கீழத்தெரான் – துரை.குணா கவிதைகள்


“பாடப் புத்தகங்களில் நவீன கவிதைக்கு இடமில்லையா?” - கேள்வி எழுப்பிய ஒரு கட்டுரை பிப்ரவரி 18, 2017 - தமிழ் இந்து நாளிதழில் வெளியாகியிருந்தது. பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டிய கவிஞர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. பாரதி இருக்கிறார்; அவரது தாசன் பாவேந்தர் இல்லை. ‘நவீன கவிதையின் தந்தை’ என்று மகுடம் சூட்டப்படும் ந.பிச்சமூர்த்தி, நவீன கவிதை மகுடத்தில் பதித்த நவரத்தினக் கற்களாக சி.மணி, க.நா.சு, நகுலன் எனப் பலர் சுட்டப்படுகிறார்கள். இவர்களின் காலத்தில் இயங்கி, ‘கவிதை என் கைவாள்’ என எடுத்துச் சுழற்றிய கவிஞர்கள் இந்தப் பட்டியிலில் இல்லை. நவீன கவிதையின் அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர்கள் என விக்கிரமாதித்யன், தேவதேவன், தேவதச்சன், ராஜாசுந்தர ராஜன் போல் நண்டு, சிண்டுகளெல்லாம் தூக்கிக் காட்டப்படுகிறார்கள். கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், புவியரசு, சிற்பி, நா.காமராசன், ஈரோடு தமிழன்பன், இன்குலாப் - என எவரும் இல்லை. இவர்களற்ற ஒரு கவிதையுலகத்தை இளையமாணவருக்கு பாடத்திட்டத்தில் விரித்துவைக்க இந்த தலையங்கமும் அதை எழுதினவரும் விரும்புகி றார்கள் எனத் தெரிகிறது.

நவீன கவிதை என இவர்கள் அடையாளப்படுத்துவது எது? அரூப எழுத்து, படிமங்கள் அடுக்கு, புரியாமை, வாசகனுக்குள் வராமை போன்ற நவீன தொழில் நுட்ப உத்திகள் கொண்டியங்குவது இவர்களின் நவீன கவிதை: இவர்கள் மதிக்கும் கவிதைகளில் நவீனம் இருக்கும், கவிதை இணைந்திருக்காது. கவிதையாய் வெளிப்படும் யதார்த்தவாத, தலித்திய, பெண்ணியக் கவிதைகள் இவர்களுக்கு தகுதிப் பட்டியலில் கூட வராது. ந.பிச்சமூர்த்தியை குருபீடமாக்கி, ஞானக்கூத்தன், தி.சொ.வேணுகோபாலின், எஸ்.வைத்தீஸ்வரன் போன்றோரை கொலுவில் வைத்த தமிழ் இந்துவுக்கு, பாரதிதாசன் வழியில் பொதுவுடைமைச் சித்தாந்த வெளிச்சத்தில் வெடித்த பலரையும் தெரியவில்லை. தெரியாமலிருக்கும் என எண்ணினால், அதனைவிட பொய்மையும் அறியாமையும் காண இயலாது.

தலையங்கத்தின் இறுதிவாசகம் இப்படிச் சொல்கிறது “நவீன கவிதை மீதான புறக்கணிப்பை கல்வித்துறை கைவிட வேண்டும். நல்ல கவிதைகள் நல்ல மாணவர்களை நிச்சயம் உருவாக்கும்.”

இதற்குப் பதவுரை, பொழிப்புரை காணல் மிக எளிது. யதார்த்தவாத, இடதுசாரிய, முற்போக்கான, தலித்திய, பெண்ணியக் கவிதைகள் அனைத்தும் நல்ல கவிதைகள் அல்ல: நல்ல மாணவர்களை நிச்சயம் உருவாக்காது. கல்விக் கொள்கை வகுப்பாளர்கள், எக்கல்வி இயல் இங்கு தொடரவேண்டுமென கருதினார்களோ அதற்கு ஏற்ப மாணவரை ரௌத்திரம் கொள்ளச் செய்யாத, சிந்தனைக் கீற்றுக்கள் அற்றவராய் அச்சுப் பிசகாமல் கொண்டுசெல்லும் கவிதைஇயலை இவர்களும் கருத்தில் கொள்கிறார்கள் என்பது தெளிவாகியுள்ளது.

புதுமைப்பித்தனின் ‘சாபவிமோட்சனம்’ சிறுகதை சிலாகிப்புக்குரிய படைப்பு என்பது ஐயமில்லை. அப்படியே வட தேசப்பயணம் போய் வி.ஸ.காண்டேகரின் ‘யயாதியை’யும் கொண்டாடுவோமாக. சற்று வடக்கில் நகர்வாகி, இந்தியில் நந்திகிஷோர் படைத்த “மஹாபாரதத்தில் பெண்ணியம்" - நாடக ஆக்கம் கொண்டாடப்படுவதிலும் பிழையில்லை; தமிழ்ப்பண்பாட்டு உளவியலில் நெடுங்காலமாய் பதியப் பெற்றிருந்த “அவ்வை” - என்ற மூதாட்டியை மறுவாசிப்பில் கள்ளுண்டு களித்திடும் பாணர் பெண்ணாக தரிசனப்படுத்திய இன்குலாப் இவர்களிடமிருந்த காணாமல் போய்விடுவார். பெரிய படைப்பாக தரிசனப்படுவதில்லை. இவர்தம் வாசிப்பு அடுக்குகளும் சிலாகிப்பு மொழியும் இன்குலாப் இல்லாத பக்கங்களையோ கொண்டிருக்கும்.

கலைஞன், இலக்கியவாதி, கவிஞன், எழுத்தாளன், சிந்தனையாளன் என அனைவரும் சமூக மனிதர்கள்தாம்; ஒவ்வொருவர் இச்சமுதாயத்தில் என்ன வகையாக வாழுகிறார், என்ன பாத்திர வகிபாகம் ஆற்றுகிறார் என்பதையிட்டு, சிந்தனை பேச்சு, எல்லாமும் அமைகிறது. இதிலிருந்து விலகி, தனக்கு அனுபவப்படாத, தான் தொடாத, தனக்குள்ளேயே தனக்கு முரணான சிந்தனைப் போக்கு கொள்வோர் - எதிர்த்திசையில் தடம் தேடி நடக்கிறவர்களை தூய இலக்கியவாதிகள் எனப்படுவோரை இவ்வகையில் அடக்கலாம்.

“இதை நானா நெனச்சி எழுதலே
பாத்து எழுதினேன்” - என்பது குணாவின் கவிதை. சுயானுபவத்திலிருந்து எழும் எதுவொன்றும் பெரிய படைப்பாக இவர்களுக்குத் தரிசனப்படாது.

வாழ்ந்து எழுதிய மொழி துரை குணாவினுடையது.

தூய கலை இலக்கியம் யாவும் நினைப்பில் எழுதப்படுகிறவைதாம். வாழ்ந்ததும் இருக்கும். வாழாததும் இருக்கும்; அனுபவமானதும் இருக்கும்; அனுபவப்படாததும் இருக்கும். தொட்டும் தொடாமலும் எழுதப்படும் தூயஇலக்கியமாகவும் வெளிப்படும். மூலாதாரமாக நான் காணுவது இதழியல் என்பதின் வணிகவளையம் தான். வணிகத்தை கூடுதலாக புதுப்புது வழிகள், புதுப்புது உத்திகள் தேவை.எத்துறையாயினும், வணிக நோக்கம் ஈடேற புதுப்புது விசயங்கள் அவசியமாகின்றன. வாசக மனம் புதுப்புது விசயங்களைத் தேடல், புதுப்புதுச் சுவை நாடல் இயல்பாகவே கொண்டுள்ளது. எழுத்து, கவிதை, படைப்பு என முந்திய புதைக்கப்பட்டவைகளுக்குள்ளிருந்து எடுத்து புதியன போல தரப்படுகின்றன. இதுவரை வாசிப்புத் தளத்தில் விலக்கம் செய்து புறமொதுக்கப்பட்டன முன்வைக்கப்படுகின்றன. புனைவும் அறிவு ஜீவித்தனமுமான ஒரு மாயை இதழியல் பெருக்கத்துக்கு உண்டாக்கப்படுகிறது.

முந்தையகாலம் போல் இல்லை இந்தக் காலம் என்று சொல்வது ஒரு நடைமுறை உண்மையாகிவிட்டது. நூளை அதைவிட மோசமான காலமாய் அமையும் என்பதிலும் ஐயமில்லை. நம்மை மனம்உளைந்துபோகச் செய்யக் கூடிய பிரச்சினை என்னும் பிசாசுகள் ஆயிரமாய்ப் பெருகும். பாரதியின் காலத்தில் ஆடிய பிரச்சினை ஒரு நூறு எனில், பாரதிதாசன் காலத்தில் ஆடிய பிசாசுகள் இருநூறாய்ப் பெருகின. இன்குலாப் காலத்தில் ஐந்நூறு பிசாசுகள் மேலெழுந்தன. பல்கிப் பெருகிடும் முரண்கள், பிரச்சனைகளெனும் ஆயிரமாயிரம் பிசாசுகளின் கூட்டத்தில் புதுப்புது பிசாசுகளின் தோற்றத்தின் மத்தியில் நாம் வாழுகிறோம்.

பிசாசுகளை எதிர் கொள்கிற பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருப்போர் பலர். இன்குலாப் போல், அவர் வழியில் எழுத்து களத்தில் யுத்தம் நடத்துகிறார்கள் துரை குணா, புலியூர் முருகேசன் போன்றோர். உண்மைப் போராட்டக் கள சம்பவங்களின் அடிப்படையிலான ”உடலாயுதம்” என்றொரு சித்தரிப்பு புலியூர் முருகேசனிடம் நாவலாகியிருக்கிறது. அடிதடி சாதிகளின் ஆதிக்க மேலாண்மையைப் பேசுகிறது துரை குணாவின் - “கீழத் தெரான்” கவிதைகள். “இயல்பாகவே சிறுமை கண்டு பொங்கும் எழுத்து குணாவுக்கு வாய்த்திருப்பதாக” முத்துப் பேட்டை மோகன்ராஜ் செறிவுள்ள வீரியமான அணிந்துரையில் குறிப்பது இதைத்தான்.

துரை குணா வாழும் கரம்பக்குடியில் ஆதிக்க அடிதடி சாதியினரின் தெரு மேலத்தெரு. பார்ப்பன எதிர்ப்பின் புனிதம் புரியப் பறையனாய் இருந்து பார் - என்பார். பார்ப்பணர் மத்தியில் கூட வாழ்ந்து விடலாம். அடிதடி ஆதிக்க சாதியினரிடையில் உயிர் வாழுதல் அவ்வளவு எளிதல்ல. இந்த சாதிகளின் எதிர்ப்பில் படிந்துள்ள பொருள் புரிய ”கீழத்தெரானாய்” இருந்து பார் என்கிறது கவிதை. கீழத்தெரான் என்றால் கீழத்தெருக்காரன் – ஒடுக்கப்பட்ட தழ்த்தப்பட்டவன் என்று பொருள். அவருடைய விடுதலை கீழத் தெருவாரின் விடுதலை. கீழான மக்களாகக் கருதப்படும் தாழ்த்தப்பட்டோர் விடுதலை.

அதிகார நோய் ஒவ்வொரு மனிதனும், தன்கீழ் இன்னொரு மனிதன் இருக்க வேண்டுமென அவாவுகிற நினைப்பில் தங்கியிருக்கிறது. இந்த நினைப்பு ஒரு பிறவி நோய். பிறவி நோய் அறுத்தல் எளிதான காரியமல்ல. இந்தப் பிறவி நோய் விலக்கம் பெறாமையால் விளைந்த, விளையும் கொடூரச் சேதாரங்கள் கொஞ்சமல்ல. பெண்ணை அடிமையாக்கியதும், சாதிய அடிமைத்தனமும் இந்த உளவியல் கட்டமைப்பின் தொடர்நிகழ்வு. ஒடுக்கும் மனோபாவம் - குளந்திரன் பாட்டு கிராமத்தில் மேலதெருவாகவும், ஒடுக்கப்படும் மக்கள் கீழத்தெருவாகவும் இருந்தார்கள். கீழத்தெரு என்பதற்கு, கீழான தெரு என்ற அர்த்தமும், மேலத்தெரு பொருள் கொண்டது. கீழத்தெருவில் ஒரு மரம் இருந்தது. மரத்தில் ஒரு குருவிக் கூடு. கீழத்தெருவிலும் புயல் வீசிற்று: உன்னை விட்டேனா பார் என மரத்தை வேரோடு பெயர்த்து வீச சுழற்றியடித்த வேளை – குருவிக்கூடு சேதாரமடையாமல் நின்றது.
“எனக்கு வாழக் கற்றுக் கொடுத்தது
ஒரு குருவி
புயல்வீசும் மரத்திலும் கூடுகட்ட வேண்டும்”
என்று குணா கீழதெருவானாக எழுந்து வருகிறார்.
“எங்களை ‘டா’ போட்டுக் கூட்பிட்டு
பெரிய மனிதர்களாக ஆனவர்கள் தான்
எங்கள் ஊரில் அதிகம்”
என்கிறார் துரைகுணா. இவர்களின் பெரிய மனுச லட்சணத்தை
“வாங்குன காசைத் திருப்பிக் கொடுக்க
வக்கில்லேன்னா, ஒம் பெண்டாட்டியை
எம் குடிப் பறையன்கிட்ட கூட்டிவுடுடான்னு
எதுக்கெடுத்தாலும் எங்களையே இழுத்து
தூயைக் கெடுக்கும்
…….. ரே” 
“நீங்க
கூட்டி விடாமலேயே
தானாய் வந்ததையெல்லாம்
நாங்க எந்தக் கணக்கில் சேர்ப்பது?”
மேலத்தெருக்கள், கீழத்தெருப் பெண்டிரின் மானத்தை விலை கேட்பதற்குப் பதிலியாய், கேட்காமலே தம் காலடியில் விழுந்த மேலத்தெரு மானத்தை நிறுத்துகிறார். இங்கு பெண்கள் வழியாய் இழக்கப்படும் மானம், ஆணுக்குரியது. பெண் தன் கைவசப்பட்டவளாக இருக்கையிலேயே, தன் மானம், மரியாதை காக்கப்படுவதாக அந்த ஆண் எண்ணுகிறான், என்று மேலத்தெருக்காரர்களின் சாதி லட்சணத்தை கிழித்துப் போடுகிறார்.

இப்படிச் சொன்னாலாவது ஆதிக்கச் சாதித் திமரில் உறைக்காதா? எல்லா சூடு சொரணையையும் உதிர்த்தது தான் ஆதிக்கத் திமிர். அந்தத் திமிருக்கு நேருக்குநேர் சவால் விடுகிறார் குணா,
“இடுப்பு வேட்டி மடிப்பில்
பட்டாக் கத்தியும்
பாக்கெட்டில்
கூர்மழுங்காத
போனவையும் சொருகிக்கொண்டு
வருகிறேன் நான்
இந்த இரண்டின் ஒன்று
நான் எதை எடுக்க வேண்டுமென்று
நீயே தீர்மானி”
முத்துப் பேட்டை மோகன்ராஜ் தன் செறிவான அணிந்துரையில், “கத்தியோ எதிரியைக் குத்தும் போது மட்டுமே ரத்தம் பார்க்கும். கவிதையோ படிக்கும் போதெல்லாம் குத்தத் தொடங்கும். குணாவின் எந்த ஆயுதத்திற்கு எதிரிகள் பயப்படுகிறார்கள் என சொல்லத் தேவையில்லை” – என்று சொல்வார்.

துரை குணாவின் கவிதைகளில் தெறிக்கும் சில வார்த்தைகளைக் காணுகிறபோது “என்ன இந்த வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துகிறாரே” என்பது போல் தோன்றும். கவிதைச் சொற்களாய் தென்படவில்லையே என்று உளைச்சல் எடுக்கும் சிலருக்கு. சிலருக்குத் தான் அது. கவிதைக்கென தனிமொழி, தனிச் சொற்கள், தனி நுட்பம் என ஒதுக்கி ஒதுக்கிப் பேணும் உயர்ந்தோருக்கு அப்படித் தெரியும். இன்றைய இலக்கியம் பயன்பாட்டில் காணப்படும் கவிதைச் சொற்கள், சொல்லாடல்கள் போன்றவை மேன்மக்கள் கண்டுபிடித்து கொண்டு செலுத்தியவை. அதீதத் தன்மையும் மக்களுக்கு புலப்படா குணவாகும் கொண்டவை. மக்கள் பயன்பாட்டில் உள்ளவை, அவர்களின் வாழ்வின் ரத்தமும் சதையுமானவை. பேச்சுமொழி, வட்டாரவழக்கு என்ற பொதுத் தன்மை கொண்டவை. இதைக் கொச்சை என்றும் இழிசனர் மொழி என்றும் புறந்தள்ளி, கற்றோர், புலமைக் கொண்டோர் தாம் விரும்பிய மொழியை சிம்மாசனத்தில் உபகார வைத்துக் கொண்டுள்ளனர். அதிலும் கவிதையென்றால் கேட்கவே வேண்டாம்.

மக்கள் மொழி அர்த்தமுள்ளது வார்த்தைகள் உயிர்ப்புள்ளவை. குறிப்பாய் விளிம்புநிலை மக்களின் சொல்லாடலில், நாம் எவையெல்லாம் நாகரிகமானவை, நயத்தக்கவை எனக் கருதினோமோ, அவர்களுடைய அகராதியிலிருந்து அவை கழற்றப்பட்டுவிட்டன. அந்த இழிசன விளிம்பு நிலை வாழ்வின் மைந்தர். வாழும் வாழ்வுக்குள்ளிருந்து தன் மக்களின் பயன்படுத்தும் மொழியிலிருந்து தான், அவர் சொற்களை ஏந்துகிறார்.

“இதை நான் நெனச்சி எழுதலே
பாத்து எழுதினேன்” – என்பது நிதரிசனம்.

நினைத்து, கற்பனை செய்து எழுதுகிற மொழி வித்தியாசமானது. இந்த மொழியைத்தான் குணா கையிலெடுத்தார். பஞ்சாயத்து என்ற கவிதை,
“ஆடுமாடுகளை வளர்க்கக் கூட
வழியற்றுப் போன எங்கள் ஊரில்…
ஆண் நாய்களைக் கூட
நாங்கள் வளர்க்கக் கூடாதாம்?
மேலத்தெரு நாய்கள்
கூட்டம் போட்டுச் சொல்லுது! ”

மனுசனை மனுசனாக மதிக்காத நாய்களை வேறெப்படிச் சொல்வது? நாய்கள் என்று தான் சொல்ல முடியும். இது போல தம்மேல் பாயும் கருத்தும், அதுக்குத் தக்கன வார்த்தையும் தான் அவர்களை ஆங்காரமடைய வைத்து, குணாவை அடித்து, உதைத்து, ஊரைவிட்டு ஓட்டிற்று.

“யார் எழுதுகிளார்கள் என்பதல்ல, என்ன எழுதுகிறார்கள் என்பதே முக்கியம்” – என்றொருவாசகம் உண்டு. எழுத்தின் தராதரம், குணவாகை எவ்வாறு மதிப்பிடுவது என நோக்கும் வாசகம் இது. ‘கீழ்ந்திரான் பட்டு’ என்ற அவ்வூரில் ஆதிக்க சாதிகளும் காவல்துறை ஆய்வாளர் என்றழைக்கப்படும் ‘இசைகெட்ட பயலும்’ சேர்ந்து என்ன எழுதினால் குணா என்பதை மட்டுமல்ல, எழுதியவர் என்ன சாதி என்பதையும் இணைந்தே பார்த்து வன்முறையாட்டம் போட்டார்கள்.

ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் ஒரு வர்க்கம் வாழுகிறது என்பது மார்க்சீயம், ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னணியில் சாதியம் வாழுகிறது என்பது தமிழ்ச் சமூகம், பெருமை பீத்திக் கொள்ளும் தமிழ்ச் சமூகம், இந்து மதச் சமூகமாக மாறி, சீர்கெட்டு, ஈராயிரம் ஆண்டைத் தொடப் போகிறது.

தலித் மொழி என்பது யாது? தலித் விடுதலையை நோக்கிய கருத்தும், அதற்கான சொல்லாடல்களும், அச்சொற்கள் அவர்கள் வாழ்வியலிலிருந்து எடுக்கப்படுகிறது. அப்படியென்றால், அவர்கள் கெட்ட வார்த்தைகளைப் பேசுவார்கள். கீழான சொற்களையே பயன்படுத்துவார்கள் என்ற பொதுப் பார்வையிலிருந்து மட்டந்தட்டி விடுவது வழக்கமாக இருக்கிறது. பொது வாழ்க்கைக்குரியோராக ஆக்கப்படாமல் விலக்கி வைக்கப்பட்ட வாழ்வினராக
ஆக்கப்பட்டிருப்பதால், விலக்கப்பட்ட வார்த்தைகளை தம் வசப்படுத்தல் இயற்கையானது, அதை நிறையாகவே கொள்வோமாக!

தலித்துகள் வெளிச்சம் பெறக் கூடாது: அவர்களுக்குரிய சூரியனை எட்டிப் பிடிக்கக் கூடாது. எழுத்துச் சட்டங்கள் வேறாக இருந்தாலும் நடைமுறைச் சட்டங்கள் இவ்வாறு தான் இருக்கின்றன. எனவே, தான் தர்மபுரி இளவரசனைக் கொன்றார்கள்@ கோகுல்ராஜைக் கொலைப்படுத்தினார்கள்.
“ஒரு தீக்குச்சியா அழிந்து
விளக்கை ஏற்றினேன்
அந்த வெளிச்சத்தில் தான்
என் வீட்டைக் கொளுத்தினார்கள்”
என்ற கவிதை இந்த நினைவுகளுக்குள் கொண்டு போகின்றது.

வசை, கொச்சை என கருதுகிற உயரிலக்கியக் குழுவினர் இவைகளை அங்கீகரிப்புச் செய்யமாட்டார்கள்: கண்டுகொள்ளவே செய்யாத போது, எப்படி வெளியீடு செய்வார்கள்? மாணவர்களுக்கு நவீன கவிதைகளின் பாடத்திட்டத்தில் இன்குலாப் - பெயரையே குறிப்பிடக் கூசுபவர்கள் - இந்தக் கூச்சம் அறுவறுப்பானது - ஒரு சார்பு மனநிலைதான் இக்கூச்சம் - இவர்கள் துரை குணாவையும் வாசிக்கவும் கவனிக்கவும் கூசுவார்கள் தாம்.

‘கீழத் தெரான்’ தொகுப்பிலுள்ள கவிதைகள் முன்னர் ஏதேனும் இலக்கிய இதழ்களில் வெளியானதா என, குணாவை விசாரித்தேன். தீக்கதிரில் வெளிப்பட்ட இரு கவிதைகள் தவிர, வேறு இதழ்களில் வெளிப்படவில்லை என்பது அவர் பதில். மன அரிப்பை வெளியிடுவதற்கான தளமாக ‘முகநூல்’ கலாச்சாரம் மாறியுள்ள சூழலில் கருத்துப் பதிவுக்கான களமாக மாற்றியோரில், துரை குணா முக்கியப்புள்ளி முகநூலில் சில கவிதைத் தெறிப்புக்கனைப் பகிர்ந்துள்ளார். இவை போன்றனவும், எழுதி எழுதிச் செதுக்கி தனவசம் வைத்துக் கொண்டனவும், சேர்த்து ஒரு படைப்பாக்கமாக உருப் பெற்றுள்ளது.

வேறொரு தினுசில், வகையில் சொல்ல விரும்புகிறேன். நடுத்தர வர்க்க அகமன உளவை, பார்வையை வெளிப்படுத்தும் தூய, உயரிலக்கிய வகையினருக்கு, இது போல் தலித்திய வாதனையை, வலியை, வெக்கையை, ஆங்கரிப்பை வெளியிடும் தகுதி இல்லை அவர்க்கு என நான் கருதுகிறேன். ஏனெனில், குணாவின் பிரகடனம் இது:
“கோடிக் கணக்கான விண்மீன்களில்
ஒன்றை மட்டும் தான் இயற்கை
நிலாவாக்கியது.
நான் கோடிக் கணக்கான விண்மீன்களை
நிலாவாக்க வந்திருக்கிறேன்”
தன்னிடம் சார்ந்த கோடிக்கணக்கான விண்மீன்களை நிலாவாக ஆக்குகிற நோக்கத்தை வேட்கையை எவ்விதம் கொண்டாடுவார்கள்!

ஒரு படைப்பு முதலில் உன் ஆழ்மனதோடு பேச வேண்டும். உனக்குள் ஒரு உரையாடலைக் கிளப்ப வேண்டும். அது நீ வாழும் வாழ்க்கையை ஆகாயத்தில் எங்கோ தென்படும் ஒரு புள்ளி போல் உன்னத் தொட வேண்டும். உன் வாழ்க்கை என்பது இச்சமுதாய வாழ்க்கை தான். வேறொன்றை இதற்கு அப்பாற்பட்டு எவரும் வாழ இயல்பு இல்லை. சமூக மனிதன் என்பதின் காரணமாகவே தொடர்புடைய எதிலும் ஏதோ ஒன்று உன்னைத் தொடும். வாசிப்பு, எழுத்து என்பதெல்லாம் இந்த உள்மன அனுபவங்கள்தாம். நமக்குள் ரணம் வழியச் செய்திடும் ஆயிரம் உரையாடலை நிகழ்த்த துரை குணாவின் ஒரு கவிதை ஒரு தொகுப்பு என்பது எக்கச் சக்கம்!

மக்களுக்கு உண்மையான மீட்சி, இன்றைய சனநாயகக் கட்டமைப்புக்குள் இல்லை. மீண்டும் மீண்டும் ஏமாற்றி வழுக்குப் புதருக்குள் இழுத்துப் போகும் தேர்தல் சனநாயகம் இந்த சனநாயக கட்டமைப்புக்கு நடைபெறுகிற எதுவும் அர்த்தமின்மையாகவே தோன்றுகின்றன.நிகழ்கால அரசியல்வாதிகளின் தலைக்குள் எது இருக்கிறதோ, அது வெளியில் கொட்டப்படுகிறது. ஆளும் வர்க்கங்களின் கரவான கையாட்களாக அவர்களின் அதிகாரத்தை நோக்கிய அடி, பிடி, சண்டைகள், சமரசங்கள், தேர்தல், வாக்குரிமை, சாதி, மாதம், பணம், பக்தி, பாரம்பரியம் அனைத்து விசயங்களும் பொருளற்றுப் போயுள்ளன. பொருண்மைகளின் இடத்தைக் காலி பண்ணி துப்புரவு செய்து அர்த்தமுள்ளவைகள் நிலைநாட்டப்பட வேண்டும். அர்த்தமுள்ளவைகளுக்கான போராட்ட களத்தில் இன்குலாப் நின்றார். புலியூர் முருகேசன், குணா போன்றோர் இன்று நிற்கிறார்கள்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்