காலம் ஆகிவரும் கதை, அ.இரவியின் - வீடு நெடுந்தூரம்

(அ.இரவி எழுதி நூல் வடிவில் வெளிவந்துள்ள 'வீடு நெடுந்தூரம்', 1972 – 1987 வரையான பதினைந்து வருடகால ஈழத்துத் தமிழ் அரசியலின் குறுக்கு வெட்டுமுகம் இப்படைப்பு. 1986 டிசம்பர் 13 அன்று ஒரு பயணம் முடிவுக்கு வருவதைச் சொல்கின்ற இப்படைப்பு அக்காலத்தைய அதிகாரமும் ஆயுதமுனையும் வரட்டுத்தனமும் அரசியல் மனிதரை நிர்க்கதியாக்கும் நிலையைத் துயரார்ந்து வெளிப்படுத்துகின்றது. இந்நூலுக்கு பா.செயப்பிரகாசம் அவர்கள் எழுதிய முன்னுரை இங்கு படிக்கலாம்)

காலம் ஆகிவரும் கதை

1. மரணப்பாறை
தமிழகத்தின் கொடைக்கானல் மலையில் உள்ள இதன் கீழே குகைபோல் நீண்டு செல்லும் இருட்டுப் பள்ளம். இருட்டுக்கு எவ்வளவு ஆழம் என்று எவரும் கண்டறிந்து சொன்னதில்லை. அந்தக்காலத்தில் கொடைக்கானலுக்கு ஒரேயொரு பேருந்து போக வர இருந்தது. கொடைக்கானல் பேருந்து நிறுவனத்தின் (kodaikkanal Road Ways) முதலாளி பேரப்பிள்ளைகளைக் கூட்டிப்போய் ஒவ்வொரு இடமாய்க் காட்டி வந்தார். மரணப்பாறையில் நின்று கீழே குனிந்து காட்டியபோது, வழுக்கி கீழே கீழே உள்ளே உள்ளே போய்க் கொண்டிருந்தார். தீயணைப்புப்படை வீரர்கள் கயிறுகட்டி இறங்கித் தேடியும் கடைசிவரை உடல் கிடைக்கவில்லை.

சிங்களதேசம் ஒரு மரணப்பாறை. அறவழிப் போராளிகள், ஆயுதப் போராளிகள், விமர்சகர்கள் அனைவரையும் கீழே தள்ளி மரணக்குகைக்குள் சேர்த்துக்கொண்டு போகிறது. என்னென்னவோ சாகசங்கள் காட்டிய ஆயுதப் போராளிகளையும் கபளீகரம் செய்துவிட்டது. லசந்த விக்கிரம சிங்கே முதல் சுதந்திரமான இதழியலாளர்கள் எல்லோரையும் மரணப் பள்ளத்துக்குள் விழத்தாட்டிக்கொண்டே செல்கிறது. இராசதந்திரம் எல்லாமும் முடிந்தபின், எதுவுமே நடக்கவில்லையென உலகுக்கு அது காட்டும் வளமிக்க இராசதந்திரமுகம் – அது கொலைகளின் கம்பீர முகம்.

2. வாழ்தலும் சாதலும்
வாழ்தலுக்கும் சாதலுக்கும் வேறுபாடில்லை. இரண்டும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத்தாய் ஒன்றாகவே கவிந்திருந்தன. இப்போதிருப்பவர் அடுத்த வினாடியில்லை என்ற நிலையாமை விதி அந்தச் சிறுபான்மையினர் மேல் செயலாக்கமாகிக் கொண்டிருந்தது.

எதற்கு இந்த ரோராட்டு (ரோதனை)? எத்தனை காலத்துக்கு என்பது அவர்களின் வாழ்க்கையின் கேள்விகள். அவை அரசியல் கேள்விகள். இனி அந்தத் தீவுக்குள் உயிர்தரிக்க முடியுமானால் அது தனிநாட்டில்தான் என்ற முடிவுக்கு 1976ல் வட்டுக்கோட்டை மாநாட்டில் வந்தடைகிறார்கள். முன்னரே வந்து சேர்ந்திருக்க வேண்டிய இலக்கு இது. இலக்கைத் தெளிந்து முற்றுப்புள்ளி வைக்கத் தெரியாமல் காற்புள்ளி, அரைப்புள்ளி என இட்டு, இட்டு பிறகும் எப்படி முடிப்பது என்ற மதியற்று முடிந்த இடம் முள்ளிவாய்க்கால் - மே 18.

ஊர் தெரிந்தது; பாதை தெரிந்தது. யார் அந்தப் பாதையை பாத்தியதை கொண்டு ஊர் சென்றடைவது என்ற போட்டாபோட்டியில் எல்லாமும் இழந்து நிர்க்கதியாக விடப்பட்டார்கள் எம் மக்கள். இத்தனை லட்சம் பேர் கொலையாகவும் குடிபெயரவும், முள் வேலிக்குள் சிறைப்படவும், நாடுநாடாய் அலையவும் இதுவே காரணமாயிற்று. இன்னும் பசி அடங்காத சிங்களம் ஐ.நா சமாதான தேவதையின் இறக்கைகள் அணிந்து கொண்டு பலி எடுக்க அலைகிறது.

3. பிம்பங்கள் கடந்து வா
பிம்ப ஆராதனை விவரிப்பில் தொடங்குகிறது வீடு நெடுந்தூரம். அதாவது அ.இரவியின் சுயகதை. (அப்போதைய இயங்கு பெயர் டேவிட்). இடி என முழங்குகிறது தளபதி அமிர்தலிங்கத்தின் குரல்,

“அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்தில்”-
ஒலி பெருக்கி அலறிச் சொல்லுது.

“அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்தில்!........ எங்களின் தளபதி அமிர்தலிங்கத்துடன் உடுப்பிட்டிச் சிங்கம் சிவ.சிதம்பரமும் சேர்ந்து நிற்கிறார். அடங்காத் தமிழன் சுந்தரலிங்கமும் இதற்கு ஆதரவு. மட்டக்களப்பு சொல்லின் செல்வர் இராசதுரை எத்தனை வீரியமாய் நிற்கிறார். காசி ஆனந்தனின் கவிதைப் பேச்சு!மங்கையர்க்கரசியக்காவின் வெண்கலக்குரல்!... இவை தமிழீழத்தைப் பெற்றுத் தரப் போதாதா? தமிழீழத்துக்கென்று ஜீ.ஜீ.பொன்னம்பலம் நிறைய தொழிற்சாலைகளைக் கட்டி வைத்திருக்கிறார். காங்கேசந்துறை சீமந்தூ தொழிற்சாலை, ஆணையிறவு உப்பளம், பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை, வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, கந்தளாய் சீனித்தொழிற்சாலை, திருமலை இல்மனைட் தொழிற்சாலை....எத்தனை தொழிற்சாலைகள். அத்தனையும் தமிழீழத்துக்குத் தானே! தந்தை செல்வாவை எதிர்த்துத் தேர்தலில் நின்ற தோழர் வ.பொன்னம்பலமும் இப்போது தமிழீழத் தளபதியின் பக்கம்!“

இரவியைப் போலவே இளைஞர்கள் அழுதார்கள். அனல்பறக்க ஆவேசப்பட்டார்கள். நாமில்லா நாடுமில்லை. நமக்கென்றோர் நாடுமில்லை என்று முழங்கினார்கள். ஆண்ட தமிழீனம் மீண்டுமொரு முறை ஆள நினைப்பதில் என்ன தவறு என்று குரல் உயர்த்தினார்கள். “அடுத்த தைப் பொங்கல் தமிழீழத்தில்” என்று சிலிர்த்தார்கள் –
இது 1977ன் பின்பனிக்காலம்.

தேர்தலில் வென்ற தளபதிகள் நாடாளுமன்றத்துக்குள் போனார்கள். போனவர்கள், போனவர்கள் தாம், திரும்பினார்களில்லை. எங்குமே காண முடியவில்லை தளபதிகளை –
இது 1978ன் முதுவேனிற்காலம்.

செய்தி இதழ்களில், படங்களில் தளபதி காணக்கிடைக்கிறார். சிறீங்காவின் எதிர்க்கட்சித்தலைவர் என்றான பின், அவர் மக்களை விட்டு வெகுதூரம் ஓடிவிட்டார். கேட்டது தமிழீழம்; கிடைத்தது ஜப்பான் ஜீப். ஜப்பான் ஜீப் கிடைத்த பிறகு தளபதி அமிர்தலிங்கம் வெகு வேகமாக ஓடிவிட்டார். யாழ்ப்பாண நீதிமன்ற மதிலில் “ஆண்டு ஒன்றாச்சு; நாடு இரண்டாச்சா” என்ற வாசகம் தாரால் எழுதப்பட்டிருந்தது.

இங்கே, தமிழ்நாட்டிலும் இதே அரசியல் கதை!

“அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு”

முழக்கங்களால் மூன்று தலைமுறை இள ரத்தங்களை சுண்டவைத்த பெருமை உண்டு.

இங்கும், அங்கும் பிம்பங்களின் கதை ஒன்றுதான். மே 18 வரை இங்கும் அங்கும் பிம்பங்களின் பின்தான் ஓடிக்கொண்டிருந்தோம்.

தலைமை வழிபாட்டினால் உருவாக்கப்படும் பிம்பங்கள் ஆபத்தானைவை. தலைவனுக்கு மேல் சிந்திப்பது அநியாயமானது என்ற ஆபத்தையும் அது உட்கொண்டிருக்கிறது. சுயசிந்தனையற்ற கூட்டத்தை உருவாக்குவது மிக எளிதாக இதன்வழி சாத்தியமாகும். ஒரு தலைவனுக்குப் பின் இன்னொரு தலைவனில்லை; ஒரு மேதைக்குப்பின் இன்னொரு மேதையில்லை என்ற உருவேற்றுதல்கள்- ஒவ்வொரு சிந்தனையையும் சுய சுரப்பில்லாமல் மழுங்கடிக்கிறது.

ஆனால் ஒவ்வொரு காலத்துக்குப் பின்னும் மற்றொரு காலம் வருகிறது. காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்ற வரலாற்று ஓர்மை பொதுச் சமூகத்துக்குள் வரவேண்டும். கால மாற்றத்தைக் கணக்கில் கொள்ளாவிடின், நாம் காலத்தை இழப்போம் என்பது உண்மை.

இவர்கள் (தலைமை நிலையக்காரர்கள்) ஒன்றை வசதியாக மறைத்துவிட்டார்கள். “ஷேக்ஸ்பியரைவிட சிறப்பாக நாடகங்கள் படைக்கிறீர்களே” என்று சிலர் சிலாகித்த வேளையில் ”என்ன செய்வது? நான் ஷேக்ஸ்பியரின் தோள்களின் மீது நின்று கொண்டல்லவா எழுதுகிறேன்” என்று பெர்னாட்ஷா சொன்னதை மறைத்துவிட்டார்கள். முன்னிருந்த அறிவுச் சேகரிப்புகளின் மீது நின்று உலகைக் காணுகிறோம்: அது நம் சிந்தனைக் குருத்துகளைச் செழுமைப் படுத்தும்: சுய சிந்தனையை பளிச்சிடச் செய்யும் என்ற தர்க்கபூர்வ நிய்யாயத்தை ஒதுக்கிடும் துன்பியல் நிகழ்கிறது. தலைமைகளின் தோள்கள் மீது நின்று உலகைப் பார்க்கும் திடமும் சிந்திப்பும், செயலும் எவருக்குண்டோ, அவரே சாதனையாளர் . மக்கள் ஒவ்வொருவரும் சாதனையாளராகி விடக்கூடாது என்பதில் தலைமைகள் செயல்பூர்வமாக நிற்கிறார்கள் – தோழர் விசு போன்ற சிலர் விதிவிலக்கு.

4. எங்கும் உயிர் வாழமுடியாது
“ஒன்றை உணர்ந்துகொள்; அரசியல் இல்லாத ராணுவத்தால் ஒண்டும் செய்ய ஏலாது. அதே சமயம் இராணுவம் இல்லாமலும் அரசியல் போரை நடத்த ஏலாது. இப்ப இவையள் (இவர்கள்) லெபனானில் டிரெயினிங் எடுத்துப் போட்டு வரலாம். வந்து போலீஸைச் சுட்டுப் போட்டு துவக்கைப் (துப்பாக்கி) பறிக்கலாம். பறிச்சி என்ன செய்கிறது? அந்தத் துவக்கை மக்களிட்டை கொண்டு போறதென்றால் மக்கள் ஆயத்தமாக இருக்க வேணும்........ நீ இருந்து பார், அரசியல் இல்லாத துவக்கு இவையளை நோக்கியே நீட்டப்படும். ஒவ்வொரு பிரச்சினையையும் மனந்திறந்து விவாதியுங்க. எதையும் அரசியலா சிந்தியுங்க”(பக்கம் 75)
விசு சொல்கிறார்.

மனம் திறக்க எந்த இயக்கத்திலும் இல்லை இடம். ஒரு அமைப்புக்குள் செயல்படுத்தாத சனநாயகத்தை, மற்றொரு அமைப்புக்குத் தருவார்களா? ஆயுதமும் தலைவன் பிம்பமுமே வழிநடத்திய ஒவ்வொரு குழுவும் மக்களுக்கான அதிகாரத்தை உருவாக்கம் செய்வதற்கு மாற்றாக இயக்கத்தின் அதிகாரமாக மாற்றின.விவாதம், சுயவிமரிசனம் வேண்டாதவையாகின. அரசியலை, அமைப்பை விவாதமாக, விமரிசனமாக, சனநாயகமாக எடுத்துச் செல்லமுனைந்த சில மனங்களும், துவக்குகளும், தலைமை வழிபாட்டுக்குள்,அச்சத்துக்குள் சுருக்கிடப்பட்டன.

ஆயுதவாதம், தலைமைத்துவ வழிபாடு இரண்டையும் விட்டால் ஈழஅரசியல் இல்லை. தலைமை வழிபாட்டை விட்டால் தமிழக அரசியல் இல்லை.

அம்மா கண்ணீர் வரச் சொன்னா “ராசா உன்ரை இயக்கத்திட்டை சொல்லி இந்தியாவுக்குப் போய் நில்லன் அப்பன்....நீயும் பாதுகாப்பாய் இருப்பாய். நாங்களும் நிம்மதியா இருப்போம்”

இலங்கை எனும் நாட்டில் இருந்தால் இனி வாழ முடியாது; வேறு எங்கு வேண்டுமானாலும் போய் வாழ்ந்து கொள்ளலாம் என்பது எத்தனைபெரிய கேவலம். இயக்கத்தோடு முரண்பட்டால், இனி இங்கு நின்றும் வாழ முடியாது; எங்கும் போய் வாழ முடியாது என்பது அதைவிட அவலம்.

உள்முரண்பாடுகளைத் தீர்ப்பது, உயிர் அழிப்பதால் ஆகாது. முரண்பாடு புதிதுபுதியாய் தோன்றிக் கொண்டேயிருக்கும்; உயிர் ஒருமுறை பிடுங்கப்பட்டால், பிறகு தோன்றுவதேயில்லை.

5. தோழர் விசு
“நீ துவக்கு தூக்கிப் போராட வேண்டுமெண்டு நான் எதிர்பார்க்கேல்லே. துவக்கு தூக்கிறதுக்கு வேற ஆட்கள் இருக்கினம். நீ படிக்கிறாய். நல்ல கலைஞன். அதை எங்களுடைய அரசியல் வேலைகளுக்கு எப்படிப் பயன்படுத்தலாம் எண்டுதான் நீ பார்க்க வேணும். நீ நல்லா எழுதக் கூடியனீ. எங்களுடைய வாழ்க்கையை வரலாற்றை கதையாகவோ அல்லது வேறெதாகவோ எழுது.” (பக்கம் 96)

“ஒரு விடுதலைப் போராட்டத்திலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மட்டத்தில் வேலை இருக்கு. அவரவருடைய மட்டங்களைத் தீர்மானித்து, அவரவர்களின் விருப்பத்தோட அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியதுதான் என்ர கடமை. அவர்களது தேவையை அவர்களை உணரவைக்க அரசியல் அறிவு ஊட்ட வேண்டும். அப்படிக் கூடச் சொல்லக்கூடாது ;எமக்குத் தெரிந்தவற்றைப் பகிர வேண்டும்”

மற்றவர்களுக்கு அறிவூட்டுவது அல்ல. அறிவூட்டுதல் என்ற செயலினூடாக அதிகாரம் துளிர்த்து விடும். அறிவூட்டுதல் நிகழ்கிற போதே அந்த ஒருவனின் அறிவையும் பகிர்ந்துகொள்ளுதல். அனுபவப் பகிர்வையும் பெற்றுக்கொள்ளல் என்பது சனநாயக நடைமுறை; அறிவின் சனநாயகத்துக்கு, சிந்திப்பு சனநாயகத்துக்கு இடம் தருகிறவராக விசு நம்மில் உயருகிறார்.

யார், யார் என்னென்னன வேலை செய்ய வேண்டும் என்பதை அமைப்பு தெரிந்து வைத்திருக்கவில்லை என விசு உணர்த்துகிற இடம் முக்கியமானது. முதலாளித்துவ தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு ஒற்றை நோக்கம்தான் உண்டு. இந்த சமுதாய அமைப்பில் தான் எப்படி முதலாளியாவது, தன்னை அரசியல் வழியில் எவ்வாறு அதற்குத் தகுதிப்படுத்திக் கொள்வது என்ற பணிதான். ஆனால் தமிழ்நாட்டின் புரட்சிக்கர இயக்கங்கள் யார் யாரை தகுதியின் பகுப்பில் எதில் எதில் ஈடுபடுத்துவது என்ற கவனமில்லாமல், எல்லோரையும் முழுநேர அரசியல் ஊழியனாக ஆக்குவது என்பதில் கருத்தாய் இருந்தார்கள். பேனா பிடித்த கையில் துப்பாக்கி ஏந்த வைத்தது போல், பிற துறைவல்லுனர்களையும் அரசியல் பேசக் கற்றுக்கொடுத்தார்கள்.

ஒருவரை அவருக்குப் பரிச்சயமான துறையில் இருத்தி வேலைவாங்குதல். அது வேலை வாங்குதல் அல்ல பயன்படுத்தல். அது போது அவர்கள் தாம் சேகரித்த மனிதவளத்தை அள்ளி வழங்குவார்கள். அவ்வாறில்லாமல் அனைவரையும் நேரடி அரசியற்கள செயற்பாட்டாளர்களாக ஆக்கும் ஒற்றை முனைப்பு இட்துசாரி இயக்கங்களில் வழமையாக ஆகிப் போனது.

“இதுதான் எனக்கான வேலை. புளகமாக இருந்தது. இப்படியே எழுதிக் கொண்டே இரு. ஒரு பறவையின் தீராத சிறகடிப்பு இது. எந்நேரமும் வாசி, மீன்குஞ்சுகளின் ஓயாத நீச்சல் தரும் சுகம் அது. சஞ்சிகை (இதழ்) நடத்து. அருமையான படைப்புக்களை வெளியே கொண்டு வா. உலகத்துக்கு அதனை விரித்துக்காட்டு. என்னவோ, எதுவாயினும் எத்திலேயே அமிழ்ந்து போ. ஓய்ந்து போய் ஒரு நாளும் இராதே. ஓய்வு தேவையெனின் கண்மூடு, கனவில் மித, காலநதியிலும் நீந்தி நீந்தி காணவேண்டியதைக்காண்; இப்படிச் சொல்ல ஒருவர் வேண்டும் எனக்கு”
தவிதாயப்படுகிறார் இரவி. (பக்கம் 152)

அந்த ஒருவராக விசு தோழர்!

யார் யாரை, எந்தெந்த துறையில் நெறிப்படுத்துவது என்பது போராடும் இயக்கத்தை முறைப்படுத்தி மேலெடுத்துச் செல்வதனோடு இணைந்தது. தோழர் விசு - ஒவ்வொருவரின் நடவடிக்கையையும் கேட்டறிகிறார். ஒவ்வொருவரி மிடமிருந்தும் விசாரித்தறிகிறார்.

“நான் என்ன என்ன செய்ய வேண்டும்? ஒரு முனைப்புடன் கவனங்களை மையப்படுத்துவதற்கு என் பணி எந்த வகையில் அமைய வேண்டும்?”

இரவியின் சொந்தக் கேள்விகள் மட்டுமல்ல, 70,80 களில் ஈழம் வாழ் அனைத்து இளைஞரின் கேள்வியாக இருந்தது. விசு தெரிவு செய்து வழிகாட்டுதல் தருகிற ஒரு ஆத்மா.

“நானே இன்னும் புல்ரைமரா (முழுநேர ஊழியனாய்) வேலை செய்யத் தொடங்கேல்லையடாப்பா.”
கேள்விக்கான பதிலைத் தொடங்குகிறார் விசு.

“புல்ரைம் என்பது நமது விருப்பத்திலை இருந்து வாறதில்லை. தேவையிலை இருந்து வாறது. இவ்வளவு வேலைகள் இருக்கு. இதைச் செய்து முடிக்க எனக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்! முழுநேர ஊழியராக எவ்வளவு பேரை அமைப்பு பொருளாதார ரீதியாக தாங்கும்? குடும்பத்துடன் தங்கி இருந்து கொண்டு எவ்வளவு வீதம் பங்களிப்புச் செய்யலாம்? வேலை செய்து கொண்டிருக்கிறாரே, அதைப் பாதியிலை விட்டிட்டு வர வேண்டுமென்ற என்ற அவசியம் இருக்கா எண்டு பலதையும் பத்தையும் யோசிக்க வேணும். அர்த்தமில்லாத தியாகங்களைத் தவிர்க்க நாம் இயன்றதனைத்தும் செய்ய வேண்டும் என்றார் மா சேதுங்க ஓரிடத்தில்”

நடைபெற்று முடிந்தவை அவ்வளவையும் பார்க்கையில், இது ஒரு சீரிய அறிவுறுத்தலாகவே இருக்கிறது. எத்தனை ஆயிரம் மாவீரர் துயில்கிற இடங்கள். இதற்கு முன் இத்தனை கல்லறைகளை வரலாறு கண்டிருக்குமா? எத்தனை வகை தியாகங்கள்! இதற்குமுன் அத்தனை வகை தியாகச் செயல்களை வரலாறு சந்தித்திருக்குமா?

இன்னும் வெளிவராத அந்தப்புதினத்தில் போராளியினுடைய ஒரு வாசகம் வருகிறது. “விடுதலைக்குத் தக்க விலைதான் கொடுக்கலாம்; அதற்கு மேலும் கொடுக்க முடியாது. கொடுக்க கூடாது. கொடுக்க நேர்ந்தால் நாம் தோற்றுவிடக் கூடும் என எண்ணுகிறேன்.”

தியாகங்களை திசை தெரியாமல், அளவு அறியாமல் அள்ளித் தெளித்தோம். எல்லாமும் நடந்தது - விடுதலை தவிர!

செழியன் எழுதிய “வானத்தைப் பிளந்த கதை” நூலில், இந்த விசுவானந்த தேவரைப் பற்றிய நினைவுகூறல்கள் வருகின்றன. அப்பக்கங்கள் தோழரை உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசுபவை. சீன கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வந்தவர் விசு. “இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர் அவர்கள்” என்று சலிப்புற்று “அது சரிவராது” என்று விலகினார்.

“அங்குலம் அங்குலமாய்ப் போனாலும் நாங்கள் ; ஆழமாகக் காலை ஊன்றிக்கொண்டு போவோம்” தோழர் விசுவின் சொற்கள்.

விசு என்றழைக்கப்பட்ட விசுவானந்த தோழர் கிடைப்பாரா? ஒரு முறையேனும் சந்திக்கக் கூடுமா என்று விழைகிறேன். விடுதலைப் போராட்டத்தின் மீதுள்ள தீராக் காதலின் நிமித்தமே அந்தப் பெருவிறுப்பு உதயமாகிறது. நூலின் இறுதிப்பகுதியில் விசுவரூபமாய் எழுந்து நம்மைத் துரத்தும் ஐயங்களே, இதற்கான பதிலாய் அமைகின்றன. இயக்கத்தின் குறுங்குழுவாதப்போக்கால், தமிழகத்தைப் பின்புலமாக்கிப் பணி செய்ய வேண்டும் என்று அங்கே சென்றவரை அந்த மண்ணே புதை சேறாக்கி இழுத்துக் கொண்டுவிட்டதா? ஈழத்துக்கு திரும்புகையில், கடல் கபளீகரம் செய்து உள்ளிழுத்துக் கொண்டதா? நிலக் கொலையா, நீர்க்கொலையா எதுவென்று அவதானிக்க முடியாமல் அலமந்து போகிறோம்.

தோழர் விசுவின் இழப்பால் தனித்து விடப்பட்டது இரவி போன்ற போராளிகள் மட்டுமல்ல; தனிஈழமும் தான்!

6. போர்க்கால இலக்கியங்கள்
ருசியப்புரட்சி மேலெழுந்த காலத்தில் அப்போது அந்தப் படைப்புகளுக்கு ஒற்றை இலக்கு மட்டுமே இருந்தது. புரட்சியை வெற்றிகரமாய் சாதிக்க வேண்டுமென்ற இலக்கு அது. பாத்திரங்களின் குணநலன்கள் என்பதை விட வெற்றியைச் சாதிக்க வேண்டுமென்ற நோக்கிலேயே பாத்திரச் சித்தரிப்பும் கதைக் கோர்ப்பும் நடந்தன. புரட்சியின் வெற்றியை நிலைநிறுத்த வேண்டிய அடுத்த கால கட்டம் வருகிறது. மக்களின் அதிகாரம் என்ற இடத்தில் கட்சியின் அதிகாரமாக மாறும் காட்சிகள் துணுக்குகிற வைக்கின்றன. குல்சாரி, டாக்டர் ஷிவாகோ, ஜமீலா போன்ற விமர்சனப் படைப்புகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

“எங்களின் ஒரே எதிரி சிங்கள அரசு. அவனுக்கு எதிராக நாங்கள் கவனம் பிசகாமல் போராட வேணும். நாங்களும் ஒரு காலம் வரைக்கும் எல்லா இயக்கங்களோடையும் சேர்ந்து ஐக்கிய முன்னணி அமைச்சனாங்கள்தான். மற்றையவள் குழம்பி போகேக்கை, நாங்கள் உறுதியா இருக்கிறோம். அதுதான் எங்களுக்கும் அவங்களுக்குமுள்ள வித்தியாசம். சரி இப்ப கதைக்கு வருவோம். எந்த ஒரு இயக்கம் ஆயுத பலத்தோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உறுதியா நிக்குதோ ,அவையள் எங்களை அழிச்சுப் போட்டு, இந்தப் போராட்டத்தை கையிலெடுக்கட்டும். நாங்கள் அதுக்குத் தயார். ஒருத்தராலும் ஏலாது. நீ இருந்து பார். காலம் நாங்கள் செய்தது சரி என்று சொல்லும். அப்ப வாடோப்பா. நீயும் எங்களோடை வந்து வேலை செய்.”

விடுதலைப் புலிகளின் ஒரு முகாமுக்குப் பொறுப்பாளனாயிருக்கிற பரதன் சொல்வதாக பக்கம் 117இல் ஒரு குறிப்பு வருகிறது. டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப் என ஒவ்வொரு குழுவும் அழிக்கப் பட்டு என்.எல்.எப்.டி அமைப்பை சேர்ந்த இரவி நிர்க்கதியாய் தனது புலி நண்பனிடம் போய் நிற்கிற போது அந்தப் போராளி உதிர்த்த வாசகம் இது.

ஆயுதபலமே அதிகார பலம். அழித்தொழிப்பை இங்கேயும் வெற்றிகரமாக யார் செய்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்ற இயக்கம்.

என்ன செய்திருக்க வேண்டும்?

“சகல இயக்கங்களும் இணைந்து ஒரு பெரிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு பொதுத் தலைமையை உருவாக்குவதன் மூலம் எதிர்நோக்கும் பிரச்னைகளை இலகுவாகத் தீர்க்கலாம்.....

“இயக்கங்ளுக்குள் சனநாயகம், இயக்க கூட்டுக்குள் சனநாயகம், பொது தலைமைப் பீடத்துள் சனநாயகம் என எங்கும் சனநாயகம் நிலவினால்தான், சனநாயக ரீதியாகத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால்தான் சரியான வெற்றியை அடைய முடியும். அல்லது தோல்வியைத்தான் தழுவ வேண்டி ஏற்படும்.”
(பக்கம் 31, தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் - மு.திருநாவுக்கரசு)

இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்ட 1985இலும் எவரும் கருத்தில் கொள்ளவில்லை. இறுதிவரையிலான காலமும் சனநாயகத்துக்குப் பதில் ஆயுதமே பேசியது. இப்போது சனநாயக வெளி பூத்திருக்கிறது. ஆயுதங்களற்ற, உயிர்ப்பயமற்ற வெளி. இப்போது புதிய காலம் உருவாகியுள்ளது - இது விமர்சனங்களின், சுயவிமர்சனங்களின் காலம்.

ஒவ்வொரு புரட்சியின் பின்னும் உருவான விமர்சன இலக்கியங்கள் போல், இப்போது முள்ளிவாய்க்காலின் முடிவின் பின் கொஞ்சம் கொஞ்சமாய் சுயவிமர்சனப் பார்வைகள் மேலெழுந்து வருகின்றன.

போராட்ட கதியினூடான நிகழ்வுகளில் படைப்பாளிகளும் இருந்தார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மண்ணுக்குள் கிடந்து கெட்டியாகி பாறைகளாய், கனிமப் படிமங்களாய் வைரங்களாய் மாறிய பெருமரங்கள் போல் முன்னர் நிகழ்வுகளாய் இருந்தவை, இப்போது அனுபவ வைரங்களாய் உருமாற்றம் பெறுகின்றன. படைப்பாளிகள், அறிவாளி வர்க்கத்தினர் அழுத்தமான விமர்சனங்களுடன் மேலெழுகின்றனர்.

கோவிந்தனின் “புதியதோர் உலகம் செய்வோம்”,
சேரனின் “நீ இறங்கும் ஆறு, காடாற்று”,
செழியனின் “வானத்தைப் பிளந்த கதை ”,
சயந்தனின் “ஆறாவடு”,
கணேச ஐயரின் “ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்”
இப்போது அ.இரவியின் “வீடு நெடும்தூரம்”
-இவையும் இவை போன்றவையும் சுயவிமர்சன உரையாடல்கள்.

இவர்களின் படைப்பு மொழி தமிழுக்குப் புதுமொழியாக இருக்கிறது. இதுவரை பேசாப் பொருளைப் பேசுகின்றன என்பது மட்டுமல்ல, எடுத்துரைப்பு முறையிலும் அவரவருக்கான தனித்துவ தெறிப்புகளைக் கொண்டு வருகின்றன.

7. வரலாறு? ஆய்வு? சுயவிமர்சனம்?
மழைமறைவுப் பிரதேசம், வெயில்மறைவுப் பிரதேசம் என மறைவுப் பிரதேசங்கள் இருவகை. மழைமறைவுப் பிரதேசங்களின் கானலும், வெயில்மறைவுப் பிரதேசங்களின் குளிரும் கொடூரமானவை. கானலும் குளிருமற்ற இரு பருவமும் இணைந்து பதமான வாழ்வுப் பிரதேசம் அற்புதமானது. இத்தகைய ஒரு இலக்கியப் பதமான பக்கங்களை இரவி இங்கே உருவாக்குகிறார்.

ஒரு மனிதன் இச்சமுதாயத்துடன் தான் பகிர்ந்து கொள்ள ஏதோ உண்டு என எண்ணிக் கையளிப்பது தன்வரலாறு.

எப்போதும் தன்னைப் பற்றிய வரலாறு, அச்சமுதாயத்தின் வரலாற்றையும் உடன் கொண்டு வரும். அது ஒருவரின் வாழ்க்கையில் சிலகணங்களாகவோ, ஒரு பகுதியாகவோ இருக்கலாம். எதுவாயினும் அது அக்காலத்தின் முழு வரலாற்றையும் தன்னகத்துள் பிரதிபலிப்பதாகவே ஆகிறது.

“வீடு நெடுந்தூரம்” ஒரு தனி மனிதனின் கதையல்ல. அது போராளியின், தமிழ் இனத்தின், அக்குறித்த காலத்தின், அந்த மக்களின் கதை. இது அவர்களின் வரலாறு. அவர்களைப் பற்றியதொரு ஆய்வு. அவர்களுடைய போராட்ட காலம் பற்றிய சுயவிமர்சனம்.

ஒரு இடத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

“எங்கள் நாட்டுக்கு வந்திட்டம்” என்று அந்த அம்மா அழுதார். அழுதேன். தோழர் செந்தில் (இடதுசாரி) “இது ஒரு நாடு” என்கிறார். ”பிரிவினைவாதம் பிற்போக்குத்தனம் ”என்றும் சொல்கிறார். தமிழர்கள் ஏன் கொல்லப்பட வேண்டும் என்ற ஒரு கேள்வி தோழர் செந்திலிடம் இல்லை. அவர்களுக்கு அணியப்பட்ட கண்ணாடி அப்படித்தான் பார்க்க வைக்கிறது”.

விமர்சனங்கள் எல்லாத் திசை நோக்கியும் சுற்றிச் சுழலகின்றன. தமக்குள் வரித்துக்கொண்டே தமிழீழத்தை அடைய இயலாமல் போனது பற்றி மட்டுமல்ல, அது எதனால், எவ்வாறு சாத்தியப்பாடு அடையும் என எறியப்படும் கேள்விகள் பற்றியும்
“ஆலயக் கதவுகள்
எவருக்காவது மூடுமேயானால்
கோபுரக் கலசங்கள்
சிதறி நொறுங்கும்”
என்ற கவிதை வரிகள் வழி வருகின்றன.
கவிதையைத் தொடர்ந்து, “இது அப்பட்டமான சாதி வன்முறை. இதற்கு எதிராக உணர்வுள்ள எல்லோரும் போராட வேணும். குறிப்பிட்ட சில சாதிகளை அடக்கி வைச்சுக்கொண்டு சிங்கள அடக்கு முறைக்கு எதிரா எப்பிடி நாங்கள் போராட முடியும்?” (பக்கம் 50)

கவிஞர் சேரனின் கோபமுள்ள குரல் வருகிறது.
விமர்சனங்களின் காலம் இது. காலத்தை எதிர்கொள்ளத் தயங்கினால், காலத்தை இழப்போம் நாம்.

8. படைப்பாளியின் இருக்கை
* என் நந்தினி, மறைவாக என்னுள் அவள் வசிக்கிறாள். எனக்காகப் பிரத்தியேகமான ஒரு கண்சிமிட்டலையும் ஈரம் சுவறிய புன்னகையையும் அவள்தர மறுப்பதில்லை.

* தாடியை யாருக்காக நான் இனி வெட்ட வேண்டும்? குழைந்து சிரித்து ஒரு கண் எறிந்து மனதைக் கொத்த நந்தினி இங்கில்லை

* சோளகத்துக்கு(காற்றுக்கு) தலையைச் சிலுப்பிய மலை வேம்பும் ஓமென்றுதான் அதைச் சொன்னது.

* சாகசங்களை பந்தை உதைப்பதுபோல் உருட்டிக் கொண்டு ஓடுவார் அவர்.

* எதிலும் ஆர்வமற்றவன் பாலன். அரசியலை மாத்திரம் கைகளுக்குள் பொத்தி வைத்திருந்தான்.

* என் வீட்டு முற்றத்தில் நட்சத்திரங்களும் ஒளிர அஞ்சிய இருளில் தோழர் விசு சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொன்றாய்க் கேட்டேன். அறிய இருந்தன ஆயிரம். தோழமை உணர்வு இதில் தெறித்தது. “என்னடாப்பா” என்று முதுகு தட்டி சாறுகள் பல அருந்தத் தந்தார்.

* ஜோர்ஜூடன் கதைப்பது, மழை பெய்து ஓய்ந்த வாடைக் காற்று வீசுகிற மந்தாரம் போன்றது.

* மைம்மல் பொழுதில் கடற்கரைக்கு தென்னைகள் நிறைந்த அந்த ஒற்றை வழிப் பாதையால் போகலாம். நிலவால் எங்கள் நிழல்கள் விழுந்துவிடாமல் இருக்க தென்னைகள் மறித்தன.

* இலங்கை கடற்படை கண்டால்..... இந்து சமுத்திரத்திற்கு தமிழக இரத்தம் மிகச்சிறியதுளி.

* உடம்பில் நரம்புகள் ஓடித்திரிந்தாற் போல, ஊரெங்கும் ஒழுங்கைகள் (தெருக்கள்) திரிந்தன.

-இரவியின் ஒவ்வொரு சொல்லிலும் ஒரு அதிசயிப்பு, வாசிப்பவனுக்கச் சீதனமாகக் கிடைக்கும்.

“தேய்ந்து போகிற நிலவின் துயரக்கோலம் சிறிது வெளிச்சத்தை மங்கலாகத் தந்தது. தனித்து நிலா மகள் வானில் தொங்கிக் கொண்டிருந்தாள். மௌனப் பெருவெளியில் அநாதரவான நிலவு துக்கத்தைக் கிளரச் செய்தது. பினியில் தேயும் நிலவும் எண்ணற்ற நட்சத்திரங்களும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தன. கதறி அழ வேண்டும் போல் இருந்தது. ஓசைப்படாது வெம்பினேன்”.
புலியியக்க நண்பன் பரதனைச் சந்தித்து வந்த பின் உருவான வெற்றிடத்தின் வெம்பலை, இரவி பேசுகையில் அவருக்குள் நாமாகி அதை உணர முடிகிறது.ஆனால் போராட்டம் பற்றிய ,போராடும் வழிமுறை பற்றிய விமர்சனத்தின் இன்னொரு பக்கமாக படைப்பாளியின் தான் பற்றிய விமர்சனம் மறைவு கொண்டுள்ளதாகத் தோன்றுகிறது.

போராட்ட வாழ்வியலைப் பேசும்முறை,
ஒவ்வொரு வியப்பாய்ப் பூக்க வைக்கிறது.

தொலைதூரம் ஓடும் தொடர்வண்டி, தொடக்க நிலையங்களில் அங்கங்கு நின்று மக்களைச் சுமந்து செல்லும். போகப்போக, நேரம் ஆக ஆக வேகம் கொண்டு முக்கியமான இடங்களில் மட்டுமே நின்று இறுதி இடத்தை அடையும். அது போல் சின்னச் சின்னச் சித்தரிப்புகளாய் தொடங்குகிற சொல் வரிசை, இறுதிப் பகுதிகளில் வேகம் எடுத்து ஆழமான நீள் உரையாடலில் சென்றடைகிறது.

தாவித்தாவி பாய்கிறாற்போல் தனித்த நடை. ஒரு இடத்திலும் தவிச்சி நிற்பது இல்லை. விளையாட்டின் போது சிறுபிள்ளைகள் தவித்துப் போய்விட்டால் “நா தூச்சான்” என்று சொல்லி கொஞ்சம் நின்று கொள்வார்களே, அது போல் எந்த இடத்திலும் காணமுடியவில்லை.

கதை நடத்திச் செல்கையில், விவரிப்பில், வாசகனுக்குள் ஒரு நிரந்தர இருக்கையை உறுதி செய்து விடுகிற இரவி, சிறந்த படைப்பாளிக்கான இருக்கையையும் உறுதி செய்து கொள்கிறார்.

நல்ல சக்திகள் கைகோர்த்துக்கொண்டால் விரைவில் வீடு வந்துவிடும் (விடுதலை) என இரவி நம்புகிறார். அது பிழையில்லை. நம்வீடு வெகுதூரம் இல்லை.

நன்றி - பொங்குதமிழ் 20 மே 2012

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ