இனி ஊர் அடங்காது - திரும்பப் பெறு EIA-வை!


நிலம் நீர் காற்று வானம் நெருப்பு ஐந்தின் பூமிக் கோளம் தோன்றியது முதலாக, உடனே மனிதன் இங்கு வாழ வரவில்லை; மனித உயிரி பல்லாயிரக்கணக்கான வருச உருளலின் பின் உண்டாகிறது. மனித உயிரி பூமிக்குள், இயற்கையின் சூழலுக்குள் தன் வாழ்வை அமைத்துக் கொண்டது.

மனித வாழ்வை அமைக்கவியலாப் பூமிப் பகுதி பாலைவனம்: கானல் வெயில் - எந்நேரம் எப்பக்கமிருந்து அலையலையாய் பெயர்ந்து வரும் என அறியவியலா மணற்புயல் - தவித்த வாய்க்குத் தண்ணீர் இல்லா நிலை - மனிதன் தன் வாழ்வினை இங்கு பொருத்திக் கொள்ள இயலவில்லை. தன் வாழ்வுக்கு எது பொருத்தமான சூழலோ, எது ஏதுவான நிலப்பகுதியோ அங்கு தன் வாழ்வைத் தகவமைத்துக் கொண்டு வாழ்ந்தான்.

அவன் பூமியை இயற்கையை சிதைக்கவில்லை; பூமி நமக்கு சொந்தமல்ல, நாம் தான் பூமிக்கு சொந்தம். இந்த பூமியில் குடியிருக்க, வாழ வந்தோர் நாம். எதனையும் அழிக்கவோ சிதைக்கவோ அப்புறப்படுத்தவோ உரிமை அற்றவர்கள் நாம் என்ற அறம் அவனுடைய தொடக்க காலம். தேவைகளை அவன் அதீதமாக, அபரிதமாக பெருக்கிக் கொள்ளவில்லை. உணவு, உடை, இருப்பிடத் தேவை நிறைவேற்றத் தேவையான அளவு விளை நிலங்களை உண்டு பண்ணினான். தன்னைப் பற்றிய கரிசனத்தை விட, இயற்கை மீதான அவன் கரிசனம் மேலானது.

முதலாளியப் பொருள் குவிப்பின் முதுகுத் தண்டு லாபம். லாபம் என்ற வணிக முதுகு தண்டில்லாது முதலாளியம் இயங்க முடியாது. இந்த வணிகத்திற்கு அறம் பேணும் அவசியமில்லை. மனித உழைப்பு, காடு வனம் மழை நீர்நிலை அபகரிப்பு என்று இயற்கையின் குழந்தைகளை குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கும் முதலாளியக் குதூகலிப்பின் எல்லைக்கு அளவில்லை. இவை அனைத்துக்கும் முதலாளியமும் அதன் அரசமைப்பும் சூட்டிய பெயர் தொழில்வளர்ச்சி = மானுட வளர்ச்சி.

அமெரிக்கக் குடியரசுத் தலைவனான பிராங்க்ளின் பியேர்ஸ் 1854 - இல் செவ்விந்திய நிலப் பகுதியை விலைக்கு வாங்க விரும்பி, செவ்விந்தியத் தலைவருக்கு கடிதம் எழுதினார்: செவ்விந்தியத் தலைவர் ’சியால்ட்’ தந்த பதில் வெற்று வார்த்தைகளல்ல, கவிதையிலான பிரகடனம்:

"வானத்தின் தனுமையையும் பூமியின் கதகதப்பையும் எப்படி உங்களால் வாங்கவோ விற்கவோ முடியும்? இந்த எண்ணமே எங்களுக்கு வினோதமாக இருக்கிறது. காற்றின் புத்துணர்வும் நீரின் மினு மினுப்பும் நமக்குச் சொந்தமில்லாத போது - அவற்றை எப்படி நீங்கள் வாங்கவோ விற்கவோ முடியும்?"

செவ்விந்தியர்களின் தலைவர் எழுதியது அவன் இன மக்களுக்குள், அவர்களின் இயற்கையைக் காக்கும் ஆவேசத்துக்குள்ளிருந்து பெருக்கெடுத்த அறிவிப்பு. கடிதத்தின் மொத்தச் சாரம் இதுவே:

"அடே, அற்பப் பதரே, இயற்கையின் வளங்களை இரு கையேந்தி கேட்டுப் பெற்று அருந்து. இயற்கையின் தலையில் கை வைக்காதே"

தங்கள் நிலம், தங்கள் வளம், தங்கள் இருப்பைக் காக்கும் சுயமரியாதை வாக்குமூலம் பிரகடனப்படுத்திய உண்மையின் மற்றொரு பக்கம் –

"பூமி நமக்கு சொந்தம் அல்ல; நாம்தான் பூமிக்குச் சொந்தம்"

"இயற்கை நமக்கு சொந்தமல்ல - நாம் இயற்கைக்குச் சொந்தம் - இயற்கையை அழிக்க சிதைக்க விற்க வாங்க எவருக்கும் உரிமையும் இல்லை” என்னும் அரிய உண்மை.

ஒரு பாறை வெட்டி எடுக்கப்படுகிறது; இயற்கையை வென்று விட்டதாகக் கருதுகிறீர்கள். இல்லை, இயற்கையின் வண்ணச் சிறகைத் தரித்து விட்டீர்கள்.

மரங்களை வெட்டி வீழ்த்திய வனமழிப்பை வளர்ச்சியின் வெற்றியாய்க் கருதுகிறீர்கள், இல்லை; இயற்கையின் குரல்வளையை நெரிக்கும் கைகள் உங்களுடையன.

பிரம்மாண்டங்களை எழுப்ப மணல் எடுப்பதாகக் கூறுகிறீர்கள்; இல்லை, மணல் அடுக்குகள் என்ற தங்கப் பாளங்களை - தண்ணீர் எனும் வெள்ளைத் தங்கத்தை கொள்ளையடித்து இடுக்கிக் கொள்கிறீர்கள் என்று பொருள்.

பயன்பாட்டுக்கு எனில் அறம்; வணிக லாபம் எனில் அது வங்கொலை.

ஓர் ஆறு உண்டாக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும்? ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகள் இருக்குமா? 3000 ஆண்டுகள் சேர்த்து வைத்த மணல் அடுக்குகளை - அதனிடையே கோர்த்த தண்ணீர் எனும் வெள்ளைத் தங்கத்தை 10 ஆண்டுகளில் தோண்டித் தீர்த்து விட்டார்கள்.

மணல் திருடப்பட்டது. மணல் திருடிய கொள்ளையரைப் பிடித்து மக்கள் கூட்டம் கட்டி வைத்து உதைத்தது. அகப்பட்டவர்களை அகப்பட்ட இடங்களில் அடித்து ’வெள்ளுரியாய் தோலுரித்தனர்’.

மணல் திருடினால் குற்றம்; மணல் திருட்டைச் சட்டப் பூர்வமாக்கி விட்டால் இந்த மக்கள் என்ன செய்வார்கள்? மணல் குவாரி நடத்த அதிகாரப் பூர்வ ஆணை வெளியிட்டு சட்டப்பூர்வ அனுமதி வழங்கினார்கள் அரச அசுரர்கள்; மலையைப் பாறையை வெட்டி எடுக்க 'கிரானைட் குவாரி'. வனத்தை, மலையை, மலைச் சாரலை சூறையாட காபி டீ எஸ்டேட்டுகள்; கனிமங்களை சூறையாட சுரங்கங்கள். எல்லாவற்றையும் அதிகாரப் பூர்வ சட்டவடிவான கொள்ளையாக்கினர்.

ஆற்று நீரை நம்பியிருந்த விவசாயப் பெருமக்கள் அனாதைகளானார்கள். "பட்டணந்தான் போகலாமடி" என்று உத்தரக் கட்டை போல் உடல் கொண்ட விவசாயி பொம்பளையை, பிள்ளையை இழுத்துக் கொண்டு நகர வீதிகளில் கூனிக்குறுகி அனாதையானான். இப்போது வரவிருக்கும் புதிய சுற்றுச் சூழல் சட்டம் ( EIA) - 8, 6 வழிச் சாலைகள் அமைக்க , விவசாய நிலங்களை கையகப்படுத்தி மண்ணின் மக்களை அப்புறப்படுத்த - மலைகள் பாறைகள் அனைத்தையும் குடைந்து கனிம வளங்களைச் சுரண்ட – கடல்வளத்தையும் கடற்கரையையும் தனியார் நிறுவனங்களுக்குக் கொள்ளை கொடுக்க – சுற்றுச் சூழல் துறையின் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய வரைவு முகம் நீட்டுகிறது.

கோடிக் கணக்கானோர் வாழ்வு நிர்மூலமானாலும், உயிரழிவுற்றாலும், அதுதான் நடக்கப் போகிறது, கவலை இல்லை, 10 பகாசுர கார்ப்பரேட்டுகள் வாழ்ந்தால் போதும் என்னும் முதலாளியக் கோர முகத்துக்கு ஒப்புதல் வழங்குகிறார்கள். இதன் உள்ளார்த்தம் என்ன? கார்ப்பரேட் பகாசுரர்களுக்கு பாதை திறந்து விட்ட பின், இவர்களில் ஐந்து, பத்துப் பேர் பகாசுரப் பட்டியலில் சேரப் போகிறார்களன்றி வேறேதுமில்லை. சுருட்டிய பணத்தை வாரி இறைத்து மக்களின் வாக்குகளை அள்ளிக் கொள்ளலாம். மறுபடி அதிகாரம் - மறுபடி அரியாசனம் - சபாஷ் நல்ல உத்தி! தேர்தல் என்ற சனநாயக வழிமுறை வந்தபின் இந்த உத்தியில் யார் வல்லவர்களோ அவர்கள் கோட்டையைக் கைப்பற்றுகிறார்கள். டெல்லியில் செங்கோட்டை; சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை.

இவர்களுக்கு நம்பகமான காவலாளி கொரோனா. எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் பொருட்படுத்தாது, கொரோனா காலத்தில் புதிய கல்விக் கொள்கை அரங்கேற்றுகிறார்கள்; ரயில்வேயை தனியார் மயமாக்குகிறார்கள். ரப்பர் தோட்டங்கள், குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்றல் துப்புரவுப் பணி எவை எவை மக்களுக்கு நன்மை பயக்கும் சேவையாக இருந்தனவோ, அவை அத்தனையும் பகாசுர நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் படுகிறன. இவர்களுக்கு என்னதான் வேலை? தனியார் கைவசம் கொடுத்து விட்ட தொழில் கொள்ளைகளை எதிர்த்துப் போராட முன் வருவோரை முட்டிக்கு முட்டி தட்டி முதலாளிகளைப் பராமரிக்கிற சட்டம் ஒழுங்கு வேலை.

கொரோனா உங்களுக்கு வழங்கப்பட்ட வரம். நாடெங்கும் ஊரடங்கு; வீடுகளுக்குள் மக்கள் முடக்கம். தெருவெங்கும், ஊரெங்கும் மௌனம்; மக்களின் மௌனத்தைப் பயன்படுத்தி சாமானிய, நடுத்தர வாழ்வைத் தட்டிப் பறிக்கும் அவசரச் சட்டங்களை சத்தம் காட்டாது பிறபபித்துக் கொண்டே இருக்கிறீர்கள்;

உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது. இனி ஊர் அடங்காது.

- கீற்று - 31 ஜூலை 2020

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?