விகடன் படிப்பறை - மணல் நாவல்

தமிழகம் சந்திக்கும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னைகளில் ஒன்று மணல் கடத்தல். ஆறுகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டப்படும் அவலத்தை நாவலாக்கியிருக்கிறார் பா.செயப்பிரகாசம்.

இடதுசாரி சிந்தனைகளைத் தன் படைப்பில் முன்வைக்கும் முற்போக்கு எழுத்தாளரான செயப்பிரகாசம் சமகால முக்கியமான பிரச்னையைப் படைப்பாக்க முயன்றிருக்கிறார். மூன்று தலைமுறைகளின் வழியாக ஆறு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது, ஒவ்வொரு தலைமுறைக்கும் ஆறு எப்படியெல்லாம் காட்சி தந்திருக்கிறது, இயற்கையோடு இணைந்த ஆறு சமகாலத்தில் லாபம் சம்பாதிக்க எப்படி வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது என்பவற்றைப் பதிவுசெய்கிறார்.

பால்வண்ணன், செண்பகம் என்னும் இருவர் துரைக்கண்ணு என்னும் பெரியவரிடம் கிராமத்து வரலாறு குறித்துக் கேட்டுப் பதிவு செய்வதற்காகச் செல்வதாக நாவல் தொடங்குகிறது. சுரண்டப்பட்ட ஆற்றின் வழியே தட்டுத் தடுமாறி ரத்தக்காயங்களுடன்தான் பெரியவரின் ஊரான அம்மன்கோயில்பட்டி சென்றடைகிறார்கள். துரைக்கண்ணுவுக்கும் கனகவள்ளிக்குமான காதல் காலத்தில் வெள்ளம் வருமளவுக்கு ஆறு நிறைந்திருந்தது. பிறகு மணல் குவாரிகளால் ஆறு சுரண்டப்பட்டபோது அதை எதிர்த்துப் போராடும் அவரது பேரன் மாறன் மணல் கொள்ளைக்காரர்களால் கொல்லப்படுகிறான். இன்னொருபுறம் விருசப்பட்டியில் வள்ளி என்னும் ஆதிக்கச்சாதிப்பெண்ணுக்கும் கொம்பன் பகடை என்னும் தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கும் இடையிலான காதல், ஆணவக்கொலை, வள்ளி பெண் தெய்வமாக மாற்றப்படுவது, இதுகுறித்த அரசியல் தன்னுணர்வு இன்றி நீலமேகம் என்னும் தாழ்த்தப்பட்டவரும் மணல்கடத்தல்காரராக மாறுவது என்னும் கதைகள் விரிகின்றன.

கரிசல் மண்ணுக்கேயுரிய சொலவடைகள், நம்பிக்கைகள், தாவரங்கள், திருவிழாக்கள் ஆகியவை வாசிப்பு சுவாரஸ்யத்துக்குரியவை. மணல் கடத்தலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், அதில் முற்போக்கு இயக்கங்களின் பங்கு, மக்களை வாக்குறுதி கொடுத்து எப்படி மணல் மாபியா ஏமாற்றுகிறது ஆகியவற்றைப் பதிவு செய்திருக்கிறார்.

மணல் - பா.செயப்பிரகாசம்
வெளியீடு: நூல்வனம், எம் 22, ஆறாவது அவென்யு, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை - 600 089.
போன் : 91765 49991
விலை : ரூ.210
பக்கங்கள்: 224

விகடன் - 28 அக்டோபர் 2020

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?