தமிழ் இலக்கியத்தின் வேர்களில் ஒருவராக பா.செயப்பிரகாசம் வாழ்கிறார்


சி.சு.செல்லப்பாவுக்கு தமிழ் சிறுபத்திரிகை உலகில் என்ன இடம் இருக்கிறதோ அதே இடம் பா.செயப்பிரகாசத்துக்கும் உண்டு. ‘எழுத்து’ம் ‘மனஓசை’யும் இல்லையெனில் தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

மிகைப்படுத்தவில்லை. இன்று காத்திரமான சிறுபத்திரிகை தீவிர இலக்கியவாதிகளாக அறியப்படும் பலர் ‘மனஓசை’யில் எழுதத் தொடங்கியவர்கள்தான். அவர்களை அடையாளம் கண்டு மேடை ஏற்றி அழகுப் பார்த்தது ‘மனஓசை’யே.

இத்தனைக்கும் புரட்சிகர மார்க்சிய லெனினிய அமைப்பு ஒன்றின் வெகுஜன திரள் சார்பாக வெளிவந்த பத்திரிகையே ‘மனஓசை’. என்றாலும் அப்பத்திரிகையின் ஆசிரியராக பா.செயப்பிரகாசம் இருந்ததாலேயே அரசியல் பண்பாட்டுத் தளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போலவே கலைத்தன்மைக்கும் அவரால் அழுத்தம் கொடுக்க முடிந்தது.

உண்மையிலேயே அது பெரிய விஷயம். சாதனை என்றும் சொல்லலாம். ஏனெனில் ‘மனஓசை’க்கு முந்தைய காலம் தமிழ் அறிவுத்தளத்தில் பெரும் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த கொந்தளிப்பான கட்டம்.

நாடு விடுதலை... நிர்மாணம்... மொழிவாரி மாநிலங்கள்... இந்தி எதிர்ப்புப் போராட்டம்... அதைத் தொடர்ந்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகம்... நக்சல்பாரி கிராமத்தில் எழுந்த உழவர் புரட்சியை அடுத்து இந்தியா முழுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைக்கு எதிராக தொண்டர்கள் மத்தியில் நிகழ்ந்த உட்கட்சிப் போராட்டம்... மார்க்சிய லெனினிய அமைப்புகளின் தோற்றம்... ஆயுதப் புரட்சியும் அழித்தொழிப்பும் முன் எடுக்கப்பட்ட சூழல்... இதனால் புரட்சிகர அமைப்புகளில் ஏற்பட்ட பின்னடைவு...

இந்தப் படிப்பினையில் இருந்து ஆயுதப் புரட்சிக்கு முன் மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கோட்டயம் வேணு முன்வைத்த Mass Line... இதற்கு புரட்சிகர அமைப்புகளில் ஒருசாரார் மத்தியில் கிடைத்த ஆதரவு... இதனை அடுத்து குழு, கூட்டுக்குழு, வெகுஜன திரள் என தமிழக மார்க்சிய லெனினிய அமைப்புகளில் ஏற்பட்ட பிளவு...

வெண்மணியில் எரிக்கப்பட்ட உயிர்கள்... தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், அரியலூர், பெரம்பலூர், பொன்பரப்பி, அன்றைய ஒருங்கிணைந்த வடஆற்காடு மாவட்டம்... ஆகிய இடங்களில் அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த தேவாரம் தலைமையில் வேட்டையாடப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட மா.லெ தோழர்கள், அமைப்பினர்...

இதனை எதிர்த்து சட்டரீதியாகப் போராடுவதற்காக உருவான மனித உரிமைக் கழகம்...

இப்படி நாடு முழுக்கவும் மாநிலம் நெடுகவும் புறச்சூழல்கள் நிலவி வந்த நேரத்தில் சிறுபத்திரிகைகள் ‘கலை கலைக்காகவே’ கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தன... இதற்கு எதிராக இடதுசாரிகள் ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என ஓங்கிக் குரல் கொடுத்தார்கள்...

இதற்கு மத்தியில்தான் ‘மனஓசை’ 1980களில் பிறந்தது.

உண்மையில் ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்ற இலக்குடன் ‘மனஓசை’ பயணப்பட்டாலும் கூடவே ‘கலை கலைக்காகவே’ என்ற கோட்பாட்டின் பக்கம் சாய்ந்தவர்களையும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தன் பக்கம் இணைத்தது என்பதுதான் முக்கியமான விஷயம்.

இந்த இணைப்பே இன்றைய தமிழ் இலக்கியச் சூழல் உருவாகவும் வித்திட்டது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக ‘மனஓசை’ இப்படி இரு தரப்புக்கும் பாலமாக அமைந்ததால்தான்... எஸ்.வி.ராஜதுரையால் துணிச்சலாக ‘இனி...’ மாதப் பத்திரிகையை கொண்டு வர முடிந்தது.

ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் சார்பாக அனுராதா ரமணனை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட ‘சுபமங்களா’ மாத இதழுக்கு ஆசிரியராக கோமல் சுவாமிநாதன் பொறுப்பேற்றதும் அப்பத்திரிகையின் உள்ளடக்கத்தையே முற்றிலுமாக மாற்ற முடிந்தது.

திறமை இருந்தும் மேடை கிடைக்காமல் அல்லாடிய அப்போது இளைஞனாக இருந்த ஜெயமோகனை... தான் கொண்ட கொள்கைகளுக்கு முரணாக இருந்தாலும் திறமைசாலி என மதித்து கோமல் சுவாமிநாதனால் தொடர்ந்து ‘சுபமங்களா’வில் எழுத வைக்கவும் முடிந்தது.

இதற்கான விதை ‘மனஓசை’தான்... அப்பத்திரிகையின் உள்ளடக்கத்தை நிர்ணயித்த அதன் ஆசிரியரான பா.செயப்பிரகாசம் தான்.

அரசியல் பண்பாட்டுக் கட்டுரைகளுடன் மக்கள் நலன் சார்ந்த - அதே நேரம் இலக்கியத் தரத்துடன் சிறுகதைகள்... உலகெங்கும் ஒடுக்கப்படும் மக்களின் கவிதைகள்... மக்களின் பிரச்னைகளை முதன்மைப்படுத்திய மேற்கத்திய கோட்பாட்டு அறிமுகங்கள்... என இன்றைய இடைநிலை பத்திரிகைகளுக்கான இலக்கணங்களை மிகத்துல்லியமாக வரையறுத்துக் கொடுத்தது சாட்சாத் ‘மனஓசை’தான்.

இந்த சாரத்தைதான் கண்ணன் 1990களின் மத்தியில் எடுத்துக் கொண்டார். தன் தந்தை சுந்தர ராமசாமியால் நடத்தப்பட்ட ‘காலச்சுவடு’ காலாண்டிதழை தன் பொறுப்பில் இரு மாத இதழாக அவர் கொண்டு வர எண்ணியபோது அவர் முன்னால் தமிழகச் சூழலில் சக்ஸஸ்ஃபுல் ஃபார்முலாவாக - ப்ளு பிரிண்ட் ஆக - இருந்தது ‘மனஓசை’யே.

ஒருவேளை கண்ணன் இதை மறுக்கலாம் அல்லது உண்மையிலேயே தனக்கான ப்ளு ப்ரிண்ட் ஆக வேறு மேற்கத்திய பத்திரிகையை அவர் கொண்டிருக்கலாம்.

ஆனால், ‘மனஓசை’ எப்படிப்பட்ட வரையறைகளுடன் பா.செயப்பிரகாசத்தால் கொண்டு வரப்பட்டதோ... அதே இலக்கணத்துடன்தான், கண்ணன் பொறுப்பேற்றது முதல் ‘காலச்சுவடு’ வருகிறது என்பதை மறுக்கவே முடியாது.

என்ன... ‘மனஓசை’ இடதுசாரி கருத்தியல்களுக்கு அழுத்தம் கொடுத்தது. ‘காலச்சுவடு’ வலதுசாரி கருத்தியல்களுடன் அனைத்து தரப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. கட்டடங்கள் வேறு வேறு. ஆனால், கட்டடம் கட்ட அமைக்கப்பட்ட சாரம் சர்வநிச்சயமாக ‘மனஓசை’தான்.

மதுரைக் கல்லூரியில் பயின்ற காலத்தில் எழுத்தாளர் ஜி.நாகராஜனுடன் ஏற்பட்ட அறிமுகம்... அவர் வழியாக தனக்குப் படிக்கக் கிடைத்த ‘சரஸ்வதி’, ‘எழுத்து’ பத்திரிகைகள் என வளர்ந்த பா.செயப்பிரகாசம், சேலத்தில் 1971ல் பணியாற்றியபோது ‘வானம்பாடி’ முதல் இதழைப் பார்க்கிறார். ‘வானம்பாடி’ குழுவினருடன் அறிமுகம் ஏற்படுகிறது. என்றாலும் அவர்களது வார்த்தை ஜால கவிதைகளில் அவர் மயங்கவில்லை.

இப்படி இருந்த பா.செயப்பிரகாசத்தை முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த இடதுசாரிய கருத்தியல் பக்கம் திருப்பியது தமிழ்நாடன் தான். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தாமரை’யில் பா.செயப்பிரகாசத்தின் ‘குற்றம்’ சிறுகதை முதன் முதலில் வெளிவந்தது. தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதினார். அவை எல்லாமே இன்றும் பா.செயப்பிரகாசத்தின் பெயர் சொல்லும் படைப்புகள்.

எலும்பும் தோலுமாக இருக்கும் ஒருவன் சுடுகாட்டில் கட்டுமஸ்தான வஸ்தாதுவை புரட்டி எடுக்கும் ‘ஜெருசலேம்’ இன்றும் நினைவில் நிற்கும் ஒரு சோறு பதமல்லவா..?

என்ன... ‘மனஓசை’க்கு ஆசிரியரானதும் தன் படைப்புத்தன்மையை குறைத்துக் கொண்டார். இந்தக் காலத்தில் இவர் எழுதிய சிறுகதைகளிலும் பிரச்சாரம் தூக்கலாகவே இருந்தன.

என்றாலும் தன் ஆசிரியத்துவத்தில் பல காத்திரமான நல்ல படைப்புகளை வெளியிட்டார். சிறப்பான பல கதைகள் வந்தன. இலக்கிய சிந்தனை போன்ற அமைப்புகளால் அந்த மாதத்துக்கான சிறந்த கதை என தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் வழங்கப்பட்டன.

குறிப்பிடத்தகுந்த மொழியாக்கக் கதைகள், மொழியாக்கக் கவிதைகள் பிரசுரமாகின.

மாற்று புரட்சிகர அமைப்பில் இயங்கிய கோ.கேசவனை தொடர்ந்து ‘மனஓசை’யில் எழுத வைத்தார். சீரழிவுக் கலாச்சாரம் குறித்தும் சோழர் காலத்தில் நடைபெற்ற கலவரங்கள் பற்றியும் கோசவன் எழுதிய கட்டுரைகள் பெரும் திறப்பை நிகழ்த்தின.

கோவை ஞானி, அ.மார்க்ஸ் போன்றவர்கள் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும், கலை இலக்கியப் பிரச்னைகள் குறித்து நடத்திய உரையாடல்கள், விவாதங்களும் தொகுக்கப்பட வேண்டியவை. போலவே பெட்ரோல்ட் பிரெக்ட் குறித்த அ.மார்க்ஸின் தொடர். குறிப்பாக தோழர் வசந்தகுமார் திராவிட இயக்க கலாச்சாரம் தொடர்பாக எழுதிய ஆய்வுத் தொடர் அன்று பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.

பெருமாள் முருகன், தேவிபாரதி, மனுஷ்யபுத்திரன், இந்திரன், பாவண்ணன், பழமலை, சுயம்புலிங்கம், சுப்ரபாரதிமணியன்... என பலரது பெயர்களை முதன்முதலில் பார்த்ததும் அவர்களது படைப்புகள் அறிமுகமானதும் ‘மனஓசை’ வழியாகத்தான்.

ஆப்பிரிக்க - மூன்றாம் உலகக் கவிதைகளை இந்திரனும், மலையாளக் கவிதைகளை சுகுமாரனும் தொடர்ந்து ‘மனஓசை’யில் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள்.

எல்லா மனிதர்கள் மீதும் எல்லாவிதமான விமர்சனங்களும் உண்டு. அதையெல்லாம் மீறி, தன் காலத்தில், தனக்கு அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் அந்த மனிதன் என்ன செய்தான்... எந்தவிதமான தாக்கத்தை சூழலில் ஏற்படுத்தினான்... என்பதை வைத்துதான் அவனது இருப்பை அளவிட முடியும்.

போலவே அந்தந்த காலகட்டத்தை பொறுத்துதான் அந்தந்த படைப்புகளை மதிப்பிட முடியும். பா.செயப்பிரகாசத்தின் எழுத்துக்களை அவரது காலத்தை சேர்ந்த மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளுடன்தான் உரசிப் பார்க்க வேண்டும்.

வெறும் கால்களுடன் மண் தரையில் ஓடிய வீரனின் வேகத்தை ஷூக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் அதை அணிந்து கொண்டு இயந்திரத்தால் சமமாக்கப்பட்ட தரையில் ஓடும் வீரனின் வேகத்துடன் ஒப்பிடுவது தவறல்லவா..?

இலக்கியம் என்பது ரிலே ரேஸ் போன்றது.

உலகமயமாக்கலுக்கு பின் பரவலான இணையப் பயன்பாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு ‘கலை கலைக்காகவே’ என்ற கோட்பாட்டையும், ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்ற வாழ்வியலையும் சிந்தாமல் சிதறாமல் இணைத்துக் கொடுத்து இன்று மைதானத்தில் ஓட வைத்துக் கொண்டிருப்பது ‘மனஓசை’தான்... பா.செயப்பிரகாசம் தான்.

எனவேதான் இன்றைய தமிழ் இலக்கியத்தின் வேர்களில் ஒருவராக அவர் வாழ்கிறார்.

என்ன... கிளைகளுக்கும் இலைகளுக்கும் வேரின் வியர்வை ஒருபோதும் தெரிவதில்லை... தன்னைத் தாங்கிப் பிடிப்பதே அந்த வேர்தான் என்பதையும் அவை அறிவதில்லை...

- கே. என். சிவராமன் முகநூல் 11 ஜூன் 2020

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ