கொழும்பைப் புதையுங்கள்... பாரதியை வாழவிடுங்கள்!

மக்களைக் கொன்றுவிட்டால், அவர்கள் பேசிய மொழி வாழுமா?- இது அபத்தமான கேள்வி என்றால் கொழும்புவில் நடக்கும் மாநாடும் அத்தகைய அபத்தம்தான்!

சென்னையில் உள்ள பாரதியார் சங்கமும், கொழும்பு தமிழ்ச் சங்கமும் இணைந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில், பாரதி விழாவையும் உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டையும் ஒருசேர நடத்துகின்றன. இதில் கலந்து​கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து தமிழறிஞர்கள் சிலர் சென்றதற்கு வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து எழுத்தாளர் பா. செயப்பிரகாசம்

'கொழும்பைப் புதையுங்கள்... பாரதியை வாழவிடுங்கள்!'
தலைமையில் 50 படைப்பாளிகள் கண்டனம் தெரிவித்து, விழாவையும் மாநாட்டையும் புறக்கணிக்கக் கோரி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.

'ராஜபக்சே அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையையும், தமிழர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளையும் பெரும்பாலான உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. இலங்கையைக் காப்பாற்ற இந்தியா தொடர்ந்து முயன்றாலும், உலக அரங்கில் வலுவான எதிர்ப்பு அலை அடிக்கிறது. இந்த நிலையில், 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்வோம்’ என்ற முழக்கத்துடன் ராஜபக்சேவின் தலைநகரில் இந்திய அதிகாரிகளைக் கொண்டு விழா எடுப்பது, பாரதி என்கிற போராளிக் கவிஞனின் புகழுக்கும் பெருமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும். இனவெறி இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உலக அரங்கில் ஏற்படுத்துவதைத் தவிர, இந்த விழா வேறு எந்த விளைவையும் ஏற்படுத்தாது. கொல்லப்பட்ட எம் சொந்தங்களுக்கு தாய்த் தமிழகம் ஒருபோதும் துரோகம் செய்யாது என்பதைப் பாரதி அன்பர்கள் நிரூபிக்க வேண்டும். கொல்லப்பட்ட தமிழ்ச் சொந்தங்களுக்கு, மனச்சாட்சியுள்ள எழுத் தாளர்​களாகிய நாங்கள் ஒரு போதும் துரோகம் இழையோம் என உறுதி பூணுகிறோம்’ என்கிறது அறிக்கை.


இந்த அறிக்கையில் புலவர் புலமைப்பித்தன், இயக்குநர்கள் ஆர்.சி.சக்தி, புகழேந்தி தங்கராஜ், கவிஞர்கள் காசி ஆனந்தன், இன்குலாப், புவியரசு, அறிவுமதி, தாமரை, மணிகண்டன், எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், தமிழருவி மணியன், கோவை ஞானி, அழகியபெரியவன் சந்திரா, தி.பரமேசுவரி ஓவியர்கள் வீர.சந்தானம், டிராட்ஸ்கி மருது உள்ளிட்ட 50 படைப்பாளிகள் கையெழுத்துப் போட்டு இருக்கின்றனர்.


இந்தக் கண்டன அறிக்கையை முன்னின்று தயாரித்த எழுத்தாளர் பா.செயப்​பிரகாசத்தை அணுகினோம். ''இலங்கையின் மனித உரிமை மீறல்கள், மீள்குடியமர்த்தல், மறுவாழ்வுப் பணிகள் குறித்து வரும் அக்டோபர் மாதம் ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா கூட்டத்தில் மீண்டும் பரிசீலிக்கப்பட இருக்கிறது. அப்போது, அங்கே எல்லாம் சரியாக இருக்கிறது. இலக்கிய விழாக்கள் நடத்தும் அளவுக்குத் தமிழர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என்று உலகுக்குச் சொல்வதற்காகவே இந்த விழாக்கள் நடத்தப்படுகின்றன. இலங்கை அரசும் இந்தியத் தூதரகமும் இணைந்து இந்த மாநாட்டுக்கு உதவுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து வழக்கறிஞர் காந்தி சென்றிருக்கிறார். இவர் ஒரு காங்கிரஸ்காரர். இவர்தான் பாரதியார் சங்கத்தின் தலைவரும்கூட. கல்கி தொடங்கிய சங்கம் இது. அதன்பின், ம.பொ.சி, பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோர் இதற்குத் தலைவராக இருந்திருக்கின்றனர். விடுதலை குறித்து பாரதி என்ன கருத்து வைத்திருந்தார் என்பதை அறிந்த பாரதியார் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மற்ற நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? கொழும்பில் உள்ள தமிழ்ச் சங்கத்துடன் இணைந்துதான் இதை நடத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

இலங்கையில் உள்ள சில எழுத்தாளர்கள், கொழும்பு தமிழ்ச் சங்கம் இலங்கை அரசின் ஆதரவில் இந்த மாநாட்டை நடத்தவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், இலங்கை அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த நிகழ்வையும் நடத்த முடியாது என்பதுதான் அங்கே உள்ள உண்மை நிலைமை. கவியரங்கம், பாராட்டு விழா போன்றவற்றை வேண்டுமானால் சுதந்திரமாக நடத்த முடியும். இதுபோன்ற மாநாடுகளை இலங்கை அரசின் ஒப்புதல் இல்லாமல் நடத்தவே முடியாது என்பதுதான் நிலைமை.

2010-ல் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நாட்களில் நான் இலங்கை சென்று இருந்தேன். அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 'இலங்கை அரசின் ஒப்புதலோடுதான் இந்த மாநாடு நடக்கிறது’ என்று சொன்னார்கள். ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் சிவத்தம்பியே பின்னாளில், 'இந்த மாநாட்டை வேறு நாட்டில் நடத்தியிருக்க வேண்டும்’ என்று கருத்துக் கூறினார்.

சாக்ரடீஸுக்கு மரண தண்டனை விதிக்கப்​படுவதற்கு முன்னால் நீதிபதி அவரிடம், 'உன் கருத்துக்களைத் திரும்பப் பெற்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப்​ போகிறாயா? அல்லது உன் உயிரைவிட்டு உன் கருத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறாயா?’ என்று கேட்டார். சாக்ரடீஸின் மனைவி உட்பட சுற்றத்​தார்கள் அனைவரும், 'உயிர் முக்கியம். ஆகவே கருத்துக்களைத் திரும்பப் பெறுங்கள்’ என்றனர். ஆனால், சாக்ரடீஸ் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் 'என்னைப் புதையுங்கள். என் கருத்துக்கள் உயிர் வாழட்டும்’ என்றார். நான் அந்த நீதிபதி போல கேட்க விரும்புகிறேன். 'பாரதியைப் புதைத்துவிட்டு கொழும்பை வாழவைக்​கப்​போகிறீர்களா? அல்லது கொழும்பைப் புதைத்து பாரதியை வாழவைக்கப் போகிறீர்களா?’ என்பது​தான். என்ன செய்யப்போகிறார்கள் பாரதி அன்பர்​கள்?

நன்றி:  விகடன் 06 ஜூன் 2012

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?