சாகாப் பொருளும் அது, சாகடிக்கும் பொருளும் அது!
ஒவ்வொரு மனிதனுக்கும் மரணநாள் குறிக்கிறான் சித்திரபுத்தன். அன்னார் குறித்துக் கொடுத்த பெயர்ப்பட்டியல் கைக்கொண்டு உயிர் எடுத்துப்போக எருமைவாகனத்தில் வருகிற எமனுக்குத் துணையாய் வருகிறவர்கள் எம்கிங்கிரர்கள்.பெரியஎழுத்துப் புராணக் கதைகளில் சிறுவயதில் வாசித்திருக்கிறோம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னையைத் துவம்சம் பண்ணிய மழைவெள்ளம் எமன் என்றால், நீர்வெளியேறும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமை, கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயின் நதிப் படுகைகள் 30மீ தொலைவுக்கு கட்டிடங்களால் நிறைந்தவை, மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்படாமை எனப் பல முதன்மைக்காரணங்கள் இருந்தாலும், நீரோடும் வழிகளைத் தடுத்து அடைத்த பாலிதீன், பிளாஸ்டிக் குப்பைகள் என்னும் எமகிங்கிரர்கள் முக்கியக் காரணம். வெள்ள வடிவுக்குப் பின் வீடுகளில், வீதிகளில் லாரிலாரியாய் குவிந்து கிடந்தன பிளாஸ்டிக் குப்பைகள். இந்தக் கேடுகாலத்திலும் நிவாரணப்பொருட்களைப் பாலிதீன் பைகளிலும் பிளாஸ்டிக் டப்பாக்களிலும் கொடுக்கிறார்கள். நகரமயமாதல் வாழ்வில் எந்த வேதனையிலும் ஒரு ஒழுங்கில்லை.
எல்லை விலகாமல் விவசாயிகள் ஒருசீராய்ப் போய்க்கொண்டிருக்க வேண்டும். சம்சாரி ஒழுங்கு என்பார்கள் அதை. பெருவாரிமழை, பஞ்சம், பனிப்பொழிவு, நோய், பூச்சித் தாக்கம் போல இயற்கை அனா்த்தங்களால் சம்சாரி ஒழுங்கு சிதைவுபடுவதுண்டு. ரசாயன உரம், மரபணுமாற்ற விதை, பார்த்தினியம், சீமைக்கருவேலம் போன்று சம்சாரியைத் துவம்சம் பண்ண நவீனப் போ்வழிகள் பலா் வந்திறங்கியிருக்கிறார்கள்.
பிளாஸ்டிக்கை ‘நெகிழி’ என்று சொல்கிறார்கள்; தமிழ்ப் பற்றாளா்கள் பயன்படுத்துகிற கலைச் சொல் ’நெகிழி’. மக்கள் கண்டுபிடித்துப் பயன்படுத்துவது சவ்வுத் தாள். சவ்வு மாதிரி மென்று, கறும்பி, கடித்து, துப்பி, அழிக்க முடியாத பொருளுக்கு சவ்வுத்தாள் என்று பெயரிட்டார்கள்.
வாழ்க்கைக்குள் புதிதாய் வந்துசேரும் பொருட்களுக்கு மக்கள் கண்டுபிடித்து பயன்படுத்தும் பல சொற்களுண்டு. தோ் நிற்கிற இடம் தேரடி, அதுபோல் கார், பேருந்துகள் நிற்கிற இடம் ’காரடி’ என்றார்கள். தேயிலையிலிருந்து உண்டாக்கும் பாணத்தை தேத்தண்ணி என்று நாக்குக்கு வாகாய்க் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
தாவரம், பயிர், பச்சைகளுக்குண்டான தண்ணீரைத் தான்ஒரு ஆளாய்ச் சாப்பிட்டு கொளுத்துப் போய் நிற்பது சீமைக் கருவேலம் என்கிற வேலிக் கருவை. கொடிய பஞ்சம் என்று வெலவெலத்துப் போகிற காலத்தில்கூட, வேலிக் கருவைச் செடி பட்டுப் போய் நான் கண்டதில்லை. மற்றவா் உணவைத்தட்டிப் பறிப்பது என்கிற வேலையை ஒழுங்குமுறையாய் செய்யும் யார் தான் குண்டி சூம்பிப் போயிருக்கிறார்கள்? ஆனால் தாயறியாச் சூல் மாதிரி, விவசாயி அறியாமல் வாழ்வைச் சாகடிக்கும் கொம்பன்களில் பேரழிவுக் கொம்பன் பிளாஸ்டிக் என்று சொல்லப்படும் சவ்வுத் தாள். நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொளுப்பது சீமைமரங்கள் என்றால் நிலத்தடிக்குள் நீரை அண்டவிடாமல் செய்வது சவ்வுத்தாள்.
நிலமும் மழையும் தாயும் பிள்ளையும் போல! மழை என்ற பிள்ளையை மடியில் போட்டு அரவணைத்துக் கொண்டே இருப்பவள் நிலம். பிள்ளையுள்ள தாய் முகம் ஈரப்பதமாகவே இருக்கும். தாயோட பிள்ளை சேராமல் செய்த பாதகத்திகள் போல இந்த மண்ணில் மழைநீரை ஒட்டவிடாமல் செய்துவிடுகின்றன சவ்வுத்தாள்கள். செம்மண், கரிசல்மண், சரள்மண், சமவெளி, மலை, குன்று, அடிவாரம் எல்லா இடங்களிலும் நீரை ஒட்டவிடாமல் வழித்து கீழே ஓடச்செய்கின்றன. பாலிதீன் கழிவுகள் மக்குவதில்லை; செம்மிப் போவதில்லை. அழுகுவதில்லை. ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்துக்குப் பறந்தாலும் மண்மேலே ஒட்டிக் கிடந்து மழைநீரை உள் இறங்கவிடாமல் தடுக்கின்றன. பேருந்துகளில், தொடா் வண்டிகளில் உண்ட பின்பும், அருந்திவிட்டும், வீசியெறியும் சவ்வுத் தாள்பைகள் மிதந்து மிதந்து நிலம் சோ்கின்றன. நீா்நிலைகளில் படிகின்றன. பைகளில் நீா் சேரச் சேர, தண்ணீரின் அடியில் பம்மிக் கொள்ளும்.
வெள்ளையாயும் பழுப்பாயும் நெல்லிக்காய்த் தண்டியில் ,தெல்லுக்காய் வடிவில் எங்கள் ஊர் வடகாட்டில் கற்கள். நிலத்தில் கல் விளையுமா என்றால், விளைகிறது. தட்டாம் பயறு பருமனுக்கு இருந்த கற்கள், நெல்லிக்காயளவு உருண்டு திரள, லட்ச வருடங்கள் கடந்திருக்கும். கலப்பை முனை வகிர்ந்து கொடுக்க, கீழே இருக்கும் கற்கள் மேலேபரசலாய் வந்து நிற்கும். வடகாட்டை விளைச்சலுக்குத் தயாராக்க, விதைக்க நிறையப் பண்டுகம் பார்க்க வேண்டும்.
பாட்டியுடன் அண்ணனும் நானும் கல்பொறுக்கி கூடையில் போட்டு காலாங்கரையில் போய்க்கொட்டுவோம். எங்கள் காட்டை உள்ளடக்கி 25 கி.மீ. தொலைவுவரை உள்ள ஊர்களின் நிலம் அவ்வளவையும் பின்னா் ’ராம்கோ சிமிண்ட்’காரன் ஆலைக்கு எடுத்துக் கொண்டானென்றால் கல்விளையும் பூமி - பொன்விளையும் பூமி என்று அவனுக்குப்பட்டிருக்கிறது. கல் பொன்னாக ஆகும் என்று தெரிந்துதான் எடுத்திருக்கிறான்.
ராம்கோ சிமிண்ட்ஸ் அபகரித்த வடகாடுகள் தவிர்த்து, மற்ற திசைக் காடுகள் நெய்க்கரிசல். இன்றைக்கு கலா்கலராய் சவ்வுத்தாள்கள் மூடிக்கிடக்கின்றன. டிராக்டா்கள் உழுது புரட்டிப் போட்டிருக்கிற உழவுகட்டிகளில் சவ்வுத்தாள்கள்; பரட்டைத் தலைக்கு ரிப்பன் வைத்துக் கட்டியமாதிரி ஒவ்வொரு செடியிலும் சவ்வுத்தாள் ஒட்டிக்கொண்டிருக்கிறது. கல்லும் முள்ளும் பொறுக்கி விவசாயத்துக்கு பக்குவப்படுத்திய நிலத்தில் ” சவ்வுத்தாள் பொறுக்க வாறீகளா” என அலைகிறது விவசாயக் குரல்.
சிறுவயதில் கம்பு (தவசம்) தானியம், பருத்தி கடைக்குக் கொண்டு போனோம், பயறு, கிழங்கு. சேவு, பருப்பு வகைகள் வாங்கிவரும் பண்டமாற்று முறை இருந்தது. ஒரு பொருள் கொடுத்து மற்றொரு பொருள் மாற்றாக வாங்கிவருவோம். நாங்கள் வளா்ந்ததினும் வேகமாக பண்டமாற்று முறை இருந்த இடத்தில் பண மாற்றுமுறை வந்துவிட்டது. பண்டமாற்று முறையில் வாஞ்சனை இருந்தது.கிராமிய மக்களின் நெஞ்சில் இருந்த வாஞ்சனையையும் வேகமாய் வீசியெறிந்தது பணம் மாற்றுமுறை.
திருவண்ணாமலை மாவட்டம் ஐவ்வாது மலையில் 70 ஆயிரம் மக்கள் வெளிஉலக வாழ்க்கை அறியாதவா்களாக வாழுகிறார்கள். இந்த மலைவாழ் மக்களிடம், ஒரு பொருளைக் கொடுத்து இன்னொரு பொருளைத் பெறும் பழைய பண்டமாற்று முறை இன்னும் உள்ளது. விலைக்குக் கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மலைக்குக் கீழே போகிற போது பணம் தேவைப்படுகிறது. பணத்தால் கீழே கீழே போய்விட்டோம் என்பதை அவா்கள் உணா்ந்திருக்கிறார்கள். ஆனாலும் வெளியுலகத் தொடா்புகளைச் சுருக்கி, உள்ளடங்கி வாழும் அவா்களையும் சுதந்திரமாக விடவில்லை சவ்வுத் தாள்கள். மலையேறி வந்து கைவரிசை காட்டுகிறது.
பண்டமாற்று இருந்த காலம் தவசம், தானியம், நெல்மணி, பயறு, கிழங்கு அத்தனை பொருட்களையும் நூலால் நெய்த துணிப்பையில் வாங்கிப் போவார்கள். துணிப்பை இல்லையெனில் பனைநார்க் கொட்டான், ஓலைக் கொட்டான்கள். ”பயன்படுத்தியதும் வீசியெறி” என்கிற நுகா்வுக் கலாச்சாரம் வந்த பிறகு, வண்டி வண்டியாய் நுகா்பொருட்கள் சந்தைக்கு வந்து அழகழகாய் வடிவமைத்த சவ்வுத்தாள் (பாலிதீன்) பைகளில் கொட்டி அனுப்புகிறார்கள். கடை வீதியில் காலடி வைக்கிற ஒவ்வொருவனும் கைவீசிக் கொண்டு போகிறான். திரும்புகிற போது கைகளில் பிளாஸ்டிக் பைகள். யாருக்கு மரணம் உண்டுமோ, இல்லையோ சவ்வுத்தாளுக்கு மரணமிலாப் பெருவாழ்வு உண்டு. முதுமையும் நோயும் தீண்டாததாய் அதற்கு மரணமிலாப் பெருவாழ்வு தந்தவன் மனுசன்.மனுசன் கண்டு பிடித்த சாகாப் பொருள் இது.
”இயற்கை அளிக்கும் மழைத்தண்ணீர், பூமிக்குள் செல்வதை பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் தடுக்கின்றன. காகிதங்கள், காய்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்ட கழிவுகளை பூமியில் போட்டால், அவை பூமியைவிட்டு நீங்க ஒரு மாதம் முதல் 2 மாதங்கள் வரை ஆகும். ’தொ்மாக்கோல்’ கப்புகள் போன்றவை 50 ஆண்டுகளும், பிளாஸ்டிக் கேன்கள் 80 முதல் 200 ஆண்டுகளும், பிளாஸ்டிக் பைகளைப் போட்டால் 50 முதல் 100 ஆண்டுகளும், பாட்டில்கள் மட்க ஒரு மில்லியன் ஆண்டுகளும் ஆகும்” என்கிறார் பேராசிரியர் திருஞானம். திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்திலுள்ள கிராமியப் பல்கலைக்கழக புவி அறிவியல் பேராசிரியா். கடைசியாய் ஒரு அணுகுண்டைப் போட்டே விட்டார் “அணுகுண்டை விட அபாயககரமானது பிளாஸ்டிக் கழிவுகள்“
இயற்கையின் நண்பா்கள் என்கிற சமூக ஆர்வலர்கள் நெகிழியின் (பிளாஸ்டிக்) தீமைகள் என ஒரு பட்டியல் தந்திருக்கிறார்கள்.
”நெகிழிப் பொருட்களை தொழிற்சாலைகளில் உறபத்தி செய்யும் போதும் மறு சுழற்சி செய்யும்போதும், அவை உருகும்போதும் வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை உடையன. சுவாசிக்கிற ஊழியா்கள், அருகில் வசிக்கும் மக்கள் தோல்நோய் முதல் புற்று நோய் வரை பாதிக்கப் படுகின்றனர். சிலருக்கு தொட்டால் கூட ஒவ்வாமை என்ற நோய் ஏற்படுகிறது. மூச்சுக் குழாய்ப் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளா்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை உண்டாகின்றன. நெகிழிப் பொருட்களை எரிப்பதால் டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளிவருகிறது. இது கூடுதல் தீமையைத்தான் தருகின்றன.
நெகிழி உறைகள் சுற்றப்பட்டு வரும் உணவுப் பொருட்களான சாக்லேட்டு, பால்கோவா போன்றவற்றில் நெகிழி வேதிப் பொருளான ’பென்சீன் வினைல் குளோரைடு ’கலந்து விடுகிறது. இதனால் புற்று நோய் ஏற்படக் காரணமாகிறது.
எளிதில் மட்காத, சிதையாத நெகிழிப் பொருட்களால் கழிவுக் குழாய்கள், சாக்கடைகள், வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு, தேங்கி துா்நாற்றம், கொசுவளா்ப்பு, நோய்கள் ஏற்படுகின்றன. நீர்வரத்துக் கால்வாய்களிலும் அடைத்துக் கொள்வதால் நீர்வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்றது. மட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளா்ச்சியையும் பாதிக்கிறது. கடற்கரை ஓரம், கடலில் எறியப்படும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வன விலங்கினங்களுக்கும் தீங்கு விளைவித்து அழித்துவிடக் கூடியவை.
’ரெக்சின்’ துண்டுகள் மீன் முட்டைகள் போல் இருப்பதாலும் பாலித்தீன் பைகள் ஜெல்லி மீன்கள் போல இருப்பதாலும் அவற்றை இரையாக நினைத்து, கடல் பறவைகள், சீல்கள், கடல்சிங்கம், கடல் ஆட்டா், டால்பின் கடல் பன்றி, ஆமிகள் போன்றவை அவற்றை விழுங்கி, குடல்களில். மூச்சுக் குழாய்களில் சிக்கி இறந்து விடுகின்றன.”
பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா? கேட்கிறார்கள் இயற்கையின் நண்பா்கள். அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து - நம்மிடமிருந்தே தொடங்குகின்றன என வழிகாட்டுகிறார்கள் ஏலகிரி மலையடிவாரத்திலுள்ள கோடியூரிலிருந்து செயல்படும் ”இயற்கையைக் காப்போம்“ (curring the Nature) என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பகவத், ராஜா ஆகியோர். “இயற்கையைத் தூய்மை செய்வீர், அழிக்காதீா்” என்று இவர்கள் ஏலகிரி மலைய்டிவாரத்தின் கீழ் ஏறக்குறைய நூறு கரங்களை இணைத்திருக்கிறார்கள். ஜோலர்ப்பேட்டை,கோடியூர், பொன்னேரி வழியாய் ஏலகிரி மலைக்குச் செல்லும் மலைச்சாலையின் இருபுறமும் வீசியெறிந்த சவ்வுத்தாள் பைகளைச் பொறுக்கிச் சேகரிக்கிறார்கள். சேகரித்த பிளாஸ்டிக் குப்பைகளை ஜோலார்பேட்டை நகராட்சி குப்பைக்கிடங்குக்கு போகிறது. ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுகளை இந்தச் சமூக சேவைக்கு ஒதுக்குகிறார்கள்.
நவம்பர் மாதம் தமிழ்நாட்டுக்கு நாசகரமான மாதம்; நசநசவென்று மழை பெய்து வீடு காடெல்லாம் வெள்ளமானது. போய்வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு போவது போல் தெரியும்; மறுபடி வீட்டு வாசலில் வந்து நிற்கும் மழை. ’இயற்கையைக் காப்போம்‘ அமைப்பினர் ஏலகிரி மலையேற முடியவில்லை. ”இந்த வாரமும் கடுமையான மழைபெய்ததால் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற முடியவில்லை; இந்தவாரப் பணியாக ’சீதா’ மரக்கொட்டைகள், காட்டுமர விதைகளைத் தூவிவிட்டு வந்தோம்” என்றார்கள். விதைகள் முளைக்க நீர்த்துளி தேவை; பெய்து கொண்டிருந்தது.
இவர்களின் சேவைக்கு சரியானதொரு நேர்வினையை ஜோலர்ப்பேட்டை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி ஆற்றிக் கொண்டிருக்கிறார்.குப்பையை மூன்று விதமாகப் பிரிக்க ஏற்பாடு செய்திருக்கிறார் (Bio mining). பிளாஸ்டிக், பாலிதீன், சவ்வுத்தாள்கள் தனீ; ரப்பர், பாட்டில்கள் குப்பை தனீ. மூன்றாவதாய் வரலாற்றுக் குப்பை. சருகு, செத்தை, இழை,தழை,வீட்டு உணவுக் கழிவுகள் போன்ற மட்கும் குப்பைகளை, உரமாகிற குப்பையை வரலாற்றுக் குப்பை (Historical waste) என்கிறார். (முன்னை வரலாறு இன்று எழுதப்படவுள்ள வரலாறுக்கு உரமாக வேண்டும் என்ற செழுப்பமான குறிப்பும் உள்ளது.) மட்காத முதல் இருவகைக் குப்பைகளை தனித்தனியாக எடுத்து மறுசுழற்சிக்கு அனுப்புகிறது ஜோலார்பேட்டைநகராட்சி. மதுரையில் இயங்கும் ஒரு நிறுவனம் மறுசுழற்சிக்கு எடுத்துச் செல்கிறது; மட்கி உரமாகும் வரலாற்றுக் குப்பையை விவசாயிகள் இலவசமாக எடுத்துச் சென்று உரமாகப் பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம் என்கிறார் ஆணையர் பார்த்தசாரதி. ஜோலார்பேட்டை நகராட்சியை முன்னுதாரணமாகக் கொண்டு பள்ளிப்பாளையம், கும்பகோணம் நகராட்சிகளும் பிளாஸ்டிக் கழிவுகளை தனிப்பிரித்து மறுசுழற்சிக்கு வழிசெய்திருக்கின்றன.
“நீ தூக்கிச் செல்லும் பாலிதின் பைகள்கள்ஏலகிரிமலை இயற்கை காப்புத் தோழர்கள் எல்லா இடங்களிலும் வீடுகளிலும், கடைகளிலும் தொங்க விட்டிருக்கிறார்கள். ”எழுத முடியாதவர்களுக்காக எழுதுவோம்; பேச முடியாதவர்களுக்காகப் பேசுவோம்“ என்கிறார்கள். ஆனால் செய்ய முடிந்தவர்கள் மக்கள் என்கின்றனர்.
தேசத்தின் தூக்குக் கயிறு”
தேசத்தைத் தூக்கிலிடும் கயிற்றைத் தவிர்க்க, எந்தச் சாமானையும் வாங்கிவர வெளிப்படுமுன் கையில் துணிப்பை எடுத்துச் செல்லும் எண்ணம் மனசில் தோன்ற வேண்டும்.
“துணிப்பை என்பது எளிதானது, தூர எறிந்தால் உரமாவதுமலை நோக்கிச் செல்லும் சுற்றுலாப்பயணிகளிடம் இப்படிப் பாடுகிறார்கள். கவிதை வடிவிலான வாசகத்தை அச்சிட்டு துண்டுப் பிரசுரங்களை வழங்குகிறார்கள். மீன்கள் மான்கள் என்று எதுகை, மோனையைச் சரிசெய்ய பாடல் வரலாம். யதார்த்தத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா எனக் கேட்போருக்கு கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் மாண்ட இரட்டை மான்கள் சாட்சி.
பிளாஸ்டிக் என்பது அழகானது, வீசி எறிந்தால் விஷமாவது.
மீன்கள் முதல் மான்கள் வரை மாண்டு போவது
ஈக்கள் முதல் பூக்கள் வரை மலடாவது”
இராமநாதபுரத்தில் குதிரைகள் நிறைய உண்டு.நகராட்சிப் பகுதிகளில் பாலிதீன் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவைகளில் மிச்சமீதியாய் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களுக்காக மாடு, குதிரை போன்ற கால்நடைகள் உட்கொள்கின்றன. கால்நடைகளுக்கு நான்கு இரைப்பைகள் உள்ளன.முதலில் உணவை வேகமாக உட்கொண்டு இரைப்பையில் சேமித்துக் கொள்ளும். அதன் பின் உணவை மெதுவாக அசைபோடும். ஆனால் பாலிதீன் பைகள் அப்படியே இரைப்பையில் ஒட்டிக் கொள்வதால், செரிமான சக்தி இழந்து கால்நடைகள் இறந்து போகின்றன. சமீபகாலமாய் இராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் குப்பைகளால் இறந்த கால்நடைகளின், குறிப்பாக குதிரைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.
புதுச்சேரியின் நன்னீர் ஆதாரம் ஊசுட்டேரி. 15-10-2008 முதல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது, புதுச்சேரியின் ஆகப் பெரிய ஏரியான இது சங்கராபரணி ஆறு மற்றும் வீடூர் அணையிலிருந்து வரும் தண்ணீரால் நிறையும். தற்போது மழையின் கருணையால் நிரம்பி வழிகிறது.
“ஏரியின் தொடக்கப்பகுதி முதல் பத்துக்கண்ணு வரையுள்ள கரைப்பகுதியில் ஆபத்தான எலெக்ராணிக் கழிவுகள் (E-Waste),பிளாஸ்டிக் கழிவுகள், உணவுக் கழிவுகள், குப்பைகள், மருத்துவக் கழிவுகளை மக்கள் நடமாட்டம் இல்லாத வேளைகளில் மர்மநபர்கள் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். காற்றடி காலத்தில் இந்தக் குப்பைகள் ஏரியை நாசப்படுதுகிறது.இங்கு படகு குழாமிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலிதீன் பைகளை ஏரியில் வீசி விட்டுச் செல்வதால் நன்னீர் நாசமாகிறது. எதிர்வரும் காலத்தில் ஊசுட்டேரி குப்பை கொட்டும் தளமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. ஏரியைத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, ஏரியில் எலெக்ரானிக் கழிவுகள், பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் போன்றவைகளைக் கொட்டிவிட்டுச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முனைவர் செல்வமணிகண்டன் மனு அளிக்கிறார். இவர் புதுச்சேரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர்.
இவரின் இந்த முறையீட்டை செய்தித்தாள்களும் சுமந்து சென்றன. தொடர்ந்தும் இதன்பொருட்டு இந்த அமைப்பினர் குரல் கொடுக்கிறார்கள். முறையீடு யாரிடம் அளித்தார்கள்? ஆளுநர், முதலமைச்சர், தலைமைச் செயலாளர், ஏரியிருக்கிற உழவர்கரை நகராட்சி ஆணையர். இவர்கள் யார்? தாயறியாச் சூலா என்பது போல் இவர்கள் அறியத்தான் ஏரியை நாசப்படுத்தும் கொடூரம் நடக்கிறது.ஒரு உண்மை தெளிவாகிறது. பார்த்தசாரதிகள் எல்லா இடத்திலும்இருக்கமாட்டர்கள் என்பது அது.
மக்களின் வாழ்வியல் ஆதாரப் பக்கங்களைக் கிழிக்காமல், மலையையும் வனத்தையும் அழிக்காமல் முதலாளிகள் வளர்ச்சி என்ற வார்த்தையை எழுத இயலாது. கீழான வாழ்நிலையிலிருந்து மக்களை ஒரு அங்குலமாயினும் உயா்த்த முடியுமென்றால் அதுவே வளா்ச்சி. புதுப்புது தொழிற்சாலைகள் என்ற பெயரில் பிளாஸ்டிக் தீமை சமுதாயக் கேடாகக் கலந்து விட்டதற்கு யார் காரணம்? பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என்ற போர்வையில் நவீன விசவாயுக் கூடங்களுக்கு (Gas champers) ஏன் அனுமதி தருகிறார்கள்? சூழல் கேட்டுக்கு வித்திடும், மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை அழிக்கும் ‘பிளாஸ்டிக்’ உற்பத்தியைத் தடை செய்ய வேண்டும் என்பதை சிந்தித்தார்களா? ‘தூய்மை இந்தியா’ அறிவிப்பும் “மது வீட்டுக்கு, நாட்டுக்கு கேடு” என்னும் வாசகம் போல்தானா?
”மனிதனின் நுகா்வுக் கலாச்சாரம் பூமியின் ஆயுளை ஒவ்வொரு நாளும் சத்தமில்லாமல் குறைத்து வருகிறது” பேரா.திருஞானம் கூறுகிறார். எனக்கு அது சரியாகப் படவில்லை; சத்தம்போட்டுத்தான் அழித்து வருகிறார்கள் - வளர்ச்சி என்ற பெயரில்.
கருத்துகள்
கருத்துரையிடுக