பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்

கி.ரா, கு.அழகிரிசாமி, மேலாண்மை பொன்னுச்சாமி, லட்சுமணப் பெருமாள் என்று காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து வரிசையில் மற்றுமொரு தவிர்க்க முடியாத பெயர் பா.செயப்பிரகாசம். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறவர். தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறையில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற செயப்பிரகாசம் ‘சூரியதீபன்’ என்ற புனைப் பெயரில் எழுதிவருகிறார். 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருந்தார். தாமரை, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கணையாழி, காலச்சுவடு, மனஓசை போன்ற இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. சமூக நீரோட்டத்துடன் செல்லாமல் எதிர்க் கருத்தியலை வைத்து நடைபோட்ட மனஓசை இதழின் பொறுப்பாசிரியராக இருந்தவர். இலக்கிய மேடைகளிலும், அரசியல் அரங்குகளிலும் கருத்து செறிந்த சொற்பொழிவுகள் ஆற்றுபவர். இதுவரை கதை உலகின் காலடி படாத கிராமத்தின் ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களின் பாடுகளையும் தன் புனைவிலக்கியத்தில் சித்தரிக்கிறார். இவரின் கதைகள் மனிதர்களின் துயருற்ற சொற்களால் எழுதப்பட்டவை. தலித்துகளின் எழுச்சி தொண்ணூறுகளில் எழுந்ததாக பொதுவான கருத்துண்டு. ஆனால் எழுபதுகளிலேயே ஆதிக்கத்திற்கு எதிரான கலகக் குரல் செயப்பிரகாசத்தின் கதைமாந்தர்கள் வழி ஒலிக்கத் தொடங்கியது.

‘அம்பலக்காரர் வீடு’ வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் கதை. கோபுரத்தின் உச்சியிலிருந்து விழும் கலசம் போல் உன்னத வாழ்வு வாழ்ந்த ஒருவரின் வீழ்ச்சியைப் பாடுவதே துன்பியல் நாடகமாகும் என்று மேற்கத்திய செவ்வியல் நாடகக் கோட்பாடு வரையறுக்கும். இக்கோட்பாட்டினை ஒத்ததொரு செவ்வியல் துன்பக் காவியமாக ’அம்பலக்காரர் வீடு’ கதை துலங்குகிறது. கிராமத்தின் மேலவீட்டில் வாழ்ந்த அம்பலக்காரர் ஊர்க்காரர்களின் இதயங்களில் பொன் ரேகைகளால், தனக்கு ஒரு கூடு கட்டியிருந்தார். தனிக் கௌரவங்கள் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன. அந்த வீட்டின் மேலவாசல் வழியாக நுழைந்து, கீழவாசல் வழியாக ஊருக்குள் போகும் பிச்சைக்காரர்கள், யாத்திரிகர்கள், ஏகாலி, குடிமகன், அஞ்சுமணிக்காரன், பாம்பாட்டி, எல்லோரும் பிச்சைப் பாத்திரங்கள் நிறைந்து முக மலர்ச்சியுடன் வெளியேறுவார்கள். மேலவீட்டு அம்பலக்காரர் இறந்தபோது ஊரே கண்கலங்கி சவ ஊர்வலத்தில் நடந்து வந்தது. இந்த எண்ணங்கள் மேலோங்க மாரியம்மன் கொண்டாடி உடுக்கையும், அக்கினிச் சட்டியுமாக ஒரு முன்னிரவில் ஊர்வந்து சேர்கிறான். அம்பலக்காரர் இறந்தபின் அந்த ஊரை ஐந்து வருடங்களாக சாமியாடி மிதிக்கவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் காலங்கொண்டு சேர்த்த மாற்றங்களை அவனறியான். வழக்கம்போல் ஊரின் மேற்கோடியில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் நின்று கால் சிலம்பை அணிந்து கொண்டான். நெற்றி, மார்பு, தோள்பட்டை, கைகளில் திருநீறு பூசிக்கொண்டான். அக்கினிச் சட்டியை மூட்டிக்கொண்டான். இடது கையில் உடுக்கை பிடித்து முழக்கினான். நெடுநெடுவென நடந்து மேலவாசல் வந்தடைந்தான். வீட்டின் முகப்பே சிதலமடைந்து கிடந்தது. பெரிய பரந்த முற்றத்தில் நின்று மச்சு வீட்டை நோக்கி ‘அம்மணி!’ என உருகும் குரலில் அழைத்தான். நீண்ட நேரம் அருள்கொண்டு ஆடினான். “மாரியாத்தாவுக்கு படி போடு தாயே” என்று உரக்கக் கத்தினான். அம்பலக்காரர் இறந்த சில நாட்களில் பெரிய அம்மணியும் இறந்துவிட்டார் என்பதையும் அவனறியான். பெரிய அம்மணி இறந்திருக்கலாம் என்றெண்ணி ’தேவீ’ என்று பாசத்தோடு சின்ன அம்மணியைக் கூப்பிட்டான். முன்பெல்லாம் பெரிய அம்மணியின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு வேரில் பூத்த பூப்போல் சிறுமி தேவி நிற்பாள். அவளை நினைத்தவாறே ”மாரியம்மன் கொண்டாடி வந்திருக்கேன் தேவீ!” என்று மீண்டும் ஒருமுறை குரல் கொடுத்தான். உடுக்கையை நிறுத்தினான். வீட்டிற்குள் ஒரு பெண்ணின் நளினக் குரல் கேட்கிறது. குரல் ரகசியமாக ஒலித்தது. ”நீண்ட நேரமா பாடிட்டிருக்கேன், தேவீ! என் சின்ன அம்மணி!” என்று மீண்டும் அழைத்தான். வீட்டிற்குள் ஆடைகளின் சரசரப்பும், காலடிச் சத்தமும், மங்கிய மெதுவான குரலில் ஒரு ஆண் பேசுவதும் கேட்டது. கூர்ந்து கவனித்தான். ஒரு ஆள் வேட்டியை மடித்துக்கட்டி சுவரேறிக் குதித்து இருளோடு இருளாக ஓடுவதைப் பார்த்தான். சாபங்கள் தீண்டியவனாய் சாமியாடி கல்லாகி நின்றான். முகம் வெளுத்து அதிர்ச்சியில் மூச்சற்றுப் போனான். அம்பலக்காரத் தம்பிரானும், பெரிய அம்மணியும் உலவிய வீட்டில் கொடிய சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது கண்டு அவன் அதிர்ச்சியில் நிற்க சின்ன அம்மணி வெளியே வந்தாள். அவள் முன் நெற்றி வியர்வையில், முடிக்கற்றை நனைந்து ஒட்டிப் போயிருந்தது. அவன் தேடிவந்த தேவீ எங்கே? பல்லக்கிலிருந்து ராஜ பதுமை கீழே விழுந்து உடைந்து தூள் தூளாகிப் போய்விட்டிருந்தது. கண்களில் கண்ணீர் பனிக்க சாமியாடி சிலையாகி நின்றான். அவன் கையில் வெள்ளிக் காசைக் கொடுத்து “இன்று இவ்வளவுதான் கிடைத்தது” என்றாள். அவன் காசை வாங்கிக் கொள்ளவில்லை. அக்கினிச் சட்டி, உடுக்கை, சாட்டை, விபூதிப் பை, அனைத்தையும் தூக்கியெறிந்தான். நார் பெட்டியில் தன்னிடமிருந்த தானியம், கொஞ்சம் ரூபாய் அனைத்தையும் அம்மணியின் முன்வைத்துவிட்டு இரு கைகளையும் கூப்பியபடி, “அம்மணி! இது என் காணிக்கை” என்று சொல்லிவிட்டு மேலவாசல் வழியாகவே கால் சிலம்புகள் ஒலிக்க வெளியேறினான். அக்கினிச் சட்டியும், உடுக்கையும், சாட்டையும் அங்கேயே அனாதைகளாய்க் கிடந்தன என்று கதை முடிகிறது.

- பெ.விஜயகுமார், மதுரை.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ