கிழவிப்பட்டி


பனைநார்க் கடகப் பெட்டியில், கட்டிச் சோறு கட்டிக்கொண்டு பயணம் போகிறீர்கள். அன்று கிண்டி மூடிய கம்மஞ்சோற்றுப் பானை வெதுவெதுப்பாக மாட்டு வண்டியில் ஏறுகிறது. ஆத்தூர் ஆறு; அங்கன அதற்குப் பெயர் தாமிரபரணி. தேர்ந்த களைக் கூத்தாடி, ‘அத்தர் பான்ஸா கொழுக்கட்டை’ என அத்தாசமாய்க் கரணமடிப்பது போல், ஆத்தூரைச் சுற்றி ஒரு சுழி சுழித்து ஓடுகிறது. ஆத்தோரமும் ஊரைச்சுற்றியும் வெற்றிலைக் கொடிக்கால்கள். ஆத்தூரைத் தாண்டி கொஞ்சம் நொண்டியடித்து புன்னைக் காயலில் போய் சங்கமமாகிறது தாமிரபரணி. இடப்பட்ட தொலைவில் வளைந்து ஒடிந்து மூலைமுடுக்குகளில் நுழந்து போவதால் நொண்டியடிப்பது போல் தெரியும். வெற்றிலைப் பொதி ஏற்றிய வண்டி ஆத்தூரைத் தாண்டினால் தூத்துக்குடி. மாட்டு வண்டிகளின் பேட்டையாக ஒருகாலத்திலிருந்தது தூத்துக்குடி; தூத்துக்குடி நகரைக் கடந்தால் தருவைக்குளம். பிறகு வேப்பலோடை, குளத்தூர், புளியங்குளம், மந்திக்குளம் - வரிசைக் கிரமமாய் வந்தால் கொஞ்சம் தள்ளி விளாத்திகுளம் ஆறு எனப் பெயர் சூடிக் கொண்டு உங்களை மறிக்கிறது வைப்பாறு. கரண்டைக் காலளவு நீரில் மாட்டு வண்டியில் நீங்கள் கரையேறினால் அக்கரையில் இலந்தைக்குளம், அதைத் தொட்டு கூப்பிடு தொலைவில் கிழவிப்பட்டி.

ஓலைக் கொட்டான்களில் அடைக்கப்பட்ட வெற்றிலை ஒருவாரம் சென்றாலும் வாடாது, வதங்காது : ஊர் ஊராய்ப் பண்டமாற்று முறையில் விற்று வருகிற வணிகத்துக்கு ’தாவளம்’ என்று பேர்.

கள்ளர் பயம் மிகுதியென்பதால் ஒத்தைவண்டிப் பயணம், அதிலும் இரவுப் பயணம் லாயக்குப் படாது. வெற்றிலைப் பொதி ஏற்றிய வண்டியின் முதலாளி போத்தி ரெட்டிக்கு. கிழவிப்பட்டி சுப்பாரெட்டி ரொம்ப காலப் பழக்கம். பிரியமாய்த் தங்க வைப்பார்கள். வண்டியோட்டி கொம்பன் பகடை. வீட்டில் பாவாடை, தாவணியிலிருந்த வள்ளி சுப்பாரெட்டி மகள். கொம்பன் பகடைக்கு தண்ணி கொடுக்க, சாப்பாடு போட, பேச்சுப் பழக்கம் போடுபவள் அவள்.

வெற்றிலைக்குப் பல மகிமை. வெற்றுப் பச்சை இலையில் துவர்ப்பான பாக்கு, வெண்ணிறச் சுண்ணாம்பு சேருகிறபோது சிவப்பு மகிமை வந்துவிடுகிறது. வாயில் மெல்லுகையில் அது ஜீரணலேகியம்.

செங்காம்பு வெத்திலையை காம்போடு மெல்ல வேண்டும். வள்ளி கொம்பன் பகடையிடம் வந்து நிற்கையில், காம்பு கிள்ளிக் கொடுப்பான். “மென்னு பாரு, நல்லாருக்கும்”

“ம்கூம், நா மாட்டேன்”

அவளையே பார்ப்பான்.

“வெத்திலை போட்டா கோழி முட்டும்.”

எங்கயாவது கோழி முட்டுமா?”

”பெரியவுக சொல்லுவாக”

“அது கேலிக்கி”

“ஆமால்லே”

சிறுபிள்ளை வெட்கத்துடன் பார்த்தாள். ஒருத்தருக்கொருத்தர் பேசி கதை சொல்லி சிரிக்கச் சிரிக்கப் பிரியம் கூடிக்கொண்டு போனது. ஒருநாள் கொம்பன் பகடை கேட்பான்.

“பஞ்ச பாண்டவர்னா எத்தனை பேரு?”

“அஞ்சு பேர்”

”அந்த பஞ்ச பாண்டவரத்தான் நாங்க விக்கிறோம்” என்றான்.

புரியாமல் வள்ளி ஏறிட்டுப் பார்த்தாள்.

“இப்பப் பாரு” கொம்பன் ஒரு வெத்தலையை எடுத்தான். காம்பைக் காட்டினான்.

“இது என்ன? காம்பு” அவனே பதிலும் சொல்லி வந்தான்.

காம்பைக் கிழித்தான் “இது என்ன? கிழிப்பு”

வெற்றிலையை மடித்தான் “இது என்ன? மடிப்பு”

சுண்ணாம்பு தடவினான்

“இது என்ன? சுண்ணாம்பு”

வாயில் போட்டு மெல்லுகிறான்: வாயெல்லாம் ரத்தமாய்ச் சிவந்தது.

“இது என்ன சிவப்பு. சரியாப் போச்சா? காம்பு, கிழிப்பு, மடிப்பு, சுண்ணாம்பு, சிவப்பு – அஞ்சு ஆகிருச்சா, இந்த பஞ்சபாண்டவரைத் தான் நாங்க விக்கிறோம். நீங்க வாங்குறீங்க”

சிறு பிள்ளை அதிசயிப்பாய் அவனைப் பார்த்தாள். “எங்க காட்டு?” அவன் எண்ணிக்கைக்கு மடக்கிய கையைப் பிடித்தாள்.

“ஒனக்கு அஞ்சு இல்லையே, ஆறு விரல்ல இருக்கு” எண்ணிக் காட்டினாள்.

“அதுவா? கடவுள்தானே ஒவ்வொருவரையும் படைச்சார். கடவுள் வச்ச மிச்ச மண் இது” என்கிறான்.

சின்னப் பிள்ளைக்கு வேறொரு சந்தேகம் தீர வேண்டியிருந்தது. சில பேருக்கு கழுத்தில் கழலை தொங்குகிறது: சிலருக்கு காது கீழ்நுனியில் சின்னச் சதை உருண்டு கிடக்கும். அதெல்லம் என்னது என்று அறியாமல்தான் கேட்டாள்.

கொம்பன் சிறு சிரிப்புச் சிரித்தான் ”அதுவும் கடவுள் படைக்கையில் வச்ச மிச்ச மண் தான்”

கொம்பன்பகடையின் பேச்சுச் சாதுரியத்தில் வள்ளி சொக்கிக் கிடந்தாள்.

இராப் பொழுதுதான் அந்த வீட்டில் தங்குவது.மறுநாள் காலம்பற வெள்ளன எழுந்து வண்டிபத்திக் கொண்டு பக்கத்து ஊர்களுக்கெல்லாம் அரியநாயகிபுரம் வரை போய் ஒரு சுற்றுசுற்றி வெற்றிலைக்கட்டு இறக்கிவிட்டு கிழவிப்பட்டி திரும்பினார்கள். அடுத்து வேற ஊர்கள். எந்த ஊர்பொனாலும் இடைத தங்கல் கிழவிப்பட்டி சுப்பாரெட்டி வீடு.

கிழிவிப்பட்டியிலிருந்து தத்தநேரி, சூரங்குடி, சாயல்குடி வரை போய் வெற்றிலைப் பொதி தீர்ந்து திரும்புகாலிலும் கிழவிப்பட்டியில் இரண்டு நாள் தைப்பாறுவார்கள். அலுப்புத் தீருமட்டும் அங்கு தங்குவார்கள். சொடக்கு எடுத்தது போலிருக்கும். தங்கும் இரவுகளில் வள்ளி நிலைப்படியில் உடகார, கொம்பன் கீழே உட்கார கதைகளாஇக் கொட்டுவான். அவள் தலை தூக்கச் சடவில் ”கிய்யா கிய்யா மாம்பழம், கிறுகிறு மாம்பழம்” ஆடும் வரை கதை சொல்லிக் கொண்டிருப்பான். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு பண்டபாத்திரம் கழுவி ஒதுங்க வைத்துவிட்டு வரும் அம்மா தூங்கிச் சரியும் சிறு மயில்குஞ்சை வாரி அள்ளிகொண்டு போய் படுக்க வைப்பாள்.

கொம்பன் அந்த முற்றத்தில் ஒரு நெடுந்தூக்கம் கொண்டுவிடுவான்.

அப்படித் தங்கிய ஒரு இரவில் வள்ளி தென்படக் காணோம். கொம்பன் பகடை கண்களால் உள்ளே, வெளியே துழாவிப் பார்த்தான். அப்போது ஒரு தாக்கல் வந்தது.

“அவ பெரிய மனுசியாயிட்டா”

தாவளத்துக்குப் போகாத நாட்களில் வள்ளி பேரிலுள்ள பிரியத்தால், வேற வேலைக்கு இந்தப்பக்கமாய் வந்தது போல் காட்டிக்கொண்டு வரப்போக இருந்தான். அவளுக்கு அண்ணன் தம்பிகள் ஏழுபேர்.

பிரியம் கூடக்கூட, ஒருநாள் இரண்டுபேரும் சேர்ந்து இருந்ததை அண்ணன் தம்பிகள் பார்த்து விட்டார்கள்.

“வள்ளியை அடிஅடின்னு அடித்து அரிசருகா ஆக்கிட்டாங்க. இனிமேப்பட அவனோட பேசிறதைக் கண்டமின்னா, கொன்னே போடுவோமின்னு வெறைசிக்கிட்டு நின்னாங்க. கொம்பன் பகடையைக் கூப்பிட்டு இனிமே இந்தப்பக்கம் தலை தென்படக்கூடாதுன்னு எச்சிரிச்சாங்க.”
கொம்பனுக்கு வேண்டப்பட்ட ஒருவர் சொல்லிக் கொண்டு போனார்.

பொண்ணை விட்டுட்டுப் போகலைன்னா ஒந்தலை கீழே விழுந்துரும்னு சொல்லக்க, அடிவாங்கின வள்ளி நிக்கல. அப்படியே அவனோட வண்டியில் ஏறிட்டா. “நா ஒங்கூட வர்றேன். என்னைய கூட்டிட்டுப் போகலைன்னா, இவங்க என்னை வெட்டிப் பலி போட்டுருவாங்க”ன்னு பிறத்தாலேயே போனா. அழுதா. இவர்கள் அவளை மறிக்க, போய்த்தான் ஆவேன்னு பிடிவாதமா நிக்கா. செம்பறையாட்டு பால்பீய்ச்சி, அதில் வெத்தலைய வச்சி நாங்க ஒன்ன ஒன்னும் பண்ணமாட்டோம் தாயின்னு அடிச்சி சத்தியம் பண்ணிக் கொடுத்தாங்க. அவ நம்பலே. ஒரு நாள் வண்டியில் ஏறி கொம்பன்பகடையோட ஊரைக் கடந்து அவங்கள மதிக்காமப் போக, வண்டி ஓடைக்குள் எறங்குனதும் மறிச்சி கொம்பன் பகடையை வெட்டித் தீர்க்கிறாங்க. தலை இல்லாத முண்டம் துடிக்குது. பிறகு வள்ளியை இழுத்து கெடா வெட்டுறது கணக்கா வெட்டிட்டாங்க. தலை குதிச்சி ஒடைமரத்தில் போய் ஒட்டிக்கிருச்சி. ஆனா அவகொண்ட கோபம், இவங்க குடும்பத்தை நிலை கொள்ளாம ஆட்டுது. ஏழு அண்ணன்மார் குடும்பத்திலயும் கரு தங்கல. இருக்கிற குழந்தைகளும் சள்ளு சள்ளுன்னு இருமி ரத்தமா கழியுது. வெள்ளாமை தீப்பிடிச்சிக் கருகுது. நம்ம குத்தம் செய்திட்டோம்னு ஒடைமரத்துக்கு கும்பிடு போட ஆரம்பிக்கிறாங்க. தெய்வமாகிட்ட தாயேன்னு ஏழு குடும்பமும் பொங்கல் வச்சி சாமி கும்பிடறாங்க. அதுக்குப்பின்னாலே இப்ப ஊரே அம்மாவுக்கு பண்டிகை பலகாரம்னு கொண்டாடுது.”

இந்தக் கதையை எங்களிடம் சொன்னவர் முத்துராக்கு. சொல்லச் சொல்ல கண்களில் பிரியம் விரிகிறது. ”அவ எங்க தெய்வமாயீட்டா”
தமிழ்நாடு கிழவிபட்டிகளால் நிறைந்து கிடக்கிறது.

வள்ளி ஒடைமரமாக உயர்ந்து விட்டாள். வீரநாகம்மா வேப்பமரமாக குளுந்து போனாள். குளத்தூர் மாத்தியம்மா ஆலமரமாக அடர்ந்து விரிகிறாள். நினைவாய் கும்பிட்டு ஆத்திக் கொள்கிறார்கள் துடிக்கத் துடிக்கக் கொன்றவர்கள். பலி கொண்ட பெண்ணை தெய்வமாக்கிக் கொண்ட சூட்சும முடிச்சு புரிகிறது. அதே ஓடையில்தான் கொம்பன்பகடையை வெட்டிப் பலி போட்டார்கள். அவன் தெய்வமாகவில்லை. தீண்டத்தகாதவன் எக்காலத்தில் தெய்வமானான்? தொடக்கூடாதவனைத் தொட்டு ’சாதிக் குத்தம்’ பண்ணியதற்காய் பலியாக்கியவளை சாமியாக்கி புனிதப்படுத்திக் கொண்டார்கள் - ஓடைக் காலில் ஓட ஓட விரட்டிப் பலியெடுத்த கொம்பன் பகடையை கும்பிடவும் இல்லை: கொண்டாடவும் இல்லை:

தாழ்த்தப்பட்ட சாதியில் பற்றும் காதல் தீ, கொலையில் தான் முடிகிறது. மதுரை வீரனை – மாறுகால், மாறுகை வாங்கி முடித்தார்கள். முத்துப்பட்டனை - வஞ்சகமாய் உயிர்பறித்தார்கள். கொம்பன்பகடையை - கோளாறாய் ஓடைப்பள்ளத்தில் கதை முடித்தார்கள். இளவரசன் - இரயில் தண்டவாளத்தில் தள்ளப்பட்டான். திருச்செங்கோடு பொறியியல் மாணவர் கோகுல்ராஜைக் கொன்று, அதே தண்டவாளத்தில் தள்ளினார்கள். தாழ்த்தப்பட்டவனுக்கு காதலும் விலக்கி வைக்கப்படும்.

ஒவ்வொரு மனிதனுள்ளும் வாழ்தலின் உயிர்ப்பு இயங்கிக் கொண்டுள்ளது. புல்பூண்டு, செடி, கொடி, ஊர்வன, பறப்பன, நடப்பன என அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்தல் உயிர்ப்பு இயற்கையானது, வாழ்தலின் பொருட்டு பீய்ச்சியடிக்கும் உயிர்ப்பு, தன் சக உயிரின் மீது நேசம், உறவு கொள்ள நீளுகிறது. செடி,கொடி அப்படித்தானே நீளும். நீண்டு தாவித்தாவி தழுவும். சக உயிர்களோடு கொள்ளும் உறவு இல்லையெனில், உயிர்ப்பு (உயிர்வாழுதல்) பொருளற்றதாய் ஆகிவிடும். வாழ்தலின் உயிர்ப்புக்கு, அதன் காரணமாய் உண்டாகும் உறவுக்கு எல்லையில்லை.

தான், தன் குடும்பம், தன் குழு, தன் சாதி, தன் மதம் போன்ற தன்னிலைகளோடு மட்டுமே கொள்ளும் உறவும், நேசமும் தன்னை நேசித்தல் என்னும் மோகத்திலிருந்து பிறக்கிறது. மற்றவரோடு உறவுகொள்ளுதல் என்பதிலிருந்து விலகி, மற்றவரை ஆளுதல் என்ற அதிகாரத்துக்கு ஏறுகிறது. சாதி, மத, நிற, தீண்டாமை எல்லையை உருவாக்கிக்கொள்ளுதல் இந்தப் புள்ளியில் நிகழுகிறது. மற்றோரை அடக்கியாளுதலின் பெயர் அதிகாரம். மனித வாழ்தலுக்கான உயிர்ப்பு சக்தியில் அதிகாரம் அல்லது மேலாண்மை என்பது பாறைச் சுவர். இன்றைய மனிதக் கூட்டம் ஓரங்குலம் கூட உயரவில்லை என்பதை ‘உத்தபுரம்’ சுவர் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.கிழவிப்பட்டி கொலைச் சாட்சியம் கிழவிப்பட்டியெனில் வாழ்வியல் உரிமை பறிப்பின் மொத்த சாட்சியம் உத்தபுரம் .

சாதிக்குள் பிரியம், சாதிக்குள் அபிமானம், சாதிக்குள் காதல், சாதிக்குள் உறவு என மட்டுப்படுத்தத் தொடங்குகிறார்கள். சாவும் சாதிக்குள் முடிகிறது. சாவு வீட்டிலும் யார் கூடுகிறார்கள்? சொந்த சாதிக் கூட்டம்.

சாதி தாண்டி, மதம் கடந்து பிரியம் கொள்கிற பதின்மவயதின் நினைப்பைக் கருவிலேயே கிள்ளி எறிய முண்டுவார்கள். பிரியம் வளர்ந்து பிணையத் தொடங்கினால் ஓட ஓட விரட்டுவார்கள். “காதல் நாடகமாடி எம்குலப் பெண்டிரைக் கவர்ந்து செல்கிறார்கள்” என்ற வாசகம் ‘உத்தபுரம்’ சுவர்களுக்குள்ளிருந்து பிறக்கிறது. மந்தை மந்தையாய் மாடு ஆடுகளைக் கவர்ந்து ஓட்டிச் செல்லும் ஆநிரை கவர்தல் என்னும் பழங்காலம் போல் தங்கள் சாதி மந்தையை ஓட்டிக் கொண்டுதிரிகிறவர்கள் இங்கே தலைவராக முடியும்.

இரண்டு மாதங்கள் முன் தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்காடுகளுள்ள நரசம்பட்டி கிராமத்துக்குப் போயிருந்தேன். கிணற்றுப் பாசனம்; நல்ல காற்றடி காலம். காற்றடி இல்லாத போதும், நடந்து போனால் ஒரு பக்கமாய்ச் சரித்துத் தள்ளிவிடும் “ஆள் தூக்கிக் காத்து” எல்லாக் காலத்திலும் வீசியது.. கண் ஏறிட்டுப் பார்க்குமிடமெங்கும் காற்றாலைகள். 66 அடி கிணறு எடுத்தார் அந்த சம்சாரி. கிணற்றில் நீரமட்டம் பார்க்கலாம் என்று போனபோது, சம்சாரி சொல்வார் “மேற்குப்பக்கமா நின்னு எட்டிப் பாக்காதீங்க, காத்து ஆளை வாரியடிச்சிடும், கிழக்குப்பக்கமா நின்னு பாருங்க”
நான் எட்டிப்பார்த்தேன்.

“நீங்க நிக்கிற இடத்தில் இருந்து ஒரு நிறைமாசச் சூலி கிணத்தில் பாய்ஞ்சிட்டா” என்றார்.

“ஏன்?” கேள்வியோடு ஏறிட்டுப் பார்த்தேன்.

“ஒருத்தரை ஒருத்தர் நெனைச்சிக்கிட்டாங்க; பழகிக்கிட்டாங்க. கல்யாணமாகுமின்னயே கருவை ஏந்திக்கிட்டா. நாள் காண சூல் கூடிக்கிருச்சி. வலிகண்டு வயிறு குத்தெடுத்திருக்கு. நெறைமாசம். எப்படித்தான் இருட்டில் வந்து சேர்ந்தாளோ, நீர்ப் பாய்ஞ்சிட்டா”

“எதுக்கு இப்படி?”

“ஏன் இப்படின்னா? அவ சாம்பாக்கமார்ப் பொண்ணு. பிள்ளைபெறக்கூடாது. பெத்ததின்னும் தெரியக்கூடாது என்று நாயக்க சாதி ஆட்க போய் மிரட்டிருக்காங்க. ஈனசாதிக்கு எந்த முடிவு உண்டுமோ, அந்த முடிவை தேடிக்கிட்டா.”

வாழ்ந்து வேதனைப்படுவதிலும், உயிர்விடுதல் எளிது. ஈழத் தமிழர்களாயினும் ஈனச் சாதியினராயினும் சாவதினும் வாழ்வதற்கே பயப்படுகிறார்கள். முத்துமாரி நீர்ப் பாய்ந்ததும், தருமபுரி இளவரசன் தண்டவாளத்தில் சரிந்ததும், சுற்றி நடமாடும் பாம்பு, பூரான், தேள், நட்டுவாக்காளிகளின் விஷக்கடிக்குப் பயந்துதான் பாய்ந்தார்கள்.

தீப்பாய்ஞ்ச அம்மன் போல், நீர் பாய்ஞ்ச அம்மன் என்று ஏன் கொண்டாடப்படவில்லை? கொண்டாட அவள் என்ன வள்ளியாட்டம் மேல்சாதிப் பெண்ணா! யோசிக்க, யோசிக்க மூச்சடைப்பது போல் இருக்கிறது.

சாதிக் கலப்புத் திருமணங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெறும் அலங்கோலத்தைக் கண்டு கொண்டிருக்கிறோம். இது போன்ற சாதிமறுப்புத் திருமணங்கள் செய்துகொள்வோர் மீது ஏவப்படும் கொடுமைகள் பற்றி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறிப்பிடப் பட வேண்டியதாகும்.

“சாதிமுறை என்பது நாட்டின் மீதான ஒரு சாபக்கேடாகும். இதனை எவ்வளவு சீக்கிரம் அழிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் நல்லது. உண்மையிலேயே நாம் எல்லோரும் ஒன்று பட்டு நாட்டின்முன் உள்ள எல்லா சவால்களையும் சந்திக்க வேண்டிய வேளையில், சாதி நாட்டைக் கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது. சாதிக் கலப்புத் திருமணம் என்பது சாதி முறையை ஒழிக்க வழிவகுக்கும் என்பதால் அவை நாட்டு நலனுக்கானவை. ஆனால் சாதிக்கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்களையும் பெண்களையும் வன்முறைகளால் பயமுறுத்துவதாகவும், அல்லது வன்முறை அவர்கள் மீது கட்டவிழ்ந்து விடப்படுவதுமான அமைதி குலைக்கும் செய்திகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் எங்களுக்கு வந்த வண்ணம் உள்ளன. எங்களின் கருத்துப்படி, இத்தகைய வன்முறைச் செயல்கள் அல்லது பயமுறுத்தல்கள் அல்லது தொல்லைகள் முற்றிலும் சட்ட விரோதமானவையாதலின் அத்தகைய குற்றம் புரிவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

“இது ஒரு சுதந்திர ஜனநாயக நாடு. ஒருவர் வயது வந்த நிலை அடைந்ததும் அவனோ அவளோ தாம் விரும்பும் எவரையும் மணம் செய்து கொள்ளலாம். ஆனால் சாதிக் கலப்புத் திருமணம் அல்லது மதக் கலப்புத் திருமணம் செய்து கொண்டவரை பயமுறுத்துவதோ, வன்முறை விளைவிப்பதோ, அல்லது வன்முறை விளைவிக்கத் தூண்டுவதோ, இன்னல்கள் தருவதோ கூடாது. வயதுக்கு வந்த ஒரு ஆணோ, பெண்ணோ வயதுக்கு வந்த ஒரு பெண்ணுடனோ, அல்லது ஆணுடனோ சாதிக் கலப்பு, மதக் கலப்புத் திருமணம் செய்து கொண்டால் அந்த இணையை யாரும் துன்புறுத்தவோ, பயமுறுத்தல், அல்லது வன்முறைக்கு ஆளாக்கப்படாமலோ பார்த்துக் கொள்ளவேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள நிர்வாகத்திற்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் உத்திரவிடுகிறோம். பயமுறுத்தல், துன்புறுத்தல், வன்முறை விளைவித்தல் போன்ற செயல்களில் எவரேனும் தாமாக ஈடுபட்டாலும் அல்லது எவரின் தூண்டுதலின் பேரில் நிகழ்த்தப்பட்டாலும் அத்தகையோர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, மேலும் சட்டத்திலுள்ள வழிவகைப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உத்திரவிடுகிறோம்.

“தாங்களாகவே விரும்பி சாதிக்கலப்பு மற்றும் மதக்கலப்புத் திருமணம் செய்து கொள்வோரை கொல்லும் கெளரவக்கொலைகள் பற்றி கேள்விப்படுகிறோம். இத்தகைய கொலைகளில் கெளரவம் என்று ஏதுமில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமாயின் அச்செயல்கள் கடும் தண்டனைக்குரிய கொடிய, பிரபுத்துவ மனங்கொண்டவர்களால் நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித்தனமான, வெட்கக்கேடான கொலைகள்தானே தவிர வேறொன்றுமில்லை. இந்த முறையில் மட்டுமே இத்தகைய காட்டுமிராண்டித் தனமான செயல்களைக் களைந்தெறிய முடியும்.”
(பார்க்க: Lata Singh vs State of U.P & Another, 2006 (5) SCC 475)

கிழவிப்பட்டியும், நரசம்பட்டியும், தருமபுரியும், திருச்செங்கோடுமாய் தமிழகம் மாறிவிட்ட சூழலில் - சாதி ஒழிப்புக்கு ஒரு வாய்க்கால் வெட்ட வக்கில்லாத ஒரு இனத்துக்கு - கல் தோன்றி, மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி என்றோ, அகம், புறம் வகுத்து உலகுக்கு அளித்த முதல் சமூகம் எனவோ பெருமை பீற்றிக் கொள்ள என்ன தகுதியிருக்கிறது? உப்புக்கல்லுக்கு ஆகுமா இந்தப் பழமை பீற்றல்?

ஒவ்வொரு தமிழனின் மனசுக்குள்ளும் உத்தபுரக் கொடுஞ்சுவர் உண்டா, இல்லையா? ஈராயிரம் ஆண்டுக்கால இந்தச் சுவர் கற்களால் செங்கல்லால் காரையால் எழும்பியதல்ல. அதனினும் வலுவான இரும்பால் ஆனதல்ல; ஆனால் கல்லும் காரையும் இரும்பினும் காலத்தால் பொடியாகாத சாதி மனசால் எழும்பியது. வருணாசிரமக் கருத்தால் வகுக்கப் பட்ட இது கோட்டைச் சுவரினும் காலம் கூடியது.

உத்தபுரம் சுவர் இடிக்கப்பட்டது 2008-ஆம் ஆண்டில்: அதன் பின்னும் தொடர்ந்தது சாதி இந்துக்களின் வன்முறை; அவர்களுக்கு வக்காலத்து வாங்கி போலீஸ், அதிகாரக் கூட்டம் நடத்திய ஆயுத அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு மதுரை உயர்நீதிமன்றக்கிளை ஆணையிடுகிறது. ஆணையிட்ட நாள் மார்ச் 2012. இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. தலித் மக்களுக்கு அனுசரணையும் இல்லை. உத்தபுரம் பெண்கள் மறுபடி 18.8.2014ல் முறையீடு செய்கிறார்கள். ஆதிக்க சாதிகளுக்கும் அதிகார வர்க்கத்துக்குமான தொப்புள்கொடி உறவை வெட்டி எறியாமல் தமிழனுக்கு என்ன வேலை வேண்டிக்கிடக்கு? போராடுகிறவர்களுக்கே இந்தக் கதியென்றால், ஏப்பை சாப்பைகள் என்னாவார்கள்?

2014, ஜீலை 10ஆம் நாள் விருதுநகர் மாவட்டத்தில் சூலக்கரை என்ற கிராமம், சாதி வேற்றுமை பாராட்டாத கிராமம் என சமூக நலத்துறை தேர்வு செய்து, அரசின் ரூ 10 லட்சம் விருது பெறுகிறது. ஜூலை 17-ஆம் நாள் செய்தி வருகிறது.

சூலக்கரை தேநீர்க் கடைகளில் சாதி இந்துக்களுக்கு மட்டுமே பெஞ்சுகள்: தலித்துகள் தரையில்.

உயர்சாதிக்கு தனிக்குவளை. தரைவாசிகளுக்கு தனிக்குவளை.
வீதிகளில் நடக்கத் தடை. ஊரைச் சுற்றியே வரவேண்டும்.
தலித்துகளுக்கு தனிச் சுடுகாடு. கோயில்களில் சாமி கும்பிட அனுமதி மறுப்பு. பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கக் கூடாது.
மேல் சாதி இந்துக்களிடம் பேசும்போது குனிந்து அல்லது குத்துக்காலிட்டு உட்கார்ந்து பேசவேண்டும். எல்லா சவரட்ணையும் (வசதிகள்) சாதி இந்துக்களுக்கே.

சூலக்கரை ஊராட்சித் தலைவர் சொல்கிறார். “நாங்கள் சாதி பார்க்காமல் நல்லிணக்கத் தோடு வாழ்கிறோம்”

அப்படியானால் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் அருந்ததியர் குடியிருப்பு தனியாக ஏன்?

கிழவிப்பட்டிகள் இல்லாத தமிழ்நாட்டைக் காண்பதற்கு, பெரியார் என்ற கிழவன் ஏங்கினான். கிழவிப்பட்டி இல்லாத இந்தியாவைக் காண, அம்பேத்கர் என்ற இளைஞர் விரும்பினார்.

கிழவிப்பட்டிகள் நம் வாழ்வியலில் இருக்கிறது. இதயமே அதுவாக இருக்கிறது. கிழவிப்பட்டி இல்லாத தமிழகத்தை இனிமேல்தான் கண்டெடுக்க வேண்டும்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்