இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கருத்துரிமைக்கான தமிழ் எழுத்தாளர்களின் சென்னைப் பிரகடனம்

29-10-2015

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒருபோதும் இருந்திராத அளவு மதரீதியாக தேசத்தைப் பிளவுபடுத்துகிற பேச்சுக் களும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, மதம் சார்ந்த அடை யாள அரசியலின் கீழ் ஒட்டுமொத்த தேசத் தையும் கொண்டுவர நடக்கும் முயற்சிகள் குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்

பன்முகப்பண்பாடுகளின் கலவையாகத் திகழும் இந்திய மக்களை ஒற்றை அடையாளம் என்னும் பட்டிக்குள் தள்ளுகிற முயற்சியின் காரணமாக சிறுபான்மை மக்களை அந்நியர்களாகவும் இந்தியப் பண்பாட்டின் விரோதி களாகவும் சித்தரிக்கும் போக்கு அபாயகரமான எல்லைக்கு வளர்ந்திருப் பதையும்; மதவாதக் கருத்துகள் சாதிய ரீதியான வன்முறைகளை ஊக்குவிப்பதால் தலித்துகள் மீதான தாக்குதல்கள் நாடெங்கும் அதிகரித்துவருவதையும் கவலையோடு சுட்டிக்காட்டுகிறோம்.

எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோர் திட்டமிட்ட முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வுகள் நாட்டிலுள்ள சுயசிந்தனையாளர்கள் அனைவருக்குமான அச்சுறுத்தல் என்பதை கவனப்படுத்துகிறோம்.

வகுப்புவாத வன்முறைகளுக்கு எதிராகவும் கருத்துரிமைக்கு ஆதரவாகவும், மத்திய அளவிலும் மாநில அளவிலும், தங்கள் விருதுகளையும் பொறுப்புகளையும் துறந்து நாட்டின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பியுள்ள இந்தியப் படைப்பாளிகளுக்கு எங்கள் மனப்பூர்வமான ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய அளவில் எழுத்தாளர்களும் கலைஞர்களும் இன்று சகிப்பின்மைக்கு எதிராக மேற்கொண்டுள்ள போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் விலகி நிற்கவில்லை என்பதை இந்தப் பிரகடனத்தின் மூலம் அறிவிக்கிறோம்

கருத்து சுதந்திரத்துக்காக உறுதியுடன் நிற்கும் அதே நேரத்தில் மக்கள் மத்தியில் பகைமையை விதைக்கும் வெறுப்புப் பேச்சுக்களும் பிரச்சாரங்களும் தடை செய்யப்படவேண்டும் எனக்கோருகிறோம்.

இந்திய சமூகத்தின் அடித்தளமாகத் திகழும் மதச்சார்பின்மை, ஜனநாயகம், பன்முகப் பண்பாடு ஆகியவற்றுக்கு எதிராக திட்டமிட்டமுறையில் தாக்குதல் தொடுக்கிற நபர்கள், பேச்சுகள் அறிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து இடம் கொடுப்பது சரிதானா என்கிற கேள்வியை ஊடகங்களின் முன்னால் வைக்கிறோம்.

வரலாற்றின் இடத்தில் புராணங்களையும் பகுத்தறிவின் இடத்தில் மூட நம்பிக்கைகளையும் எழுதுகோலுக்கு எதிராக கடப்பாரையையும் துப்பாக்கியையும் வைக்கிற சங் பரிவாரங்களின் அனைத்து முயற்சிகளையும் நிராகரிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளைத் தமிழ்ச்சமூகத்தின் முன் வைக்கிறோம்

எல்லாவிதமான மத நம்பிக்கையாளர்களும் பகுத்தறிவாளர்களும் கருத்து ரீதியாக முரண்படும் சுதந்திரத்தோடு சக வாழ்வு வாழ்ந்து வரும் இந்த நாட்டின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்கிற எங்களின் ஆழ்ந்த விழைவை மக்களின் முன்னால் வைக்கிறோம்

அவரவர் உணவு முறை, உடை, வாழ்க்கை முறைக்கான உரிமைக்காக கூட்டாகக் குரல் எழுப்புவோம்

எவ்விதமான அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் சுதந்திரத்துக்கும், பன்முகப்பண்பாட்டுக்கும் வலு சேர்க்கும் எங்கள் படைப்புகளை உறுதியுடன் தொடர்ந்து படைத்து மக்கள் முன் வைக்கிற எங்கள் பயணத்தை இன்னும் வலுவாக முன்னெடுப்போம் என உறுதியான குரலில் பிரகடனம் செய்கிறோம். 

 –‘சரிநிகர்’ சார்பில் சென்னை, திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற எழுத்தாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்டது. 

இதில் கையெழுத்திட்டுள்ள எழுத்தாளர்கள்: இந்திரா பார்த்தசாரதி. பிரபஞ்சன், திலகவதி, இமையம், கோணங்கி, அருணன், ச.தமிழ்ச்செல்வன், ரவிக்குமார், மனுஷ்யபுத்திரன், அருள்மொழி, ஓவியா, அ.மார்க்ஸ், வீ.அரசு, அ.குமரேசன். இரா.தெ.முத்து. மயிலை பாலு, நா.வெ.அருள், விஜயசங்கர், பாஸ்கர் சக்தி, க.சீ.சிவகுமார், மங்கை.பிரசன்னா ராமசாமி, ரோகிணி, ரேவதி, பா.செயப்பிரகாசம், பெ.மணியரசன், ஆழி செந்தில்நாதன், அகிலன் கண்ணன், ஒளிவண்ணன், பி.லெனின். அருண்மொழி, பவுத்த அய்யனார், க. நாகராஜன், ப.கு.ராஜன், சாரதா, இரா.சிந்தன், பாரதி செல்வா, ஜீவலட்சுமி, அதிஷா, கோ.ராமமூர்த்தி, வைகறை, ப.ஜீவகிரிதரன், கா.பிரகதீஸ்வரன், அரவிந்தன், ம.லெட்சுமி, ஜே.ஜேசுதாஸ் 

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?