பொன்னீலன் ‘கரிசல்’ - நாவல்: நில வரைவியலும் நினைவுகளும்


(’பொன்னீலன் 80‘ நூலில் வெளியான கட்டுரையின் செழுமைப்படுத்திய வடிவம்)

படைப்பாளிகளை நேரில் சந்தித்து அறிமுகமாவதினும் வாசிப்பு வழி அறிமுகம் எளிது, அநேகம் எழுத்தாளர்களின் படைப்புக்கள் வழி இது சாத்தியமாகிறது.

கொள்ளைக்காரர்கள் – குறுநாவல் தாமரை இலக்கிய இதழில் வாசித்தேன்; வாசிப்பு மூலம் அவர் எனக்கு முதல் அறிமுகம். வாசித்து முடித்து அசை போடுகையில் சிறு சந்தேக மின்னல் கீறியது; கொள்ளைக்காரர் யார்? கதையில் வருகிற காவல்துறை மாந்தர்களா? கடத்தல் வியாபாரிகளா? கதை தந்த எழுத்தாளரா?

கதை மாந்தர்களின் பேச்சும், கதை உரைப்புப் பாங்கும் மலையாளமும் தமிழும் பிசைந்து பிழிந்த மூலிகைச்சாறு போல வட்டார வழக்கான குமரி மொழியில் வெளிப்பட்டிருந்தது. வட்டார மக்களை உலுக்கி உன்மத்தம் பிடிக்கச் செய்து கொண்டிருந்த ‘அரிசிப் பிரச்சனை’. கதை காட்டிய உண்மையின் பக்கம்; மக்கள் பக்கம் நின்று அவர் வாதாட்டம் செய்த மொழி - கதையைப் படைத்த எழுத்தாளர் என்பது எனக்கு உறுதிப்பட்டது.

ஒரு கைகுலுக்கள் செய்ய நினைத்தேன். படைப்பாளி அருகில் இல்லை.

அது 1973 – மதுரை ‘ஹாலேஜ் ஹவுஸ்’ உணவக மாடி அரங்கத்தில் ‘புதிய மொட்டுகள்’ என்றொரு கதைத்தொகுப்பு வெளியீடு. அதில் பொன்னீலனின் கதை வெளிப்பட்டிருந்தது. நெல்லையில் அரசுப் பணியிலிருந்த நான், வண்ணதாசன், கலாப்பிரியா மூவரும் மதுரைக்கு நூல் வெளியீட்டுக்குச் சென்றோம். வண்ணதாசன் முகம் பூதலிப்பாய் பெருமிதத்தோடு தென்பட்டது; அவருடைய கதையும் நூலில் வெளியாகியிருந்தது.

பொன்னீலனுடன் முதல் சந்திப்பு. முறுக்கிய மீசை; வட்டக் கழுத்து ஜிப்பா; வாட்ட சாட்டமாய் “நல்லா வாய்ச்ச ஆளாக”, இளைஞராக என் கண்களுக்குள் வந்தார். கைகுலுக்கல், ஒரு வாழ்த்து அறிமுகம்...

சூரங்குடி அ.முத்தானந்தம், கி.ரா.வின் தடம் பிடித்து, வட்டார வாழ்வியல் சித்திரிப்புச் சிறுகதை, குறுநாவல், நாவல்களின் படைப்பாளி. பொன்னீலன் மீது உருத்தும் பிரியமும் கொண்டவர். அருகிலுள்ள சிறு நகரான விளாத்திகுளத்தில் 2-12-2011-ல் நடைபெற்ற அவருடைய மகன் பார்த்தீபன் திருமணத்துக்குப் பொன்னீலன் தலைமை. நாகர்கோவிலிலிருந்து இரண்டு மூன்று பேருந்து மாறி, விளாத்திகுளம் முதல் நாளிரவு சிரமத்துடன் வந்தடைந்தார். தம்பி மார்க்கண்டேயன் அந்நாளில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர். அவர் வீட்டில் அன்றிரவு தங்கல்; அன்றிரவு முழுக்க உரையாடல். காலையில் லேசாக கண்ணயர்வு. தங்கியிருந்த வீட்டின் கிழக்குச் சன்னல் வழி பார்த்தபோது, தென்னங் கீற்றுகளூடே ஊடுருவிய காலைக் கதிரோன் சங்குசக்கரப் பட்டாசு போல் பார்வை கூசச் செய்தது. வீட்டிலிருந்து இறங்கினால், பின்பக்கத்தில் நடை பூங்கா. நடைப்பயிற்சி போக, குழந்தைகள் விளையாட தாவரங்களின் அடர்த்தியுடன் பூங்கா உருவாக்கி வைத்திருந்தார் மார்க்கண்டேயன்.

திருமண நிலையத்தில் ஒரே சத்தக்காடு; உறவுச்சத்தம். இன்னொரு பக்கம் திருமண மண்டபத்திலிருந்து பெருக்கியடிக்கும் ரேடியோக் குழாயின் சத்தம்: அடுத்தடுத்த மண்டபங்களிலிருந்தெல்லாம் ஒலித்தாக்குதல். என்ன பேசினோம், என்ன வாழ்த்தினோம் என யாரும் கேட்கவுமில்லை. வந்திருந்தோர் அவரவர் வாழ்க்கைப்பாடுகளைப் பேசிக்கொண்டிருந்தனர். சூரங்குடி அ.முத்தானந்தத்தின் குணவியல்பைச் சிலாகித்த பொன்னீலன் என்னைப் பற்றிச் சொன்னது மட்டும் அரிச்சலாய் நினைவிலுள்ளது. “என்னைவிடச் சிறந்த எழுத்தாளர், படைப்பாளி பா.செ” என்றார். ஏதொரு பாராட்டாயினும் மிகையாகவே பேசும் இயல்புடையவர்; அவருடைய பெருந்தன்மை நாம் வாசிப்பதற்கான பக்கம் என அர்த்தப்படுத்திக் கொண்டேன்.

பொன்னீலன் போல, எங்கள் கரிசல் வட்டாரத்துக்கு ஒரு வாத்தியார் இருந்தார். அவர் ஏழாம் வகுப்பு வாத்தியார் என்று அறியப்பட்ட எஸ்.எஸ்.போத்தையா. அவர் தங்கம்மாள்புரத்திலிருந்து திருமணத்துக்கு வந்திருந்தார். மூன்று தலைமுறைகளாய் நாட்டார் வழக்காறுகளின் சேகரிப்பாளர். தேடித்தேடி நாட்டார் செல்வத்தைக் குவிக்க வேண்டுமென்பதற்காக “ஏழாம் வகுப்பிலேயே இருக்கிறேன்” என்று பதவி உயர்வை மறுத்துவிட்டார். “ஏழாம் வகுப்பு வாத்தியார்” என்ற பட்டத்துடன், ‘பிழைக்கத் தெரியாத மனுசன்’ என்ற சொல்லும் சேர்ந்தது.

எஸ்.எஸ்.போத்தையாவுக்கு, பொன்னீலன் மீது ரொம்பப் பிரியம். கட்சி அபிமானமும் சேர்ந்திருக்க வேண்டும். எட்டயபுரம் பாரதி விழாவில், 03.10.1998 அன்று நடைபெற்ற கருத்தரங்கில், “புதுமைப்பித்தன் வழியில் கி.ராஜநாராயணன்” என்ற தலைப்பில் ஒரு செறிவுடைய கட்டுரையை, எஸ்.எஸ்.போத்தையா வாசித்தார். கருத்தரங்கம் எழுத்தாளர் பொன்னீலன் தலைமையில் நடைபெற்றதாகப் பெருமையுடன் எஸ்.எஸ்.போத்தையா கூறியதை இன்றும் ஞாபகத்திலிருந்து துடைக்க இயலவில்லை.

2

இன்னைக்கு மட்டுமல்ல, அன்னுமன்னும் கிராமப் பள்ளிகள் இந்த லட்சணம் தான்.

இப்போதும் இந்தியப் பொருளாதாரம் ஒரு தாவல் தாவி, கிராமத்தை உச்சிக்குக் கொண்டுபோய் விடவில்லை. கிராமங்களின், விவசாயிகளின் வாழ்க்கைச் சித்திரம் ஒட்டுமொத்தமாய் அழுக்குப் படிந்து கரிஅப்பிய படமாய், மேலும் மேலும் பாதாளத்துக்குள் கிடக்கிறது. இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமேனும் கவலைபடாத ஒரு எழுத்தாளர் கூட்டம் ஊடக வலிமையால் உச்சியில் நின்று பேயாட்டம் ஆடுகிறது. உச்சிக்குப் போனது நடுத்தர வர்க்கமும், உயர் நடுத்தர வர்க்கத்து ஆட்கள்தான், அதுவும் உச்சிக்குப் போனது போல் ஒரு பாவனை. “முசல் பிடிக்கிற நாய், மூஞ்சியப் பாத்தா தெரியாதா?” என்கிற மாதிரி பாவனையைப் பூர்த்தி செய்ய இந்த நடுத்தர வர்க்கம், தன் சம்பாத்தியம் அனைத்தையும் பிள்ளைகள் படிப்பு என்ற பேரில் கொள்ளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் கவலைப்படாத ஒரு புள்ளியில் கிராமப்புற வாழ்வும் கல்வியும் பரிதவிக்கிறது.

விவசாயப் பாலையான ”கரிசலில்” தொடங்குகிறது நாவல்.

“முகத்திலும் கழுத்திலும் பெருக்கெடுத்து ஓடிய வியர்வையை வேட்டியின் கீழ்நுனியால் கண்ணப்பன் அழுத்தித் துடைத்தான். மனித வாழ்க்கையின் எந்த அடையாளமுமே தெரியாமல் கடல்போல் நான்கு திசைகளிலும் பரவிக் கிடந்த அந்தப் பாலைவெளி அவனுக்கு அச்சமூட்டிற்று. இது போன்றதொரு நிலத்தை அவன் இதுவரை பார்த்ததேயில்லை. எங்கும் கரிசல் மண் சில்லி சில்லியாய் வெடித்துக் கீறிப் பொரிந்து கிடந்தது. தூசப் படலத்தைப் போர்த்துக் கொண்டு பேய்க்காற்று ஊளையிட்டு ஆடிற்று.” (பக்.1)

கி.ரா. சொல்வார்;
”கரிசல்வாழ் மக்களுக்கு இயற்கையாலும் சரி, செயற்கையாலும் சரி, தண்ணீர் உத்தரவாதம் கிடையாது. வானத்திலிருந்து விழும் மழைத்துளிகளை நம்பித்தான் இவன் உயிர் வாழ்க்கை அமைந்துவிட்டது - சாதகபட்சியைப் போல.

”பூமியைத் தோண்டியாவது பயிர் செய்வோம் என்று ஆரம்பித்தால் பூமித்தாயும் இவனுக்கு வஞ்சகமே செய்கிறாள். நல்ல தண்ணீரை ஒளித்து வைத்துக்கொண்டு அவள் கொடுக்கும் சவர்த்தண்ணீரும் உப்புத்தண்ணீரும் சில வருசங்களில் நிலத்தின் தன்மையையே கெடுப்பதாக இருக்கிறது. நாளாசரியாய் அந்த நிலமே விளைச்சலுக்கு லாயிக்கில்லாமல் போய்விடுவதால், கரிசல் காட்டில் பிரயாசைப்பட்டுத் தோண்டிய கிணற்றுத் தோட்டங்கள் பாழ்கிணறாய் ஆங்காங்கே இப்பவும் காணக்கூடியதாய் இருக்கிறது.

”முழுக்க முழுக்க வானத்தையே நம்பிய பிழைப்பாகப் போய்விட்டது.வானமும் இவனுக்கு வஞ்சகமே செய்கிறது.ஒன்று பெய்யாமல் கெடுக்கும்; அல்லது பெய்து கெடுத்துவிடும்.

”இந்தக் கரிசலில் பிறந்த சம்சாரி அல்லல்படுவதற்கென்றே பிறந்த மாபாவி. எந்த வகையிலும் இவனுக்கு யாராலும் எந்தவித உதவியும் இதுவரை இல்லை. எந்த அரசுக்கும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் கூட இவன் ஒரு மாற்றாந்தாய்ப் பிள்ளைதான்.”

கி.ராஜநாராயணன் கரிசல் நிலவியலோடு தொத்திக் கொண்டுவரும் வாழ்வியலையும் காட்டுகிறார்...
”ஆயிரத்தி தொளாயிரத்தி ஐம்புதுகளின் கடேசியில் கரிசல் இலக்கிய இயக்கத்தைத் தனியாக ஆரம்பித்த என்னோடு அருமை நண்பர்கள் பூமணியும், செயப்பிரகாசமும், வீர.வேலுசாமியும் வந்து சேர்ந்து கரிசல் இலக்கியத்தை உரப்படுத்துகிறார்கள்.

1965-ல் “கதவு” சிறுகதைத் தொகுதி புத்தகமாக வருகிறது.
1968-ல் “கிடை” குறுநாவல்,
1970-ல் பா.செயப்பிரகாசத்தின் “ஒரு ஜெருசலேம்” கதைத் தொகுதியும், பூமணியின் “வயிறுகள்” கதைத் தொகுதியும் புத்தகங்களாக வருகின்றன.
1976-ல் “கோபல்லபுர கிராமம்” நாவல்.
1976-ல் பொன்னீலனின் “கரிசல்” நாவல்.

- இப்படியாக, படிப்படியா கரிசல் இலக்கியத்தின் வளர்ச்சியும் அதன் வீச்சும் பெருகிக் கொண்டு வருகிறது.” (கரிசல் கதைகள் முன்னுரை - கி.ரா)

பெருமாள்புரத்திலுள்ள ஓராசரியர் பள்ளிக்கு வாத்தியாராய்ப் போட்டிருந்த கண்ணப்பன் வேணாவெயிலில், கரிசல் பாலையில் நடக்கிறான்.

“எட்டு மைல்ன்னுதானே சொன்னாங்க. நாலுமணி நேரமா நடந்து தொலைச்சிருக்கு. ஊரு இருக்குறதாகவே கண்ணுக்குத் தட்டுப்படலியே”

நடந்து நடந்து சலிச்சிக் களைச்சிப் போகையில் நடுக்காட்டில் “திடீரென்று ஆலமரத்துக்கருகில் வெட்ட வெளியில் சருகும் சண்டும் சுழன்றன. சுழன்றாடும் ராட்சசப் பம்பரம் போல் காற்று அடிப்பாகம் முனையாகக் குவிந்து பூமியைக் குடைந்து புழுதியும் குப்பையையும் அள்ளி அள்ளி வீசிற்று. நின்ற இடத்திலேயே நின்று சுழன்று அந்தச் சுழல் தெற்கே நகர்ந்தது.” (பக்.2)

வெட்ட வெளியாய்க் கிடக்கும் கரிசலில் அன்றி, வேற மண்ணில் கூம்புச் சூறாவளி வேர் கொள்ளாது என நான் கருதுகிறேன். கூம்புச் சூறாவளி என்ற வார்த்தை வேறு வட்டார வழக்கில் புழுங்குகிறதா எனத் தெரியவில்லை. இதற்கு வட மாவட்டங்களில் ”மூக்கரக் காத்து” என்று பெயர் போல, உமாதேவி என்ற எழுத்தாளர் தன் சிறுகதையில் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்.

நட நடுக்காட்டில் ஒரு வண்டி மாடு, வண்டியின் கீழுள்ள நிழலில் ஒண்டி, கோவணத்துணி மாதிரியான ’லங்கோடு’ கட்டிய ஒரு பெரியவர். குடிக்கத் தண்ணி கேட்கிறான் கண்ணப்பன். “ஐயா, இது கம்மங்கஞ்சி”. மண் வெட்டும் பெரியவர் ‘லங்கோடில்’ துடைத்த தன் வலக்கையைக் கஞ்சிக் கலயத்தின் வெளிப்புறத்தில் ஒட்டியிருந்த துவையலைத் தொட்டுக் கொண்டு, கலயத்தை வாயில் வைத்து மூச்சை அடக்கிக் குடிப்பத்தைக் கண்ணப்பன் பார்த்துக்கொண்டே நிற்கிறான். கலயத்தில் ஒட்டிவைத்த துவையல் பிசின் போல் ஒட்டிக் கொள்வது மட்டுமில்லை, காயக்காய ’பொருக்குத்தட்டி’ துவையல் சுவை கூடும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

கஞ்சிக் கலயத்தை வாயில் வைத்துக் கம்மங்கஞ்சி குடிப்பது வண்டிக்காரப் பெரியவர் அல்ல; அது நாங்கள் தான். வெட்ட வெயிலில் வண்டியின் கீழ் ஒண்டியது பெரியவரோ, வீரையாவோ, வீரசின்னுவோ அல்ல; நாங்களும்தாம்.

கம்மங்கஞ்சி, சோளக்கஞ்சி, கேழ்வரகுக்கூழ் என்று சிறுதானிய உணவுச் சாப்பாடு ஏழை இனத்துக்கு; அரிசிச்சோறு வசதி படைத்த வீடுகளுக்கு; ஏழை, பாழை, இல்லாதது, பொல்லாததுகள் வாழும் கிராமத்தில் தீபாவளி, கார்த்திகை, ஏகாதசி, பொங்கல் போல விசேட நாள்களில் மட்டும் கண்ணில் காண்பது நெல்சோறு..

”உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது; பிரம்மாண்டமான நீலக் கூடாரத்தினுள் அடைபட்ட வட்டமான மைதானம் போல உலகம் தோன்றிற்று. வான எல்லை வரை வெறுமை. அந்த எல்லையில் கானல் நீர் கடல்போல் அலை வீசிற்று. அடிவானமெங்கும் திட்டுத் திட்டாக மேகங்கள் நெருங்கியிருந்தன.” (பக்.7)

ஒரு சிறு துளியில் கரிசலின் முழு உலகமும் தென்படுகிறது.
இந்த அடிவானம் கரிசல் பூமியின் வானம்; இந்த மேகங்கள் கரிசல் காட்டு மேகம். இந்த மாடுகள் கரிசலின் ஏருழவு மாடுகள்; குவியல் குவியலாய் வெட்டிய மஞ்சனத்திச் செடிகள் இந்த மண்ணினுடையது. இது பெருமாள்புரம் அல்லவே, “கொளுத்தும் வெயிலில் ஏடு ஏடாகத் திரைந்து துடிக்கும் கோடைக்காற்றில் மரம், மாடு, மனிதன் எல்லாமே உருகின வடிவன போலத் தோன்றுவது” எங்கள் ஊர் தானே !

3

“இது என்ன ஆறு?”

“உப்பு ஓடை”

இரு கரைகளிலும் ஆவாரஞ்செடிகள் மஞ்சள் மஞ்சளாகப் பூத்துக் குலுங்குகின்றன. எம்நிலத்தில் வெறும் காட்டாறுகளும் உப்போடைகளும் உண்டு. மழை கொட்டியவுடன் பொங்கிச் சீறிக் கரைபுரண்டு ஓடி, சிறிது நேரத்தில் அடங்கி ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.

எங்கள் ஊரின் 2 கி.மீ தொலைவில் சுப்புலாபுரம். அது கடந்து வடக்கே சென்றால் ஒரு காட்டாறு - பேர் உப்பாறு. இந்த உப்போடையைக் குறுக்கில் கடந்து, சொந்தக்காரர்கள் வசிக்கும் துரைச்சாமிபுரம் போவோம். ஓடைக்கரையை நாங்கள் “காலாங்கரை” என்றோம்: மரம், செடி, கொடிகள், தாவரத்தின் கூட்டத்தை “கும்மல்” என்றோம். இவைகள் மீது, இந்த மக்கள் மேலும் எங்களுக்கு ஒரு பிரியம் இருக்கும் அல்லவா – அதை “வாந்தக்கம்” என்றோம். வட்டாரச்சொற்கள் காட்டும் நிலவியல், இதன் வாழ்வியல் எங்களுடையது.

மகசூல் காலத்தில் புஞ்சை ஓரங்களில், பாதைகளில் செழித்துநிற்கும் குத்துச் செடிகள், படர் செடிகள் மீது முதற்சூரியக் கதிரும், முன்னிரவு நிலவும் பட்டு இலைகள் மினுமினுத்தன; இந்தக் கரிசல் அழகு எங்களுடையது.ஆனால் கண்ணப்பன் வாத்தியார் வேலையில் போய்ச் சேரப்போனது நல்ல வெட்டரிவாள் வீசும் கானல் காலம்.

கண்ணப்பன் காலடி எடுத்துவைக்கும் பள்ளி அச்சு அசலாய் நாங்கள் குட்டைப்புழுதி கிளப்பின பள்ளிதான். அது கூரை வேய்ந்த ஒரு சத்திரம். தப்பைக் கதவு. அதுவும் பையன்களால் இடுப்பொடிந்து தூள் தூளாகும் பொழுதில் பருத்திமார்ப்படல் நிற்கிறது. ஆடு மாடு உசுப்பிராணிகள் உள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக அந்த பருத்திப் படல். உள்ளே போனால் வலது, இடது பக்கம் வகுப்புக்கள் இருக்கும். அறைகள் இருக்காது. தாண்டிப்போனால் மூணாம், நாளாம், அஞ்சாம் வகுப்பு.

“எண்ணையும் சீப்பும் காணாமல் சிக்குப் பிடித்த செம்பட்டைத் தலைகள், ஊள மூக்கு வடிந்து அலங்கோலமான முகங்கள், அழுக்குப் பிடித்த மெலிந்த உடல்கள், உடம்பை உறிஞ்சிப் பருத்துத் துருத்திக் கொண்டிருந்த வயிறுகள் – பெரும்பாலான பிள்ளைகள் வறுமையின் நேரடி வாரீசாகத் தோன்றினார்கள். ஒன்றுக்குப் பாதி பிள்ளைகள் முழு நிர்வாணமாகவே இருந்தார்கள். மேற்சட்டை ஆணுக்கும் இல்லை. பெண்ணுக்கும் இல்லை. உடுத்திருந்த துணிகளும் அழுக்குக் கந்தல். தீயில் போட்டாலும் எரியாது. பெரிய குழந்தைகள், ஆளுக்கு ஒரு கைக்குழந்தையைக் கொண்டு வந்திருந்தன. தேவாங்குக் குட்டிகளைப் போல வாடியிருந்த அவை, மற்ற குழந்தைகளைத் தொந்தரவு செய்து ஓயாமல் அழுதன” (பக்.28)
மொத்தம் 30 பேர். ஒவ்வொரு வகுப்புக்கும் அஞ்சாறு பிளைகள்.

“மருதா?”

“அவன் வரலைய்யா”

“ஏன்யா வரல்ல?”

“ஆடு மேய்க்கப் போய்ட்டான்யா”

“ராமசாமி?”

“அவன் இனிமே வரமாட்டன்யா.அவனுக்குக் கல்யாணம் ஆயிரிச்சி.”

கிராமிய வாழ்வின் அவலம் கிராமப்பள்ளிகளைச் சாடுகிறது. விதைப்பு, களையெடுப்பு, கதிரறுப்புக்கு ஓடவேண்டியிருந்தால் பெரிய குழந்தைகளை ”பிள்ளை எடுக்கப் போட்டுவிடுவது” அந்த வட்டார வழக்கம். அந்த மக்களுக்கு அது சர்வ சாதாரணம். ’பெரிய குழந்தைகள், ஆளுக்கு ஒரு கைக்குழந்தையை பள்ளிக்குக் கொண்டு வந்திருந்தன’ என்கிறார் பொன்னீலன்.

மண்ணாசைக்குத் தோதாய் ‘பெண்ணாசை’ சேர்த்துக்கொள்கிற பெருமாள்புரம் முதலாளி சர்க்கரைச் சாமி. முதலாளி என்ற வார்த்தை வெள்ளைக்காரன் வந்திறங்கிய பிற்பாடு வந்தது. நிலச் சுவான்தார், பண்ணை, நாட்டாண்மை என்று இவர்கள் சொல்லப்பட்டார்கள்.ஊரில் இந்த முதலாளிகள் செய்யாத அத்துமீறல்கள் இல்லை. சொத்துபத்துக்காகச் சொந்த அக்கா மகள்கள் இரண்டு பேரையும் கட்டிக்கொள்கின்றார் சர்க்கரைச்சாமி. இரண்டு பேரும் சீக்கிரமே போய்ச் சேர்ந்துவிடுகிறார்கள். எட்டோ, பத்தோ படித்த மூன்றாவது தங்கச்சி பொன்னி. முதல் தாரத்துப் பிள்ளயான 12 வயது ராமசாமிக்கு சித்தி முறை ஆகிற பெண் பொன்னியைக் கட்டி வைக்கிறார். மகனுக்குக் கட்டி வைத்ததன் மூலம் சொத்துக்குச் சொத்தும் ஆச்சு, பொண்ட்டாட்டிக்குப் பொண்டாட்டியும் ஆச்சு. அப்பனின் தினவு அரங்கேத்தம் ஆகாதபடிக்குப் பெண்டாட்டியின் பின்னாலேயே நிழல் போல் அலைகிறது ராமசாமி என்ற அப்பனைப் பற்றி முழுதாகத் தெரிந்த 12 வயது.

சொல்லப்பட்ட நிலமும், நிலத்தன்மைக்கு ஏற்ற வாழ்க்கையும், ஒழுங்குமுறையாகக் குறித்து வைத்துக்கொண்டு வந்திருப்பார் போல இந்த வாத்தியார்.

“இருள் தெரியத் தொடங்கிற்று. பால் குடித்த ஆட்டுக்குட்டிகள் துள்ளி விளையாடத் தொடங்கின. செங்கண்ணன் பெண்டாட்டி வடிவு தன் வீட்டுக்கரையில் ஏறிய இரண்டு கோழிகளைக் கலைத்துத் துரத்தினாள். பக்கத்து வீட்டு அப்பணசாமியின் தாய் அவளை வைதாள். அப்பணசாமி தாயை அதட்டி வீட்டுக்குள் இழுத்தான்.” (பக்.54)

அன்றாடக் காட்சிகளை, மன அசைவுகளை அவரது பேனா இழுத்துக்கொண்டு மேலே வருகிறது. ஆனால் அந்தப் பூமியிலே பிறந்து, புழுதியிலே புரண்டு வளர்ந்த நாங்கள் பாதாளக் கரண்டி போட்டும் துழாவினாலும் எடுக்க முடியாமல், தொலைத்து நிற்கிறோம். சொந்த மண்ணிலிருந்தும், சொந்தமான நினைப்புகளிலிருந்தும், அந்நியப்பட்டு, நகரமய மனவோலம் மிக்கவர்களாய் மாறிப் போனோம்.

ஜெயந்தன் எங்கள் சமகாலத்தின் யதார்த்த எழுத்தாளர். அவருடைய “கவிதைகள், பாடல்கள், காட்டுப்பூக்கள்.”
” ஒரு திருநாள் மாலையில்
வட்டமாய் நின்று சுற்றிவந்து
“அடி சொர்ணக்கிளி சொன்ன சொல்லைச்
சொல்லியடி - சொல்லியடி”
என நீங்கள் கும்மி போட்டபோது
நானும் கைகோத்து
“அடிக் கறுத்த மச்சான் சன்னப் பொட்டுச்
சொன்ன சொல்ல சொல்லியடி”
சொல்லியாடி,
மானுடப் பிளவைப் பார்த்து
நகைக்க குமுறியதுண்டு
என்ன செய்ய நாந்தான்
நாகரீகமாகிப் போனேனே ” (அந்நியன் - கவிதை)
எதிலிருந்தெல்லாம் எங்கிருந்தெல்லாம் அந்நியப்படக் கூடாதோ அதிலிருந்தெல்லாம் தொலைந்துபோயிருந்தோம்; கிராமிய வாழ்வும் கிராமியக் குணமும் கேலிக்குரியதாகின. முதலாளிய கலாச்சாரம் முழுதாய் எம்மைச் சுருட்டிக் கொண்டு, கெக்கலி செய்ய, இத்தனையாண்டுகளின் பின், புஞ்சை வட்டார நினைவின் குளங்களில் முங்குநீச்சல் போட இறங்கினால் தண்ணியே இல்லை.

அதிசயிப்பாய் தெரிகிறது. இப்படியெல்லாம் மறந்து போகாமலிருப்பதற்கு குறித்துக் குறித்து வைத்து, லாவகமாய் எடுத்து எடுத்துத் தருகிறார் அந்நியமாகிப் போகாத பொன்னீலன் – சேமிப்புப் பக்குவம் கொண்டவர்!

ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் ஆகமான சாலைகள், போக்கு வரத்துகள் இல்லாமல் கிடந்தன அக்காலத்தின் பெருமாள்புரம், கத்தாளம்பட்டி , இடைச்சூரணி, துரைச்சாமிபுரம் போல் கிராமங்கள்; விளாத்திகுளம், கரிசல்குளம், நாகலாபுரம், புதூர் எனச் சாலையின் மேலுள்ள சிறு, குறு பேரூராட்சிகள். இந்தக் “கானாங்காத்தான்” காடெங்கும் ’கரிசல்’ நாவல் நடக்கிறது.

கரிசல்குளத்திலிருந்து இடைச்சூரணி, சுப்புலாபுரம், புதுக்கிராமம், அடுத்து எங்கள் ஊர். பேருந்து கிடையாது. இப்போதும் குறுக்கே ஒரே நெட்டாய் சாலை இல்லை. குறுக்கில் நடந்தால் 10 கி.மீ. கரிசல் குளத்தில் இறங்கி நடந்தே போவோம். சேவு, மிக்சர், சீனிச்சேவு, கருப்பட்டிச்சேவு, சீனி மிட்டாய், சக்கரை மிட்டாய்க்குப் பேர்பெற்றது கரிசல்குளம். பாட்டி ஊருக்கு வந்து இழவு கேட்டுத் திரும்பின சின்னம்மா, சின்னய்யா (ஒரு கைக்குழந்தையும்) இவர்களுடன் கரிசல் குளத்தில் இறங்கி நடந்தால் ஒரு சேவுப் பொட்டலம் கிடைக்கும். சேவுப் பொட்டலம் வாங்கக் கூடத் திராணியில்லாமல், வேணா வெயிலில் அத்துவானக் காட்டில் பயணித்த சிறுவனின் அழுகையில் எனது ‘சரஸ்வதி மரணம்’ கதை உதித்தது.

பரிதாபங்களின் பூமி அந்த நிலவரைவியல். நூறு ஏக்கர், இருநூறு ஏக்கர் முதலாளிகள். காரைவீடு, மெத்தை வீடு அவர்களுக்கு மட்டுமே; அவர்களே பஞ்சாயத்துத் தலைவர்கள். 1950-60களில் இப்படிப்பட்ட ஈவிரக்கமில்லா நிலப்பிரபுக்களை எதிர்த்து, வட்டாரத்தில் கூலி உயர்வுப் போராட்டம் நடந்தது. பொதுவுடமைக் கட்சி விவசாய சங்கங்களைக் கட்டி போராட்டத்தை உச்சத்துக்குக் கொண்டுபோனது. இந்தக் கானல் பிரதேசத்தின் போராட்டக் காலத்தில்தான் பொன்னீலன் பணி நிமித்தம் போய்ச் சேருகிறார்.

விவசாய சங்கத்தில் தீவிரமாய்ச் செயல்படும் மாந்தர்களாய் ரங்கண்ணன், வீரையன், கொண்டப்பன், வீரசின்னு, அப்பணசாமி, சந்தனப்பாண்டி போன்றோர், ஆசிரியர் கண்ணப்பனுடன் இணைகிறார்கள்; அல்லது கண்ணப்பன் அவர்களோடு இணைந்து மண்ணின் போராட்டங்களில் கலக்கிறான்.

உள்ளூர் அரசியலில் ஈடுபட்டால் கரிசல் மண்ணில் கால் வைத்தது மாதிரி கொப்புளம் கண்டுவிடும். வட்டார அரசியலுக்குத் தொடக்கப்புள்ளியாகி விடுகிறான் ஆசிரியர் கண்ணப்பன். வாத்தியார் தொழிலை ஒரு ஆதாரத்துக்கு வைத்துக் கொண்டு, மற்ற மற்ற தொழில் விருத்திகளில் ஈடுபட்ட அக்கால ஆசிரியர் இனத்தில் சேராத ஒரு வித்தியாசமான ஆளாக கண்ணப்பன் தென்படுகிறான். அதிலும் விவசாய சங்கத்துக்குப் பரப்புரை செய்கிறான்.

மானாவாரி விவசாய பூமியில் பிழைப்புக்கு வழியத்துப் போகிற கோடையில் ஆடுமாடு திருடிக்கொண்டு போவது, ஊரே சேர்ந்து போய் தீவட்டிக் கொள்ளை அடிப்பது - இப்படியெல்லாம் புத்தி தலைவிரி கோலமாய் ஓடும்.

கடத்திக் கொண்டு வந்த ஆடுகளைத் தேடிப்போகிறபோது, “அந்தா கிடக்கு ஒங்க ஆடுக. பத்திட்டுப் போங்க.” என்று படப்புப் பக்கம் கை காட்டுவார்கள். நாலு ஆடுதான் இருக்கும்.மீதி ஒரு ஆடு வெட்டித்துண்டம் போட்டு இரண்டு மொடாக்களில் ஊருக்கெல்லாம் வெந்துகொண்டிருக்கும். “இங்ஙன செத்த உக்காருங்கய்யா. கறி வெந்துக்கிட்டிருக்கு. ரெண்டு அகப்பை சாப்பிட்டுப் போங்க.” என்பார்கள். ஊர்ப்பெயர் ’கள்ளக்கறி’. ‘கரிசல் நாவலில்’ வரும் அருவாப்பட்டிபோல, எனது தெக்கத்தி ஆத்மாக்களில் வருகிறது கள்ளக்கறி ஊர்.

முதலாளி சக்கரைச் சாமியோட உழவு காளை இரண்டு, காட்டிலிருந்த மானைக்குக் காணாமல் போகின்றன. முதலாளி வீட்டில் பதிவு வேலையாட்களாக இருக்கும், வீரையன், மூக்காயி கண்முன்னாலேயே களவாடப்பட்டன. இவ்வளவு துணிச்சலான களவாணிப் பயல்கள் அருவாப்பட்டிக்காரர்கள்தாம். “நாங்கதான் மாட்டைக் கொண்டுபோறோம். வேற எங்ஙயும் அலைய வேண்டாம். நானூறு ரூபாயோட வாங்கண்ணு, துணிச்சலா கடுதாசி எழுதி, கருவ மரத்தில் தொங்கவிட்டுப் போயிருக்காணுக.” (ப.90)

இந்த லெக்கில் பொன்னீலன் என்ற எழுத்துக்காரர் – “வகுத்துப் புள்ளையத் தாய்க்கித் தெரியாமத் திருடிக்கிட்டுப் போகிற களவாணிக ஐயா” என்ற ஒப்புமையை கனகச்சிதமாய்க் கோர்க்கிறார்.

நில வரைவியல் எனப்படுவது, நிலத்தின் நீள, அகல எல்லைகள் மட்டுமேயல்ல; மரம், செடி, கொடி, தாவர வகைச் சித்தரிப்பு அல்ல; குளம், ஓடை, கால்வாய், காட்டாறு, ஏரி, நீர்நிலை விவரிப்பு அல்ல. சுற்றுச் சூழல், மழைப்பொழிவு, வெயிலடிப்பு, பருவ நிலை அல்ல. நில மாந்தர்களின் குணவாகு, அவர்களது மனவோட்டம், கண்ணோட்டம், செயற்பாடு எனத் தொடருதலாகும்.

மலையாளத் தமிழ் வழங்கும் தூரந்தொலைவான பிரதேசத்திலிருந்து மாறி வந்தபோதும், இந்தக் கானாங்காத்தான் நிலத்துக்குரிய வட்டார வார்த்தைகளை தன்எழுத்துக்கு உரித்தாக்கிக் கொள்கிறார். படைப்புத் தொழில் என்பது இம்மாதிரி பிரதான வித்தைகளின் கூட்டுத்தான். வார்த்தைகள் மட்டுமேயல்ல, மக்களிடமிருந்து வாழ்வியலையும் உள்வாங்கிக் கொண்ட பேருருவாக நிமிந்து நிற்கிறார். ’எண்பது’ என்ற முதுமை, தள்ளாமை எழுத்தில் இல்லை; 1973-ல் மதுரையில் நான் கண்ட பொன்னீலனைப் போல், இன்றும் எழுத்து வாட்டசாட்டமாய்த் தான் வருகிறது.

- செயப்பிரகாசம், நவம்பர் 2019

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ