புறக்கணிப்பு ஆத்மாக்களின் மொழி


லெ கிளெஸியோ-வின் “சூறாவளி“ (பிரஞ்சுப் புதினம்)
தமிழாக்கம்:சு.ஆ. வெங்கடசுப்புராய நாயகர்

சூறாவளி – ஒரே பெயரில் இரு புதினங்கள் தமிழில் மொழியாக்கம் செய்து வெளிவந்துள்ளன. சீன எழுத்தாளர் 'ழோ லிபோ' எழுத்தில் 1947–இல் வெளியாகி 1951-இல் ‘”ஸ்டாலின் விருது” பெற்ற சூறாவளி என்கின்ற சீன நாவல்; மற்றொன்று பிரெஞ்சிலிருந்து 2016-இல் ஆக்கம் செய்யப்பட்ட ’லெ கிளெஸியோவின்’ சூறாவளி:

காலத்தின் தேவைக்கேற்ப உருவாகின்றன கருத்தாக்கங்கள். கருத்துக்களின் நேர்த்தியான கூடாக கட்டப்படுகிற படைப்புக்களும் காலத்தின் தேவைக்கேற்ப ஆக்கம் கொள்கின்றவை. மார்க்சிம் கார்க்கியின் 'தாய்', நிகலோய் ஒஸ்திரோவ்ஸ்க்கியின் 'வீரம் விளைந்தது' போன்ற புதினங்கள் – புதிதாய் உலக அரங்குக்கு வந்தடைந்த 'பாட்டாளி வர்க்கம்' சார்ந்த படைப்புக்கள். குறிப்பாக எடுத்துரைத்தால் மக்களியம் சார்ந்த எழுத்துக்கள் இவை. இவைகளின் சமகால, பிற்காலப் படைப்புக்களும் ருசியப் புரட்சி பூமிப்பரப்பில் விளைவித்த வினைகள் பற்றிப் பேசின. சீனாவில் மாவோவின் தலைமையில் நடைபெற்ற விவசாயிகளின் செம்படைப் புரட்சி இதன் அடுத்த கட்டம். வர்க்கப் போரின் மற்றொரு எல்லைக் கல்லான செஞ்சீனப் புரட்சியின் போது, விவசாயிகளுடன் இணைந்து, அவர்களுடன் வாழ்ந்து, அவர்களுக்காகப் போராடிய ’ழோ லிபோ’ - வின் அனுபவத் தொகுப்பு “சூறாவளி”. இது 1989-இல் தமிழில் மொழியாக்கமாகியுள்ளது.

புரட்சிகர காலகட்டத்தின் வெளிப்பாடு 'சீனச் சூறாவளி' எனில், உலக யுத்தங்களின் பின்னான காலகட்டத்தின் பண்பாட்டுச் சிதைவுகளைப் பேசும் புதினம் ’பிரெஞ்சுச் சூறாவளி’.

ஒரு படைப்பு செயற்படும் காலம், இடம், சூழல், கையாளும் மொழி, உளவியற் பண்புகள் முதலான பற்பல காரணிகள் அடிப்படையில், இலக்கியம் அனுகப்படவேண்டுமென்பர். ஒரு படைப்பின் கட்டமைப்புச் சட்டகத்தை, மற்றொரு படைப்புக்கும் பொருத்திக் காணக்கூடாது என்னும் கருத்து நவீன இலக்கிய ஆய்வில் மேலெழுந்துள்ளது. தலைப்புகள் ஒன்றாக இருப்பினும், தூருந்தலைப்பும் வேறு வேறானவை; போரின் பாதிப்பைப் பற்றிப் பேசுவது இவைகளின் ஒற்றுமைப்புள்ளி. இரண்டும் அவ்வக்காலத்தை அளந்தெடுத்து தைத்த சட்டைகள்.

தொன்மங்கள் ஏன் இன்றளவும் நம்மை அதிசயிக்கச் செய்கின்றன? தொன்மக் கதைகள் காட்டும் அனுபவங்கள் நம்முடையதாகவும் இருக்கின்றன. நமக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றன. நம் சுயானுபவ நடப்புகளுக்கு உட்பட்டும் உள்ளடங்காதும், தொட்டும் தொடாது நீங்கியும் உலவுகிற புதிர்த்தன்மை இந்த ஈர்ப்புக்குக் காரணம் எனலாம். கருத்துக்கள், சிந்திப்புகள் பல்லாயிரமாண்டுக்கு முந்திய, பழமையாக இருப்பினும், அக்கால அனுபவங்களின் எச்சங்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

பொன்னு என்பவர் எங்கள் வட்டார சலவைத் தொழிலாளி. வண்ணார் என்ற சொல் இன்று நடப்பில் புறமொதுக்கப்பட்டுள்ளது. துவைப்புத்துறைக்குக் கொஞ்சம் தள்ளி மீன்கள் சளபுளவென குதியாட்டம் போடுவது, கம்மங்கூழ் பானையின் மேவாயில் வந்து சதபுத என்று குதிப்பது போலான காட்சி. சேலையை இரண்டாய், அல்லது நான்காய் மடித்து – நான்கு நுனியிலும் கல்லைச் சுருட்டிக்கட்டி, நீரினடியில் தரையில் பதித்து வைப்பார்கள். ஊருக்குள் கிடைத்த பல கஞ்சியைக் களிமண்ணுடன் கெட்டியாய்ப் பிசைந்து சேலை மத்தியில் பொதிந்து வைப்பார்கள். களிமண் எதற்கு? தண்ணீரில் சுலபமாய்க் கரையாது. சோற்றுப் பருக்கைகளுக்காக கொத்துக் கொத்தாய்க் குவியும் குளத்து மீன்களை – சேலையோடு சுருட்டி மொடாவில் போடுவார்கள். சில மீன்கள் தவ்வி மறுக்கவும் நீர்பாயும். “கொதகொதன்னு குழம்பு வச்சிச் சாப்பிடுவோம் பாருங்க. குதிரைவாலிச் சோறுக்கும் மச்சக் குழும்புக்கும் கொண்டா, கொண்டான்னு கேக்கும்” - இது பொன்னு என்ற கஷ்டஜீவியின் அனுபவம். மற்றோரின் வாழ்வு காணாத வேறுபட்ட அனுபவத்தை நாம் இவரிடம் எதிர்கொள்கிறோம். வித்தியாசப்பட்டவையாய் இருப்பதினாலே, புதுமையானதாக, புதியனவாய் இருப்பதினாலே சுவாரசியம் அளிப்பனவாக ஆகிவிடுகின்றன. வித்தியாசப்பட்ட இந்த சுவாரசியம்தான் இலக்கியம்.

போரின் பாதிப்பு நீக்கமற உடலிலும், உள்ளத்தளவிலும் பரவியிருக்கும் காலத்தினை சித்திரமாக்கிக் காட்டுகிறார் லெ கிளெஸியோ. நீர்வாழ் உயிரினங்களான மீன், நண்டு, கடல் முள்ளி, கிளிஞ்சல், சில நேரங்களில் சிப்பிகள் என மேல் எடுத்து வந்து, கரைக்கு வரும் பயணிகளுக்கு விற்பனை செய்யும் பெண்களின் தீவு. அப்படியொரு தீவுதான் திரு.கியோ, பத்திரிகையாளர், எழுத்தாளர், ஒதுக்கத்துக்குத் தோதான வாழிடம். அவரைப் பொறுத்தவரை அவர் கடலில் இறக்க விரும்புகிறார். அவருக்குத் தீவு என்பது எவ்வித நம்பிக்கையுமில்லாத இறுதிக்கட்டம். ஒரு புகைப்படக் கருவியுடன் போரின் சிதைவுகளைப் பதிவு செய்யும் சுதந்திரச் செய்தியாளரான அவர், போரில் தனிமைப்படுத்தப்பட்டு முயற்குட்டி போல் பதுங்கியிருக்கும் இளம் பெண்ணை நான்கு சிப்பாய்கள் பாலியல் பலவந்தம் செய்வதைக் காணுகிறார். கொஞ்சும்கூட 'கிணுக்'கென்று அசையவில்லை. கடமையாற்றாத புகைப்படச் செய்தியாளனின் மனநிலை. இந்த இழிந்த மனோபாவத்துக்காக நான்கு ஆண்டுகள் சிறையிலடைக்கப்படுகிறார். விடுதலைக்குப் பின் – எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்ட போர் பற்றி எழுத விரும்பி தனிமையைச் சீராட்டும் நோக்கத்துடன் தீவுக்கு வருகிறார்.

“கிளிஞ்சல்கள் சேகரிக்கும் மீனவப் பெண்களுக்கு இருபது வயதிருக்கும். உடைகளில்லாமல் நீரில் மூழ்குவார்கள். கல் பதித்த பெல்ட், சப்பானியப் படை வீரர்களின் சடலங்களிலிருந்து கிடைத்த முகக் கவசங்கள் அணிந்திருப்பார்கள். அவர்களிடம் கையுறைகளோ, செருப்புகளோ கிடையாது. இப்பொழுது அவர்களுக்கு வயதாகிவிட்டது. நீரில் மூழ்குவதற்கான கருப்பு நிற அங்கியில் காணப்படுகிறார்கள். அக்ரிலீக் கையுறைகள், கண்களைப் பறிக்கும் நிறத்தில் பிளாஸ்டிக் காலுறைகள். அன்றைய பொழுதைக் கழித்த பிறகு – அவர்கள் கொண்டுவந்தனவற்றைக் குழந்தைகளுக்கான வண்டிகளில் வைத்துத் தள்ளியபடியே, பக்கத்தில் உள்ள சாலையை நடந்தே கடப்பார்கள்….….. அவர்களின் வருடங்களைக் காற்று தூக்கிச் சென்றுவிட்டது. என்னுடைய வருடங்களையும்தான். வானம் கருத்திருக்கிறது சோகங்களின் நிறம்” – பக்கம் 15.

கடல் நீருக்குள் மூழ்கி வாழ்க்கைக்கு, முத்தெடுத்து வருபவர்கள் அல்ல மீனவப் பெண்கள். வாழ்க்கையின் ஓட்டத்திற்கு வளம் சேர்க்க அவர்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். நீருள் மூழ்காமலே முத்தெடுத்து வாழ்க்கையை வளமாய்க் கோர்த்துக் கொள்கிற பலர் கரைக்கு வெளியே இருக்கிறார்கள். அம்மீனவப் பெண்களுடையது சோகத்தின் நிறம். இங்கு குறிக்கப்பட வேண்டியதும் பெருமை கொள்ளத்தக்கதும் லேகிளாசியாவின் அற்புதமான சொற்பிடிமானத்தைத் தன் மொழியாக்கத்தில் கொண்டுவந்திருக்கிற வெங்கடசுப்புராய நாயகரின் மொழியாக்க நிறம். பிரெஞ்சு மொழியின் ஆழத்துக்குப் போய், லேகிளாசியா என்னும் எல்லையற்ற கடற்பரப்புக்குள் மூழ்கி நாயகரால் அதன் தர்க்க மொழியை வசிப்போருக்கு எடுத்துவர முடிந்திருக்கிறது. “அந்தக்கால கட்டத்தில் போர் எனக்கு அழகானதாகத் தோன்றியது. அதைப்பற்றி எழுத விரும்பினேன். சும்மா இல்லை. போரில் வாழ்ந்து, பிறகு அதை எழுத விரும்பினேன்” – இது படைப்பாளியின் வாக்குமூலம். இதனை வேறொரு கோணத்தில் நோக்கினால் குற்ற சம்மதம் எனவும் குறிக்கலாம்.

போரை வாழ்வது வேறு; போருக்குள் வாழ்வது வேறு. போரை வாழ்வது ஆதிக்க மேலாண்மை. போருக்குள் வாழ்வது ஆறாத்துயரம்; போரை அவர் ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். “கனவில் தோன்றும் அழகிய உடலமைப்பைக் கொண்ட பெண்ணாகப் போர் தெரிந்தாள், நீண்ட கருங்கூந்தல், தெளிவான கண்கள், மயக்கும் குரல் எனக் காட்சியளித்த அவள், உருமாறிக் கெட்டவளாக, பழிவாங்கும் கொடூரமான, மனிதாபிமானமற்ற சூனியக்காரியாக மாறியிருந்தாள்”. இவையெல்லாம் அவருடைய அடிமட்டத்திலிருந்து மேலெழுந்து, நினைவுக்கு வரும் போர் பற்றிய பிம்பம். இந்தப் பிம்பம்தான் நிஜம். “சிதைந்த உடல்கள், வெட்டப்பட்ட தலைகள் என அந்த மோசமான தெருக்களில் பரவிக் கிடந்தன. எங்கும் பெட்ரோல் துளிகள்; இரத்தத் துளிகள்.” இந்த நிஜம் தான் அவர் காண விரும்பிய போராக இருந்திருக்கும். பிம்பத்தின் பின்னும் முன்னும் முழுதாய் நிறைந்தவை இக்கொடூரம்.

போர் அழகானதில்லை; எந்தப் போரும் அழகானதில்லை. அதிகாரச் சுவையில் உச்சம் கொள்ள விரும்புவோருக்கு போர் அழகானது. போர் ஆண்களால் மேற்கொள்ளப்படுகிறது. பெண்டிரோ, மக்கள் திரளினரோ ஒருபோதும் போரை விழைபவரல்ல. அமைதி, அழகு, இனிமை - இவைதாம் மக்களுக்கும் பெண்டிருக்கும் வாழ்வியல் காலம் முழுதும் தேவை. இந்த இனிமைகள் போரின் விளைச்சல்களாக ஒருக்காலும் இருந்ததில்லை.

போரை வாழ்ந்திருந்தால் – லெகிளெஸியோ என்ற படைப்புக்காருக்கு மட்டுமல்ல, படைத்த பாத்திரநாயகனான கியோவுக்கும் அழகானதாய் இருந்திருக்கப் போவதில்லை. போருக்குள் வாழ்தல் என்னும் அது எப்போர்ப்பட்ட சொல்லாக,எழுத்தாக இருக்கும்? மைக்கல் ஷோலகாவின் “அவன் விதி” – குணா.கவியழகனின் “நஞ்சுண்ட காடு”, “விடமேறிய கனவு”, தமிழ்க்கவி அக்காவின் “ஊழிக்காலம்” – சயந்தனின் “ஆதிரை” – தமிழ்நதியின் “பார்த்தினியம்” என்றிப்படி இன்னும் சொல்லித்தீராத யுத்தத்தின் கதைகளாய்த் தொடர்ந்திருக்கும்.

இந்தப் போர்தான் 'கியோ'விடம் இறுக்கமான முகத்தைக் கொண்டுவந்து சேர்த்தது. “திரு.கியோவுக்கு இறுக்கமான முகம். எதற்கெடுத்தாலும் பேசுவதற்குத் தயாராகும் சராசரி ஆளைப் போன்றவர் இல்லை. ஓரளவு புதிரான மனிதர். அவருடைய முகத்தில் ஒரு நிழல் இருக்கும். அவரிடம் நான் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென நெற்றியில் அவர் கண் முன் ஒருவித மேகம் கடந்து போகும்” (பக்கம் – 45). ஜூன் என்னும் 16 வயதுச் சிறுமி இவ்வாறு அவரைச் சித்தரிக்கிறாள். ”16 வயதில்லை. அவள் பொய் சொல்கிறாள் என்பது கியோவுக்குத் தெரியும். இன்னமும் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருக்கிறாள். அந்த ஊரில் பதினாறு வயதில் திருமணம் செய்துகொள்வார்கள். வேலைக்குப் போவார்கள்”.

இப்படி கியோ, ஜூன் என்ற இரு பாத்திரங்களின் எண்ண அசைவுகளால் பின்னிப்பின்னி அத்தியாயங்கள் கடக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியானவை. வெளிப்படையாய் பாத்திரங்களின் பெயர்கள் ஒவ்வொரு அத்தியாய முகப்பில் முண்டிக்கொண்டு நில்லாமல், உளவியல் ஓட்டத்தைச் சொல்லிப் போகிறவை. இந்திய எழுத்தாளர்களில் மராட்டிய வி.ஸ.காண்டேகரும், தமிழ் எழுத்தாளரான மு.வ.வும் பெயர் சுட்டி எளிமையான உத்திகளாய் இதனைக் கையாண்டிருக்க்றார்கள்.

லெகிளெஸியோ காட்டுகிற வாழ்க்கை உறவுகளில் பின்னல் வித்தியாசமானது. இங்கிருக்கும் சமுதாயக்கட்டமைப்பின் மதிப்பீடுகளின் அலைவரிசையில் அதனைக் காணக்கூடாது. வாழ்க்கை முறையை பொதுமைப்படுத்திவிட இயலாது. எடுத்துக்காட்டு: பெண் பூப்பெய்தல். ஒரு பெண் உடலின் இயல்பான வளர்ச்சியின் போக்கில், வெப்பமடைந்த உதிரம் வெளிப்படுதல் ஒரு தன்வய நிகழ்வு. அதனை 'பூப்பு நீராட்டாக்கி' கொண்டாடுதலின் சமுதாய அசைவில் ஆண் கருத்தாக்கம் உள்ளது.

ஜூன் போன்ற பெண்களுக்கு அது தற்செயல் நிகழ்வு. “மேலும் சில காலமாகவே மாதவிடாய் வரத் தொடங்கிவிட்டது. முதல்முறை பள்ளிக்கூடத்தில் வகுப்பு நடந்துகொண்டிருந்தபோதே எனக்கு அது நேர்ந்தது” எனகிறார். இங்குபோல், அதன் பேரில் கட்டமைக்கப்பட்ட பாலியல் புனிதம் அங்கில்லை. மூடுண்ட இந்திய சமுதாயத்தின் பாலியல் புனிதமானது உடைந்து, இனிக்கூட்டி அள்ள முடியாது என்கிற அளவுக்கு பல்வகைக் காரணத்தால் நொறுங்கிய பின்னும், கொண்டாட்ட மனோபாவத்தை நாம் கைவிடவில்லை. சமுதாயத்தில் எழும்பாலியல் சிக்கல்களை, மனதளவில், உடலளவில் அவர்கள் எதிர்கொள்ளும் முறை வித்தியாசமானது. இந்த முடிச்சக்களை அவரவருக்கு ஏற்ற முறையில் அவிழ்த்துக் கொள்கிறார்கள். அவரவர் உளவியலுக்கு ஏற்ற முறையில் தீர்வைக் கண்டும் செல்கிறார்கள். லெகிளெஸியோவின் “அடையாளம் தேடி அலையும் பெண்” – என்னும் இரண்டாவது நாவலில் இதன் வெளிப்பாடுகளை வெளிப்படையாகக் காணலாம்.

இந்தப் பெண் ரஷேல் தன் பிறந்த அடையாளம் தேடி அலைகிறாள். பிறந்த போதே அடையாளம் தொலைக்க்கப்பட்டவள். அப்பன் இல்லாத, பேர் சொல்ல முடியாத பிள்ளைகள் முதலாளிய சமுதாயத்தில் சகஜம். தகப்பனற்ற ரஷேல் பெற்றதாயைத் தேடி அலைகிறாள்.

பெண்ணுக்கு, இங்கு நம் தமிழ்ச் சமூகத்தில் என்ன அடையாளம்? பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரவை, தெரிவை, பேரிளம் பெண் – என்று உடலால் அடையாளம் காட்டப்படுகிறாள். அவள் ஒரு ஆளுமை என்ற அந்த விகசிப்பால் அவள் பெயர் கொள்வதில்லை.
“பேரறிஞர், பெருங்கலைஞர்,
நாக்குச்சுழட்டலில் நானிலத்தைச் சுருட்டும் நாவலர்
தலைகீழாய் மூழ்கி முத்தெடுக்கும் பிரம்மா,
ஓவியன், கோபுரத்துச் சிற்பி
இத்தனை பெயர்களும் தந்தாய் நீ.
உனக்கெனக்கொண்டது
ஒரு பெயர் மட்டுமே –
பெண், பெண், பெண்.
ஒரு முகமும் அற்று
அவன் முகத்துள் அடங்கும் உன் முகம்”
- என ஒருகவிதை சொல்லிப் போகிறது.

ஆணுடைய சிந்தனைகளுக்குக் கட்டுப்பட்ட உயிரி என்பதுதான் பெண் என்பதின் அடையாளம்! – ஆண் சிந்தனை எதுவும் தனக்குள் தட்டுப்படவிடாமல் நடமாடும் பெண்ணான ரஷேல் – “பிறந்ததும் வெளியே வீசப்பட்ட பெண் குழந்தைகளை நகரில் உள்ள அனாதைகள் காப்பகத்துக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள். ஆண் குழந்தைகளானால் வசதி படைத்த இல்லங்கள்” – என பிறக்கும் போதே உருவேத்தப்படுகிற பாலியல் வேற்றுமையின் குரல்வளையைப் பிடித்து நெருக்குகிறார்.

நாயகர் மொழியாக்கத்தில் ஒன்றாய் வந்துள்ள இவ்விரு புதினங்களும் பெண் மொழி பேசுகிறவை. பூடகமாய், வெளிப்படையாய், ரூபமாய், அரூபமாய் தன்னிச்சையாய்யும் அனிச்சையாயும் பெண்ணின் உணர்வுகளைக் கொட்டுகின்றன.

“நான் பேய்க் குழந்தை………. அதனால்தான் நான் நெருப்பை நேசிக்கிறேன்.நான் வன்புணர்ச்சியால் விளைந்த குழந்தை. பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் மாட்டிக்கொண்ட குழந்தை. ஒரு வீட்டின் இருட்டறையில் ஆண் நாயால் புணரப்பட்ட பெண் நாயின் குழந்தை. ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில், தரையிலேயே ஒரு மெத்தையின் மீது நிகழ்ந்த புணர்ச்சி. வெறி, பொறாமை, சேட்டை இவற்றின் விளைவாகப் பிறந்த குழந்தை நான். தீமையில் பிறந்த குழந்தையாகிய எனக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் வெறுப்புதான்”.

புறக்கணிப்பின் ஆத்மாக்கள் வெறுப்பின் மொழி பேசுகிறார்கள். மனிதர் ஒவ்வொரு நாளும் உண்பது எதுவோ, அதுகு தம் வழி வெளியே கொட்டுகிறது. சோறெனில் சோற்று வாசனை, மாமிசமெனில் மாமிச நரகல் வாசம், பழமெனில் பழக்கழிவின் வாசம், சுய அடையாளம் தேடி அலையும் பெண்கள் ஒவ்வொரு வீட்டிலும் வெளிகளிலும் அலமந்து போகிறார்கள். நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்கள் பேசுகிறார்கள்.

அறிதலும் அறிந்து கொள்வதுமே வாழ்க்கை என்ற முடிவுறாப் பெறுவெளியில் இயங்குகிறார். நீண்ட நெடிய பாதை அது. ஆனால், அந்தச் செயலாற்றுதலினூடாகவே, அறியப்படுபவராகவும் மாறுகிறார் என்று உருத்திருட்சியான எதிர்வினையை ஒவ்வொருவரும் பெறுகிறார்கள்.

லெகிளெஸியோ-வின் உளவியல் தர்க்கமாக – சிந்திப்புகளின் கோர்வையாக வெளிப்பட்டிருக்கிற எழுத்தைக் சற்றும் குறையாது, கொண்டுவந்திருக்கிறார் நாயகர். மொழியாக்கப் பணியின்போது, தானொரு படைப்பளியாக உணர்ந்திருக்கவேண்டும். புதிய படைப்பாக்கம் நம் கண்களுக்குத் தென்படுகிறது.

பிறமொழி அறிந்த வல்லுநர்கள் பலர் நம்மில் இருக்கிறார்கள். அவரவர், தாம் அறிந்த மொழிகளின் எழுத்துக்களைத் தாய் மொழிக்குத் தந்து நியாயம் செய்துள்ளனர். இது “எட்டுத்திக்கும் சென்று – கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற நியாயமாக வெளிப்படக் காணுகிறோம். பிரஞ்சு மொழிக் கற்றறிதல் திறனுக்கு மட்டுமல்ல, தாய் மொழிப்படைப்புத் திறனுக்கும் நியாயம் செய்திருக்கிறார் நாயகர். வாசித்தால், மூலத்திலும தமிழாக்கத்திலும் சமம் பிறழாது தளும்பும் இதுபோன்ற புதினத்தை வாசிக்க வேண்டும்.

****

லெகிளெஸியோவின்
சூறாவளி (இருகுறு நாவல்கள்)
பிரெஞ்சிலிருந்து தமிழாக்கம்:சு.ஆ.வெங்கடசுப்புராயநாயகர்
வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம். விலை:ரூ. 175/-

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?