பிரபஞ்சனின் “கியூகோ இல்லம்”


1960-களில் நானொரு வாசகன். 70-களில் எழுத்தாளன். 1971- ல் தாமரையில் எனது முதல் கதை. 1973-74 இரு ஆண்டுகள் தஞ்சைவாசம். தஞ்சையில் அரசுத்துறையில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியிலிருந்தேன்.

என் அண்ணன் பாண்டிச்சேரியில் நடுவணரசின் ‘ஜிப்மர்’ மருத்துவமனையில் ரத்தப் பரிசோதகரகப் பணியாற்றினார். நான் அவரைப் பார்க்க அடிக்கடி பாண்டிச்சேரி செல்வேன்.

”பாண்டிச்சேரியிலிருந்து வைத்தியலிங்கம் என்பவர் எழுதுகிறார், போய்ப் பாருங்கள்” என்றார் தி.க.சி. 1970 – முதல் அவரை ஆசிரியராகக் கொண்ட ’தாமரை‘ இதழின் வசந்த காலம். தாமரை பூத்த தடாகத்தில் நாங்கள் நீந்தத் தொடங்கியிருந்தோம்.

70–களில் அது பாண்டிச்சேரி. புதுச்சேரி பின்னாளில் வந்து சேருகிறது. 70-களில் பிரபஞ்சன் என அறிமுகமில்லை; பிரபஞ்ச கவி. அப்போது கவிதைகள் மட்டுமே எழுதினார். எத்தனை ஆண்டுகள் என்ற கணக்கு என் வசமில்லை; சிறிது காலத்தின் பின் உரைநடைக்கு மாறிவிட்டார். தஞ்சையிலிருந்த இரு ஆண்டுகளும் பாண்டிச்சேரி போய்வருகிறபோது, நண்பர் பிரபஞ்சனைச் சந்தித்து உரையாடாமல் கடந்ததில்லை.

எழுத்து அவருக்குத் தொழில். எழுத்து எக்காலத்திலும் ஒருத்தரை நிம்மதியாயிருக்க விட்டதில்லை. சில விதிவிலக்கு இருக்கலாம்.

புதுவை பாரதி வீதியிலிருந்த பிரபஞ்சன் வீட்டுக்குச் செல்வேன்: காலை ஒன்பது அல்லது பத்து மணியாக இருக்கும். அவரது துணைவியார் காபியோ, தேநீரோ வழங்கிட, இருவரும் அருந்திவிட்டு பாரதி வீதியில் காலாற நடந்துபோவோம்: ”பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திடப் பிறந்த பாரதி“ நடந்த வீதிகள்.

வீதிகள் சிலருக்கு உல்லாசமளிக்கும். வீதிகள் சிலருக்கு ஆழ்மனதில் உழன்று கொண்டிருக்கும் மனப்பிரம்மைகளில் இருந்து விடுதலை தரும். நாங்கள் நடப்பது எங்களுக்குள்ளிருந்த இலக்கிய தாகத்தைத் தீர்த்துக் கொள்ள! மதுரைத் தியகாரசர் கல்லூரியின் இடதுபுறத்தில் அமைந்திருந்த வைகை ஆற்றில்,
“வசந்த காலம் வருமோ
வைகை பெருகி வருமோ”
என்று பாட்டுரைத்த கவிஞர் சுரதாவின் வரிகளை முக்குளித்தபடி கவிஞர்கள் நா.காமராசன், இன்குலாப் ஆகியோருடன் மாலை மணலில் நடந்து இலக்கியப் பசியாறிய முன்னைய காலம் நினவுக்கு வருகிறது. அப்போது நாங்கள் ஒருசாலை மாணாக்கர்கள்.

பிரபஞ்சனும் நானும் எழுத்திலக்கியக் கலாசாலையில் ஒருசாலை மாணக்கர்கள். இருவரும் பாரதி வீதிக்குள் இறங்கிவிட்டால், நாழிகைகள் எங்களுக்கு மட்டும் நீட்டம் கொள்ளும். காரணம் பிரபஞ்சனுக்குப் பிரியமுள்ள “இந்தியன் காஃபி” நேரு வீதியிலிருந்தது.

1970 மற்றும் 80-களில் அமர்ந்துஉரையாடிய “இந்தியன் காஃபி - அங்காடி” வேறு: இன்றுள்ள இந்திய ’உணவகம்’ வேறு. வழக்கமாய் உணவகங்ளில் காணப்படும் ஆரவாரத்தை அப்புறப்படுத்தி மணிக்கணக்கில் பேசுவதற்கு, அன்றைய இந்தியன் காஃபி அமைதியை உருவாக்கிக் கொடுத்திருந்தது. புள்ளிக்கு ஒரு காஃபி சொல்லிவிட்டு மணிக்கணக்கில் உரையாடிக் கொண்டிருப்போம்.

ஆரோக்கியமான இலக்கிய உரையாடலை நாங்கள் முடித்துக் கொள்வதாயில்லை; இன்னொரு ‘காஃபி’ கொண்டுவரச் சொல்வோம்.

அங்கிருந்து வெளியேறி, கிழக்குப்பக்கம் பிரபஞ்சன் செல்வார்; நான் வீட்டுக்குச் செல்ல மேற்கில் திரும்புவேன். ”இப்படியே ரோமன் ரோலண்ட் நூலகம்வரை போய்வருகிறேன்” என்பார். நூலகம் எதிரில் பாரதி பூங்காவும் கடற்கரையும்!

படைப்புக்குரிய மனதை, சிந்தனையை ஒருமுகப்படுத்தும் தருணமது. ஒருமைத்தன்மை இல்லையெனில் ஒரு படைப்பாளி உருவாக இயலாது: ஒரு படைப்பு கோருகிற மனஒருமையை வழங்காமல் அப்படைப்புக்கு நியாயம் செய்ய இயலாது.

வாழக்கைச் சுனாமிக்குள் மாட்டுப்பட்டுவிடாத ஒரு முகம் எப்போதும் அவரிடம் இருந்தது. தன்வசம் சேமிப்பாகிய சிந்தனைகளைக் கோர்வையாக்கித் தாளில் பதிக்கத்தான் தனிமையை அவர் தேர்வு செய்கிறார் எனப் புரிந்து சிறு புன்னகையுடன் பிரிவேன்: பாரதி நடந்த வீதியல் அவர் கிழக்காக, நான் மேற்காக, இருவரின் இடையில் புன்னகையும், பிரியமும் தொடர்ந்து வர பாரதியும் தொடர்ந்துவந்து கொண்டிருப்பார்.

2

எதற்காக எழுதுகிறோம்? யாருக்காக எழுதுகிறோம்? நிறையக் கேள்விகள். கேள்விகள் என்னுடையவை, உங்களுடையவை, நம்முடையவை; எழுத்தாளனுடைய கேள்விகளும் அவை.

முதல் கேள்விக்குத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள என்பதுதான் நேர்மையான பதில். தனக்குள் இருப்பவைகளைப் பகிர்ந்துகொள்ள - அதை எப்படித் தனக்கு அப்பாற்பட்டவெளி வரவேற்கிறது என்பதை அறிந்துகொள்ள. அதாவது தன்னையே தன் எழுத்துக்களில் காணுவது எழுத்தின் நோக்கம்.

அதே நேரத்தில் இன்னொரு வகை வினையாற்றல் நிகழுகிறது. தனக்குரியதை உலகத்துக்கு உரியதாக ஆக்குவது. ஒரு குறித்த காலத்துக்குரியதை எல்லாக் காலத்துக்கும் உரியதாக ஆக்குவது. அப்படித்தான் ‘வானம் வசப்படும்’ வெளிப்பட்டது. ஒரு வட்டாரத்துக்குண்டான வாழ்க்கை, அதன் வரலாறு பொது உலகத்துக்குரியதாக ஆக்கப்பட்டது.

இந்த மனிதரைப் போல், வேறு எவரும் இத்தனை மனிதராக இருந்ததில்லை என்று சேக்ஸ்பியரைப் பற்றிச் சொல்வார்கள். ஒதெல்லோ, ஹாம்லட், ஜூலியஸ் சீசர், புரூட்டஸ், டெஸ்டிமோனா, மாக்பெத் - அத்தனை மனிதர்களைப் பாத்திரங்களாகப் படைத்தார். அதுபோல் பிரபஞ்சனின் கதைகளில், புதினங்களில் கணக்கற்ற பாத்திரங்கள். பிரபஞ்ச மனிதர்களைப் பற்றி, மனச் சாட்சியுடன் படைப்புக்களில், கட்டுரைகளில் நேர்பட வெளிப்படுத்தினார்.

எழுத்தாளர் அமரந்தா ஒரு குறிப்பினைக் கூறுவார்,
“நினைவேந்தல் போன்ற கூட்டங்களில் பல உறுதிமொழிகள் எடுக்கப்படும். செயல் என்ற புள்ளியைத் தொடாதவையால், பின்னர் காற்றோடு கலந்துவிடும். அவ்வாறின்றி, இந்தப் புதுவை மாநிலத்தில் ஒரு உருப்படியான செயலைச் செய்யலாம். எழுத்தாளர்கள், கவிஞர்கள் சில நாட்கள் அமைதியாக எழுத்துப் பணியை மேற்கொள்ள ஒரு தங்குமிடம், எளிய உணவு, நிம்மதியான சூழல்கூடிய ஒரு பணிஇல்லம் உருவாக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளலாம்.” என்றார்.

அமெரிக்காவில் வாசிங்டன் டி.சி என்றழைக்கப்படும் மாநிலத்தின் தலைநகராக ‘சியாட்டில்’ நகரம் திகழுகிறது. செவ்விந்தியர்களின் தலைவராக விளங்கிய சியாட்டில் பெயரில் அமைந்த நகரம். மாநகரின் நடுவில் சியாட்டிலுக்கு ஒரு சிலை வைத்துக் கவுரவித்திருக்கிறார்கள். 2006-ல், சியால்ட் நகருக்குச் சென்றிருந்தேன்.

பூங்காக்கள், புல்தரைகள், இயற்கையான ஏரிகள் எனத் தன்னை மூழ்கடித்துக் கொண்டது சியாட்டில் நகர். நகர் மையத்தில் ஆகப்பெரிய பூங்கா. அதன் மேற்கு வாகரையில் ‘கியூகோ இல்லம்’ (HUGO HOUSE) என்ற பெயரில் ஐந்து மாடிக் கட்டடம் – அமரந்தா தெரிவித்த எழுத்தாளர்களின் பணிஇல்லம். எழுத்தாளர்களின் ஒருங்கிணைந்த உழைப்பாலும், கியூகோ என்பவர் பெருநிதி நல்கியதாலும் உருவாகியிருக்கிறது. எத்தனை நாள், எத்தனை மாதம், எவ்வளவோ வருடமெனும் கணக்கில்லை. சில எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் வருமானம், சொத்து எல்லாவற்றையும் அதனிடம் ஒப்படைத்து, அங்கேயே வசிக்கக் காணலாம். கீழ்த்தளத்தில் உணவகம்; ’உண்டு உறைவிடப் பள்ளியும்’ அது; உரையாடல் நிலமும் அது; மிகப் பெரிய நூலகமும் அது; எழுத்துப் பணிமனை நூல்களின் கருவூலகமாக மாறிவிட்டது; எழுத்தாளர் சந்திப்பு, உரைவீச்சு, கவியரங்கு, நூல் வெளியீடு, விமர்சன கூட்டம் என நிகழ்வில்லா நாட்கள் இல்லை. நாளொன்றுக்குப் பல நிகழ்ச்சிகளும் அங்குள்ள அரங்குகளில் நடைபெறும்.

புதுச்செரியில் ‘அரவிந்தர் ஆசிரமம்’ எழமுடியும். ஆன்மீகத் தரிசனத்துக்கான ஒரு நிறுவனமாக ஆனதும், அது ஒரு மடமாக மாறிவிட்டது. நிறையச் சொத்துக்களைப் பலர் ஆசிரமத்துக்கு ‘உபயமாக்கி’ அங்கேயே வாழ்ந்து முடிக்கிறார்கள். இந்தப் பூமியின் இயல்பு இது. ஆனால் முதலாளிய நாட்டில், முக்கிய ஒரு நகரில், வாசிப்புக்கும் படைப்புக்கும் உரையாடலுக்குமான ”கியூகோ இல்லம்” தான் எழமுடியும்.

‘கியூகோ இல்லம்’ ஒரு சங்கப்பலகை. அங்கே புலமை கொண்டோர் எல்லோரும் வாசிக்கலாம். வாசிப்பிலிருந்து எழுத்து, எழுத்திலிருந்து வாசிப்பு. இதுக்கு அது மூலம். அதுக்கு இது மூலம். ஆயிரம் பூக்கள் மலரும் வனம் ‘கியூகோ இல்லம்’.

இதுபோலவொரு முற்சியினை நான்கு ஆண்டுகள் முன்பு, திருவண்ணாமலையில் ’வம்சி புக்ஸ்’ பவா செல்லத்துரையும் சைலஜாவும் முன்னெடுத்தார்கள். தனியாய் ஒரு வீடு; அது வாசகசாலையாகவுமிருக்கும்; புத்தக விற்பனை நிலையமாகவுமிருக்கும். எழுத்தாளர்கள் தங்கி எழுத, மேசை, நாற்காலி, படுக்கை வசதியுடன் அறைகள். திறப்பு விழா கோலாகோலமாக நடந்தது. ஆனால் அங்கு வந்து தங்கி இருந்து எழுதிப் போக, சியாட்டில் போல நம்மில் முழுநேர எழுத்தாளகள் தயாராக இல்லை. எழுத்து நமக்கு முழுநேரத் தொழில் அல்ல.

பெரிய அளவிலாயினும் சரி, சிறிய அளவிலாயினும் புதுச்சேரியில் இவ்வாறான ஒரு பணிஇல்லம் அமைக்கும் முயற்சி தொடங்கலாம்; அனைவரின் கூட்டு உழைப்பு அதில் மழையெனப் பெய்யவேண்டும். எழுத்துலகவாசிகளின் ஒருமுக உழைப்பில் ரூ.10 லட்சம் நிதி சேகரித்துப் பிரபஞ்சனுக்கு வழங்க சாத்தியப்பட்டதை, இங்கு மறந்துவிடலாகாது. சாத்தியம் என்பது வளர்ச்சி நோக்கிய பயணிப்பு.

கிழக்கில் ரோமன் ரோலண்ட் நூலகம்; அமைதி தவமியற்றும் இடம். எதிரில் பாரதி பூங்கா. இந்த நிலவியல், அமெரிக்க நிலத்தின் சியாட்டில் நகருக்கு என் நினைவினை அழைத்துப்போனது.

இது பற்றி சிந்திக்கலாம் என்று தோன்றுகிறது. சிந்திப்பு செயல்பாட்டின் தொடக்கம்.

முதல் சிந்திப்பின் விளைவாய் இப்போது ஒரு நற்காரியம் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாவல்களின் புதிய திசைகள், போக்குகளை அறிந்துகொள்ளும் வகையில் நாவல் போட்டி நடத்தி மா.காமுத்துரையின் ‘குதப்பி’, கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஞயிறு கடை உண்டு’, கனடா வாழ் இளங்கோவின் ’மெக்ஸிகோ’ ஆகிய மூன்று நாவல்களுக்கு, பிரபஞ்சன் நினைவு விருது வழங்குகின்றனர். இம்மூவரும், போட்டியில் பங்கேற்ற அனைவரும் வாழ்த்துக்குரியவர்கள். இத்தகு நல்முயற்சி ஊழியத்துக்குத் தோள்கொடுக்கும் டிஸ்கவரி புத்தக நிலையம் வேடியப்பன், பிரபஞ்சன் அறக்கட்டளையின் பி.என்.எஸ்.பாண்டியன், பிரபஞ்சனின் இரு புதல்வர்கள் நம் அன்புக்கும் பாராட்டுக்கும் உரித்தானவர்கள்.

இத்தகு நல்முயற்சிகளை நிலைப்படுத்தும் நடைமுறை மேற்செல்கையில் “கியூகோ இல்லம்” உதிக்கும்.

- சனவரி 2020, ‘நிலவெளி’ இதழில் வெளியான கட்டுரை

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?