மணல் நாவல் முன்னுரை



அமெரிக்கக் குடியரசுத் தலைவரான பிராங்க்ளின் பியேர்ஸ் 1854-இல் செவ்விந்திய நிலப்பகுதியை விலைக்கு வாங்க விரும்பி, செவ்விந்தியத் தலைவருக்கு கடிதம் எழுதினார்: செவ்விந்தியத் தலைவர் ’சியால்ட்’ பதில் தந்தார்;

”வானத்தின் தனுமையையும் பூமியின் கதகதப்பையும் எப்படி உங்களால் வாங்கவோ விற்கவோ முடியும்? இந்த எண்ணமே எங்களுக்கு வினோதமாக இருக்கிறது. காற்றின் புத்துணர்வும் நீரின் மினுமினுப்பும் நமக்குச் சொந்தமில்லாத போது - அவற்றை எப்படி நீங்கள் வாங்கவோ விற்கவோ முடியும்?”

செவ்விந்தியர்களின் தலைவர் எழுதியது பதில் அல்ல; பெருக்கெடுத்த கவிதைப் பிரகடனம்.

”அடே, அற்பப் பதரே, இயற்கையின் வளங்களை இரு கையேந்தி கேட்டுப் பெற்று அருந்து. இயற்கையின் தலையில் கை வைக்காதே”

தங்கள் நிலம், தங்கள் வளம், தங்கள் இருப்பைக் காக்கும் சுயமரியாதைப் பிரகடனம் சொல்லும் உண்மையின் பக்கம் இது. அவர் மற்றொரு உண்மை சொன்னார், என்னதான் எடுத்துரைத்த போதும், லாபநோக்குப் பார்வை கொண்ட மூளையில் ஏறாத உண்மை - ”பூமி நமக்கு சொந்தம் அல்ல; நாம்தான் பூமிக்குச் சொந்தம் ”

அதுபோலவே ”இயற்கை நமக்கு சொந்தமல்ல, நாம்தான் இயற்கைக்குச் சொந்தம். இயற்கையை அழிக்க சிதைக்க விற்க வாங்க எவருக்கும் எந்த உரிமையும் கிடையாது” என்னும் அரிய உண்மை.

ஒரு பாறை வெட்டி எடுக்கப்படுகிறது; இயற்கையை வென்றுவிட்டதாகக் கருதுகிறீர்கள். இல்லை, இயற்கையின் வண்ணச் சிறகைத் தரித்து விட்டீர்கள்.

பயன்பாட்டுக்கு எனில் அது அறம்; வணிகம் எனில் அது கொலை.

மரங்களை வெட்டி வீழ்த்திய வனமழிப்பை வளர்ச்சியின் வெற்றியாய்க் கருதுகிறீர்கள், இல்லை; இயற்கையின் குரல்வளையை நெரிக்கும் கைகள் உங்களுடையன என்று அர்த்தம்.

பிரம்மாண்டங்களை எழுப்ப மணல் எடுப்பதாகக் கூறுகிறீர்கள்; இல்லை, மணல் அடுக்குகள் என்ற தங்கப் பாளங்களை - தண்ணீர் எனும் வெள்ளைத் தங்கத்தை கொள்ளையடித்து இடுக்கிக் கொள்கிறீர்கள் என்று பொருள்.

இப்படித்தான் 110 கிலோ மீட்டர் நீளம்; 400 மீட்டர் முதல் 800 மீட்டர் அகலம் கொண்ட வைப்பாறு மணல் சுரண்டி எடுக்கப்பட்டது. அதிகாரத்தோடு, அரசு ஆணையுடன் மணல் குவாரிகள் உண்டாகின. ’யார்டுகள்’ என்ற பெயருடன் செயற்கை மணல் குன்றுகள் உருவாகி, 2004 முதல் 2013 வரை 10 ஆண்டுகளில் ஒரு ஆறு காணாமல் போயிருந்தது.
“எல்லோருடைய பசியைப் போக்க இயற்கை போதும், ஆனால் இயந்திரங்கள் உண்ணத் தொடங்கினால் உலகமே என்றாலும் போதாது”
கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் எழுதினார்;

ஜே.சி.பி, பொக்லைன், ஹிட்டாச்சி, மண்ணள்ளும் இயந்திரங்கள் எவையெல்லாம் உண்டுமோ. அவை வைப்பாறு மணலை 10 ஆண்டுகளில் தின்று தீர்த்தன; மணல்வாருவதை எதிர்த்து ஆற்றோரக் கிராமங்களின் மக்கள் தொடர்ந்து போராடினார்கள். மழைக் காலத்தில் ஓடும் காட்டாறு, எக்காலமும் பெருக்கெடுக்கும் தீராநதி, அலைகள் ’தத்தாங்கி கொட்டித்’ தாளமிடும் ஏரி, கண்மாய், நீர்நிலை அனைத்திலும் மணல்கொள்ளையை, அதனை நிறுத்துவதின் மூலம் நீர்க்காப்பைச் செய்ய முயன்றனர். தோல்விக் கதைகள் தொடர்ந்தன.

புராண, இதிகாசக் கதைகள் போல், ஒரு புதுப்பிக்கப்பட்ட காக்காய் கதை வலம் வந்தது. அதுவும் பள்ளிக்கூடத்துக் கதை.

ஒரு காகம் தாகத்தோடு பறந்து வந்தது. ஏகப்பட்ட தொலைவு பறந்து வந்திருக்கும் போல. ஊர்ப்பக்கம் வந்ததும் அங்கன ஒரு பானையை கண்டது; பானையில் அரைவாசித் தண்ணீர். பக்கத்தில் கிடந்த சிறுசிறு கூழாங்கற்களை எடுத்து பானைக்குள் போட தண்ணீர் மேலே வந்தது. மேலே வந்த தண்ணீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொண்ட காகம் பறந்து போனது. கீழிருந்து நீரை மேலே வரச் செய்து தாகம் தணித்துக் கொண்ட காக்காய்க்கு இருக்கும் அறிவு கூட அரசாங்கத்திற்கும் மணல் அள்ளும் மனுசப் பயலுக்கும் இல்லை; கீழிருக்கும் மணலை மேலே எடுத்து விற்பனை செய்கிறார்கள்; மணல் அடுக்குகள் சேமித்து வைத்த தண்ணீரை இல்லாமல் அழித்தார்கள்.

இந்தக் கதை அறிவுத்திறத்தில் தன்னை உயரமாய்க் கருதிக் கொண்டிருக்கும் வளர்ந்த மனிதனுக்குமாய் புத்தாக்கம் கொண்டுள்ளது. கதையாய், பாடலாய், வழக்காறாய், கும்மியாய் இந்தப் மறுஆக்கம் எங்கள் வட்டாரத்தில் உலவுகிறது.

’மணல்’ நெடுங்கதையின் இடைஇடையேயும் இறுதியிலும் இணைப்பாக நிறைய ஆவணங்கள் தந்திருந்தேன்; அரசு ஆணைகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்கள், மக்களின் முறையீடுகள், ஊராட்சிகள் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானங்கள்,உண்மை அறியும் குழு அறிக்கை, உயர்நீதிமன்றத் தீர்ப்பு எனப் பல தரப்பட்ட ஆவணங்கள் - இவை நீக்கப்பட்டன;

மணல்வாரிகளை எதிர்த்து பத்து ஆண்டுகளுக்கு மேலாய் களமாடிய போராளிகள் பலரைச் சந்தித்தேன். ஒருவர் தொட்டு இன்னொருவர், அவரைத் தொட்டு மற்றொருவர் என ஏறக்குறைய எல்லோரையும் சந்தித்து உரையாடியிருப்பேன். போராளிகள் உட்பட மக்கள் அனைவரும் நாவலின் கதாபாத்திரங்கள். அதே பெயர்களில் அவர்கள் இல்லை. புனைபெயர்கள் சூட்ட வேண்டியதாயிற்று. அவரவர் பெயர்களில் அறியப்படுவது அவர்களின் இருப்பை, வாழ்வை, உயிர்தரிப்பை கேள்விக்குள்ளாக்கி விடும் என்பதால் வேறுபெயர்கள் சூட்டவும், அதே காரணத்துக்காக ஆவணங்களை நீக்கவும் வேண்டியதாயிற்று. ஆவணத் தடயம் அற்றதாய் இருப்பினும், யதார்த்த அனுபவங்களின் சாறு பிசைந்து இந்த நெடுங்கதை நடக்கிறது.

மணல் தாதாக்கள் தனிமனிதர்கள் அல்ல, அவர்களே அரசாங்கம்; அரசாங்கமே அவர்கள். கூடுவிட்டுக் கூடுபாயும் கலை என ஒன்று புராண, இதிகாசக் கட்டுக்கதைகளில் உண்டு. இவர்கள் பினாமிகள். வன்மம், பழிஎடுத்தல் என்ற குயுக்தி முதல் கூர்மையான ஆயுதங்கள் வரை ஏந்தியவர்கள்.

நேரடி வரலாற்றை எழுத காலமும் சூழலும் தோதாக இல்லை. 1919 ஏப்ரல் 13-இல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையின் உண்மைப் பக்கங்கள் ஒரு நூற்றாண்டு நினைவேந்தலின் பின்னர் துணிச்சலுடன் வெளியிடப்படுகின்றன. கொலை செய்யப்பட்டோர் 319 பேர் என்றது பிரித்தானிய அரசு. காந்தி அமைத்த விசாரணைக் குழு ஆயிரம் பேர்கள் என அறிவித்தது. அதுவே முடிவல்ல. ஆயிரத்தி ஐநூறு பேர் வரை கொல்லப்பட்டிருக்க வேண்டும். 1650 தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டன. ஒரு சிப்பாய் 33 தடவை சுட்டிருக்கிறான்.

வைப்பாறு மணல் கொள்ளை, வைப்பாறு என்ற நீர்த்தடம் இல்லாமல் போன பின்னர் கூட வரலாற்றில் ஏறலாம்; அது வரலாற்றாசிரியனின் பணி. அந்தப் பணியை ஒரு புனைகதையாளன் கொண்டு செலுத்த இயலாது என்று ஒதுக்கம் கொள்ளக் காரணம் எதுமில்லை.

ஒரு ஆறு உண்டாக எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும், இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகள் இருக்குமா ?மூவாயிரம் ஆண்டுகள் கடல் சங்கமம் வரை ஓடிஓடிச் சேர்த்த மணல் அடுக்குகளை வணிகத்துக்காக பத்து ஆண்டுகளில் ஒன்றுமில்லாமல் சுரண்டி எடுத்து விட்டார்களே! வெறும் மணல் அல்ல, தங்கப் பாளங்கள். வெறும் நீர் அல்ல, தண்ணீர் என்னும் வெள்ளை தங்கம். அத்தனையையும் ஒன்னுமில்லாமல் ஆக்கி விட்டார்கள்.

ஒரு படைப்பு ஆக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற பொருத்தமான கருத்துரைகளை அவ்வப்போது வழங்கிய ’நூல்வனம்’ பதிப்பாளர் மணிகண்டன், இந்நெடுங்கதையை வாசித்து தகுந்த ஆலோசனைகள் வழங்கிய இதழியலாளர், எழுத்தாளர், பொன்.தனசேகரன், நாவல் நோய்வாய்ப்படும் தருணங்களில் அவ்வப்போது மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் பொ.வே.வெங்கட்ராமன், அவரின் இணையர் ஜெகதா, பொருத்தமான முகப்பு ஓவியம் தீட்டிய மணிவண்ணன் ஆகிய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ