நூற்றாண்டை நோக்கிய - முடிவிலா இலக்கியப் பயணம்

நூறு வயது வாழுதல் அபூர்வம். எழுத்தாளர்கள் வாழ்வது இன்னும் அபூர்வம். கி.ரா என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் உலகம் இதுவரை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி, தீராநதியாய் ஓடிக் கொண்டிருக்கிறது. 2020 செப்டம்பர் 16-இல், 98–ல் காலடி வைக்கிறது. இன்றும் வாசிப்பும் எழுத்துமாய்த் தமிழ், தமிழ்ச்சமூகம் என வற்றாது இயங்கித் குளுமை பரப்பிக் கொண்டுள்ளது.

2008-ல் வெளிவந்த கி.ரா.வின் “வழக்குச் சொல்லகராதி“ இந்திய மொழிகளில் புதிய முன்னெடுப்பு. பின்னர் தமிழில் பலர் வட்டார வழக்குச் சொல்லகராதிகள் செய்திட அது தொடக்கப் புள்ளி.

”புதிய கன்னட அகராதி இயலின் தந்தை” எனப்படும் ஜி.வி என்ற கஞ்சம் வெங்கட சுப்பையா, இந்தியாவின் எல்லா மொழிகளுள்ளும் “மிகப் பெரிய தனிமொழி அகராதி” என்னும் பெருமை கொண்ட கன்னட அகராதியை உருவாக்கினார். 2012-ல் தனது நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடியிருந்தார் ஜி.வி. ”என்னால் முடிந்த அளவுக்கு எனது மொழிக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய மனநிறைவுடன் வாழ்ந்துள்ளேன். நீண்டகாலம் வாழ்வதின் பின்னணியில் எந்த ரகசியமும் இல்லை. எனது தாயார் 107 ஆண்டுகள் வாழ்ந்தார். எனது தாய் மாமா 103 ஆண்டுகள் வாழ்ந்தார். ஆகவே நான் வாழ்வதற்கு இன்னும் நிறைய ஆண்டுகள் உண்டு, சகோதரா” என்கிறார்.

முடிவிலாப் பயணத்தில் வாழ்வதற்கும் வழங்குதற்கும் நிறைய உண்டு என்பது அதன் பொருள். கி.ரா.வின் 98 ஆவது பிறந்தநாள் வெறுமனே கட்ந்துபோகவில்லை. கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் விஜயா பதிப்பக வேலாயுதம் ஒரு ஆண்டுக்கு முன்னரே நிகழ்வை நடத்துவது குறித்து என்னுடன் உரையாடிக் கொண்டிருந்தார். கி.ரா.வின் பேர் பெற்ற கதைகளில் ஒன்று வேட்டி. அந்தக் கதையை நினைவுகூறும் வகையில் திருப்பூரில் ஒரு வேட்டி நெய்யச் சொல்லி, அதனை 98-ல் அடியெடுத்து நிற்கும் கி.ரா.வுக்குப் போர்த்தி சிறப்பச் செய்யத் திட்டம். நிகழ்வு நடத்தவும் புதுவையில் ஒரு அரங்கை தேர்வு செய்திருந்தார். கொரோனா’ உலகைத் தனது ஆடுகளமாக்கி, அனைத்து நிகழ்வுகளின் நிகழ்வுப் போக்கையே மாற்றிவிட்டது. ஆனால் வேலாயுதத்தின் தளரா முயற்சியில், ஈரோட்டில் சக்தி மசாலா நிறுவனத்தினர் ஆண்டுதோறும் கி.ரா நிகழ்வுக்கு ரூ.ஒரு லட்சம் காசோலை வழங்க முன்வந்தனர்.

“நடுநாட்டுச் சொல்லகராதி” தொகுத்தளித்த படைப்பாளி கண்மணி குணசேகரன், கி.ரா விருதும் ரூ.ஒரு லட்சம் காசோலையும் புதுவையில் கி.ரா.வின் இல்லத்தில் கி.ரா.வின் கரங்களால் பெற்றார்.

வட்டார வாழ்விலிருந்து வருகைதரு பேராசிரியர்:
“கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது” என்றார் காந்தி.கிராமங்களில் தான் பிராந்திய மொழிகள் அதன் ஜீவனுடன் வாழ்கின்றன என்கிறேன் நான்” என அழுத்தமாக, அருத்தம் திருத்தமாகச் சொல்கிறர் கன்னட ஜி.வி.

வட்டார மொழியும் அதன் வகைதொகையிலாச் செழுப்பமும் கி.ரா என்னும் பெருமரத்தை கொப்பும்கிளையுமாய் செழிக்கச் செழிக்க வளர்த்தன. தாத்தா சொன்ன கதைகள்,சிறுவர் கதைகள், பாடல்கள், சொலவடைகள், சொல்லாடல், விடுகதை, நாட்டர் வழக்காறுகளினுள் முங்குநீச்சல் போட்டு முத்துக்கள் சேகரித்துக் கொட்டினார். இவையெல்லாமும் சேர்ந்து அவராகி, பள்ளிக்கூடம் கண்டிராதவரை பல்கலைக்கழக ’வருகைதரு பேராசிரியர்’ ஆக்கியது புதுவைப் பல்கலை.

கி.ரா ஒரு சூத்திரம் செய்தார்: “தமிழ்மொழி தமிழ்ப் பண்டிதர்களிடம் இல்லை; படித்த வெள்ளைச் சட்டைக்காரர்களிடம் இல்லை; அதன் இனிமையைக் கேட்க வேண்டுமென்றால் கிராமத்துக்குப் போகணும். படிக்காத மக்களிடம் கதைசொல்லிக் கேட்கணும். அதன் மொழிவீச்சு பிரமாதமாயிருக்கும்”

தமிழில் கி.ரா தயாரித்தது தொய்வுபடா முயற்சியில் உருவான ’கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதி’. 98-லும் விடாமுயற்சியாய் புதுப்புதுச் சொற்கள், சொல்லாடல், சொலவம், வரலாற்றுத் தரவுகள், நம்பிக்கைகள்,வழக்காறுகள் என குறித்துவைத்துக் கொண்டு வருகிறார். ஒவ்வொருமுறை காணச் செல்கிறவேளையிலும் புதுப்புது வழக்குச் சொற்களை அகராதியில் கோர்த்துக் கொண்டிருப்பார். உரையாடுவதில் புதியன விழுந்தால், ’அதை எழுதிக்கோங்க’ என்று அகராதியை நீட்டுவார். புதியன சிவப்பு மையால் எழுதி அப்பக்கத்தில் நிலைநிறுத்தப்படும். இளமையைப் படைப்பாக்கப் பருவம் என்று சொல்வார்கள். புதுமைகள் பலவற்றைச் செயலாக்குகிற வாலிபம், அவற்றை அடுத்தடுத்த படிக்கற்களாக்கி நீட்டித்துக் கொண்டு செல்கிறது. தொடரும் வாலிபத்தை எடுத்துக்கொண்டு எவரொருவர் செல்கிறாரோ, அவர் வயதில் முதுமையுற்றாலும், செயலில் இளமையைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு செல்கிறார். 98 இளமைகளைத் தனக்குள் தொகுத்துள்ள கி.ரா, இன்னும் கருக்கழியா உயிர்ப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார் என்பதின் சாட்சி அண்மையில் வெளியான அவரது “அண்டரண்டப் பட்சி”. 150 பக்கங்கள் எழுதி அதை 40 பக்கமாய்ச் சுருக்கிவிட்டதாய்ச் சொன்னார். பிரச்சாரமாகிவிடக் கூடாது என்ற உள் எச்சரிப்பு பக்கங்களைச் செதுக்கச் செய்துள்ளது.

கி.ரா மீது வன்கொடுமைச் சட்ட வழக்கு:
மே ஏழு 2015 அன்று மதுரை நடுவா் நீதிமன்றத்திலிருந்து கி.ரா.வுக்கு ’சம்மன்’ வந்தது.

மூன்று ஆண்டுகள் முன் கி.ரா குடும்பத்தில் ஒரு சம்பவம். வாழ்நாள் முழுக்க கி.ரா.வுக்கும் எழுத்துக்கும் இணையாய் நடந்துவந்தவா் கணவதி அம்மா. புதுச்சேரி அரசுக் குடியிருப்பு அடுக்குமாடி வீட்டில் விடிகாலையில் மாடிப்படியிலிருந்து இறங்குகையில், கடைசிப்படி என்று நினைத்துக் கால்வைத்து சறுக்கி விழுந்துவிடுகிறார்; இடுப்பு எலும்பு முறிவு. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, எலும்பு மருத்துவம் என அலைந்து கொண்டிருந்தார் கி.ரா. “இடி விழுந்தான் கூத்தை இருந்திருந்து பாரு” என்கிற மாதிரி இடுப்பு வேதனை குணமாக வில்லை. எந்தக் கவலையும் லவலேசமும் வெளிக்காட்டிக் கொண்டவரில்லை கி.ரா. இந்த இடியிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறார் என நாங்கள் எண்ணியவேளை எதிர்பாராக் கல்லெறி போல், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் சம்மன் வந்து நெஞ்சாங்குலையை ரணமாக்கிற்று. இந்த வழக்கை ரத்து செய்யுமாறு, கி.ரா பதில் மனு தாக்கல் செய்கிறார்.

2012-ல் அந்த நோ்காணல் வெளிவந்தது. 2015 மே 7-ல் கி.ரா மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகி, மதுரை நடுவர் நீதிமன்றத்திலிருந்து சம்மன் வருகிறது. வேறு யாரோ எடுத்துக் கையளிக்க, பெற்றுக்கொண்டவர் குறிவைத்துக் கத்தி வீசிட மூன்று வருடங்கள் காத்திருந்திருக்கிறார்.

பண்ணை வீட்டு வாலிபத்தால் சீரழிவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட ’சிவனி’ உயர் சாதிய அக்கிரமத்தை எதிர்த்து பேயாடுகிறதாக முடிகிற ’கிடை’ குறுநாவல் -
இரு உயிர்களின் சாதி தெரியுமா நெருப்புக்கு? காக்கப்பட வேண்டிய உயர்சாதிப் பிஞ்சு உயிரையும், காக்கப்போன கீழ்சாதிப் பெரிய மனுசியின் உயிரையும் கப, கபவென்று ஒன்றாகத் தின்று தீர்த்து விடுகிறது. மூத்தபயிரும் மொட்டும் ஒருசேரக் கரிக்கட்டையாகி விட்டன. இங்கே எங்கய்யா போச்சு உங்கசாதி என்று உணர்த்திய “நெருப்பு” சிறுகதை –
இத்தகு படைப்புக்களை வாசித்தவர்கள் எவரும் இந்த வழக்குப்போடும் புள்ளியில் வந்து நின்றிரார்.

தலித்துகள் மட்டுமல்ல, பெண்டிர், திருநங்கையர், விளிம்புநிலை மாந்தர்களெல்லாம் கி.ரா எழுத்துக்களில் தூக்கிப் பிடிக்கப்படுகிறார்கள். செருப்பைத் தூக்கச் சொல்லும் புதுமாப்பிள்ளை பரசு நாயக்கரை, ‘நீரு ஆம்பிளையானா என்னைக் கூப்பிடக் கூடாது’ என்று தூக்கி எறிந்துவிட்டுப் போகும் ஒருத்தி. அந்த ஒருத்தி என்றில்லை. சுயம் பாதிப்புக்கு ஆளான, பெண்களின் குரல் கி.ரா. எழுத்து முழுசும்! பெண் பாலினத்தை ஆண் சமூகம் எப்படி மகிழ்ச்சியாய் வைத்திருக்க வேண்டுமென ‘ஆணை மனிதனாக்கும்‘ கதை தான் அண்டரண்டப் பட்சி நாவல்.

இந்த வன்கொடுமைச் சட்ட வழக்கை,
”கி.ரா மீது வன்கொடுமைச் சட்டம் மற்றும் இந்தியச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய போதிய முகாந்திரம் இல்லை” என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமினாதன் 16-10-2019 அன்று தள்ளுபடி செய்கிறார். அஃதொரு வரலாற்றுச் சிறப்புமிகு தீர்ப்பு.

”கலை ஆளுமைகள், எழுத்தாளுமைகள், இலக்கிய ஆளுமைகளைக் கவுரவித்தல் ஒரு நாகரீக சமுதாயத்தின் அடையாளம். கி.ரா.வுக்கு இப்போது 97 வயது. அண்மையில் அவருடைய துணைவியை இழந்துள்ளார். அவரைப் பக்கவாத நோய் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்வதே, நீதித்துறை அவருக்குச் செய்யும் கவுரவம் எனக் கருதுகிறது.” என்கிறார் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன்.

விருதுகளைத் தாண்டிய கி.ரா:
16.09.2017 சனிக்கிழமை புதுச்சேரி பல்கலைக்கழக வளாக கலை, பண்பாட்டு அரங்கில் கி.ரா 95 முழுநாள் நிகழ்வின் போது மாலை 6:30 மணியளவில் நடந்த ஒரு நிகழ்வு, அன்றைய நிகழ்ச்சி வரிசையை மாற்றிப் போட்டு உச்சத்தில் ஏறி அமர்ந்தது. கிரா என்னும் படைப்பாளுமை தன்னை செயல் ஆளுமையாக நிரூபித்த நிகழ்ச்சி அது.

கி.ரா.வின் இளைய மகன் பிரபாகர் - நாச்சியார் இணையரின் மகள் அம்ஸா. ஒரு கணிணிப் பொறியாளர். அம்ஸா, தன் வாழ்வின் தகுந்த துணையாகக் காதலித்துத் தேர்வு செய்தது முகமது ஆசிப் என்ற இஸ்லாமியரை.

காலையில் ’நிலா முற்றம்‘ தலைப்பில் கி.ரா வாசகர்களுடன் உரையாடிய போது, தன் குடும்பத்தில் மாலையில் ஒரு புரட்சிகரத் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.

”சிலர் எல்லா வீடுகளுக்கும் போவார்கள். எல்லா வீடுகளிலும் சாப்பிடுவார்கள். தங்கள் வீட்டுப் பெண்ணை இதர சாதியினருக்கு, மதத்தினருக்கு திருமணம் செய்து தர மறுப்பார்கள். என் பேத்தி ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்ய விரும்பினாள். இந்து - முஸ்லீம் ஒற்றுமை பற்றிப் பேசுகிற போது என் வீட்டில் நிஜமாக ஒரு திருமணம் நடக்கவிருக்கிறது. துணிவாக ஏதாவது செய்ய வேண்டும். இதைத் தியாகம் என்று சொல்ல மாட்டேன். நம் பிள்ளைகளின் மகிழ்ச்சிதான் முக்கியம்”
கி.ரா மனம் திறந்தார்.

கி.ரா.விடம் தன்னுணர்வாக ஒட்டிக் கொண்டிருப்பது பாரதியின் மொழி மட்டுமல்ல, பாரதியின் மனசும் செயலும்! ரா.கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட மகனுக்கு பூநூல் அணிவித்து வேதம் கற்பிக்க முயன்றவன் பாரதி. பாரதியிடமிருந்து உட்கிரகித்துக் கொண்டதில் தடுமாற்றமில்லாமல் செப்டம்பா் 16 மாலை வாழ்த்தரங்கத்தில், அம்ஸா - ஆசிப் திருமண வரவேற்பை நடத்திக் காட்டினார் கி.ரா.

இலக்கியவாதி, எழுத்தாளன் என்றால் எழுத்துக்கு மட்டும், வாழ்வுக்கு இல்லை என்றிருக்கும் நியதியை கி.ரா மாற்றிப் போட்டு அர்த்தமுள்ளதாக்கினார். இது இதற்குத்தான் எழுத்தாளன் என முட்டிக்கால்போடும் சுய தண்டனை இல்லாமல், இலக்கியக்காரன் சமூகச் செயற்பாட்டாளனாக உயர்ந்த இடமிது.

இலக்கியப் பயணத்தில் முன்னத்தி ஏா் அவர் என அறிந்திருக்கிறோம்; குடும்பத்தில் ஒரு புரட்சிகரத் திருமணத்தை நிகழ்த்தியதன் மூலம் வாழ்க்கைப் பயணத்திலும் முன் நடந்து அழைத்துச் செல்கிறார் கி.ரா. சாகித்ய அகாதமி, ஞானபீடம், நோபல் விருது எனும் எல்லா விருதுகளையும் தாண்டிப் போய் நிற்கிறார் கி.ரா.

- கணையாழி (அக்டோபர் 2020)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌