச்சியைப் போய்ப் பார்த்துப் பேசி வந்தபோது எம்முடன் வந்த கல்யாணி -
"அடுத்த வீட்டு மாடியில் குளித்து முடித்த பெண் தலை உலர்த்துவதைக் கண்டபோது என் உயிரை வாரி முடிப்பது போலிருந்தது. . . நானொரு சௌந்தர்ய உபாசகன்" என லா.ச.ரா வசீகரிப்பாய் உதிர்த்ததை, கி.ராஜநாராயனுடனான உரையாடலில் நான் கேலியடித்தபோது "அந்தக் காட்சி, என் உயிரையும் பிடித்திழுக்கிறது" என்று மறுதலித்த கல்யாணி - கண்ணதாசன் இதழில் எழுதியபோது, கல்யாணி வண்ணதாசனாக உருவாகி விட்டிருந்தார். மற்றொன்று - அப்போது எனக்கு தஞ்சைக்கு மாறுதல் வந்திருந்தது. நான் அவரை இழந்திருந்தேன்.

அவர் கைவசப்படுத்திய அசையாச் சொத்துக்கள் உறவுகளும், அவருடைய மொழியும். அவருடைய எழுத்துலகம் குடும்ப உறவுகளால் பின்னியது. அன்பும், பாசமும் நெகிழ்ந்து கசியும் உறவுகள். எச்சில் உமிழ்வது போல் குமட்டிக் குமட்டி வரும் உறவு பற்றிய சித்தரிப்பாக அது இல்லை. உறவுகளைத் தேர்ந்து தேர்ந்து பேசியவை. எப்படி இந்த உறவுகள் இருக்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தினடியாய்ப் பிறந்தவை
வாழ்வை அவர் உள்ளிருந்து நோக்கினார். ஒரு குருத்து, தன்னுள்ளிருந்தே தான் உயர்ந்து வருதல் போல! அவரது படைப்பு நோக்கம் வாழ்வை உள்ளிருந்தே வளப்படுத்தும் திசை குறித்தது. வெளியுலக அதிர்வுகள் பற்றி பேசாது. பேசவும் தேவையில்லை. அந்த அதிர்வுகள் மனசின் நீரோட்டமாய், உறவுகளின் பிணைப்பாய் அவர் எழுத்துக்களில் மறைந்து கிடந்தன. அவை உறவுகளின் பிணைப்பைப் பற்றி, அதை நெடிய வாழ்க்கைக்குள் கொண்டு செலுத்துவது பற்றியல்லாமல், பிரிப்பைப் பற்றியன அல்ல.

நிலாத்துண்டு போன்ற முத்தை தனக்குள் பேணிக் காப்பதால் கடல் சிப்பிக்கு சிறப்புப் பேறு. அவரது படைப்புக்கள் உன்னதமான முத்துக்கள் போன்ற உறவுகளை சேகரித்துக் காப்பதினால் பிரகாசிக்கின்றன. அவருக்கான - குடும்பம், அலுவலகம், சமுதாய இயக்கத்தினுள்ள உறவுகளை - வெளிப்படுத்துகையில் மொழியை தன்னிடமிருந்து பிரித்துவிட முடியாதென்ற கம்பீரத்துடன் நடந்தார். அந்த கம்பீரம் இன்றும் அவரை வழி நடத்துகிறது.

அது ஆட்டில் பால் கறக்கும் லாவகம்! லாவி ஆட்டைப் பிடித்து ஆட்டின் கால் இரண்டையும் தன் கால் கவுட்டுக்குள் இறுக்கி பால் காம்புகளைத் தட்டித் தட்டிக் கறக்கும் லாவகம். ஆட்டுப்பால் உடம்புக்கு ஆரோக்கியம். குளிர்ச்சி. அந்தப் பால்தான் இவருடைய மொழி.

புதுமைப் பித்தனின் மொழி வெளிப்பாட்டைக் கையாண்டவர்கள் தி.ஜானகிராமனின் மொழி நடையை, சொல்முறையை சுவீகரித்தவர்கள், கி.ரா.வைப் போல் சொல்ல முயன்றவர்கள் எனப் பலர் இருக்கிறார்கள்; அது ஒரு மொழி. அது வெளிப்பாட்டில் ஒரு வகை. அத்தோடு அது முடிந்து போனது. அது போலவே தொடர நினைக்கும் எண்ணம் படைப்பாளியின் சுயத்தை மங்கச் செய்யும். . . மற்றொருவரின் மொழி அல்லது பாணி தனக்குள் வேரூன்றாமல் பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம். அந்த புத்திசாலித்தனம் கல்யாணியாக இருந்தது.

"தனக்கு முந்தியவர்களது, அறிதலை, செயல்திறனை தான் வளப்படுத்திக்கொள்வதோடு மட்டும் படைப்பாளியின் பணி முடிவடைந்து விடுவதில்லை. தனது சுய அறிவையும் தன் அனுபவப் பிழிவையும் அதனோடு சேர்த்துக் கொள்ளும். வளர்ச்சி என்பது அந்தப் புள்ளியில் நிகழ்கிறது. தன்னையும் தன் படைப்புக்களையும் அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துகிற முன்னேற்றம் என்பது அப்போது சாத்தியமாகிறது" என்று கான்ஸ்டான்டின் ஃபெடின் கூறுவதை சாத்தியப்படுத்தியவர் வண்ணதாசன்.

2

நம் நினைப்பை, அதன் உயர்வடிவான சிந்திப்பை, மற்றவர்க்கு தெரியப்படுத்தல் என்ற உந்துதலில் பேச்சு உருவாகிறது. அந்த உந்துதலின் இன்னொரு முக்கியமான நகர்வு எழுத்து. மற்றவர்க்குச் சொல்வது, தெரிவிப்பது இல்லையெனில் பேச்சு, எழுத்து, இசை போன்ற ஒழுங்கு செய்யப்பட்ட எந்த வடிவமும் இல்லை. இவ்வடிவங்கள் வழியாக மனித உறவுகள் தொடர்பாடல் செய்யப்படுகிறது. உயிர் வாழ்தலும் அதில்தான் நடக்கிறது.

வாழ்க்கையில் எழுத்தாளனுடைய வகிபாகம், வாழ்விலிருந்து உண்டாகும் பார்வை, அதனை வளர்த்துக் கொள்ளும் திசை, சொல்முறை - இவ்வாறான பலவும் எழுத்தின் வண்ணத்தையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது. எழுத்தாளன் மேற்கொள்ளும் திசைவழி - கருத்து, வடிவம் அனைத்தையும் தீர்மானிப்பதாக அமைகிறது.

எழுத்துக் கலை பற்றிய அவதானிப்பில் எழுத்தாளர் வண்ணநிலவன் ஒரு நேர்காணலில் சொல்வார்
"கலை மனம் சம்பந்தப்பட்டது. ரசனை பூர்வமானது. உண்மையோடு நெருங்கிய சம்பந்தமுள்ளது. நல்ல கலைஞன் சனங்களிடம் பொய் சொல்ல மாட்டான், கலைக்குப்பொய் ஆகாது"

மனம் சம்பந்தப்பட்ட ரசனை என்ற அடிப்படையில்தான், கி.ரா.வின் வீட்டுக்கு சென்றிருந்த வேளையில் "நானொரு சௌந்தர்ய உபாசகன்" என்ற லா.ச.ராவின் பார்வையை வண்ணதாசன் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரித்தது; அவ்வேளையில் வெளிப்பட்ட அவரது தொனி - வித்தியாசமாய் இருந்தது. முகம் மாறிப் பேசியிருக்க வேண்டாமோ என்ற எதிர்பார்ப்பு தோன்றியது.

ஆனால் அந்த சௌந்தர்ய உபாசகரிலிருந்து வண்ணதாசன் மாறுபட்டவர். இவர் உண்மையோடு நெருங்கி நின்றார். புனைவாலும் அதீதமான வார்த்தையாலும் உண்மைகளை மூடிவிடவில்லை. எவ்வகையிலும் உண்மையை மறைக்காது நல்ல கலைஞன் பொய் சொல்ல மாட்டான் என்பதை நிரூபித்து வருகிறார்.

உண்மையை விவரிக்கிற இடத்தில் கலை மனிதத்துவமுள்ளது என தன்னை மெய்ப்பித்துக் கொள்கிறது.

மனித குணங்களால் மக்கள் வசீகரிப்படுவது இயல்பாக வருகிறது. கலை வசீகரம் என்பதினும் மேலாக மானுட குணங்களின் ஈர்ப்பே அவசியம். வண்ணதாசன் என்ற கலைஞனைக் காட்டிலும் கல்யாணி என்ற மனிதரால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். மனிதநாதம் ஒலிக்கிற, சங்கீதத்தை எடுத்துப் பரிமாறுகிற கலைஞனால் ஈர்க்கப்பட்டமை, அடுத்து என்னில் நடந்தது.

திடீரென சென்னைக்கு மாறுதலில் தூக்கியடிக்கப்பட்டு புது மணக்கோலம் கலையாமல் புறப்பட்டு எவருக்கும் சொல்லிக் கொள்ளாது (அவ்வளவு மன வேதனையிலிருந்தோம்) பணியிடம் தேடி புறப்பட்டு சென்ற பின் "இவ்வளவு பழகிய காலத்தையும் புறந்தள்ளி விட்டு ஜே.பி ஒரு வார்த்தையும் சொல்லாமல் போய்விட்டார்" என்று வேறொரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டிய கல்யாணி என்ற பண்பாளரை நினைத்து வியந்திருக்கிறேன்.

இந்த மனிதநேய எல்லைக்குள்ளேயே தனது எழுத்துக்களை பயணிக்கச் செய்பவராகவுமிருந்தார்.

மனித உறவுகளை ஊடறுத்துக் காணுவது அவரது படைப்புக்களின் வலிமை. அதன் கிளை கிளையாய்ப் பிரிந்த மனித உறவுகளும் அதைப் பேசும் மொழியும் அவருடைய அசையாச் சொத்துக்கள். "வாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து, தங்கள் தோழமையாலும் சூழலாலும் விரோதத்தாலும் எனக்கு இன்று நான் அறிந்திருக்கிற கொஞ்சத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள் அவர்களே. என் கடைசி நிமிடம் வரை கற்றுக்கொள்கிற, விட்டுக்கொடுக்கிற ஒரு எளிய திறந்த மனதைக் காப்பாற்றிச் செல்லமுடியுமெனில் அதுவே நானடைய விரும்பும் சம்பத்தாக இருக்கும். உறவுகளை மதிக்கத் தெரிந்து, ஆராயத் தெரிந்த ஒருவருக்குத்தான், அது செல்வமாக இருக்க முடியும். மனித உறவுகளை விட்டால் மனிதன் எந்தப் பாலைவனத்தில போய் தன்னை நிறுத்திக் கொள்வான்?

கல்யாணி என்ற வண்ணதாசனுக்கு எல்லோரும் வேண்டும். சில பேருக்கு யாருமே வேண்டியதில்லை. சிலருக்கு இப்படி தானாகவே வாழ்ந்து பழக்கம். சிலருக்கு நல்லதொரு வைரம் ஓடிய விருட்சத்தின் கிளையாக, பூவாகக், கனியாக வாழ முயன்ற மலையப்பனை, வெறும் கட்டை மண்ணாய் சமுதாயம் ஆக்கிவிட்டதையும் காண்கிறோம்.

"அடுத்து நான் என்ன எழுதப் போகிறேன் என்பது என் முதல் வரிக்குக்கூடத் தெரியாது. எதையும் திட்டமிட்டு வாழ்பவன் நானில்லை" என்று வாக்கு மூலம் ஒரு பேட்டியில் தருகிறார். நேர் காணலில் நம் உரையாடல் என்பது வாக்குமூலம்தான். வாழ்க்கையை மட்டுமல்ல, கதைகளையும் திட்டமிட்டு வாழ்பவர் என்பதை அவரை வாசிக்கிற அனைவரும் அறிவார்கள்.

'சிறுகச் சிறுக' என்ற கதை தொடங்கும் விதமும், முடிக்கும் விதமும் மிகத் துல்லியமாய் முன் தீர்மானத்துடன் திட்டமிடப்பட்டதைக் காண முடியும்
"கடைசியில் இவனுக்குப் புத்தி இப்படிப் போயிருக்க வேண்டாம். ஊருக்குப் போகும்போது கொடுத்தனுப்ப வேண்டுமென்று ஒரு கோஆப்டெக்ஸ் வேட்டியும் நல்ல சீட்டித் துண்டு ஒன்றும் இந்த நாளுக்கு ஏற்றமாதிரி ஒரு உறுதியான சாரமும் எடுத்தி வைத்திருந்தேன். அதற்குள் தொழுவத்தில் குத்தியிருக்கிற பனங்கையில் நாண்டுக்கிட்டு நின்னு செத்துப் போயிருந்தான்" (பக் 20) என்று தொடங்குகிறார்.

"ஒரு மனுஷனைப் பற்றிய முதல் ஞாபகம் எப்படி எப்படியெல்லாமோ இருக்கும் என்றாலும் எனக்கு இருக்கிறது எப்படியென்று எவராலும் யூகம் பண்ண முடியாது" மலையப்பன் எனும் அற்புதமான வேலைக்காரரைப் பற்றி விவரிக்கத் தொடங்குகிறார். 'ஐயா' என்கிற சொல்லை மலையப்பன் மாதிரி இவ்வளவு அருமையாக யாரும் உச்சரிக்க முடியாது. 'கெண்டியைக் கழுவி வச்சாச்சு. ஐயாவுக்குப் பால் புகட்டலாம்' என்பான். அவன் குறிப்பிடுகிற ஐயா, தொட்டிலில் கொலுசுக்கால் தொங்க நரி மிரட்டுகிற முகத்துச் சிரிப்புடன் ஒருச்சாய்ந்து தூங்கிக் கொண்டிருக்கும். "ஐயாவுக்குக் கொணகொணங்கு. புகையைப் பிடிக்கச் சொல்லலாம்னு வசம்பை சுட்டுக்கிட்டிருக்கேன்" என்பான். அவன் சொல்கிற ஐயா எங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கமிஷன் கடைக் கணக்குப் பிள்ளையைக் கூப்புட்டு "வத்தல் எல்லாம் என்ன விலைக்குப் போயிக்கிட்டு இருக்குலே’’ என்று துலாம் கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள்.

"என்னய்யா, பள்ளிக்கூடத்துக்கு லீவு விடச் சொல்லிடுவோம். என் கூட வாங்க. கிராமத்துக்குப் போகலாம்" என்று என்னைக் கேட்பான். நாம் ஐயா தான்.

'ஐயா' என்பது மரியாதைக் குறிக்கிற சொல்லா என்று கேட்டால் மலையப்பனுக்குத் தெரியாது. "அணைவிடைப் பிள்ளையிலிருந்து கிழவன் வரைக்கும் உனக்கு ஐயாதானா மலையப்பா" என்று பெரியவனனான பிறகு நான் கேட்டதற்கு 'அதனால் என்ன ஐயா' என்ற சொல்லி சிரித்தான். (மனுஷா-மனுஷா - பக்.15-14)

சற்றை மிகை கூறல் போலத் தோன்றினாலும் இப்பேர்பட்ட அருமையான மனிதர்களைப் பற்றியே பேச அவருக்கு வாய்த்திருக்கிறது. திட்டமிடாமல் இப்படியொரு பதியம் போட வாய்க்காது. வாழ்வின் நெருக்குதல்களால் சிறுகச் சிறுக மனித குணங்களை இழந்து (வாழ்க்கை இப்படியெல்லாம் உதிர்க்கச் செய்கிறது) இறுதியில் அவன் மேலாய் மதித்த சின்ன ஐயாவின் சட்டைப் பையிலிருந்து பணம் திருடுகிறபோது பிடிபடுகிறான்;

"நாற்காலி தடுமாறுகிற சத்தமும் சில்லரை சிதறித் தரையில் விழுகிற சத்தம் கேட்டன. ஆபத்தை எதிர் கொள்ளும்போது அடைகிற ஜிவ்வென்கிற உணர்வுடன் எழுந்து, லைட்டைப் பொருத்திய பொழுது - மலையப்பன் ஒரு கிழட்டு மிருகம் போலப் பயந்து ஒடுங்கி மேஜையின் அருகில் பம்மி உட்கார்ந்திருந்தான். ஒரு கையில் எடுத்த பர்சும் இன்னொரு கையில் சட்டையுமாக மடியில் புதைத்துக்கொண்டு மலையப்பன் இருந்தான்.

தாங்கவே முடியாமல் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு பெரிய வீழ்ச்சி அது.

ஒன்றும் சொல்லாது நான் நகர்ந்து நகர்ந்து அருகில் செல்லச் செல்ல இன்னும் ஒரு கிழட்டு மிருகம் போலவே எனக்குப் பட்ட மலையப்பன், வேறு எதுவுமே சொல்லாமல் உட்கார்ந்த வாக்கிலேயே கொஞ்சம் கொஞ்சமாகக் கையை உயர்த்தித் தலைக்கு மேலே கும்பிட்டுக்கொண்டே இருந்தான்.

மிக அருகில் வெடித்து உயிர் கொள்ளப் போகிற ரவையை எதிர்பார்க்கிற மிருகத்தினது கண்களைப் போலப் பளபளத்த, அனுதாபத்திற்குரிய மலையப்பனின் பார்வையைப் பார்க்கச் சகிக்காமல் நான் மறுபடியும் விளக்கை அணைத்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து, சுவரை ஒட்டித் தேய்த்துக் கொண்டே படிகளை நோக்கி நிழலசைவாக அவன் இறங்க ஆரம்பித்ததும். நான் மறுபடி மேலே அருவமாகக் கவிந்த பாரத்துடன், படுக்கையில் சாய்ந்தேன்.

மச்சுப்படியிலிருந்து இறங்கின உடனேயே நேராக மலையப்பன் மாட்டுத் தொழுவத்திற்குத்தான் போயிருக்க வேண்டும்."

தொடக்கம், எடுப்பு, முடிப்பு என்று அளவெடுத்துத் தைத்த சட்டைபோல் கச்சிதமாய் முடிகிற கதை இது. முன் திட்டமிடல் இல்லாமல், தற்செயலாய் இப்படியொரு கதையை வடித்திருக்க முடியாது (நூல் - மனுஷா மனுஷா)

இப்படியான கதை சொல்லலை கைவசப்படுத்தியிருப்பவர், மற்றவர்கள் மதிக்கிற கௌரவத்தினை எதிர்பார்க்க வேண்டியதில்லை. அவரால் மதிக்கப்படுகிற கௌவரத்துக்காக மற்றவர்கள் காத்திருக்கிறார்கள் என்றுதான் நான் பார்க்கிறேன்.

எந்தச் சூழலிலும் எந்தப் பொழுதிலும் சறுக்காத மனம் வாய்க்க வேண்டும். அப்போது தென்படுகிறது வாழ்வின் முழுமை. அப்படியொரு மனமும் வாழ்க்கையுமாக தன்னைச் செதுக்கி செதுக்கி வடிவமைத்துக் கொண்ட ஒருவன். வீட்டை ஒட்டி ஒரு சந்தும் ஒருவர் போனால் ஒருவர் எதிரே வர முடியாத இந்தச் சந்தின் வழியாகவே 'பின்பக்கம்' போய்வர வேண்டும். குடித்தனக்காரர் பிரமு அண்ணாச்சியின் பதினெட்டு பத்தொன்பது வயது மகள். அந்தப் பெண்ணை அப்படியொரு ஈடுபாட்டோடு எல்லாம் அவன் பார்த்தது கிடையாது. பெண் ஒன்று கண்டேன் என்ற பாட்டின் கிளர்ச்சிக் கிறுக்குப் போல் அந்தக் காலை நேரத்தில் ஆட்கொள்ள - அந்தப் பெண்ணை முகவாயை ஏந்தி முத்தமிட்டுவிட, இந்த முப்பத்து மூன்று முப்பத்து நான்கு வயதில் நிகழ்ந்த அபத்தத்தை தற்செயலாக மனைவி பார்த்து விட்டாள்.

"அவள் வேறு ஒன்றும் சொல்லவில்லை. தலையில் அடித்துக் கொண்டாள் மனுஷா, மனுஷா, உனக்கு எதிலே நான் குறை வைத்தேன்" என்றாள். ஏன் இப்படிச் செய்தாய், இப்படிச் செய்யலாமா, எவ்வளவு நாளாக இது நடக்கிறது, விட்டேனா பார் அந்தப் பெண்ணை - இப்படி எதுவுமே கேட்கவில்லை . மறுபடியும் 'மனுஷா, மனுஷா' என்று தலையில் அடித்துக் கொண்டாள். வேறு எப்படியாவது சொல்லித் திட்டி இருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். இந்த மனுஷா, மனுஷா என்கிற குரலும், அதைச் சொன்ன விதமும் சொன்ன நேரத்தின் துக்கமும், அவளுடைய சின்னாபின்னமான முகமும் என்னை அன்றிலிருந்து வெகு காலத்துக்குத் துரத்திக்கொண்டு வந்தது.

பரமு அண்ணாச்சியின் குடும்பம் அந்த நாளே அப்போதே வேறொரு பகுதிக்கு வீடு மாற்றிப் போய்விட்டது. சில ஆண்டுகளின் பின்னான ஒரு நாள் பரமு அண்ணாச்சியைச் சந்தித்த வேளையில் "லிக்கர் சாப்பிடுவேளா அண்ணாச்சி" என்று அழைக்கிறான். அண்ணாச்சி பதில் ஒன்றும் சொல்லவில்லை. வெற்றிலை ஒதுக்கிய வாயை அண்ணாந்து கொண்டு ரொம்பவும் பரிவுடன் அவன் மீது கையை வைத்து "சாப்பிடணுமா?" என்றார். சற்று ஓரமாய் வெற்றிலைச் சாறைத் துப்பி விட்டு, மறுபடியும் கையைத் தோளில் வைத்து சாப்பிடுவோம் என்றார். மதுபானக் கடை போவது மட்டுக்கு மீறி 'தண்ணி' குடிப்பது, பிறகு அளிக்கிற குற்ற சம்மதம் - கடைசியில் பரமு அண்ணாச்சியின் வீட்டில் அவருடைய மடியிலேயே படுக்க வைத்து காலையில் கண்விழிப்பு.

"அந்தக் கணத்தில் மனைவியைப் பற்றி நினைத்ததும் மனுஷா,மனுஷா என்ற குரல் விம்மியது. தலையில் அடித்துக் கொள்வது போல் அல்லாமல், அதுவே என் பெயராக அமைந்தது போலக் கேட்டது இப்போது"

ஒவ்வொருவரையும் பரிசோதித்துக் கொள்கிற ஒவ்வொருவரின் சுய விமர்சனமாகவும் முடிகிறது. வாழ்வின் முழுமையை நோக்கிய அடுத்த தடத்தைப் பதிப்பதுதான் சுய விமர்சனம். எங்கேயும் பிசிறு விழாமல் நேராகக் கொண்டு செலுத்தி கட்டுதிட்டாய் காட்சிகளைத் தொகுப்பது ஒரு தேர்ந்த கலைஞனுக்கு முன்திட்டமிடல் இன்றிச் சாத்தியமில்லை. தேர்ந்த கலை வேலைக்காரர் என்று காட்டுவது அவருடைய அசையாச் சொத்தான இந்த மொழியே

"வண்ண நிலவனது எழுத்து அடையாளம் எனச் சொல்ல வேண்டுமென்றால் தான் எழுதும் எதையும் வெளியிலிருந்து பார்ப்பதோடு, அந்நிகழ்வில் பங்கேற்றுவிடாத தன்னிலையைக் கொண்டவர் என்று சொல்லலாம்" (பேரா.அ.ராமசாமி, தீராநதி - சனவரி 2012)

ஆனால் தான் எழுதும் எதையும் உள்ளிருந்து நோக்கி, சகல பரிமாணங்களையும் எண்ண ஓட்டங்களையும் தன்னிலிருந்து வரித்துக் கொள்வது, அதற்கான ஒரு மொழிதான் வண்ணதாசனின் அடையாளம் என நான் காணுகிறேன். இது இன்னொரு வகைப்பாடு என்பதினும் இது இன்னொரு நிலைப்பாடு. இது வண்ணதாசனையும் அவரது எழுத்துக்களையும் லேசில் பிரித்தவிட முடியாது என்று தோன்றச் செய்யும். ஒவ்வொரு படைப்பு வழியாயும் அவர் முன்வைக்கும் கருதுகோள்களும், பேசும் பேச்சுக்களும் அவருடையவையே.

3

அறிவுத்துறை வளர்ச்சி, அறிவுசார் அனைத்தும் இன்று பெரும் நிறுவனங்களின் ஆளுகைக்குள் இருக்கிறது. நிறுவனங்கள் தாம் கருதும் திசை நோக்கி இயக்கப்படுகிறது. அவர்களது கருத்து நோக்கம் என்பது பச்சையப்பனும் வெள்ளையப்பனும் பற்றியது (பண வேட்டை).

"சமூகத்தின் அறிவுத்துறைகள் பெரும் வணிக நிறுவனங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குட்பட்டு இருப்பது சமூக நலனுக்கு நல்லதல்ல. சன் பிக்சர்ஸ், ஏவி.எம் புரொடக்ஷன்ஸ், பிரமிட் சாய்மிரா போன்ற நிவனங்களே தற்போது பெரும்பான்மைத் திரைப்படங்களின் காப்புரிமையைக் கொண்டுள்ளன. திரைத்துறை சாராத கலைத் துறையே தமிழ்ச் சூழலில் இல்லை அல்லது அரிது. தமிழ்நாட்டு ஊடகத் துறையை சன், விகடன், குமுதம், திரிசக்தி, இந்து, தினமலர் போன்ற நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. கல்விதுறையும் தனியார் வணிகங்களிடம் இருக்கிறது. இப்படி சமூகத்தின் அறிவுத்துறைகள் பெரும் வணிக நிறுவனங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருப்பது சிந்தனைச் சுதந்திரத்துக்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கும் தடையாக அமைகிறது’’ (காலம் அக்-டிசம்பர் 2011 இதழில் நக்கீரன்)

திரைத்துறையில் முன்னேறக் காத்திருக்கும் துடிப்புள்ள இளைய உதவி இயக்குநர் சிறீராம் தெரிவித்த கருத்துக்கள் கவனம் கொள்ள வேண்டியவை. தமிழ்நாட்டுப் பெரும் பெரும் நிறுவனங்கள் மட்டுமல்ல, அமெரிக்காவிலிருந்து இயங்கும் பாக்ஸ் (குடிஒ) திரைப்பட நிறுவனம் போன்றவையும் தமிழ்த் திரையுலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன என்றார். அண்மையில் வெளிவந்த 'எங்கேயும் எப்போதும்' என்ற படம் இந்நிறுவன நிதி முதலீட்டில் உருவாக்கப்பட்டதே. கதையல்லாத கதையாக விபத்தை விதியாகக் காட்டி நியாயப்படுத்தும், சில யதார்த்தக் காட்சிகளின் கலவையான இப்படம் திரை விமர்சகர்களின் ஊடகங்களின் வரவேற்பைப் பெற்றது. "நான் சொல்கிறபடி, படம் எடு, புதிய கருத்தோ, புதிய விசயமோ புறந்தள்ளு" எனப் பேசும் ஏகாதிபத்திய நிறுவனங்களது உள் நுழைவு அதிர்ச்சியடைய வைக்கிறது.

அண்மையில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் உருவான 'வெண்ணிலா கபடிக்குழு, பசங்க, மைனா, காதல், வெயில், தென்மேற்குப் பருவக் காற்று, ஆடுகளம்' போன்ற படங்கள் திரைக்குழுமங்களின் கலாச்சாரத்தை முறியடித்து, புதிய திசை நோக்கித் திரும்பியுள்ளன. மடைமாற்றுதல் என்ற சொல்லுக்கு சரியான அர்த்தத்தை இந்தக் கலாச்சார முறிவு உண்டாக்கியுள்ளதைக் காணலாம். ஆனால் இதனையும் மடை மாற்றுதல் என்ற முயற்சியாய் - புதிய திசையைப் போக்கை நிறுத்தி தங்களுக்கான லாப வேட்டை என்னும் திசையில் செலுத்த இன்று பெரும் நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளன. பெரிய நிறுவன வடிவமாக ஆகிவிட்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா போன்ற போக்காளர்களை முன்னிறுத்தியும் எங்கேயும் எப்போதும் போன்ற படங்களை உள்நுழைத்தும் மடை மாற்ற முயல்கின்றன. முருகதாஸ் போன்ற புதிய முளைகளை தங்கள் நிலமெங்கும் நட்டுக்கொள்ள முயல்கிறார்கள்.

சமூகத்தின் சகல அறிவுத்துறைகளும் பெரும் நிறுவனக் கட்டுக்கள் இயக்கப்படுவதால் சிந்தனைக் சுதந்திரம்,வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பவை பெயரளவுக்கே எனும் யதார்த்தம் உறுத்துகிறது.

இவ்வகை உரிமை பற்றி ஊடகங்கள் உரத்துக் குரல் எழுப்புவது போல் தோன்றினாலும், அது ஒரு பாவலாதான்; சிந்தனை வெளி, படைப்பாக்க வெளி ஒரு மட்டுக்கு உட்பட்டே இயங்க வேண்டியுள்ளது. இது தன்னியல்பான இயக்கமாக படைப்பாளிகளிடமும் படிந்துள்ளது. இன்றைய தமிழிலயக்கியத்தின் புதிய படைப்பாளிகள் கூட நிறுவனச் சூழல் விதித்ததை தன்னியல்பாக தமக்குள் சுவீகரித்துக் கொண்டுதான் இயங்குகிறார்கள். இங்கு கட்டற்ற படைப்பு வெளி என்பது இல்லை. கட்டுப்பாடுள்ள படைப்பு வெளி உண்டு. படைப்பாளிகள் பலரும் இந்த ஒடுக்கத்துக்குள் அடைபட்டவர்களே.

கயத்தாறு புளியமரம் என்ற எனது கதை. நான் புதுச்சேரியில் தற்போது வசித்து வருவதால் அங்கு கி.ராஜநாராயணனிடம் படைப்புக்களை பார்வையிட முதலில் தருவேன். கதை நன்றாக வந்திருக்கிறது என விகடனுக்கு அனுப்பி வைக்கும்படி தெரிவித்து விகடனுக்கும் தொலைபேசியில் பேசினார். விகடனுக்கு அனுப்பி வைத்து இருமாத காலமாயிற்று. ஆசிரியர் வெளிநாடு சென்று விட்டதாகவோ ஆசிரியர் பார்வையிட நேரமில்லாதிருப்பதாகவோ தெரிவித்தனர். இரு மாதம் கழித்து கதையில் நேரடி அரசியல் தொனி இருப்பதாக - ஆனால் நல்ல வடிவில் வந்துள்ளதாக வெளியிட இயலவில்லை எனவும் வேறு படைப்புகள் அனுப்பி வைக்குமாறும் தொடர்ந்து பங்களிப்புச் செய்யக் கேட்டுக்கொள்வதாகவும் கூறப்பட்டது. அந்தக் கதை இன்றைய ஆட்சியாளர்களின், முந்திய ஆட்சியாளர்களின், அதற்கு முந்தி இருந்த ஆட்சியாளர்களின் அரசியல் கலாச்சாரம் பற்றியது; அரசியல் உள்ளடக்கமிருப்பதாக தெரிவிப்பது அதைத்தான். கயத்தாறு புளியமரம் கதை - பின்னர் காக்கைச் சிறகினிலே (ஜனவரி - பொங்கல் சிறப்பிதழ்) இதழில் வெளியானது.

இங்கு கட்டற்ற மாற்றுப் படைப்புவெளி பற்றி யோசிக்க படைப்பாளி தள்ளப்படுகிறான். திரைப்பட வணிகத்துக்கு எதிராக குறும்படங்கள் எனவும், பெரும் ஊடக நிறுவனங்களுக்கு மாற்றாக சிற்றிதழ்கள் எனவும் மாற்றுப் படைப்பு வெளிகளை உருவாக்கவும் வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் 1960களின் இறுதியில் ஜெயகாந்தன் ரிஷி மூலம் கதையினை வெளியிட்ட தினமணிக் கதிர் நிறுவனம் அதனை வெளியிட்டமைக்காக வருந்துவதாக அறிவித்து அவமானப்படுத்தியதையும் கருதிப் பார்க்க வேண்டியுள்ளது.

மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற ஒரு சொல்லாடல் வழங்கி வருகிறது. அறிவுத்துறையை, அதன் முளையாய் தெறிக்கும் சிந்திப்புத் திறனை இன்றைய பெரும் ஊடக நிறுவனங்கள் வழி நடத்துகிற சமூகப் பிராணியாக மனிதன் ஆக்கப்பட்டுள்ளான்.

கட்டற்ற, தடையற்ற சிந்திப்புவெளியில் இயங்கும் படைப்பாளிகள் கலகக்காரர்களாக முத்திரையிடப்பட்டு ஒதுக்கப்படுவார்கள்.
படைப்பு அறிவுத்துறை சார்ந்த ஒரு செயல். பெரிய நிறுவனங்கள் அறிவுத்துறை அனைத்தையும் கைப்பற்றியுள்ள காலத்திலும் வழங்கப்பட்ட வெளிக்குள் வாழ்க்கையைப் பேசுகிற கலைத் திறனுள்ள படைப்புக்களை வழங்குகிற சிலரில் வண்ணதாசன் பேசப்பட வேண்டிய புள்ளி. வாழ்க்கைக் கட்டுமானமும் சமுதாய அமைப்புக்களும் தனக்கு வழங்கிய படைப்பு வெளியில் சாதனை செய்தவர்.

எந்த ஒரு உழைப்புக்கும் ஒரு கருவி தேவைப்படுகிறது. கரும்பை வெட்ட ஒரு கத்தி; களையெடுக்க களைக்குச்சி; கதிரறுக்க பண்ணரிவாள். எழுத ஒரு பேனா. சொற்களைக் கருவியாகக் கொண்டு உழைக்கிற உழைப்பு படைப்பு.

நம் கைகளும் கால்களுமே லகுவான, சுளுவான கருவிகள்தாம். எந்தெந்தக் கருவியை எப்படியெப்படிக் கையாளுவது என்பதில்தான் ஆளுமை, அல்லது திறன் எனப்படுவது தங்கியுள்ளது.

மொழி, அதன் சொற்கள் என்ற கருவியைக் கொண்டு, கவிதையாக்கலாம்; கதை சொல்லலாம், கட்டுரை வடிக்கலாம். சொற்களைக் கருவியாகக் கொண்டு உழைக்கிற உழைப்பில் வேறு பல பூக்களையும் மலரச் செய்யலாம்.

"ஒரு எழுத்தாளன் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகையில் மட்டுமல்லாது, ஒவ்வொரு இலக்கிய வகையிலிருந்தும், தன்னுடைய கலைத்திறனை மேம்படுத்த வேண்டும். உங்கள் பேனாவை நீங்கள் எப்போது கையிலெடுக்கிறீர்களோ, அப்போதே, உங்கள் கலை முழுமைக்கும் நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள்" என்று கான்ஸ்டான்டின் பெடின் (ருசிய இலக்கிய ஆளுமை) கூறியதை தன் வினைத்திறனால் மெய்ப்படுத்துபவராக வண்ணதாசன் ஆளுமை கொண்டுள்ளார். வாழ்க்கையின் உண்மையை வெளிப்படுத்தும் கலையே, வினைத்திறன் எனக் கொள்வோமானால், அது நமது கருதுகோள் வரையறை ஆகுமெனில் வண்ணதாசன் எள் முனைகூட விலகிப் போகாதவராக பயணித்துக் கொண்டிருக்கிறார்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ