ஆழத்துக் குளிர்ச்சியில் கொதிக்கும் வெம்மை - பா.செயப்பிரகாசம் சிறுகதைகள்
பேரா. இரா.கந்தசாமி,
பேசி: 7598202632
karasurkandasamy@gmail.com
எழுதுகோல் ஏந்தி நூல் தருபவா்களுக்கும் நாட்டுப்புறக் கதைசொல்லிகளுக்கும் இடையே நுணுக்கமான வேறுபாடு ஒன்று உண்டு. படைப்பு, படைப்பாளி போன்ற சொற்களில் தொனித்து நிற்கிற அதிகார போதை இன்றைய பின்நவீனத்துவச் சொல்லாடல்களினால் களையிழந்து வீழ்கிறது. பனுவல், பனுவலாக்கம், பிரதி என்று எழுத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த மகுடம் அப்பால் தூக்கி வைக்கப்பட்டுவிட்டது. ‘நமக்குத் தொழில் கவிதை’ என்பதை வேறு தொனிகளில் வாசிக்க வேண்டியவா்களாயிருக்கிறோம். பேரரசுகளின் காலம் முடிவுற்றது. அது கவிதைகளுக்காயினும்! ‘மல்லாட்டைப் பால்’ புத்தியை மறைப்பதைப் போல, இயல்பான மனித, உயிரிய இங்கிதங்களை மறைப்பதை இன்றைய எழுத்துச் சூழல் வசதியாக மறக்கவும் மறைக்கவும் தொடங்கி இருக்கிறது.
எந்த நாட்டுப்புறக் கலைஞரும் கதைசொல்லியும் பாடகரும் மகுடம் பற்றிய நினைவுகள் அற்றவா்களே. சரியான கலைஞரின் உள்ளப்புலம் எல்லாவற்றுக்குமாக அழுவது, எல்லாருக்குமாகச் சிரிப்பது, எல்லாருக்குமாகப் பேசுவது என்றிருப்பதன் வழியாக தன்னோர்மையற்றுத் தன் இருப்பை நகா்த்திச் செல்வது. அந்த உள்ளத்தின் ஆழம் உண்மையில் வெள்ளந்தியானது, குழந்தையைப் போலவும் சிறுமி சிறுவனைப் போலவுமே குதூகலிக்கவும் கோபமுறவும் அழவும் செய்வது. ஆனால் அதன் ஆற்றல் அளப்பரியது. மகுடங்கள் ஏறாத மனிதா் இம்மாபெரும் தாவர சங்கமத்துள் தானுமொரு தாவரமாய் ‘உயிர்த்து’ நிற்கிறார்.
ஆயுதங்கள் தேவையற்ற உலகைப் பற்றிக் கனவுகாணப் புகும் நமக்கு எழுத்து ஆயுதமா? தன்னைக் கொல்லவா? பிறரைக் கொல்லவா? கொல்பவா்களைக் குறிபார்த்துக் கொல்வதற்காகவா என்று முரண்கொள்கிறோம். இந்த முரண்களத்தில் கொலைக் கருவிகள் அதிநவீனப் பட்டுவரும் இவ்வுலகில் நாம் எந்தப் புள்ளியில் நின்று கொண்டிருக்கிறோம் என்னும் தெளிவாவது வேண்டாமா? எழுத்து என்கிற தார்மீகப் பொறுப்புப் பற்றிய இவ்வகையான அதிர்வுகளை, பா.செயப்பிரகாசத்தின் சிறுகதைகள் கிளர்த்திவிடுகின்றன. ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்த பின்பு, நீா்ப்பரப்பின் ஆழத்தில் சில்லிடும் குளிர்ச்சியில் கொதித்துக் கிடக்கும் இம்மண்ணின் கோபத்தை, அது உயிர்களுக்குத் தரும் செய்தியை அறிய கதைத்தொகுப்பின் ஆழம் கடந்த ஆழமெல்லாம் முங்கியெழ வேண்டும்.
பா.செயப்பிரகாசம் என்கிற மனித இருப்புக்கு எழுதுவது குறித்த சலனம், மிகச் சன்னமாக, ஆனால் அழுத்தமாக அவா் வாழ்வின் பரப்புக்குள் குமிழிட்டுக் கொண்டே இருப்பதை உணா்ந்து கொள்ள முடிகிறது. பா.செ எழுத்துப் பணியில் தொடா்ச்சியாக இயங்கி வருபவா், புறச் சமரசங்கள் அற்றவா், வணிக நோக்கம் இல்லாதவா். எழுதுவதில் இடைவெளிகள் நேரும்போது தோன்றுகிற சலனங்களை அவர் பொருட்படுத்துகிறார். 2011 – 2014 மூன்றாண்டுக் காலங்களில் பதின்மூன்று சிறுகதைகளே எழுதியிருப்பதாகக் கூறுகிறார். இந்த இடைவெளியில் எஸ்.எஸ்.போத்தையாவின் நாட்டுப்புற வழக்காறுகளை இரு தொகுப்புகளாகத் தாம் பதிப்பித்துக் கொண்டு வந்ததை - அதனால் தம் முன்னத்தி ஏர்களோடு, சக ஏா்களோடு எழுத்தின் வழி உரையாட முடியாமல் போனதின் இயலாமையை உணா்கிறார். ஈழ விடுதலை முதலாம் களப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டதை நினைவுகூா்ந்து சற்று அமைதி கொள்கிறார். கவிதைகள் குறித்தும் இத்தகைய வளையங்கள் உருவாகி மிதப்பதை அவருடைய ‘எதிர்க்காற்று’ கவிதை நூலின் முன்னுரையிலிருந்து அறியலாம்.
அவருடைய வாழ்க்கையின் அறம் சார்ந்த விருப்பங்களுக்கும், விதிக்கப்பட்டதற்கும் இடையிலான சுழிப்புகள், அவருடைய வாழ்க்கை முழுக்க நுண்ணிய சில கண்ணிகளூடு அவரைத் தொடர்ந்து வந்திருக்கும் போல; இத்தகைய சுழிப்புகளில் இருந்து ஒன்று தெரிகிறது. அவருக்குத் தம் எழுத்துகளைக் குறித்த ஆா்வமும் பிடிப்பும், ஆடு, குட்டி ஈணுவதைக் காணும் சிறுமியின் கண்களிலிருந்து துளிர்க்கும் நீரைப் போலத் தம் எழுத்தின் வாழ்வு குறித்த எதிர்ப்பார்ப்பும் இருந்தே வந்திருக்கிறது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு, மிகுந்த பொறுமை காத்தலாகவும் தன்னடக்கமாகவும் ஆரவாரம் அற்றதாகவும் இருப்பதே அவருடைய தனித்தன்மை. விருதுகள் மலிந்துவிட்ட இவ்வுலகில் தன்னெழுத்தைத் தொட்டுணரும், இன்னோரெழுத்தைக் காணக் காத்திருக்கும் தாய்மை அது. தன் சுய இருப்பைத் தன் கண்காணிப்பில், தன் சுயஓா்மையில் காத்துவரும் கலையுள்ளத்தின் பொறுப்புணா்ச்சி மிக்க தேடல் இது.
பா.செ தனக்கென விரித்துக் கொண்ட இப்பொறுப்புணா்ச்சியின் தேடலில் அடிப்படையான மனித இருப்பு, உயிர்ச்சூழல் பற்றிய பல்முனை நீரோட்டத்ததை எழுத்தின் வழிக் கண்டடையத் துடிக்கும் தாகம் பிறக்கிறது. அது அருந்த அருந்த மிகுகின்ற தாகம். நாடுகளை, இனங்களை, கொத்துக் கொத்தாக மனிதா்களை, உயிர்ச்சூழலை, நீா்நிலைகளை, மலைமுகடுகளைக் கொள்ளை கொள்கிற இந்த மனிதா்களைப் பற்றிய தாளாத சீற்றமும் அழிந்துபடும் உயிர்த்தொகுதியைப் பற்றிய துயரமும் ஒருபுறம். இந்தச் சீற்றத்தையும் துயரத்தையும் சக பயணிகளுக்கும் வரும் தலைமுறையினருக்கும் கையளித்து - வாழ்வின் இருத்தலை, தேடலை நியாயமாக்கிக் கொள்ள முயலும் கலை உள்ளத்தின் தாகம் மறுபுறம். பா.செ என்னும் எழுத்தாளரின் சுய இருப்பு மிகச் சரியாக இந்த இரண்டின் சார்பிலும் நிற்கிறது. இவருடைய கதைகளில ஒவ்வொரு கதையும் தன்னளவில் கொண்டு நிற்கும் வடிவம், சொல்முறை என்பனவும் அக்கதைகளின் பொருட்களங்கள் என்பனவும் இதனைச் சொல்லி நிற்கின்றன.
மனிதப்பிறப்புகள் செய்யும் அழிமாண்டங்கள் குறித்த வலி, இம்மனிதப் பிறப்புகளின் பொல்லாத அகந்தையை அகற்றி அவற்றை உலக உயிர்ச்சூழல் தொகுதியோடு கலந்து கரைத்து விட்டுவிடத் தவிக்கும் ஓா் உயிர் அன்பு, இதனை வெளிப்படுத்திக் காட்டும் கலைத்துவம் என வலியும் தாகமும் கலந்த எழுத்துச் செயற்பாடுகளின் மீது பா.செ படைக்கும் கதைகள், கதைக் களங்கள் குறுக்கு மறுக்காய் நீந்துகின்றன. முதிர்ந்த படைப்பாளி ஒருவரை ஒரு சின்ன செம்பிற்குள் மொண்டு காட்டுவதைப் போலத்தான் இது. இந்த வரையறை கலைப்புலம் தொடர்பான ஒரு பொது வரையறைதான். மனிதக் கண்களுக்கு வெறும் மேற்பரப்பை மட்டுமே காணக் காட்டி நிற்கும் அந்த நீருலகில் எத்தனை மருமங்களோ! கை நனைத்துக் கால்நனைத்து முங்கிய வரையில் கையில அள்ளினாலும் ஆற்று நீா் ஆற்று நீா்தானே!
‘காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்’ (2014) என்னும் தொகுப்பில உள்ள பதின்மூன்று சிறுகதைகளிலும், கதை என்பது ஏதோ ஒருவகை அதிகாரத்தால் வீழ்த்தப்பட்ட மனிதா்களின் பக்கமாக நிற்கிறது. கதைக்களம் அல்லது பின்னணி குறித்த சித்திரங்கள் மனிதா்களால் வீழ்த்தப்பட்ட பிற உயிர்களை, உயிர்ச் சூழ்நிலையை, மண்ணின் பச்சைப் பரப்பை. புதிய மாற்றங்களால் உண்டான கேடுகளுக்கு மாற்றான பழசும் புதுசும் பிணைந்த நோயற்ற மண்ணைக் குறித்த கனவுகளை, ஏக்கங்களை விளக்கி அவற்றின் பக்கமாக நிற்கின்றன. இவற்றை அழித்தொழிக்கின்ற மனித சலனங்களின் மேல், வன்மங்களின் மேல் கோபமுறுதல் அதன் இன்னொரு பகுதி.
கதை வடிவமாதல் என்பது பா.செ கதைகளில் இருநிலைகளில் நிகழ்கிறது. ஒன்று சிறுகதைக் கென்று ஒரு படைப்பாளி தனக்கானதாகத் தோ்ந்துகொள்ளும் பொதுவான ஒரு கட்டமைப்பு முறை. அடுத்தது இந்த எல்லாக் கண்ணிகளிலும் பிணைந்து ஊடாடும் ஒரு கவித்துவ மொழியாடல். இவையாவும் கறாராகப் பின்பற்றப் பட்டனவா? சிறுகதைத் தொழில் நுட்பம் சார்ந்த கவனம் மீக்கூறப்பட்டனவா? என்றால் இதற்கு விடையிறுத்தல் சாத்தியமே.
பா.செ கதைகளின் பொதுப் பண்பாக ஒன்றைச் சொல்ல முடிகிறது. இவருடைய கதைகள் அனைத்துமே இவா் பார்த்து அனுபவித்த அசலான அனுபவங்களைச் சுற்றிப் படா்கின்றன. கதைகள் நிகழ்வுகளிலிருந்து, யதார்த்தத்திலிருந்து கதைத் தன்மை நோக்கி நழுவுகின்றன. கதைக்கான கற்பனைத் திறன், கதை சொல்லும் ஆற்றல்களுக்குள் நிகழ்வுகள் கொண்டு வந்து பின்னப்படுவன அல்ல. யதார்த்தத்தைக் கடந்து மேலெழும் மனோ உலகின் அபாரச் சஞ்சரிப்புகளாகவும் அவை இல்லை. இதனை, அவர் பின்னணியாக அமைக்கும் காலமும் இடவெளியும் உணா்த்தி நிற்கின்றன.
மதுரையில் பழைய புத்தகக் கடை வைத்து, நியாயமாகப் பிழைப்பு நடத்தி, கடன்காரராக அல்லல்பட்டு, பின்னர் அரசியல்வாதியாக ஆக சிந்திக்கும் அய்யப்பனைப் பார்த்து பரிதாபப்படும் வாடகை அறையில் தங்கி இருக்கும் இளைஞன் (அய்யப்பன் மரணம்), வளா்ந்து வரும் புதிய குடியிருப்புக்குத் தமிழில் தென்னகரம் என்று பெயா்வைக்கும் படித்த நண்பா்கள் (ஆதலினால் காதல் தீது), எல்லாமே வீரிய ரகமாகச் சுவையிழந்து போகும் பண்டங்களை உடைய கிராமத்தில், தன் பெயா்த்தி தரும் ’பீட்சாவை’ விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும் கிராமத்தப் பெரியவா் (உலகத்தினுள் ஒரு ஊர்). கிடைபோட்ட ஆடுமேய்க்கும் கிராமத்துப் பாடகரின் மனைவியிடம் கள்ளத் தொடா்பு கொள்ளும் ‘பொண்டுவனைக்’ கல்லால் எறிந்து தாக்கத் துடிக்கும் சிறுவா்கள் (காட்டாளும் கத்திக் கல்லும்), 1965-இல் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒருங்கிணைத்த மதுரை மாணவா்கள் (காணாமல் போனவா்கள்). தன் வீட்டில் பணி செய்யும் பெண்ணுக்குத் தனிக் குவளை, தனித்தட்டு என்று பிரித்துப் பார்க்கும் சாதியத்தைப் பொறுக்கவியலாது குமையும் ஓய்வுபெற்ற அரசாங்க அலுவலர் (இதுவும் கடந்து போம் ) - என்று இவா்கள் எல்லோரிலும் பா.செ கலந்திருக்கிறார்.
பருவங்கள், களங்கள், அனுபவங்கள் மாறியிருக்கின்றன, எல்லாவற்றிலும் எழுதிய கலைஞரும் உடனிருக்கிறார். இதிலிருந்து இவா் தம் சொந்த வாழ்க்கையின் இருப்பைத் தகவமைத்துக் கொண்ட முறைமை பற்றியும் ஒரு தெளிவைப் பெறலாம். இவருடைய சிறுகதைகளில இவா் தென்படுகின்ற இடங்களில் எல்லாம் ஒருவகைப் போராட்டப் பண்பும் மாற்றத்தை விரும்பும் உள்ளமும் வெளிப்பட்டு நிற்கின்றன. ஒரு பார்வையாளராக என்பதைத் தாண்டி மனிதார்த்தம், உயர் நியதிகளின் பக்கம் சாரும் மனிதா்களின் தொகுதி ஒன்றை இவா் கதைகளில் காணமுடிகிறது. அவா்களில் ஒருவராகத் தானும் நின்று கொள்கிறார். தான் படைத்த கதைகளில் தானிருப்பது போல, தன் வாழ்விலும் அறச் சார்மை முதன்மைப் படுத்தி வாழ முனைந்துள்ளார் எனலாம்.
இவா் சிறுகதைகளின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பதற்கும் தன் கதைகளில் தானே எப்படி ஊடாடுகிறார் என்பதற்கும் சான்றாக, ஒரு கதையை இங்கு காணலாம். ”கிராமத்துப் பேய் எப்போதும் அவளை விரட்டிக் கொண்டிருந்தது. சாதி என்னும் பேய் நாகலட்சுமி போன்றவா்களை கால இட எல்லைகளைத் தாண்டி விரட்டிக் கொண்டே இருக்கிறது. கிராமம் மெல்ல மாற்றமுறுகிறது. கிராமத்து மக்கள் நகா் நோக்கிப் படையெடுக்கின்றனா். கிராமத்தின் ஆதிக்கச் சாதியினா் நகரத்தில் உயா்ந்த பதவிகளுடன் வசதியான வாழ்க்கை நடத்துகின்றனா். கிராமத்தில் அவா்களுக்குத் தொண்டூழியம் செய்த ஒடுக்கப்பட்ட சாதியினா் நகரத்துக்குச் செல்லும்போது, அங்கும் ஆதிக்கச் சாதிக்காரா்கள் வீட்டில் தொண்டூழியம் செய்யவே பணிக்கப்படுகின்றனா். அங்கும் சாதி வேறுபாடுகள், தீண்டாமை. அப்படி ஒரு வீட்டில் வீட்டுவேலை செய்யச் சென்றவள் நாகலட்சுமி என்ற கிராமத்து வண்ணார் குடும்பத்தைச் சேர்ந்தவள். அந்த வீட்டின் ஆண் அரசாங்கப் பதவியில் இருப்பவா். அவருக்கு இந்த அருவருப்பான சாதிய நடைமுறைகள் பிடிப்பதில்லை.
அவா் வீட்டிலிருந்த பார்த்தால் வீதியில் உள்ள நாயா் தேநீா்க்கடை தெரியும். ஆண்களின் கண்கள் மொய்க்கக் காலைவேளையில் அங்குத் தேநீா் அருந்திவிட்டுத் துப்புறவுப் பணிக்குச் செல்லும் மூன்று பெண்கள் தென்படுவார்கள். அவா்கள் தன்னியல்பானவா்கள். சுதந்திரமானவா்கள். கணவன், அப்பன் எனும் ஆண் அதிகாரத்திற்குள் அகப்படாதவா்கள். அவா்களில் ஒருத்தியைச் சபல புத்தி கொண்ட ஒருவன் சீண்டிப் பார்க்கிறான். அவனை மொய்த்துக் கொண்ட மூன்று பேரும் பிலுபிலுவெனப் பிடித்துக் கொள்கின்றனா். எல்லாவற்றையும் ஒரு பார்வையாளராக அறிகிறார் அந்த மாடிவீட்டு ஆடவா்.
நாகலட்சுமிக்கு உடம்பு முடியாமல் போக, அவள் மகள் அம்பிகா வீட்டு வேலைக்கு வருகிறாள். தனித்தட்டு, தனிக்குவளையில் வீட்டுக்கு வெளியே வைத்துச் சாப்பிட வைக்க அவர் மனைவி மேகலா முயல, அவள் மறுத்துவிடுகிறாள். இதற்கும் அந்த ஆடவா் சாட்சியாகிறார்."
தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்கள், நம்மை மெல்ல வீதிக்கு அழைக்கின்றன. வீதி, ஊா், நாடு, உலகம் எனப் பார்வை மெல்ல விரிகிறது. இந்த விரிவின் மேல் படைப்புள்ளம் வாகாக வந்து கவிழ்ந்து, அந்த விரிவெங்கும் தன் அலைக்கரங்களைச் செலுத்திப் பார்க்கிறது. ஆக பா.செ தந்து செல்லும் கதையுலகம் தன் அனுபவத்திலிருந்து விரிந்தெழும் தார்மீகக் கோபத்தின் விரிவாகவும் விளைச்சலாகவும் இருக்கிறது. ’இதுவும் கடந்து போகும்’ என்னும் மேற்குறித்த கதையின் செய்திகளில் இருந்து படைப்பாளியை ஒருசில புள்ளிகளுக்குள் கொண்டுவரும் முயற்சி இப்படியானது.
பா.செ காட்டும் கதையுலகம் பெரும்பான்மையும் சாதி, அரசு, பாலியல், உலகமயமாக்கல் ஆகிய அதிகாரங்களின் எதிர்நின்று, அவற்றால் ஒடுக்கப்படும் மனித வா்க்கத்தைத் தன் கரங்களின் பக்கலில் வளைத்துக் கொண்டு மனித வா்க்கத்தின் மீதான விமரிசனங்களை முன்வைக்கிறது. தான் வாழும் காலத்தின் சமூக மாற்றங்கள் இப்பார்வைகளின் வழி ஊடாடி நிற்கின்றன. இத்தன்மையைக் கீழ்வருமாறு நாம் கோட்பாட்டாக்கம் செய்யலாம். இங்கே மனிதவா்க்கத்தின் மீது படைப்பாளி கொள்கின்ற தார்மீக அன்பு படைப்பின் பொருளாகிறது. குறுக்கு மறுக்காக இடைமறிக்கும் காலம் பொருளை விளக்கி நிற்கிற பின்னணியாகிறது. இவற்றின் ஒழுங்கமைவில் பயணமாகும் படைப்பாளியின் தனித்துவம் படைப்பாகிறது.
‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்று எப்போதும் முணுமுணுக்கும் வாய்க்குச் சொந்தக்காராகிய சாந்த சொரூபி சாதி என்று வந்துவிட்டபின், உள்குடைந்த வன்மம் வெளிப்பட நிற்கும் கோரம் சகிக்க முடியாதது (ஆதலினால் காதல் தீது). ஆதிக்கச் சாதிச் ’சிவன்காளைகளின்’ உடல் நமைப்புக்காகவெ ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் பிறப்பெடுத்ததைப் போன்ற கிராமத்து மறைவெளிகள் (உயிர்வேலி), மெல்லப் புகுந்து ஊரை வளைத்த உலகமயம் கிராம சமுதாயத்தின் பண்பாட்டுக் கலைப்புலங்கள்மீதும் கைவைக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர ஆட்டக்குழு, தன் ஊரில் வந்து ஆட்டம் நிகழ்த்த, அந்த ஊர்ப் பெண்ணொருத்தி ஓா் ஆடவனைக் கண்டு மயங்குகிறாள். அவன் அந்த ஊரைச் சோ்ந்தவன் தான். ஆனால் ’அவன் வேற சாதியாக்கும்’ என்பதால் அவளின் லயிப்பு உள்ளமுங்கிச் சுருங்குகிறது. (உலகத்தினுள் ஒரு ஊா்). மாணவா் போராட்டங்கள் உணா்வெழுச்சியுடன் ஒருங்கிணைக்கப் படுகின்றன என்றாலும், அங்கும் தன்னகமாய் இருக்கும் சாதிய அதிகாரச் சுயநலங்கள் நண்பனைக் காட்டிக் கொடுக்கின்றன, காப்பாற்றத் தவறுகின்றன (காணாமல் போனவா்கள்). காதலித்து மணந்த கணவன் அவள் நெஞ்சில் கத்தியால் குத்திவிட்டு ஓடியதைவிட நுணுக்கமான வலிநிறைந்தது அக்காள் கணவன் செய்த தந்திரங்கள். அக்கா தற்கொலை செய்துகொள்ள, அவனோடு தாலியில்லா மனைவியாக வாழ்ந்த அவளின் வசதி நிறைந்த வாழ்க்கை: தூலமான கத்தி ஒரு முறைதான் கொல்லும். வாழ்க்கையெனும் குறுகிய வீட்டுக்குள் எத்தனை கத்திகள்! பெண்ணின் கழுத்திற்கு மேலாக ஆம்! பா. செ.சொல்கிறார். ‘கத்தி ஆணுடைய ஆயுதம்’ (ப. 191. மறைவாழ்வு)
இத்தகைய ஒடுக்குமுறைகளை எதிர்த்து நிற்கவும், ஒடுக்கு முறைச் சவால்களின் ஊடாக தத்தம் வாழ்க்கையை நகா்த்திக் கொள்ளத் தேவையான தகுதிகளை வளா்த்துக்கொள்ளவுமாக இயங்கும் மனிதா்களும் இருக்கிறார்கள்.
“சதுரம் சதுரமாய் மதுரை வீதிகளைச் செதுக்கிய நகர வடிவமைப்புக் கலைஞனும், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும என எண்ணிய கருணையாளா்களும் மரணித்து விடுவதில்லை. கொல்லப்படாத ஜீவசக்தியோடு வேறுவேறு இடங்களில் வாழ்கிறார்கள் …” (ப. 16 அய்யப்பன் மரணம்).
கலைத்துவமும் மனிதத்துவமும் கவித்துவ நுண்மையில் இணைவதை மேல்வரிகள் அற்புதமாகப் படம்பிடிக்கின்றன. மரணமெய்திவிடாத மனிதம் காப்பாற்றும் மனிதா்களை ஒரு வகை வாஞ்சை உணா்வோடு தம் சிறுகதைகளில் பா.செ உலவவிடுகிறார்.
பெண்ணின் வலிகள் பற்றி ஆண் எழுத முடியுமா? ஆதிக்கச் சாதிக்காரா் ஒருவா் ஒடுக்கப்பட்ட சாதிக்காரருக்குச் சார்பாகப் பேச முடியுமா? அரசியல் கோட்பாட்டுப் புலத்திலிருந்து இப்படிப் பேச முடியாது; நரிகளால் ஆடுகளுக்கு விடுதலை கிட்டாது என்று உருவகமாகவும் பதிலிறுக்கவியலும். ஆனாலும் ஒரு மனிதார்த்த, உயிரார்த்த புலத்திலிருந்து இப்படி ஒதுக்கிடவும் ஒதுங்கிடவும் இயலுமா? இப்படி ஒதுங்கி ஒதுக்கப்படும் மாபெரும் இயற்கைப் பெருவெளியில் ஒரு பூச்சியைப் போல அதிர்வுகளுடன் நாட்களைக் கடத்த வேண்டுமா? ஆணாகவும் ஆதிக்கச் சாதிப் புலத்தில் பிறந்துவிட்டோம் என்பதற்காகவும் வாயைக் கட்டிப் பீறிட்டெழும் மனிதத்துவத்தின் மனப்படபடப்பை அடைத்துக் கொண்டுவிட முடியுமா?
ஆதிக்கச் சாதியினரிடம் உருவாக வேண்டிய மனமாற்றங்களைப் பற்றிச் சிந்தித்தெழுத முடியும். ஆம்! அப்படித்தான். ஒரு பெண்ணை ஒடுக்குவதற்கு ஆண் மேற்கொள்கிற தந்திரங்கள் என்னென்ன என்று ஓா் ஆண் தன்னை உதிர்த்துக் காட்டமுடியும். பெண்ணை ஒடுக்க வேண்டும என்னும் ஆணின் வேட்கைக்கான உளநோய்க்கூறுகளை ஓா் ஆண் சமரசமின்றி ஒப்புக்கொண்டு விளக்கிக் காட்ட முடியும். இப்படி இயங்குவதிலிருந்து சாதியிலிருந்தும் ஆண் அதிகாரத்திலிருந்தும் வெளியேறுவதற்கான எத்தனங்களை ஒருவா் முயலக்கூடும். அதிகார நிறுவனங்கள் மாந்தவாழ்வு என்னும் முரணியக்கத்தில் இவா்களிடமிருந்தே மாற்றுத்துக்கான விதைகளை பா.செ சேகரிக்கிறார்.
காதல் என்பது குடும்பக் குளத்தில் கல்லெறிவதைப் போன்றது. சாதியின் இறுக்கத்தை எல்லாக் காலத்திலும் காதலே நெகிழ்த்தித் தளா்த்திப் பார்த்திருக்கிறது. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஒருத்தி தன்னுடன் படிக்கும் மாணவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். இது புரட்சியின் தொடக்க வித்து. பா.செ கதை உலகம் இதனை இப்படிப் பேசத்தொடங்குகிறது.
“... குடும்பக் குளத்தில் கல்லெறியும் துணிச்சல் சின்னஞ் சிறுசுக்கு எப்படி வந்தது? சின்னவா்கள் தான் இப்போது நிறைய உடைக்கிறார்கள்” (ப. 31. நிர்மலாவின் நாட்கள்)
பா. செ. கதைகள் நம்பிச் சார்கிற இன்னொரு மனிதவா்க்கம் - பொருளாதாரத்தாலும் சாதியாலும் ஒடுக்கப்பட்ட பெண்கள். மாடி வீட்டின் மேலிருந்து முதல் காதல் கல்லெறிந்த சிறுமிகளும் நம்மிடம் இருக்கிறார்கள். நொடிந்து போன மனிதப் பொதியிலிருந்து நிமிர்ந்து மேலெழும் பெண்களும் நம்மிடையே இருக்கிறார்கள். அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டு, வசதியானவா்கள் வாழும் குடியிருப்பில் துப்புறவு வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் (பன்னிரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தும் பெண்) நிர்மலாவுக்குத்தான் எத்தனை மனப்பாரங்கள்! வேறு ஒருத்தியுடன் ஓடிப்போகும் அப்பன். அப்பன் ஓடிப்போனதால் வேலைக்குப் போகமுடியாத தாய். வசதியான குடியிருப்புப் பகுதியிலிருந்து அரசுப் பள்ளியில் சோ்ந்து படிக்கும ஒருவன், நிர்மலாவின் பின்புலம் அறியாது அவளைக் காதலிக்க, அவள் சூழ்நிலை காரணமாகத் தன் குடியிருப்புப் பகுதியில் வேலைக்கு வருகிறாள் என்பது தெரிந்ததும் அவளைவிட்டு, காதலை விட்டு விலகும் அவன் சாதியபிமானம்; தனக்குப் பறிபோன கல்வி தன் தங்கைக்காவது கிட்ட வேண்டும் என ஆதங்கம் கொள்ளும் நிர்மலா ஓர் அற்புதமான பெண்ணாகிறாள்.
பெண்கள் சுய ஓா்மை நிரம்பியவா்கள்... உடம்பு பற்றிய சுயநினைவோடு உலவிக் கொண்டிருப்போர் பெண்கள். கொஞ்சம் கட்டான வடிவான உடல் ஆண்கள் கண்களை உறுத்தும். நோவுபடுத்திக் கொண்டிருக்கும் என்பதை அறிவார்கள். (பக்.82, 23 இதுவும் கடந்து போம்). அதிலும் வெளிவேலைகளுக்குச் செல்லும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சோ்ந்த பெண்களுக்கு இந்த ஓா்மை அதிகம்.
ஆதிக்கச் சாதிக்காரனுடன் ஓடிப்போன வண்ணாத்தி சின்னா, மீண்டும் தன் கணவனுடனேயே வாழ விருப்பம் தெரிவிப்பதும், காவல் நிலையத்தில் சிவன்காளையும் சின்னாவும் பிடிபட்டிருக்க, சின்னாவை அடித்துத் துவைக்கும் கணவன், அவளை அத்துவிடத் தயாராக இருந்த அவன் மனைவியின் வேண்டலின் கரைந்து அவளுடன் இருக்கச் சம்மதிப்பதும் ஏன்? அன்புக்கும் உடல் ஆசைக்கும் இடையேயான முரண்விளையாட்டுகளை விளக்கிவிடப் போதுமான விதிகள் நம்மிடம் இருக்கின்றனவா? வண்ணார்கள் சங்கம் இதுதான் அதிக்கச் சாதிக்காரனைப் பழி கொள்ளத் தகுந்த தருணம் என்று முடிவுசெய்து, தவறு செய்த ஆதிக்கச் சாதிக்காரனான சிவன்காளை சின்னாவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தியபோது, சின்னா துணுக்குற்றுப் போயிருப்பாளா? பச்சைப் பிள்ளைக்காரி எப்படி இன்னோர் ஆடவனுடன் ஓடிப் போகத் துணிந்தாள்? வீடு என்னும் காலகாலச் சிறையிலிருந்து ஒரு பெண்ணின் விடுதலை ஏக்கமா? அன்புக்கும் சுய ஏக்கங்களுக்கும் இடையே நிகழும் மாயவித்தைகளுக்குக் கட்டுப்பட்டுக் கிடப்பதா மாந்தவாழ்வு? கேள்விகள் நீள்கின்ற மனச் சலனங்கள். சூழலுக்குத் தகுந்த முடிவுகள், மனிதா்கள் வித்தியாசமானவா்கள். வித்தியாசமான மனித இருப்புகளின் முன்னிலையினால் வித்தியாசம் வித்தியாசமான மன எழுச்சிகள், மன அமுங்குதல்கள்.
மக்களையும் சிறுவா்களையும் தன் பாட்டால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஆட்டுக்கிடை குருசாமி, தன் மனைவியின் அன்பைப் பெறமுடியாமல் போனதெப்படி? அவன் மனைவி ’பொண்டுவன்’ ஒருவனிடம் கணவனிடம் தேடாத உறவைத் தேடுகிறாள். பாட்டின் மீது காதல் கொண்ட சிறுவா்கள் வழக்கொன்றில் கைதாக இருந்த குருசாமியைத் தப்பிக்கச் செய்கிறார்கள். சில ஆண்டுகள் கழித்து குருசாமியைப் பற்றித் தகவல் சொல்லி அவன் மனைவியிடம் அவனோடு சோ்ந்து கொள்ளச் சொல்ல, அப்போதும் அவள் மறுத்துவிடுகிறாள். குருசாமியின் மீது அன்பு கொண்ட சிறுவா்கள் ‘பொண்டுவனைக்’ கல்கொண்டு எறியத் தயாராகிறார்கள் (காட்டாளும் கத்திக் கல்லும்).
பனையேறியான ’இருட்டுப் பச்சை’. அவனுக்குள் டி.ராஜேந்தரைப் போல ஆடவும் பாடவும் பேசவும் வாய்த்த கலைத்துவம் எப்படி வாய்த்தது? (காற்றடிக்கும் திசையில் இல்லை ஊா்) ஒருவரின் உள்ளார்ந்த மன உலகை அளந்துவிடுவது அவ்வளவு எளிமையானதா? பாட்டுக் கச்சேரியில் திரைப்பட நடனக் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்துவதற்கும், பனங்காட்டில் பதனீர் இறக்கும் ஒற்றைப் பனையேறிக்குமான உறவில் – மனித இருப்புகள் இயல்புகள் குறித்து இதுவரை திறக்கப்படாத கண்கள் திறக்கின்றன. மதகில் மட்டும் நீா் வெளியேறுவதில்லை. அடிநீரோட்டங்களில் உள்ளார்ந்த கணக்கீடுகளில் கரையில் வளரும் மரங்கொடிகளின் வழியும் நீா் கசிகிறது. கொக்குக் கூட்டங்களின் வரிசையான வான் பயணத்தில் நீரின் பிம்பம் அலைவுறுகிறது. பா.செ.வின் இத்தகைய சித்திரங்கள் அவருடைய அனுபவங் பெருங்குளத்தின் ஆழத்தில் பாசி படர்ந்து கிடக்கும் கற்கள்; சிறுவா்கள் விட்டெறிந்து போன விநோதப் பொருட்கள்; நத்தை ஓடுகள்; காற்றடிக்கும் திசையில் இல்லை ஊா் ஒரு கட்டுரைக் கதை எனல் தகும்.
(‘காற்றடிக்கும் திசையில் இல்லை ஊா்’ – சிறுகதைகள்)
பா.செ.வின் கதைகள் அதிகாரத்தின் தூல முகத்தையும், அதன் நுண்கண்ணிகளையும் இப்படி இருவேறு நிலைகளில் காலத்தின் அனுபவங்களின் வழி வெளிப்படுத்துகின்றன. இந்த வெளிப்படுத்தலில் பின்னணிகளாக அமையும் களன்களின் வழி அவா், சுற்றுச் சூழல் சீா்கேடு, நாகரிக மாற்றங்கள், உலகமயம், அரசு அதிகாரம், பொருளாதாரக் குலைவுகள், கல்விக் குளறுபடிகள் எனப் பலவற்றையும் உடன் கலக்கவிடுகிறார்.
மிக எளிய சொல்முறையிலான கதைகள் இவை. இவை ஏற்படுத்துகிற அதிர்வுகள் வலுவானவை. எளிய கதை நிகழ்வுகள், கதை நிகழ்வுகளுக்கான தமிழகப் பின்னணி, இவற்றைச் சொல்லும் மொழியில் தளும்பும் கவித்துவம் இவற்றின் பின்னலில் ஒவ்வொரு கதையும் கனம் பெறுகிறது.
“விடியலின் வசீகரம் யாது? முதல் வசீகரம் சுறுசுறுப்பு; இரண்டாவது வசீகரம் யாது? சுறுசுறுப்பு! மூன்றாவது வசீகரமும் அதுவே! அமைதியைக், குளுமையைத் தோள்களில் சுமந்து பலரையும் சுறுசுறுப்புக்கு நடத்திப் போகிறது விடிகாலை (ப.76)
“கதையும் தினைமாவும் ஒன்னுபோல, தின்னத் தின்ன இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று நாக்கும் மனசும் கேட்கும்..” (ப. 90)
“எரியும் வீட்டுக்குள்ளிருந்து நிணம் கருகிய வீச்சத்துடன் வயதான மூதாட்டியை வெளியே தூக்கிக் கொண்டு வருவதைப் போல், பழைய அனுபவங்களிலிருந்து ஒரு கொடூரத்தை நினைவுக்குக் கொண்டு வந்தான் ” (ப. 154)
அனுபவங்கள் கதைகளுடாக வாழ்க்கை குறித்த தரிசனங்களைத தருகின்றன. தரிசனங்கள் துலங்கும் இடத்தில் மொழி கவித்துவமாகிறது. உயிர் நேசத்தையும் மனித நேசத்தையும் அவாவி கரையில் நிற்கும் நாம், கண்ணீர்த் துளிகளைச் சுமந்து வரும் ஈரக் காற்றின் குளிர்ச்சியைக் கரை நெடுக நடந்தேகி மாந்துகிறோம். ஆழத்துக் குளிச்சியில் கொதிக்கும் வெம்மையைப் பற்றிய மௌனத்தோடு!

கருத்துகள்
கருத்துரையிடுக