மணல் நாவல் மதிப்புரை - களந்தை பீர்முகம்மது


வெளியீடு
நூல் வனம்,
எம் 22 ஆறாவது அவென்யூ,
அழகாபுரி நகர், ராமாபுரம்,
சென்னை - 600089
பக். 224, ரூ. 210

பூமி நமக்குச் சொந்தமல்ல; நாம்தான் அதற்குச் சொந்தம்! இந்த எளிய உண்மையை ஒரு கலைப்படைப்பாக ஆக்கினால் அது ‘மணல்’ ஆகிறது.

நம்முடைய மூத்த தலைமுறையினர் ‘கோட்டிக்கார’ மனுஷர்களாய் வாழநேர்ந்த காலம் ஒன்றிருந்தது. அதிலிருந்து இன்றைய காலத்தை நாவலாக எடுத்துப் பேசுவதற்கு நூறு ஆண்டு இடைவெளிகூடத் தேவைப்படவில்லை; மணல், வெள்ளைத் தங்கமாக மாறிவிட்ட காட்சி தென்படுகிறது.

நாவலின் மையம் இந்த வெள்ளைத் தங்கம்தான். கோட்டிக்கார மனுஷர்களின் கால்களுக்குக் கீழே அது வெறும் மணலாகத்தான் கிடந்தது. பூடக மொழியில் நாவல் வளர்கின்றது. ஒழுங்குமுறையான எழுத்துவரிசை இல்லை; மக்கள் சார்ந்தும் இயற்கை சார்ந்தும் எழுந்த பிரச்சினை. எனவே குறிப்பிட்ட நாயகர், நாயகிகள் இல்லை. அவ்வாறான கதாபாத்திரங்களை விடவும் இந்த மணல் பெரிய பிரமாண்டம் கொண்டிருக்கிறது; அதைச் சுற்றி அரசியல் நடக்கின்றது; காதலும் மரணமும்கூட!

‘சிங்கிலிப்பட்டி சனம் இரவில் கிறுகிறுத்துப் போகச் செய்வதற்கென்று ஒரு காற்று வரும். பூப்போல அவர்களை ஏந்தித் தாலாட்டி இராவை ஒரு துயரற்றுக் கடக்கச் செய்யும். தென்காற்றுத் தொட்ட சனம் தன்னறியாது தூக்கத்துள் வசப்பட நிமிஷம் எடுக்காது,’ என்ற இந்த வர்ணனையில் நம் மனமும் கிறங்கக்கூடும். கொஞ்ச நாள்கள் நாமும் இந்தக் காற்றைத் துய்த்துத் தூங்கிவிட்டு வருவோம் என்கிற ஏக்கம் எழுகிறது. நடந்துவிட்ட மாற்றம் நமக்கு மன உலைச்சலைத் தருகிறது. சிங்கிலிப்பட்டியில் மக்கள் இப்போது சுவாசிக்கவும் முடியவில்லை. மணல் லாரிகள் புழுதி கிளப்பிச் செல்கின்றன; சாலைகள் மேடு பள்ளங்களாகிக் கால்நடைகள்கூட போய்வர முடியாமல் ஆகிவிட்டன.

ஏழெட்டு மகரந்த ஓடைகளின் கலப்பாக இருந்தது வைப்பாறு. இப்போது செல்லத்தாயைப் பிணமாக்கிவிட்ட மரணக் கிடங்காகிவிட்டது. மணல் எடுத்துச்செல்ல அரசு ஆணையிருக்கிறது; ஆகவே மணலை எடுப்பது குற்றமல்ல. அது செயல்படும் விதமே குற்றத்திற்குரியதாகிறது. பரசி எடுக்கிற மாதிரி ஆற்றுத்தள மட்டத்திலிருந்து மூன்றடி மணலைத்தான் வார வேண்டும். நிலத்தடி நீர் சேதாரமாகக் கூடாது. ஆனால் மொத்தமாய் மணலென்று புலப்பட்டதையெல்லாம் நாற்பதடிவரைக்கும்கூட வாரிச் சுருட்டிக்கொண்டார்கள். ஒரு குத்தகைதாரர் நாலு டன் மணல் வாரலாம் - அது விதி. எடுப்பது நாற்பது டன்கள். இத்தனை நடைதான் அடிக்க வேண்டுமென்ற கணக்கு உண்டு. கணக்கு பேணப்படவில்லை. பகலில்தான் மணல் வார வேண்டும்; ஆனால் மின்விளக்கு வசதிகள் மணல்குவாரிகள்வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றை வாசிக்கும்போது நம் ஈரல்குலையைத்தான் அறுத்து எடுத்துவிட்டார்களோ என்று மனம் பதைபதைக்கின்றது.

அதிகார விதியை வகுத்தவர்கள் யாரோ அவர்கள்தான் தாம் போட்ட விதியை மீறுகிறார்கள். கிராமவாசிகளின் மனம் கொதிப்புறுகின்றது. இந்தக் கிராமவாசிகள் சமூகத்தின் ஆண்ட பரம்பரையினராகவும் இல்லை; பொருளாதார வலு படைத்தவர்களாகவும் இல்லை. இந்தப் பலவீனங்கள் இருப்பதால் அவர்களின் கூக்குரலும் அரசவையை எட்டுவதில்லை.

நாவலாசிரியர் இந்தக் கிராமத்து மண்ணின் காற்றைச் சுவாசித்து வளர்ந்தவர். வாழ்வின் பல்வேறு கட்டங்களைத் தாண்டிப் பட்டணவாசியாகவும் ஆகிவிட்டார். நுகர்பொருளின் சொர்க்கமாக இருக்கிறது பட்டணம். அங்கே சுகம் கண்டு வாழ முடியும். ஆனால் சொந்த மண்ணில் வீசும் காற்று, பட்டணம் வரைக்கும் தன் ஜுவாலையை வீசுகிறது. வாழ்வாதாரங்களை இழக்கும் மக்கள் தமக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் தொடர்ந்து போராடுகிறார்கள். அந்தப் போராட்டக்காரர்களின் எழுச்சியோடு படைப்பாளியும் தன்னை இருத்திக்கொள்கிறார். இப் போராட்டம் யாரையெல்லாம் களத்திற்குள் இழுத்துவருகின்றதோ அவர்களெல்லாம் இந்நாவலின் கதாபாத்திரங்களாகின்றனர். நாவல் குடும்ப அமைப்புக்குள் சுவறாமல் சமூக அமைப்புக்குள் ஊற்றெடுக்கின்றது. இந்த உறவு அவர்களைச் சமூக உறவினர்களாகவும் காதலர்களாகவும் மாற்றுகின்றது. நாவலை ஒரு கதைச் சரடாக இழுத்துவருவதற்கு இயலவில்லை. அப்படியிருந்தும் மணல் சுரண்டலின் அரசியல் கூறு வெளிப்படையாக அம்பலமாகிறது.

சிங்கிலிப்பட்டியோடு வேல்ரபட்டி, சித்தவநாய்க்கன் பட்டி, அம்மன் கோயில்பட்டி, விருசம்பட்டி, கிழவிப்பட்டி என பல கிராமங்களின் பெயர்களைப் பார்த்தாலே, நவீன பின்நவீனத்துவ யுகத்தில் இவை யாதொரு மதிப்புமற்று உதிர்ந்துபோகுமென்ற உணர்வு நம்மில் எழாமல் இல்லை.

இயற்கையைக் காப்பதற்கு இளைஞர்கள் தம் காதலை இழக்கிறார்கள்; இறுதியில் தம் உயிரையும் சிந்துகிறார்கள். சாதியத்தோடு வாழ்கிறார்கள்; தேவைப்படாதபோது சாதியை மீறுகிறார்கள்.

மகரந்த ஓடையில் ஆடிக் களித்தவர்கள் இப்போது வேலைக்குச் செல்லும்போது ஒரு பிளாஸ்டிக் குடுவையில் கார்ப்பொரேட்டுகள் அடைத்துத்தரும் தண்ணீரைச் சுமந்துசெல்கிறார்கள். தன்னெழுச்சியாகப் போராடும் அப்பாவிக் கிராமவாசிகளின் போராட்டம் வெல்லுமா? அது என்னவானாலும் நாவலின் கலைப்பயணம் தொடரும்.

- காலச்சுவடு, மார்ச் 2021

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ