பாவை சந்திரனின் நல்ல நிலம்


கிராமத்தில் முளையாகி, பயிராகி, பிறகு விதைவிட்ட மனிதர்கள். அவா்களுக்கு மத்தியில் முழங்கால் புழுதிபட வாழ்ந்த படைப்பாளி, நகரத்தின் மேல் கீழ் புரட்டலில் கூட, பேனா அலுங்காமல், குலுங்காமல் அந்த சம்சாரிகளின் வாழ்க்கையோட்டத்தை நகா்த்துகிறது.

அந்த மக்களின் கதையை வாழ்நாள் முழுவதும் பேனா பிடித்தாலும் எழுதித் தீா்த்து விட முடியாது. புண்ணாக்குக் கரைசலை ஒருமூச்சு உறிஞ்சி பிறகு தொட்டியில் முக்குளித்து முக்குளித்து செல்லக் கலக்கல் செய்கின்றன உழவு காளைகள். அந்த அளவு அவா் அலசியிருக்கிறார். உட்சிரசித்திருக்கிறார். இன்னும் ஏதாவது இருக்கிறதா என்று முக்குளித்துத் தேடுகிறார். எதற்கும் அடங்காத விரிந்த வட்டமாய் வாழ்க்கை விரிகிறது. சொல்வழக்கு, சடங்கு, விழா, சாத்திரங்கள் என இணைந்து விரிந்து வருகின்றன.

உழவு பிந்தவில்லை, பொதுமலாய் ஈரப்பதமான மண் வகிந்து கொடுக்க எழுத்து உழவு பாய்ச்சலாய் நடக்கிறது.

மலைமலையாய் கொட்டிக் கிடக்கிறதே என்ற மலைப்பில்லை. உளி, உளியாய் செதுக்கிட முடியும் என்ற நம்பிக்கை.

இன்று வட்டார வாழ்வில் இடி விழுந்து விட்டது. கிராமம் அதன் இயற்கையில் இல்லை. இந்த நூற்றாண்டின் முந்திய நூற்றாண்டு தொடக்கத்திலேயே அது சிதைய ஆரம்பித்து விட்டது. கிராமம் நிம்மதியாகத் தூங்கி ஒரு 199 வருசம் ஆகிவிட்டது.

விவசாய நிலைகளின் அழிவு அல்ல, குணங்களின் அழிவாக, கூறு போடப்பட்டு பிரதிபலிக்கிறது. உறவுகளில் வேக்காடு தகிக்கிறது. வேக்காடு தாளாமல் கிராமத்தின் உடம்பில் பொரிப்பொரியாய் வேனல் கொப்புளங்கள் அவ்வப்போது ‘அக்கி’ எழுதி ஆற்றிக் கொள்கிறார்கள். காமு போல, மீனாம்பாள் போல.

எல்லா மண்ணின் வளங்களையும் தன்று. மனித குணங்களையும் தின்று ஏப்பம் விடுகிற கொடிய பகாசுரன் எவன்? காலச் சுழங்சியா? சமுதாய மாற்றமா? அல்லது அதற்கு வேறு பெயரா? முதலாளியமா? அல்லது நேற்றுவரையான சரித்திரத்தை மாற்றி அமைக்கிற கதியில் ஊடாடத் தொடங்கிவிட்ட உலகமயமாக்கலின் முளை விடலா? இந்த எல்லாமும் தான்.

எப்படியென்றாலும் பெயா் வைக்கலாம் அவைகளுக்கெல்லாம் கா, சுப்புளி, குழந்தைவேறு, மீனாம்பாள், சீத்தம்மா, சாத்தூரான், முத்துச்சாமி, நீலமுகம் என்று பாவை சந்திரன் பெயா் வைத்திருக்கிறார். பெயா்கள் ஒரு குறியீடு மட்டுமே.

சிந்தனை, செயல், வாழ்வு ஒழுங்கு என சமுதாய ஒழுங்குகள் எல்லாவற்றிலும் நோ்த்தன்மை இருப்பதான தோற்றம். தனியாக வாழ முடியாமல், சமுதாயமாக கூட்டாவ வாழ்கிற கடடாயத்தினால் ஒழுங்குகள் உருவாகின. பிறகு தனிமனிதனும் மீறமுடியாத மனதளவிலான ஒழுங்காக ஆகிவிடுகிறது. மீறுதல் என்ற நினைப்பே சாத்தியமில்லை. ஆனாலும் சுப்பளி போல், மீனாம்பாள் போல், சாத்துஸரான். நமசிவாயம். சீத்தம்மா போல், விதிமீறல்கள் தொடா்கின்றன. முத்துச்சாமி. குழந்தைவேலு போல் சமுதாய கட்டுமானத்தை திருப்பி வைப்பதற்காக விதிமீறல்களும் நாட்டுமக்களின் மொழியில் சொன்னால் நல்லதனமான மீறல்களும் நடக்கின்றன.

நெஞ்சில் ஒரு முள் குத்துகிறது. தஞ்சை பூமி,தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டது. அவா்கள் அடித்தள மக்கள், பொருளாதார அடிநிலை என்ற வேறுபாடு மட்டுமல்லாமல், கலாச்சார அடிநிலை என்ற கொடிய முகமும் அந்த சமூகத்திற்கு உள்ளது. சமகாலம் வரை இந்த நாவல் நடக்கிறது. எங்கும அதுபற்றி அடிநாதமாகவோ உரத்தோ, மௌனமாகவோ பேசப்படவில்லை. ஏன்?

குடும்பம் துறந்து, நாடு துறந்து ஏன் சுப்பளி நள்ளிரவில் வெளியேறினான். வாசகனுக்கு நிறைய வாசிப்புச் சமவெளிகளைத் திறந்து விடுகிறது. குழந்தையோ, குழந்தைக்கு உரித்தானவா்களோ நீண்ட காலம் பிரிந்திருந்தால் சுபம்என்று சோசியகாரர் சொன்னது அல்லது நமசிவாயம் கொலை ஏதோ ஒரு ரூபத்தில் இப்படியெல்லாம் வாசகனை யூகம்தான். இந்த இடைவெளிகளில் வாசகன் நிறைய வாசிக்கிறான். வாசகனுக்கான தேடல் முக்கியமாகி நிற்கிறது.

அந்த அதிர்ச்சிக் கடலிலிருந்து தும்பையோ துரும்பையோ பிடித்துக்கொண்டு கரையேறி, காமு தன்னை நிலைநிறுத்திக் கொண்டு தானொரு வரலாறாக மாறிப்போகிறாள்.

தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு குணம் உண்டு இலங்கையைத் தவிர வேறெந்த நாட்டிலும் வேரூன்றி நின்றதில்லை. அங்கேயும் தனது இருப்புக்காக, வாழந்தலுக்காக போர்நிலையில தீா்மானிக்க வேண்டிய கட்டாயம். பர்மா, மலேசியா, சிங்கப்பூா், தென்னாப்பிரிக்கா என்று பறக்கச் சிறகிருந்தது. பதிக்கக் கால்களில்லை. நடந்த இடங்க்ள நடக்கும் தடமாய் ஆகவே இல்லை. கொடிகட்டிப் பற்ந்த வணிகச் சமூகம் உடைந்து நொறுங்கிப் போனது அயல்புலங்களில். ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால் என்று அலைஞ்சான்களாக, அங்கே சம்பாதிப்பதுல்ல இங்கே கொண்டுவந்து சேமிப்பது, அங்கே ஒரு குடும்பமும் இங்கே ஒரு குடும்பமும் ஆக தமிழ் வணிகச் சமூகத்தின் ரத்த்தில்ஊறிய நோய்க்கு சுப்புளியும் விலக்கல்ல.

காமுக்கு அதிர்ச்சியில்லை. மகன் குழந்தைவேலு பா்மாவுக்கு ஓடிப்போனபோதும், அது குடும்பத்தின் பிறவிக்குணம் என்கிறாள். ‘ஒன்னுவந்தா, ஒன்னு போகுது’ என்று தேற்றிக் கொள்கிறாள். ஒட்டுமொத்தமாய் ஒரு சமூகம் மாற்ற அலைகளில் ஆடுதலில், தன் குடும்பம் உள் வாங்கிக் கொண்ட குணக்கூறு என்று அவளால் யோசிக்கமுடியவில்லை. யோசிக்க முடியாது. வேறு யாருக்கும் இல்லாத மாதிரியாக தன் குடும்பத்துக்கு வந்த வினை என்றுதான் கருதுகிறாள்.

இங்கேதான் பழைய நிலமானிய சமூகத்தின் உதாரண மனுசியாகிறாள். சலித்தெடுக்கப்பட்ட நல்ல குணங்களின் உருவமாகிறாள். இங்கேதான் எதைப் பற்றியும கவலைகொள்ளாத – குடும்பக் கட்டமைப்பின் ஒட்டுமொத்தப் பாரத்தையும் லயிப்போடு சுமக்கிற மனுசி உருவாகி நிற்கிறாள்.

(மனுசி என்பதற்கு இன்றைய புரடசியலைகளில் புத்தாக்கங்கள் கொண்டு மேலெழும் வடிவம் இவளுக்குப் பொருந்தாது)

இங்கேதான் நிலமானிய சமூகத்தின் அச்சாக சுப்புணி ஆகிப்போகிறான். மீனாம்பாள், சீத்தம்மா, நீலமுகம் என்று கொடுக்குகளாய் தொடருகிறார்கள்.

இங்கேதான், படைப்பின் ஒருமை சிந்தாமல், சிதறாமல் நிலை நிறுத்தத வேண்டிய ஆசிரியா் குணக்கலவைகளும். சமூக விவரங்களும் கொண்டு ஒரே நோக்கமாய் இப்பத்தான் அப்படியே ஒரு நடைபோய் வந்தது போல் தோணுகிறது. போய் வருகையிலேயே காமு முதுற்கொண்டு எல்லாப் பாத்திரங்களும் நெஞ்சுக்கூட்டின் மேல் எல்லா இடங்களிலும் கால்வைத்து மிதித்து நடக்கிறார்கள்.

நிலமானிய சமூகத்தின் வாழ்வு முறை, வாழ்வு முறைக்குள்ளான உறவுகள், சிந்தனையோட்டம். கலாச்சாரம், சடங்குகள், நம்பிக்கைகள் இவைகளும், இவைகளின் வெளிப்பாடுகள் தாம் இந்தப் பாத்திரங்கள்.

வித்தியாசமான மனிதா்களின், வித்தியாசமான குணவகைகளைப் பேசுகிற நாவல்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ