வாசமுள்ள பாட்டு
கையைக் காலைப் பரப்பிக்கொண்டு தலைவிரி கோலமாய் ஆறு பெருக்கெடுத்து ஓடிய காலமுண்டு. இப்போது உப்புப் பரிந்த கருவாடு போல், விளாத்திகுளம் ஆறு செத்துக் கிடக்கிறது.
நதிக்கரையோரமாய் பெரிய்ய குடைகளை விரித்து வைத்தது மாதிரி ஒடை மரங்கள். கை மடக்கி உயர்த்திய ’முட்டி’ கள் போல் உயர்ந்து தனித்துத் தெரிந்தன நாலைந்து ஒடைகள். துளித் தூத்தலையும் கண்ணில் ’காங்காமல்’ விரட்டும் ஆகாயத்தை, “வா இன்னைக்கு ஒன்னோட சண்டை தான்” என அழைக்கும் அந்த உயர்த்திய கைகள்.
இயற்கைக் காட்சிகளை தீட்டுகிற ஒரு ஓவியனை அந்த இடத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறோம். அசைந்து நடந்த தூரிகை பனை ஓலைக்குடிசையில் போய் முட்டி நிற்கிறது. குற்றுயிரும் குலையுயிருமாய் ஒரு வாழ்க்கை அந்த இடத்தில் கிடப்பதைப் தூரிகை காண வாய்க்கிறது.தொட்டுத் தீட்டுவதற்கும் அப்பாற்பட்டுக் கிடக்கிற அனாதி வாழ்க்கையைத் தூரிகை திகைத்துப் பார்க்கிறது.
நாலைந்து மாடுகள், சில ஆடுகள் ஆற்றோரக் காட்டுக்குள் மேய்த்தபடி, கடற்கரை என்ற தாழ்த்தப்பட்ட இனத்துக் கலைஞர் குடிசைக்கு வந்து கொண்டிருக்கிறார்.
குறவன் – குறத்தி ஆட்டக் கலைஞரான அவரின் கடந்த காலம் வேறொன்று.
கிராமம் கிராமமாய் சாமி கும்பிடு – கோயில் பண்டிகை – பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் வெகு விமரிசையாய் குறவன் - குறத்தி ஆட்டக் கதம்ப நிகழ்ச்சி; விடிய விடிய நடத்தும் ஆட்டம்; ஆட்டக் குழுவில் எட்டுப் பேர். மூன்று பெண் வேடம், மூன்று காமெடி, ஒரு தவில், ஜால்ரா. கடற்கரைக்கு கோமாளி வேடம் – அவர் பண்ணையார், சாமியாடி, கள்ளுக்குடி, பேயாட்டம் என்று மணிக்கொருதரம் பிரிவு பிரிவாய்ச் செய்வார். இந்த மாதிரி கதம்ப நிகழ்ச்சிகளில், ஒரு கதை இருக்காது. பல கதைகள் இருக்கும்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் அன்னைக்குப் பாத்து மேகாத்து அடித்தது. எதிரே வந்த மயிலேறி நாடார் கடற்கரையிடம் “இன்னைக்கு எங்கே ஆட்டம்” என்றார்.
“இங்ஙன பத்ராசல புரத்தில ”
“அப்ப நம்ம பனையடியில வந்து ஒரு செம்பு பதனி குடிச்சிட்டுப் போரும். ஆட்டம் நல்லா வரும்” - கூப்பிட்டுப் போனார்.
மே காத்து அடித்தது. எதிர்த்து இரண்டு போலீஸ்காரர்கள் சைக்கிளில் வந்தார்கள். ‘குபீர்’ என்று கடற்கரை கையைப் பிடித்துக் கொண்டார்கள்.
“என்ன வாடை அடிக்குது?”
“ஐயா, நா ஆட்டக்காரன். ஒரு செம்பு பதனி குடிச்சேன்”
“சரி, வா ஸ்டேஷனுக்கு”
காவல் நிலையத்தில் அப்போது மாலையா பிள்ளை சப்-இன்ஸ்பெக்டர்.
“அட முருகா! ஒன்னையவாடா கூட்டி வந்தாங்க” அதிசயித்துப் பார்த்தார்.
கூப்பிட்டு வந்திட்டாங்க, ஒன்னுமில்லேன்னு அனுப்பீற முடியுமா? பிறகு விளாத்திகுளம் மருத்துவமனையில் பரிசோதனை.
“நம்ம நேரம் அங்க டாக்டர் இல்ல. பிறகு கோவில்பட்டி மருத்துவமனைக்குக் கூட்டிப் போனாங்க. அங்கயும் டாக்டரு இல்ல. பிறகு ஒரு நர்ஸம்மாதான் ‘கண்ணு செவ செவ-ன்னு இருக்கு’ன்னு எழுதிக் கொடுத்திச்சு. வாங்கிட்டு வந்து காட்டினேன். சரி, போடான்னு அனுப்பிட்டாரு மாலையா பிள்ளை.”
இங்கே பத்ராசலபுரத்தில் இன்னும் காணமே என்று கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. ஏற்பாடு செய்தவர்கள் தவிதாயப்பட்டு, குட்டி போட்ட நாய் போல் ஆகிப் போனார்கள்.ராத்திரி பதினோரு மணிக்கு ஆட்டக் களதுக்குப் போய்ச் சேர்ந்த கடற்கரை,
“எனக்குப் பாதுகாப்புக்கெல்லாம் ஆள் வந்தது. போலீஸ்காரங்க நல்லா சுறுசுறுப்பா வேலை செய்றாங்க. போலீஸ்காரங்களுக்கு எம் பேர்ல நல்ல வாஞ்சனை. ஒத்தாசனையா பாதுகாப்பா கூட வந்து கொண்டு வந்து சேத்திருக்காங்க.”
போலீஸ்காரர்களுக்கு நல்ல கொடுப்புக் கொடுத்தார்.
ஒரு கலைஞனுடைய சுதந்திரம் எல்லையில்லாதது. போலீஸ்காரர்கள் அவர்களுக்குரிய எல்லையில் நின்று கடமையைச் செய்வதில்லை; கலை எல்லையில் நின்று சுதந்திரமாய், கச்சிதமாய் சொல்லி முடித்தார் கடற்கரை.
அன்னைக்குத் தேதியில் அதைப் பேசாதே, இதைப் பேசு, அப்படிப் பாடாதே, இப்படிப் பாடு என்று விரல் நீட்டிச் சொல்ல ஆள் கிடையாது.அப்படிச் சொன்ன ஒரு கிராமத்தில் ஆட்டத்தைப் பாதியிலேயே முடித்துவிட்டு வந்த, அந்த கம்பீரம் அவர்களுக்குண்டு.
ஆட்டக்குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை; ஆடத் தெரிஞ்சவன் ஆடுவான். பாடத் தெரிஞ்சவன் பாடுவான். ரெண்டும் இல்லாதவன் வாய் வார்த்தையிலேயே சமாளித்து வந்துவிடுவான்.கடற்கரை கால்கெச்சத்தை (சலங்கையை) வைத்தே சக், சக் என்று காலாலே ஆட்டத்தை முடித்து வந்துவிடுகிறார். நின்றபடியே அவருக்கு கால் பேசும். வாய் பேசும். மூலாதாரமான புத்தி பேசும்.
முன்னக்கூட்டியே திட்டமிட்டுப் பேசி வைத்து, ஆட்டத்தில் அரங்கேற்றுவது இல்லை. “இப்ப நீங்க ஒன்னு சொல்லுவீக; நா ஒன்னு சொல்லுவேன். இப்படி ஒன்னுக்கொன்னு பேசி வளத்திட்டுப் போறது தான்.”
“எங்க, அப்படி ஒன்னு பேசுங்க…”
“எதிர்த்தாப்பில் ஆள் இருக்கணுமில்லே. இருந்தாத்தான் வரும்.”
எதிர்த்து உட்கார்ந்திருந்த தேவராட்டக் கலைஞர் குமாரராமன் “இப்ப நான் இருக்கேன். பேசுங்க” என்றார். அவர் கடற்கரையின் பல ஆட்டங்களைக் கண்டவர்.
“ஐயாவுக்கு எந்த ஊரு?”
“தூத்துக்குடி மாவட்டம். பிள்ளையார் நத்தம் தாலுகா, சித்தவ நாயக்கன்பட்டியிலிருக்கும் வெறும் பண்ணையார் ஆ… பெரும் பண்ணையார்.”
“பிள்ளையார் நத்தம் போஸ்ட் தானே, அது என்னைக்குத் தாலுகா ஆனது?”
“ஒரு பேச்சுக்கு வச்சிக்கிற வேண்டியதுதானே. கழுதை என்ன காசா கேக்குது?”
“நிலபுலம் இருக்கா?”
“காடுகரை எக்கச் சக்கம். கலப்பை சாத்த எடம் கிடையாது.
ஆடு, மாடு எக்கச்சக்கம். பால் பீய்ச்ச கன்னுக்குட்டி கிடையாது.
இவ்வளவு சொத்துக்கும் வாரிசா நா ஒரு பயதான்… பெரும்ம்… பண்ணையார்.”
“நிலபுலம் எங்கே இருக்கு?”
“திருச்செந்தூருக்கு கோயிலுக்குக் கிழக்கே உள்ளதெல்லாம் நம்ம நிலந்தான்.”
“யே, பாவி, அங்க கடல்லே கெடக்கு..!”
“கடல்தான். எம் பேரைச் சொல்லாம அங்க யாரும் தண்ணி அள்ளிக் குடிக்க முடியாது. அப்படியே குடிச்சிட்டாலும் நாலு அஞ்சு வாட்டி வாந்தி பண்ணத்தான் செய்வான்.”
“ஒம்ம பேரு?”
“முருகன்”
“முருகா, முருகா… ஒனக்குத்தான் கடலெல்லாம் சொத்தா இருக்கே.ஒனக்கெதுக்கப்பா கோயில், குளம், உண்டி, நிலபுலம் இவ்வளவு சொத்து.”
மொத்தக் கூட்டமும் முருகா, முருகா என்று சிரிக்கிறது.
2
“எப்ப இருந்து ஆட ஆரம்பிச்சீங்க.”
“1950-லே வேஷம் கட்டினேன். அன்னைக்கு கால்ல கட்டுன சலங்கையை இன்னும் அவுக்கலே. அம்பது வருசம் தொய்வில்லாம ஆடியிருக்கேன். 65 வயது வரையிலும் ஆடினேன்.”
“இப்ப ஆட்டத்துக்குப் போறதில்லையா?”
“வயசாச்சில்லே”
“என்ன வயசு?”
“எழுபத்திரண்டு .”
“கால்ல கட்டுன சதங்கையைத்தான் கழட்டினீரு. கையில பிடிச்ச கம்பை உதற முடியலயே”
“ஆடுமாடு மேய்க்காம வயித்துக்குத் தீவனம் கெடைக்குமா?”
“என்ன வேசம் போடுவீரு?”
“பண்ணையார், மாமியார், சாமியாடி”
கடற்கரைக்கு சாமியாடி வேடம் வெகு பொருத்தம். அந்த வேசத்துக்கே பிறப்பெடுத்து வந்த மாதிரி ஆடுவாரு. சாமிக்கு மருள் வந்து, ஆய், பூய் என்று குதிக்கிறது. சாமியிடம் ஒரு பெண் கேட்கிறாள்…
“சாமி, ரொம்பச் சிக்கலா இருக்கு, சாமி”
“வௌங்குற மாதிரி சொன்னாத்தானே, சாமிக்குத் தெரியும்…”
“குடும்பத்தில ரொம்ப கஷ்டம் சாமி”
“கஷ்டமா இருக்கோ”
“ஆமா சாமி”
“சாமிகிட்ட பத்து நூறு கடன் வாங்கிட்டுப் போகலாம்னு வந்தயா புள்ளே”
“அப்ப, நீங்க வட்டிக்குப் பணம் கொடுக்கறீங்களா?”
“நூத்துக்கு 85 ரூபா வட்டி!”
“வௌங்குமா சாமி?”
“வௌங்காதுதான். வெங்காத சோலிதான எல்லோரும் இப்ப பாத்துட்டுத் திரியுறோம்.”
காலில் தைத்த முள்ளை, முள்வாங்கி கொண்டு குத்தி எடுக்கிறபோது வலி கொடுக்கத்தான் செய்யும். கலைவாணர் என்.எஸ்.கிருட்டிணனிலிருந்து கடற்கரை வரை, நகைச்சுவையோடு கூடி கருத்துக்களைச் சொல்லிக்கொண்டே வருகிறார்கள். அது எங்கேயாவது, யாருக்காவது தைத்து வலி எடுத்ததாய்த் தெரியவில்லை.வலி எடுக்காததினால் தான் இன்றைக்கும் நூற்றுக்கு இருபது பேர் இந்த கொடுக்கல், வாங்கல் ’லேவாதேவித் தொழிலைச்’ செய்து வருகிறார்கள். வாங்கு என்பது ஒரு குத்தீட்டி. அது குத்துவதை விட, குத்தி எடுக்கிற போது, வெருகுப் பூனையின் உடலையே கொண்டுவந்து விடும். வட்டித் தொழில் என்பது ’ வாங்கு’ போல. கொடுப்பதை விட எடுப்பது பலபங்கு அதிகம்.
கலை நிகழ்ச்சியில் தோணாமல் வைக்கும் கருத்துக்கள், முண்டியடித்து வரும் நகைச்சுவைகள், அளவுக்கு மீறிய கொச்சைகள், இவைகளுக்குள் அல்ல – இவைகளைத் தாண்டிய இடத்தில்தான் ஒரு முக்கியமான கேள்வி எனக்கு இருந்தது.
இதுவரை யாரும் தொடாத அந்த இடத்தைத் தொட வேண்டியது அவசியம் என்று பட்டது.
“கண்டேன், கண்டேன் சபையோரே-உங்களைக் கையெடுத்துக் கும்பிடறேன் சபையோரேதாய் தந்தையர் பணிந்தேன் சபையோரேதலத்து வளம் பணிந்தேன் -நரிப்பூர் சுப்பையா வாக்கியப்படி நடப்பேன்.கண்டேன், கண்டேன் சபையோரே”
நரிப்பூர் சுப்பையாத்தேவர் ஆட்டக்குழுவின் தலைவர். குழுவில் கணபதிப் புலவர் தவிர, மற்றெல்லாரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துப் பிள்ளைகள்.ஆட்டக்குழுவின் வாத்தியாராக இருந்த சுப்பையா , இடைநிலை சாதிக்காரராய் இருப்பினும், சமூக நியதியில் உயர்சாதிக்காரர்.
“மேச் சாதிக்காரரான சுப்பையா உங்களை எப்படி நடத்தினார்?”
அந்த உறவுமையத்திற்குள் போய் உண்மை அறிதல் எனக்குத் தேவைப்பட்டது.
“வவுத்துப் பிள்ளையக் கூட அப்படி யாரும் பாத்துக்கீற மாட்டாக. அப்படி கவனிப்பு” என்றார் கடற்கரை.
“எப்படி?”
“சுப்பையா சாதி வித்தியாசம் பாக்கமாட்டார். அந்த ஐதீகம் கிடையாது. அடிச்சிச் சொல்லலாம். சாதி வித்தியாசம் பாராமல் தன் பிள்ளைகள் போல் நடத்தியது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. பள்ளு - பறை எல்லாத்தையும் ஒன்னாச் சேத்து வச்சிக்கிட்டு ஆடுறான்னு சொந்தபந்தம் பேசிச்சி. நரிப்பூரே எதித்து நின்றது. அவர் அப்பா இருக்கிற காலத்திலேயே ஊர் சேந்து, பஞ்சாயத்துக் கூட்டி ஊர்விலக்கம் செஞ்சாங்க.”
”அவரோட அப்பா என்ன சொன்னார்?”
“இந்த எட்டுப் பிள்ளையும் எம்பிள்ளைக தாண்டா. ஒத்துக்கிட்டா, நீ எங்கிட்ட வா. இல்லேன்னா எனக்கு நீ வரவும் வேணாம். ஒனக்கு நா வரவும் வேணாம். எங்க வீட்ல நீ வந்து சம்பந்தம் பண்ணவும் வேணாம்.”
கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்கவில்லை. அந்தப் பெரியவர் சொன்ன வாக்கியத்தின் அருமையை உணர்ந்து, ஊர்விலக்கத்தை இரண்டு வருசத்துக்குப் பின் ஊர் விலக்கிக் கொண்டது.
“ஒங்க வீடுகளுக்கெல்லாம் வந்து சாப்பிட்டிருக்கிறாரா? நீங்க அவங்க வீடுகளுக்குப் போறதுதான் உண்டுமே தவிர, அவங்க ஒங்க வீட்டுக்கு வர மாட்டாங்களே? பொதுவா, ஒங்க வீடுகள்ளே சாப்பிட மாட்டாங்களே”
“சாப்பிட மாட்டாரா? சுப்பையா வருவாரு. சாப்பிட்டுசெஞ்சிட்டு ஒன்னுமன்னா இங்ஙனக்குள்ளதான் படுத்துக்கிடப்பாரு.”
“இப்ப அப்படியிருக்கா?”
“இன்னைக்கு நிலவரம் நமக்குத் தெரியாதய்யா, தெரியாம, தெரியும்னு பொய் சொல்லக் கூடாதில்லே. நான் அம்பதாம் வருசத்து நிலவரத்தைச் சொல்கிறேன்.”
விளாத்திகுளத்திலயும் சுற்றுவட்டாரத்திலும் நடப்பு நிலைமைகள் தெரியாது என்று கடற்கரை சொல்கிறார். அவர் வாழ்ந்த பொற்காலத்தின் பெருந்தன்மையைக் காப்பதற்காக அப்படிப் பேசுகிறார் என்று தோன்றும்.
“சரி, நீங்க அம்பதாம் வருஷத்து ஆளு, ஒங்க கால நடப்பைச் சொல்லுங்க…”
“குழுவின் தலைவரான சுப்பையா வாத்தியார், எந்த இடத்திலும் போய்ச் சாப்பிடுவார். எங்க சாதி மக்கள் வீட்டில் தயங்காமல் போய்ச் சாப்பிட்டிருக்கார்.”
அவருடைய நாட்டில் ராமநாதபுரம் சீமையிலேயே கேட்பார்கள்.
“யார்றா அது சுப்பையா?”
“எல்லாம் நம்ம பயங்க தாண்ணே”
“சும்மா சொல்றா”
பிறகு இன்னார் இன்னார், இன்னின்ன ஊர் என்று சொல்வார். அப்பக் கூட இன்னார் இந்த சாதி என்பது வராது.சும்மா சொல்றான்னு வார்த்தையை அழுத்துகிற போதுதான் சாதி சொல்வார். அப்பவும் சொல்லிவிட்டு, “ஒன்னு, எல்லாருக்கும் உள்ளே வச்சி சோறு போடுங்க. இல்லே, வெளியே வச்சி சோறு போடுறதன்னா, நானும் வெளியே உக்காந்துக்கிறேன்” என்பார். அவர் சொன்ன பிறகு என்ன செய்ய?ரொம்ப ஐதீகம் பார்த்த அந்தக் காலத்திலும் ஒன்னா வீ்ட்டுக்குள்ளே வைத்துத் தான் சோறு போட்டார்கள்.
“நம்ம இனத்தைச் சேர்ந்தவனில் இப்படியொரு பையன் தலைமைக்கு வந்திருக்கானே என்பதற்காக அவர்கள் ஏற்றுக் கொள்ளலாம்; தலைமை, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருத்தரை கொண்டிருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பார்களா?”
அப்படி இல்லை. மறுக்கிறார் கடற்கரை. “கலைக்கு சாதி பார்க்கக்கூடுமா?” கேட்டார்.
நரிப்பூர் சுப்பையா வயசாகி ஒதுங்கிய பிறகு, கடற்கரை பதினைந்து வருஷம் அந்தக் குழுவை தலைமை தாங்கி நடத்தியிருக்கார்.அப்பவும் தாழ்த்தப் பட்டவர்கள் மட்டுமில்லை, மற்ற சாதிகளும் குழுவில் ஆடினார்கள்.
“ஒங்க தலைமையில வேற சாதியைச் சேர்ந்தவங்க இருந்தாங்களா?”
“இருந்தாங்க. ரெண்டு பையங்க ஆடினாங்க.” அழுத்தமாகச் சொல்கிறார் எழுபத்திரண்டு வயது கடற்கரை.
“அப்பவும் சாதி வித்தியாசம் பாக்காம ஊர்கள்ள கூப்பிட்டாங்களா?”
“ஆமா, எல்லா இடத்துக்கும் கூப்பிட்டாங்க. ஒவ்வொரு எடத்திலயும் ஒரு மாதிரி”
சுப்பையா தலைமையில் இருந்த குழுவில் ஆடிய கணபதிப் புலவர் அப்படியில்லை. அவர் இந்தக் குழுவில் ஆடிக் கொண்டிருந்தவர். சுப்பையா பார்த்து வளர்ந்தவர். ஐதீகம் பார்க்க ஆரம்பித்து விட்டார். தாழ்த்தப்பட்ட கலைஞர்கள் வீட்டில் கை நனைக்க அவருக்கு மனது ஒருப்படவில்லை.ஆனால், அவர்கள் நடத்துகிற கூத்து நிகழ்ச்சிகளில் ஆட்டமெல்லாம் ஆடுவார்.
சண்முகம் என்று அருந்ததியர் இனப் பையன்.குரல் எடுப்பாக இருக்கும்.வாத்தியார் சுப்பையாவை அணைச்சிப் பாடுவான். ஒரு தடவை காடல்குடி என்ற ஊருக்கு ஆட்டத்துக்குப் போயிருந்தபோது கணபதிப் புலவரும் மற்றவர்களும் ஒரு விருந்துக்குப் போயிருந்தார்கள். விருந்து கொடுத்தவரும் புலவர் சாதிக்காரர். அன்றைக்கு வாத்தியார் சுப்பையா வரவில்லை.வீட்டுக்காரர் எல்லோரையும் உட்காருங்க என்றார். உட்காரப் பாய் போட்டார். சொன்னதும் எல்லோரோடயும் சேர்ந்து சண்முகமும் ஊடே உட்கார்ந்தான்.
“நீ பாயில உக்காராதே, எழுந்திரு எழுந்திரு” அதட்டினார் கணபதிப் புலவர். அவமானப்பட்டு, சண்முகம் அரண்டுபோய்ப் பார்த்தான்.மற்றவர்களுக்கு சுருக்கென்று தைத்தது.
“அவனைச் சொன்னா என்ன, எங்களைச் சொன்னா என்ன?” அத்தனை பேரும் எழுந்துவிட்டார்கள். பிறகு வாத்தியார் சுப்பையாவிடம் போய்ச் சொன்னார்கள்.
“அவனை வெட்டி விட்டுற வேண்டியது தான்டா” என்றார் சுப்பையா.
“அன்னையிலிருந்து அவரைத் தனியா துண்டிச்சி விட்டுட்டோம்.பெறகு கணபதிப் புலவர் தனிக்குழு தொடங்கி கொஞ்ச நாள் நடத்தினாரு.”
இது ஒரு விதிவிலக்குதான். விதியாக ஆக முடியாது. அடக்கப்பட்ட தலித்துகள் எழுந்து நிற்பதும், குடிசைகள் கொளுத்தப்படுவதும் சமகால தரிசனம்.கடந்த காலம், நிகழ்காலத்தை எடை போடப் போதுமானதல்ல.
கலை என்பது தோழமைக்குள் பூப்பது, தோழமை வாழுகிற நெஞ்சுக்குள் அது சாத்தியம்.சாதிக் கோணல் பார்க்காமல், மதக் கோளாறு கொள்ளாமல், இன்னார், இவரார் என்ற கோட்டித்தனம் (கிறுக்கு) பண்ணாமல் கொண்டு செலுத்தப்பட வேண்டியது கலை. அப்போது கலை தன்னைப் பூர்ணிமையாக்கிக் கொள்ளும்.
3
பாரம்பரியக் கலைகள், ஆட்டங்கள் எப்போதும் குழுவாக நிகழ்த்தப்படுபவை. தனியொருவரின் மேதாவித்தனத்தை வெளிப்படுத்தும் தனி ஆவர்த்தனம் செவ்வியல் கலைகளில் உண்டு. தனி ஆவர்த்தன முறை மேன்மக்கள் கலையைச் சார்ந்தது.ஆனால், மக்களுடைய மரபுசார் கலைகள் எப்போதும் கூட்டுக்கலையாகவே வெளிப்பட்டு வந்திருக்கின்றன.பல திறன்களின் கூட்டாகச் செய்யப்படுவதாலேயே இக்கலைகள் பரிணமிக்கின்றன.அவரவர் தனித்திறமை இணைந்து குழுத்திறமை.
இன்றைக்குக் கூட்டுத்திறமை பெருத்த வியாபாரமாக மாற்றப்பட்டுவிட்டது.கலை வியாபாரத்தில் பலரும் பங்குதாரர்களாக ஆகிவிட்டார்கள். பல்கலைக்கழக, பள்ளி வட்டாரங்களில் பட்டி மன்றக் குழுக்களின் கையில் ஆளுக்கு ஒரு செல்போன், தனி வேன், கூட்டாகப் போகிறார்கள், ஆறு பேர் கொண்ட குழு. எங்கே போனாலும், பணம் சுண்டுவதில் குறியாய் இருக்கிறது குழு. குரல் விற்றுப் பிழைக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.அறிவை விற்றுக் கொள்ளை அடிக்கிறார்கள்.
4
ஒரு மனுசனாய் கடற்கரை எதைத் தேடினாரோ அந்தத் தோழமை, சாதி கருதாமை - அதெல்லாம் சுப்பையாவிடம் கிடைத்தன. முதலில் மனுசன்: பிறகு மனுசனைத் தாண்டி கலைஞன். அதனால் சுப்பையாவின் சிறகுகளுக்குள் பத்திரமாய்ப் பயணப்பட்டார்கள்.
1969-இல் மும்பைக்குப் போயிருக்கிறார்கள். இந்தக் கலை போகாத இடங்களுக்கெல்லாம் கொண்டுபோய் காட்டி வர வேண்டுமென்ற தாகம்.இதுவரை பார்க்காத நாட்டையெல்லாம் பார்த்து வரலாமே என்ற ஆசை. அப்போது அண்ணா மும்பை வந்திருந்த சமயம் என்றார் கடற்கரை.சுப்பையா அவருடைய தாயாரோட நகையை விற்று மும்பைக் கூட்டிக்கொண்டு போகிறார். முதன் முறையாக மும்பையில் அரங்கேற்றிவிட வேண்டுமென்ற ஆர்வம். கைக்காசு போட்டுத்தான் கூப்பிட்டுப் போனார்.மும்பை தாராவியில் ஏகப்பட்ட வரவேற்பு. பிறகு இரண்டாவது தடவை, தாராவித் தமிழர்களே ஏற்பாடு செய்து கூட்டிப்போனார்கள்.
“நிகழ்ச்சிகள்லே கொஞ்சம் கொச்சை தெம்படுதே. ஆரம்பத்திலிருந்து அப்படி இருந்ததா?சனங்க விரும்புறாங்கறதினாலே சேத்துக்கிட்டீங்களா?”
குறவன் குறத்தி ஆட்டத்தில் அதொரு பிரச்சனையாகத் தெரியவில்லை. நாட்டுக் கதைகளில் அப்படியான பாலியல் கதைகள் கொத்துக் கொத்தாகக் கிடக்கின்றன. புராணங்களிலும் உண்டு.
சினிமா என்கிற ஆவி தாக்கி இருளடித்து, கால் கை விளங்காமல் போன தெருக்கூத்துக் கலைகள் கண்ணெதிரே நிற்கின்றன. வெளியிலிருந்து வந்த கலாச்சாரப் படையெடுப்பு, நெருக்கடிகளுக்கு இவர்களும் ஆளாகிப் போனார்களோ?சினிமாவுக்குச் சமமாகத் தரவில்லையென்றால் எடுபடாமல் போய்விடும் என்ற நினைப்பு வீசியிருக்குமோ?
“நாங்க சேத்துக்கிட்டதுதான். ஆரம்பத்தில் அப்படி இல்லே. வர, வர சேத்துக்கிட்டோம். சில இடங்கள்ளே சனங்க கொச்சை வேண்டாம்பாங்க. சில இடங்கள்லே, வாலிபப் பசங்க அதிகமாக இருக்கிற இடத்திலே கொச்சையத்தான் விரும்புறாங்க.”
“சனங்க விரும்பிக் கேட்டாங்களா, இல்ல, அப்படி நினைச்சிக்கிறதா?”
”கொச்சை பேசினாலும் மறைமுகமாகத்தான் பேசுவோம்.”
அப்படிப் பேசுவதிலும் ஒரு நுணுக்கம் தங்கியிருக்கும். அப்படி சொன்னாத்தானே சிரிக்கிறாங்க என்றார் கடற்கரை.
“சாமி” ஒரு பெண்குரல்.
“சாமி, ஓமின்னுட்டு, சாமிக்கு மருள் வரப்போகுது. வெரசாச் சொல்லு.”
“நல்ல சமயத்துல வந்திருக்கேன்.எனக்கு ரொம்ப சிக்கலா இருக்கு சாமி.”
“என்ன துருப்பிடிச்சிப் போச்சா?”
“சீ… குடும்பத்தில ரொம்ப கஷ்டமா இருக்கு சாமி.”
“கஷ்டமா இருக்கா?” சாமியாடி கையை மேலே போடுகிறார்.
“சாமி கையை மேலே போடாதீங்க”
“சாமிதான, கைய எங்க போட்டான்னே. சாமிக்குக் கழிவு கிடையாது மகளே”
“கைய எடுங்க சாமி”
“மகளே நா வேணுமின்னா, போடுறேன்; சாமிதானே போடச் சொல்லுது, பிள்ளை வேணுமா இல்லையா?”
“வேணும்”
“அப்ப சாமிய கையைக் காலைப் போட விடமாட்டேங்குற”
மனிதன் தனக்குள் அடைகாத்துக் கொண்டிருக்கும் பாலியல் வெக்கையை விரல் நுனியில் சுண்டி எடுத்து வெளியில் வீசிக் காட்டுகிறார் கடற்கரை.
இது பார்க்கிற, கேட்கிற சனங்களுக்குப் கொச்சையை உண்டாக்காதா?
“கொச்சை பேசினாலும், மறைமுகமாகத்தானே பேசுவோம்.அதை சாதாரணமாக எடுத்திட்டு சனங்க சிரிச்சிட்டுப் போயிருவாங்க; மக்கா நாளு மறந்துருவாங்க” என்கிறார்.
மக்களுக்கு வாழ்க்கை கிடக்கிறது. நீண்டு, பரந்து, அகன்று எரியும் அக்னியுள்ள கடல் போன்ற வாழ்க்கை; அதையே பேசி நினைத்துக் கொண்டிருக்க அவர்களுக்கு நேரமில்லை, அவசியமுமில்லை என்ற வகையில் பார்த்தால், அவர் விளக்கம் சரிதான்.
5
எங்கும் வீசிய உலகக் காற்று வட்டாரத்துக்குள்ளும் வீசி,கடற்கரை போன்ற ஆட்டக்காரர்களையும் சுழற்றியடித்தது.விவசாய உற்பத்தி, உழைப்பு, வாழ்வு என்று போய்க் கொண்டிருந்த கிரமப்படியான வாழ்வு முறையை, அந்த மாயக்கடல் தனக்குள் சுருட்டிக் கொண்டது. மண்ணுச் சூட்டில் பொசுங்கிப் போன தளிர்முளையாக மனிதர்கள். மூச்சடைத்துப் போன முதிய தலைமுறை தூக்கிவிட ஆதரவற்று, கிராமத்தில் வம்பாய் செத்துக் கொண்டிருக்கிறது.பதினைந்து வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் யாரும் கிராமத்தில் இல்லை. இறக்கை முளைக்கிறதோ இல்லையோ, அந்தக் குஞ்சுகள் நகரங்கள் நோக்கிப் பறந்து போய்விடுகின்றன. நகரத்து ராஜகுமாரர்களுக்காக கனவுகளோடு காத்திருக்கின்றன கிராமத்துப் பெண் பறவைகள்!
“கலை நிகழ்ச்சியைப் பதிவு செய்து வைத்திருக்கிறீர்களா?”
ஒரு ஒலிநாடா இருக்கிறது என்கிறார்.ஆட்டம் முழுவதையும் பதிவு செய்த மூன்று கேசட் இருந்தது.ஒவ்வொன்றாய் காணாமல் போய்விட்டது என்றார்.அவர் கையிலிருக்கிற ஒன்றையும் தொலைத்துவிடக் கூடாதே என்பதற்காக விளாத்திகுளத்துக்கு அழைத்துப் போகிறேன். பதிவு செய்யக் கொடுத்த போது, கடைக்காரர் “கடற்கரை குறவன்-குறத்தி ஆட்டமா? எங்கிட்டே மூணு பாகம் இருக்கே” என்று எடுத்துப் போடுகிறார். அத்தனையும் அச்சாய் அவருடைய ஒலிநாடாக்கள்.அவருக்குத் தெரியாமலே கடற்கரை விற்பனையாகிக் கொண்டிருக்கிறார்.
“இவரைத் தெரியுமா?” கேட்டேன் கடைக்காரரிடம்.
“தெரியாதே…”
“இவர்தான் கடற்கரை” என்றேன்.
நிறைசூலிபோல் முகம் விரிந்த நிலா அசையாமல் உச்சியில் நிற்கிறது.மேலிருக்கும் வட்டத்திலிருந்து பால் கொட்டுவது போல், சோடிப்புச் செய்யாத நாட்டுக் குரல்களின் பாட்டு கொட்டுகிறது.
“மல்லிகை முல்லை இருவாட்சி – நல்லவாசமுள்ள செண்பகமே சாட்சிமதுரை மருக்கொழுந்துமணக்கும் செண்பகமே – அருளேஞானப் பொருளே – அங்கேஆல் அரசு வேப்பமரச் சோலைஆடி நிற்கும் பூங்காவனச் சாலைஅலைகடல் பக்கமாக அங்கேகலைமயில்கள் கூட்டம் வந்து ஆடும்குயில் பாடும்”
பாட்டில் வாசம் நிற்கிறது. வாழ்வில் வாசம் அத்துப் போனது.
“இப்ப என்ன செய்றீரு?”
“நாலு மாடு இருக்குது!”
“மேய்ச்சலுக்குக் கொண்டு போறீரா?”
“ஆமா, காடு காடா அலையுறேன்.”
துக்கக் குறிப்புடன் முடிகிறது கடற்கரையின் கலைத்தாகம்.
- கதைசொல்லி, ஜுலை 2020, இதழ்: 35
கருத்துகள்
கருத்துரையிடுக