எதிர்ப்பின் புள்ளிகள்

1

08-07-2015 ஒரு புத்தகம் மூடிக்கொண்டது; இனி யாரும் திறக்கமுடியாதவாறு தன்னை மூடிக்கொண்டுவிட்டது. வாழ்நாள் பரியந்தம் வரை தன்னைத் தானே வாசித்துகொண்டிருந்தது. தன்னை வாசித்தல் என்பது தன் வாழ்வையும் சூழ்ந்துள்ள பிறரையும் வாசித்தல்தான். வாசித்து உணர்ந்ததும் அனுபவப்பட்டதுமான வாழ்க்கையை எடுத்து வழங்கிற்று.

கடற்கரை மரணமாகிவிட்டார். 1950 வாக்கில் குறவன் - குறத்தியாட்டம் என்ற கூத்துக் கலை தென்பிரதேசத்தில் முன்னுக்கு வந்தது. அறுபதுகளில் தொடங்கி ஒரு முப்பது, நாற்பது ஆண்டுகள் தென்தமிழகத்தை கக்கத்தில் இடுக்கிக் கொண்டிருந்தது. இசைத்தட்டு நடனம், வீடியொ, சின்னத்திரை, பெரியதிரை போன்ற சுனாமிகள் நாட்டுப் புறக் கலைகள் மீது சொடுக்காத காலம்வரை குறவன் - குறத்தியாட்டம் ’ஜம்’ மென்று உட்கார்ந்திருந்தது.

அவருடையது அனுபவப் பூர்வமான கலை; அவர்கள் ஆடிய ஆட்டத்துக்கு எழுத்து, படிப்பு தேவையில்லாதிருந்தது; அவர்களின் மொழிக்கு எழுத்து இல்லை; வாசிப்பு இல்லை. எழுதிவைத்துக் கொள்வது, எழுதிவைத்ததை மனனம் செய்வது என்ற ’கத்துக்குட்டித் தனம்’ கிடையாது. அன்றாடம் நிகழ்த்துதல் அவர்களின் மொழி. விசையுறு உடலினுள்ளே வில்லேற்றி வைத்திருப்பது போல், அந்தந்த இடத்தில் அவ்வச் சூழலில் சொல்லேற்றிப் பேசுவது, பாடுவது, ஆடுவது அவர்களுக்கு மொழி.

ஏற்கனவே தன்னைச் சூழ நடந்தன, நடகின்றன, நடக்கப் போவன எல்லாவற்றையும் உள்வாங்கிச் செரித்து சுயசிந்திப்பு என்னும் அகப்பையினால் பந்திக்கு வாரி வாரி வார்ப்பார் கடற்கரை. பேச்சு, பாட்டு, ஆட்டம் - என்கிற கலைத்தொழில் கருவிகளைக் கையில்கொண்டு ஆட்டக்காரர்கள் ஒருத்தருக்கொருத்தர் பேசுவார்கள்; பாடுவார்கள்; ஆடுவார்கள். நீ ஒன்னு சொல்லு, நா ஒன்னு சொல்லு என்று மாற்றி மாற்றி நிகழ்த்திக் கொண்டார்கள். எக்கண்டம், எகத்தாளம், எகடாசி எல்லாமும் கலந்த கலவையாயிருக்கும்.

”ஒரே காமெடி. எங்க ஆட்டத்துக்குப் போட்டியாயிருந்துச்சி” என்றார் கடற்கரை. தேநிர்க்கடை நடத்துகிற இலையராஜாவுடன் ஜோடி சேர்ந்து ஊடைக்கு ஊடை அப்படிப் போய் வேற நிகழ்ச்சிகள் பாத்துக்கீறது உண்டு. பிரபலமான பேச்சாளர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் பக்கத்து நகரில் நடந்தது.

”கடற்கரை கூத்தையாவது ஒரு கணக்கில சேக்கலாம். இது அதைவிடக் கேவலமா இருந்தது. கடற்கரை பேச்சு இருபொருளா இருக்கும். பாக்குறவங்க அதைப் புரிஞ்சிக்கிட்டு சிரிப்பாங்க. அவங்க அவங்க அர்த்தப்படுத்திகிருவாங்க. ஆனா பட்டிமன்றப் பேச்சில ஒரு அர்த்தமும் இல்லே. படிக்கிறதும் இல்லே. படிச்சிட்டு வந்து பேசுறதுமில்லே. ஜீவானந்தம், குன்றக்குடி அடிகளார்ன்னு ஒரு தலைமுறையில கண்ட பட்டிமன்றத்தையா இன்னைக்குப் பாக்குறோம்? பாக்க முடியுமா? பட்டிமன்றத்தைச் சீரழிச்சுது யாருன்னா“ என்று தேநீர்க்கடை இளையராஜா சில பெயர்களைச் சொன்னார்.

”எங்களப் பாத்து கூத்தடிக்காங்கன்னு சொல்லுவாங்க முன்காலத்தில, இது அதை விடப் பெரிய கூத்தால்ல இருக்கு. இது நல்லா எடுபடுதேன்னுட்டு இப்ப நெறையப்பேரு இந்தத் தொழில்லே எறங்கிட்டாங்க. ஒரே காமெடி” என்றார் கடற்கரை.

புளியங்குளம் என்ற ஊருக்கு ஆட்டம் நடத்தப் போயிருந்தார் கடற்கரை.அந்த வட்டாரத்தில் பள்ளர்கள் அதிகமாம்; அவர் அதற்குக் கீழான பறையராம். புளியங்குளத்தில் இவர்களுக்கும் கீழ் தெலுங்கு பேசும் சக்கிலியர் இருக்கிறார்கள். இந்த மூன்று சனத்துக்கும் மேலே இடைநிலை சாதி, உயர் சாதி இருக்கின்றது. அவர்கள் அதிகாரமுள்ள கூட்டம் என்கிறார் கடற்கரை.

முதல்நாள் ராத்திரி குறவன் - குறத்தியாட்டம். கடற்கரை சுருட்டி எடுத்துவிட்டார். வாத்தியாருக்கு ஈடுகொடுத்து ஆட்டக்காரர்களும் பின்னி எடுத்துவிட்டார்கள்.

அடுத்த நாள் காலை கடற்கரையும் குழுவினரும் தேநீர் சாப்பிடப் போனார்கள். கடைக்கு உரிமையாளர் தன்னை மேல்சாதியாகக் கருதிக் கொள்கிற இடைநிலை சாதிக்காரர். முந்திய நாள் கடற்கரை போட்ட ஆட்டத்தையெல்லாம் சிரிக்கச் சிரிக்கப் பார்த்து ரசித்தார்கள். அந்தக் கூட்டம்தான் ஆட்டக்காரர்களைச் சுற்றி குமிந்திருந்தது. கடை நடத்துகிறவர் “வா கடற்கரை, டீ குடி” என்றார்.

“அதுக்குத் தானே வந்திருக்கோம்” என்றார் கடற்கரை. தேநீரை சிரட்டையில் ( கொட்டங்கச்சி) ஊற்றிக் கொடுத்தார் கடைக்காரர்.

“ஏன் சிரட்டையில கொடுத்தாங்க. மத்தவங்களுக்கு மாதிரி டம்ளர்ல குடுங்கன்னு கேக்க வேண்டியது தானே” நான் கேட்டேன்.

“அவங்க சாப்பிடுற டம்ளரில நாங்க சாப்பிட மாட்டோமில்ல “ என்றார் கடற்கரை. ’அடிரா சக்கை’ என்று ஆளைத் தோள்மேல் தூக்கிக் கொண்டாட வேண்டும் போல் இருந்தது. ‘அவர்கள் உபயோகப்படுத்துகிற பொருள் எங்களுக்கு ஆகாதது; அதை நாங்க தொட மாட்டோம்” என்ற அர்த்தம் அவர் பேச்சில் ஒண்டித்துக்கிடந்தது.

“எங்களைப் புறக்கணிப்பதாக நினைக்கிறார்கள் ; இல்லை ,நாங்கள் அவர்களைப் புறக்கணிக்கிறோம்.”

“நீ என்ன எங்களைத் தீண்டத் தகாதவன் என்று நினைப்பது?நாங்களல்லவா உன்னைத் தீண்டத்தகாதவன் என்று நினைக்கிறோம்.”

“உன்னை வைத்துத் தான் நாங்கள் என்று நினைக்கிறாய்; எங்களை வைத்துத் தான் நீ” –

இப்படி உள் அர்த்தங்களை நெடுக தொடுத்துக் கொண்டே போகலாம். மனசளவில் அவர்கள் வில்லேற்றிவிட்டார்கள். செயலளவில் வில்லெடுக்க நிறையநாள் ஆகப் போவதில்லை.

2

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ‘வைப்பாற்றின்’ கரையோரக் கிராமம் சித்தவ நாயக்கன்பட்டி. வைப்பாறில் மணல்குவாரி அமைக்கத் திட்டமிடுவதை அறிந்து சித்தவ நாயக்கன்பட்டி மக்கள் திரண்டு வட்டாட்சியா் அலுவலகம் முன் முற்றுகை நடத்தினார்கள் (28-12-2016). மேலிருப்பவரின் கட்டளையை வட்டாட்சியர் செயல்படுத்துகிறார். கொடுக்க வேண்டியதைக் கொடுத்துப் பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்ட முக்கியப் புள்ளிகளில் அவரும் இருக்கக் கூடும். பாவம் அவர் என்ன செய்வார்!

வைப்பாற்றுப் படுகையில் மணல் குவாரி அமைந்தால் கரையோர 64 கிராமங்களின் குடிநீா் ஆதாரமும் விவசாயமும் இல்லாமல் போகும்: சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும்; செயலாற்றும் பொறுப்பில் உள்ளோருக்கு காதுகள் வேண்டும். கேட்கிற காதகளாக இருக்க வேண்டும். வட்டாட்சியருக்கும் அவரது அலுவலகத்துக்கும் கேட்கிற காதுகள் இல்லை எனத் தெரிந்து கொண்ட சித்தவநாயக்கன் பட்டிக்காரர்கள் இரண்டாம் கட்டமாய் மாவட்ட ஆட்சியரிடம் தூத்துக்குடிக்குப் படையெடுத்தார்கள். தனியாய் இல்லை அவா்கள். வைப்பாற்று வடிநிலை கரையோர கிராமங்களின் மக்களை ஒன்றுதிரளுதலில் இணைத்தார்கள். வைப்பாற்று வடிநிலை கரையோர கிராம மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்ணா போராட்டம் நடந்தது (30-12-2015).

200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியா் அலுவலகம் முன்பு தரையில் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனா். ஊராட்சி மன்றத் தலைவர்களும் தர்ணாவில் இருந்ததால், இதில் ஏதோ இருக்கிறது என்ற முடிவுக்கு மாவட்ட ஆட்சியர் வருகிறார். ஆட்சியா் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்த போதும் அவர் நேரில் எழுந்தருளவில்லை. மாவட்ட ஆட்சியர்கள் எவராகவும் இருக்கட்டும்; மக்கள் தானே என்ற அலட்சிய உள்முடிச்சு அவர்களிடம் விழுந்து கிடக்கிறது.

கனிம வளத்துறை உதவி இயக்குநா், ஆட்சியரின் நேர்முக உதவியாளா் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினா். மணல் குவாரி அமைப்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா். குவாரி அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் முடிந்து கல்நட்டு கொடியும் கட்டப்பட்டுள்ளது என்று கிராம மக்கள் புகைப்பட ஆதாரங்களைக் காட்டினா். நட்டிய கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். ஒரு மணிநேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

உண்மையில் நடந்தது என்ன? மணல் கொள்ளைக்குத் தோதாக புதிய மணல் குவாரி அமைக்க மேலிடத்தில் திட்டம் போட்டாகிவிட்டது. மாவட்ட ஆட்சியருக்கும் வட்டாட்சியருக்கும் தாக்கல் தரப்பட்டு குவாரி எல்லைகள் குறித்து வரைபடமும் தயாராகி விட்டிருக்கிறது. எல்லைகள் அளக்கத் தொடங்கிவிட்டார்கள்.

மணல்குவாரிக்கு அனுமதி தரவேண்டியது மேலிட அலுவலகத்தில் அமா்ந்துள்ள தலைமை அலுவலா்களோ, அவா்களுக்கும் மேல் அதிகாரமுள்ளவராகக் காட்டிக் கொள்ளும் அமைச்சர்களோ அல்ல. ஆணை தர வேண்டியவா்கள் ஆற்றோர கிராம விவசாயிகள். அவா்களிடம் ஒப்புதல் பெறப்படவில்லை.

தென்மாவட்ட வைப்பாறு முதல் வடகோடி பாலாறுவரை மக்களின் ஆணைகள் பெறப்படுவதில்லை. கேட்டால் ஒருபதில் தயாரிப்பில் எப்போதும் இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் மக்களிடம் அனுமதி பெற்று விட்டோம் என்ற பதில். ”ரொம்ப அதிகாரமாப் பேசுறான்” என்பார்கள் வட்டார மக்கள்.

பாலாறும், தேனாறும் ஓட வேண்டாம்; தாகத்துக்கு நீா் வாருங்கள் என்று சித்தவ நாயக்கன்பட்டி கேட்டது; வேளாண்மைக்கு - விதைக்கச் செய்ய - குளிக்கத் துவைக்க - வாழ்க்கைக்கு நீர் வெண்டும்; மரியாதையுடன் கேட்டது, சனநாய எல்லைக் கோட்டுக்குள் அமா்ந்து கேட்கிறார்கள்; கேட்டால் தரவில்லை; தட்டினால் திறக்கவில்லை.
“கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்”
என்கிறார் இயேசு. சனநாயகத்தை நேசிக்கும் சிந்திப்பிலிருந்து எழும் இவ்வசனம் - இயேசு வழங்கிடும் புத்தாண்டுச் செய்தி. புதுவருடப் பிறப்புக் காலத்தில்தான் சித்தவநாயக்கன்பட்டிக்குச் சோதனை.

எதையும் எடுத்துச் சொல்ல வேண்டும்; எடுத்துச் சொல்லத்தான் நாக்கு. (பிறந்த குழந்தை கூட அழுகைப் புரட்சி செய்துதான் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறது – என்ற போராளி நேதாஜியின் வாசகத்தை இங்கு கவனம் கொள்ளுதல் நல்லது.)

சொல்வதைக் கேட்க காதுகள் வேண்டும். எதையும் கேட்கத் தான் காது. யாருக்க காதுகள் இருக்கிறதோ, அவன் கேட்கக் கடமைப்பட்டவனாகிறான். எடுத்துச் சொல்வதற்கும், கேட்டுக்கொள்வதற்குமென இயற்கை நாக்கையும் காதுகளையும் வழங்கியுள்ளது. எடுத்துச் சொல்லுகிற நாக்கும், கேட்டுக் கொள்ளும் காதுகளும் சனநாயகத்திற்கு உயிர்த் தூண்கள்.

பாதிப்புக்குள்ளான மக்கள் எடுத்துச் சொன்னார்கள்; எது சரியோ அந்தச் சரியானதை மக்களுக்குச் செய்ய வேண்டிய பொறுப்பிலுள்ளோர் முதலில் கேட்க வேண்டும். அதிலும் மேலிடத்துப் பொறுப்பிலுள்ளோர் சின்னஞ்சிறு முணுமுணுப்பானாலும் ,சிறுசிறு அசைவின் ஒலி என்றாலும் தானே உணர்ந்து உள்ளிறக்கும் காதுகள் கொண்டிருக்கவேண்டும். காதுகள் கொடுக்கப்பட்டிருந்த போதும் அதிகாரவர்க்கத்தினர் கேளாச் செவியினராகினர்.

வாழ்வைக் காக்க மக்கள் என்ன செய்வது? ’சனநாயகத்தின் எல்லைகளை மீறி வாருங்கள்’ என்று சொல்லாமல் சொல்லி, தூண்டாமல் தூண்டி விடுகிறார்களா?

மக்கள் தத்தம் வாழ்வைக் காத்துக் கொள்ளும் போருக்கு ஒரு திறவுகோல் தருகிறார் இயேசு.
“கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்”
இவ்வாறு ஒவ்வொரு முறை உச்சரிக்கிற போதும், உயிரோடு புதைக்கப்படும் சனநாயகத்தைக் காக்க “புரட்சி செய்யுங்கள், புரட்சி செய்யுங்கள்” என சித்தவநாயக்கன் பட்டிக்காரர்களை அழைப்பது போல் தெரிகிறது. சித்தவநாயக்கன் பட்டிக்கு மட்டுமேயல்ல, சிதைந்த கூட்டுக்குள் அரைபட்டுத் துடிக்கும் அனைத்து மக்களுக்குமான அழைப்பாக இதைக் காண முடிகிறது.

வட்டாட்சியர் மறுதலித்த வாழ்வியல் உரிமையை, சனநாயகத்தை, அவரிடம் பெறமுடியாததை மாவட்ட ஆட்சியரிடம் போய்ப் போராடிப் பெற்றனர். ஒரு சக்தியாய்த் திரண்டு நிற்றலில் கிட்டியது.முறையீட்டின் முன்றிலில் நின்றால் கிடைக்காத நீதி, திமு திமுவெனப் படியேறி அதிகார மையத்தின் நடுவீட்டுக்குள் போனால் தன்னாலே வந்து விழுகிறது. 200 பேரைத் திரட்டி, அறுபது கி.மீ அப்பாலுள்ள தூத்துக்குடி வரை போய் போராட எவ்வளவு தொகை செலவாகியிருக்கும்? ஒவ்வொருவரின் நாளாந்த வேளையும் வருமானமும் இல்லாமலாமல்போய், உழைப்பும் இழப்பாகி எத்தனை வேதனைகளுக்குள் தள்ளப்பட்டார்கள். அத்தனை பேரின் ஒன்றுதிரளல் என்பது வெறும் உழைப்பு வீணாக்கம் அல்ல. அத்தனையும் மனிதவளம். மாவட்ட ஆட்சியரிடம் போய் நின்றபின்னும் தீராமல் நீதிமன்றப் படிகளில் ஏறுவது என்றால் எவ்வளவு மனிதவளம் வீணாகிப் போயிருக்கும், அது அவர்களால் சாத்தியப் பட்டிருக்கக் கூடுமா?

ஒவ்வொரு பூவிலும் கோர்க்கப்படும் நாறு போல் ,சனநாயகம் என்பது அரசமைப்பின் ஒவ்வொரு கண்ணியிலும் பின்னியிருக்க வேண்டும்; அவ்வாறில்லையென்பது தான் 2015-ம், 2016-ம் வெளிப்படுத்திய அவலம். இப்போது நடந்தது மக்கள் சக்திதிரண்டு அதிகார மையத்தை நோக்கி நடந்ததால் ஏற்பட்ட பயத்தினால் விளைந்தது. அதிகார மையத்தினுள் ஒளித்து வைத்த சனநாயகதைக் கொஞ்சமாய் இறக்கி விட்டிருக்கிறார்கள்.
அதிகாரம் ஒரு நெருப்பு. சூடு ஏற ஏற பாத்திரத்தில் இட்ட உணவுப் பொருள் தீய்ந்து போகிறது. “அடிப்பிடித்து விட்டது" என்பார்கள் தாய்மார்கள்.(மன்னிக்க வேண்டும், தாய்க்குலம் தான் இன்றும் சமையலறையில் நிற்கிறது. அதனால் தான் இந்தச் சொல்லாடல்). அதிகாரச் சூடு ஏற ஏற, அதிகாரம் கேள்விக்குள்ளாகிப் போகும் என்ற பதட்டம் எகிறிட, சனநாயகம் அடிப்பிடித்து நாற்றம் பறக்கிறது.சென்னைப் பெருநகர் முதலாக திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் தண்ணீர்க் கல்லறைகளான அக்டோபர், நவம்பர், டிசம்பர்களிலும் சித்தவநாயக்கன் பட்டிவரையும் சனநாயகம் அடிப்பிடித்து நாறியது. சனநாயகம் குற்ருயிரும் குலையுயிருமாய் ஆக்கப்பட்ட 2015 முற்றுப் பெற்று -
மக்களுக்கு சனநாயகம் உயிர்ப்பிக்கப்படும் ஆண்டாக அமையுமா 2016? சித்தவ நாயக்கன்பட்டி முதல் சென்னை வரை சனநாயகத்திற்கு மக்கள் காத்திருக்கிறார்கள்.

3

தண்ணி இல்லாக்காடு. அப்படியான காட்டுக்குள் எரபள்ளி கிராமம். அந்த ஒரு ஊருக்கு என்றில்லை, சுத்துப்பட்டு 12 கிராமங்களுக்கும் ஒரு சாமுண்டீஸ்வரி கோயில். சாமுண்டீஸ்வரி வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஊர் தருமபுரி மாவட்டம் நாகஸ்தம்பட்டி. தசாரா விழாக்காலத்தில் நாகஸ்தம்பட்டியிலிருந்து கிளம்பி ஊர்ஊருக்கு தேரில் வலம் வருவாள் அம்மன்.

எரபள்ளி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர் கருவூரன். கருவூரன் பிறப்பதற்கு முன்பும் சாதி இருந்தது. பிறந்த பின்னும் சாதி தொடர்ந்தது. நிறைய கருவூரர்கள் பிறந்து பிறந்து செத்தார்கள். சாதி சாகாமலிருந்தது.

எரபள்ளிக்கு சாமுண்ட்டீஸ்வரி தேர்வலம் வந்தபோது கருவூரன் ஐந்து வயதுப் பாலகன். மனுச சாதிகள் கால் வைக்கத் தயங்கும் எரபள்ளி தாழ்த்தப்பட்ட தெருக்களில் அம்மன் தேரில் எழுந்தருளினாள். தேருக்கு முன் செல்லும் உற்சவமூர்த்திக்கு எரபள்ளி தாழ்த்தபட்டோர் குடை பிடித்தார்கள். குடைபிடித்து மரியாதை செய்வது அவர்களுக்கு உரித்தானதாக இருந்தது. உற்சவமூர்த்தியைப் பின்பற்றி சிங்காரம் பயின்று வந்தாள் சாமுண்டீஸ்வரி.

“சாமுண்டீஸ்வரி கடைசியாக வந்தது 1948. பிறகு எங்கள் ஊர்த்தெருக்களில் அவள் அருள்பாலிக்க வந்ததேயில்லை. ஆறு தலைமுறைகளாக அந்தத் தெய்வத்தை நாங்கள் காணவேயில்லை.”

அம்மனைத் தரிசித்து 67 வருசம் கடந்துபோனது.மறுபடி ஒருமுறை அம்மனைக் காணமாட்டோமா என கருவூரனும் எரபள்ளி மக்களும் ஏக்கத்திலிருக்கிறார்கள். கருவூரனுக்கு இப்போது வயது 72. மறந்துவிடாதீர்கள் - இந்தியா சுத்ந்திரம் பெற்றதாகச் சொல்லப்படுவது 1948: அதே ஆண்டில்தான் எரபள்ளி தாழ்த்தப்பட்ட சனங்களுக்கு சுதந்திரம் அடைக்கப்பட்டது.

“உற்சவருக்கு குடைபிடித்து மரியாதை செய்வதும்,அம்மனை வழிபடுவதும் மேச்சாதிக்காரங்களுக்கு பொச்செரிப்பா இருந்திச்சு. பொச பொசன்னு இருந்த மேக்குடிக்காரங்க தகராறு பண்ணினாங்க.ஏகப்பட்ட போலிஸ் பாதுகாப்போடதான் அந்த வருசம் தேரோட்டம் நடந்துச்சு. மேச்சாதிக்காரங்க எங்கள அடிக்க, நாங்க திருப்பியடிக்க, அத்தோட தேர் நின்னது; எங்க ஒரு ஊருக்க மட்டுந்தேம் தேர் வரதில்லே. மற்ற ஊருக்கெல்லாம் தேர் சுற்றி வருது.”

கோயில் எரபள்ளி - நாகஸ்தம்பட்டி கிராமங்களுக்கிடையில் பொதுவான இடத்தில் இருக்கிறது. மற்ற எல்லாக்கிராமங்களிலும் வன்னியர், கவுண்டர் உயர்சாதிக்காரர். அவர்களை அடுத்த சாதியினராக ’ருபாயர், குஞ்சிடிகர்’ என்போர்.

”செத்துப் போறதுக்கு முன்னாலே தேரையும் அம்மனையும் கண்ணிறைய பாத்திட்டு சாகனும்” என்கிறார் கருவூரன். பிற சாதியினருக்கு அடிமைச்சேவகம் செய்தவர்களின் காலம் முடிந்தது. ஹரிஜன், தாழ்த்தப்பட்டவன், அட்டவணை சாதி என்ற பெயர்ச் சுட்டுகள் மரணமடைந்து, தலித் என்னும் புதிய புரட்சிகரச் சுட்டு எழுந்து வந்துள்ளது.

”எங்களின் வாழ்வியல் உரிமைகளை நாங்கள் ஏன் இழக்க வேண்டும்? வழிபடும் உரிமையை, கோவில், தேரோட்டம், திருவிழா உரிமைகள நாங்க விட்டுத் தரமாட்டோம். எங்க ஊருக்குத் தேர் வரவேண்டும்”

கருவூரன் இருக்கிறார்: பேசுவது 22 வயது தலித். இன்று கருவூரன்கள் என்ற தாழ்த்தப்பட்டோர் இல்லை. தலித்துகள் வந்திருக்கிறார்கள். எங்கெங்கு எரபள்ளிகள் உண்டுமோ அந்த எல்லா எரபள்ளிகளிலும் தலித்துகள் வந்திருக்கிறார்கள். நிலைமைகளை அனுமதிக்க மறுப்பவர்கள் கீழே; நிலைமைகளை மாற்ற விரும்பாதவர்கள் மேலே.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?