வன்மம் கொண்டோருக்கு எதிராக முற்போக்காளர்கள் ஒன்றிணைய வேண்டும்
உங்களை மையப்படுத்தி பெரும் சர்ச்சையை ஜெயமோகன் உருவாக்கியிருக்கிறாரே?
ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட படைப்பாளி, என்னைத் தாக்குவாரானால் எனக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கும். என் பக்கம் என்ன தவறு என்று எண்ணிப் பார்த்திருப்பேன் . ஆனால் மன அழுக்கு மிகுந்த ஒருவரின் வெறுப்பு இது என்பதால் , அதை அதற்குரிய குப்பைக் கூடையில் தள்ளிவிடுகிறேண். தேவையில்லாமல் எல்லோரின் மீதும் சேறுபூசும் அவரை, இனியும் சகித்துப் போக நியாயமில்லை என கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள அனவரையும் கேட்டுக் கொள்வேன்.ஒரு தொற்று நோயை அதற்குரிய மருத்துவத்தில் தான் தீர்க்க முடியும். அந்த மருத்துவம் இடதுசாரிச் சிந்தனையாளர்களின் ஒற்றுமை.
உங்கள் எழுத்துக்களை ஜெ.மோ, முதிரா எழுத்து என்கிறாரே?
இந்த விமர்சனமே அவரது முதிர்ச்சி இன்மையைத்தான் காட்டுகிறது. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அண்மையில் எழுதிய ”தமிழ்ச் சிறுகதைகளின் அரசியல் – பா.செயப்பிரகாசம் “ என்ற கட்டுரையை ஜெயமோகன் வாசித்து இலக்கிய மதிப்பீடு என்பதின் அனா, ஆவன்னா அரிச்சுவடியைக் தெரிந்து கொள்ளட்டும். குறிப்பிட்ட எந்தப் படைப்பையும் இது சரியானது என்றும் சரியில்லாதது என்றும் உரிய காரணங்களைச் சுட்டிக்காட்டி, எவர் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் இயங்கி வருகிற என்மீது, ஒட்டுமொத்தமாக ஒரு உள்நோக்கத்தை வைத்துக்கொண்டு இயங்கும் இப்படிப்பட்ட விமர்சனங்கள், வைப்பவரின் தகுதி இன்மையைத்தான் காட்டுகிறது. என் எழுத்துக்களுக்கு ஜெயமோகனின் சான்றிதழ் தேவையில்லை. எனக்கு அவர் போலி எழுத்தாளர் என்ற பட்டத்தையும் கொடுத்திருக்கிறார். மக்களின் வாழ்க்கையை எழுதாமல், போலித்தனமான கட்டுமாணங்களின் அடிப்படையில் உருவான புராணங்கள் சார்ந்த புனைவுகளைச் சித்தரிக்கும் அவர்தான் உண்மையிலேயே அந்தப் பட்டத்துக்கு பொருத்தமானவர்.
உங்கள் அரசியல் செயல்பாடுகளையும் ஜெ.மோ விமர்சித்திருக்கிறாரே?
நான் வாழ்வியல் பாடங்களிலிருந்து அரசியலைக் கற்றுக்கொண்டவன் அவரோ தனக்குப் போதிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தங்களைப் பாடமாகக் கற்றவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த போதே , என் அரசியல் தொடங்கிவிட்டது. 1965-ல் நான் இளங்கலை படித்தபோது, அங்குதான் இந்தி எதிர்ப்பு போராட்டம் முதலில் வெடித்தது. அங்கு மாணவர்களாக இருந்த முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் கா.காளிமுத்துவும் கவிஞர் நா.காமராசனும் ஜனவரி 25-ல் சட்ட நகலுக்குத் தீ வைத்தார்கள்.சட்ட எரிப்புக்கு முன் கைதாகிவிடக் கூடாது என்பதற்காக தலைமறைவாக இருக்கச் செய்து நானும் கவிஞர் இன்குலாப் போன்றவர்களும் வெளியே இருந்து ஒருங்கிணைப்பு செய்தோம். சனவரி 25-அன்று பேரணியில் சென்ற மாணவர்கள் மீது மதுரை வடக்குமாசி வீதியில் இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து கொடூரத் தாக்குதல் நடந்தது. மதுரையில் மாணவர்களை வெட்டி விட்டார்களாம் என்ற செய்தி கேட்டு அந்தப் போராட்டம் தமிழகம் முழுக்கப் பரவியது. அப்போதைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 500 பேர் கொல்லப்பட்டார்கள் என்று வரலாற்றுப் பேராசியர் அ.ராமசாமி பதிவு செய்திருக்கிறார். ஆனால் அரசின் புள்ளி விபரக் கணக்கோ 90 மாணவர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக, சுருக்கியது. இதைத் தொடர்ந்து பெ.சீனிவாசன், கா.காளிமுத்து, நா.காமராசன், நாவளவன், ராஜாமுகமது, மருத்துவ மாணவர் சேது, நான் உள்ளிட்ட 10 பேரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டைச் சிறையில் 3 மாதம் அடைத்தார்கள். அன்றைய மாணவர்களின் போராட்டம்தான் 67-ல் தி.மு.க ஆட்சி மலர விதையாக அமைந்தது. என் கல்லூரிப் பருவம் திராவிட இயக்க அரசியலில் என்னை இயங்கவைத்தது.
நீங்கள் மார்க்சிய தடத்தில் பயணமானது எப்படி?
அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், அடிப்படை உரிமைகளுக்கான தொழிலாளர்கள் போராட்டம் பரவியது. இதை குசேலர், வி.பி.சிந்தன், ஏ.எம்.கோதண்டராமன், மேயர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் முன்னெடுத்தார்கள். அது என்னையும் கவிஞர் இன்குலாப்பையும் ஈர்த்தது. மேயர் கிருஷ்ணமூர்த்தி, ஒருநாள் இரவு அறிஞர் அண்ணா வீட்டுக்கு வந்து தொழிலாளர்கள் படும் துயரங்களை எல்லாம் அவரிடம் விவரித்தார். ”தொழிலாளர்கள் படும் துயரங்களைக் கேட்டபோது என்னால் இரவெல்லாம் தூங்கவே முடியவில்லை ”என்று மறுநாள் அண்ணா நெகிழ்ந்துபோய் எழுதினார். இந்த நிலையில் கீழவெண்மணிப் படுகொலை அரங்கேறியது. அதனால் எனக்கும் இன்குலாப்புக்கும் அரசியல் பார்வை மாறியது. எங்கள் செயல்பாடுகள் மார்க்சிய அரசியலை நோக்கி நகர்ந்தது. இப்படியாக வாழ்க்கைதான் என் பயணத்தைத் தீர்மானித்தது. இது எல்லாம் ஜெயமோகனுக்குத் தெரிந்திருக்க வாய்பில்லை.
நீங்கள் அரசு அதிகாரியாக இருந்து கொண்டே நக்சல் இயக்கத் தொடர்பில் இருந்தீர்கள் என்றும், விசாரணைகளில் இருந்து தப்பிப் பாதுகாப்பாக இருந்துகொண்டீர்கள் என்பதும் அவரது குற்றச்சாட்டு?
நானும் இன்குலாப்பும் மார்க்க்சியத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், நான் என் மகன் சூரியதீபனின் பெயரை புனைபெயராக்கிக் கொண்டு எழுதினேன். அப்போதுதான் ’மன ஓசை’ இதழை 81-ல் தொடங்கி 91 வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினோம். மார்க்சிய லெனினிய கம்யூனிஸ்ட் கட்சியினர், ரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று அந்த இதழை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். ஏறத்தாழ 20 ஆயிரம் பிரதிகள்வரை இதழ் விற்றது. நான் அரசுப் பணியில் இருந்தவன் என்பதால் என்னையும் கடுமையாக விசாரித்தார்கள். அரசுக்கு எதிரானவனாக இருப்பேனோ என்று பலவகையிலும் ஆராய்ந்தார்கள். கடைசியில் எனது அரசியல் சார்பு, செயல்பாடுகளுக்கான சான்றுகள் நிரூபிக்க இயலாததால் என் மீதான விசாரணையைக் கைவிட்டார்கள். நான் விசாரிக்கப்படவில்லை என்று ஜெயமோகன் சொல்வது பொய்.
அரசு அலுவலராக இருந்துகொண்டு அரசை விமர்சித்தீர்கள் என்றும் சொல்கிறாரே?
அதிலே என்ன தவறு? அரசுத் துறையில் இருப்பவர்கள் அரசை விமர்சிக்கக் கூடாது என்பதும், ஒரு முதலாளியின் கீழ் வேலை செய்பவர்கள் அவரைப் பற்றிய ஆதங்கத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பதும், ஒடுக்குமுறைக்கான வரையறை. இதுதான் பாசிசத்தின் குரல். அது ஜெயமோகனிடம் இருந்து வருவதில் வியப்பு இல்லை. என் வாழ்வியல் செயல்பாடுகள் அத்தனையையும் ’லாபியிஸ்டு’ என்ற சொல்லால் கொச்சைப்படுத்தி ஜெயமோகன் அடையாளப்படுத்துகிறார். ஆனால் இவர் எந்த தத்துவதுக்கான, யாருக்கான ’லாபியிஸ்டு’ என்பதை அனைவரும் அறிவர்.
நக்சல் இயக்கத்தில் இருந்தவர்களின் மீள்வாழ்விற்காக 90 களில் ஜெயமோகன் நிதி வசூல் செய்ததாகச் சொல்லி இருப்பதற்கு உங்கள் பதில்?
அவர் நிதி வசூல் செய்தாரா? எதற்காகச் செய்தார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒன்றை மட்டும் சொல்கிறேன். ஜெயமோகனிடம் நிதி உதவிபெற்றார்கள் என்றால், அவர்கள் உண்மையான தோழர்களாக இருக்க மாட்டர்கள். அதேபோல் எங்களோடு இருந்தவர்கள் என்றால் அவர்கள் ஜெயமோகன் பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டார்கள். இடதுசாரி அமைப்புகளையும் இடதுசாரிகளையும் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் அவரை வரலாறு புறக்கணிக்கும்.
நீங்கள் சாதிய உணர்வுடன் இயங்குகிறவர் என்ற குற்றச்சாட்டையும் அவர் வைத்திருக்கிறார்?
நான் சாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன். அந்த உணர்வை என் அருகில் கூட நான் வரவிட்டதில்லை. இது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். நான் என் மகனுக்கு கலப்புத் திருமணம் செய்து வைத்திருக்கிறேன். அந்தக் காலத்திலேயே என் தங்கைக்கும் புரட்சிகரத் திருமணத்தை புரட்சியாளர்கள் முன்னிலையில் நடத்தியிருக்கிறேன். ”கொலை செய்யும் சாதி” என்று அழுத்தமாக சாதியதை எதிர்த்து நான் எழுதிய நூல் ஒரு சாட்சி. எனவே, அவர் விடும் சாதிய அம்பு பூஞ்சையானது.
சரி உங்கள் மீது அவருக்கு ஏன் கோபம் வரவேண்டும்?
அவர் இந்துத்துவா சித்தாந்தத்தில் ஊறியவர். அருடைய சிந்தாந்தத்துக்கு, சமுதய மாற்றத்துக்கான முற்போக்குச் சித்தாந்தம் எதிரானது. அதனால்தான் பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் என்று மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடிய போராளிகளையும், அரசியல் தலைவர்களையும் தொடர்ந்து தாக்கி, இழிவு செய்து வருகிறார். இவர்கள் சமுதாய மாற்றத்துக்காக போராடினார்கள் என்பதைத் தவிர, வேறு காரணம் என்ன இருக்கமுடியும்? அதைப் போலத்தான் தமிழ்ச் சூழலில் இயங்கும் படைப்பாளிகளையும், சமூகச் செயற்பாட்டாளர்களையும் அவர் தாக்கிவருகிறார். மார்க்சிய அறிஞர், எழுத்தாளர் எஸ்.வி.ராசதுரை கிறித்துவ மிஷனரிகளிடம் நிதி வாங்கினார் என்று அவதூறாக எழுதினார். பாவம், அவர் தனக்கென சொந்தமாய் ஒரு வீடோ, ஒரு சென்ட் நிலமோ இல்லாத ஒரு எழுத்தாளர். இந்தக் குற்றசாட்டைப் பார்த்து அவருடைய குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்தார்கள். வெட்டரிவாளுக்கு என்ன வெயிலா குளிரா, அது இரும்பு. கொத்திக்கொண்டே இருக்கும். ஜெயமோகன் மீது எஸ்.வி.ஆர் அவதூறு வழக்குப் போட்டார். அவர் ஒரு சாராரை மட்டுமே பாய்ந்து பாய்ந்து தாக்குகிறார்.
நீங்கள் சாகித்ய அகடமி விருதுக்கு முயன்றுகொண்டே இருப்பதாகவும் சொல்லியிருக்கிறாரே?
இதைவிட மோசமான நகைச்சுவை வேறொன்று இருக்க முடியாது.
அரசாங்கங்களின் இயல்பை அறிந்தவன் என்பதால் அரசுகள் கொடுக்கும் எந்த விருதையும் வாங்கமாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்தவன் நான். சாகித்ய அகடமி விருது குறித்தும் கடுமையாக நான் விமர்சித்து வருகிறேன். அப்படிப்பட்ட நான், சாகித்ய அகடமிக்கு ஆசைப்படுகிறேன் என்பது பிதற்றல். வன்மத்தோடு அவதூறு பரப்பிய ஜெயமோகன் மீது சட்டரீதியிலான நடவடிக்கையைத் தொடங்கிவிட்டேன்.
உங்கள் பார்வையில் ஜெயமோகன்?
ஜெயமோகனின் வேரைக் கண்டறிவது சுலபம். இந்துத்துவா பாவனைகளோடு, காரண காரியற்று தன் எழுத்துக்களுக்கு அவர் அரிதாரம் பூசிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு தேர்ந்த வித்தைக்காரர். வித்தைக்காரர்கள் எல்லாம் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களால் மக்களுக்கு எந்தப் பயனும் இருக்காது. மேலோகத்து தேவர்கள், கடவுளர்கள், அவர்களின் பிள்ளைகள், பேரர்களான மகாபாரத, புராண இதிகாசத்துக்குள்ளே போய் மெய்யியலைக் காண்கிற வேலைதான் இவர் எழுதிவருகிற ’வெண்முரசம்’; இதன் மூலம் முரணான புராணப் பாத்திரங்களைக் கூடப் புனிதப்படுத்த அவர் முயல்கிறார்.
பழைய தொன்மங்களில் மெய்யியலைத் தேடுகிறாரம். ஆனால் மக்களின் வாழ்வியலில் தான் உண்மையான மெய்யியல் இருக்கிறது. அதை உணர்ந்து மக்களின் வாழ்வியலைப் படம் பிடிக்கும் எழுத்தாளர்களை அவருக்குப் பிடிக்காது. தனக்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கும் முற்போக்கு எழுத்தாளர்களின் கண்டன அறிக்கையைப் பார்த்துவிட்டு, புதிதாக 50 எழுத்தாளர்களின் பெயரைத் தெரிந்துகொண்டேன் என்று மமதையோடு சொல்லியிருக்கிறார். முற்போக்கு இலக்கிவாதிகளைப் பார்க்கும் போதெல்லாம் அவர் பிறழ்வுக்கு ஆளாகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.
இது போன்ற சூழல் இங்கே நிலவுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மார்க்சியர்களும், பெரியாரியவாதிகளும், அம்பேத்காரியர்களும் ஏனைய முற்போக்குச் சிந்தனையாளர்களும் கலை இலக்கியத் தளத்தில் ஒருங்கிணைந்து நிற்கவேண்டிய காலமிது. பாஸிசம் எந்த வகையில் வந்தாலும், முற்போக்கை முன்வைத்து எல்லோரும் கைகோர்க்க வேண்டும். ஜெயமோகன் போன்றவர்கள் வெளிப்படுத்தும் பிற்போக்குச் சிந்தனைகளை இனியேனும் சகித்துக்கொள்ளாமல், உரிய எதிர்வினையை உடனுக்குடன் கருத்தியல் தளத்தில் நிகழ்த்தவேண்டும். இல்லை என்றால் நமக்குக் காயங்கள்தான் மிஞ்சும். இது ஒரு தொடர் ஓட்டம், ஓடாலிருந்தால் தோற்றுப் போவோம். இதன் ஒரு வெளிப்பாடு தான் நான் தொடர்ந்திருக்கும் சட்ட ரீதியான வழக்கு.
- நக்கீரன் 10-12 ஜுன் 2020
கருத்துகள்
கருத்துரையிடுக