தோழர் டொமினிக் ஜீவா

2017, பிப்ரவரி 16 முதல் பத்து நாட்கள் ஈழத்திற்குச் சென்றிருந்தேன். ஈழத்திற்குச் சென்றிருந்த வேளை, முன்னர் என் மனத்திலிருந்த – நான் நேசித்த பூமிதானா இது என எண்ணத்தோன்றியது; மண்ணே, என் மண்ணே எனக் கதறியழலாமா எனவுமிருந்தது; வெக்கையான பயணத்தின்போதும் ஊடறுத்து என் நெஞ்சில் நிறைந்த சில நாட்கள் உண்டு.

ஒன்று: தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் முத்துலிங்கத்தின் முன்னெடுப்பில் கண்டியில் நிகழ்வுற்ற இலக்கிய ஒன்றுகூடலில், “உலக மயமும் சமகாலத் தமிழிலக்கியப் போக்குகளும்” என்னும் தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

இரண்டாவதாய் – கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் இன்குலாப் பற்றி ”காலத்தின் கவி” என்ற பொருண்மையை வெளிப்படுத்திப் பேசியது.

அடுத்து 24-2-2017ல், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய “பூகோளவாதம், புதிய தேசியவாதம்” எனும் நூல்வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரையாற்ற தமிழகத்திலிருந்து நான் அழைக்கப்பட்டிருந்தேன். நெஞ்சம் நிறைத்தது இந்நூல் வெளியீடு! கவிஞரும் அரசியல் விமர்சகருமான நண்பர் நிலாந்தன் இந்நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தார்.

அனைத்துக்கும் மேலாய் தோழர் டொமினிக் ஜீவா சந்திப்பை மறக்க ஏலுமா? மின்னாமல் செய்யாமல் பெய்த மழைபோல் கொழும்பில் அவரது இல்லத்தில் சென்று சந்தித்தது, நெஞ்சை நனைக்கிறது.

பொதுவுடைமை இயக்க முன்னோடி ப.ஜீவானந்தம் கொழும்பில் தலைமறைவு வாழ்விலிருந்த போது, உடனிருந்து உதவி, பணியாற்றிய மூத்த தோழர்; மல்லிகை இலக்கிய இதழினை 48 ஆண்டுகளாய் நடத்தி வருபவர்.

இது 270-ஆவது இதழ் என்றார் என்னிடம்.

“வயசு?”

”கொஞ்சம்தான்”

”எவ்வளவு?”

91- என்றார்.

91- ஐ, இந்த 75 சந்திக்கவில்லையெனில் அது பேரிழப்பாகியிருக்கும்.


மல்லிகை பொன்விழா மலர் வரவிருக்கிறது. அதற்கு ஒரு கட்டுரை தரவேண்டுமென தெரிவித்தார். தங்கள் கட்டளை மறுக்க இயலுமா என்றேன்.

முதுமையின் ஆட்டம் முதலில் உடலைக் கவ்வி வளைக்கும்: பிறகு பேச்சை சுத்தமாய் இல்லாமல் ஆக்கும்: கடைசியாய் நினைவாற்றலை பிடுங்கிக் கொள்ளும் என்பார்கள். நான் சந்தித்த போது டொமினிக் ஜீவா ஞாபக மறதி என்னும் கிணற்றுக்குள், அது முதற்படியா, இரண்டாம் படியா எனத் தெரியவில்லை, இறங்கிக் கொண்டிருந்தார்.

டொமினிக் ஜீவா தமிழகம் வந்த கடந்த காலங்களில் சந்தித்து உரையாடியுள்ளேன். அவருடைய இலக்கிய நிகவுகள் சிலவற்றில் பங்கேற்றுப் பேசியுள்ளேன். அவர் தமிழகம் வந்து சேர்ந்ததும், அந்தசேதி சொல்லப் படுகிறவர்களில் தி.க.சி என நீளும் வரிசையில் நானும் சேர்ந்திருந்தேன்.

2002 அக்டோபர் இறுதியில் நான்கு நாட்கள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த “மானுடத்தின் தமிழ்க் கூடல் மாநாட்டில்” பங்கேற்க, தமிழகத்திலிருந்து கவிஞராய் இன்குலாப், எழுத்தாளராய் நான், ஓவியராக மருது, திரைத்துறை இயக்குநராக புகழேந்தி, அரசியலாளராக தொல்.திருமாவளவன் என சரிவிகித கலப்புணவு போல் ஐவர் அழைக்கப்பெற்றிருந்தோம்: அழைப்பிதழ் யாழ் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் பெயரில் வந்தது. விழா ஏற்பாடுகள் அனைத்தையும் விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுப் பிரிவும் அதன் செயலர் கவிஞர் இரத்தின துரையும் ஒழுஙுகு செய்திருந்தனர். நான்கு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் ஒவ்வொரு நாள் நிறைவிலும் ஒருவர் உரை நிகழ்த்தினோம்.

நாங்கள் யாழ்நகரில் தங்கியிருந்த விடுதியில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறை. முதல் நாள் காலையில் டொமினிக் ஜீவா எங்களைக் காணவந்துவிட்டார். ஈழத் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், அனைவரும் மாநாட்டுக்கு அழைக்கப் பெற்றிருந்தனர். மாநாட்டுக்கு வருகை தந்திருந்த டொமினிக் ஜீவாவுக்கு கவிஞர் இன்குலாபும் நானும் மட்டுமே பழக்கமானவர்கள். இருவரையும் கண்டு பேசிவிட்டுச் சென்றார். சாதியத்தின் பெயரால் தலைகால் தெரியாமல் நடந்த அத்துமீறலை, மேல்சாதி அட்டூழியங்களை, எதிர்த்துப் போராடிய தலைமுறையில் தோன்றிய ஒரு இளைய போராளி டொமினிக் ஜீவா. இறுதிவரை சாதி எதிர்ப்பில் அவர் போராளியாக இருந்தார்.

மல்லிகை 401 இதழ்கள். ஏப்ரல் 2008 இதழின் முகப்பில் என் படம் போட்டு உள்ளே என்னை பற்றிய குறிப்பினைத் தந்திருந்தார். அதை ஒரு ஆவணமாகக் காத்து வந்தேன். ஒரு தலைமுறையாய் என்னுடன் பயணித்த அவ்விதழ், இந்த ஆண்டு கைவசமிருந்து நழுவியது.

இதழியலாளர், சிறுகதையாசிரியர், பதிப்பாளர் ,சமூகச் செயற்பாட்டாளர் - பன்முகதன்மை கொண்ட அவர் ”இழிசனர் இலக்கிய” முன்னோடிப் போராளி என்பது இல்லகியக் களத்தின் பெருமிதத்துக்குரியது. பஞ்சமர் இலக்கியம் என ஈழத்தில் சுட்டப்படுகிற தலித் இலக்கியம் 1950, 60-களில் தொடங்கி பெரும் எரிமலையாக எழுத்தியக்கம் பொங்கி எழுந்த காலத்தின் சாட்சிகள் டானியல், டொமினிக் ஜீவா போன்றோர்.

2

1960 ஆம் ஆண்டுகளில் ‘குட்டி வியட்னாம்’ என்று பேரெடுத்த ஒரு நகரம் யாழ்ப்பாணம். வெள்ளாளர், கோவியர், பண்டாரம், பாண்டர் போன்ற ஆதிக்க சாதிகள் ஒருபக்கம் : நளவர், பள்ளர், பறையர், அம்பட்டர், வண்ணார் - என்ற பஞ்சமர் எதிர்ப்புறம்.

ஆலயங்களில் தீண்டாமை, உணவு விடுதிகளில் ஒதுக்குப்புறத்தில் தனி இருக்கைகள், தனீ டம்ளர், பொதுக் கிணற்றில் நீர் அள்ளக் கூடாது- உயர்சாதி வீடுகளில் மண்தரை முற்றத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும், காலுக்குச் செருப்பு, மேலுக்குச் சட்டை, தோளுக்குத் துண்டு கூடாது; பெண்ணென்றால் மேல்சட்டை போடக்கூடாது; மார்புக்கு மறைப்பாய் “குறுக்குக் கட்டு” கட்ட வேண்டும்.

சுண்ணாகம் சந்தை யாழ்ப் பிரதேசத்தில் பெரிய சந்தை: தாழ்த்தப்பட்ட ஒரு பெண் சட்டை போட்டுக் கொண்டு வருகிறார். கொந்தளிப்பான உயர்சாதியினர் அவர் சட்டையைக் கிழித்து - மேலே சட்டை இல்லாமல் விரட்டியடித்தார்கள்.

இந்த இடத்திலிருந்து தீண்டாமைக் கெதிரான முதல் தீப்பொறி வெடித்தது. மாவிட்டபுரம் கந்தசாமிகோயில் முற்றத்தில், வாசலில், கருவறைக்குள் உயர் சாதிக்கெதிராக ஆயுதங்கள் ஏந்தினர் தாழ்த்தப்பட்ட பஞ்சமர்: இருபுறமுமான தாக்குதலில் - யாழ்ப் பிரதேசத்தில் பஞ்சமர் அதிக எண்ணிக்கையில் கொலையுண்டனர். எண்ணிக்கை 12 பேர்.

என்.சண்முகதாசன் தலைமையிலான சீனச் சார்புக் கம்பூனிஸ்ட் கட்சி தீண்டாமைக் கெதிரான போரை நடத்தியது. தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் ஈழத்தின் மகாகவி உருத்திர மூர்த்தி. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும், ஜே.வி.பி.யின் வர்க்கப் போருக்கும் தீண்டாமைக்கெதிரான ஆயுதப் போராட்டம் முன்னுதாரணமாக அமைந்திருந்தது. தமிழ் இளைஞர் பேரவை ஆயுதப் போரை முன்னெடுத்ததில் - ஆயுதப் போராட்டத்திற்கான தூண்டல் இங்கிருந்து தான் பெறப்பட்டது;

யாழ்ப்பாண சமுகத்தின் சாதி ஒடுக்கு முறைமையைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்த டொமினிக் ஜீவா, 1960-களில் அங்கு கம்யூனிஸ்ட் (மார்க்ஸிச-லெனினிய) கட்சி நடத்திய தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்ற வேளை, அது பற்றிய ஆழ்ந்த அறிவினைக் கொண்டிருந்ததோடு, 1960-ன் ஆயுதப் போராட்டம் 1970-களில் அயுதமேந்திய சில இளைஞர்குழுக்களுக்கு ஆதர்சமாக இருந்தது என்ற வரலாற்றை அறிவார். ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் உரிமைக்காகப் போராட இளைஞர் குழுக்கள் ஆயுதமேந்திய போது, அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது.

ஒன்றுபட்ட இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துக்கு இருபதாம் நூற்றாண்டில் வெடித்த தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் பற்றிய உணர்த்தி தொடக்கம் முதலே இல்லை; ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போருக்கு எதிரான நிலைப்பாடு கொண்டனர். தமிழ்நாடு பொதுவுடமை இயக்கங்கள் (இடது வலது) இரண்டும் ஈழப் பிரச்சனையில் இந்தியத் தலைமையின் வழிகாட்டுதலில் எதிர் நிலை எடுத்தன.

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் நினைவுச் சிறப்பிதழில், இதை தமிழ்நாடு முற்போக்கு கலைஞர் எழுத்தாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டி எழுதினார்

”தேசிய இனப்பிரச்சனையில் –
இலங்கை தமிழர் பிரச்சனையில் –
சாதி வர்க்க முன்னுரிமைகளில் - என மூன்று புள்ளிகளில் நாங்கள் வேறுபட்டு நின்றோம்”
(தொ.ப நினைவுச் சிறப்பிதழ் - பிப்ரவரி 2021, காக்கைச் சிறகினிலே)

”ஆயினும் உறவை முறித்து இல்லை; நட்புணர்வும் தோழமையும் அவர் இறக்கும் வரை நீடித்தது” என எழுதியிருப்பார். தமிழக பொதுவுடமைக் கட்சிகளின் இந்த நிலைப்பாடு, குறிப்பாக வலது பொதுவுடமைக் கட்சியின் நிலைப்பாடு ஜீவாவுடனான உரையாடலில் தெறித்தது.

அந்தப் பொழுதில் விடுதலைப் புலிகளுடனான ஒவ்வாமையை இன்குலாபிடமும் என்னிடமும் வெளிப்படுத்திவிட்டு வெளியேறினார் டொமினிக் ஜீவா. அதன் பின்னர் அவர் தமிழகம் வந்தாரா, இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றதா என எனக்கு நினைவில்லை.

3

டொமினிக் ஜீவாவின் இல்லத்தில், எழுத்தாளர் அந்தனி ஜீவா, மேமன் கவி ஆகியோருடன் சந்தித்து உரையாடிய வேளையில் தேநீர் வந்தது. நீண்ட பொழுது அமரவோ பேசவோ அவரால் இயலவில்லை. தேநீர் அருந்திய பின் “களைப்பாக இருக்கிறது. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளவா” என்றார். விடைபெற்று பக்கத்து அறைக்குச் சென்றார்.

ஓய்வெடுங்கள் தோழரே. போர்க்குணமுள்ள உழைப்புக்கும் அயராது மல்லிகை கலை இலக்கிய இதழ்கள் 401 வரை தொடர்ந்து கொண்டுவந்த சாதனைக்கும் ஓய்வென்னும் மருந்து தீர்வு!

- தமிழர் எழுச்சிக்குரல் - பிப்ரவரி 2021

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?