பலியாடுகள்
24-03-15 முதல் 27 முடிய உலக நாடக நாள் விழா - மூன்று நாள் கருத்தரங்கம். நிறைவுக்கு முதல் நாள் இரவு துணைவேந்தர் தொலைபேசியில் “பலியாடுகள் நாடகத்தில் பிராமணர்களைத் தாக்கிப் பேசும் காட்சிகள் வருவதாகச் சொல்கிறார்கள். பிராமண துவேஷம் வெளிப்படும் நாடகத்தை நாளை அரங்கேற்ற வேண்டாம். அறங்கேறுமானால் நுழைவு வாசலில்லேயே மறித்துப் போராட்டம் செய்வோம் என்று சில அரசியல் சக்திகள் சொல்கிறார்கள்” என்று பேசியவர், நாடகம் நடத்த வேண்டாம் எனத் தெரிவிக்கிறார்.
’மாதொருபாகன்‘ புதினத்தில் பிரச்சினைக்குரிய பகுதியை நீக்கு; புதினத்தைத் திரும்பப் பெறு, மன்னிப்புக் கேள் - என்று பெருமாள்முருகனின் வீட்டுக்கு வந்து மிரட்டிய சக்திகள், இந்த அரசியல் சக்திகள்தாம்: திருச்செங்கோட்டிலிருந்து புறப்படும் சகிப்பின்மையின் ஒரு கோடு பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வரை தொட்டு நிற்பதைக் காண இயலும். அது மதவெறிகோடு. அது இங்கு காவியாடையணிந்திருக்கிறது. திருச்செங்கோட்டிலும் புதுச்சேரியிலும் அதட்டலும் உறுமலும் காட்டி மிரட்டியவை இந்துத்வா அரசியல் சக்திகள் தான் என்றிருந்தாலும், பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத் தடைக்கு உள்ளடி வேலையின் பங்குமிருந்தது என்கிற கூற்றை எளிதில் தள்ளிட முடியாது.
ஒரு நிறுவனத்தின் உச்ச அதிகாரத்தில் தங்கியிருப்பவர் ஆணையிடுகையில் கீழே இருப்பவர் மறுதலிக்கக் கூடுமா? “நாடக எழுத்து வடிவத்தை நான் காண வேண்டும். காலையில் எடுத்து வர இயலுமா?” என்றெல்லாம் துணைவேந்தர் கோரவில்லை.
’பலியாடுகள்’ பெண் விடுதலை பேசும் நாடகம். தமிழில் வெளியான முதல் தலித் நாடகம். 1992-ல் நிறப்பிரிகை தலித் இலக்கியச் சிறப்பிதழில் வெளியாகி, 1999-ல் நூலாக வடிவம் பெற்றது. ஆங்கிலத்தில், மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப் பெற்று பாராட்டப் பெற்றது. புதுவைப் பலகலைக்கழக ஆங்கிலத் துறையில் 4 ஆண்டுகளாகவும், தமிழியல் துறையில் 4 ஆண்டுகளுக்கு மேலாகவும் பாடத்திட்டத்தில் வைக்கப் பெற்றுத் தொடருகிறது. டெல்லி தேசிய நாடகவிழாவில் அரங்காற்றுகை செய்யப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றது.
அகில இந்திய தேசிய நாடக விழாவில் அரங்கேற்றமான நாடகம், பாண்டிச்சேரி பல்கலையில் பலியாடு ஆகிறது. 27.3.2015 உலக நாடக நாளை முன்னிட்டு அன்று தமிழ் இந்து நாளிதழில் ”கூத்துப் பாக்கலாம் வாங்க” என்று கே.ஏ.குணசேகரன் கட்டுரை வெளியானது. “கூத்துப் பாக்க வராதீங்க” என்று அன்று அதிகார உச்சத்தின் குரலும் வெளிப்படுகிறது.
எதிர்ப்புக் குரல் உருவாகி, மதியத்துக்குப் பின்னான வெயிலாய் உக்கிரம் கொண்டு, மாலையில் மாணவர்கள் திரண்டு துணைவேந்தரிடம் போனார்கள். உடன் குணசேகரனை அழைத்துப் பேசுகிறார் துணைவேந்தர். இரவு 7 மணிக்கு தடை நீக்கம். ஆறு மணி அரங்கேற்றம் இல்லை என சொல்லப்பட்டதால், ஏற்பாடு எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. நடிக்கும் மாணவ மாணவிகளும் போய்விட்ட நிலையில் எப்படி நடத்த இயலும்? ஏப்ரல் 14 -ல் அம்பேத்கர் பிறந்த நாளில் நடத்திக் கொள்ள துணைவேந்தர் ஒப்புதல் தருகிறார். மறுக்கப்பட்டது தலித் நாடகம். தலித் விடுதலைக்குப் போராடிய அம்பேத்கர் பிறந்தது ஏப்ரல் 14.
நாடகத் தடைக்கு எதிர்ப்பு வலுப்பெறாது போயிருக்குமானால், சாதகமான அசைவு நிகழ்ந்திருக்குமா? மாணவர் சக்தி திரண்டபோது கே.ஏ.குணசேகரன் முட்டுக்கட்டை போடவில்லை. பெருமாள் முருகனின் நாவல் பிரச்சினையில், மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் விசாரணை நடந்தபோது, சாதிய சக்திகள் 30 பேருக்கு மேல் திரண்டிருக்க, அது கட்டப் பஞ்சாயத்தாக இருக்கும் என முன்னுணர்ந்த திருச்செங்கோடு அரசினர் கல்லூரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தக்கு பேரணி செல்லத் திரண்டபோது, வேண்டாமென்று விலக்குகிறார் பெருமாள் முருகன். (இண்டியன் எக்ஸ்பிரஸ் 17-01-2015). ஒரு பேராசிரியர் மாணவர் சக்தியை ஆதரிக்கிறார், இன்னொரு பேராசிரியர் தடுக்கிறார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாய் தமிழ்க் கலை இலக்கியச் சூழலில் சாதி, மத சக்திகள், குறிப்பாய் இந்துத்வ சக்திகள் இத்தகைய அடாவடிகளில் இறங்கி வருகின்றன: மோடி ஆட்சி நடக்கிறது, அதனால் என்பதைவிட, இதற்கான மூலகாரணத்தை வேறொரு வரலாற்று நிகழ்வில் தேடிக் கண்டடைய முடியும். சுய மரியாதைக் குணத்தில் பிறந்த திராவிடக் கட்சிகள் உள்ளும் புறமும் ஒரே அசைவாய் இல்லாது, ஆட்சிக்கு வந்த பின் அதிகார அரசியலின் காரணமாய், முழங்குதல் ஒன்றும் முன்வருதல் வேறொன்றுமாய் சுயமரியாதையைக் கைவிட்டமை; இரட்டை வேடம் கட்டி ஆடியமை முக்கியமான காரணம்: உறுதியான எதிர்ப்புச் சக்தியாய் ஒன்றுதிரண்டிருக்க வேண்டிய திராவிடக் கட்சிகள், சாதிய, மதவாத எதிர்ப்பு நிலைபாட்டைக் கைவிட்டிருந்தன. தமிழ் மக்கள் அறியாதிருந்த பா.ஜ.க.வை, மாற்றி மாற்றித் தோளில் சுமந்து வந்து இறக்கிவிட்டார்கள்: தோளில் உட்கார்ந்தவன் காதைக் கடித்த கதைபோல. இன்று நாய்க்கடியும் பேய்க்கடியும் படுவதற்கு இது காரணம்.
திராவிடக் கட்சிகள், ஆட்சியேறு முன் கருத்துரிமை காப்போராக அடையாளம் காட்டிக் கொள்வார்கள். ஆட்சியேறியதும் ஆளே மாறிப் போவார்கள்.
“இன்குலாப் என்று தனக்குத்தானே பட்டுக் குஞ்சம் கட்டிக் கொண்ட பேர்வழி - கவிதை என்ற பெயரில் பேத்தல் கத்தையைப் பெற்றுப் போட்ட திருட்டுப் பிறவி - சரோஜாதேவி நாவலாக நடைபாதையில் வைக்க வேண்டிய நூல் - அந்த இழி பிறவியின் மூக்கை முற்றாக உடைக்க வேண்டும்” - என்று முரசொலி (30.3.1985) முத்தமிழ் உதிர்த்தது.
“கழகத் தலைவர் கலைஞரையும், திருமதி இந்திரா காந்தியையும், தமிழ்ப் பெருமன்னன் இராசராசனையும் அவதூறு செய்த இன்குலாப் கவிதைகள் என்ற நூல் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது”
சட்டமன்றத்தில் தீர்மானமும் பாராட்டும் நிறைவேற்றிய அந்த 1985 நினைவிருக்கிறதா?
பிரமிடுகள் உயரத்துக்கு உண்டு பண்ணப்பட்ட பிம்பமாக இருக்கலாம். அதனினும் கூடுதலாய்க் கட்டப்படும் பிம்பமாகவே இருக்கலாம். ஆயிரம் ஆண்டு முன்னுள்ளதோ, ஆயிரம் ஆண்டு பின்னுள்ளதோ ஆன பிம்பம் சிதைக்கப்படுகையில் சாதி, மத, கட்சி தர்பாரின் கும்பல் கலாச்சாரம் சட்ட மன்றச் செயலாகவும் வெளிப்படும்.
ஆட்சேபகரமான செய்திகள் கட்டுரைகள் குறித்த நடுவணரசின் பத்திரிகைச் சட்டம் 1951-ல் உண்டு பண்ணி, 1956-ல் செத்தும் போய்விட்டது. அங்கே காலாவதியானாலும், தமிழ் நாட்டுக்கென்று தனியே ஒரு பத்திரிகைத் தடைச்சட்டத்தினைக் கொண்டுவர, அப்போதைய முதலமைச்சர் காமராசரும், நிதியமைச்சர் சி.சுப்பிரமணியமும் முயற்சி செய்தார்கள். அதன்படி உருவானது 292A. அவதூறுறாகவும் (Scurrilous), ஆபாசமாகவும் (obscene) அச்சிட்டால், இரண்டாண்டு சிறைத்தண்டனை என்றது அந்த 292A.
1981-ஐ நினைவிருக்கிறதா? இந்தப் பிரிவை கடுமையான தண்டனைச் சட்டமாக ஆக்க நினைத்தவர் வேறு யாருமல்ல - எம்.ஜி.ஆர். அவதூறாக, ஆபாசமாக எழுதுவது, அச்சிடுவது, பிணையில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதி, திருத்தப்பட்ட 292A சட்டப் பிரிவை அதுவும் அவசரச் சட்டமாகக் கொண்டு வந்தார். அதிகார மையத்தில் இயங்கும் எவரும், அதிகாரம் ஆக்கிரமித்த மனசுக்காரராகவும் ஆக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.
அரசு என்பது ஏற்கனவே அறியப்பட்ட அதிகாரக் குவிமையம். அரசு அமைப்பை விட பலாத்காரம் கொண்ட அமைப்பாக இன்று சாதி, மதவாத மையங்கள் உருவெடுத்துள்ளன. அரசு நுழைய முடியாத இடங்களிலும் சாதிய, மத சக்திகள் பிடிமானத்தை இறுக்கி வருகின்றன. சாதி, மத அமைப்புகள் தமக்கென அரசியலையும், தனியாய் ஒரு ஆட்சியையும் நடத்தி வருகின்றன. எழுத்தை சிறைப்படுத்துவதை அரசு செய்யலாம். ஆனால் எழுதியவனையே சிறைப்பிடிப்பது, மண்டை உடைப்பது, கட்டி உதைப்பது, ஊரைவிட்டு விரட்டியடிப்பது என்ற புஜபல அக்கிரமங்களை சாதிய , மதவாத சக்திகள் செய்கின்றன. எச்.ஜி.ரசூல் என்ற கவிஞன் மீது விதிக்கப்பட்ட ’ஊர் விலக்கம்’, பெருமாள் முருகனின் திருச்செங்கோடு வெளியேற்றம், புதுக்கோட்டை ’குலதிரன்பட்டு’ குணா ஊரைவிட்டே விரட்டியடிப்பு, புலியூர் முருகேசன் மண்டை உடைப்பு, கரூரிலிருந்து விரட்டியடிப்பு - என்பன, நமது சனநாயகமும் கருத்துரிமையும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதை மேலேற்றி ஊர்வலம் போகத்தான் லாயக்கு என்று எள்ளி நகையாடும் காட்சியாகக் காணலாம்.
எழுத்தாளர் துரை குணாவுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மதுரை உச்ச நீதிமன்றக் கிளை ஆணையிட்ட பின்னும், கரம்பக்குடி காவல்நிலைய ஆய்வாளர் எந்தப் பாதுகாப்பும் அளிக்கவில்லை. ஆய்வாளர் நினைத்திருக்கக்கூடும் “முதலில் நான் என்னைப் பாதுகாக்க வேண்டும்; இரண்டாவதாய் என் கீழுள்ள நிலையத்தைப் பாதுகாக்க வேண்டும்.” உயர் சாதி இந்துக்களே உமது காலடி சரணம் என அவர் செயல் தொடங்கியது.
எழுத்தாளர் துரை குணாவின் “ஊரார் வரைந்த ஓவியம்” என்ற நூல் வெளியீடு 12.7.2014 அன்று கரம்பக்குடி காந்தி பூங்காவில் நடந்தது. கதைகளிலுள்ள ஒவ்வொரு சொல்லும் ஊரின் உயர் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் நடத்துகிற அடாவடித்தனத்தை சித்திரப் படுத்தியது. ஆகஸ்டு 5 அன்று துரை.குணா வீட்டுக்கு வந்த தலித் (!) பஞ்சாயத்து தலைவரும், பெரியவர்களும் அவர் ஊரைவிட்டு வெளியேற வேண்டுமென்று கேட்டக் கொள்ளுகிறார்கள். உயர் சாதிக்கட்டளையை நிறைவேற்ற வந்தனர் அவர்கள். அவர்கள் பாடிய புராணம் நீளமானது.
“இதுவரை பத்து தலித்துக்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். உயர் சாதிகளின் நிலங்களில் தலித்துக்கள் கால்நடைகள் மேய்க்கத் தடை. அவர்களின் கால்நடைகளையும் மேய்ச்சலுக்கு ஓட்டிப் போவதிலிருந்து விலக்கப்படுகிறார்கள். ஊர்க் கடைகளில் தலித்துகக்கள் பொருள் வாங்கவும் கூடாது, கடையில் விற்கவும் கூடாது”. இழைக்கப்படும் கொடுமைகளுடன் சேர்த்து அவர்கள் கேட்டது “நீ குடும்பத்துடன் ஊரைக் காலி செய்”.
போக இயலாமல் பதட்டத்தில் நின்று கொண்டிருந்தது குடும்பம். அக்டோபர் 22-ஆம் நாள் வீட்டிலிருந்த குணாவின் தந்தையை உயர் சாதிகள் இழித்துப்பேசி தாக்குகிறார்கள். நீதி கேட்டு காவல் நிலையம், ஆட்சியர் அலுவலகம் என்று முறையிட்டும் பலனில்லை.
இப்போது குணா குடும்பம் ஊரில் இல்லை.
இந்த ஆத்மாக்கள் எவ்வாறெல்லாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்களோ அவ்வாறான பொருளில் அல்ல ஒரு எழுத்தாளன் எழுத்தை உருவாக்குவது. இந்த ஆத்மாக்கள் முன் முடிவோடு இயங்குகிறவர்கள். இருப்புக்கு, சாதிய ஆதாயத்துக்கு, அரசியல் பிழைப்புக்கு என பல தேவைகள் அவர்களுக்கு இருக்கின்றன. எழுத்தாளன், ஒரு கலைஞன் முன் தீர்மானங்களோடு இயங்குபவன் அல்ல: சிந்திப்பின் அடிப்படையில் இயங்குபவன். சிந்திப்பின் கடைசிப் புள்ளியில் முடிவை வந்தடைகிறான்.
கரூரைச் சேர்ந்த புலியூர் முருகேசன் “நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்” என்னும், மூன்றாம் பாலினத்தின் வாழ்வு பற்றிய கதையை சிந்திப்பின் அடிப்படையில் நகர்த்தினார். ஒரு திருநங்கை எப்படி தொடர்ந்து பாலியல் சுரண்டல் வன்முறைக்கு ஆளாகிறார், எதிர் கொள்கிறார் என்பது கதை; கரூர் பிரதான சாலையில் மறியல் செய்து புலியூர் முருகேசனின் மண்டையை உடைத்த கொங்கு வேளாளர் சாதிக்கு மட்டுமல்ல, மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும் சேர்த்து “அது வக்கிரமான எழுத்து” என வழக்குப் பதிவு செய்தார் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் (D.S.P); தூத்துக்குடியில் தங்கியிருந்து அன்றாடம் காவல் நிலையத்தில் கையெடுத்திட வேண்டும் என்று பிணை வழங்கியது நீதிமன்றம். அந்த எழுத்தின் அர்த்தத்தை கண்டறியக் கூடாமல் கட்டப் பஞ்சாயத்து வழியிலேயே சட்டமும், நீதியும் நடந்தன.
ஒரு கலைப் படைப்பின் உள்ளுறை பொருளைத் தீர்மானிப்பது யார்? கட்டப் பஞ்சாயத்து நபர்களா? நிலவுகிற சமுதாயத்தின் கருத்துக்களால் வாழ்பவர்களுக்கும் புதிய சமுதாய ஆக்கத்துக்கான கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வோருக்குமான உராய்வில் பழைய சமுதாயத்துக்கான கலாச்சாரத்தின் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள்.
இத்தனை அட்டூழியங்கள் காட்சியான பின்னும் பா.ஜ.க.வின் இல.கணேசன் பேசுகிறார் “பெருமாள் முருகன் நமது கலாச்சாரத்தை அழித்துக் கொண்டிருக்கிறார். அவர் எழுதுவதை நிறுத்த வேண்டும்” - (இண்டியன் எக்ஸ்பிரஸ் 18.1.2015)
ஒரு சிந்தயைாளன் இனி தன் எழுதுகோலை அசைக்கு முன் இதை எழுதலாமா கூடாதா என இவர்களிடம் கேட்டுவிட்டுத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு கட்டப் பஞ்சாயத்து தலைவனிடமும் போய், நீங்கள் சொன்னபிறகு எழுதுவேன் என்று உறுதிகூற வேண்டும். தீர்மானித்துவிட்டீர்களா சாமி என்று முறையிட வேண்டும்: இன்குலாப்புக்கு நேர்ந்ததைப் பார்த்தால் அரசியல் பிரமுகரிடம் நிற்கக் கடவான் எழுதுபவன்.
இது இரண்டாயிரத்துப் பதினைந்தின் சமுதாயம்: ஈராயிரம் ஆண்டுகளாய் பொதபொதத்து ஊறிப்போன சாக்கடையிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகும். எழுதாதே என்று எழுதுபவனை கொசுக்கள் கடிக்கும்.
பெருமாள் முருகனும், ’குலதிரன்பட்டு’ குணாவும், புலியூர் முருகேசனும் “எமது கலாச்சாரத்தை அழித்து விடுவார்கள்” என்று சொல்வீர்களாயின், இந்தக் கலாச்சாரத்தை அழிப்பதைத் தவிர சிறந்த பணி வேறென்னவாக இருக்கும்?
பத்து ஆண்டுகள் முன்னால், நீங்கள் என்ன செய்தீர்கள்?
சாலமன் ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் நூலை (Satonic Verses) தடை செய்தீர்கள். எழுதிய ருஷ்டி இந்தியாவுக்குள் நுழைய அனுமதியில்லை: கண்காணாத ஓரத்தில் ஒளிந்து கொள்ளச் செய்தது உங்கள் கட்டளை!
சென்ற ஆண்டு என்ன செய்தீர்கள்?
“The Hindus an alternationative History" வெண்டி டோனிக்கர் எழுதிய- அறிவுலக அங்கீகாரமுள்ள பெங்குயின் வெளியிட்ட நூலை அந்நிறுவனம் திரும்பப் பெற்று, அனைத்துப் பிரதிகளையும் கொளுத்திட வேண்டும் என்று நீதிமன்றத்திலேயே ஒப்பந்தம் போட்டுக் கொள்ளச் செய்தீர்கள். நீதிமன்ற ஆணை வருமுன்பே சமரச ஒப்பந்தத்தை ஏற்கச் செய்தீர்கள்: நீங்கள் முன் வைத்த காரணம் “நூல் இந்துக்களை அவமதிக்கிறது”
வெண்டி டோனிகர் வேதனை நெளியப் பேசினார் “அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப, இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் படும்பாடு என்னை நிம்மதி இழக்கச் செய்கிறது”.
சென்ற மாதம் நீங்கள் என்ன செய்தீர்கள்?
பெருமாள் முருகனை மாறுகால் மாறுகை வாங்கித் தண்டித்தீர்கள். எழுத்தை முடக்குவது என்பது இத்தண்டனை அல்லாமல் வெறென்ன? (BJP former president L..Ganesan declared that perumal murugan should stop writing. EXPRESS-18-01-15)
போன வாரம் நீங்கள் என்ன செய்தீர்கள்?
குலதிரன்பட்டு குணாவை இருக்க ஓரிடம் இல்லாமல் ஊரை விட்டுத் துரத்தினீர்கள்!
நேற்று நீங்கள் என்ன செய்தீர்கள்?
உலக மகளிர் நாளையொட்டி “தாலி பெண்களைப் பெருமைப்படுத்துகின்றதா, சிறுமைப்படுத்தகின்றதா?” என்ற விவாதத்தை ஒளிபரப்ப முயன்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியைத் தாக்கினீர்கள். டிபன் பாக்ஸ் குண்டு வீசினீர்கள். ”இப்போது வீசியது பட்டாசுதான்: அடுத்தமுறை வெடிகுண்டே வீசுவோம்” என்று அறிக்கை விடுகிறீர்கள்.
இன்று நீங்கள் செய்தது என்ன?
தலித் பெண் விடுதலையை வலியுறுத்தும் பலியாடுகள் நாடகம் சாட்சி.
நீங்கள் எங்கு இருந்தாலும் எவராக இருந்தாலும் உங்கள் உள்ளில் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்று தானாக வெளிவருகிறது.
தன்னைக் தற்காத்துக் கொள்ள பெண்ணுக்குத் தெரியாது. தெரியக்கூடாது. பெண் ஏதும் அறியாள்: அறியக் கூடாது. அவளுக்கு ஆண்தான் எல்லாம்; பெண்ணைக் காப்பது ஆண்களின் வாழ்நாள் பெருங்கடமை என்று கட்டப்பஞ்சாயத்து பெரிய ஆட்கள் நினைக்கிறார்கள். கலாச்சாரக் காவலர்களுக்கு முழுநேர வேலை வந்து விடுகிறது. தனது விடுதலையைத் தானே தேடிக் கொள்ள லாயக்கற்ற பிறவியான பெண், தனது சுயம், சுயசிந்தனை, சுய காரியமாற்றல் என்று லேசு லேசாய் முண்டினாலும் பொத்துக் கொண்டு வருகிறது. மாதொரு பாகனில் ’பொன்னா’ என்ற பெண்தான் இவர்களுக்குப் பிரச்சனை. ”அவள் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறாள்” என்னும் புலியூர் முருகேசனின் கதையிலும் பெண்தான் பிரச்சனை: புதிய தலைமுறைத் தொலைக்காட்சியிலும் இவர்களுக்கு அவளே பிரச்சனை. திவ்யா - இளவரசன் காதல் இணையைப் பிரித்து, இளவரசனை மரணத்துள் தள்ளி, திவ்யாவைக் காப்பாற்றியதிலும் பெண்ணின் சாதி பிரச்சனை.
“அடிப்படை அறங்களிலிருந்து பிறழ்பவர்களிடம் நியாயத்தை எதிர் பார்க்க முடியாது” என்றொரு கிரேக்க வாசகம் இரண்டாயிரம் கடந்த பின்னும் உயிர் வாழுகிறது.
கும்பல் ஆட்சி என்ற சொல்லால் இக்காரியங்களை அடையாளப்படுத்தலாம். குறிப்பிட்ட ஊரில், பகுதியில், வட்டாரத்தில், கருத்துத் தளத்தில் இந்தக் கும்பல் சாதியாக , மதமாக, கட்சியாக இயங்குகிறது. சாதியை முன்னிறுத்தி மத சம்பிரதாயங்களின் பெயரால், கட்சிகளின் பெயரால் இந்தக் கும்பல் குடிமைச் சமூகத்தை திரட்டிட முடிகிறது. அதற்கு அரசும், அதிகாரக் கூட்டமும் உடன்போகின்றன.
“எழுத்தின் அர்த்தத்தை தீர்மானிப்பது, சாதி மத கட்சி கட்டப் பஞ்சாயத்துக்கள் அல்ல. ஊடக சுதந்திரத்தை ஆய்வு செய்திட, தீர்மானி்க்க பத்திரிகைக் குழு (PRESS COUNCIL) இருப்பது போல் வழக்குரைஞர்கள் பதிப்பாளர்கள் எழுத்தாளர்கள் இடம் பெறும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்; சட்ட ரீதியான நடவடிக்கை அவசியமெனில் அதையும் கைக் கொள்ள வேண்டும்” என்கிறார் வரலாற்று சமூகவியல் அறிஞர் ரொமிலா தாப்பர்.
மக்கி மடிந்த கருத்துக்களை மண்டையில் ஏற்றிக் கொண்டு அவற்றிற்கான காரியமாற்றலை நடத்தி வருகிற சக்திகள் “தலையைக் குத்துகிறதே, நோகிறதே” என் நொம்பலப்படலாம். தலை இடிக்கிறது என்றால், வாசல் நிலையை உயரமாகவும் விசாலமாகவும் ஆக்கிக் கொள்ளுதல் உத்தமம். அது ஒரே வழிதான்.
கருத்துகள்
கருத்துரையிடுக