மீண்டெழுதலின் குரல் - தீபச் செல்வன் கவிதைகள்

“தமிழருக்கான அரசியல் தீர்வு என்பது சிறீலங்காவைப் பொறுத்தவரை ஒரு அறுவறுப்பான சொல். அது பிரிவினைக்கு வழிவகுக்கும். நான் ஓய்வு பெற்று வீட்டுக்குச் செல்லவேண்டுமானால் அதனைப் பேசினாலே போதும்” 18.3.2010 ராசபக்ஷே.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருணா இப்போது (25, 26, 27.11.2010) இலங்கையில் நிற்கிறார். தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு, அதன் மூலம் தமிழர் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ராசபக்ஷே ஒப்புக் கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.

இது போன்ற பேச்சுவார்த்தைக்கான பதில் எதுவென்பதை ராசபக்ஷே 18.3.2010ல் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். சிங்களப் பேரினவாதத்தின் உள்ளக் கிடக்கையை அவர் வார்த்தைகள் வெளிப்படுத்திவிட்டன. அதிகாரப் பகிர்வு, சமஷ்டி அரசியல் என்பது பற்றிப் பேசினால், பேரினவாத அரசியல் அவரை ஓய்வு பெறச் செய்து வீட்டுக்கு அனுப்பிவிடும். பேரினவாத அரசியல் சிங்களரிடம் மேலேற மேலேற ஆதிக்கக் கோட்பாடுகள் வலுப்பெற, வலுப்பெற அதற்கேற்ப பொருத்தமான அதிபர்களை அடுக்கிக் கொண்டே வந்துள்ளது. இன்று அதன உச்சமாக ராசபட்ஷே அமர்ந்திருக்கிறான்.

சிங்களர், தமது சுயநலனுக்கான அரசியல் ராஜதந்திரங்களில் வல்லவர்கள் என்பதை ஒவ்வொரு அதிபரும் காட்டி வந்திருக்கிறார்கள். மோட்டு (முரட்டு) சிங்களன் என்ற தமிழனின் கணிப்பீடெல்லாம் மூர்க்கமும் முரட்டுத்தனமும் உள்ள இடத்தில் அறிவு உலா வராது என்பன போன்றவையெல்லாம் பழைய வாதம். எல்லா ஆதிக்கக் கோட்பாட்டாளர்களைப் போலவும், அல்லது அவர்களை விஞ்சியும் இன்று உலகத்தின் அதிபுத்திசாலிகளாகவும், அதிக மூளைத்திறன் கொண்டோராக சிங்களர் இயங்குகிறார்கள்.

1987ல் ராஜிவ்காந்தி, ஜெயவர்த்தனா போட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தான சர்வதேச ஒப்பந்தம். வடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழர் பிரதேசமாக ஏற்று, அதை சமஷ்டி ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தின் முக்கிய தீர்மானம். அப்போதிருந்த ஜெயவர்த்தனாவோ, அதன் பின் ஆட்சியேறிய அதிபர்களோ, அதை நடைமுறைப்படுத்த துளி அக்கறையும் கொள்ளவில்லை. இடையில் இலங்கை உச்சநீதிமன்றம் இந்த ஷரத்து செல்லாது என அறிவித்தது;

“சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதை நாங்கள் எப்போதோ தூக்கியெறிந்து விட்டோம். எமது மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே வழங்குவோம்” 18.3.2010

ராஜபக்ஷே எமது மக்கள் என்று குறிப்பிட்டது சிங்களரையே என்பது எல்லோருக்கும் விளங்கும். எனவே சிங்களர் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை நாங்களும் முன்னெடுக்கப் போவதில்லை என்பதே பேச்சின் பொருள். சிங்களரும் ராஜபக்ஷேயும் விரும்பாத ஒன்றை நாங்களும் வலியுறுத்த மாட்டோம் என்றே நீதிபதிகளும் நீதிமன்றத் தீர்ப்பும் வெளிப்படுத்துகிறது. ஒரு சார்பான, முற்ற முழுக்க அரசியல் நலன் சார்ந்த தீர்ப்புகளே நீதிமுறைமையாக எங்கும் செயல்படுகிறது.

இலங்கை உச்சநீதிமன்றம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை. குறிப்பிட்ட சட்டத்திருத்தத்தின் கீழ், அந்த ஷரத்தைக் கொண்டு வந்தது செல்லாது என்றே தள்ளுபடி செய்தது. இலங்கையின் எந்த அதிபரும் அந்த தீர்ப்பு வந்ததும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக வாக்குகளைக் கொண்டு வேறொரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கலாம். இந்திய இலங்கைக்கிடையே நடந்த சர்வதேச ஒப்பந்தத்தை மதிப்பது என்ற கவலை கொண்டிருந்திருக்க வேண்டும். சிங்களர் மிகத் தேர்ந்த ஏமாற்றுக்காரர்கள் என்பதை எல்லோரும் உணர்கிறபோது இந்தியா மட்டும் அது பற்றி சிறு கேள்வியும் எழுப்பவில்லை. இந்த ஒப்பந்தத்தை ஏன் செயலுக்குக் கொண்டுவரவில்லை என்ற கேள்வி எழுப்பப்படும் இப்போது தான் ராஜிவ்காந்தி உண்மையில் கொலை செய்யப்படுகிறார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒன்றுதான் என்பதில்லை. சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு, உலகத்துக்கு கொடுத்த எந்தவொரு வாக்கையும் காப்பாற்றாத நபும்சக, நயவஞ்சகத் தனத்தை, ராசதந்திரம் என அழைத்துக் கொள்கிறார்கள். 2002ல் நார்வே போன்ற நாடுகள் முன்முயற்சியில், அமைதி ஒப்பந்தம். 2006ல் அமைதி ஒப்பந்தத்தை தன்னிச்சையாக முறித்துக் கொண்டு ராசபக்ஷே ஒப்பந்தத்தில் சாட்சிக் கையெழுத்திட்ட நாடுகளை முதலில் வெளியிற்றிய பின், 2009 மே 18 வரை இரண்டு லட்சம் தமிழர்களைக் கொன்று தீர்த்தான்.

டப்ளின் அறிக்கை மக்கள் தீர்ப்பாயம். அதன் கணிப்பில் சராசரியாக நாளொன்றுக்கு 114 பேர் கொல்லப்பட்டார்கள் எனத் தெரிவிக்கிறது.

லட்சம் உயிர்களைத் தின்ற யுத்தம் முள்ளிவாய்க்காலோடு முடிவுக்கு வந்து விட்டதாக பலர் நினைக்கிறார்கள். இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கருதுகின்றன. மேய்ச்சல் நிலம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சி அவரவருக்கு. துணை நின்ற ஏகாதிபத்திய முகாம், ஐ.நா மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவாய் வந்த இடதுசாரி முகாம் நாடுகள் எல்லாமும் இவ்வாறே முடிவுக்கு வந்துள்ளன. அரசியல் ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், இதழியலாளர்கள், ஊடகத் துறையினர் எல்லோரும் போர் முடிவுபெற்றுவிட்டதாகக் கருதி, எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
இராசபக்ஷேக்கள் தரப்பு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதவில்லை. நான்காம் கட்டப் போரை முடித்து சிங்களமயமாக்கம் தமிழ்ப்பிரதேசத்தை சிங்களமயத்தில் கரைத்தல் என்ற ஐந்தாம் கட்டப் போரைத் தொடர்கிறார்கள். தமிழருடைய வாழ்விடங்களைச் சிதைப்பது, சொந்தக் காணிகளிலிருந்து விரட்டுதல், முள்வேலி முகாம்களில் அடைத்து வைப்பது, மீள் குடியேற்றம் என்ற பெயரில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாடசாலை, கல்லூரி, பொது இடங்களில் நிர்க்கதியாக்கப்படுவது என்று தமிழ்மக்கள் மீதான போர் தொடருகிறது. சித்திரவதைகள் தமிழ் நிலமெங்கும் தொடர்கின்றன. அங்கு சிவில் நிர்வாகம் நடக்கவில்லை. இராணுவம் எங்கும் நிற்கிறது. இராணுவத்தின் கண்காணிப்பில் சிங்களக் குடியேற்றம் பாதுகாப்புடன் நடக்கிறது.

உயிருள்ள நகரமாய், உயிர்ப்புடன் இயங்கிய நகரமாய் புலிகளால் கட்டியெழுப்பப்பட்ட கிளிநொச்சி, யுத்தத்தின்பின், உயிரில்லாத கூடாய் சிதைக்கப்பட்டதில் ராணுவ குரூரம் வெளிப்படுகிறது (கிளிநொச்சியின் கதை 45 & 74)

நான்காம் கட்ட கொலைபாதகத்தின் போது வெளியுலக ஊடகவியலாளர்கள் எவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சொந்த தேசத்து ஊடகவியலாளர் நிலை இன்னும் பரிதாபம்: அவர்கள் கொலை செய்யப்பட்டனர். கண்காணாத தொலைவுக்கு ஒடிவிடும்படி மிரட்டப்பட்டனர். ஐம்பதுக்கும் அதிகமான பத்திரிகையாளர் உயிருக்கு அஞ்சி, வேறு தேசங்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். போர்க்குற்ற விசாரணையைத் தவிர்க்க, நல்ல பிள்ளையாய் வெளி உலகுக்காட்ட, சொன்ன சொல் கேட்கும் பிள்ளைகளைக் கொண்டு நல்லிணக்க விசாரணைக்குழு என அமைத்து விசாரணை நாடகம் நடத்தி வருகிறது. அது ஒரு நாடகமே. கிளிநொச்சியில் நடந்தபோது, அந்த நாடகத்தைக் காண விண்ணப்பித்த பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அனுமதியில்லை. சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த விசாரணையை அறியவும் பி.பி.சி.க்கான காரணங்களைக் கூட படைத்துறை அமைச்சகம் தெரிவிக்க மறுத்துவிட்டது. அனுமதிப்பது அல்லது மறுப்பது எல்லாம் படையினர் வசமே. ஊடக வாயடைப்பு, ஊடகக் கொலைகள், அறிவுஜீவிகள், கலைஞர்களின் அச்சம் பற்றி, தீபச்செல்வன் விரிவாக எடுத்து வைக்கிறார். (பக்.54)

முற்றாக தமிழ்ப்பகுதியை சிங்களமயமாக்கலில் கரைக்கும் வரை  ராசபக்ஷேக்களின் போர் முடியப் போவதில்லை. போரின் கயிற்றை இறுக்கமாக தன் கையில் பற்றியிருப்பதாக இவர்கள் எண்ணுகிற போதே அதன் இன்னொரு அபாயகரமான முனை தமிழர்களிடமே தங்கியுள்ளது என்பதை இவர்கள் அறியவில்லை. அறிந்திருப்பார்கள். அதுதான் ராணுவமும், உலக நாடுகளும், இந்தியாவும், சீனாவும் எதற்காக இருக்கின்றன!

போருக்குள்ளும், போருக்கு வெளியிலுமான தாக்கங்களை நேரில் அனுபவித்தவர் கவிஞர், எழுத்தாளர் தீபச் செல்வன். தொடரும் போரின் தாக்கங்களுக்கு முதுகு திருப்பிக்கொள்ளாமல் முகம் கொடுத்து நிற்கிறார்.

“எனது சகோதரன் ஒருவன் இந்தப் போரில், 2001ல் முகமாலை மண்ணில் வீரமரணம் அடைந்தவன். கிளிநொச்சி முறிப்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டு அவனது கல்லறை இருந்தது. அம்மா, அவன் துயிலும் இல்லத்தை ஒரு கோயிலாக வணங்குவாள். அருகருகாக ஆயிரம் ஆயிரம் போராளிகள் விதைக்கப்பட்டிருந்தார்கள். இன்று அந்தத் துயிலும் இல்லம் சிதைக்கப்பட்டு கற்குவியலாக, கல்மேடாகக் காட்சி தருகிறது. பற்றை மூடி யாரும் உள்நுழைய அனுமதிக்கப்படாத இடமாயிருக்கிறது. இப்பொழுது அந்தத் தெருவில் செல்லும் போது, பெரு வலி ஏற்படுகின்றது”

மாவீரர் துயிலும் இல்லங்கள், சிதைக்கப்படுவது மட்டுமல்ல; “போராளிகள் புதைக்கப்பட்ட நிலத்தைக் கிளறி, மண்ணை அள்ளிச் சென்று வேறு பல இடங்களில் குவிக்கிறார்கள். மண் அணைகள் எழுப்பவும், கட்டிடங்கள் அமைக்கவும் அது பயன்படுத்தப்படுகிறது. படையினர் அப்படி ஏற்றிச் செல்லும்பொழுது, போராளிகளின் தலைமுடிகளும் எலும்புத்துண்டுகளும், சீருடைகளும் மண்ணிலிருந்து கீழே விழுகின்றன. இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா, தன்னைத் தானே அடித்து அழுதுகொண்டிருக்கிறாள். வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறாள்” (பக். 109 என்று பதிவு செய்கிறார்)

பொங்குதமிழ் இணையத்தில் க.ராஜரட்சணம் பதிவு செய்துள்ள கருத்தை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. “மாவீரர்களின் தோற்றப்பாடான கல்லறைகளை சிங்கள ராணுவத்தால் உடைக்க முடிந்தாலும், மக்களின் இதயங்களிலிருந்து அவர்களை அழிக்க முடியாது. தம் பிள்ளைகளை நினைவுகூரும் உரிமையும், விளக்கேற்றி மனவமைதி அடையும் மிக அடிப்படையான மனித வுரிமையும் தமிழ்ப் பெற்றோருக்கும் மாவீரர்களின் உறவினர்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் ஓர் ஆவேசமாக உருத்திரண்டு சுதந்திர உணர்வை மக்களிடம் மேலும் வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.”

இதுபோன்ற சூழலில், இத்தகைய பிரச்னைகளைப் பேசும்போது, எடுத்துரைப்பில் எத்தகைய அணுகுமுறையைக் கையாள வேண்டுமென்பதற்கான சிறந்த முன்னுதாரணமாக தீபச்செல்வனும், க.ராஜரட்ணம், ரூபன் சிவராஜா, தனபாலா போன்றவர்கள் தெரிகிறார்கள். அதே நேரத்தில், இந்தப் பிரச்னைகளை எதிர்மறையாக அணுகுகிற அ.மார்க்ஸ் போன்றவர்களும் தெரிகிறார்கள்.

மார்ச் மாதத்தில் என நினைக்கிறேன். அ.மார்க்ஸ் இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களுக்கு சென்று வந்தார். எந்த நாட்களில், தேதியில் என்று அவர் குறிப்பிடவில்லை.

"இலங்கையைக் கிட்டத்தட்ட முழுமையாகச் சுற்றிப்பார்த்து, பல தரப்பினரையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு ஒன்று. எனக்குக் கிட்டியது"
என்று குறிப்பிட்டுள்ளார். (ஏப்ரல், 2009, தீராநதி) ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட மக்களையோ, பாதிக்கப்பட்டு ஒதுங்கியிருக்கும் போராளிகளையோ சந்தித்து கருத்தறிய இவர் முயலவில்லை. ஏனெனில் இவரை அழைத்துச் சென்றவர்கள், உடன் வந்தவர்கள், சந்தித்து உரையாடியவர்களில் பெரும்பாலானோர் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானவர்கள். அதற்கு ஒரு சிறிய, சரியான எடுத்துக்காட்டு டொமினிக் ஜீவா என்ற பொதுவுடமைவாதியும், அந்தணி ஜீவா என்ற சந்தர்ப்பவாதியும்.

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு தீராநதி இதழ்களில் "என்ன நடக்குது இலங்கையில்" என்று தொடர் எழுதினார். அ.மார்க்ஸ் எழுதியது முழுக்கவும் ஈழத்தில் பயணம் மேற்கொண்டது பற்றியது. அப்போதும், 'என்ன நடக்குது ஈழத்தில்' என்ற எழுத, பேராசிரியருக்கு மனசு வரவில்லை. விடுதலைப் புலிகள் பற்றி அவர் கட்டமைத்திருந்த முடிவுகள் பல திறக்கப்படாத தாழ்ப்பாள் கொண்ட கதவுகளை அவருக்குள் உண்டாக்கியிருந்தன. நான்கு இதழ்களாய் எழுதியதில், எந்த ஒரு இடத்திலும் ஈழ விடுதலைக்காக முன்னர் 30 ஆண்டுகள் நடந்த அறவழிப் போராட்டத்தையோ, அதற்குச் சற்றேனும் அசையாத சிங்களப் பாசிஸத்தை எதிர்த்து ஆயுதப் போராட்ட வழி ஒரு 30 ஆண்டுகளாய் எதிர்கொண்டதையோ அவர் குறிப்பிடவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து ஒருநாள் கெடுவில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு, கிழக்கு மாகாணம் புத்தளம் பகுதியில் குடியேறிய முஸ்லீம்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதுகிறார். (தீராநதி, மே 2010 பக்.56; ஜூன் பக்.35,36). அதே பொழுதில் தமிழர்கள் மேல் முஸ்லீம்கள் எத்தனை கொடூரமாக நடந்து கொண்டார்ள் என்பது பற்றி விவரிக்க அவரது எழுதுகோல் மறுத்து விடுகிறது.

அ.மார்க்ஸ் ஈழம் சென்று திரும்பியதும், ஆனந்தவிகடனில் ஒரு பேட்டிவடிவச் செய்தி வந்தது. அதில் யாழ்ப்பாணம் சென்றபோது, “அருகிலுள்ள கோப்பாய் மாவீரர் துயிலுமிடத்தை ராணுவம் உடைத்தெறிந்ததாக செய்தி கிடைத்ததாகவும், அதைக் காண அங்கு சென்றபோது, புலிகளின் கல்லறைகள் அப்படியே தான் இருந்தன. கல்லறைகள் மீது ஆடுகள்தான் மேய்ந்து கொண்டிருந்தன” என்று எழுதிச் செல்கிறார்.

கோப்பாய் மாவீரர் துயிலுமிடம் அவர் சென்றபோது உடைக்கப்படாமல் இருந்தது. ஆனால் அதே காலத்தில்தான் வேறு பல இடங்களில் மாவீரர் கல்லறைகள் உடைத்து கற்குவியலாக்கப்பட்டன. அதே காலத்தில் இந்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று வந்த தீபச்செல்வன் வலியும் கதறலுமாக இதைப் பதிவு செய்கிறார். எவரொருவர் மக்களை நேசிக்கிறாரோ, அவருக்கே வலியும் கதறலும் வரும்.

மக்களின் போராட்டம் சிதைக்கப்பட்டு போராளிகள் அழிக்கப்பட்டும், முறியடிக்கப்பட்டும் உள்ள சூழலில் அரசு திட்டமிட்ட வகையில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் அந்தக் கல்லறைகளை, நடுகற்களை, நினைவுத்தூபிகளை அழித்துக் கொண்டு வருகிறது. கனவின் வெற்றிகளும் தோல்விகளும் அழுகைகளும் இரத்தமும் சதைத் துண்டங்களும் என்று நினைவுகள் தங்கியிருக்கும் ஈழப் போராட்டத்தின் தடயங்களை அழித்தொழித்து காலத்தை மறைத்து அவற்றுக்கு எதிராக சிங்கள இராணுவத்தின், சிங்கள வெற்றியின் நினைவுத் தூபிகளை அரசாங்கப் படைகள் அமைத்து வருகின்றன." (பக்.107)

“கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லும் (அ.மார்க்ஸ் ஈழத்திலிருந்து இந்தப் பக்கம் தமிழகம் நகர்ந்ததும் அது அழிக்கப்பட்டது) கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம், சாட்டி மாவீரர் துயிலம் இல்லம், வன்னி விளாங்குளம், விசுவமடு, கிளிநொச்சி, கனகபுரம், கிளிநொச்சி முறிப்பு, முழங்காவில், ஊடுத்துறை, மாவீரர் துயிலும் இல்லங்கள் போன்றவற்றுடன் கிழக்கில் இருந்த பல மாவீரர் துயிலும் இல்லங்களை இலங்கைப் படைகள் அழித்துவிட்டன" (பக்.109)

எழுதுவதற்கு ஒரு பத்திரிகையும் அதில் சில பக்கங்களும் இருக்கின்றன என்பதாலே, எதையும் சொல்பவரல்ல தீபச்செல்வன். எல்லாவற்றையும் ஆதாரங்களுடனே, சொல்லிச் செல்கிறார். கோப்பாயில் மாவீரர்கல்லறைகள் அழிக்கப்படாத போதும், வேறு எங்கெங்கு மாவீரர் கல்லறைகள், நினைவுத்தூண்கள் சிதைக்கப்பட்டன என்ற சேகரிப்பு முயற்சியில் கூட ஈடுபாடு கொள்ளாது, தன் முன்கூட்டிய தீர்மானங்களுக்கு மட்டும் முட்டுக் கொடுக்கிற செய்திகளைச் சொல்லிச் சொல்கிற பேராசிரியப் பெருந்தகைக்கு முன்னால் ஓராண்டு முன் வரை யாழ் பல்கலைக்கழக மாணவராக இருந்த தீபச்செல்வன் உயரம் கூடியவராகத் தெரிகிறார்.

செம்மொழித் தமிழ் மாநாட்டுக்கு எதிர்வினையாற்றும் வகையில் உருவான தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு செம்மொழித் தமிழ் மாநாடு முடிவு பெற்றதும், தன் எதிர்வினைகளை முடிவுக்குக் கொண்டு வந்தது. அரசுத்தரப்பில் செம்மொழித் தமிழ் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரம் கொண்ட ஓராண்டுக் காலம் வரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காது. எதிர்வினையும் ஆற்றாது அமைதியாக இருந்துவிட்டு, ஈழத்தமிழர் பிரச்னைகளின் விமரிசனம் என்ற பெயரில் அதில் சுற்றிக் கொண்டிருந்துவிட்டு, தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு எதுவுமே செய்யவில்லை என்ற பாணியில் போகிற போக்கில் பேசி விட்டுப் போயிருந்தார் அ.மார்க்ஸ் (தீராநதி, ஆகஸ்டு, 2010) தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் விரிவாய் நான் எழுதிய விளக்கத்தை, இடமில்லை என்ற காரணம் காட்டி, வெளியிடவில்லை தீராநதி. (அ.மார்க்ஸின் அவதூறுக்கான இப்பதில் "இதுவரை வெளிவராத கடிதங்கள்" என்ற தலைப்பில் தோழமை வெளியீடான மரணபூமி என்ற என் நூலில் இணைக்கப்பட்டுள்ளது.)

இவ்வாறான அரைகுறைத் தகவல்களை வைத்துக்கொண்டு அது தொடர்பான உறுதிப்படுத்தலுக்குச் செல்லாமல், உரிய அவகாசம் எடுத்துக்கொள்ளாமல், தனக்கு வந்ததை உடனே தெரிவித்துவிட வேண்டுமென்ற முண்டுதல் அ.மார்க்ஸ்க்கு இயல்பானது. அவசரம் + ஆத்திரம் = அ.மார்க்ஸ் என்ற எனது கட்டுரையில் விரிவாக இதுபற்றிப் பேசியிருக்கிறேன். எத்தனை சுட்டிக்காட்டல்கள் வந்த பின்னரும், தான் சொன்னதிலிருந்து பின்வாங்காத, கருத்துக்ளைச் சரி செய்துகொள்ளாத தன்னகங்காரமும், வீம்பும் அவருக்குள் தலைமை எடுத்துள்ளது.

காலத்தின் சாட்சியாக, களத்தின் சாட்சியாக இருக்கிறார் தீபச்செல்வன். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னான, நிழலெனத்தொடரும் அட்டூழியங்கள் வெளியுலகம் அறிந்தமைக்கு அவருடைய எழுத்துக்கள் முக்கிய காரணம். கொல்லப்படுவார் என்ற அச்சுறுத்தலுக்கிடையேயும், தன் குரலைத் தொடர்ந்து கொண்டே வருகிறார். ஈழத்தின் தமிழ் ஊடகங்களோ, இலங்கையின் ஊடகவியலாளர்களோ மரண அச்சுறுத்தலில் மௌனம் கொண்டுள்ள சூழலில் கருத்து வெளிப்பட அந்தத் தீவில் எங்கும் ஒரு துளி இடமில்லையென்ற சூழலில், இணையம், தமிழகத்திலிருந்து வெளிப்படும் இதழ்கள் மூலம் தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருக்கிறார்.

"ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து, முற்போக்கான புதியதொரு அரசியல் இயக்கம் தோன்றுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கருதுகிறீர்களா?"
என்ற ஷோபாசக்தியின் கேள்விக்கு,
"ஈழத் தமிழ் மக்களை அரசு எந்தளவுக்கு ஏமாற்றுகிறதோ, அந்தளவுக்கு அதற்கான வாய்ப்புள்ளது. உலகம் எந்தளவுக்குப் பின்தள்ள நினைக்கிறதோ, அந்தளவுக்கு வாய்ப்பிருக்கிறது. ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை உலகம் மறுக்கிறது. வாழ்வின்மீது மிக நுட்பமாக ஆக்கிரமிப்புகளை, வன்முறைகளை, மீறல்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. இவைகளால் காலமும் சூழலும் தான் அதற்குரிய விடயங்களை, வடிவங்களை உருவாக்கும் சந்தர்ப்பங்களை வழங்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் வெறும் அரசியல் கட்சியாக அது இருக்க முடியாது. ஏனெனில் முப்பது வருடங்களுக்கு மேலாகப் போராடிய எமது மக்கள் உண்மையில் மக்களுக்கான இயக்கத்தைச் சுலபமாகக் கண்டுபிடிப்பார்கள்" (பக்.35)
யதார்த்தங்களிலிருந்து, எதிர்காலம் பற்றிய பதிலைக் கண்டடைகிறார்.

நேரடியாகப் போரில் பங்கேற்ற இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகள், பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் துணை செய்த மேற்குலக வல்லரசுகள், வல்லரசுகளை எதிர்க்கிறோம் என்ற கோணத்தில் ஐ.நா மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவாய் வந்த இடதுசாரி முகாம், லத்தீன் அமெரிக்க நாடு என அனைத்துலகும் கைகோர்த்து தமிழர்களை அழித்தன. இந்தப் பங்காளிகள் போரை முதலீடாக ஆக்கினார்கள். 2006 முதல் 2009 மே 19 வரையான காலத்தில் கொல்லப்பட்ட இரண்டு லட்சம் தமிழர்களை இவர்கள் முதலீடாக ஆக்கியுள்ளார்கள். அவரவர் முதலீட்டுக்குரிய லாபத்தை அந்தந்த நாடுகளுக்குப் பங்கிட்டுத் தந்து கொண்டிருக்கிறது இலங்கை. ஒட்டுமொத்த நாட்டையே லாப வேட்டைக் காடாகத் தந்துவிட்டு, தமிழின அழிப்பு, உரிமை மறுப்பு என்பதை மட்டும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இது தமிழர் மத்தியில் போராட்டத்துக்கான வடிவங்களை வழங்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கப் போகிறது.

இந்த நூலில் குறிப்பிட வேண்டிய ஒன்று ஷோபா சக்தியுடனான நேர்காணல்.

ஷோபா சக்தி, சுகன், சுசீந்திரன், அகிலன் கதிர்காமர், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்ற புலம்யெர்ந்த இத்தகைய பெயர்கள் எதிர்நிலையில் வைத்து பேசப்பட்டே ஆக வேண்டும்.

ஈழத் தமிழினம் சொந்த ரத்தம் என்ற சிறப்பு வகைப் பாசமெல்லாம் கொள்ள வேண்டியதில்லை. மானுட இனம் எனும் பொது வகைப்பாட்டுக்குள்ளிருந்து பார்க்க வேண்டும். பார்த்தால் உலக முழுதும் மனித வதைகளுக்காக குரல் எழுப்புகிற இந்த உத்தமர்களுக்கு, ஈழத் தமிழனுக்காகவும் பேசும் உணர்வு வரும். தலித்துகள் மீது அடக்குமுறை, சிறுபான்மையினர் உரிமை பறிப்பு என்று முழங்குகிற இவர்கள் ஒரு இனத்தை இல்லாமல் செய்யும் ராசபக்ஷேக்களின் கொடூரம் பற்றிப் பேச தொண்டை இல்லாமல் போய்விடுகிறார்கள்.

புலிகள் மீது வளைத்து வளைத்துக் குற்றம் காண, ஷோபா சக்தியின் நேர்காணல் முண்டுகிறது. இவர்கள் பேசாத, ஒதுக்கி வைக்கிற சுட்டிக்காட்டல்கள் எல்லாம் இனவாத அரசுக்கு கைகொடுக்கிற காரியமாய் ஆகிப் போகிறது என்பதைச் சொல்லியாக வேண்டும். அவ்வாறு சொன்னால், ‘போராளி கம் அறிவுஜீவி’ 'விடுதலை ராசேந்திரன், பா.செயப்பிரகாசம் போன்ற கோமாளிகள்' என்று எள்ளலாய் ஒதுக்கிவிடுவார் அ.மார்க்ஸ். இவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம், மண்ணில் காலூன்றி, போர்க்குணத்தில் சுரப்பெடுத்து, வெளிப்படும் பதில்கள் தாம் இந்நூல்.

“இந்தத் தோல்வியில் விடுதலைப் புலிகளுக்குப் பங்கில்லையா?” என்று கேள்வி கேட்டு, ஷோபா சக்தி குற்றச்சாட்டுகளை அடுக்க முயல்கிறபோது, தீபச் செல்வனின் திட்டமான, திட்டவட்டமான பதில்;
"ஷோபா சக்தி! நீங்கள் விடுதலைப் புலிகள் தொடர்பான நிரந்தரமான எதிர்ப்பை வைத்துக் கொண்டு என்னுடன் பேசுகிறீர்கள். நானோ விடுதலைப் புலிகள் தொடர்பான எனது நிரந்தரமான விருப்பை வைத்துக் கொண்டு பேசுகிறேன். விடுதலைப் புலிகள் சிதைக்கப்பட்ட ஒரு சூழலில்தான் நீங்களும் நானும் பேசிக் கொண்டிருக்கிறோம். புலிகளைத் தாக்குவது மட்டும்தான் உங்கள் நோக்கம் போல எனக்குத் தெரிகிறது. இதைக் கடந்த காலத்தில் நீங்கள் மட்டுமல்ல, பலர் செய்திருக்கிறார்கள். அவை விடுதலைப் புலிகளக்கு அறிவுரை சொல்லும் விதமாக இருக்கவில்லை. விடுதலைப்புலிகளை அழிக்கும் விதமாகவே இருந்தது. அதுவே தமிழ் மக்களையும் அழித்தது.”

ஷோபா சக்தியைப் போன்றவர்களின் புலி எதிர்ப்பு வளைப்புக்குள் மாட்டுப்படாமல் விடுதலைப் போரின் பின்னடைவுக்கான காரணங்களை நியாயபூர்வமாக விளக்குகிறார். கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப்பிறகு, மரபுவழி ராணுவ யுத்தத்தை கைவிட்டு, கொரில்லாப் போருக்குள் புலிகள் போயிருக்க வேண்டும் என்கிறார். (பக். 66 & 67) எமது மக்கள், எமது மக்கள் என்றுதான் அவருடைய நாவும், எழுதுகோலும் பேசுகிறது. அவர்களிடமிருந்து தம்மை அந்நியப்படுத்தி தமிழர் என்றோ, ஈழத்தமிழர் என்றோ பேசுகிற தன்மை அவரிடம் இல்லை.

"எமது மக்கள் அடையாளமற்ற, தனித்துவமன்ற வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. தங்கள் சொந்த நிலத்தில், ஆக்கிரமிப்பின்றி, அச்சுறுத்தலின்றி வாழ விரும்புகிறார்கள்"
என்று அழுத்தமாகப் பேசுகிறார்.

மீண்டெழுதல் பற்றி அவர் சிந்திக்கிறார். விடுதலை வேண்டுபவர்கள், மீண்டெழுதல் பற்றி மட்டுமே யோசிக்க முடியும். விமர்சனம் வழங்குவதன்றி வேறு எப்பணியும் ஆற்றாத மற்றவருக்கு மீண்டெழுதல் தேவையில்லை. தொடர்ந்து தம்மை முன்னிறுத்தும் வேலைகளில் குறியாய்க் கழிப்பார்கள்.
கடும் மழைப்பொழிவு. கையில் குடையுடன் மழைக்கூடாகப் பயணிக்க முடியுமா என்றுதான் யோசிப்போம். அரை நாள், ஒரு நாள் பயணப் படுதலை தாமதப்படுத்தலாம். பேய்மழை, இடி, மின்னல், வெள்ளப் பெருக்கு என்று வந்தாலும் அதனூடு காரியமாற்றுதலில் முயற்சி கொள்கிறோம். ஒரு சுனாமியோடு அனைத்தும் தீர்ந்து போய்விடவில்லை. அதனூடும் வாழ்வதலைப் பற்றி, மீண்டெழுதல் பற்றியே செயல்படுவது மானுட இயல்பு.
மானுட இயல்பின் இக்குரலே தீபச்செல்வனின் இந்நூல் முழுதும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ