பா.செ.வின் 'அம்பலகாரர் வீடு' - செ.சண்முகசுந்தரம்

எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் மற்றுமொரு முக்கியக் கதையாக அம்பலகாரர் வீடு என நான் கருதுகிறேன். “அம்பலகாரர் வீடு” என்னும் சிறுகதை வாழ்க்கையின் சூதாட்டத்தை நமக்குச் சொல்லிச் செல்கிறது. வாழ்வாங்கு வாழ்ந்த மேலவீட்டு அம்பலகாரரின் குடும்பத்தைக் காலம் எப்படிப் பிய்த்துப் போட்டது என்பதை மிக அருமையாக விவரித்திருப்பார் பா.செயப்பிரகாசம்.

செல்வச் செழிப்புடன் வாழ்ந்திருந்த மேல வீட்டு அம்பலகாரருக்கு மிகவும் உயரிய மரியாதையைக் கொடுத்திருந்தது அந்த ஊர். அம்பலகாரர் இறந்தவுடன் ஊரை விட்டுச் சென்ற சாமி கொண்டாடி ஐந்து வருடங்கள் கழித்து இப்போதுதான் ஊர் திரும்புகிறான். இனி ஒருமுறை பிச்சை எடுப்பதில்லை என்று முடிவு செய்து கொண்டிருந்தாலும் அம்பலகாரர் வீட்டைத் தட்டுவது என்று முடிவு செய்து கொண்டான். கால் சலங்கை, உடுக்கை, தீச்சட்டி சகிதம், சாட்டையோடு வீதியில் இறங்கி அம்பலகாரர் வீட்டை நோக்கிச் செல்கிறான். அம்பலகாரரின் மேல வாசல் வழி உள் நுழைந்து கீழ வாசல் வழி வெளியேறும்போது பிச்சைக்காரர்களின் பாத்திரங்கள் நிரம்பி வழியும். அம்பலகாரரின் வள்ளல் பண்பை அசை போட்டவாறே மீண்டும் ஒரு முறை அம்பலகாரரின் வீட்டிற்குள் நுழைகிறான். ஆனால் அங்கு அவனுக்கு கிடைக்கும் அதிர்ச்சியை பா.செ மிக அழகாக வர்ணித்திருப்பார்.

அம்பலகாரரின் கதவைத் தட்டும் சாமி கொண்டாடி அம்பலகாரரின் மனைவி வராததைக் கண்டு அவரும் இந்த ஐந்து வருட காலத்தில் இறந்து போயிருப்பார் என்று நினைத்துக் கொள்கிறான். ஆனாலும் அம்பலகாராரின் மனைவியோடு ஒரு சிறு பெண்ணை தான் அப்போது பார்த்ததை நினைவிற்குக் கொண்டுவரும் சாமி கொண்டாடி, “அம்மணி” என்று விளித்து அவளை அழைக்கிறான். சிறிது நேரம் கழித்து அவ்வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஒரு ஆடவன் வெளியேறுகிறான். அக்காட்சியைக் கண்ணுற்ற சாமியாடி அதிர்ச்சி அடைந்து அப்படியே உறைந்து போய் நிற்கிறான். "சாபங்கள் தீண்டியவனாய் சாமி கொண்டாடி கல்லாகி நின்றான்" என்று பா.செ குறிப்பிடுகிறார். சாமி கொண்டாடி பக்கம் தயங்கியபடி வந்து நின்ற அப்பெண், தன்னுடைய குடும்பத்தின் கடந்தகால மேன்மையை நிலைநிறுத்தும் அற்ப அவள் முயற்சியில் ஈடுபடுகிறாள்.  அவன் கையில் ஒரு வெள்ளிக் காசை வைத்து இன்று இவ்வளவுதான் கிடைத்தது என்கிறாள். சாமி கொண்டாடியின் கண்களில் இருந்து பொல பொலவென்று கண்ணீர் கொட்டுகிறது. தான் அயல் ஊர்களில் பிச்சை எடுத்து சேகரித்த பொருட்களையும், பணத்தையும் அப்பெண்ணை நோக்கி நீட்டி, அவளைத் தொழுது "தேவி இது என் காணிக்கை" என்று வழங்கி விட்டு மேலவாசல் வழியாகவே திரும்புகிறான். இப்படியாக இந்தக் கதை முடிகிறது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வளமான புஞ்சை நிலங்களைக் கொண்டு மிகவும் வளமுடன் வாழ்ந்து வந்த அம்பலகாரரின், அவரது சந்ததியின் வாழ்க்கையை நினைத்து, நினைத்து சாமி கொண்டாடியின் மனம் துடி துடித்தது. "வறுமை வயிற்றின் கதவுகளைத் தட்டுகிறபோது எல்லா அசிங்கங்களையும் ஏற்றுக் கொள்கிற மேன்மைவந்து விடுகிறது" என்று தன்னுடைய "இருளின் புத்ரிகள்" கதையில் பா.செ சொல்லியிருப்பார். வாழ்ந்து கெட்டவர்களின் குடும்பங்களைப் பார்க்கும் போதெல்லாம் அம்பலகாரர் வீடுதான் என் நினைவுக்கு வந்து போகும்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ