பெருநெறி பிடித்தொழுகும் பயணம் - பேராசிரியர் க.பஞ்சாங்கம்


(1997 ஆண்டு வெளிவந்த "புதியன" சிறுகதைகள் தொகுப்புக்கு பேராசிரியர் க.பஞ்சாங்கம் எழுதிய அணிந்துரை.)

வாழ்க்கையை மனிதர்கள் எங்கேயோ தொடங்குகிறார்கள். பிறகு எங்கேயோ வந்து நிற்கிறார்கள். தியாகம், புரட்சி, இரக்கம், நேர்மை, உழைப்பு, உண்மை என்று தொடங்குகிற பலபேர், பார்த்தால் கடைசியில் அவைகள் அனைத்தையும் சந்தைச் சரக்காக்கி விலைபேசி விற்றுப் பட்டம், பதவி, பரிசு, பவிசு, சொகுசு முதலியவற்றைத் தலைமுறைக்கும் சொத்தாய்ச் சேர்த்து வைக்க ஆலாய்ப் பறக்கிற சாதாரணங்களாகிப் போய்விடுகிறார்கள்.

பா.செயப்பிரகாசம் 65-இல் வெடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மதுரை, தியாகராசர் கல்லூரி மூலம் சமூக வாழ்விற்கும் இலக்கிய உலகிற்கும் தெரிய வந்தவர். அன்று தொடங்கி இன்று வரை மொழி, தேசியம், வர்க்கம், சாதி, பாலியல் என்று எதுவானாலும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே சார்ந்து போதல் என்ற உண்மைக் கலைஞனுக்கே உரித்தான உளவியலைச் சிந்திச் சிதற விடாமல் தக்க வைத்துக் கொண்டு வருகிறார். தன் உயிர்ப் பிழைப்பிற்கான போராட்டத்தில் முறையான கல்வி, பட்டம், குடும்பம், பதவி என்றெல்லாம் அவர் சுற்றி வந்தாலும், தொடங்கிய இடத்தில் இருந்து விலகாமல் வந்திருக்கிறார். தன் இருப்பிற்கே அபாயகரமானது என்று நடுங்கும்படியான ஒரு தளத்தில் தன்னை இருத்திக் கொண்டு இயங்கிய தீவிர அனுபவம் பெற்றிருக்கிறார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் ஒரு பத்திரிகையை நடத்துவதற்காகத் தனது படைப்பாக்க மனநிலையையே தாரை வார்த்திருக்கிறார். தனது கால் நூற்றாண்டுக் காலப் பயணத்தில், தன் கூட இருந்த பலபேர் காற்றோடு சேர்ந்து போய் விட, தான் மட்டும் எதிர்த்தே பயணம் மேற்கொள்ளுமாறு விதிக்கப்பட்டிருக்கிறார்.

இப்பொழுதும் பதவி ஓய்வு பெற்ற நிலையிலும் தன்னை ஒரு கலகக்காரனாகவே வடிவமைத்துக் கொள்ளுகிற, அவியாத நெருப்பைத் தாங்கிய படைப்பாளியாகவே மீண்டும் வெளிப்படுகிறார் என்பதைத்தான் அவர் சமீபத்தில் எழுதிய கதைகளும் நமக்குத் தெரிவிக்கின்றன. பா.செ மீண்டும் எழுத வந்திருப்பது தமிழ்ப் படைப்பாளிகள் பற்றிய வரலாற்றில் ஒரு அதிசயம் எனல் வேண்டும்.

ஒரு நூற்றாண்டுத் தொடர் போராட்டத்திற்குப் பிறகு இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிரச்சனைகள் தனியாகத் தலித்தியம் என்ற சொல்லின் கீழ் மிகப் பெரிய அளவில், பெரும் பரப்பில் (பரபரப்பாகவும்தான்) பேசப்பட்டு கொண்டிருக்கிற சூழலில் பா.செ கதைகளில் அப்பிரச்சனையை நேரடியாகத் தொடுகிறார். தலித்துக்கு எதிராகத் தலித்து அல்லாதவன்தான் இயங்குகிறான் என்பதில்லை. ஒரு தலித்தும் அப்படி இயங்கக் கூடும். இந்த ஆளும் அதிகாரஅமைப்பு இப்படித்தான் எல்லோரையும் எதிர் எதிராக நிறுத்தித் தன்னைத் தக்கவைத்துக் கொண்டு வருகிறது. அம்பேத்காரின் அரசியல் சட்ட விதிமுறையினால் சமூகத்தில் தொடக்கம் என்கிற கதையில் விமர்சிக்கப்படுகிறான். இவன் ஊர் வாக்கப்படி ஊர்ப் பெரியவரைப் பார்க்க வேண்டியதில்லை என்று கிராமம் தன் மேல் சுமத்திய மதிப்பீடுகளைத் தோண்டி எடுத்து வெளியே வீசியவன்.

ஆனால் அந்த இடத்தில் அதிகாரம் அதிகாரி என்கிற ஆளும் உயர்சாதி மனப்பான்மையை இட்டு நிரப்பிக் கொள்ளுகிறான். எனவே பண்ணையின் பக்கம் சார்புநிலை எடுக்கிறான். கைநீட்டி லஞ்சம் வாங்கிக் கொள்ளுகிறான். இதன் மூலம் ஏறத்தாழ ஒரே தளத்தில் ஏழைகளாக வாழ்கிற இரண்டு சாதியினரிடையே கலகமும் கைகலப்பும் ஏற்படக் காரணமாகிறான். பொருளாதாரத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. சீரழிகிறவர்கள் எச்சாதியாக இருந்தாலும் கீழ் மட்டத்தில் இருப்பவர்களோ இவ்வாறு சாதிய ஒதுக்கீட்டு அரசியலும், அந்தச் சாதிக்கு எதிராக அதிகார வர்க்கமும் பின்னிப் பிணைந்துள்ள ஒரு சமூக அமைப்பில் சாதியப் பார்வைதான் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்கிற அணுகுமுறை இங்கே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. உயர்ந்த கலைஞன் வினாக்களை உற்பத்தி செய்து கொண்டிருப்பவனாகவே எப்பொழுதும் இருந்திருக்கிறான். இவ்வாறு எழுப்புவதன் மூலம் தன் மேல் வீசப்படும் எதிர்ப்புகளைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. தீமை எந்த வடிவில் இருந்தாலும் அது கடியத் தக்கதே என்பதில் கறாராக இருக்கிறான்.

‘இழிவு’ மற்றும் ‘சாதி’ கதைகளில் ஒவ்வொருவனுக்குள்ளும் சாதி என்கிற பிரக்ஞை எந்த அளவிற்கு அவன் ஆன்மாவோடு சேர்ந்து ஆணி அடிக்கப்பட்டிருக்கிறது என்பது சொல்லப் பட்டிருக்கிறது. எனக்கெல்லாம் சாதி உணர்வு எதுவும் கிடையாது. நான் கடந்தவன் எல்றெல்லாம் சொல்லிக் கொள்ளுகிறவர்களை விமர்சிக்கும் கதைகள் இவை. அம்மாவிற்கான ஈமச் சடங்குப் பின்னணியில் இந்தக் கருத்துச் சொல்லப்படும் போது, கதையின் கருவைப் புரிந்து கொள்ளாமல் சாதிச் சங்கங்களில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. யதார்த்தவியல் எழுத்துக்களுக்கு இத்தகைய விபத்து நடப்பது தவிர்க்க முடியாததுதான், மாய இயல்பு நவிற்சி எழுத்துமுறை இத்தகைய இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட சிக்கலைப் பெரிதும் தவிர்த்துக் கொள்ளப் பயன்படலாம்.

‘கிராமத்துக் குறிப்புகள்’ என்ற கதையிலும் சாதியும் வர்க்கமும் சேர்த்துப் பின்னப்படுகிறது. சாதியாலும் வர்க்கத்தாலும் உயர்ந்தவர்கள் எந்த அளவிற்குக் கேவலமாக அந்தப் பூமியில் வாழ்கிற தாழ்த்தப்பட்ட மக்களை நடத்துகிறார்கள் என்பதும் காட்டப்படுகிறது. அதே நேரத்தில் அந்தப் பூமியை விட்டு வெளியே நகரங்களை நோக்கி நகர்ந்தவர்களை நோக்க, இங்கே பணத்தைப் பூதமாய்க் காக்கும் உடைமையாளனும், வாங்கவோ, விற்கவோ ஒன்றுமில்லாத ஓரத்து மக்களும் வாழ்க்கைத் தரத்தில் சமமாகத்தான் வாழ்ந்துவிட்டுச் செத்துப் போகிறார்கள் என்பது இடிபாடுகள் நிறைந்த பின்னணியில் முன் வைக்கப்படுகிறது.

***

ஒடுக்கப்பட்டவள், ஓர் இயற்கை உயிராய் வாழ்ந்துவிட்டுப்போக மறுக்கப்பட்டவள் என்ற முறையில் பெண்ணும் தலித்துகளோடும் கறுப்பர்களோடும் இணைத்து வைத்து எண்ணத்தக்கவளாவாள். பெண்ணுக்குக் கொடுக்கப்படும் முறைசார்ந்த கல்வி முறை பெண்ணின் மேல் சுமத்தப்பட்டுள்ள பழைய மதிப்பீடுகள் ஒன்றையும் அசைத்து விடவில்லை. இவள் படிக்கலாம். வேலைக்குப் போகலாம். சம்பளம் வாங்கலாம். ஆனால் கணவன், குடும்பம், பிள்ளை என்ற உறவுமுறை வரும் போது இந்த ஆதிக்க அமைப்புக்குள் மிக எளிதாக, சர்வ சாதாரணமாக ஐக்கியமாகிப் போய் விடுகிற அளவிற்கு அவளது மனவியலை குடும்பமும், மதமும், கலை இலக்கிய ஊடகங்கள் கூடவே ஆணாதிக்கக் கல்விமுறையும் சேர்ந்து வடிவமைத்து விடுகின்றன. இல்லையென்றால் தன்னைத் தீர்த்துக்கட்ட சந்தர்ப்பங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கும் கணவன் என்ற பேரிலுள்ள மிருகத்திற்காக ஒருத்தி இரங்க முடியுமா? சமூகத்தில் எம்.ஏ, பி.எச்.டி, டாக்டர், இன்ஜீனியர் என்று படித்துவிட்டு, பெண் பார்க்க வரும் கும்பலின் முன் எந்தவித மனத்தடங்கலும் இன்றி ஒரு தடவை அல்ல, பல தடவை அலங்கரித்துக் கொண்டு நிற்க முடியுமா? அதிகார அமைப்பின் ஆழத்தைக் காட்டும் கதை ‘சிறைமீட்பு’. 

***

‘புதியன’ கதையில் வரும் சந்தியா புரட்சிகரப் பத்திரிகைகளோடு தோழமை கொள்ள நேரும் போது, தந்தை, தனயன் உட்பட்ட ஆதிக்க சக்திகளால் தன் வாழ்வு எத்தகைய இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது என்ற வெளிச்சம் பெற்று, தன் மேல் சுமத்தப்பட்ட பழங்குப்பை அனைத்தையும் அள்ளி எறிந்துவிட்டு, வெளியே தெருவிற்கு வந்து விடுகிறாள். தாலி கூட இல்லாத ஆண் - பெண் உறவை அமைத்துக் கொள்ளுகிறாள். நகரத்தைத் தளமாகக் கொண்டியங்கும் இத்தகைய கதைகளில் பா.செ.யின் கருத்துச் சார்பு உள்ளம்தான் படைப்பு உள்ளத்தைவிட அதிகமாக வெளிப்படுகிறது.

‘தியாகி’, மனித வரலாற்றில் பொய்மைகளின் - தீமைகளின் - தன்மையை அலசுகிற கதையாகும். எல்லாவிதமான உயர்ந்த கொள்கைகளும் அமைப்பு ரீதியாகும்போது வன்முறை வடிவம் எடுக்கின்றன. கொள்கையை நெஞ்சில் நிறுத்திக் கொண்டவன் பீதி அடைகிறான். ஓரங்கட்டப்படுகிறான். அமைப்பு அனைத்தையும் விழுங்கிவிடுகிறது. அமைப்பிற்கும் கொள்கைக்குமான இந்த முரண்தீர்க்க முடியாத சிக்கலாகத் தொடர்கிறது புத்தன், தர்மன் ஆகியன எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு சங்கமும் முக்கியம் என்கிறது புத்த சமய வரலாறு. இத்தகைய இடங்களில் தான் புரட்சிக்காரர்களின் மனம் சோர்வடைகிறது. இது இப்படித்தான். இதற்கிடையில் தான் இயங்கியாக வேண்டும். மொழியுலகில் வாழும் மனிதனுக்கு விதிக்கப்பட்ட விதி இதுதான். ‘சாவு அல்ல’ என்ற கதையும் இங்கேயும் காவல்நிலையம், மருத்துவ நிலையம் என்கிற அமைப்புகள் எத்தகைய வன்முறை நிலையங்களாக மனிதர்கள் நடுவே இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று காட்டப்படுகின்றது.

***

பா.செ.க்குள் நிறைந்து கிடக்கும் பழங்காலத்தை, நிகழ்காலம் எழுதிக் கொள்ளுகிறது என்று சொல்ல முடியாதபடி, அவர் அதை மொழிப்படுத்தும் முறைமை அமைந்து கிடக்கிறது. குறைந்தது முப்பது ஆண்டுகால வாசக அனுபவத்திற்குப் பிறகு தெரிந்து கொண்டது ஒன்றுதான். அதாவது எந்த எழுத்து ஒரே நேரத்தில் வாசகனாகவும் படைத்துக் கொள்ளுகின்றவனாகவும் இயங்கும் படியான ஒரு சூழலை வாசகனுக்குள் ஏற்படுத்தித் தருகிறதோ அதுதான் படைப்பாக உயர்ந்து நிலைத்து விடுகிறது தொன்மங்களின் நிலைத்த வாழ்விற்கு இதுதான் காரணமோ எனச் சொல்லத் தோன்றுகிறது. இப்படிச் சாதித்து விடக் கூடிய படைப்பாக்கக் கூறு எது? அது இதுதான் என்று ஒன்றைச் சுட்டிவிட முடியாது என்பது தான் படைப்பனுபவ வரலாறாக இருக்கிறது. படைப்பனுபவத்தை இப்படி அறிய வொண்ணாத் தளத்திற்குக் கொண்டு போகலாமா? புத்தன் அப்படித் தான் கொண்டு போயிருக்கிறான். இந்தப் பிரபஞ்சத்தை - வாழ்வை - அறியவொண்ணாத புதிராகத்தான் பார்த்திருக்கிறான். எதுக்குள்ளும் சிக்காத மொழி வழிப்பட்ட இலக்கியப் படைப்பனுபவமும் இப்படித்தான். இப்படிப் புரிந்து கொள்ளுகிற சூழலில் தான், மாய இயல்பு நவிற்சி எழுத்து பிறக்கிறது. யதார்த்தத்திற்குள் செலுத்துகிறது. சிலப்பதிகாரம், இராமாயணம் ஆகியவற்றின் இந்தத் தன்மைதான் இன்னும் வாசகனுக்கும் படைப்பாளிக்கும் முறையே வாசிக்கத் தக்கனவாகவும், படைத்துக் கொள்ளத்தக்கனவாகவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது.

பா.செ தன் அனுபவத்தை மொழிப்படுத்துவதற்கு அப்படிப் புதிய முயற்சிக்குள் வந்தாக வேண்டும் என்று சொல்ல நினைக்கும் போதே மற்றொன்றும் தோன்றுகிறது. எழுதலாம், எழுதலாம் என்று அதற்கான வடிவத்தைத் தேடிக் கொண்டு இறுதியில் எழுதாமல் சாவக் கொடுத்து விட்டு வெறுங்கையோடு நிற்பதை விட, இப்படி வருகின்ற வடிவத்திற்குள் பிடித்து வைத்து விடுவதும் நல்லது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

பா.செ.யின் எழுத்துகளுக்கு இப்படியொரு முன்னுரையை நான் எழுத நேரும் என்று எண்ணிப் பார்த்தது இல்லை. ஆனால் நிகழ்ந்து விட்டது. கரிசல் காட்டுக் காற்றை இன்னும் இதயத்திற்குள் தேக்கி வைத்திருக்கும் வியத்தலுக்குரிய பா.செ.க்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

- பேராசிரியர் க.பஞ்சாங்கம், 11 டிசம்பர் 1996
(முன்னாள் பேராசிரியர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆய்வு மையம், புதுச்சேரி.)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?