ஒரு பேரனின் கதைகள்!
பள்ளிப்பிராயம் குறித்து எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.
மாலைப் பொழுதுகளில் வீட்டு முற்றங்கள் கதைகளால் நிரம்பிக் கிடந்தன. உட்காரப் போட்டப் ‘பட்டறைக் கல்’ கதை கேட்டுப் படுத்திருந்தன.
குத்துக்காலிட்டு உட்காரவோ, கொஞ்சம் புட்டத்தை வைக்கவோ, ஒத்தக் கால் சிம்மாசனமாய் சாய்ந்து கொள்ளவும், இடம் கிடைத்தால் கதை சொல்ல ஒரு வாயும் கதை கேட்கக் காதுகளும் கலந்தன. சுற்றிலும் உலகம் இல்லை.
“நேத்துச் சொன்னேனே, அது நெஜக் கதையில்லே… நானாச் சொன்னது” போட்ட கதையைப் பெறகு எடுத்துக் கொள்பவர்களும் உண்டு.
“உங்க அம்மா மேல ஆணையா?”
ஆணை என்று ஒப்புக்கொண்ட பிறகும், அது குற்றமாகவோ, குற்ற சம்மதமாக எடுத்துக் கொள்ளப் படாமல் மறக்கப்பட்டன.
கதை என்றால் நாளும்தானே, அதுக்குக் கொடுக்கலாம் என்றுதான் தோணும்.
காலைச் சுவாசத்தை அசுத்தப் படுத்தும் பஸ்கள் கிடையாது. உப்பு, புளிக்குக் கூட ஆகாமல், வேகு வேகு என்று ஒடித் தவிக்கிற வாழ்க்கை இல்லை.
வாழ்க்கையும் வேலையும் அளந்தே வைக்கப்பட்டிருந்தன. கதைகள் சொல்லவும் கேட்கவும் மனசும் நேரமும் நிறைய கிடந்தன.
“தம்பி, அம்மா செத்துப் போயிட்டா”
மேல் சட்டை இல்லாமல் அரை டிராயருடன் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அவனை வெளியே கூப்பிட்டு அண்ணன் சொன்னான்.
அண்ணனின் இடுப்பில் இரண்டு வயதுப் பெண் குட்டி.
முதல் நாள் தான் அன்னப்பால் விட்டிருந்தார்கள். இந்த உலகின் கடைசி நினைவுச் சங்கிலியை அறுத்தபடி, எல்லா வகையிலும் மரணத்தின் குகையில் நுழைந்து கொண்டிருந்தாள் அம்மா. உயிர் நீங்கும் பல வழிகளைத் திறந்து விட்டன நோய்கள்.
மரணத்தை அடக்கும் ஒரு வழி கூட சுற்றி இருந்தோருக்குப் புலனாகவில்லை.
“வெள்ளையம்மா, வெள்ளையம்மா”
யாரோ பாதாளக் கிணற்றுக்குள் இருந்து கூப்பிடுகிற குரல்; கண்ணிமைகள் பிடிபடாமல் கிடந்தன. அம்மா லேசாக வாயைத் திறந்த போது பஞ்சில் தொட்டுப் பிள்ளைகளை ஒவ்வொருத்தராய்ப் பிழியச் சொன்னார்கள்.
பிள்ளைகளின் பாசத்தையும் அன்பையும் கண் மூடும் வேளையில் நினைவாகக் கொண்டு செல்வாள் அம்மா. அன்னப்பால் விடும்போது, மடை திறந்தது போல் அவன் அழுதான். ஒரு உயிரை நம் கைவசம் இருந்து, நேரே வழியனுப்பும் காட்சி.
மறுநாள் வீட்டில் பிடித்த அழுகை சுடுகாடு வரை ஓயாமல் நீடித்தது. அம்மாவைச் சிதையில் படுக்க வைத்து, கொல்லி உடைத்து, தீ வைத்து, சிதை கருகி…
மனது உடைந்து, துயரத் தீ வைத்து, வாழ்க்கை கருகிக் கதறுகிற சிறுசுகளை அணைத்தபடி பாட்டி சுடுகாட்டில் இருந்து திரும்பினாள்.
நீங்கள் சொல்லச் சொல்கிற மனிதனின் கதை, நினைவு அலைகளில் மூழ்கி மேலெழுந்து வருகிறபோது சோகம் நிறைந்த இந்தச் சிறுவயதின் ஆழத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது.
வாழ்வின் சிறுதுளிர் எட்டிப் பார்க்க அனுமதிக்காத பூமியொன்றுண்டோ?
அது தான் அவன்.
ஒரு சந்தோசம் மலர் பூக்கும் கரை தொட முடியாமல், கங்குகள் மூடிய தீக்கிடங்கில் வாழ்க்கைத் தீ மிதித்த சிறு பருவம் உண்டோ?
அது அவன்.
கருவேல மரத்தின் ‘காக்காய் முள்ளும்’ நெருஞ்சியும் ஓட, முள் அப்பும் காட்டில், காலில் செருப்பும் இல்லாமல் அவன் மாடு மேய்த்தான்.
கோவணம் இடுப்பில்; துண்டு தலையில்; பகல் சூரியன் முதுகில் பாய உழவுக் காடுகளிடையே நடந்து கலப்பை பிடித்திருக்கிறான். கம்மம் புல்லுக்காய், அவன் களையெடுத்திருக்கிறான்.
தொலைவெல்லாம் விரிந்து கிடந்த கரிசல் பாலையில் ‘பஞ்சுப்புல்’ அறுத்து, பெரும் கட்டாய் இன்னொருத்தன் துணையுடன் தலையில் தூக்கி வைத்து எதிர்காற்றில் சண்டையிட்டு, மூச்சுப் பறியாமல் சுமந்திருக்கிறான்.
பின்னாளில் –
கோரைப் புற்களின் வேர்களில் சின்னச் சின்னப் பாசிமணி போல், கிழங்குகள் (வேர்கள் முண்டுகள்), கால் கொசுக்களையும் சட்டை செய்யாமல், கோரைப் புல்லைப் பறித்து அதன் அடியில் குன்றிமணி அளவே உள்ள கிழங்கை உரித்து சின்னப் பிள்ளைகள் தின்றார்கள்.
அவனுடைய அம்மாவை எரித்த இடத்தில், வளர்ந்திருந்த புல்லை ‘மந்தி’ ராமசாமி பிடுங்கப் போனபோது, அந்தச் சிறுவன் தடுத்தான். தன் மனதில் எப்போதும் அம்மா எரிந்த இடம் ஆலயமாக உட்கார்ந்திருக்கிறது.
தடுத்தும் கேட்காமல் புல்லைப் புடுங்க முயன்ற, தன்னைவிடப் பெரியவனான ‘மந்தி’ ராமசாமியை அவன் அந்த இடத்திலேயே மல்லுக்கட்டி, அடித்து விழத்தாட்டினான்,
‘ஒரு செருசலேம்’ என்று கதைக்குப் பெயர் இதனால்தான் வந்தது.
அவனுடைய எல்லாக் கதைகளிலும் ஒரு பாட்டி வந்தாள்.
சுடுகாட்டில் சிதை எறிந்த இடத்தில் இருந்து அழைத்து வந்த அம்மாவைப் பெற்ற தாய் “உங்களை அகலம் குறைஞ்சாலும், உயரம் குறையாம பார்த்துக்கிடுவேன் மக்களே” என்று அடிக்கடி சொல்வாள்.
கைவிரல் நகம் தேயும் வரை, உள்ளங்கால் வெல்லெலும்பு தெரியும் வரை அவள் எங்களுக்காக உழைத்தாள்.
பள்ளிக்கூடத்திலேயே கெட்டிக்காரப் பையனாக அவன் இருந்தான். எல்லாப் பாடங்களிலும் முதல் பரிசுகள் கிடைத்தன.
காமராசரின் மதிய உணவுத் திட்டம் அறிமுகமாகிய காலம். ‘கல்விக் கண் கொடுத்த காமராசர்’ பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைக்க அந்த ஊருக்கு முதன் முதலாக வந்தார்.
“நாளைக்கு முதல் மந்திரி கிட்டே முதல் சோத்துப் பொட்டலம் நீ தான் வாங்கணும்” பள்ளியில் முதல் மாணவனான அவன் வாங்குவதாக இருந்தது. அந்தச் செய்தி வீட்டுக்கு வந்தபோது – பாட்டி சட்டென்று திரும்பினாள்.
“ஒன் வாயில கஞ்சிக் கரைச்சு ஊத்த” நெருநெருவென்று கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
“எனக்கு என்னம்மா வருது தெரியுமா? நாளைக்கு நடக்கணும்; சங்கதி தெரியும். கொத்திப் போடுவேன் கொத்தி”
மதியச் சோறு என்ற பெயரில் போடப்படுவதைத் தன் பிள்ளைகள் பிச்சை எடுக்கும் கேவலமாய் அவள் கருதினாள். அவள் சொன்னாள்.
“நா இன்னொருத்தன் கிட்ட போய் கை ஏந்த விடுவேனா? மக்களே, ஒண்ணோ, அரையோ அகலம் குறைஞ்சாலும் உயரம் குறையாமல் உங்களை வளர்த்திட்டேன். இனிமேப் பட்டா அனாதையா நா விடப் போறேன்.
ஒருத்தன் கிட்ட பிச்சை எடுக்கிறதைப் பார்த்து இந்த உசிர் தரிக்காது பிச்சைப்பா.”
வறுமை அவளுக்கொரு வைராக்கியத்தைக் கொடுத்திருந்தது.
அதே நேரத்தில் தரித்திரத்தின் கடை கெட்டுப்போன நபர்களும் அவனுக்குப் பக்கத்தில், அவன் வழியிலேயே இருந்தார்கள்.
சொந்த ஊரில் கோழி கூவப் புறப்பட்டால், சாயந்தரம் ஏர் மாடு திரும்புகிற நேரத்துக்குப் பாட்டியின் ஊரைச் சென்றடைவான். பஸ் வழி போனால் ஒரு ரூபாய்க் காசு, குறுக்கு வழியில் 16 மைல் நடந்து பாட்டி ஊருக்குப் போவான்.
மதியம் ‘புதூர்’ வந்தடைந்ததும், இளைப்பாறல், ஐஸ் பேக்டரி திண்ணையில் விற்கும் மொச்சைக்கொட்டைப் பயிறு மதியச் சாப்பாடு. ‘ஜில்’லென்ற இரண்டு பைசா சோடா வயிற்றின் இடைவெளியை நிரப்பிய பின் பழையபடி நடை.
பாட்டி ஊர்க்காரனின் ஒரு வண்டி, புதூரில் சரக்கு இறக்கிவிட்டு ஊருக்குப் போய்க் கொண்டிருந்தது. ஏறிக்கொள்ள அனுமதித்தான்; யாருடைய பேரன், சொந்தம், எங்கிருந்து எங்கே போகிறாய் என்றெல்லாம் தெரிந்து கொள்வது அவசியம் தான். அவன் கேட்கவில்லை.
நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி “உன்கிட்ட இருக்கிற காசையெல்லாம் எடுடா” என்றான். தன்னிடம் காசு இல்லை என்றபோது, “காசு இல்லாமலடா இவ்வளவு தூரம் வந்தே?” என்று கத்தினான்.
ஒரு நாலணா மட்டும் கால் சட்டைப் பையில் செருகி இருந்தது. “காசு கொடுக்கலேன்னா கொன்னுப் போடுவேன்” என்று சாட்டைக் கம்பை வீசியபடி அடிக்க வந்தான்.
அழுது கதறும் அந்தச் சிறு பயலை இறக்கிவிட்டு “சும்மா ஏத்திக்கிட்டுப் போக உங்க அப்பன் வீட்டு வண்டியா” என்று ஓட்டிக் கொண்டு போனான்.
கரிசல் பாலையில் செங்கொழுந்து விட்டு சுற்றிலும் எரிகிற வாழ்க்கைத் தீயில் அந்த ஒன்றரைக் கண் மனிதனின், ஓரனோர் சம்சாரியின் இதயம் கருகிப் போயிருந்ததை, இப்போதும் இரக்கத்துடன் நினைத்துப் பார்க்கிறான்.
மனித இதயங்களைக் கருக்கும் நெருப்பு எங்கிருந்து கொண்டு வரப்படுகிறதோ, அந்த இடத்தைத் தேடி அடைந்து விடத் தோணுகிறது.
அதற்கான முயற்சிகளாகவே பிற்கால எழுத்துகள் முண்டியடித்தன. அதுமட்டுமல்ல, என் எல்லா எழுத்துகளும் இந்த முயற்சிகள் தான்.
அதே நேரத்தில் ஏதோ ஒரு நாய்க்குட்டி மீது வண்டியை ஏற்றி விட்டான் என்பதற்காகத் தன் தம்பியை ஊணு கம்பைப் பிடுங்கிக் கொண்டு விரட்டி விரட்டி அடித்த சம்சாரியும் அவனுக்குப் பக்கத்திலேயே இருந்தார்.
பிஞ்சிலிருந்து வயது முற்றிய இந்தக்காலம் வரை இதயம் எரிந்து போனவர்கள், இதயத்தைக் கருக விடாமல் காப்பாற்றி வருபவர்கள் என அவன் கண்டிருக்கிறான்.
எழுத்து என்று தொடங்கி ஒரே மதியாய் அலைந்தபோது, கதைக்கரு எனக்குள்ளிருந்து மேலெழுந்து வருவதற்குக் காத்திருந்தது போலவே, தலைப்புகள் சூடுவதில் கவனமாக இருந்தேன்.
தேர்வு செய்வதில் கவித்துவமாக இருக்கவேண்டும் என்ற நினைப்போடவே கதையின் சாரத்தை உறிஞ்சி எடுத்து உப்பிக் கொழுத்திருக்க வேண்டுமென நினைத்தேன்.
பாட்டியின் ஊரில் பள்ளிக்கூடத்தில் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு இழவுக்கு வந்து திரும்பும் சித்தப்பா, சித்தியுடன் ஊருக்குப் போகையில், வழியில் கரிசல் குளத்தில் பஸ்ஸில் இறங்கி ஆறு மைல் நடப்பதற்கு முன் கிடைக்கும் ஒரு சேவுப் பொட்டலத்தை மனதில் எண்ணி, படிப்பைத் துறந்து போனதுதான் ‘சரஸ்வதி மரணம்’.
ஊர்க் கண்மாய்க் கரையில் ‘செதுக்கு முத்து’ விளையாடிக் கொண்டிருந்தபோது, புதிதாய்க் கல்யாணமாகி, மேலே ஒரு சட்டை கூட இல்லாமல், இடுப்பில் ஒரு புதுப்பாயுடன் கானல் அலையில் அலைவது போல் வெயிலில் நடந்து வந்த புதுப் பொண்ணு மாப்பிள்ளைகள் பற்றியதுதான் ‘கரிசலின் இருள்கள்’.
பிள்ளைப் பிராய அனுபவங்கள் மூப்படைவதில்லை.
பதப்படுத்தப்பட்ட மண் போல அதுவும் கன்னி நிலம் போல கப்பும் கவருமாய் வீசியடிக்கும் பச்சை வண்ணத்தைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளது.
அந்த நேரச் சிதைவு படா மன ஒருமை, எல்லாவற்றையும் ஒற்றை ஆணிவேராய்த் தனக்குள் இறக்கிக் கொள்கிறது. வயது வளர வளர, வாழ்வு விரிவு கொள்ளக் கொள்ள, அலைவு படப்பட, மன ஒருமை சிதைகிறது; என்றோ ஒரு நாளின் இயங்கிய பிஞ்சு மனம் மட்டும் எடுத்து வழங்கிக் கொண்டிருக்கும்.
படைப்பாளிகள், தம் குஞ்சுக் காலத்தில் பதிவானதை வாழ்நாள் முழுக்க வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.’’
*மணா தொகுத்த ‘பள்ளிப் பிராயம்’ நூலிலிருந்து ஒரு கட்டுரை…
கருத்துகள்
கருத்துரையிடுக