மேற்கு முனைச் சூரியனை தெற்கும் தனதாக்கிக் கொள்ளுமா?


மராட்டிய மாநிலத்திலுள்ள நடுவணரசின் அனைத்து அலுவலகப் பிரிவுகளிலும் மராட்டிய மொழியையே பயன்படுத்த வேண்டும் என இன்றைய மராட்டிய ஆட்சியாளா்கள் ஆணை பிறப்பித்துள்ளனா். நடுவணரசின் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் மராத்தி மொழியைக் கட்டாயமாக்கி 5.12.2017ல் மாநில அரசு ஆணை பிறப்பித்தது.

”வங்கிகள், தொலைத்தொடா்புத்துறை, அஞ்சல்துறை, காப்பீட்டுத்துறை, ரயில்வே சேவைகள், மெட்ரோ ரெயில், மோனோ ரெயில், விமான சேவைகள், எரிவாயு, பெட்ரோலியத்துறை, வரியியல், மற்றும் மாநிலத்தில் செயற்பட்டு வரும் பொதுத்துறைகள் அனைத்தும் மராத்தி மொழியைக் கட்டாயம் பயன்படுத்தவேண்டும்” என ஆணை குறிப்பிடுகிறது.

1965 இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாணவப்போர் மொழி வழி அடிப்படையிலான தேசிய இன எழுச்சி ஒன்றுண்டு என்பதை பிற தேசிய இனங்களுக்கு எடுத்துக்காட்டியது. அதன் தொடர்ச்சியில் இன்று மராட்டியம் தன் மக்களுக்கான மொழியுரிமைகளை உறுதிப்படுத்துகிறது. நாடாளுமன்ற மேலவையில் உரையாற்றிய போது, தி.மு.க தலைவர் அண்ணா “இந்தியாவின் அனைத்துத் தேசிய மொழிகளும் மைய அரசின் ஆட்சி மொழிகளாக வேண்டும், மையஅரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் ஆகும்வரை ஓயமாட்டேன்” என உரையாற்றியது குறிக்கப்பட வேண்டியது. 1965 போரின் உடனடி வினையாக ”அதுகாறும் (அதுவரையும்) ஆங்கிலமும் இந்தியாவின் ஆட்சிமொழியாக நீடிக்கவேண்டும் (ENGLISH SHALL CONTINUE TO BE THE OFFICIAL LANGUAGE OF INDIA), என்ற சட்டபூர்வ உறுதிமொழியைக் கோரி நின்ற தி.மு.க.வினர், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து தேசிய மொழிகளையும் இந்திய அரசின் ஆட்சி மொழிகளாக்க வேண்டும்” என்ற முன்னகர்வுக்கு வந்தனர்.

தி.மு.க தலைவா் அண்ணா முன்வைத்து ஆற்றிய உரைக்கு, பூபேஷ் குப்தா போன்ற பொதுவுடைமைக் கட்சியினரும் பிற மாநில நாடளுமன்ற உறுப்பினர்களும் காட்டிய வரவேற்பு, பிற மாநிலத்தவா் கால தாமதமாகவேனும் மொழிப் பிரச்சினையை உணரத் தொடங்கி விட்டார்கள் என்பதின் நிருபணமாகியது. இன்று மராட்டியம் முன்வந்து செயலாற்றியிருக்கிறது. இது அனைத்து தேசியமொழிகளும் ஆட்சிமொழித் தகுதி பெறவேண்டுமென்ற கோரிக்கையின் செயற்பாட்டு வடிவம்.

”ஏற்கனவே சட்டம் இருந்தும் மத்திய அரசு அலுவலகங்கள் அதைப் பின்பற்றவில்லை. அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென விரும்புகிறோம்” என மராத்தி மொழித்துறை அமைச்சா் வினோத் தாவடே கூறுகிறார். மொழிவளா்ச்சிக்காக, மொழிக்காப்புக்காக தனி ஒரு அமைச்சா் மராட்டியத்திலிருப்பது நமக்கெல்லாம் வியப்பான ஒரு தகவல். பி.ஜி.கோ் தலைமையிலான ஆட்சிமொழி ஆணையம் 1956 ஆகஸ்டு 6-ல் அளித்த பரிந்துரைகளில் இப்பரிந்துரை இடம் பெற்றுள்ளதையே தாவடே சுட்டிக் காட்டுகிறார்.

பி.ஜி.கேரின் பரிந்துரை வருமாறு:
“நடுவண் அரசின் முகவா்களாக ரயில்வே, அஞ்சல், தொலைத்தொடா்பு, வருமானவரி, சுங்கம் போன்ற பலதுறைகள் செயற்படுகின்றன. மாநிலங்கள் அளவில் கிளைகளுடன் இயங்குகின்றன. இவை போன்ற அனைத்துத் துறைகளிலும் மொழிப்பிரச்சனை இருந்து வருகிறது. இப்பிரிவுகள் அனைத்திலும் நிரந்தரமாக இரு மொழிக் கொள்கையைப் பயன்படுத்த வேண்டும். உள்நிர்வாகத் தொடா்புக்கு இந்தியைப் பயன்படுத்துகிற போதே, மாநில மக்களுடனான தொடர்பில் அந்தந்த மாநில மொழியைப் பயன்படுத்த வேண்டும். இத்துறைகள் எந்த மக்கள் பயன்பாட்டுக்கு உருவாக்கப்பட்டனவோ, அதற்கேற்ற மொழிக்கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் நலன்களைப் பலியிட்டு ’இந்தியைப் பரப்புதல்’ என்னும் கதவுகளைத் திறப்பதற்கான சாவியாக மட்டுமே இத்துறைகளைப் பயன்படுத்தக்கூடாது” (A Solution To the union official Language problem : page 11)

பி.ஜி.கோ் அளித்த மொழி ஆணையப் பரிந்துரைகளையே, மராட்டிய மொழி அமைச்சர் வினோத் தாவடே “அரசுத் திட்டங்கள் எதுவாக இருப்பினும் அவை எவ்வித மொழித் தடையுமின்றி சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்துவதுபோல், மராத்தி மொழியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்” என்று எடுத்துரைக்கிறார்.

நீதியரசா் ஆர்.எஸ் சா்க்காரியா தலைமையிலான மைய மாநில உறவுகள் குழுமம், “மைய மற்றும் மாநில அரசு ஆகிய இரண்டின் பணிகளும் நாட்டின் ஒரு பகுதியில் உள்ள மக்களோடு தொடர்பு கொள்ளும்போது அந்த மக்களின் மொழியிலேயே தொடர்பு கொள்ள வேண்டும். மக்கள் நல ஆட்சியில் இது இன்றியமையாததாகும். அனைத்துப் படிவங்களும் விண்ணப்பங்களும், கடிதங்களும், சீட்டுகளும், அறிக்கைகளும் அந்தந்தப் பகுதி மக்கள் பேசும் மொழியிலும், ஆட்சி மொழியிலும் இருக்க வேண்டும்” என்று பரிந்துரைத்துள்ளது. ஆனால் இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்தும் விருப்பமும் மனசும் நடுவணரசுக்குத் துளியும் இருந்ததில்லை என்பதைய முந்தைய, தற்போதைய அரசுகள் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.

1990-ல் மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை நடவடிக்கை இதன் சாட்சியமாகிற்று. பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்களைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் தனது துறைகளுக்கு மத்திய அரசு, ஒரு வாரம் இந்தியில் கையொப்பமிடும்படி போட்ட உத்திரவு அப்படிப்பட்டது.

நடுவணரசின் பல்வேறு துறைகளில் பல மாநில ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்; அவர்களில் பெரும்பான்மை இந்தி தெரியாதவர்கள். ஆங்கிலம் படித்தவர்கள். அவர்கள் நடுவணரசுப் பணிக்கு ஆங்கிலத்தில் எழுதித் தேர்வானவர்கள். இந்தி பேசும் பகுதியினர் இந்தியில் தேர்வு எழுதிப் பணியில் சேர்ந்தவர்கள். அவர்கள் அரசுப் பணிகளை லகுவாகக் கையாள வாய்ப்பாயிற்று. ஆனால் வேறுவேறு மொழி பேசும் மாநிலதிலிருந்து வந்த பணியாளர் அனைவரும் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று அவர்களின் தேசப்பற்று சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அவரவர் தாய்மொழியில் கையெழுத்திடக் கேட்டிருந்தால், அவர்களும் உள்ளுணர்வுடன் உவகையோடு செய்திருப்பார்கள். இப்போது மராட்டிய மொழி அமைச்சர் தாவடே செய்திருப்பது அது தான். உண்மையில் அதுவே தேசப்பற்று. ஒரு பல்லின அரசு தன் மக்களிடம் தேசத்தின் மீதான அபிமானத்தைக் காட்டக் கோரும் வழிமுறை.

அன்று ஒரு வாரம் இந்தியில் கையொப்பமிடக் கேட்டது, இந்நாளில் நிர்வாகப் பணியனைத்தும் இந்தி மொழியிலேயே நடைபெற வேண்டுமென கட்டாயப்படுத்தும் அதிகாரக் கட்டளையாக உருக்கொண்டுவிட்டது. அது வெளிப்படையாய் ஆணையாகவும், உள்ளில் அதுவே நடைமுறையாகவும் வடிவெடுத்துள்ளது. ஒரு சோறு பதம் என்கிற மாதிரி தர முடியும். எனது வருமானவரி அட்டையில் (pan card) பிறந்த நாள் தவறாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. பிழைதிருத்தம் செய்யக் கேட்டு ஆடிட்டர் கையப்பமிட்டு கடிதம் டெல்லி தலைமையிடத்துக்கு அனுப்பினேன். நத்தை வேகத்தில் எனக்கு வந்த பதிலில் முன்பக்கத்தில் இந்தி: பின்பக்கத்தில் ஆங்கிலம். இந்தப்பதில் சென்னையிலுள்ள சாஸ்திரி பவனிலிருந்து எனக்கு வருகிறது. எனக்கு இந்தி தெரியாது, ஆங்கிலமும் தெரியாது, தாய்மொழி மட்டும் அறிவேன் எனில், நான் என்ன செய்ய இயலும்? அரசுப் பணியாளர்களோடு மட்டுமல்ல; ”மக்களில் ஒருவனாகிய என்னோடும் அரசு என் மொழியில் பேசுவேண்டும். நான் என்னுடைய மொழியில் அரசுடன் பேசவேண்டும்“ என்பது நியாயமான, அறம்சார்ந்த எதிர்பார்ப்பு.

ஒவ்வொரு மாநிலத்திலும் நடுவணரசு அலுவலகங்கள் பல இயங்குகின்றன. மாநிலத்திலுள்ள மக்களுடன் இந்த அலுவல் தொடர்புகள் அவர்களின் மொழியில் இயங்குதல் என்ன பிழை? இந்த அலுவலகங்கள் எவையும் மற்றொரு மொழி பேசும் மாநிலத்துடன், அம்மக்களுடன் பேசவில்லையே? மாநிலத்துக்குள் உள்ள மைய அலுவலகங்களெல்லாம் மராட்டிய மொழியிலேயே பேசவேண்டும், செயல்படவேண்டுமென்பது என்னும் மராட்டிய அரசின் நிலைப்பாட்டில் பிழையேதுமுண்டா?

ஏற்கனவே உள்ள ஆணைகளைச் செயல்படுத்தவில்லை என மராட்டிய மொழி அமைச்சர் குறிப்பிட்டது போலவே, இங்கு இதுவரை தமிழ்நாட்டு அரசுகளால் மறக்கப்பட்டுவிட்ட - நடுவணரசின் ”இந்தி ஆட்சிமொழிச் சட்ட ஆணையம் திருத்தச் சட்டம்” ஒன்றுள்ளது. நாம் இதுவரை அதனை செயல்படுத்தாமல் இருந்து வந்துள்ளோம்.

1976- ஆம் ஆண்டு இந்தி ஆட்சிமொழிச் சட்டஆணையம் வெளியிட்ட திருத்த விதிகள் பின்வருமாறு:
”இந்தி ஆட்சிமொழிச் சட்டம் தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங்களுக்கு மட்டும் செல்லும். இந்தியாவின் ஆட்சி மொழிச் சட்டம் 1963-இன் கீழ் வகுக்கப்பட்ட, அலுவல் மொழிகள் விதிமுறைகள் 1976 – (Official Languages (Use for Official Purposes of the Union) Rules, 1976) மிகத் தெளிவாக இந்தி அலுவல்மொழி தமிழகத்துக்குப் பொருந்தாது” என வரையறுக்கிறது. மத்திய அரசின் இணையதளத்தி்ல இது வெளியிடப்பட்டுள்ளது ’They shall extend to the whole of India, except the State of Tamilnadu’. (இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும், தமிழ்நாடு மாநிலம் நீங்கலாக):
2(b)- இல் கூறியவாறு, தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசாங்கத்தின் அமைச்சகம் அல்லது அலுவலகம், மத்திய அரசாங்கம் நியமிக்கும் எந்த ஒரு ஆணையமும் குழுவும் தீர்ப்பாயமும், மத்திய அரசாங்கத்துக்கு உடைமையான அல்லது அதன் கட்டுப்பாட்டிலிருக்கிற எந்த ஒரு தொழிற்கழகமும் தொழில்நிறுவனமும் - ஆகிய அனைத்துக்கும் இந்த விதிமுறை பொருந்தும். (Ministry, Department or office of the Central Government, any office of a Commission, Committee or Tribunal appointed by the Central Government and any office of a corporation or company owned or controlled by the Central Government.)

“இந்திய அரசு இந்தி பேசும் மாநிலங்களோடு இந்தியில் மட்டுமே தொடர்பு கொள்ளும்; இந்தி பேசாத பிற மாநிலங்களோடு இந்தியிலும் ஆங்கிலத்திலும் தொடர்புகொள்ளும். தமிழ்நாட்டோடு ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்பு கொள்ளும்.தமிழ்நாடு அரசு நடுவணரசோடு தமிழிலும் ஆங்கிலதிலும் தொடர்பு கொள்ளலாம்” என 1976 இந்தி ஆட்சி ஆணையம் வகுத்த திருத்தத்தினை - மாற்றி மாற்றி ஆட்சிக்கு வந்த இரு கழக அரசுகளும் நடைமுறைப் படுத்தவில்லை. இந்தத் திருத்தங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தால், எனக்கு ஏற்பட்ட அவலம் போல் மூர்க்கமான மொழியாதிக்க அமில வீச்சு எம் மாநில மக்கள் முகத்தின் மீது தொடர்ந்து வீசப்பட்டிருக்காது.

மக்கள் நலன் என்னும் ஒரு புள்ளி முக்கியமானது. மக்களின் வாழ்வியல் கொள்கையிலிருந்துதான் மொழிக்கொள்கை உருவாகும். கேரள முதலமைச்சா் பினராயி விஜயன் 10-ஆம் வகுப்புவரை அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் ஒரு பாடமாகக் கற்றுக்கொடுக்கப்படும். மலையாளம் கட்டாயமாகக் கற்றுக்கொடுக்காத பள்ளிகளின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என்று அறிவித்து அதற்கான அரசு ஆணையினையும் பிறப்பித்துள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சா் மம்தா பானா்ஜி மேற்கு வங்க மாநிலப் பள்ளிகளில் வங்கமொழி கட்டாயப்பாடம் என்னும் ஆணையினைப் பிறப்பித்துள்ளார். கருநாடக முதலமைச்சா் சீத்தாராமையாவும் கருநாடகத்தில் நடைபெறும் அனைத்துப் பள்ளிகளிலும் கன்னடம் கட்டாயப் பாடம் என்னும் ஆணையினை வெளியிட்டதுடன், இந்திமொழி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட்ட அழைப்பினையும் விடுத்துள்ளார்.

நூற்றுக்கணக்கில் உயிர்ப்பலி கொண்ட 1965 போராட்டத்தினை நடத்திய தமிழ்நாட்டில், இந்தி ஆதிக்கத்தின் விளைவை சமகால அரசியல் தராசில் நிறுத்துப் பார்க்கவேண்டிய தருணத்தில் வாழுகிறோம். இந்திய நாட்டின் ஆட்சிமொழியாக இந்தியை நிலைநிறுத்தும் பணி தொய்வில்லாமல் தொடருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் இந்திமொழி வளா்ச்சிக்கான 117 பரிந்துரைகள், பா.ஜ.க ஆட்சியில் குடியரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அய்ம்பது ஆண்டுகள் தமிழ்நாட்டின் நிர்வாகத்தினை மட்டுமல்ல, கல்வி முழுமையையும் ஆங்கிலம் கவர்ந்து கொண்டது. 50 ஆண்டுகளாய் கழகங்களின் ஆட்சியினர் தமிழ்வழிக் கல்வியைத் தரவில்லை, ஆங்கிலக் கல்வியை வளா்த்தனா். “இனி பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் வழிக்கல்வி செயல்படுத்தப்படும்; ஆங்கிலப் பிரிவுகள் அகற்றப்படுமென” முதல்வா் அண்ணா 23.1.1968 அன்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஐந்து ஆண்டுகளுக்குள் தமிழ் முழுமையாய்க் கல்வி மொழியாய் ஆக்கப்படுமென்றார்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்த 2006 சூன் 16-ல் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் என தமிழ்நாடு அரசு சட்டம் பிறப்பித்தது. தமிழைக் கட்டயப்பாடமாக்குவது என்றுதான் இருந்ததே தவிர தமிழ்வழிக் கல்வி கட்டாயம் எனச் சொல்லப்படவில்லை.

2014 செப்டம்பர் 18-ல் ஜெயலலிதா “நடுவணரசின் சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை தமிழ் கட்டாயப் பாடம்” எனச் சட்டமியற்றினார். இரு முதல்வா்களும் நிறைவேற்றிய சட்டங்கள் காணாமல் போயின, ஏன்? உதட்டுக்குத் தமிழ்; உள்ளத்துக்கு, நிர்வாகத்துக்கு, கல்விக்கு அயல்மொழி என சாதாரணரின் வாழ்வியல் எலும்புக்கூடுகள் மேல் ஆங்கில ஆதிக்கப் பிரமிடை அடுக்கிக்கொண்டிருந்ததால் உண்டான கேடுகள் இவை.

இந்தி ஆதிக்கம் என்ற கதவுகளை அகற்றுவதற்கு இணையாக, ஆங்கில ஆதிக்கக் கதவுகளையும் பெயர்த்தெறிந்தாக வேண்டும்; இதைப் பிற மாநில முதல்வா்கள் உணா்ந்துள்ளனர். காரணம் தம் மக்கள் என்பதுதான். இதற்கு முன்னடி வைப்பாக மராத்திய அரசு ஒரே தாவலில் மத்திய அரசின் மாநிலக் கிளை அலுவலகங்களில் மராத்தி மொழியே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவித்திருக்கிறது.

அறிவின் விசாலமான ஆயிரம் வாசல்களை ஆங்கிலம் திறந்து வைக்கலாம். நிர்வாகக் கட்டமைப்புக்கான நூறு வாசல்கள் வழி இந்தி நுழையலாம். அறிவின் வாசல்களாயினும் நிர்வாக அலகுகளாயினும் தாய்மொழிப் பயன்பாடே வேண்டுமென, தாய்மொழிச் சாவியைக் கையில் எடுத்துள்ளது மராட்டியம். அறிவும் அதிகாரமும் மக்கள் நலனுக்கு என ஆக்கி சூரியனின் முதல் கீற்றைக் கைவசப்படுத்தியுள்ளது. மராட்டியம் தம் மக்களுக்காய்த் திறந்து விட்ட மேற்கு முனைச் சூரியனை, தெற்குமுனைத் தமிழகம் தனதாக்கிக் கொள்ளுமா? உச்சரிப்புக்கு மட்டுமல்ல, உண்மையிலேயே தமிழருக்கு தமிழ்தான் உயிர்மூச்சு என்பது மெய்ப்பிக்கப்பட வேண்டிய காலம் இது.

- மானுடம் இதழ் (பிப்ரவரி - ஜூலை 2020)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ