மொழி புரளும் பூமி


உடம்புக்கு சௌகரியமில்லாமல் போனது பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார். பெயர் சின்னப்பழனி.

“ரொம்பப் பாடுபட்டுட்டேன் (நலிவடைஞ்சிட்டேன்), கொஞ்சம் உடம்பு வாசியானது; மனசு வாசியாகலை. ஊரில முன்னோர் சமாதி உண்டும். விடிஞ்சதும் கொட்டார அடியில் (தோட்டம்) இருக்கிற சமாதிக்குப் போவேன். உக்காந்து தியானிப்பேன். திரும்புகாலில் சாந்தமான மனசு கூடவே வரும். சாந்தமான மனசு இருக்கே, அது அபூர்வமான பொருள்”

சாந்தமான மனசை நீங்களும் நானும் தொலைத்துக் கொண்டிருந்தது போல, 50 வருடங்களாக அவர் தொலைத்துக் கொண்டிருந்தார். கிராமத்தில் அய்யாவுக்கு அய்யா (தாத்தா) சமாதி. தாத்தாவின் காலடியில் கிழக்குப் பார்த்து உட்கார்ந்து கொள்வார்.

“சூரிய ஒளி கண்ணுக்கு நல்லது. காலை, மாலை ரெண்டு பொழுதும் கண்ணை விரித்து சூரியனை உள்ளுக்குள் இழுக்க வேண்டும்”
இழுத்தார். ஒளி உள்ளிறங்கி, கண்ணின் ஒளி கூடியது.

“அப்ப சம்சாரம் கூட வந்திச்சில்லே” விசாரித்தேன்.

வரவில்லை. வந்திருந்தால் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியிருக்காது.

“அவ வந்தா நமக்கு என்ன தேவை ஊர்ப்பக்கம் போக” என்றார் கண்களை மூடி.

“பெங்களுர்ல பேத்தி கைக்குழுந்தை. அங்க பிள்ளை தூக்க ஆளில்ல. பேத்தி மேல் கொண்டுவுக்கு (கொண்டம்மா) அவ்வளவு வாஞ்சனை. பிள்ளை வளர்க்கிறேன்னு, எல்லாத்தயும் போட்டது போட்ட மேனிக்கி ஆறு மாசம் போய் இருந்துட்டா. கொண்டு இருந்தா, நான் ஏன் போறேன்; அப்பத்தான் உடம்புக்கு சீக்காகிப் போச்சு. “இத்த உடம்புக்கு இரும்பத் தின்னுங்கிற” மாதிரி, நம்ம எங்க இரும்பத் திங்கிறது; நமக்கு முன்னோர் சமாதிதான் இரும்பு.”

வீட்டுக்காரியை கொண்டு, கொண்டு என்றுதான் கூப்பிடுவார். சின்னப் பழனிக்கு உடல் நலிவடைந்ததற்கான மூலம் எனக்குப் பிடிப்பட்டது.

ஓட்டல் சாப்பாடு.

எல்லோருக்கும் போல அவருக்கும் கடைச் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை. அவர் வாழ்ந்தது நகரத்தில்; வேலை செய்வதும் அந்த நகரத்தில். கொண்டம்மா இல்லாமல் வேலைக்குப் போவதும், ஓட்டலில் சாப்பிடுவதும் தெருக்காரா் எல்லோரும் அறிவார்கள். பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். யாருக்கும் வேர்த்தா வடியுது கண்டு கொள்ள? உப்பு, புளிப்பு, உரைப்பு அள்ளி அள்ளிப் போடுவதின் இன்னொரு பெயர் உணவுக் கடை. வயிறு மல்லுக்கட்டியது. வயித்துச் சண்டை ஆறுமாசமாய் நடந்து தோற்றுப்போன அவர் முன்னோரிடம் சரணடைந்தார்.

“வீட்ல அப்பளம் பொரிக்கிறது; பெறகு கொழம்புக்கு, தாளிக்க, தோசைக் கல்லுல தேய்க்கன்னு உபயோகமாக்குறோம்; ஓட்டல்ல முதல் எண்ணெயில வடை. அதுக்குப் பெறகு அதே எண்ணெயில போண்டா, பக்கடா, பஜ்ஜி, காரச் சேவு – வௌங்குமா? முதல் எண்ணெயில கிடைச்ச ருசி, அடுத்தடுத்து கெடைக்காது. எண்ணெய் கருப்பாகி ‘கிறீஸ்’ மாதிரி சுண்டிப் போகிறவரையிலும் விட மாட்டான். அப்பத்தான் வயிறு கெட்டது. என்ன வைத்தியம் பார்த்தும், அதை பொல்லம்பொத்த (சீர்படுத்திட) முடியாமல் போனது” அவர் விரித்துப்போட்ட இரண்டாவது காட்சி இது.

“நிஜம்தான். யாரு இல்லேன்னு சொல்லுவாங்க”
பதிலளித்தேன்.

பாலிய காலத்தில், கிராமத்தில் வரகு, கம்பு தான் உணவு. சில புஞ்சைகளில் வரகுப் பயிர் குத்துக் குத்தாய் முளைச்சிருக்கும். ஒன்னுபோல முளைப்பிருக்காது. விதைப்பு லட்சணம் அப்படி. வரகு விதைக்கையில், கைக்குத்து அள்ளி, விரசி வீச வேண்டும. ஒரே சீராகப் போய் விழுகிறவாக்கில் வீசியிருந்தால், வரிசை பிடித்தது மாதிரி பயிர் ஒன்னாத் தெரியும். வரகுக்குத் தோதான காடு. மேப்பாகம் கரிசல்; மூணு முழம் கீழே சரள். தாண்டினால் செம்மறியாடு போல் செம்பாறை. சரள் தண்ணீரைப் பிடித்து வைத்துக்கொண்டு, பயிர் உறிஞ்ச, உறிஞ்ச மேலெடுத்துத் தரும். வரகு, கம்பு - போன்ற புஞ்சைத் தானியங்களுக்கு சரியான காலமழை இரண்டு, மூன்று பெய்தால் போதும் இப்பேர்ப்பட்ட மண்ணில்.

தை மாதக் குளிர் பகல் 11 மணி வரை விடாது. வரகுத்தாள் ஈரமாக, அறுபதத்தில் இருந்தால், ஒடியாது; தானியமணி உதிராது. பண்ணரிவாள் போட்டு, அறுத்துக் குவித்து விடுவார்கள். வரகும் கம்பும் சாப்பிட்டு எண்பது, தொண்ணூறு வாழ்வது முன்னைய காலத்தில் பெரிசில்லை;

“அந்த வயசில களத்து மேட்டில், கிணற்றங்கரையில் கிடக்கும் இளவட்டக்கல்லை அத்தாசமாய் தூக்கிப் போட்டிருக்காங்க. யாரு? எங்க தாத்தா. அவரோட சமாதிதான் ஊர்ல இருக்கு”

சின்னப்பழனி பேசியபோது, இடையில் ஒரு வெட்டுப் போட்டேன்.

“இன்னைக்கு எல்லாத்தையும் மிஷின் செய்யுது. குனிய வேண்டாம், தூக்கிப்போட வேண்டாம். பொக்ளின் மிஷின் செஞ்சிரும்”

“ஆமாய், மனுசன் பெலகீனமாப் போய்ட்டான்.”

வீடு என்றால், ஆட்டுரல், அம்மிக்கல், திருகை – எந்த வீட்டிலும் இரண்டுக்குக் குறைவில்லை. பெரிய வீடுகளில் மொத்தமாய் வரகு திரித்து வைத்துக் கொள்வார்கள். ” ஒரெ மானக்கி அஞ்சாறு திருகைகள் அரைக்கும்”.என்றார். அப்போது சின்னஞ்சிறு பிள்ளைக் காலத்துக்குப் பறந்து போனார்.

ராத்திரி வரகுச் சோறு, பகலில் கம்பஞ்சோறு. காட்டுச் சோலிக்குப் போய்த் திரும்பி வந்து வரகரிசியை உலையிட்டு அவித்து இறக்க கணநேரம் ஆகாது. அது உலையில் இருக்கிற போதே, உரலில் கம்பரிசி போட்டு இடிக்கிற சத்தம் ஆரம்பிக்கும். வரகஞ்சோற்றை இறக்கிவிட்டு, கம்புக்கு உலை ஏற்றி விடுவாள் பொம்பளை. கம்பஞ்சோறு கிண்டி, மூடிவைத்து விடவேண்டும். சூடாய் எடுத்துப் பரிமாறினால், அளவு குறையும். அப்போதப்போது சாப்பிடாமல், இரவு ஆக்கி காலையில் சாப்பிடுவது கம்பஞ்சோறுக்கு இலக்கணம். சோறு நிறையக் காணும்.

“கம்பஞ் சோறுக்கு தோதான கொழம்பு எது, சொல்லுங்க”

கேட்டார் சின்னப் பழனி.

“கருவாட்டுக்குழம்பு”

சபாஷ் போட்டார்

“கம்பஞ்சோறு, கருவாட்டுக்குழம்பு; குதிரைவாலிச் சோறு, கோழிக்கறி” என்பது கரிசல் சொலவடைகள்.

“குதுப்பு மீனு கேள்விப்பட்டிருக்கீகளா? குதுப்பு (மீனுக்) கருவாடு அவ்வளவு ருசியாயிருக்கும். குதுப்பைக் கருவாடு குழம்பு வச்சா, வாசனை ஊர்முகணையில நமமள வான்னு கூப்பிடும்”

“அப்படிக் கூப்பிட்டு நானும் போயிருக்கேன்” என்றேன்.

நான் ரகரகமான மீன் சுவைத்துப் பழகியவன். ஊருக்கு மேற்கில் இருப்பது கருத்தேபட்டி (கருத்தையாபட்டி). அந்த ஊர் மன்னாரும், என் சின்னையாவும் (சித்தப்பாவும்) வெள்ளன எழுந்து ஓலைப் பெட்டியுடன் வேம்பார் நடந்தார்கள். எங்கள் கிராமத்திலிருந்து வேம்பார்க் கடற்கரை 20 கி.மீ. அந்தக் காலத்தில் சைக்கிள் இல்லை. ஓட்டிப்போக சாலை இல்லை. ஒத்தையடிப் பாதையில் ஊடுகாட்டு வழியே ஓட்டமும் நடையும். வேம்பாரிலிருந்து ஓலைக்கடகம் நிறைய முங்க முங்க மீனோடு திரும்புகையில் அதே ஓட்டமும் நடையும். களையெடுப்பு, கதிரறுப்பு, களத்து வேலை என்று போன சனம் பின்னேரம் 3-மணிக்குத் திரும்பியிருக்கும். மகசூல் காலம்; கையில் துட்டுப்பழக்கம் தாராளமாயிருந்தது. ‘உசந்த கைக்குப் பணியாரம்’ என்பது போல், முன்னக் கூட்டி வந்தவர்களுக்கு மீன்.”

“இப்ப அதெல்லாம் நெனைக்க முடியுமா?” முன்னால் இருக்கிற எந்தப் பொருளும் எரிந்துவிடும், அவர் மூச்சுக்காற்றில் வெக்கை பரவியது.

‘அத்தர் பான்ஸ் கொழுக்கட்டை’யென்று கை ஊன்றிக் கரணம் அடித்தாலும் பால்யம் திரும்பாது.இளம்பருவமும் திரும்பவராது. சிலம்பம் சுழற்றிய இளவட்ட வயதும் இனி திரும்பாது. பழைய ருசி மட்டும் திரும்பத் திரும்ப நாக்கில் வந்து ‘ரட்ணக்கால்’ போட்டு உட்கார்ந்து கொள்கிறது.

“வயசாளிக எல்லாம், ஊரைவிட்டு எழும்பிப் போய்ட்டாங்க. யாரும் தட்டுப்படல. பொருள் தட்டுப்பாட்டை விட, மனுசத் தட்டுப்பாடுதான் இப்பக் கிராமத்தில் ஜாஸ்தி. மகன், மகள் எங்க தொழில் பாக்கிறாங்களோ, அங்க இடப்பெயர்வு ஆகிட்டாங்க. – என்னையப் போல! வெளியே விரிவடைய விரிவடைய, உள்ளே காலியாகிருச்சு. பேச்சுத் துணைக்கு ஆள் தேடிப்போனா ‘மொச்சிக் கம்பில வில்லேத்துற மாதிரி’ இருக்கு”

கி.ராஜநாராயணன் சொன்னார் ”இன்று 03-11-2013-ல் ஒரு செய்தி கேட்டென்; ஊரிலிருந்து பிரபி வந்திருந்தான்; நாச்சியார்புரம், கோவிலாபுரம் ஊர்களிலில் இப்போ யாருமே இல்லை என்றான்.”

"என்னடா சொல்றே", பதட்டமாய்க் கேட்டேன்.

“நகர முடியாதகிழடு கெட்டெக மட்டுந்தான் கெடக்காக.”

இனி ஓரிரு தினத்தில் சின்னப்பழனியும் புறப்பட்டுப் போய்விடுவார். முன்னோர் சமாதியோடு ஊரும் ஒரு சமாதியாகிவிடுமோ?

எல்லாம் சொன்னார்; முக்கியமான ஒரு விசயத்தை செல்லாமல் விட்டதாகப்பட்டது.

“முக்கியமா ஒன்னை விட்டுட்டீங்க”

ஏறிட்டுப் பார்த்தார். நரைத்த புருவங்கள் இரண்டு குதிரைவாலிக் கதிர் போல் வளைந்தன.

தார்க்கம்பு, காயடிகம்பு, சாட்டைக்கம்பு,
செதுக்கி, புல் செதுக்கி, பண்ணருவா, கொத்துப் பண்ணருவா,
பிடிகயிறு, மூக்கணாங்கயிறு,
பூணாம்பூணாம்னு, கொக்கு முக்காடு, கருங்குடலைக் கையில ஏந்திக்கிட்டு,
ஆலாப்பறக்கான், நல்ல சீருக்கு சாம்பீட்டான்,
பெரிய ஆரியவித்தை, அல்லாவித்தை,
அவரு சண்டாக்கிருவாரு, சீமையை வித்தவ, சாவரஞ் செத்தபய,
தட்டாசாரி வீட்டுக்குப்பை, கொந்தாங் கொள்ளையா,
கூசாக்களித்தனம் பண்றான், சட்டடியா கெடக்காரு,
ஆடு மொடையடிக்கி,
இன்னும் இன்னும் ஏகப்பட்ட சொற்கள் காணாமல் போய்விட்டன. “பழைய சொற்களைக் கேக்கக் கூடியதா இருக்கா?”

“மக்களே காணாமப் போய்ட்டபோது, பழைய பேச்சுக்கு இடமுண்டா? பழைய வார்த்தைகள் இல்லே; எல்லாம் புரண்டுபோய்க் கெடக்கு” என்றார்.

வேளாண்மையை நம்பிய வாழ்க்கை இருந்தது. வேளாண் வாழ்க்கை காணாமல் போனதுபோல், அந்தமானைக்கி வார்த்தைகளும் உடன்கட்டையேறிவிட்டன.

இனி அவைகளை மீட்டெக்கக் கூடுமா? வாழ்வியல் மாறிப் போனது. வாழ்க்கை புரண்டு போகிறபோது, எல்லாமும் புரண்டு கொடுக்கும்.
மொழியும் புரண்டு போகும்.

“தமிழ் மக்கள் பேச ஆரம்பித்துவிட்ட காலத்திலிருந்தே, இதே இந்தத் தமிழ் மொழிதான் பேசிக்கொண்டு வருகிறார்கள். அதில் சில சொற்கள் வந்து சேருவதும், பிறகு அவை காணாமல் போய் விடுவதும் எந்த மொழியிலும் வழக்கம் தான்; புதிதாக வந்து சேர்ந்த நாணயங்கள் பிறகு காணாமல் போய்விடுவது போல“
இப்படி கி.ராஜநாராயணன்.

“நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் விசயம் தெளிவாகப் பிடிபடுகிறது. ஒரு காரியம் செய்துகொள்ள வேண்டும் - வட்டார வழக்காறுகளை ஆவணங்களாக்கி, வழக்குச் சொல்லகராதிகளாக்கி பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்தக் காரியம் மொழியைப் பிடித்து வைத்துக் கொள்ள அல்ல; காலஓட்டத்தில் சமுதாயம் எப்படிப் புரண்டு வந்தது என்பதைத் அறிந்து கொள்ள. முன்னோர் நடந்து வந்த வரலாறு நமக்கு வேண்டுமா, வேண்டாமா? ஒரு வழக்காற்றின் வரலாற்றையும் – காலம், காரணம், பிறப்பு, வளர்சிதை மாற்றம் என பூர்விகத்துடன் பதியப் படுத்த வேண்டும். செய்தால் கூடுவிட்டுக் கூடு பாயும் பறவைகளை போல் எந்தக் கூட்டில் எந்தப் பறவை அடந்தது என்று தேட வேண்டிய தேவை இருக்காது. கூடுகளே அற்ற பறவைகளைத் தேடிக் களைப்பதும் இருக்காது.”

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்