சோளகர் தொட்டி காட்டும் இருவேறு உலகம்


வனத்தில் நள்ளிரவில் சோளகர் தொட்டியின் கதை தொடங்குகிறது. காட்டுப் பூச்சிகளின் இடைவிடாத சப்தத்திடையே தூங்கிக் கொண்டிருக்கிறது சோளகர் தொட்டி. குளிர்காலத்தில் கதகதப்பிற்காய் குடிசையின் மையத் தரையில் சிறு குழி வெட்டி, கருங்கற்களை வைத்துக் கட்டிய தரையில் தீ மூட்டி, சுற்றிலும் படுத்து உறங்குகிறார்கள் சிவண்ணாவும், மனைவி சின்னத்தாயியும். ஆறு வயது மகன் ரசனும். அறுவடைக்குப் பின் காய வைத்து, எடுக்கப்பட்ட ராகி (கேழ்வரகு) தானியக் கதிர்கள் குடிசை வாசலில் குத்தாரி அமைத்துப் பாதுகாக்கப்பட்டிருந்தது. தானிய வாசைன நுகர்ந்த யானைகள் திட்டுத் திட்டாய் இருள் நகர்ந்து வருவது போல், வந்து நின்றன. மூங்கில் படல் முறிபடும் சப்தத்தில் தூக்கம் கலைந்து மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த மூங்கில் கட்டிய தகரத்தை எடுத்தான். "யானை, எழுந்திரு, வெடி எடு" என்று மனைவி சின்னத்தாயியை காலால் எட்டி உதைத்த சிவண்ணா `ஊ ஊ` என்று குரல் எழுப்புகிறான். சிவண்ணாவின் சத்தமும், தகரத்தின் ஒலியும் தூங்கிக் கிடந்த சோளகர் தொட்டியை துணுக்குற வைத்து எழுந்து வரச் செய்தது. தொட்டியினர் சப்தமும், வெடிகளை வெடித்து வீசிய சப்தமும், கந்தக நெடியும் நுகர்ந்து பின் வாங்கிய யானைகள் வனத்துள் இருளில் மறைந்தன.

ஆதிக் கூட்டுச் சமுதாயத்தின் பிரக்ஞை ஒரு போதும் காட்டு மக்களிடம் தூங்குவதில்லை. அவர்கள் தூங்கினாலும் ஒவ்வொரு நாளும் அது விழித்துக் கொண்டிருக்கிறது. காட்டு யானைகள் படையெடுத்த அன்றும் உயிர்வாழ் பிரக்ஞை விழித்துக் கொண்டது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும் கூட்டுச் சமூக வாழ்க்கை அன்றிரவு முழுதும் அவர்கள் ஆடிப்பாட விடியல் வருகிறது.

யானைகள் இரவில் உடைத்த வேலியைக் கட்ட, பாங்காட்டு மூங்கில் தரிக்கப் போகையில், சிவண்ணாவின் குடிசை முன் ஆண்கள் கூடுகிறார்கள். புட்டனனின் மாமியார் ஓடிவந்து, புட்டன் சம்சாரத்துக்கு பிரசவம் ஆகப் போவதாக சேதி சொல்கிறாள். எல்லோரும் சேர்ந்து புட்டனின் குடிசைக்கு ஓட, சோளகர் தொட்டியின் மூத்த பெண்கள் மருத்துவம் பார்க்க, குடிசைவெளியில் ஆண்கள் காத்துக் கிடக்கிறார்கள். குழந்தை பிறந்ததும், மகிழ்ச்சியாய் கொண்டாடுகிறார்கள்.

சத்தியவாக்கு யானைக்கு உண்டு என்று நம்புகிறவர்கள் தொட்டி மக்கள். நாம் விலங்குகளைக் கலைக்கிறபோது, அவை நம்மைக் கலைக்க வரும். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கத்தில் வாழுகிறவர்கள் சமவெளி மனிதர்கள். விலங்குகளின் உணவை, வாழ்விடங்களைப் பறிப்பது ஆச்சரியமன்று. நாம் அவைகளது சிதைக்காத வரை அவை நம் வாழ்விடத்துக்கு வராது. சத்தியவாக்கு யானைக்கு உண்டு என்ற மலைவாழ் மக்களின் நம்பிக்கை இந்த உண்மையிலிருந்து பிறக்கிறது.

ஆதிக்கூட்டு வாழ்க்கைச் சமுதாயத்தில் போல இன்பத்தையும் துன்பத்தையும் பொதுவாகப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

சிவண்ணாவும்,புட்டனும் மூங்கில் படல் கட்டிக் கொண்டிருந்தபோது வனத்திலிருந்து வந்த மானை - நாய்கள் விரட்ட, ஓட முடியாமல் தவித்து நிற்கிற போது- சிவண்ணா கல்லால் அடித்து வீழ்த்துக்கிறான். உடனடியாக மானை குடிசைக்குத் தூக்கிச் சென்றான் புட்டன. மான் தோல் உரிக்கப்பட்டு, எழும்புகளும் சதையும் பிரிக்கப்பட்டன. மானைக் கொன்ற விவரத்தை சில நாட்கள் கழித்தேனும் மான் தோல் காட்டிக் கொடுத்துவிடும். வனக் காவலர்கள் மூக்கு வியர்த்து வந்து நிற்பார்கள். அவசரமாக மானின் தோலையும் எலும்புகளையும் ஆழமாகக் குழி தோண்டிப் புதைக்கிறான் சிவண்ணா.

மான் கறியைக் கூறுபோட்டு தனித்தனியாக எடுத்து வைக்கிறார்கள். முதல் கூறு விதவைப் பெண்ணுக்கு. விதவையான ஜோகம்மாவுக்கு அதனை ஒதுக்கினர். அடுத்தகூறு, அவர்களின் தலைமையான கொத்தல்லிக்கும், பூசாரி கோல்காரனுக்கும். அடுத்து இரையை வேட்டையாடிய சிவண்ணாவுக்கும் புட்டனக்கும் அதிகமான பங்கு. அதன் பின் மற்றவர்களுக்கு கூறு பிரிக்கப்பட்டு, இறுதியில் வேட்டைக்கு உதவிய நாய்களுக்கும் கறிப்பங்கு ஒதுக்கப்படுகிறது.

வேட்டையாடிய இரையை பங்கிடுவதில் ஒரு அறம், நெறி அவர்கள் மத்தியில் வாழுகிறது. ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கு முதல் ஒதுக்கீடு. இந்த வழிமுறையை எவரும் கேள்வி எழுப்பவில்லை. துணையற்றுப் போன ஒரு உயிர், இதம் கொண்ட கைகளின் வருடலை எதிர்நோக்கிக் காத்து நிற்கும் என்பது உறுதிப்படுகிறது.

ஈழத்தின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் யுத்த முடிவின் பின் 89 ஆயிரம் தமிழ் விதவைகள் இருப்பதாக ஒரு விவரம் தெரிவிக்கிறது. விதவைகளின் மறுவாழ்வுக்கு சிறு முயற்சியும் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படவில்லை. தன்னைப் பெரிய அண்ணனாக நினைத்து உலகத்தை அதட்டல்போடும் ஐ.நா.வும் கண்டுகொள்ளவில்லை. விதவையைக் கருணை காட்டி கண்போல காத்து வரவேண்டும் என்ற இனக்குழு சமுதாயத்துக்கும், பெண்களாயினும் தமிழர் அனைவரும் அடிமைகள் என எண்ணுகிற இனப்படுகொலை சமுதாயத்துக்கும் எத்தனை எத்தனை வேறுபாடு!

“இந்தக் கறியை உப்புக் கண்டம் போட்டு வைத்தால், விரும்புகிறபோது எடுத்துச் சமைக்கலாம் அப்படி ஒரு காலமிருந்தது”
என்கிறான் கொத்தமல்லி பெருமூச்சு விட்டுக் கொண்டு;

“இப்ப உப்புக்கண்டம் போட்டேன்னு தெரிஞ்சா உன் உடம்பை உப்புக் கண்டம் போட்டு விடுவார்கள்" என்கிறான் சிவண்ணா.
உண்மைதான். சோளகர் தொட்டி போன்ற வனக்கிராமங்களின் மக்கள் எப்போது மாட்டுவார்கள் என்று கீழே சீர்காட்டியில் (வயல்காடு) இருக்கிற மணியக்காரனும், துரையனும் வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாமிச வாசைன மூக்கில் பட்டாலும் வனச்சரகத்துக்குத் தெரிவித்து வனக்காவலர்கள் கிராமத்தின் மென்னியைப் பிடித்துவிடுவார்கள்.

வனத்தில் வனச்சரக அதிகாரி வைத்தது சட்டம்.

"எனக்கு வெட்கமாயிருக்கப்பா. திருடனைப் போலவா நாம் வேட்டையாடனும், ஒரு சமயம் நாம ஆண்ட பூமியடா இந்தக்காடு"
வருத்தம் தோய வெளிப்படுகிறான் கொத்தல்லி. வனத்தின் குழந்தைகள் அவர்கள். காட்டின் உரிமை அவர்களுடையது. அவர்களுடைய வீடு அவர்களுக்கு இல்லாமல் ஆக்கப்படுகிறது. அவர்களின் இல்லத்தில் அவர்களே திருடனாட்டம் கண்காணிக்கப்படுகிறார்கள்.

கொத்தல்லிக்கு புகழ்மிக்க மற்றொரு பக்கம் உண்டு; பழைய வரலாறு அது. வேட்டைக்கு வந்த வெள்ளைத்துரை காட்டில் கூடாரம் அடித்து விளக்கு ஒளியில் எழுதிக் கொண்டிருந்தபோது, யானைக்கூட்டம் தாக்குகிறது. காவலுக்கிருந்த கொத்தல்லி துரையைக் காப்பாற்றி தூக்கிக் கொண்டு வந்தான். அவருடைய துப்பாக்கியை பரிசாக அளித்துவிட்டு அவனுடன் ஒரு படமும் எடுத்துக்கொண்டு "காட்டில் எவ்வளவு இடம் வேண்டுமானாலும் எழுதித் தருகிறேன்" என்றான். துரை சொன்னது மட்டுமல்ல, எழுத செம்புப் பட்டயமும் எடுத்தான்.

"வேண்டாம் இந்தக் காடே எங்க சொத்துத்தானுங்க, பட்டயம் எதற்கு"
மறுத்துவிடுகிறான் கொத்தல்லி

அரசாங்கம் என்ற திருடன் அவர்களது சொந்த பூமியை அபகரித்துக் கொண்டு இன்று ஒன்னுமில்லாதவர்களாக ஆக்கியிருக்கிறான்.
"தொட்டிக்காரன் சுட்டா வனத்துக்குள்ள மிருகம் காணாமப் போச்சி? கீழ்நாட்டுக்காரங்க, வனக்காவலர்களோட வந்து வேட்டையாடி அவனுக பெண்டு, பிள்ளைகளுக்குக் கறியைக்கொண்டு போறானுகளே அது தெரியாதா? என் வயசில நான் பார்த்த பல மிருகம் காணாமப் போயிடுச்சி. அது எதனாலைன்னு தெரியாதா? சோளகனா எல்லாத்தையும் தின்னு ஏப்பம் விட்டான்?"

திருட்டு அதிகாரத்தின் துணையோடு நடக்கிறது. திருடராக்கப்பட்ட மலைவாழ்மக்களின் கேள்வி நியாயமானது. கொலை செய்வது குற்றம்; ஒரு அரசாங்கம் அதைச் செய்தால் நீதிமன்றத் தீர்ப்பாகிறது. குடி குடியை கெடுக்கும். அரசாங்கம் அதைச் செய்கிறபோது, குடிக் கடைகள் (TASMAC) திறக்கிறபோது, அது ’குடிகாரப் பய நாடாகப்’ பார்க்கப்படுவதில்லை. ஆறு உயிர்த்திருக்கும் கரையோர ஊர்களின் மக்கள், வீடு கட்ட, போனது வந்ததைப் பழுது பார்க்க, ஒட்டுச்சுவர் வைக்க, தீத்து மண் பூச, மணல் அள்ளினால் களவு, போலீஸ் கொட்டடி. பெயரில் அரசாங்கம் சட்டம்தீட்டி மணலி ஏலம் போட்டால் அதன்பேர் ’குவாரி’.

தமிழ்நாட்டில் மணற் கொள்ளை ஆற்றையே காணாமல் அடித்துள்ளது. நீலகிரி, கொடைக்கானல், சட்டிஸ்கார் போன்ற மத்திய மாநிலங்களில் நடைபெறுகிற வனக் கொள்ளைகள், அழிப்புகள் அதிகாரத்தின் ஆசியோடு நடக்கிறவைதாம்.

சிக்குமாதா துணிச்சல்காரன். அவனது துணிச்சலே சில நேரங்களில் ஆபத்தைக் கொண்டு வந்தது. ஒருமுறை ஒரு கடமானைத் தரத்திக் கொண்டு வனத்தில் மூன்று மைல்களுக்கு மேல் ஓடினான். துப்பாக்கியில் அடிபடாமல் ஓடிமறைந்தது கடமான். சிக்குமாதா திரும்பி வருகையில் இரண்டு கரடிகள். மேலே பாய்ந்து ஒரு கரடியின் நேரே துப்பாக்கியைச் சுட்டான். மற்றொரு கரடி ஓடிப்போக துப்பாக்கியில் சுட்ட கரடி விழுந்து கிடந்தது. சிக்குமாதா வெறி பிடித்தவனாக மாறினான். இரண்டு ஆட்கள் சிரமப்பட்டு தூக்க முடியாத கரடியை ஒற்றை ஆளாய் முதுகில் சுமந்து தொட்டி வந்து சேர்ந்தான். தொட்டி முழுதும் கரடி மாமிசத்தால் கொண்டாட்டம் கொண்டது. விடிந்ததும் சிக்குமாதா உப்புக்கண்டமிட்டு ஊறவைத்திருந்த கறியை கயிற்றில் சரம் போலக் குடிசைக்கு முன்பாக தோரணமாய் மூங்கில் கம்பில் கட்டி வெயிலில் காயவைத்தான்.

சோளகர் தொட்டிக்கு அன்றைக்கு பிடித்தது சனியன். கோயில் பூசாரி கோல்காரன், செந்நெஞ்சாவின் மகன் கோல்காரன். தொட்டித் தலைவனான கொத்தல்லி தலையிட்டும் அவர்களைத் துரத்தியடித்து அவமானப்படுத்தி விட்டு, சிக்குமாதாவை இழுத்துச் செல்கிறார்கள் வனக்காலவர்கள். வனச் சரக அலவலகத்தில் நிர்ணவாணமாக்கி சித்திரவதை செய்கிறார்கள். தொட்டியினர் எல்லோரும் சேர்ந்து கீழ்க்காட்டிலிருக்கிற மணியக்காரனிடமும் அவனது ஏவலாள் துரையனிடமும் முறையிடுகிறார்கள். துரையன் வனக்காவலர்களிடம் பேசுவதாகக்கூறி ரூ 600 தருவது என்று முடிவாகிறது. அப்போது தொட்டி மக்களிடம் இருந்தது ரூ 100 மட்டும். மீதியை அடுத்த வெள்ளாமையின் போது தருவதாகக்கூற துரையன் தன் கையிலிருந்து அந்த ஐநூறைத் தந்துவிடுவதாக ஏமாற்றுகிறான். சிக்குமாதாவைக்கூட்டிக் கொண்டு வந்த பின், அந்த வருட வெள்ளாமையும் ஏமாற்றிப் போக, பட்ட கடனுக்கு செந்நெஞ்சாவின் நிலத்தை அபகரித்துக்கொள்கிறான் துரையன். பக்கத்தில் தொட்டிவாசியான பேதன் நிலம் அடுத்து கவ்வப்படக் காத்திருக்கிறது.

2

சோளகர் தொட்டி நெடுங்கதை இரு பகுதிகளாக நடக்கிறது. சோளக மலைவாழ் மக்களின் கூட்டுவாழ்க்கை, உறவுமுறை, நம்பிக்கை, வழிபாடு என பண்பாட்டுக் கூறுகளை விவரிக்கும் முதல் பகுதி.

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் மலைவாழ் மக்கள் மீது ஆட்சியாளர்கள் அதிகார வர்க்கம் நடத்திய வெறியாட்டம் - இரண்டாவது பகுதி.

இதுவரை தமிழ்எழுத்து தீண்டாத ஒரு வாழ்க்கையை சோளகர் தொட்டி தொடுகிறது. ஒரு விசயம் புதிதாக இருக்கிறபோது அதன் எடுத்துரைப்பு சாதாரண முறையிலிருந்தாலும் உயிர்ப்பு கொண்டுவிடுகிறது.

சேளகர் தொட்டி வேறுவேறான இரு முரண்களில் இயங்குகிறது.
  1. பாங்காடு (மலங்காடு, வனம்) x சீர்காடு (வயல் நிலம், கீழ்காடு, சமவெளி)
  2. மலையின மக்கள் எதிர் x சமவெளி மனிதர்கள்
மலைவாழ் குடியினர் கூட்டுச் சமூகவாழ்க்கை கொண்டவர்கள். இனக்குழு சமூகம், நிலவுடைமைச் சமூகமாகத் திரிவுபடுமுன்னர் கொண்டிருந்த ஆதிக் கூட்டுமன வாழ்வு கொண்டவர்கள். சமவெளி அப்படி அல்ல. தனித்தனி உடமைகள், தனித்தனி மனங்கள். தனியுடைமைக் கொடுமையின் காட்சிகள்.

சேளகர் தொட்டியினர் கூட்டுவாழ்வின் பிரதிநிதிகள். சமவெளிக்காரர்கள் - கூட்டுச் சமூகப்பண்புகளைச் சிதைத்த தனிமனித ரூபங்கள்.

மலைவாழ்மக்கள் வெள்ளந்திகள் உழைப்பவராயிருப்பதலேயே வெள்ளந்தியான ஆத்மாக்களானாவர்கள். வாஞ்சையுடன் நாலு வார்த்தை சொல்லிவிட்டால் வயிற்றிலிருப்பதைக்கூட வாந்தி எடுத்துத் தருவார்கள்.

சமவெளி மனிதர்கள் வஞ்சகமும் சூதும்கொண்டவர்கள். கொமட்டில் இடதில் வலதில் எடுக்கிற வல்லவர்கள்.
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா?
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா
என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியது இவர்களைத்தான். முதலாளிய சமுதாயத்தில் வாழும் இவர்களின் பொதுச்சித்திரம் இன்னும் இதிலிருந்து மாறபடவில்லை
திருக்குறள், நாலடியார், நல்வழி, மூதுரை, நீதி போதனைகள் என எல்லா மருந்துகளும் இவர்கள் திருந்த தரப்பட்டன. இவர்களே ஒரு தீரா நோயாக, எந்த எந்த மருந்தையும் தோல்வி காண வைக்கும் நோயாக ஆகிப் போயினர்.

இந்த மருந்துகள் எதுவும் தேவைப்படாத கறையில்லாத வாழ்வை மலைவாழ் சமூகம் கொண்டிருந்தது.

கீழேயிருக்கிற சமவெளி, மேலிருக்கிற வெள்ளையை கறுப்பாக்க முயற்சி செய்கிறது.

இந்த மொத்த நெடுங்கதையும் அந்த விளையாட்டின் குறியீடுதான். அனைத்துச் சூழ்ச்சிகளும் கொண்டு துரையன் என்ற கீகாட்டு மனிதன், மணியக்காரன் துணைகொண்டு மலங்காட்டை ஊடுவரு முயற்சி செய்கிறான். தன் பெண்டாட்டியை மணியக்காரன் மாதப்பாவுக்கு வைப்பாட்டியாகக் கையளித்து வளைத்துக் கொள்கிறான். பிழைப்பின் பொருட்டு, மணியக்காரன் மாதப்பாவை வளைத்த விதமே அலாதியானது. மாதப்பா, துரையனின் மனைவி சாந்தாவின் அன்பைப் பெறுவதற்காக துரையனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தான். இறுதியாய், துரையனின் வீட்டின் முன்னால் மணியக்காரனின் செருப்பைக் கண்டால் துரையன் வந்தவழி திரும்பிப் போய்விடும் அளவு ஆகிவிட்டது. பிறகு துரையனின் வீடு, மணியக்காரனின் சின்ன வீடாக மாறிப்போனது. (பக் 29)

மணியக்காரனின் அதிகார நிழலில் துரையன் முதலில் கோல்காரனின் மகன் சிக்குமாதாவின் கொலைக்குக் காரணமாகிறான். பிறகு கோல்காரன் செந்நெஞ்சாவின் நிலம், பின்னர் பக்கத்திலுள்ள பேதனின் நிலம், அதிகாரத்தின் துணியோடு துரையன் சிறிய அளவில் செய்தலை - இந்தியாவின் மத்திய மாநிலங்களில் மொத்தமாய் காடுகைளையும் மலைகளையும் வளைத்து பூர்விகர்களை வெளியேற்றி வணிகக் குழுமங்கள் செய்தன.

பேதன் அவன் வயலில் அவரை விதைத்து, இரண்டு மாடுகளையும் பிடித்துக்கொண்டு வருகையில் வயலுக்குப் போகம் வழி முள்வேலி போட்டு அடைக்கப்பட்டிருந்தது. பேகன் அதிர்ச்சியில் நின்றபோது துரையனுடன் மணியகாரனுக்கு வேண்டிய கவுண்டர்கள் மூன்று பேரும் வந்தனர். அவர்கள் துரையனுக்கு இந்த பூமியை அரசாங்கம் பட்டா கொடுத்திருக்கு இனிமே நீ விவசாயம் செய்யக்கூடாது என்றனர். அவன் மனைவி ஜோகம்மாள் ”எங்க பூமிக்கு எவன் பட்டா, கிட்டா தர” என்றாள்

பிறகு என்ன நடக்கிறது? எதிர்த்துப் போராடிய பேகனும் மகன் சிவண்ணாவும் போலீசால் அடித்து உதைக்கப்படுகிறார்கள். காவல்நிலையத்தில் சித்திரவதை. போலீஸ் மொழியில் ’லாடம் கட்டுதல்’

வரி, பட்டா என்ற வார்த்தைகளைஅச் சமூகம் கேள்விப்பட்டதில்லை. அரசாங்கம் அந்தச் சீர்காடு முழுவதற்கும் அதை ஒட்டிய புறம்போக்கு நிலத்துக்கும் துரையன் பேரில் ரசீது போட்டிருக்கிறது. அதைக் காட்டித்தான் மணியக்காரன் கேட்டான் உங்கிட்டே என்ன இருக்கு?

அந்த அப்பாவி மக்களுக்கு இதொன்றும் தெரியாது. நீங்க பார்த்து எதை வேண்ணாலும் செய்யலாம். எத்தனை தலைமுறையா நாங்க விவசாயம் செய்தோம். அப்போ எந்த வரிகளும் எங்கிட்டே ஏன் வாங்கலை? என்று ஒருஅப்பாவி கேட்கிறான்.

எந்த அரசாங்க முறைகளும் எட்டாத, உள்நுழையாத ஒரு வாழ்வில் அவர்களிருந்தார்கள். எல்லா அதிகாரமும் கொண்ட அரசாங்கம், தன் வன்முறைக் படையான போலீஸை நேரடியாக இறகுகிறது. இங்குதான் வால்டர் தேவாரம், விஜயகுமார், தமிழ்செல்வன் போன்ற அந்தக்காலத்து போலீஸ் கதாநாயகர்களெல்லாம் வருகிறார்கள். பழங்குடி மக்களின், வனவாசிகளின் பூமி போலீஸ் பூமியாக மாற்றப்படுகிறது. வனக்கொள்ளையர்களுக்கு பாதுகாப்பாய் காக்கிச் சீருடை ரவுடிகள் நிற்கிறார்கள். இதுநாவலின் இரண்டாம் பகுதி.

சோளகர்தொட்டி மக்களின் சுதந்திரமான வாழ்வில் வீரப்பன் நுழைகிறான். சந்தனமரக் கடத்தலும், யானைத் தந்தங்கள் விற்பனையுமாக காட்டுமக்களின் வாழ்வைக் குலைக்கிறான். வீரப்பன் தனி மனிதன் அல்ல, அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள், வியாபாரிகள், வனச்சரக அலுவலர்கள் எல்லோருடைய கூட்டாளியாகத்தான் தொடங்கினான். பங்கீட்டில் பெரும்பகுதி இவர்களுக்குச் சேர வேண்டுமென்ற நிர்ப்பந்தத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, இவர்களினும் மேலான தனியனாய் கடத்தலை நடத்திய இந்த புள்ளியில் முறிவு ஏற்படுகிறது. வெளியுலகுக்கு வீரப்பன் திருடனாய், கொள்ளையனாய் ஒற்றை ரூபம் முன்னிறுத்தப்படுகிறது.

”காட்டில் வற்ர ஆளுக நடமாட்டம் அதிகமாயிருச்சி. நம்ம ஆளுங்களே சிலபேரு அவங்களுக்குத் துணைபோறாங்க. மத்தவங்க பார்க்கிற எல்லாத்தையும் காசு பண்ண நினைக்கலாம். அவங்களுக்கு மலையும் வனமும் மரமும் சாமியில்லே. ஆனா நமக்கு அதுதான் சாமி. மத்த குழந்தைகளோட சேர்ந்து நம்ம குழந்தை தப்பு செய்தா, நாம் நம்ம குழந்தையைத்தானே கண்டிப்போம். அப்படித்தான் சோளகனான நம்மையும் சாமி தண்டிப்பாரு”

வீரப்பனுக்குத் துணைபோகும் தொட்டிக்காரர்கள் சிலரை நினைத்துப் புலம்புகிறான் கொத்தல்லி.

”வெட்டின சந்தனமரத்தைத் தூக்கிவரச் சொன்னாங்க. பாங்காட்டிலே பத்துமைல் தூக்கிப் போய் லாரியில ஏத்தனும். மூனு நாளா வேலை. முந்நூறு ரூபா கெடைச்சது”
புட்டன் சொன்னான்.

கரிய இருள் சூழ்ந்த மலைமுகட்டில் நட்சத்திரங்களுக்குக் கீழே ஐந்தாறு நட்சத்திரங்கள் நகர்வது போல விளக்கின் வெளிச்சம் நகர்ந்துகொண்டிருந்தது. புட்டன், சிவண்ணாவிடம் மெல்ல ”கட்டைக்காரங்க கட்டை எடுக்கப் போறாங்க” என்றான். வெகு நேரம் அந்த வெளிச்சம் நகர்ந்து பின் சரிவாக இறங்கி மறைந்தது. வீரப்பனும் கூட்டத்தினரின் நடமாட்டமும் அவர்களுக்குப் புரிந்தது. முதல்முறையாக வனமும் மலையும் இரவும் தொட்டியினருக்கு அச்சம் தருவதாக மாறியது.

அடுத்த சிலநாட்களில் போலீஸ்காரர்கள் வந்தார்கள். போலீஸ்காரன் ஒருவன் கொத்தல்லியைச் கூட்டிவரச் சொன்னான். கொத்தல்லி வந்ததும், போலிஸ்காரர்களை வணங்கினான்

” வீரப்பன் சமீபத்தில போலிஸ் அதிகாரிகளைச் சுட்டிருக்கான். அதனால் தமிழ்நாடு கருநாடக போலீஸ் கூட்டு அதிரடிப்படை அமைச்சிருக்கு. எங்களுக்கு இந்த கிராமத்திலிலேயிருந்து வீரப்பனுக்கு உதவி போறதாத் தெரியவருது. அப்படி நடந்தா நிலைமை விபரீதமாயிடும். யாராவது வீரப்பனுக்கு உதவினா, வீரப்பனையும் ஒங்களையும் ஒன்னாத் தீத்துக் கட்டீருவோம்”

அதன்பின் ’சோளகர் தொட்டி’ முழுக்க போலீஸ் ஆட்சி. வதைக்கூடத்தை மலையிலே உண்டாக்குகிறார்கள். ஆண்கள் என்றால் கைது, சித்திரவதை. என்னென்ன நவீன சித்த்ரவதைகள் உண்டோ அத்தனையையும் பிரயோகிக்கிறார்கள். பெண்களென்றால் வயது வித்தியாசம் இல்லாமல், ஒல்லிய குண்டா என்ற உடம்பு வித்தியாசம் பார்க்காமல் பாலியல் வன்முறை வதைக்கூடத்தில் நடக்கிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு கண்துடைப்பு விசாரணை பின்னால் நடத்தப்பட்ட வேளையில், அந்தப் பெணகள் தங்களை உடல்ரீதியாகக் கெடுத்த போலீஸ் உயர் அதிகாரிகள் பெயரைச் சொல்லி, ”இவந்தான், இந்த மீசைக்காரன் தான்” என்று அடையாளம் காட்டினார்கள் என நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.

யானைத் தந்தங்களை, பெருமரங்களைக் கடத்திய வீரப்பனைக் கொலை எடுத்ததுடன் முடியவில்லை சோளகர் தொட்டி.

மௌனம் நிலவும் சோளகர் தொட்டியின் கூட்டுச் சமுதாய வாழ்க்கை தொலைந்து போனது. மலங்காடுகளுக்குக் கீழிருக்கிற சமவெளி மனிதர்களின் கொள்ளை வேட்டையின் சிதைவுற்ற தடமாக இன்று நிற்கிறது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

மலேயா கணபதி

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?