கணவதி அம்மா


1

கி.ரா.வின் எடுத்துரைப்பு ஒரு சொக்குப்பொடி; கணவதியம்மாளின் நிலை குறித்து எழுதுகையில் கைச்சொடுக்கில் வருகிறது அந்தச் சொக்கு. அம்மா, மாடிப்படியிலிருந்து இறங்குகையில், கடைசிப்படி என்று நினைத்துக் கால்வைத்து சறுக்கி விழுந்துவிடுகிறார்; ‘சட்டடியாய்’படுத்துவிட்ட அம்மாவை நினைத்துக் கலக்கமாகி,
“இடி விழுந்தான் கூத்தை
இருந்திருந்து பாரு
என்கிற மாதிரி ஆகிவிட்டது கதை”
என்று பேச்சிடையில் துயரத்தைப் பகிர்ந்துகொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை இடுப்பு வலி அவரை மீண்டு எழவிடவில்லை. கச்சிதமாய் இடுப்பு ‘பெல்ட்’ அணிந்த பிறகும் முன்புபோல் கதியாய் நடமாட முடியவில்லை. இந்த உயர் ரக ‘பெல்ட்’ கி.ரா இணையரை இம்முதியவயதிலும் தத்தெடுத்துக் கொண்ட திரைக்கலைஞர் சிவகுமார் வாங்கிக் கொடுத்தனுப்பியது.

ஜெமினி திரைப்பட நிறுவனம் தயாரித்த அவ்வையார் திரைப்படத்துக்கு புதுமைப்பித்தன் முதலில் கதை வசனம் எழுதினார். நீண்ட ஆயுளைத் தரும் என்று கருதிய நெல்லிக்கனியை அறிவுத்தீட்சண்யம் கொண்ட அவ்வைக்கு அதியமான் வழங்குகிறான். இந்த இடத்தில் ஔவை பேசுவதாக ஒரு வசனம் வரும்: “உலகத்துக்கு வருவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. போவதற்கு எத்தனையோ வழிகள் உண்டு. அத்தனை வழிகளையும் இந்தச் சிறு நெல்லிக்கனி அடைத்து விடுமென்றா நினைத்தாய் அரசனே?” என்று அவ்வை கேட்பதாக வரும். அதியற்புத வசனம். அதுபோல் எத்தனை உபகரணங்கள் பூட்டினாலும் மருந்துகள் உண்டாயினும் “ஏய் என்னை யாரென நினைத்தாய்?” என இடுப்புமுறிவு சன்னம் சன்னமாய் ஆயுளை அரித்துத் தின்று கொண்டே வந்திருக்கிறது. இறுதியில் 25.09.2019 அன்று சரியாகக் கி.ரா 97 நிறைந்த 10ஆம் நாள் இடிவிழுந்துவிட்டது.

கீழே விழுந்து இரண்டாம் நாள் மாலை அம்மாவை, புதுச்சேரி கதிர்காமம் மருத்துவமனையில் பார்த்தபோது, அம்மா சொன்னார், “அய்யா, ரொம்பப் பயந்து போய்ட்டாரு. நீங்க அவரைக் கவனமாப் பாத்துக்கோங்க.”

ஒரு பஞ்சாபிக் கவிதை பேசுகிறது.
“ஏரியின் நீரில் நதி ஓடுகிறது.
ஒவ்வொரு நதியிலும்
அமைதியான ஏரி இருக்கிறது.”
அது நீர் எனப் பார்க்கிறவர்களுக்கு ஏரி, நதி என இரண்டாகத் தென்படுகிறது. ஆனால், ஒன்றில் ஒன்று இருக்கிறது. அதுபோலத்தான் ஏரியும் நதியுமான அம்மாவும் அய்யாவும்; அவர்கள் ஓருரு.

தன்னின் முழு உருவாகிய அம்மா, சட்டடியாய் படுத்துக்கிடப்பது பற்றி கி.ரா எழுதுகிறார்
“தோளுக்குத் தோளாக வாழ்ந்துவந்த எனது ‘அய்ராவதம்’ சாய்ந்துவிட்டது: நேரங்கெட்ட நேரத்தில் எத்தனைபேர் வந்தாலும் ருசி குறையாமல் பசி தீர்த்திடுவாள். காட்டிலும் மேட்டிலும் உடம்பைப் பிழிந்து உழைத்தவள், உழைத்ததுக்கெல்லாம் சேர்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள்.”

தமிழகத்து ஆளுமைகள், இலக்கிய ஆளுமைகள், அறிவாளுமைகள் பலரும் தன் இல்லத்து ‘பெண் ஜீவன்’ பற்றி பெரும்பாலும் பதிவு செய்ய குறையை கி.ரா.வின் சொற்கள் நிவர்த்தி செய்துள்ளன.

ஆலத்தின் ஒற்றை விழுது இது; ஒட்டுமொத்த விருட்சம் நூலாக வெளிவருமென கி.ராவிடம் எதிர்பார்ப்போமாக.

2

புதுச்சேரி லாசுப்பேட்டை உழவர் சந்தைக்குப்போய், காய்கறி, கீரை, கனிகளால் நிரம்பிய பையைச் சுமந்து நடப்பேன்; தள்ளாடியபடி என்று சொல்ல இரு காரணங்கள் - கால் முட்டிவலி; காய்கறிச் சுமை. உழவர் சந்தையைக் கடந்து கி.ரா வீடு. நானிருக்கும் வீட்டிலிருந்து உழவர் சந்தைக்குப் பேருந்து. அங்கிருந்து திரும்புகாலில் கி.ரா மகன் பிரபி, அல்லது வெங்கட சுப்புராய நாயகர் தரும் இருசக்கர வாகன சவ்வாரி.

25.08.2019 ஞாயிற்றுக் கிழமை: சந்தைக்குப் பின் நேரே கி.ரா.விடம் போய் “அம்மாவைப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்” என்று பார்த்தபோது, அம்மா இல்லாத அறை தெரிந்தது. சூரியன் அற்ற காலை!

“அம்மா இல்ல. மருத்துவ மனையிலிருக்கா” என்றார் கி.ரா.

“மறுபடியுமா” அதிர்ச்சி.

ஒருமாசம் முந்தி குலூனி என்ற தாயாரம்மா மருத்துவமனையில் சேர்ந்திருந்தனர். அம்மா மேனியும், முகமும் பூதலிப்பாய் மலர்ச்சியோடு இருந்தது. தாயாரம்மா மருத்துமனையிலிருந்து வந்து ஒரு வாரம் ஆகியிருக்கும். இப்போது அரசு மருத்துவமனையில் இருதயநோய்ப் பிரிவு.

அரசு மருத்துவமனையில் பார்த்தபோது, முகம் சுருங்கி, உடல் சதுரம் குறைந்துவிட்டது. மருத்துவமனைக்கு நான் போயிருந்த ஞாயிறன்று கிராவை அவர் மூத்த மகன் திவாகர் தனது காரில் அழைத்து வந்தார். இளையமகன் பிரபியும் நானும் அம்மாவுடனிருந்தோம். எதற்கும் கலங்காத கி.ரா கரைந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். அன்றைக்குக் கண்கள் கலங்கியிருந்தன.

ஒரு மணிநேரம் கழிந்தது. “அய்யா, இக்கடனே உண்டேன்னு செப்பரு” (அய்யா இங்கயே இருக்க விரும்புகிறார்) பிரபி அம்மாவிடம் சொன்னார்.

“உண்டாரா?” தெலுகில் அம்மா கேட்டார். பிறகு அவரே சொன்னார் “தேனிகி இக்கடனே உண்டவால? நுவ்வு உண்டதானிகி வாரு தேனிக்கி?” (ஏன் அவர் இங்க இருக்கனும். அதான் நீ இருக்கியே, அவரு எதுக்கு இருக்கனும்). எங்களைப் பார்த்தபடி ஒருச்சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தவர் தன்னுஷாரற்று இன்னொரு பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டார்.

“ஏன் அரசு மருத்துவமனை?”

திடீரென அம்மாவால் மூச்சு விட முடியாமல் ஆயிற்று. பதறிக்கொண்டு, ஈரோடு மருத்துவர் ஜீவானந்தத்தைத் தொடர்பு கொண்டேன். “உடனே மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள். அவசர சிகிச்சைப் பிரிவில் அவர்களால் தாம் மூச்சுத்திணறலைச் சரிப்படுத்தமுடியும்” என்றார். மூத்த மகன் திவாகர் காரில் அரசுப் பொது மருத்துவமனையில் இதயநோய்ப் பிரிவில் உடனே போய்ச் சேர்த்தனர்; இருதய மருத்துவர் சொன்னாராம், “இவ்வளவு தாமதமா வந்திருக்கிறீங்க. கொஞ்ச நேரம் தாமசித்திருந்தா விபரீதமாயிருக்கும்.”

மாரடைப்புக்கு முன் வருகிற மூச்சுத் திணறல்; அது அம்மாவைச் சோதனை செய்து பார்த்துவிட்டுத் திரும்பிப் போயிருக்கிறது. இன்றைக்கு வளர்ச்சி பெற்று, புதிய தொழில் நுட்பங்களுடன் உச்சத்திலிருக்கும் மருத்துவமுறையா, மூச்சுத்திணறலா யார் முதலில் வெற்றி பெறுவது என்னும் உயிர்ப் பந்தயம் நடந்திருக்கிறது. பந்தயத்தில் அம்மா தற்காலிகமாக வென்றிருந்தார்.

கி.ரா ‘ஈஸிசேரும்’ சாய்மானமுமாக இருப்பார். மேற்கே பாத்து உட்கார்ந்து இருக்கையில் பின்னால் நடந்து வரும் ஓசை அடையாளம் சொல்லும். “வாங்கோ” என்று அவர் குரல், வருகிற புதிய ஆளை வரவேற்கும். ஓசையில் பலவகை. பழைய ஓசை, புதிய ஓசை எனப் பழக்கப்பட்ட புலன் வேற்றுமை அறியும்.

கி.ரா.வின் சாய்வு நாற்காலி இப்போது தெற்குப் பார்த்து அம்மாவின் அறை நோக்கித் திரும்பியிருந்தது. பார்வையில் அம்மா எப்போதும் இருந்தார். பேச்சு பேச்சாக இருக்கிறபோது, கி.ரா.வின் பார்வை அம்மாவின் மேல் அமர்ந்திருந்தது.

ஈரோட்டிலிருக்கும் மருத்துவர் ஜீவானந்தம் நேரில் பார்த்துபோக வந்திருந்தார்.

“அம்மாவைப் போல் காப்பாற்றியிருக்க வேண்டிய பல உயிர்கள், பிராணவாயு உருளைகள் (Oxygen Cylinders) இல்லாததின் காரணத்தால், நம்மை விட்டுப் போயிருக்கின்றன” என்றார்.

“ஒரு பிராணவாயு உருளை, ஒவ்வொரு ஊரிலும் அவசியமாய் இருக்க வேண்டியது பலஊர்களில் இல்லை. சிறு நகரங்களில் வைத்தாவது பேணலாம். ஒவ்வொரு ஊரிலும் பொதுவான ஊராட்சி மன்ற அலுவலகத்திலாவது வைக்கலாம். Animator – Mini Primary Health Centre என்ற மருத்துவ ஊழியர்கள் ஒவ்வொரு ஊராட்சிப் பகுதிக்கும் மருத்துவ நலம் காக்க நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு பிராணவாயு உருளை சிறிசு 2000 ரூபாய் முதல் 2500-க்குள் கிடைக்கும். ஒவ்வொரு ஊரிலும், ஏன் ஒவ்வொரு வீட்டிலும் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அந்த டியூபை வாயில் வைத்துப் பொருத்திக் கொண்டால், பக்கத்து, சிறு, பெரு நகரங்களின் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்துவிடமுடியும்” என்றார் மருத்துவர் ஐயா ஜீவானந்தம்.

மாரடைப்பு – எந்த வயதில், எந்த நேரத்தில், எந்தப் பருவத்தில் வந்து தாக்கும் என்று எவரும் சொல்லிட முடியாத நிலை; பட பட-வென வந்து சடாரென முடித்துவைக்கும்; இன்னதுதான் என்று இனங்காணுதற்கு முன்னம், முற்றுகையிட்டு, படையெடுப்பு நடத்தி வெற்றிமுகம் கண்டுவிடும் புயல்நோய்.

*****

22-07-2019, திங்கட்கிழமை வானொலிக்காரர்கள் வருகைக்கு முன் அம்மாவைக் காட்டி, “அவங்க ஒன்னு சொல்லுவாங்க தெரியுமா, அது ஒங்களுக்குச் சொல்லியிருக்கனா, இதுக்கு முன்னால?” என்று கி.ரா கேட்டார். சொல்லப்போகும் ஒவ்வொன்றையும் இப்படி உறுதிப்படுத்திக் கொள்வது கி.ரா பழக்கம்.

ஆனால் ஒரே விசயத்தை, ஒவ்வொருமுறை சொல்கிறபோதும் கி.ரா வேற வேற ரூபமாக வடிவமெடுப்பார்; புதிய மொழி, புதிய விவரிப்பு, புதிய பாவனை என பரிமாணங்கள் நிறைந்து அத்தனையும் வழியும். அதனால், “இல்ல, கேட்டதில்லையே” என்பேன்.

“‘சின்னமாசம்னு’ பெண்கள் கணக்கேட்டில் உண்டு” கி.ரா. விளக்கினார்.

கல்யாணம் நடக்கிறது. ஆணும் பெண்ணும் இணைகிற நாளையும் கணக்குப் பண்ணி முகூர்த்த நாள் குறிப்பார்கள். திருமண நாளிலோ, அதற்கு ஓரிரு நாள்கள் முன்னமோ மாதவிடாய் இருக்கக்கூடாது. முன்னும் பின்னுமான நாட்களில் பலவீனமாக இருப்பார்கள். எத்தனை பொருத்தமிருந்தாலும், உடல் பொருத்தம் மட்டும் அந்த நாட்களில் கூடாது.

“ஐயோ, அவளுக்கு அது சின்னமாசமாச்சே” என்பார்களாம் பெண்கள். முதல் வாரம், இரண்டாவது வாரம், தூரமாகிவிட்டால், மீதி 15 நாட்கள்தாம். அது சின்னமாசம் பெண்களுக்கு. அம்மா சொல்லித்தான் கிராவுக்குத் தெரியவந்தது சின்னமாசம்.

கிணற்றுத் தண்ணியை வெள்ளமா கொண்டுபோய் விடப்போகிறது என்று ஆறப்போடும் மனசு இளங்காளைகளுக்கு வாய்க்காது. கிணற்றிலிருந்து வாரி வாரி இறைத்துக் கொண்டிருக்கவேண்டும்.


நாட்டார் வழக்காறுகள் எடுத்து வழங்குவதில் கி.ரா.வுக்குக் கணவதி அம்மா. நா.வானமாமலைக்கு எஸ்.எஸ்.போத்தையா!

“தோழர் ஜீவா. என் ஆசான். பேரா.நா.வானமாமலை என் வழிகாட்டி” என்பார் போத்தையா. பேரா. நா.வானமாமலை போத்தையாவுக்குக் கடிதம் எழுதுவார். “இது இதைச் சேகரித்து அனுப்புங்கள்.” போத்தையா அவைகளைச் சேகரிப்பது மட்டுமல்ல, ஊற்று எங்கிருந்து கசிவெடுக்கிறது என்று கண்டறிந்தும் எழுதுவார்.

கி.ரா என்ற நாட்டாரியல் சிகரம்; கணவதியம்மாள் என்று குளிர்சுனையிடம் குனிந்து கேட்டு, விளக்கம் பெற்றுக்கொள்ளும். பல ஐயப்பாடுகளை “ஏமி, கணபதி, அதி அட்ட தானா?” (சரிதானா) என்று சந்தேகம் போக்கிக் கொள்வார். வற்றாத உதடுகளில் ஈரமாயிருக்கும் புன்னகையை விரித்து அம்மா பதில் சொல்வார்.

பஞ்சாபி இலக்கியத்தை வளப்படுத்தியவர்களில் மோகன்சிங் என்றொரு கவி. அவர் காதலித்து மணந்த துணைவி இளம் வயதிலே மரணமடைந்துவிட்டார். துயரத்தின் வாய்க்கால் கரைமுட்ட நிறைந்து ஓடி இலக்கியம் பெருக்கெடுத்தது. மறைந்த இளம் பருவத்து மனைவி தன்னிடம் உரையாடுதலாக ஒரு கவிதை செய்தார் மோகன்சிங்.
“நானில்லையென்றால்,
நீ எப்படிக் கவிஞனாக
உருவாகியிருக்க முடியும் மோகன்சிங்”
ஒவ்வொரு ஆளுமையையும் பெண்கள் உண்டாக்குகிறார்கள். பின்னிருந்து மட்டுமல்ல. முன்னிருந்தும் கூட்டிச்செல்கிறார்கள்.

அம்மா நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாய் இருந்தபோது, எனக்கு ஞாபகம் வந்தது கி.ரா.வின் வார்த்தைகள்.

3

திருமணம் வாழ்வின் தொடக்கச் சடங்கு பற்றியும், மனித வாழ்வின் இறுதிச்சடங்கு பற்றியும் கி.ரா நிறைய மனம் திறக்கிறார். இப்படித் திறப்பாக வைக்கலாமா என்று சிலபேருக்குச் சினம் உண்டாகலாம். கேள்வி வரலாம். சில கேவலங்களை வெளிப்படையாகப் பேசியே ஆகவேண்டும். போகிறபோக்கில், பேச்சுவாக்கில் உதிர்க்கப்பட்ட கருத்தல்ல. கி.ரா.வின் தெளிந்த சிந்திப்பிலிருந்து பிறந்த ஒன்று.

“நான் சாட்சி இல்லாமல் சொல்லவில்லை. சாட்சி வைத்துக்கொண்டுதான் சொல்கிறேன். பிரான்சு நாட்டின் தற்போதுள்ள அதிபரும் துணைவியும் திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.”

பிரான்சு நாடு மட்டுமல்ல, மேலை முதலாளிய நாடுகளில் இது ஒரு வாழ்வுப் போக்காக மாறியுள்ளது. திருமணம் என்பது ஒரு சடங்கு நிகழ்வு. ஒருவரை ஒருவர் முழுமையாய் அறிந்து மனமொப்பி வாழுகிற வாழ்க்கையில் திருமணம் என்னும் இடைச்செருகல் தேவையற்றது. மனிதராக இருக்கிறோமா – அதுதான் இணைவாழ்வில் அடிப்படை. இந்தவகை வாழ்வில் அவனோ, அவளோ கணவன் இல்லை; மனைவி இல்லை. இணை என்று பேர். இணையர் எனத்தான் அவர்களை அழைக்கிறார்கள்.

ஆழமாக உணர்ந்து பார்த்தால் இது தெரியவரும். இந்நாட்டின் மதமாகிய இந்து மதச் சமுதாயம் நெகிழ்ந்து கொடுப்பதில்லை. மதங்களைத் தாண்டிய சமுதாயம் ஒன்று முதலாளிய நாடுகளில் உருவாகியுள்ளது. ஊரறிய, உறவறிய, நட்பு அறிய, தம்மைச் சுற்றிலும் இயங்கும் சூழலுக்கு இவர்களின் இணையர் வாழ்வு தெரியப்படவேண்டுமெனக் கருதுகிறவேளையில், திருமணத்தை நிகழ்த்திக் கொள்கின்றனர். அதுவும் சடங்காக அல்ல.

பிள்ளைகள் தம் வாழ்வைத் தாமே தீர்மானித்து ‘இவள் என் துணை. இவளுக்கு நான் துணை’ என்று இருவரும் சேர்ந்து பெற்றோர் பிடியிலிருந்து ஓடிப்போன காலம் ஒன்றிருந்தது: அந்த நமது சங்கத் தமிழ்க் காலம் இன்று மேல் நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. திருமணத்தின் பின்னரும் பிள்ளைகளே பிரச்சினைகளையும் எதிர்கொள்வார்கள்.

வாழும்காலத்தில் கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்த கொள்கைவீரர்கள் கூட, பகுத்தறிவாளர்கள் கூட, சாவுக்குப்பின் உறவுகளால், குடும்பத்தால், நட்புகளால் சாதி, மதக் குறியீடுகளுடன் அடக்கம் செய்யப்படுகிறார்கள். இறப்பின் பின் என்ன நடக்கிறது என கண்காணிக்கும் வாய்ப்பு இறந்தவருக்கு இல்லை. மிகச் சிறந்த நாத்திகவாதி, பகுத்தறிவாளர், இலட்சியவாதியாய் வாழ்ந்த கலையாளுமை, எழுத்தாளுமை, அறிவுலக ஆளுமைகளும் இந்த அவலத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். அவர் கடைப்பிடித்த கொள்கைக்கு இப்போது நடத்துகிற சடங்குகள் எத்தனை பெரிய அவமானத்தினை அவருக்கு உண்டாக்கும் என்பதை உணரவேண்டும். ஒருவருக்கும் அந்த உணர்த்தி இல்லாததால் “எனது இறுதி அடக்கம் நான் விரும்புகிறபடியே அமைவேண்டும்” என இறுதி மரண ஆவணம் வரைந்து வைத்து, பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்கிற முறை சிந்தனையாளர்கள் மத்தியில் பெருகிவருகிறது.

கணவதி அம்மாவின் மறைவு கி.ரா.வால் உணரப்பட்டது; அறைக்குள் கட்டிலில் நோய்வசம் சிறைப்பட்டிருந்த அம்மாவை, மருத்துவமனைக் கட்டில் ஒன்று வாங்கி, அது ஏற்றஇறக்க வசதி கொண்டது. பக்கவாட்டில் புரண்டு படுக்கையில் விழுந்துவிடாமல் மேலே இழுத்து மாட்டிக்கொள்ள, கீழே இறக்கிவிட தடுப்புண்டு.

ஈஸி சேரை அறை நோக்கித் திருப்பிப்போட்டு இதுகாறும் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தார்; இப்போது மருத்துவமனைக் கட்டிலை இவர் அமர்ந்திருக்கும் உள் கூடத்தில் போட்டு, தனக்கருகிலேயே இருக்குமாறு செய்தார்.

பிற்பகல் 4.30 மணிக்கு மூச்சுத் திணறல் தொடங்கி விட்டது. அம்மா அலறலை, கைகளை முறுக்கித் திணறுவதைப் பார்த்து கி.ரா பதகளிப்பாய் இருக்க, மாலை 6.45 மணிக்கு உயிர் முழுதாய் அடங்கியது.

அன்றிரவு 12 மணிக்கு “களைப்பாயிருக்கிறது; கொஞ்சம் தூங்குகிறேன்” என்றார். நானும் நண்பர் பேரா.பஞ்சுவும் அறைக்கு அழைத்துச் சென்று படுக்கச் செய்தோம்.

மரணச் சடங்கு, சாங்கியம் – என்பவை அல்ல, எந்தச் சடங்கும், சாஸ்திரமும், சம்பிரதாயமும், தன் சொந்த வாழ்க்கைக்குள் நுழையாமல் பார்த்துக்கொண்டவர்; சாதி, மதச் சழக்குகளுக்குள் வாழ நேர்ந்த பாவத்தைத் தவிர, வேறெந்த பாவமும் செய்தறியாப் பெருந்தகை. பிரகடனப் படுத்திக்கொள்ளாத பகுத்தறிவாளர்.

மரணம், மரணத்தின் பின்னான செயல்கள் பற்றியும் கி.ரா தெளிவான பார்வையை முன்வைத்துள்ளார்.

“நான் என்ன சொல்றேன்னா, ஒரு மனுஷன் இறந்து விட்டால் நீங்க போகாதீங்க. அவங்க வீட்டில இருக்கிறவங்களே அடக்கம் பண்ணிக்கிடுவாங்க. நான் இறந்து போனால் கூட யாரும் வராதீங்க. நீங்க செய்ய வேண்டியது என்னன்னா சத்தமே கேட்கக் கூடாது. இந்தக் கண்ணாடிப் பெட்டியில் வச்சி அழுவது, மாலை போடறது எதுவும் பண்ணாதீங்க. நான் இறந்துபோய்விட்டேன் என்றால், இறந்து போனதற்கான மரணச் சான்றிதழ் வாங்கணும். அப்புறம் இது சந்தேகமில்லாத மரணம்னு ஒரு சான்றிதழ் வாங்கணும். அவ்வளவுதான். மறுநாள் பாலுக்குப் போறது, இதெல்லாம் வேண்டாம். சாம்பலைக் கூட வாங்காதீங்க. அதைக் கொண்டுபோய் கடலில் கரைப்பது எதுவும் வேண்டாம். அதுபோல் அஞ்சலிக்கூட்டம், அனுதாபக் கூட்டம் எதுவும் நடத்தாதீங்க. போட்டோ வச்சு மாலை போடாதீங்க. சிலை வைக்காதீங்க. ஞாபகார்த்தமா எதுவுமே வேண்டாமென நான் சொல்றேன். மரணத்தில் முக்கியமா படம் எடுக்காதீங்க. படம் எடுத்து என்ன பண்ணப் போறீங்க. பொணத்துக்குப் பக்கத்தில இருந்து போட்டோ எடுத்து என்ன பண்ணப் போறீங்க. நம்ம செய்கைக்கு ஒரு நல்ல காரணம் இருக்கணும்” (கி.ரா கட்டுரை: தளம் காலாண்டிதழ்; சனவரி - மார்ச் 2016.)

ஒவ்வொரு செய்கைக்குப் பின்னாலும் ஒரு சரியான காரணம் இருக்க வேண்டுமென்று கி.ரா இந்த ஆவணத்தைக் கையளித்துச் செல்கிறார். இயற்கையாகவோ அல்லது திடீரெனவோ இறப்பு நேரிட்டால் எனது உடலை எவ்வித மதச் சடங்குகளும், சாதிச் சடங்குகளும் சம்பிரதாயமும் இன்றி, அழுகையோ ஆரவார வழிபடல்களும் இல்லாமல் எடுத்து எரித்து விடவேண்டுமெனக் கி.ரா சொல்லும் ஆவணம் இது.

மாலையில் முற்றத்தில் அம்மாவின் உடலைக் குளிப்பாட்டுவதற்கான ஏற்பாடு நடந்தது; கி.ரா கேட்டார் “தகனம் தான செய்யப் போறோம். அதுக்கு ஏன் குளிப்பாட்டனும்?”

“இல்ல, செய்யனும்” என்றனர் உறவுகள். கி.ரா.வின் உடன்பாடில்லாமலே சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

கி.ரா இணையரை எப்போதும் நெஞ்சின் மடியில் சுமந்திருக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சென்னையிலிருந்து காலை 10.30 மணிக்கு வந்தார். பிறகு நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர் ரவிக்குமார் வந்து ஒருமணி நேரம் பேசிவிட்டுச் சென்றார்.

அம்மாவின் உடல் சுமந்த மரண ஊர்தி கருவடிக்குப்பம் மயானம் நோக்கி நகர்ந்தது. கே.எஸ்.ஆருடைய கார் முன்னிருக்கையில் கி.ரா அமர்ந்திருந்தார். கே.எஸ்.ஆரும், நானும் பின்னிருக்கையில் அமர்ந்து, முன்கூட்டி மயானம் சென்றோம். மின் தகனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த பாவண்ணன், மரணச் சேதி தெரிந்த இரவு முதல் இறுதித் தகனம் வரை அனைத்து ஏற்பாடுகளையும் கவனமாய் எடுத்துச் செய்தார்; காவல் நிலைய ஆய்வாளருக்கும், கருவடிக்குப்பம் மயான அலுவலருக்கும் கடிதங்கள் வரைந்து கி.ரா.விடம் கையெழுத்துப் பெற்றார். கையெழுத்துப் பெறுமுன் பாவண்ணன் கேட்டார்:
“அடக்கம் செய்வதா? எரியூட்டுவதா?”

கி.ரா ஏறிட்டு நோக்க, ”அடக்கம் செய்தால் நினைவுக் கல் வைத்துக்கொள்ளலாம்” என்றார் பாவண்னன்.

“தகனம்தான்” என்றார் கி.ரா.

ராசபாளையத்திலிருந்து எழுத்தாளர் பாரததேவி; சென்னையிலிருந்து இயக்குநர், எழுத்தாளர் தங்கர்பச்சான் – மின் தகன மயானத்துக்கு நேரே வந்தனர். கி.ரா.வின் இடதுபக்கத்தில் தங்கர்பச்சான், வலதில் பாரததேவி. அணைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தினர். பாரததேவியைக் கி.ரா தேற்றியும்கூட ஆறவில்லை. கி.ரா பாரததேவியுடன் வந்தவரை, நீங்க கூப்பிட்டு வந்தீங்களா என்பதுபோல் நோக்கி “அழைச்சிட்டுப் போங்க” என்றார். எதிர்ப் பெஞ்சில் அமர்ந்திருந்த கே.எஸ்.ஆரும் நானும் “அம்மா, இங்க நாங்க யாரும் அழலை. நீங்களும் அழவேண்டாம்” என்றோம்.

கி.ரா சொன்னார் “அப்படி அழுறதின்னா நானில்ல அழுதிருக்கனும்!”

எல்லோருக்குமாக ஒன்று தெரியப்படுத்தினார். “ஒரு தலைமுறையைச் சேர்ந்த முதியவர்கள் மூன்றாம் தலைமுறையைப் பார்த்துவிட்டால், அவர்கள் சாவடைந்தால் அதைக் கல்யாணச் சாவு என்பார்கள். எவரும் அழமாட்டார்கள். துக்கம் கொண்டாடமாட்டார்கள். என் பேத்திக்கு மகள் வந்துவிட்டாள். நாங்கள் பூட்டியைப் பார்த்துவிட்டோம். பூட்டியைக் கொஞ்சிவிட்டுத்தான் அம்மா போய்ச் சேர்ந்திருக்கிறாள்.”

மூன்றாம் தலைமுறையைக் கண்டுவிட்ட, மூத்த தலைமுறையின் சாவு, கிராமங்களில் பந்தல்போட்டு, குலைவாழை கட்டி விழாவாக நடத்தப்படுகிறது. வாழ்ந்து நிறைவானவர்களைக் கொண்டாடவேண்டும்.

நிறை வாழ்வு வாழ்ந்தாய் போற்றி!

- கதை சொல்லி (அக்டோபர் 2019)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?