விருது வழங்கல், வாங்கல், திருப்பியளித்தல்: சில முன்வைப்புகள்

“எங்கே காணோம் அந்த எழுத்தாளர்?” என்ற தலைப்பில், டிசம்பர் 11, 2020 அன்று, முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தேன். “விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாய் 15-க்கும் மேற்பட்ட பஞ்சாபி எழுத்தாளர்கள், தாங்கள் பெற்ற சாகித்ய அகாதமி விருதுகளை திரும்ப ஒப்படைத்திருக்கிறார்கள். விவசாயிகளின் பிரச்சனைக்காக எழுதப்பட்டது; குறிப்பாக நீர்நிலைகளின் பராமரிப்பு தொடர்பாக எழுதப்பட்டது ’சூல் நாவல்’ என்று சொல்கிற சூத்திரதாரி இப்போது எங்கே போனார்?” என்பது அப்பதிவு.

அதற்கான பின்னூட்டத்தில், சிவா விஜய் என்னும் தோழர்,
”விருது பெற்றதில் எப்படி நமது வலியுறுத்தல் இல்லையோ, அதுபோலவே ஒப்படைப்பது குறித்தும் அவரே முடிவு செய்ய வேண்டும். தலையிடும் உரிமை யாருக்கும் இல்லையே அய்யா!“ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். நடராஜன் டி.வ. என்ற தோழர் “கருத்தை முழுமையான ஒரு கட்டுரையாகப் பதிவிடுமாறு” தெரிவித்திருந்தார்.

முன்பு சாகித்ய அகாதமி விருது பெறுதல் மட்டும் இலக்கியத் தளத்தில் விவாதப் பொருளாகியிருந்தது. உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரச்சினைகள் கொதிநிலை கொண்டுள்ள காலத்தில், ஏனெனில் அனைத்தும் சர்வ உலகமயமாகியுள்ள காலத்தில், விருதுகளைத் திருப்பியளித்தல் என்பது இலக்கிய அரங்குக்கு புதிதாக வந்துள்ள ஒரு விசயம்.

சில கேள்விகள், ஐயங்களைத் தீர்க்கவேண்டுமென்னும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்பட்டது.இதுவே முழுமையானது, விமரிசனத்துக்கு அப்பாற்பட்டு நிற்பது என நாம் கருதவில்லை.அவ்வாறு நாம் கருதுவதும் அறிவார்த்தமான தேடலுக்கு முரணாகும்.இங்கு’ நாம்” எனச் சுட்டுவது என் போன்ற ஒத்த கருத்துள்ளவர்களையும் இணைத்த பன்மைச் சொல்லாகும்.

1

அறிவுசார் புலமைச் சமூகம் என ஒன்றிருக்கிறது: முன்னரும் இருந்தது: அறிவார்த்தமான சிந்திப்பின் அடிப்படையில் தன்னை நெறிப்படுத்தியவாறு, சமுதாய அமைப்பினை நெறிப்படுத்தும் கடப்பாடு கொண்டது புலமைச் சமூகம். இதனைச் சிந்திப்புச் சமூகமெனலாம்.இந்த சிந்திப்புச் சமூகத்துள் எழுத்தாளர்கள்,கலைஞர்கள், ஓவியர்கள் என அறிவு உழைப்பாளர் அனைவரும் அடங்குகின்றனர்.

சிந்திப்புச் சமூகம் தம் கடமையைச் செலுத்துவதற்கென சில கற்கைமுறைகளும் எடுத்துரைப்பு முறைகளும் உள்ளன.

சமூகத்துள் இயங்கிக் கற்றுக் கொள்ளுகிற அறிவுத் தேடல் – கற்கைமுறை.

ஒரு பிரச்சனையில் கற்று, பெற்றுக் கொண்டதை, மக்கள் சமுதாயத்துக்கு பகிர்தல் – எடுத்துரைப்பு முறை, பரப்புரை.

விருது வழங்கல், பெற்றுக்கொள்ளல், திருப்பியளித்தல் என்னும் செயல், புலமைச் சமூகத்தின் இந்த வினையாற்றலுக்குள் வருகிறது.

தத்துவம், கோட்பாடு, குழு, நிறுவனம், நட்பு போன்ற பல கூறுகளால் விருது வழங்கல் தீர்மானிக்கப் படுகின்றது. விருது வழங்குவோரின் சமூகப் பாத்திரம், கருத்து வெளிப்பாடு, அவர் அல்லது நிறுவனத்தின் தகுதி, நோக்கம் போன்ற குணங்களின் அடிப்படையில் விருது வழங்கப் பெறுகிறது. இந்த அடிப்படைகளைக் கணக்கில் இருத்தி, நோபல் விருதை மறுத்து உலகுக்கு அறிவித்தார் பிரெஞ்சு எழுத்தாளர் ழீன் பால் சாத்தர். வெள்ளையர் ஆட்சியின்போது ரவீந்திரநாத் தாகூர் தனக்களிக்கப்பட்ட knighthood என்னும் ’வீரப் பெருந்ததகை’ விருதைத் திருப்பியளித்திருக்கிறார். விருது பெறும் பாரம்பரியம் உள்ளது போலவே, பெருமைகொண்ட விருது மறுப்புப் பாரம்பரியம் ஒன்றும் ஆதிக்கத்தை எதிர்த்து உருவாகிற்று.

தமிழ்நாடு அரசு வழங்கிய கலைமாமணி விருதையும், நடுவணரசின் சாகித்ய அகாதமி விருதையும் மறுத்து நின்றவர் பாவலர் இன்குலாப். இவ்வாறான வெளிப்பாடுதான் இங்கு பிரபலமாக அறியப்படுகிற ஒரு எழுத்தாளரின் ’விஷ்ணுபுரம் விருதை’ படைப்பாளியும், சமூகச் செயற்பாட்டாளருமான இராசேந்திரசோழன் நிராகரித்ததற்கும் அடிப்படை.


ஒரு புறக்கணிப்பில் கால தேச வர்த்தமான நிலைமைகள் முக்கியக் காரணிகளாக வினையாற்றுகின்றன என்பதை வரலாற்றுப் பூர்வமாகக் கண்டுவந்துள்ளோம்.

எந்த ஒரு துறையின் விருது பெறுதற்கும் முதலில் கருதப்பட வேண்டியது புலமைத் தகுதி; சிந்திப்புத் திறன்.

இரண்டாவது – தானாக விருது வந்தடையும் என்றெண்ணி ஒதுங்கிநில்லாமல், அந்த அங்கீகாரத்தைப் பெறுதற்கான தன்பக்க முயற்சி.

முதல் நியதி பூரணமாக இல்லாமல் போகிற சந்தர்ப்பத்தில், தன்பக்க முயற்சி தவிர்க்க முடியாததாய் கைகொடுக்கும். இது நியாயமானதா இல்லையா என்பதல்ல, பல காலமாக அனைத்துத் துறைகளிலும் இவ்வாறே நிகழ்ந்து வருகிறது. இலக்கியத்தில் பயிரிட்டு எழுத்து வேளாண்மை மேற்கொண்டிருப்போருக்கு, உற்பத்தி செய்யப்படும் விளைபொருளுக்கு ஏற்ற விலை அல்லது லாபகரமான விலை (விருது, சமூக அங்கீகாரம்) எதிர்பார்க்கப்படுகிறது. தொகை, சான்றிதழ் மட்டுமல்ல சமூக அங்கீகாரம் என்ற ரத்தமும் தேவைப்படுகிறது.

இன்று நிலவும் சமுதாய அமைப்பு, அதைக் கருத்தியலால், ஆயுத இயலால் தற்காத்து வரும் அரசமைப்பு – இவற்றிற்கான அறிவுத் தளத்தை, பன்பாட்டுத் தளத்தை வடிவமைப்பது, வளர்த்துப் பேணிக் காப்பது என்ற கருத்தோட்டத்தில் நோபல் விருது தோற்றுவிக்கப்பட்டது. அவ்வாறான நோக்கம் இல்லையென சிலர் பூசி மெழுக முயன்றபோதும், அதன் செயல்பாடுகளில், எதன்பாற்பட்டது என்பது நிதரிசனப்பட்டது;

விருது பெறுதற்கான மனோநிலையை உண்டாகுதல் போலவே, விருதை திருப்பி அளிப்பதற்கான மனநிலையும் தயாராய் இருப்பில் இருத்தல் வேண்டும். திருப்பியளிக்கும் பரிபக்குவம் கொள்கை அடிப்படையில், சமுதாயம் பற்றிய கண்ணோட்டத்தில் உண்டாகும். விருது பெறுகையில் இந்த வரையறை தேவையில்லையா என்று கேள்வி எழலாம்.

“விருதுகளை வாங்குகையில் உண்டாகும் மகிழ்வை விட, தகுதியில்லாத காலத்தில் அதை வைத்திருப்பதின் வலி பெரிது” என உணர்த்தியிருப்பார் ஒரு எழுத்தாளர்.

மூட நம்பிக்கைகளுக்கு எதிராய் எழுதியும் செயற்பட்டும் வந்த கன்னட எழுத்தாளர் ’கல்புர்கி’ 2015- ஆம் ஆண்டு ஆகஸ்டுமாதம் கொலை செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகளின் பின், இதே போன்ற முறையில் இந்துத்துவ வெறியர்கள் புனெயில் நரேந்திர தபோல்கரின் உயிரைப் பறித்தார்கள். 2013 பிப்ரவரியில் மராட்டிய மாநிலத்தில் கோலாப்பூரைச் செர்ந்த பன்சாரே என்ற எழுத்துப் போராளியின் உயிர் பறித்தனர். போராளிகள் மூவரோடு முற்றுப் பெறாத கொலைக்களக்காதை, தற்போது கன்னட எழுத்தாளர் லங்கேஷையும் கொன்று தீனியாக்கிக் கொண்டது. கே. எஸ். பகவான் போன்றோருக்கும் கெடு விதித்துள்ளது.


கல்புர்கியின் கொலையைக் கண்டித்து கர்நாடக மாநிலத்தில் முதலில் ஆறு எழுத்தாளர்கள் சாகித்ய அகாதமி விருதுகளைத் திருப்பி அளித்தார்கள். அவர்களின் அடிச்சுவட்டில், எழுத்தாளர் நயனதாரா சேகல் என 64-க்கு மேற்பட்டவர்கள் மதவாத சக்திகளின் காவலனாக நிற்கும் அரசுக்கும் எழுத்தாளர்கள் படுகொலை தொடர்பில் எதிர்வினை ஆற்றாத சாகித்ய அகாதமி நிறுவனத்திற்கும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக விருதுமறுப்பைச் செய்தார்கள்.

சாகித்ய அகாதமி விருதுபெற்ற தமிழ்க் கலை இலக்கியவாதிகள் 16 பேர் ஒரு கண்டன அறிக்கை எழுதி கையெழுத்திட்டுச் சமாதானமாகினா்.

சென்னையில் அடையாறில் உள்ள இராசரத்தினம் அரங்கில் கருத்துரிமை அமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன அரங்கில் உரையாற்றிய நான் “சாகித்ய அகாதமியின் நல்ல காலம். இன்குலாபுக்கும் எனக்கும் இதுவரை விருது வழங்கவில்லை. விருது வழங்கியிருந்தால் 2009–ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்காக விருதை வீசியெறிந்திருப்போம்” என்று குறிப்பிட்டேன்.

தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் 2006–ல் இன்குலாபுக்கு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்திருந்தது. ஈழத்தமிழா் படுகொலையைக் கண்டுகொள்ளாத அன்றைய தமிழக அரசைக் கண்டித்து கலைமாமணி விருதையும் தங்கப் பதக்கத்தையும் திருப்பி அளித்து,
“கலைமாமணி விருது கௌரவமாக அல்லாமல் முள்ளாக குத்திக் கொண்டிருக்கிறது.இதை எனக்குத் தந்த தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தை தக்கவைத்துக் கொள்வதாக அமையும்.தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த்தியாகங்களுடன் ஒப்பிடுகையில் இது நிரம்பச் சாதாரணமானது.”
விருதைத் திருப்பி அனுப்பி தன் தற்சார்பைக் காத்துக் கொண்டார் இன்குலாப்.

ஜெயமோகன் அவரது ‘வெண்முரசு‘ படைப்புக்குக் கிடைத்த நடுவணரசின் விருதினை மறுத்துள்ளதைப் பாராட்டலாம் என்று பார்த்தால், ‘அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை‘ என்பது போல், உள்ளே எல்லாம் சொத்தையாய்த் தெரிகிறது.

மஹாபாரதத்தில் நிறைய நிறைய ஞான இயலும் மெய்யியலும் அடங்கியுள்ளதாக ஜெயமோகன் தரிசனம் கண்ட ”வெண்முரசுக்கு விருது” என அறிவிப்பு வந்ததும், ’மதச் சாயம் பூசப்பட்டு விடுமோ விருது’ என்ற அச்சம் அவருக்குள் உள்ளோடியது. “விருது பெறுவதை எனது நண்பர்கள் உள்ளிட்ட எதிர்க் கூட்டம் கடுமையாக விமரிசிப்பர்.” என்கிறார். “அரசியலில் ஈடுபடுவதும் கட்சிநிலை எடுப்பதும் எழுத்தாளனின் இயல்புக்கு மாறானது“ என அதே அறிக்கையில் ஜெயமோகன் குறிப்பிட்டிருப்பதில் பின் பாதி சரி; முன்பாதி பிழை.

மக்கள் சார்ந்த அரசியல் நிலைப்பாடுவேறு; கட்சி நிலைப்பாடு வேறு. ஒரு எழுத்துக்காரன், மக்கள்நலன் விழையும் அரசியலில் நிற்பது சரியானது, பிழையல்ல. குழு, கட்சி, சாதி, மதவாதம் சார்ந்து இயங்கும் அரசியலிலிருந்து வேறுபடுவது மக்கள் அரசியல்.

”இந்த அரசு இந்திய மக்களால் சனநாயக முறையில் தேர்வு செய்யப் பட்டது; எனவே என் முடிவு அரசுக்கு எதிரானது அல்ல” என்ற ஜெயமோகன் விளக்கம், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதைக் காட்டுகிறது. ”அரசுக்கும் அரசின் சனநாயகமற்ற செயல்களுக்கும், அரசினை இயக்கும் மதவாதக் கூட்டத்துக்கும் எதிரானது எனது இந்த முடிவு” என அவர் அறிவித்திருப்பாரானால் அது வெளிப்படைச் செயல்பாடு. ஜெயமோகனின் இந்த விருது மறுப்புக்கு எவ்வகையிலும் “சபாஷ்” போடமுடியவில்லை.


ஜெயமோகன் ஆண்டுதோறும் வழங்கி வருகிற ’விஷ்ணுபுரம் விருது’ 2020-க்கு இராசேந்திர சோழனைத் தகுதியானவராய்க் கருதித் தீர்மானித்த வேளையில், இராசேந்திரசோழன் விருதை ஏற்க மறுத்தார். விருது வழங்கும் எழுத்தாளர் இந்துத்துவா கருத்தியலாளர்; கலைநுணுக்கம், தொழில் நுட்பம், உத்தி – என எழுத்தின் உச்சங்களில் நின்று அம்பலக் கூத்தாடினாலும், இந்துத்வா கருதியலில் விலகாதவர். இடதுசாரிக் கருத்துக்களுக்கு எதிரானதாக தனது எழுத்து, செயல், உரையை அமைத்துக் கொண்டவர். விருது மறுப்புக்கு இந்தப் பேருண்மை தான் மூலம். விருதுக்கு ஒப்பளித்திருந்தால், மற்றொரு நன்மை விருது வழங்குபவரின் கணக்கில் சேருகிறது; இவ்விருதை வழங்குவதன் மூலம், ஒரு இடதுசாரி எழுத்தாளரை, ஒரு தமிழ்த் தேசியரை அங்கீகரிப்பதாக தனக்கு ஒரு அங்கீகார மகுடம் அணிந்து கொள்ள முடியும்.

2

எந்த ஒரு எழுத்தாளரும், விருது வருமென எதிர்பார்த்து எழுதத் தொடங்குவதில்லை. எழுதுகோலின் தொடக்க அசைவு அப்படியிருப்பதில்லை. ஆனால் காலம் செல்லச் செல்ல, படைபுக்கள் சேரச் சேர விருது, அங்கீகார எதிர்பார்ப்பு நோக்கம் வந்தடைந்து வலுப்பெறுகிறது.

உணர்ச்சி பூர்வமான ஒரு படைப்பு ஒருவரின் உள்ளுணர்வுத் திறனை அதிகரிக்கச் செய்யும் வகையில் பிரவாகம் ஆகிறதே தவிர, விருதுகளை எதிர்பார்த்து ஊற்றெடுப்பதில்லை.

தொடக்க நிலையில், வேறொரு பிரச்சினை உருவாகும்; தனது எழுத்தினை எந்த ஊடகம் வெளியிடுமோ என்ற தவிதாயம்தான் அது. தன் படைப்பு வெளிவரவேண்டுமே என்னும் பதட்டம் மேலோங்க, தொடக்கநிலையில் எந்த இதழானாலும் அனுப்புவது, காத்திருப்பது என்ற பரிதவிப்பு நிலவும்.

’சாகித்ய அகாதமி, சங்கீத நாடக அகாதமி, லலித் கலா அகாதமி போன்றவை நடுவணரசின் நிதிநல்கையில் இயங்கினாலும், அவை தன்னாட்சி அமைப்புகள், சுயமானது’ என்கிறார்கள் சிலர்.

”சாகித்ய அகாதமி விருதுக்கும் அரசுக்கும் எந்த ஒட்டுமில்லை; உறவுமில்லை என்பது யாருக்கும் புரியவில்லை. இது முழுக்க முழுக்க அறிஞர்கள் கூடித் தீர்மானிக்கும் விருது. யாருடைய அங்கீகாரமும் இதற்குத் தேவையில்லை. இதைப் புரியாமல் சாகித்ய அகாதமி விருதையும் இணைத்துப் பார்க்கிறார்களே“ என்று பொன்னீலன் வேதனைப்பட்டிருப்பார்.

அரசு நிதி நல்கையில் இயங்கும் எந்த அமைப்பும் சுயாட்சி நிறுவனமாக எவ்வாறு இயங்க இயலும்? சனநாயக உணர்வுடன் செயற்படுத்த என்னும் சிலரின் முன்னெடுப்பில் வேண்டுமாயின் ஒன்றிரண்டு பலன்கள் கிடைக்குமே தவிர, ஒரு அரசு நிறுவனமோ, அரசு சார் நிறுவனமோ தானே தன்னாட்சியுடன் இயங்கியது இல்லை. சாகித்ய அகாதமியின் நிறுவனத் தலைமை மட்டுமல்ல, மாநில ஆலோசனைக் குழுவும் அவ்வாறு இயங்குவதில்லை. மாநில விருதுத் தேர்வுக்கு ஒவ்வொரு ஆண்டும் அது உருவாக்கும் மூவர் கொண்ட நடுவர் குழு ஒரு சான்று. முதலில் யாரைத்தேர்வு செய்வது என ஒரு உரையாடலை உருவாக்கி, பின்னர் அதற்கான தேர்வுக் குழு உருவாக்கப்படுகிறது.

சாகித்ய அகாதமி விருதில் இலக்கிய அரசியல் இருக்கிறது; ஞானபீட விருது அளிக்கிற மனசு வட இந்தியாவில் இருக்கிறது; நோபல் விருது வழங்கும் இதயம் அமெரிக்காவில் இயங்குகிறது. ’புக்கர் பரிசு’ வேறெங்கோ இருக்கிறது.

”பொதுவாக விருது வழங்கப்பட்டதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தை மதிப்பிட இயலாது. சிறந்த புத்தகங்கள் சொந்தப் பலத்தின் மீதுதான் பரவலாகக் கவனம் பெறுகின்றன. விருது பெற்ற புத்தகம் என்பதற்காக அப்புத்தகம் சில ஆயிரம் பிரதிகள் கூடுதலாக விற்பனையாவது இல்லை. விருது மூலம் புத்தகத்திற்கு அடையாளம் கிடைக்கிறது. அவ்வளவுதான். எனினும், விருது மோகம் சிலரைப் பாடாய்ப் படுத்துகிறது. வெவ்வேறு வழிகளில் லாபி செய்தும், திறம்பட அரசியல் மூலமாகவும் விருது என்ற இலக்கினை அடைவது பலரின் கனவாக இருக்கிறது.”

என கருத்துச் சொல்லும் ந.முருகேச பாண்டியன், ”சாகித்ய அகாதெமி சராசரிப் படைப்புகளுக்கு வழங்கப்பட்டபோது, சுந்தர ராமசாமி அளவுக்குக் கவலைப்பட்டவர்கள் தமிழில் யாரும் இருக்க முடியாது. அவர் தனது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பினையும் வலுவாகப் பதிவாக்கியுள்ளார். சராசரியான புத்தகம், சாகித்ய அகாதெமி விருது பெற்ற காரணத்தினால், பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்போது, அப்புத்தகத்தை வாசிக்கும் பிற மொழியினர் தமிழ் இலக்கியம் குறித்துக் கேவலமாகக் கருதமாட்டார்களா? என்ற தார்மீகக் கோபம் அவருக்குள் கடைசிவரை கனன்றது. சாகித்ய அகாதெமி யார் யாருக்கெல்லாம் விருது தரலாம் என அவர் பரிந்துரைத்த பட்டியல் அப்பழுக்கற்றது.” எனக் குறிப்பிடுகிறார்.

விருது வழங்கும் ஒரு நிறுவனம் அல்லது அமைப்பின் சார்புத்தன்மை, அதன் உள்ளரசியல் போன்ற அடிப்படைச் சூட்சுமம் புரியாமல் சு.ரா.வின் அங்கலாய்ப்பு வெளிப்பட்டிருக்கிறது.

அரசின் தன்னாட்சி அமைப்புகள் சனநாயகத் தன்மையுடன் இயங்குதல் கொண்டவை என்றே கொள்வோம்; இது மாதிரி ’பாதி சனநாயக’(SEMI DEMOCRACY) அமைப்புகளை கையாளுவது, அவைகளில் பங்கேற்பது என்பதை நாம் இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு வரையறுத்துக் கொள்வது? ஒன்றின் கட்டமைப்பு, அதன் விதிகள், இயங்குதல் நிர்வாக முறைகள் போன்ற பல காரணிகள் அந்த அமைப்புகளைக் கையாளுவதில் நிலவுகின்றன; எல்லாமும் ஒரே சமமான, ஒரே மாதிரி குணவாகு கொண்டவை அல்ல; நாம் பேசுவது சாகித்ய அகாதமி போல், தமிழ் வளர்ச்சித் துறை போல், கருத்தியல் நிறுவனங்களைக் கையாளுதல் பற்றியது! அரசாங்க நிறுவனங்களை கையாளுதல் என்ற ’இடைமாறுதல்’ கட்டத்தில் நாம் இருக்கிறோம்; முற்றாக புறக்கணிப்பு அல்ல, முழுமையாய் கரைதலும் அல்ல; நமது தற்சார்பை (சுயமரியாதையை) இழக்காது, எந்த எல்லை வரை செல்லலாம் என்ற வரையறை மிக முக்கியம்.


”எங்கே காணோம் அந்த எழுத்தாளர்” என்ற எனது முகநூல் பதிவுக்கு ’விருதைப் பெறுதலும், திருப்பியளித்தலும் அவரவர் உரிமைசார்ந்தது’ என, பின்னூட்டத்தில் தெரிவித்திருப்பார் நண்பர் சிவா.விஜய். இதனை உரிமை சார்ந்ததாகக் கருத இயலாது. வாழ்தற்கான அடிப்படை ஆதாரங்களைக் கோருதல் உரிமை சார்ந்த விடயம். விருது வழங்கல், வாங்கல்,திரும்ப ஒப்புவித்தல் - வாழ்க்கைக்கான ஆதார விசயங்களல்ல. இது சமுதாய அமைப்பு, அதன் இயங்கு முறை, வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம், கொள்கை, லட்சிய வினையாற்றல் போன்றவற்றினடியாய் உருவாகும் விருப்பு, வெறுப்பு சார்ந்த கருத்தியலில் தீர்மானிக்கப்படுவது.

உரிமை என்பது பொதுச் சமூகம் நலன்கள் பெறுவது தொடர்பானது: தனி மனித உரிமை அதற்குள் அடங்குவது. அவ்வாறாயின் விருது, அங்கீகாரம் இவையெல்லாம் தேவையில்லையா, ஐயம் எழுப்புவோருக்கு இன்குலாபின் கீழ்வரும் வாசகம் பொருத்தமான பதிலாக அமையும்.

”சிந்தித்துப் பார்த்தால் விருது வழங்கும் எந்த நிறுவனமும் செல்வாக்கு வட்டம் கடந்ததாய் இல்லை. சாகித்ய அகாதெமி, ஞானபீடம் இவற்றின் பீடங்கள் கேள்விக்கப்பாற்பட்டதாகி விடுமோ? இன்று விருதுகள் குறித்து எனக்கு மயக்கம் இல்லை. இருட்டடிப்புச் செய்யப்படாது, வட்டங்கள் கடந்து ஒரு படைப்பு பயிலப்படுவதும், திறனாய்வு செய்யப்படுவதுந்தான் மிகச் சிறந்த விருதாக இருக்கும்”

எது விருது என தீர்மானித்தலுக்கு இஃதொரு வழிகாட்டல்.

”ரொம்ப அடிப்படையானது நாம் யாரோடு மனதால் ஒன்றுபடுகிறோம் என்பது தான். அதைத் தடை செய்வதற்கு வழிவழியாக வந்த பண்பாட்டின் அதிகாரம் இருக்கிறது. மதத்தின் அதிகாரம் இருக்கிறது. சாதியின் அதிகாரம் இருக்கிறது. அரசியல் அதிகாரம் இருக்கிறது. இவ்வளவுக்கும் அப்பால் நான் யார், யாரோடு நிற்க வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பும்போது ஒரு நியாயம் எனக்குத் தெரியவருகிறது. அந்த நியாயங்களுக்கு இந்த அதிகாரங்களெல்லாம் தடையாக இருந்தால் அந்த அதிகாரத்தை உடைத்துவிட்டு, தாண்டிப் போய் அவர்களுடன் நிற்க வேண்டும்” –
இது இன்குலாபின் வறையறை! வறையறை மட்டுமல்ல வாழ்வு முறை.
(அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்கக்காரனும் செவி மடுப்பதில்லை – பக்கம் 31)

இன்குலாபின் இந்த வரிகளையே என் வறையறுப்பாக ஏற்கிறேன்.

- புதிய பரிமாணம் - டிசம்பர் 2020

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?