ஆற்றைச் சாகடித்தோம்
ஊர் – செங்கப்படை
பெயர் முத்து – ஊர்ப் பெரியவர், வயசாளி.
“எந்த நேரம் தண்ணீர் வரும்?” நான் கேட்டேன்.
“நோக்கம் போல வரும்” முத்து சொன்னார்.
“காலைல கொஞ்சம் விடுவான். இல்ல சாயந்தரம் கொஞ்சநேரம். உறுதிப்பாடா சொல்ல முடியாது”
விளாத்திகுளம் வைப்பாறில் ஆழ்துளைக் குழாய் ஊன்றி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பத்து ஊர்களுக்குத் தண்ணீா் வருகிறது. அதில் செங்கப்படை ஒரு கிராமம்.
விளாத்திகுளம் என்ற சிறுநகரின் தலையில் ஓடுகிறது வைப்பாறு. வடமேற்கில் தனியாய் ஒரு ஆழ்துளை போட்டு, நகராட்சிக்கு குடிநீர் வழங்கல். ஆத்தங்கரையை ஒட்டி உட்கார்ந்திருக்கிறது குருசாமி வீடு.
“எந்த நேரம் தண்ணி விடறாங்க?”
“நேரக் கணக்கு இல்ல. இங்க நாள்க் கணக்குதான். இன்னைக்கு விட்டா இன்னும் ரெண்டு நாள் கழிச்சி வரும். 5-நாள் எடுக்கிறதும் உண்டு”
“சரி, தண்ணி வருதுன்னு எப்படி தெரிஞ்சுக்கிருவீக?”
“அது என்ன ஆரிய வித்தை, அல்லாவித்தையா? நமக்குத் தண்ணி தேவையிருக்கு. புஞ்சையில தண்ணி பாய்ச்சினா, ஒரு பாத்தியிலிருந்து இன்னொரு பாத்திக்குப் போகுமில்லையா? அதுபோல முந்தின தெருவுக்கு வருதுன்னா, அடுத்த தெருவுக்குத் தெரிஞ்சிரும். அதுக்குள்ள மூணாவது தெரு தயாராயிரும்”
வீட்டின் முன் அறையில் அடைத்து உட்கார்ந்திருந்தன குடங்கள்.
“எத்தனை குடம்?”
“அவங்கவங்களுக்கு எவ்வளவு ஏலுமோ, அவ்வளவு. சில பேர் டிரம்ல பிடிச்சி நிறைச்சி வச்சிக்கிர்றாங்க. தண்ணி லேசாக் கடுக்குது. முன்ன மாதிரி ருசியில்ல” சளிப்புத் தண்ணியை அப்போது தான் சுவைத்தவர் போல், முகம் சுண்டுகிறது.
இருபத்தைந்து வருடங்கள் முன் விளாத்திகுளத்தில் பூமணிப் பாட்டியை சந்தித்தேன். பேசிப் பேசி, பாடிப்பாடி வாய் உணந்து போயிருந்தது. பாட்டிக்கு வெண்டாவி எடுத்தது போல. நல்லா ‘வாய்ப்பாறிக்’ கொண்டிருந்த வேளை அது.
“இங்ஙன தண்ணி வச்சிருந்த செம்பைக் காணமே” என்றார்.
நான் தண்ணீர்ப் புட்டியைக் கொடுத்தேன்.
“அது கூட்டுல அடைச்ச தண்ணி. எனக்கு நல்ல தண்ணிவேணும்” என்றார்.
“அது நல்ல தண்ணிதான்”
“நீங்க சும்மா, இருங்க. எனக்கு நெசத் தண்ணி வேணும்”
“நெசத் தண்ணியா?”
“ஆமா, ஆத்தில ஊத்துத் தோண்டி எடுத்தது. ஆத்தில் லேசா கையிட்டுத் தெண்ணினாப் போதும், கிடைக்குதே அது நிசத் தண்ணி.” தொயந்து சொல்வார்.
“நீங்க கூட்டில அடைச்சிக் கொண்டு வாறீகள்ளே, அது செத்ததண்ணி. சப்பளிச்சி கெடக்கும். தண்ணிய சாகடிச்சி கூட்டுக்குள்ள அடைச்சிக் கொடுக்கிறான். மதிகெட்டுப் போய் நாமளும் சவத்தை நாக்கில் வச்சித்தானே நமட்டுறோம். ஆத்துத் தண்ணி – எப்படி குளுகுளுன்னு குமரிப் பிள்ள கணக்கா இருக்கு பாத்துக்குங்க. ஆத்தில் வெட்டிப் போட்டிருக்காங்கள்லே, தெப்பம் மாதிரி – அது இனீச்சிக் கிடக்கும்”
குழாய் பதித்திருக்கிறார்கள். தெருவுக்குத் தெரு குழாயில் தண்ணீர் வரும். குழாய்த் தண்ணியெல்லாம் குடிக்கத் தோதில்லை பாட்டிக்கு. அது வெது வெதுப்பா சுட்டுக் கெடக்கும் என்கிறார். பக்கத்தில் நாலெட்டு தூரத்தில் ஆறு. எப்போது தோண்டினாலும் குளிர்ச்சியான அமிர்தப் பால் போலிருந்தது தண்ணீர்.
அன்றைக்கு முத்தையாபுரம் பொங்கல் என்று ஊர்சாட்டியிருந்தார்கள். பொங்கல் நாளில் அம்மன் பாட்டு, முளைப் பாரிக்குப் பாட கூட்டிப்போக வந்திருந்தார்கள். அவர்கள் வந்த நேரம் உடலைக் கிடத்தி அழுது கொண்டிருந்தார்கள். 37-ம் ஆண்டு ஆளு பூமணிப் பாட்டி சரியாக 1900-த்தில் மரணமாகிவிட்டார். இருபத்தைந்து வருடங்கள் கடப்பில், எல்லாம் தலைமாடு, கால்மாடாக ஆகிவிட்டது.
சாத்தூர் ஆறு, இரு கிளையாய்ப் பிரிந்து ஒரு கிளை நீண்டு வைப்பாறு உருவாகிறது. ஏழு ஆறுகள் பிணைந்து ஒரு ஆறு. இருக்கங்குடியில் ஒத்தை நதியாய் நடந்து, வருகிற வழியில் காட்டு ஓடைகளைச் சேர்த்துக் கொண்டு முத்துலாபுரம் தொடுகிற போது, முத்துலாபுரம் ஆறு. விளாத்திகுளத்தில் வைப்பாறு . காட்டாறு என்றாலும் முக்காலமும் குளுமையைத் தவழவிடும். கூந்தலுள்ள சீமாட்டி தலை வாரி முடித்துக் கொள்வாள். சடை பின்னிப் போட்டுக் கொள்வாள். கூந்தலில் குப்பி வைத்துக் கொள்வாள் - அது போல் ஆண்டுக் கணக்கில் ஓடிவரும் நீரால் இருபோகம் சாகுபடி எடுத்தார்கள்: பாசனக் கண்மாய்களை நிறைத்தார்கள். தூரந் தொலைவெட்டாயிருந்தால் கிணறு தோண்டி தெலா போட்டு இறைத்து கீரைப் பாத்தி, காய்கறி பயிரிட்டார்கள். கமலை வைத்து இறைத்து கேழ்வரகு, மிளகாய் நட்டு, மகசூல் கண்டார்கள்.
1950-என்கிறார் குருசாமி. மேகரையும் (மேற்கு) கீகரையும் – இரு கரையும் தொட்டு வெள்ளம் பெருக்கெடுத்ததை அவர் கடைசியாய்க் கண்டது.
“எனக்கு வயசு எட்டு. கோவணத்துணியோடுதான் ஆத்துக்குப் போனேன். அப்ப சாப்பிட ‘புகல்’ இல்லாமத்தான் இருந்தோம். இருகரையும் புரண்டு ஓடினது. அன்னைக்கு வெள்ளத்தில 5 பேரை அடிச்சிப் புரட்டி உள்ள இழுத்துக்கிட்டது. அதுக்கப்புறம் என் வயசில பாக்கல அந்த மாதிரி வெள்ளம் : அதில பாதியக்கூட என் சர்வீசில பார்த்ததில்ல” என்கிறார் குருசாமி. வங்கோடையில் சித்திரை மாசத்தில் வந்ததாம். அந்த மழைவெள்ளம் 20 முதல் 25 நாட்கள் ஓடியது. அப்போது தரைப்பாலத்துக்கு மேல் இரண்டடி தண்ணீா் 25 நாட்களுக்கும் மேல் ஓடியிருக்கிறது. எட்டயபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி என்று ஒருபக்கமும் போக முடியவில்லை.
குருசாமிக்கு குடும்பம் ஆகிவிட்டது. கைக்கும் மெய்க்கும் வருமானம் போதலை. இரண்டு பையன்கள். செங்கப்படை ஊரில் இருந்தார். சுத்துப்பட்டு ஊர்களுக்கு தாய்க்கிராமமம் விளாத்திகுளம். விளாத்திகுளம் வட்டத்தில் 186 கிராமங்கள். கடை, கண்ணி வட்டாட்சியர் அலுவலகம், குற்றவியல் நடுவர் மன்றம் (மாஜிஸ்ட்ரேட் கோர்ட்), காவல்நிலையம், பேருந்து நிலையம் என்று தாய்க்கிராமம் சிறு நகராக ஊத்தம் கொண்டது. ஒரு கடைவீதி இருந்த ஊரில் நான்கு கடை வீதிகள்.
அப்போது வயது நாற்பது. ஊற்றுத் தோண்டுகிறார் குருசாமி. அருகிலே நாலு உறை அடுக்கிய தொட்டி கட்டி தண்ணீா் இறைத்து விடுகிறார். ஒத்தை மாட்டு வண்டி. அதிலொரு மரப் பீப்பாய். ஒரு பீப்பாய் 12 குடம் கொள்ளும். உறையிலிருந்து பீப்பாய்க்குள் தண்ணீர் எடுத்து விட்டு, கடை, கண்ணி, ஐஸ்பேக்டரி, சோடா பேக்டரி என்று விற்கிறார். ஒரு நாளைக்குப் பத்து நடை அடிக்க முடியும். ஒரு பீப்பாய்த் தண்ணி அன்னைத் தினம் 35 ரூபாய்க்குப் போகும். ஒரு வண்டி. இரண்டு வண்டி ஆனது. மகன்களிடம் ஆளுக்கு ஒரு வண்டியை ஒப்படைசெய்தார். பிறகும் வருமானம் போதவில்லை; சீவாளி சரியாய் அமையாத நாதசுரம் போல், வாழ்க்கை ‘கறமுறா’ என்று சத்தம் கொடுத்தது. ஆற்று மேட்டில் ரூ. 5 ஆயிரம் என்று பேசி, குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்க்கப்போனார்.
“இப்ப பையங்க தொழில ஏறக்கட்டிட்டாங்க. வேற வேற வியாபாரம் பாக்குறாங்க. ஒருத்தனுக்கு ‘டாஸ்மாக் கடையில வேல’"
“ஒத்தை மாட்டு வண்டிகட்டி, ஊருக்கல்லாம் தண்ணி அடிச்சிட்டிருந்த நீங்க, கைவிட என்ன காரணம்?”
“தெரிஞ்ச கதை. ஆத்தில ஊத்து வரல. நூறடி, நூற்றைம்பது அடின்னு ‘போர்’ போட்டும் செம்பறையாட்டம் மண்ணுதான் வருது”
குருசாமி வேறுதொழிலுக்கு நகர்ந்தார். மகன் ‘டாஸ்மாக்’ கடைக்குள் நுழைந்தார். சுத்துப்பட்டிகளிலுள்ள விவசாயிகள் வேற புகல்தேடி அவர்கள் அறிந்திராத நகரங்களுக்குள் பிழைப்புக்குப் போனார்கள். ஆற்றில் 200 அடிக்கும் மேலாய் ஆழ்துளை போட்டும் சவர்த் தண்ணீர்தான். அதை உறிஞ்சி இயந்திரம் மூலம் குடி தண்ணீராக்கி ‘கேன்’ ரூ.12-க்கு விற்கிறார் ஒருவர். விற்பது இல்லையாம், வந்து வாங்கிப் போகிறார்கள்.
பத்து கி.மீ தொலைவிலுள்ளது சூரங்குடி. ஒருவருக்கு கப்பல் சம்பாத்தியம். அதைக் காட்டிக்கொள்ள கப்பல் வடிவத்தில் வீடு எழுப்பினார். அதுபோல் இவரும் தண்ணீர் மாளிகை எழுப்பலாம். தயாராக கப்பல்கார முதலாளிகளுக்காக உருவாக்கிய ‘அன்னை நகர்’.
“நீங்க அந்தத் திசையில போயிருக்கலாமே” – கேட்டுவிட்டேன்.
லேசாய்ச் சிரித்தார் “நம்ம பாடு விடிஞ்சிரும்தான். மனச்சாட்சி வேண்டாமா?”
ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் வந்த மாமணியை இழப்போமா? இழந்தோம். ஆற்றைத் தோண்டினால் மணல் இல்லை. நீரும் வராது. அளிமண்; அதற்கும் கீழே போனால் செம்பாறை தான்.
திருட்டும் கொள்ளையும் தான் இந்நாட்டின் முன்னேற்றத்துக்கான அளவுகோல். திருட்டும் கொள்ளையும் இல்லையென்றால், அரசியல்வாதிகள் எப்படி உருவாகியிருப்பார்கள்? அரச மாளிகை போன்ற வீடுகளில் அதிகாரிகள் எப்படிக் குடியேறினார்கள்? ஒரு முதலமைச்சரிடம் துணைச் செயலாளராய் இருந்த அதிகாரி பல சுயநிதிக் கல்லூரிகள் தொடங்கி, நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக ஆக்கி, துணை வேந்தராக எப்படி வீற்றிருக்க முடியும்? திருட்டும் கொள்ளையும் இல்லையென்றால் அந்த அவர் என்னவாக இருந்திருப்பார், இந்த இவர் என்னவாக ஆகியிருப்பார்? எங்கே இருக்கப்போகிறார்கள் இவர்கள்?
“மற்றவர் விளைவித்த நிலத்திலிருந்து நீ அறுவடை செய். மற்றவர் வியர்வையில் விளைந்ததை நீ உண். மற்றவர் இறைத்த தண்ணீரை நீ குடி. மற்றவர் கட்டிய வீட்டை நீ கைப்பற்று. மற்றவர் நெய்த ஆடையை நீ உடுத்து”
”சிலுவையில் தொங்கும் சாத்தான்’” என்ற புதினத்தில் கென்ய எழுத்தாளர் கூ.கி.வா.தியாங்கோ வல்லரசுகளின் கட்டளைகளைப் பட்டியலிட்டார். சுரண்டல் வேதம் கற்க வேறெங்கும் குருகுலம் தேடியடைய வேண்டுவதில்லை. சுயநலனில் சுரண்டல் வேதம் பிறக்கிறது. பொடவு, விறுவு எங்கெங்கு உண்டுமோ, அங்கெல்லாம் தேடிப்போய் உள் அடைந்து கொள்வது அது.
கழுகுகளில் கட்சி வேறுபாடில்லை. ஊராட்சி உறுப்பினர், தலைவா், ஒன்றியத்தலைவர், ஒன்றியச் செயலாளா், வட்டம், மாவட்டம், எம்.எல்.ஏ, எம்.பி என்று பல கழுகுகள். கொள்ளை என்று வருகையில் உள்ளுர்க் கழுகுகள், வெளியூர்க் கழுகுகளுடன் உரையாடல் செய்கின்றன.
விளாத்திகுளம் ஆற்றின் கீகரையில் (கிழக்கக் கரை) ஆத்தங்கரை கிராமம், மேகரையிலிருந்து மூன்று கி.மீ சிங்கிலிப்பட்டி. 2011-ல் ஆட்சியேறியதும் கட்சிகாரா்கள் பார்வை – சிங்கிலிப் பட்டியிலிருந்து அம்மன் கோயில்பட்டி வரை 5 கி.மீ தூரம் பாய்ந்தது. மணல் குவாரியாய் மாறுகிறது. லாரிகள் போவதற்காக ஆற்றிலிருந்து சிங்கிலிப்பட்டிவரை ஒப்பந்தகாரா்கள் சாலை அமைத்துக் கொள்கிறார்கள். ஆற்று மேட்டிலிருந்து 3 கி.மீ சிங்கிலிப்பட்டி. தெற்காமல் வேல்ரபட்டி, பிள்ளையார் நத்தம் தொட்டால் பிரதான சாலை. இந்த ஏழு கி.மீ நீளத்துக்கு லாரிகள் மண் அள்ளல். வாகன நடமாட்டம் இரவில்தான்.
ஆற்றிலிருந்து 500 கி.மீ தொலைவில் ஊரிருக்குமானால், மண்அள்ளக் கூடாது. குடிநீர் ஆதாரம் அருகிலுள்ள ஊர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கு அந்த விதி. ஆனால் இத்தனை மீட்டர் நீளம், இத்தனை மீட்டர் ஆழம் என்று விதி இருந்தபோதும் அதைச் சட்டை செய்யவில்லை ஒப்பந்தகாரர்கள். ஆற்றின் கீழ்ப்பக்கத்தில் கரையொட்டி இருக்கிற ‘ஆத்தங்கரை’ ஊர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் கரையின் மேற்குப் பக்கத்தில் சிங்கிலிப் பட்டிக்கு மாறினார்கள். “அன்னு இருந்த ஆறு இன்னைக்கு இல்லே. தண்ணியைத் தான் சாப்பிடுவாங்க. இவம் மணலையே அள்ளிச் சாப்பிட்டாங்களே!” அதிசயிப்பாய் பேசுகிறார் பொன்னு. கிராமியப் பாடகர். ஊர்ப்பொங்கல், பண்டிகைகளுக்கு வில்லுப்பாட்டு நடந்தால், அதில் சிற்றுடுக்கு வாசிக்க கூட்டிப் போவார்கள்.
“மணலை வாரின மாபாவிக சும்மா போனாங்களா? கெடங்கும் மேடுமா ஆக்கிவச்சிட்டுப் போய்ட்டாங்க. மழைக்காலத்தில் தண்ணி தேங்கி, அங்ஙன இறங்கி ஆறேழு உயிரக் கேட்டிருச்சி” என்கிறார்.
மணலைச் சுரண்டிச் சாப்பிடுகிறவர்களுக்கு, பணம் என்ற கஷாயம் சாப்பிட்டால் எல்லாம் செரித்துப் போகும் என்கிறார் கேலியாய்.
சிங்கிலிப்பட்டியிலிருந்து பிள்ளையார் நத்தம் வரையுள்ள தார்ச்சாலையை மணல் மூடிற்று. மணல் லாரிகள் சூறாவளிக் கூம்பு போல் மணலை அள்ளி வீசுவதாக சிங்கிலிபட்டிக்காரா்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். காலை மதியம் தண்ணீா் லாரி அடித்து மணல் பறக்காமல் அமர்த்தினார்கள் ஒப்பந்தக்காரர்கள். சிங்கிலிப்பட்டி ஒதுக்கத்தில் இருந்தது. பரிதாபத்துக்குரியது வேல்ரபட்டி. வேல்ரபட்டி மேலேயே லாரிகள் ஓடின. சாலை மறியல் நடத்தினார்கள். ஒப்பந்தகாரா்களுக்கும் ஊர்க்காரர்களுக்கும், பேச்சு நடந்தது.
ஊர்ப் பொதுத் தேவைகள் என்ன? ஒரு வீட்டில் இழவு விழுந்தால், இன்னொரு வீட்டில் பெண் பூப்பெய்தி விட்டால், கல்யாணம், கோயில் கும்பாபிஷேகம், பள்ளிக் கூடத்துக்கு சுற்றுச் சுவர் என்றால் செய்துகொடுத்தார்கள் மணல் ஒப்பந்தகாரர்கள். நல்லது பொல்லதுக்கு பணம் இல்லையா? இந்தா பிடி பணம். முதலில் கச்சைகட்டிக் களமாடிய சிங்கிலிபட்டியான், பிறகு சமதானமாகி ஒடுங்கிவிட்டான்.
“சும்மாவா கொடுக்கிறான். கொண்டு மிஞ்சிக் கிடக்குது. கொடுத்தான்” என்றார்கள்.
“இப்ப என்ன, வேண்டாம்னு சொன்னாலும் அள்ளீட்டுத்தான் போகப்போறான்”. வாய்ப்பாறிக் கொண்டது சனம். பிறகு வீட்டு வீட்டுக்கு இவ்வளவு என்று பணம் கொடுக்கப்பட்டது. ஊராட்சித்தலைவர் பிரித்துக் கொடுத்தார். கரையோர கிராமங்கள் பொங்கு கொழிக்க வந்த பணம் 20 லட்சம் என்கிறார்கள் - 2011 கணக்குக்கு.
மீனாட்சிபுரம், பூசனூர், துளசிப்பட்டி, விருசம்பட்டி, வைப்பாறு – ஊர்களில் தி.மு.க ஆட்சியில் மணல் குவாரி அனுமதி. துளசிப்பட்டிக்காரர்களுக்கு நதிப்படுகை மேல் விவசாய நிலம். ஆற்றுக்குள் இறங்கி மேலேறி வருகின்றன டிப்பர் லாரிகள். துளசிப்பட்டி பள்ளி வாத்தியார் அவர். லாரி அடித்து அவர் நிலம் பாழாய்ப்போனது. இரண்டு வருஷம் நடந்த குவாரிக் கொள்ளையில் லாரிக்கு இவ்வளவு என்று வாத்தியார் ’கமிஷன்’ கேட்டு வாங்கிக் கொண்டார். இந்த வேலைதான் பார்த்தார். பேருக்கு வாத்தியார் வேலை. ஊருக்கு ஆகாம, இவரு ஒருத்தரே சொருகிக் கொள்கிறார் என்பதாக துளசிப்பட்டி எழுந்த போது அவர் சொன்னார். “சொந்தக் காரங்களுக்கு எம் மேல பொறாமை. என்னையப் பதம்பாக்கிறாங்க. நாம வாங்காட்டாலும் அவன் களவாடத்தான் போறான்”.
குவாரிக்கு பக்கமாய், ஆற்றங்கரை மேல் கடைகள் முளைத்தன. சாப்பாட்டுக்கடை, வெத்திலை, பீடி இப்படி பகலின்னு இல்லே, இரவின்னு இல்லே – எந்நேரமும் லாரி பத்தறவங்களுக்கு இதெல்லாம் வேணும். துட்டை வெட்டுனா எல்லாம் நடக்கும்னு சொல்ற இடத்தில் வேறொன்னும் இல்லாமலா போகும்.
தண்ணீர் யுத்தம். இனி மூன்றாவது உலகப் போராக இருக்கும் என்பது இரு நாடுகளிடையேயானது அல்ல. தண்ணீரை யார் வணிகமயப்படுத்துகிறார்களோ அவர்களுக்கும், அதனால் வாழ்வாதாரத்தினை இழக்கிற மக்களுக்குமான யுத்தம்.
விளாத்திகுளம் இன்று அந்த யுத்தத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. முன்னெடுத்துக் கொண்டிருக்கிறதா என்று சொல்ல இயலவில்லை.
மணல் அள்ளல் மூன்று கட்டமாக நடந்தது என்கிறார் பொன்னு. முதல்கட்டம். கலைஞர் முதல்வராக இருந்த போது. அடுத்து அ.தி.மு.க இரண்டாவது முறையாய் ஆட்சிக்கு வந்தபோது. இப்போது மூன்றாம் கட்டம் 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த போது. “இப்ப நடந்ததுக்கு கணக்கு இல்ல. எக்கச் சக்கம்! சிங்கிலிப்பட்டிவரை சரள்ரோடு இதுக்காகப் போட்டான். லாரிக வரிசையா நின்னா கூட்ஸ் டிரெயின் மாதிரித் தெரியும். கேரளாவுக்குத்தான் போனது. வடக்கே, வட மேற்காம முத்துலாபுரம் வரையிலும் குவாரி போயாச்சு”
இங்கிருந்து களவாண்ட மணல் கேரளாவில் தேரி மேடு போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பக்குவப்படுத்தி மூட்டை மூட்டையாகக் கட்டுகிறார்கள். எத்தனை மூட்டை வேணுமென்று கேட்டு, சிமிண்ட் மூட்டை மாதிரி தூக்கி அனுப்புகிறார்கள். நயம் நல்லெண்ணை, நயம் துவரம் பருப்பு என்பது போல, தாமிர பரணி மணல், வைப்பாறு மணல் என்று எழுதிவைத்து கேரளத்தில் விற்கிறார்களாம். வைப்பாறு மணல்னா விலை கூடுதல்.
பொன்னு 37-ம் ஆண்டு ஆள். சலவைத் தொழிலாளி. 1950, 60-களில் விளாத்திகுளம் முழுசுக்கும் அவர் சலவை. நல்ல பிராயம். அவர் சிற்றுடுக்கு வாசிக்கும் கலைஞா். “ வில்லடிக்கு ஆறுபேர் வேணும். ஒரு ஆள் கதை படிப்போம். ஒரு ஆள் பாட்டுப் படிப்போம். ஒரு ஆள் குடம் அடிப்போம். ஒரு ஆள் சிங்கி அடிக்க, ஒர ஆள் சிற்றுடுக்கு வாசிக்க – அது நானு. வில்லடிப்புக்கு வாத்தியார் அது தனி”
”கதை படிக்கிறவர் பாடுறதை வாங்கிப் பாடுவார்கள். அந்தப் பின் பாட்டை திரும்பவும் வாங்கிக் கொடுக்கணும். பொன்னு மாதிரி சிற்றுடுக்கு வாசிக்க முடியுமாம்பாங்க”
“பொன்னுவைக் கண்டா பயமாயிருக்கு. விலகி நிற்கனும். அவனைப் பகைச்சிக்கிரக்கூடாதுப்பா” என்பாராம் சப்-இன்ஸ்பெக்டர்.
“நாம் என்ன கம்பு வீச்சில் கூடுன ஆளா, கத்தி சுத்தறதல வாய்ச்ச மனுசனா, நம்மளக் கண்டு பயப்படுறதுக்கு. உடுப்புத் தேய்ப்புத்தான். உடுப்பு தேய்ச்சா, கத்தி மாதிரி நிக்கும். காக்கி உடுப்புக்கு சவ்வரிசிக் கஞ்சி போட்டு, மொட மொடன்னு தேய்ச்சிக் கொடுத்தா, உடுப்பு எதிரில் இருக்கிறவர் வயித்தில குத்தும். அதான் அப்படிச் சொல்றாரு. நம்ம தொழிலுக்கு அந்த ஒரு மரியாதை எப்பவும் உண்டும்”.
“அப்போ ஆத்தில தண்ணி போச்சா?”
“இடுப்பளவு தண்ணி. இடுப்புத் தண்ணில நின்னு துணி துவைப்போம். சில நேரம் வெள்ளப் பெருக்கமாகி, துவை கல்லையே அடிச்சிட்டுப் போயிருக்கு. என்னடா இது வம்புன்னு, அப்ப ஊராட்சித் தலைவர் உதவி செஞ்சு, அங்ஙனயே சிமிண்ட் கல்லு கட்டிக் கொடுத்தாரு”
“எத்தனை வருசம் தொழில் பாத்தீங்க?”
“தண்ணிலயிருந்து எழும்பின போது, 1977. அது வரை இடுப்புத் தண்ணிதான். இடுப்புக்குக் கீழே குளுச்சி. இடுப்பக்கு மேல வெயில் உறைப்பு. ரெண்டு விதமாவும் இருக்கவேதான் தொழில் செய்தோம். கீழே சுத்தி மீன் கடிக்கும். காலை மாத்தி மாத்தி வச்சி பெரிய ரோதனையாப் போகும். வேட்டிய கீழே இறக்கிவிட்டு, மேல அள்ளுனா ஒரு அரைக்கிலோ மீன் துள்ளும். அப்ப ஊர்ச் சாப்பாடுதான். ஊருக்குள்ளபோயி வீட்டு வீட்டுக்கு கஞ்சி எடுத்துவருவோம். மின் குழம்புக்கும், மீன் பொரியலுக்கும் நல்லாருக்கும். கண்மாயில தண்ணி கெட்டிக் கெடக்கிற போது அங்க துவைக்கப் போறதுண்டு. கம்மாயில சேலைய நல்லாவிரிச்சி, அதில கம்மஞ்சோத்தையும், செம்மறாட்டஞ் (செம்மறி ஆடு) சாணியையும் பிசைஞ்சி வச்சி அடியில அழுத்தி வச்சிருவோம். அதில 2 கிலோ மீன் மொழுமொழுன்னு மாட்டிக்கீரும். ஊர்ச் சேத்துக்கும் அதுக்கும் அப்படியொரு ருசியா இருக்கும்”
விளாத்திகுளம் சுற்றிய கிராமங்களில் 25 வருடங்கள் முன்னால் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. பெண் சட்டமன்ற உறுப்பினர். ஊராட்சி ஒன்றிய அலுவலர், பொறியாளர் அத்தனை அலுவலரும் சூழ்ந்துவர, ஆற்றின் மேகரையில் நின்று பார்வையிட்டார். அதிகம் ஆள் நடமாட்டமில்லாத பகுதி. ஈரப்பதம் மருந்துக்கும் இல்லாமல் தகிக்கும். கருணை சுரக்கும் சுரப்பியிலிருப்பதை எடுத்து, மக்களுக்கு தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் ஆக்கப் போகிறார். மறுநாள் ஆழ்துளைக் கிணறு ஊன்றி, மூன்று டேங்கர் லாரிகள் நின்றன. தண்ணீர் லாரிகள் கிராமங்களுக்குப் போயின. ஒரு குடம் 2 ரூபாய். ஊர் ஊருக்கு எம்.எல்.ஏ தண்ணீர் விற்று சம்பாதித்தார் என்ற வரலாற்றுப் பதிவு வந்தது.
அவர் தண்ணீர் விற்றார். அடுத்து வந்த சட்டமன்ற உறுப்பினர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதாகி சிறைக்குள் போனார்.
ஆற்றைச் சாகடித்தது யார்?
சலவைத் தொழிலாளி பொன்னு, தண்ணீர் வண்டியடித்த குருசாமி, ஒரு எழுத்தாள நண்பா் - மூவரிடமும் கேட்டேன்.
”அரசியல்வாதி, அதிகாரி, மக்களாகிய நாமும்”
“மக்களை எப்படிச் சொல்லலாம்”
“போராடாமல் விட்டோர்களே. அதுதான்”

2
பூமி தோன்றிய போது ஆறு தோன்றியிருக்கும். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஓடிஓடி இளைப்பாறுதல் அற்று மண்ணைச் சேகரித்திருக்கும். நீர்புரளப் புரள கூடவே அடித்துவரும் மண் ‘சக்கென்று’ அடியில் நின்று விடும். மணல் அரிப்பு வராமலிருக்க தனக்கு மேல் சிறுசிறு தாவரங்கள். நதிப்படுகை அரிப்பு கொள்ளாமலிருக்க வளர்ந்த மரங்கள். இயற்கை தனக்குத் தானே பாதுகாப்பை உண்டாக்கிக் கொள்கிறது.ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் வந்த மாமணியை இழப்போமா? இழந்தோம். ஆற்றைத் தோண்டினால் மணல் இல்லை. நீரும் வராது. அளிமண்; அதற்கும் கீழே போனால் செம்பாறை தான்.

கருத்துகள்
கருத்துரையிடுக