‘மணல்’ - மணற்கொள்ளையர்களின் சூறையாடலில் காணாமல் போகும் வைப்பாறின் சோகத்தைச் சொல்லிடும் நாவல்!


அரசியல், பொருளாதார, சமூக வெளிகளில் சூழலியல் குறித்த விழிப்புணர்வு வியாபித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகும். நவீன மார்க்சீயமும் சூழலியல் குறித்து ஆழமான விவாதங்களை முன்னெடுப்பது சமூகத்தின் மீதான அதன் உண்மையான அக்கறையின் வெளிப்பாடன்றி வேறென்ன? முதலாளித்துவம் அதன் தொடக்க காலத்திலிருந்தே, பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாகச் சூறையாடுவதைக் கடைப்பிடித்து வந்திருப்பதை அறிவோம். தன் உச்சகட்ட வளர்ச்சியான ஏகாதிபத்திய நிலையை முதலாளித்துவம் எட்டியிருக்கும் நிலையில், அதன் எல்லையற்ற லாப வேட்டைக்கு இயற்கை வளங்களே பலியாகின்றன. தங்கள் நாடுகளின் எல்லைகளுக்குள் இயற்கை வளங்களைப் பாதுகாத்துக் கொண்டு, வளரும் நாடுகளின் இயற்கை வளங்களை அவை சூறையாடி வருவது அவலத்தின் உச்சம்.

இயற்கையை அழிக்க, விற்க, வாங்க எவருக்கும் எந்த உரிமையும் கிடையாது எனும் அரிய உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு நாடுகளின் இயற்கை வளங்களை எல்லாம் பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகள் சூறையாடுவது அன்றாடம் நிகழ்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் செவ்விந்தியர்களின் நிலங்களைப் பேரம்பேசி வாங்குவதற்கு வந்த வெள்ளைக்கார அதிகாரியிடம் அமெரிக்கப் பூர்வகுடிகளின் தலைவர் ’சியாட்டில்’ என்பவர் அளித்த பதில் காத்திரமானதாகும்.

“வானத்தின் தனுமையையும், பூமியின் கதகதப்பையும் எப்படி உங்களால் வாங்கவோ விற்கவோ முடியும்? இந்த எண்ணமே எங்களுக்கு வினோதமாக இருக்கிறது. காற்றின் புத்துணர்வும், நீரின் மினுமினுப்பும் நமக்குச் சொந்தமில்லாதபோது- அவற்றை எப்படி நீங்கள் வாங்கவோ விற்கவோ முடியும்?” என்று சுரீரென உறைக்கும் வண்ணம் அவர் கேள்வியெழுப்புகிறார். அவரது அந்தப் பதில், தங்களை நாகரிகத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் வெள்ளைக்காரர்களின் ஞானத்தைவிட, இயற்கை குறித்த பூர்வகுடிகளின் ஞானம் எவ்வளவு உயர்வானது என்பதைப் பறைசாற்றுகிறது.

இயற்கை வளங்களைப் பாதுகாத்திட நடக்கும் இயக்கங்களுக்கு ஆதரவாக உலகெங்கிலும் படைப்பாளிகளும் கைகோர்த்துள்ளதை காண்கிறோம். தமிழ் படைப்புலகிலும் இயற்கை வளங்களைப் போற்றிப் பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் நாவல்கள், கவிதைகள் நிறைய வெளிவருவது வரவேற்கத்தக்கது. கோவை மாவட்டம் பவானி ஆறு விஸ்கோஸ் ஆலையின் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட சோகத்தை விளக்கும் ஒரு டாக்கு நாவலாகவே (Documentary Novel) முருகவேளின் ’முகிலினி’ நாவல் கருதப்படுகிறது. அதுபோல் பூமணியின் ‘நைவேத்தியம்’, சுப்ரபாரதிமணியனின் ‘புத்துமண்’, சோ.தர்மனின் ‘தூர்வை’ நக்கீரனின் ‘காடோடி’ ஆகியன சூழலியல் குறித்த விழிப்புணர்வை தமிழ்ச் சமூகத்திற்கு ஊட்ட விழைகின்றன.

இந்த வரிசையில் தன்னுடைய ‘மணல்’ நாவல் மூலம் மற்றுமொரு ஆற்றின் அழிவை பா.செயப்பிரகாசம் ஆவணப்படுத்துகிறார். தமிழ் நாட்டில் வடக்கில் பாலாறு தொடங்கி தெற்கில் குமரி மாவட்டம் கோதையாறு வரை ஏராளமான ஆறுகள் மேற்கில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி ஓடி இடைப்பட்ட பகுதிகளை வளப்படுத்திச் செல்கின்றன. தமிழ் நிலப்பரப்பின் ரத்த நாளங்களாக விவசாயம் செழிக்கவும் மக்கள் தாகம் தீர்க்கவும் நீர் நிலைகளாக அவை நிலைத்துள்ளன.


தமிழகத்தில் நடந்திடும் மணல் கொள்ளையினால் ஆறுகள் எல்லாம் காணாமல் போகும் அவலத்தைக் கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் தமிழ்ச் சமூகத்திற்கு இந்தக் கொள்ளையை எதிர்த்து நடக்கும் வீரஞ்செறிந்த போராட்டத்தை தன்னுடைய ‘மணல்’ நாவலில் பா.செயப்பிரகாசம் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

நாவல் நேர் கோட்டில் சொல்லப்படாமல் முன்னும் பின்னுமாக (Non-linear Writing) நகர்ந்து செல்கிறது. மணற் கொள்ளைக்கு எதிராக விளாத்திகுளத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் நடந்திடும் போராட்டமே நாவலின் மையச் சரடாகும். நாவலில் எந்தவொரு கதாபாத்திரமும் பருண்மையாக வளர்த்தெடுக்கப்படவில்லை. ஆற்று மணல் விற்பதற்கோ, வாங்குவதற்கோ உரிய பொருள் அல்ல என்பதை மனிதச் சமூகம் எப்போது புரிந்துகொள்ளப் போகிறது என்ற ஆதங்கத்தை நாவல் வெளிப்படுத்துகிறது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் ஓடிடும் வைப்பாறு ஆற்றில் நடந்த மணல் கொள்ளையில், அந்த ஆறே காணாமல் போன வரலாற்றைச் சொல்லிச் செல்கிறார் பா.செயப்பிரகாசம். மணல் மாஃபியாவுக்கு ஆதரவாக நின்று ஆளுங்கட்சியினரும், அரசு அதிகாரிகளும் வைப்பாறில் தோண்டி எடுத்த மணலுக்கு அளவே இல்லை என்பதை திரட்டப்பட்ட தரவுகளுடன் நாவல் ஆவணப்படுத்துகிறது. வைப்பாறு மூவாயிரம் ஆண்டுகள் சேர்த்து வைத்த மணல் அடுக்குகளை, பத்தே ஆண்டுகளில் தோண்டித் தீர்த்த பாதகர்களை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவரும் போராளிகளுக்கு தனது நூலைக் காணிக்கை ஆக்குவதோடு, அவர்களின் நீண்ட நெடிய போராட்டத்தை புனைகதையாகவும் மாற்றித் தந்துள்ளார் பா.செயப்பிரகாசம். பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் முன்னிலை வகிக்கும் இப்போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைத்துப் பகுதியினரும் கலந்து கொள்கின்றனர்.

விளாத்திகுளம் வட்டாரத்தில் மணற் கொள்ளையால் விவசாயிகள் அளவிற்கு ’வாதிரிகள்’ என்று தங்களை அழைத்துக் கொண்ட பனையேறிகளும் பாதிக்கப்பட்டனர். ஆத்தாங்கரை கிராமம் முதல் அம்மன்கோயில்பட்டி கரை நெடுக ஆயிரக்கணக்கில் பனை விடலிகள் காணப்படுகின்றன. பனை விடலிகளுக்குக் கீழ் ஆங்காங்கே ’விடிலி’ எனப்படும் ஓலைக் குடிசைகளை அமைத்து பனையேறிகள் தங்குகின்றனர். பனையை நம்பி வாழும் வாதிரிகள் பனைகளோடு பேசும் ’பனை மொழி’ அறிவார்கள். காற்றடி காலத்தில் பனையோலைகள் குரலெடுத்துப் பேசும் சலசலப்பு மற்றோரைப் பயமுறுத்தும். பனையேறிகளுக்கோ அது இசைக் கச்சேரி. நார்க்கட்டில், ஓலைப்பாய், கடகாப்பெட்டி, கொட்டாம்பெட்டி, கிண்ணிப்பெட்டி, தட்டுக்கூடை, அஞ்சறைப்பெட்டி, விபூதிக்கொட்டான், நார்க்கொட்டான், நார்கூடை, சுளகு, விசிறி, தும்பிக்கொட்டை, துடைப்பான். கயிறுகள், கருப்பட்டி, சில்லுக் கருப்பட்டி ஆகியவை பனையேறிகள் வாழ்வின் எளிய அம்சங்கள்.


மேட்டுப்பட்டி விவசாயிகளோடு சேர்ந்து பனையேறிகளும் களத்தில் நிற்கிறார்கள். வட்டச் செயலாளரின் பையனைக் கட்டிவைத்து அடிக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் மெதுவாகக் கண்ணசைத்து வட்டச் செயலரிடம் ”மன்னிப்புக் கேள்” என்கிறார். இரு கைகளையும் குவித்து, “எம் பையன விட்டுருங்கய்யா. அறியாப் பிள்ளை” என்று வட்டச் செயலர் கெஞ்சுகிறார். விளாமரங்களும், அத்தியும் குளக்கரையில் அடுக்கி நின்றதால்தான் ஊருக்கு விளாத்திகுளம் என்ற பெயர் தொத்திக் கொண்டதைக் காண்கிறோம். செண்பகமும், துரைக்கண்ணுவும், பால்வண்ணனும் வைப்பாறு ஆற்றின் அழிவைப் பார்த்தவாறே கரை மீது நடக்கிறார்கள். அவர்களுடன் வாசகர்களாகிய நாமும் பயணிக்கிறோம்.


மணலைத் திருடுனாத்தானே குத்தம்! திருட்டையே அதிகாரப் பூர்வமாக ஆக்கிவிட்டால் என்ன? அரசு ஆணை வெளியிட்டு அரசு அங்கீகாரத்துடன் மணல் குவாரி நடத்த முடிவெடுத்த போது அதுதான் நடந்தது. மழை இறங்கும் கார்காலம் என்றில்லாமல் கோடையிலும் பால் சுரக்கும் ஆறு ’வைப்பாறு’. மார்பைப் பிசைந்து பிசைந்து பாலூட்டும் தாய்போல, தன்பிள்ளைகளுக்கு ஊற்றுத் திறந்து உண்ணத் தருகிறது வைப்பாறு. அவ்வாறு வளமூட்டி வந்த அந்த ஆத்தை மட்டுமே நம்பியிருந்த விவசாயிகளையும், பனையேறிகளையும் முதுகில் குத்தி குற்றுயிரும், குலையுயிருமாய் அலையவிட்டனர்.

விருசம்பட்டி ஆத்தங் கரையில் போராட்டம்! ஊரே திரண்டு நிற்கிறது. பள்ளிக்கூட வாத்தியார் சாரங்கன் குழந்தைகளை எல்லாம் போராட்டக் களத்திற்கு வரச்சொல்லி விடுகிறார். கூட்டத்தைக் கண்டு கலெக்டருக்கு நடுக்கம். கட்டுமானத் தொழிலில் மணல் ஒரு சர்வாதிகாரி. கட்டிடங்கள், பாலங்கள், அணைகள், சாலைகள் அனைத்தும் வளர்ச்சியின் அடையாளங்கள்! ஆனால் இந்தப் பிரமாண்டங்களுக்கும் சாதாரண மக்களது வாழ்விற்கும் சம்பந்தமில்லை. ஆற்றின் நீரைச் சேமித்து வைக்கும் பாத்திரம் மணல். ஆற்றிலிருந்து மணல் பிரிக்கப்பட்டவுடன், அது பொருளாதார அடியாளாக மாறிவிடுகிறது. இயற்கை தன்னுடைய மேன்மையை இழந்து விற்பனைப் பொருளாக மாறிவிடுகிறது.

நாவலின் நடுவே கொம்பன்-வள்ளி காதல் கதையும் தலைகாட்டுகிறது. தமிழ்ச்சமூகத்தில் உயிரைவிட சாதி கௌரவம்தான் மேலானதாக இருக்கிறதே! உயர்சாதியைச் சேர்ந்த வள்ளியைக் காதலிக்கும் கொம்பனை எச்சரிக்கிறார்கள். நிலையான சாதிக்காக நிலையில்லா உயிரை அழிப்பது அவர்களுக்கு நியாயமாகத் தோணுது. தப்பி ஓடும் காதல் பறவைகளை விரட்டிப்பிடித்து வெட்டிச் சாய்க்கிறார்கள். பெற்ற மகளைத் துடிக்கத்துடிக்கக் கொன்ற உயர்சாதிகள், பலி கொடுத்த பெண்ணைக் குலதேவதையாக்கி பாவத்தை ஆத்திக் கொள்கிறார்கள். வள்ளி ஓடைமரத் தெய்வமாக உயர்ந்துவிடுகிறாள். கோயில் எடுத்து அம்மனுக்குப் பொங்கலிட்டு பரிகாரம் செய்து விடுகிறார்கள். கொம்பனுக்குப் பூசை, படையல், கோயில் எதுவுமில்லை. அத்துவானக் காட்டில் இருக்கும் ஓடை மட்டும் கொம்பன் ஓடை என்றானது. இது தமிழக கிராமங்கள் தோறும் நடக்கும் அவலம்தானே.

விளாத்திகுளம் தொகுதியில் கட்சி மாறி மாறி ஜெயிக்குது, யார் ஜெயித்தாலும் மணல் அள்ளுறவன் பக்கம்தான் நிற்கிறார்கள். வைப்பாற்றின் மொத்த நீளம் 110 கி.மீ. அகலம் 400 மீட்டரிலிருந்து 800 மீட்டர் வரை வேறுபடும். படுகைத் தளத்திலிருந்து ஒரு மீட்டர் ஆழம் மட்டுமே மண் அள்ள வேண்டும் என்பது விதி. ஆனால் இருபது அடி ஆழம் வரை சுரண்டியிருக்கிறார்கள். குறுமணல் கிடைத்த இடங்களில் அதற்கும் கீழேபோய் நாற்பதடிக் குகை உண்டாகியிருக்கிறது. இப்படி உருவாக்கப்பட்ட பள்ளத்தில் விழுந்து செல்லத்தாயி என்ற அப்பாவிப் பெண் இறக்கிறாள். “எம்மிடம் தாமிரபருணி, விளாத்திகுளம் வைப்பாறு நொய் மணல் கிடைக்கும்” என்று கேரளாவின் ஊர்களில் தட்டி போர்டுகள் வைத்து விற்பனை நடப்பதை போட்டோ ஆதாரத்துடன் கலெக்டரிடம் விளக்குகிறார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. ஆற்றை நம்பியிருந்த விவசாயப் பெருவாழ்வு மூடப்பட்டுவிட்டது. ஆண்கள் கட்டிட வேலைக்குப் போகிறார்கள். பெண்கள் தீப்பெட்டிக் கம்பெனிகளுக்கும், மில்களுக்கும் தூக்குச் சட்டிகளோடு அலைகிறார்கள்.


அம்மன்கோயில்பட்டி, விருசம்பட்டி, வைப்பாறு என்று மூன்று பாகங்களாக நாவல் விரிந்து செல்கிறது. நாவலின் கடைசிப் பாகம் ’வைப்பாறு’ கரிசல் மண் வாசம் மணக்க நகர்ந்து செல்கிறது. துன்பியல் நாடகத்தின் கடைசிக் காட்சிபோல் அமைந்துள்ளது.

காலையில் எட்டையபுரம் நோக்கிப் போகும் பேருந்திலும், மாலையில் எட்டையபுரத்திலிருந்து திரும்பும் பேருந்திலும் கூட்ட நெரிசல். மில்களுக்கும், தீப்பெட்டி கம்பெனிகளுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களின் கூட்டம். இளசுகளும், பெரிசுகளும் வயது வித்தியாசம் இல்லாமல் பேசிக் கொள்கிறார்கள். பஸ் கண்டக்டர் சேது இருபது வயது கூட நிரம்பாத இளைஞன். பெண்களுடன் சரிக்குச் சரியாக அரட்டை அடிக்கிறான். ஆனாலும் கண்ணியமான பேச்சு. கேலிப் பேச்சும் நக்கலுமாக பயணம் களைப்பின்றிக் கழிகிறது. “நீங்க வந்தாத்தான் வண்டி போவேங்குது” என்று ஈசுவரி என்ற இளம் பெண்ணிடம் கிண்டலாகக் கூறுகிறான். “நாங்க ஏறலைன்னா பஸ் ஓடாது; இறங்கலைன்னா பேக்டரி ஓடாது’ என்று இன்னொரு பெண் வாயடிக்கிறாள்.

காலைப் பயணத்தில் இருக்கும் புத்துணர்ச்சி மாலைப் பயணத்தின் போது அவர்களிடம் இருப்பதில்லை. ஒருநாள் மாலைப் பயணத்தின் போது ஈஸ்வரிக்குப் பக்கத்தில் பெரியவர் செண்பகம் உட்கார்ந்திருக்கிறார். திடீரென்று பெரியவர் அந்தப் பெண்ணிடம், “நீ யாரு வீட்டு மக? சொர்ணத்தாயி முகச் சாடையாத் தெரியுதே” என்கிறார். ஈஸ்வரிக்கு ஒரே ஆச்சரியம்! “நான் சொர்ணத்தாயி மகதாம்யா,” என்று பதில் அளிக்கிறாள். “அம்மா நல்லா இருக்காங்களா? ஏன் இப்பெல்லாம் காய் விற்க வர்றதில்லே”’ என்று பெரியவர் கேட்டவுடன், “ஆத்தையே சப்பி எடுத்தாச்சி; பெறகு காய் எங்க வரும்” என்று நச்சென்று பதில் வருகிறது. அது வெறும் வார்த்தைகள் இல்லை. ஆற்றுக்குள்ளிருந்து மேலெழுந்து வீசுகிற வேனலின் கதை; துயரத்தின் சரித்திரம். அடுத்து பெரியவர் செண்பகம் மற்றொரு பெண்ணைப் பார்த்து, “நீங்க பாண்டியம்மா தானே? என்றதும் அந்தப் பெண் ”ஆமா! நான் பாண்டிம்மாதாய்யா,” என்று ஆச்சரியம் மேலிடக் கூறுகிறாள். ஈஸ்வரிக்கும், பாண்டியம்மாவுக்கும் தெரியாது பெரியவர் செண்பகம் கடந்த ஆண்டுகளில் மணல் கொள்ளைக்கு எதிராக அப்பகுதி கிராமங்களில் நடந்த போராட்டத்தின் முன்னணியில் நின்றவர் என்பது. காலச் சக்கரத்தின் சுழற்சியில் வரலாற்றுச் சுவடுகள் அழிந்து போவது இயல்புதானே. அன்று வைப்பாற்றைக் காப்பாற்ற நடந்த போராட்டத்தில் முன் நின்ற செண்பகம், பால்வண்ணம், துரைக்கண்ணு போன்றவர்கள் எல்லாம் மறைந்தும், மக்களின் மனதிலிருந்து மறந்தும் போகிறார்கள்.

ஊர் வந்து சேரும் பெரியவர் செண்பகத்திற்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. போராட்டத்தின் நடுநாயகனாக நின்ற மாறனை அநியாயமாகக் கொன்றுவிடுகிறது மணல் மாஃபியா. மாறன் பைக்கில் வந்தபோது லாரியைக் கொண்டு மோதித் தீர்த்து விடுகிறார்கள். மாறன் கொலைக்கு போலீஸ் வழக்குப் பதியவில்லை. விபத்தில் இறந்ததாக வழக்கை முடிக்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக மாறனின் தகப்பன் மகனைக் கொன்ற மணற் கொள்ளையர்களோடு பேரம் நடத்தி பணத்தைப் பெற்றுள்ளான் என்ற செய்தி ஊரையே உலுக்குகிறது.

முதலாளித்துவம் அனைத்து உறவுகளையும் பண உறவுகளாக மாற்றும் கொடூர மனங்கொண்டது என்பதறிந்தது தானே! வஞ்சகம், சூது, பொய் பித்தலாட்டம், கொலைகளுடன் நடந்துகொண்டிருக்கும் மணற்கொள்ளைக்கு என்று நாம் முடிவு கட்டப்போகிறோம்?

– பெ.விஜயகுமார்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ