இதுதான் ஜெயமோகனின் இலக்கிய அறமா?
29 மே 2020, வெள்ளிகிழமையன்று ஜெயமோகன் தனது பிளாக் ஸ்பாட்டில் “ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்” என்றொரு பதிவிட்டுள்ளார். அதன் கீழ் ’மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளர், புதிய கலாச்சாரம் இதழ் ஆசிரியர் போன்ற பொறுப்புக்களிலிருந்தும், இவைகளை இயக்கிடும் அரசியல் அமைப்பிலிருந்தும் 24-02-2020 ல் விலகிய மருதையன்’ பேசுவது போன்ற படம் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் கீழ் ’மருதையன், வினவு, பின் தொடரும் நிழலின் குரல்’ என தலைப்பிட்டு, அன்புள்ள ஜே என்று ஆரம்பமாகிறது. ’என் பெயர் வேண்டாம்’ என்று கடிதம் எழுதியவர் கேட்டுக்கொள்கிறார். ஜெயமோகனும் விட்டுவிடுகிறார்.
கடிதம் எழுதியவர் இடதுசாரி இயக்கங்களில் இயங்குவோர் நான்கு வகையினர் எனக் குறிப்பிட்டு, ஒவ்வொரு வகையினர் பற்றியும் விளக்குகிறார். நான்காவது வகையினர் பற்றி குறிப்பிடுகிறார். அதை அப்படியே தருகிறேன்.
”நான்காவது கூட்டம் தலைவர்கள். இவர்கள் யார் என்றே நமக்குத் தெரியாது. இவர்களில் சிலர் பணக்காரர்கள். அதிகாரப்பதவிகளில் இருந்த பா.செயப்பிரகாசம் போன்ற சாதி வெறிகொண்ட அரசாங்க உயரதிகாரியெல்லாம் இங்கே இடதுசாரிக்குழுவின் தலைவராக புனைபெயரில் இருந்திருக்கிறார். சூரியதீபன் என்ற பேரில். இதெல்லாம் எந்த ஊர் பித்தலாட்டம். இதெல்லாம்கூட தெரியாததா நம்மூர் உளவுத்துறை? இந்த தலைமையை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. இதுதான் இங்கே இடதுசாரி அரசியல்.”
இதை அவ்வாறே ஜெயமோகன் தனது பதிவில் வெளியிடுகிறார். இந்தக் அவதூறில் அவருக்கும் உடன்பாடு இருக்கிறது: ஒரு அமைப்பின் மீது, இயக்கத்தின் மீது வைக்கப்படுவது விமரிசனம். ஆனால் எந்த ஆதாரங்களும் இல்லாமல் தனிநபர் மேல் வைக்கப்படுவது அவதூறு. “இந்தக் கடிதத்தில் உள்ள பிழைகளையெல்லாம் திருத்திக் கொள்ளுங்கள்” என கடிதம் எழுதியவரே தெரிவித்த பின்னும் அவதூறைத் திருத்தாமல் வெளியிட்டுள்ளார். இதுதான் இலக்கிய அறமா?
உண்மையில் நான் எந்த இடதுசாரி குழுவுக்கும் தலைமையில் இருந்ததில்லை்; அதுவும் புனை பெயரில் தலைவராக இருந்திருப்பதாக ஒரு பிதற்றல். சாதி வெறி கொண்டிருந்ததாக அவதூறு, இது கூட உளவுத்துறைக்கு தெரியாதா என்று உளவுத்துறை மீது அடிப்படை அற்ற எள்ளல் என புத்தி பேதலித்த ஒருவரின் கடிதம் போல் ஒன்றை வெளியிட்ட ஜெயமோகனின் நோக்கம் என்ன?
சட்டப்படியே இது அவதூறு என்று அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
வெளியிட்டதற்கு இவர்தான் முதலும் மூலமுமான பொறுப்பாளர். யாரோ எழுதியது என தட்டிக்கழிக்க முடியாது. ஏனெனில் உரிமைப் பதிப்பில்,
”copy right @2015 writer Jayamohan, எழுத்தாளர் ஜெயமோகன் அச்சு ஊடகம் தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன் அனுமதி பெறவேண்டும்” என தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிவை அனைவரும் காணவேண்டும் என்பதற்காக இணைப்பைத் தந்துள்ளேன்.
https://m.jeyamohan.in/130133/#.XtTK9xh_UwA
இதன்மீது சில கேள்விகள் தவிர்க்க முடியாதது. ஜெயமோகன் எழுத்தாளரா? எழுத்தாளர் என்றால் ஒரு அறம் இருக்கவேண்டும். ஜெயமோகன் இலக்கியவாதியா? இலக்கியவாதியென்றால் சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்க வேண்டும்.
என் வாழ்வியலை, எழுத்தை, செயல்பாடுகளை அறிந்த வாசகர்கள், நண்பர்கள், தோழர்களைக் கேட்கிறேன் – இந்த அவதூறு பரப்பி மேல் என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம்? நீங்கள் சொல்லுங்கள்.
- பா.செயப்பிரகாசம் (முக நூல் - 3 ஜூன் 2020)
கருத்துகள்
கருத்துரையிடுக